உள்ளடக்கத்துக்குச் செல்

கல்வியும் அரசாங்கமும்

விக்கிமூலம் இலிருந்து

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக

கல்வியும் அரசாங்கமும்

அறிஞர் அண்ணாத்துரை

மறுமலர்ச்சி நூல் நிலையம்
18, ஆயலூர் முத்தையா முதலி தெரு,
சென்னை 1.

பதிப்புரிமை

1-பதிப்பு மே 1950

2-ம் பதிப்பு ஜனவரி 1981



விலை 0 2 0


அன்பன் அச்சகம்,

சென்னை-1.

முன்னுரை

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நடைபெற்ற தமிழ்ப் பாராளுமன்றத்தின் முடிவுக் கூட்டத்தில் "கல்வி நிலையங்களை அரசாங்கம் ஏற்று நடத்தலாமா?" என்ற விவாதம் பாராளுமன்ற உறுப்பினர்களிடையே நடை பெற்ற பின்னர் அறிஞர் சி என். அண்ணாத்துரை அவர்கள் ஆற்றிய அரிய சொற்பொழிவை, மக்களனைவரும் படித்துப் பயன்பெற நூல் வடிவில் தந்துள்ளோம் இதனைக்குறித்துத் தந்த தோழர் அன்புப்பழம் அவர்களுக்கு எங்கள் உளங்கனிந்த நன்றி உரித்து.

–பதிப்பகத்தார்.



கல்வியும் அரசாங்கமும்

பச்சையப்பன் கல்லூரி தமிழ்ப் பாராளுமன்ற பிரதமர் கூறியதாவது :–

"அயல் நாட்டிலிருந்து இப்பாராளு மன்றத்திற்கு பார்வையாளராக வந்திருக்கும் திரு. அண்ணாதுரை அவர்களுக்கு இந்த நாட்டின் பிரதம மந்திரி என்ற முறையில் அன்னாருக்கு "பெருந்தகை" என்ற பட்டத்தைச் சூட்டுகிறேன். என்று சொல்லியபின் அறிஞர் அண்ணா பேசியதாவது :–

தலைவர் அவர்களே | தோழர்களே | பாராளுமன்ற உறுப்பினர்களே,

இந்தப் பாராளுமன்ற நிகழ்ச்சியை நேரிலே காணவும் அதிலே பங்கு கொள்வதோடு என் கருத்தைத் தெரிவிக்கவும் சிந்தனை செய்யவும் வாய்ப்பளித்த உங்களுக்கு என் நன்றி. பெருந்தகை என்னும் பட்டத்தைக் கொடுத்து என்னைப் பெருமைப் படுத்திச் சிறப்பித்தமைக்கும் நன்றி செலுத்துகிறேன்.

இங்கு நடைபெற்ற பாராளுமன்றத்தைப்போல எங்கள் நாட்டிலும் ஒரு பாராளுமன்றம் உண்டு. இங்கு பாராளுமன்றத்தில் நீங்கள் பேசியது போல எங்கள் பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள் பேசுவதுகிடையாது. உறுப்பினர்கள் பேசும்போது பெரும்பாலோர் தூங்கும் உரிமையை எங்கள் பாராளுமன்றம் பெற்றிருக்கிறது.

நான் சர்க்கார் தொடர்பு கொண்டவனல்ல. மக்கள் மன்றத்திலே உலவுகின்றவன் என்ற முறையில் சர்க்காருக்கு யோசனை சொல்லமுடியும். சர்க்காருக்கு யோசனை சொல்லவேண்டு மென்பதற்காகவே என்னை நீங்கள் அன்போடு அழைத்திருக்கிறீர்கள். நம் நாட்டிலே நூற்றுக்கணக்கானவர்கள் கல்வி அறிவு இல்லாதவர்கள். நீங்கள் எடுத்துக் கொண்டபொருள் மிகவும் முக்கியமான பொருள், கல்வி நிலையங்களை அரசாங்கம் ஏற்று நடத்தலாமா? என்பது பற்றி நீண்ட நேரம் விவாதித்தீர்கள்.

