உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை தெளிவுரை

349


உள்ளிறைக் குரீஇக் கார்அணற் சேவல்
பிற்புலத் துணையோடு உறைபுலத்து அல்கி
வந்ததன் செவ்வி நோக்கிப் பேடை
நெறிகிளர் ஈங்கைப் பூவின் அன்ன
சிறுபல் பிள்ளையோடு குடம்பை கடிதலின் 5
துவலையின் நனைந்த புறத்தது அயலது
கூரல் இருக்கை அருளி நெடிதுநினைந்து
ஈர நெஞ்சின் தன்வயின் விளிப்பக்
கையற வந்த மையல் மாலை
இரீஇய ஆகலின் இன்னொலி இழந்த 10
தாரணி புரவித் தண்பயிர் துமிப்ப
வந்தன்று பெருவிரல் தேரே
உய்ந்தன் றாகும்இவள் ஆய்நுதற் கவினே!

உள் இறைப்பிலே குடியிருக்கும் குருவியது கரியமோவாயினையுடைய சேவலானது, வேற்றுப் புலத்தேயுள்ள மற்றொரு பேடையோடுஞ் சென்று கூடியின்புற்றது: அவ் விடத்தேயே சிலநாட்கள் தங்கியிருந்ததன் பின்னர் மீட்டும் தன் பேடையிடத்தேயும் வந்தது. அவ்வாறு வந்த சேவலது மேனியிடத்தே புணர்குறியால் உண்டாயிருந்த மாறுபாடுகளை அப்பேடையும் நோக்கியது. பலமான நெறிப்புக் கிளர்கின்ற ஈங்கைப் பூக்களைப் போலத் தோன்றும் தன் சிறு பிள்ளைகளோடும் கூடியிருந்த கூட்டினுள்ளே புகுதற்கும் விடாதாய், அச் சேவலைத் தடுத்தது. அதனால், மழையிலே நனைந்த புறத்தினை உடையதாகிய அச்சேவலானது கூட்டின் பக்கத்தேயான ஒருபுறத்தே குளிரால் நடுங்கியபடி இருந்தது. அதன் நடுக்கத்தைக் கண்டதும் பேடைக்கு அதன்பால் அருள் தோன்றியது. தான் செய்யத் தகுதியானதைக் குறித்து நெடும்பொழுது நினைந்தது. அதன்மேல் இரக்கங் கொண்ட நெஞ்சினதாகியது. தன், சேவலைத் தன்பால் வருமாறும் அழைத்தது. அதனைக் கேட்ட அக் குருவிச் சேவலும் தன் பிழையை நினைந்து வருந்திச் செயலற்றதாயிற்று. அங்ஙனமாக வந்த மயக்கத்தையுடைய மாலைபொழுதும் வந்திறுத்தது ஆகலின், இனிய ஒலியெழுப்பலை இழந்துபோன மணிகளை அணிந்த குதிரைகள், தண்ணிய பயிர்களை மிதித்துச் சிதைத்தபடியே வந்து கொண்டிருக்கப் பெருவெற்றியை உடைய தலைவரது தேரும் வந்து சேர்ந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/350&oldid=1706374" இலிருந்து மீள்விக்கப்பட்டது