உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை தெளிவுரை

307


தேர்தான் நடுயாமத்தே உடையும் அலையினது ஒலியினைக் கேட்டபடியே உறக்கங் கொள்ளும் கடல்வளம் சிறந்த எம்பாக்கம் ஆரவாரிக்கும்படியாக இரவுப்போதிற்குத் தங்குவதாக!

கருத்து : 'இரவில் வந்து எம் இல்லத்து விருந்தினனாகத் தங்கிச் செல்வாயாக' என்பதாம்.

சொற்பொருள் : மணி – நீலமணி. துணிதல் – ஆய்ந்து தெளிதல். ஒழுங்கு – வரிசை. வரித்தல் – கோலஞ்செய்தல் கொழுமீன் – கொழுமையான மீன். நகர் – மனை. அல்குதல் – தங்குதல்.

விளக்கம் : "நீதான் அகன்றதற்பின் இவள் நின்னோடும் கூடிய இடனையும், ஆடிக்களித்த துறையையும் நோக்கி நோக்கி மெலிந்து இரங்கியிருப்பாளேயன்றி, இல்லிற்கு எழுதற்கும் இசையாள்: நீதான் பாக்கம் புகுந்தனையாயின், இவளும் நின்னைத் தொடர்ந்தாளாக வருவாள்" என்று கூறுவாளாகத், தலைவியின் பிரிதற்கு இசையாத பேரன்பினைத் தோழி தலைவனுக்கு உரைக்கின்றாள். வரைந்தாலன்றித் தலைவியை அவளூரில் அவளில்லத்திலேயே முயங்குதல் வாயாதாகலின் இது வரைவுகடாய தாயிற்று.

'கடலுள் சென்று மீனார்ந்த குருகினமும் கரைக்கண் திரும்பின; அவள்தான் தன் இல்லத்திற்குத் திரும்புங் கருத்திலள்' என்பதும் ஆம்.

160. கண்டதும் இழந்தேன்!

பாடியவர் : ......
திணை : குறிஞ்சி.
துறை : கழற்றெதிர் மறை

[(து–வி.) 'தலைவனின் களவுறவினாலே அவனது பண்பு நலன்கள் கெட்டன' என்று பாங்கன் பழித்துக் கூற, அவனுக்கு எதிருரையாகத் தன் மனநிலையைத் தலைவன் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.]

நயனும் நண்பும் நாணுநன்கு உடைமையும்
பயனும் பண்பும் பாடறிந்து ஒழுகலும்
நும்மினும் அறிகுவென்-மன்னே; கம்மென
எதிர்த்த தித்தி எர்இள வனமுலை
விதிர்த்துவிட் டன்ன அந்நுண் சுணங்கின், 5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/308&oldid=1694874" இலிருந்து மீள்விக்கப்பட்டது