எங்கள் நாட்டில் கல்வி நிலையங்களையார் ஏற்று நடத்துவது? என்பதல்ல பிரச்னை, அரசாங்கத்தை யார் பொறுப்பு ஏற்று நடத்துவது என்ற பிரச்னைதான். கல்வி நிலையங்களை ஏற்று நடத்துவதால் ஆகும் பெரிய பணச்செலவைப்பற்றி எதிர்க்கட்சியினர் இங்கு நன்கு விளக்கவில்லை அரசாங்கத்தார் கல்வி நிலையங்களை ஏற்று நடத்தினால் பெரிய லாபம் கிடைக்குமா என்பதைத்தான் யோசிப்பார்கள். கல்வி நிலையங்களை ஏற்று நடத்துவதால் பெருத்த லாபம் கிடைக்கும் என்று சர்க்காருக்குத் தெரிந்தால் சர்க்கார் அதை தாரளமாக ஏற்று நடத்துவார்கள். அதிலே இருக்கிற லாபத்தைப்பெற சர்க்கார் ஒரு ஏஜண்டைக்கூட நியமிக்குமே. உங்கள் நாட்டிலே கல்வி நிலையங்களை அரசாங்கத்தார் பொறுப்பு ஏற்று நடத்தப்போவதைப் பற்றி மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். உங்களைப் பாராட்டுகிறேன்.

எங்கன் காட்டிலே கல்வி நல்ல விதத்திலே பரவவில்லை. சர்க்கார் கல்வி நிலையங்களை ஏற்று நடத்துவதாய் இருந்தால் எங்கள் சர்க்கார் இலாப நஷ்ட கணக்கைப் பார்க்கும். எங்களுடைய நாட்டின் நிலைக்கு ஏற்றவாறு அதிகமான கல்வி நிலையங்கள் அங்கே ஏற்படவில்லை. கல்வி நிலையங்களில் பல, தனிப்பட்டவரிடம் ஒப்படைக்கப் பட்டிருக்கிறது.

பணப்பஞ்சத்தால் எங்கள் நாட்டில் கல்வி பரவாமல் இருக்கிறது. கல்வி நிலையங்களை அரசாங்கத்தார் ஏற்று நடத்துவதற்கு முன்னர் எதற்காக அப்படி நடத்துகிறோம் எத்தகைய திட்டத்தை நிறைவேற்றுவதற்காக நடத்துகிறோம் என்பதிலே அக்கரை இருக்கவேண்டும். எதையும் முறைப்படி, திட்டப்படி நடத்தவேண்டும், எத்தகைய முற்போக்கு சக்திக்கும் இடம் இருக்கவேண்டும்

மதச்சார்புள்ளவர்கள் நடத்தும் கல்வி நிலையங்களில் நீங்கள் நுழைந்ததும் என்ன காண்பீர்கள்? ஒரு பிள்ளையார், ஒரு சரஸ்வதி, காலை 8 மணிக்கு பஜனை, 10 மணிக்கு பாரதம், 12 மணிக்கு இராமாயணம், இராத்திரி அல்லி அரசாணி மாலை இப்படி அரசாங்கத்தார் கல்வி நிலையங்களை நடத்துமானால் இந்தப் படிப்பிலிருந்து தப்பித்துக் கொள்வதுதான் மனித சுதந்திரம்.

மதச்சார்புள்ள சர்க்கார் கல்வி நிலையங்களை ஏற்று நடத்துமானால் மனிதனின் சிந்தனாசக்திக்கு அங்கே இடமிருக்காது கல்வி எதற்காகக் கற்கிறோம்? பகுத்தறிவு பெற; புதிய பொருளைக்காண, கல்வி கற்கிறோம். நாட்டிலே நல்லறிவைப் பரப்பக்கூடிய கல்வி வேண்டும். இதற்காக புதிய திட்டங்களை வகுக்கவேண்டும்.

