344
நற்றிணை தெளிவுரை
நடுயாமப் பொழுதினும் கண் மூடுதலைப் பெறாதேனாய் வருந்தியிருப்பேன். எழுகின்ற புள்ளொலிகள் அவரது தேர்மணிகளது ஒலிபோலக் கேட்கவும், அவரை, பிரிவுத் துயராலே நம்மை வருத்தமுறச் செய்து கைவிட்டகலாரென முன்னர்த் தெளிந்து ஏற்றுக்கொண்ட என் நெஞ்சமும் அழிவெய்துவதாயிற்று, இனி எவ்வாறு உயிர்வாழ்ந்திருப்பேனோ?
கருத்து : 'பிரியாது வாழும் இல்லற வாழ்வினைத் தருதற்கான முயற்சிகளிலே அவர் ஈடுபாட்டாலன்றி யான் இனி உயிர் வாழ்ந்திரேன்' என்பதாம்.
சொற்பொருள் : ஆடு அமை – அசையுந்தன்மை கொண்ட மூங்கில். ஆக்கம் – மூங்கிலின் செறிவு; உரித்து ஆக்கப்படுவதும் ஆம். ஐது – மெல்லிதான உரி. தோடு – தொகுதி. தடந்தாள் – நெடிய கால். நலன் – பெண்மை நலன். நல்கூர்தல் – வருந்துதல். கழி – கழிக்கால்கள். கைதை – தாழை. படுகிளை – வளைந்த கிளை. கண் படை பெறல் – கண் மூடி உறங்குதல். செத்து – போன்று. ஓர்ப்ப – கேட்க.
விளக்கம் : தலைவியது கூற்றைத் தன் கூற்றாகக் கொண்டு தோழி கூறுவது இதுவாகும். அவன் தழுவிக் கூடுதலை இழந்தேமாயினும், அவன் வரும் தேரினைக் கண்டாயினும் சிறிது தெளிவு கொள்வோம்; இற்செறிப்பு நேர்ந்ததனால் அதுவும் இயலாமற்போக, எம் நெஞ்சம் அழிகின்றது என்பதாம்.
இவற்றால் தலைவியது தனிமை மிகுதியையும், அவள் தன்பாற் கொண்ட காதற்பெருக்கையும் உணரும் தலைவன் அவளைக் காத்தற்குத் துடிப்பானாய், அவளை வரைந்து மணந்துகோடற்கு விரைய முற்படுவான் என்பதாம்.
உள்ளுறை : தன் ஆணினாலே நலனுண்டு கைவிடப்பெற்ற நாரைப் பேடையானது சிறுமீன்களை உண்ணவும் கருதாதாய்த் தாழைக் கிளையிடத்தே வருத்தமுடன் சென்று இருந்தாற்போலத், தலைவனால் நலனுண்டு கழிக்கப்பட்ட தலைவியும் உணவு மறுத்தாளாய் இல்லத்தே தனித்திருந்து வருந்தி நலிந்திருப்பாளாயினாள் என்பதாம்.