உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

196

நற்றிணை தெளிவுரை


ஆத்திரம் மிகுதியாகின்றது. தன் தோழியாகிய விறலியிடம் கூறுவாள் போலத், தலைவியின் தோழியரும் கேட்குமாறு, இப்படித் தலைவனைப் பழித்து உரைக்கின்றாள்.]

உள்ளுதொறும் நகுவேன்—தோழி!—வள்ளுகிர்
மாரிக் கொக்கின் கூரல் அன்ன
குண்டுநீர் ஆம்பற் றண்துறை ஊரன்
தேன்கமழ் ஐம்பால் பற்றி, என்வயின்
வான்கோல் எல்வளை வௌவிய பூசல் 5
சினவிய முகத்துச் சினவாது சென்று,நின்
மனையோட்கு உரைப்பல்' என்றலின்,
பல்ஆ நெடுநிறை வில்லின் ஒய்யும்
தேர்வண் மலையன் முந்தை, பேர்இசைப்
புலம்புரி வயிரியர் நலம்புரி முழவின் 10
மண்ஆர் கண்ணின் அதிரும்,
நன்ன ராளன் நடுங்கஞர் நிலையே!

தோழி! மாரிக்காலத்திலே நீரிடத்தே உலாவும் நெடிதான நகங்களை உடைய கொக்கினது கூர்மையான மூக்கையொத்தபடி விளங்குவது, ஆழ்ந்த நீரிடத்தே காணப்படும் ஆம்பற்பூக்களது தோற்றம். அத்தகைய தன்மையுடைய நீர்த்துறைகளைத் கொண்ட ஊரினைச் சார்ந்தவன் நம் தலைவன். ஒருநாள், அவன்தான் நெய்ம்மணம் கமழுகின்ற என்னுடைய கூந்தலைப்பற்றி என்னை இழுத்தான். என் கையிடத்தே உள்ளவான கோற்றொழில் அமைந்த வெளிய ஒளியுடைய வளைகளைக் சுழற்றிக் கொள்ளலையும் தொடங்கினான். அதனாற் சினங்கொண்ட நான், என் முகத்திடத்தே சினக்குறிப்பினைக் காட்டாது, 'இச் செயலை நின் மனைவியிடத்தே சென்று யான் உரைப்பேன்' என்றேன். அதனைக் கேட்டதும்—

பகைவரது செருமுனையிடத்து, ஊர்க்கண்ணே உள்ள பலவான நெடிதான ஆனிரைகளையும், தன் வில்லின் ஆற்றலினாலே வென்று தன் நாட்டிற்கு ஓட்டிவருபவன் இரவலர்க்குத் தேரீந்து மகிழும் வண்மையாளனாகிய மலையமான். அவனுடைய திருவோலக்கத்தின் முன்பாக, வேற்று நாட்டிலிருந்து வந்தாரான பேரிசைவன்மை கொண்ட கூத்தர்கள்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/197&oldid=1687581" இலிருந்து மீள்விக்கப்பட்டது