கல்வி எங்கள் நாட்டிலே ஜாதி முறையோடு பிணைக்கப் பட்டிருக்கிறது சில ஜாதிக்குத்தான் படிப்பு வரும் சில ஜாதிக்கு படிப்புவராது என்று பிரிக்கப்பட்டிருக்கிறது. சிலருக்குத்தான் படிப்பு வரும் சிலருக்கு படிப்பு வராது என்ற குருட்டு நம்பிக்கை இன்னும் இருக்கிறது. ஜாதி முதலைப்பிடியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறது. சில ஜாதிக்கு எங்கள் நாட்டிலே பஜனை கூடங்கள் உண்டு. ஆனால் கல்வி நிலையங்கள் இல்லை.

பழம் பாடல் ஒன்று பிள்ளையாரிடம் சென்று பக்தியோடு வேண்டும் பாவனையில் அமைந்துள்ளது :-

“பாலும் தெளிதேனுப்பாகும் பருப்புமிவை
நாலுங் கலந்துனக்கு நான் தருவேன்-கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்கு
சங்கத்தமிழ் மூன்றும் தா”

’பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் ஆகிய நான்கையும் உனக்குக் கலந்து தருகிறேன். ஏ துங்கக் கரிமுகத்துத் தூமணியே ! நீ எனக்கு முத்தமிழையும் தா’ என்று வேண்டுவதுண்டு. இந்தக் காலத்திலே இப்படியாரும் தருவதும் இல்லை. பிள்ளையார் அவர்களுக்குப் பாடம் வரும்படி செய்வதும் இல்லை.

நாட்டிலே நாங்கள் எவ்வளவோ சீர்திருத்தக் கருத்துக்களை பரப்பிவந்தாலும் நடமாடும் பிணங்கள் பல எங்கள் நாட்டிலே இருக்கத்தான் செய்கின்றன. நடமாடும் பிணங்கள் வதியும் நாட்டிலிருந்து நான் வருகிறேன்.

எங்கள் நாட்டிலே ஒரு கல்லூரி உண்டு. அந்தக் கல்லூரிக்குப் பெயர் பச்சையப்பன் கல்லூரி. சர்க்கார் ஆதரவின்றி தனிப்பட்டவரின் அறத்தினால் கட்டப்பட்ட பச்சையப்பன் கல்லூரியில் படித்தவன் நான் முற்போக்குச் சக்திக்காக நன்கு பயிற்சி செய்விக்கப்பட்ட மாணவ மணிகளையே அங்கு காணலாம். சர்க்கார் கல்லூரிகளிலே இருக்கின்ற ஜொலிப்பு பச்சையப்பன் கல்லூரியிலே இல்லாமல் இருக்கலாம் ஆனால் அங்கே திறமையுள்ள மாணவர்கள் பலர் இருப்பதை நீங்கள் காணலாம். பச்சையப்பன் கல்லூரியிலே பயிலும் மாணவ மணிகளின் அறையிலே மலரும் மலர் பெரும் புரட்சியாக மாறும்

எங்கள் நாட்டிலே அரசாங்கத்தார் கல்வி நிலையங்களை ஏற்று நடத்துவதற்குப் போதுமான பணம் இல்லை. எங்கள் நாட்டிற்கேற்ற கல்வியும் இல்லை ! எங்கள் நாட்டிலே பணம் படைத்த சீமான்களும் சீமாட்டிகளும் தங்கள் உள்ளத்திலே தர்மத்தைப்பற்றி நினைக்கிற அளவுக்கு கல்வி நிலையைப்பற்றி நினைப்பதில்லை,

எங்கள் நாட்டு மக்களின் மனத்தை மாற்றி அமைக்க நாங்கள் அரும்பாடுபடுகிறோம். அதற்காகவே திராவிட முன்னேற்றக் கட்சியையும் துவக்கியுள்ளோம்.

கல்வி நிலையங்களை ஏற்று நடத்த பொதுமக்களை பணம் கேட்டால் அவர்கள் தருவதற்குத் தயங்குகிறார்கள். இதற்குத் தலையாய காரணம் என்ன தெரியுமா?

கல்வி நிலையங்களுக்காக செலவிடுகிற பணத்தை கோயிலுக்குச் செலவு செய்தால் போகிற கதிக்கு நல்லது வரும் என்று நம்புகிறார்கள். தனவந்தர்கள், சிவபெருமான கோயில் கட்டவும், அக்கோயிலின் நடுவிலே பளிங்குமன்றம் ஒன்று கட்டவும், நீராழி மண்டபம் கட்டவும் ரூபாய் பத்தாயிரம் கேட்டாலும் தட்டாமல் தரராளமாகத் தருவார்கள். கல்வி நிலையங்களுக்காகக் கேட்டால் பணம் தரமாட்டார்கள். எங்கள் நாட்டிலே அமைச்சர்கள் கோயிலுக்காக பணம் கேட்க ஓடுவார்கள்.
பச்சையப்பன் கல்லூரியை நிறுவியவர் ஒரு தனவந்தர். அவருடைய காலத்திற்குப் பின்னும் அறிவு ஒளியால் மக்கள் பெரும்பயன் அடைவதைக் காண்கிறோம். ஏழ்மை நிலையிலுள்ள மாணவர்கள் பலர் இக்கல்லூரியிலே கல்வி பயில்கிறார்கள் எங்கள் நாட்டிலே மக்கள் மதப்பிடியில் குருட்டு நம்பிக்கை வைத்திருப்பதோடு ஏதோ ஒரு மேலுலகத்திலே நல்ல இடம் இருப்பதாகவும் எண்ணுகிறார்கள்.

“இம்மைச்செய்தது மறுமைக்கு ஆமெனும்
அறவிலை வணிகன் ஆயலின்" --(புறம்)

எங்கள் நாட்டிலே தற்போது வஞ்சக வாணிபர்கள் ஏராளமாக இருக்கிறார்கள். அவர்கள் கெண்டையைப் போட்டு விராலை இழுப்பவர்கள். நம் தமிழ் நாட்டிலிருந்த கடையெழு வள்ளல்களில் ஒருவனாகிய ஆய் இப்பிறவியிலே செய்த அறம் அடுத்த பிறவியிலே ஆக்கம் தரும் என்ற பயனைக் கருதாது செய்தான். ஆனால் எங்கள் நாட்டு சர்க்காரும் வஞ்ச வாணிபத்தை நடத்து கிறதே! வள்ளல் ஆய் வழிவந்தவர்களாகிய நாங்கள் பரம்பரை பாத்யதைக்கொண்டு அறவினை வாணிபத்திலே அறிவுப் பிரசாரத்திலே ஈடுபட்டிருக்கிறோம்.

எங்கள் நாட்டிலே நடக்கும் பாராளு மன்றத்தைப் பார்த்துவிட்டு வந்த அன்பர்கள் பலர் இந்த பாராளுமன்றம் கடைவீதியிலே நடக்கிறதா? என்று கேட்கிறார்கள், அமைச்சர்கள் வந்தால் உறுப்பினர்கள் வரமாட்டார்கள் உறுப்பினர்கள் வந்தால் அமைச்சர்கள் வரமாட்டார்கள். மந்திரிகளில் பெரும்பாலோர் காலதாமத மாக வந்து மன்றத் தலைவரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்வார்கள்,

குழந்தை இல்லாதவர்கள் பணத்தைச் சேகரித்து வைப்பதற்காக வார்சு தேடவேண்டியதில்லை. அந்த சொத்துக்கு சர்க்காரே வார்சாக இருக்க வேண்டும். இப்பொழுது குழந்தை இல்லாதவர்க்கு வார்சு தேடிவைக்கும் பணமெல்லாம் கோயில் குளம் கட்டத்தான் பயன்படுகிறது நம் நாட்டிலே பிள்ளை இல்லாதவர்களுக்குச் சொத்து அதிகம். நான் சொல்லியமுறை நாட்டிலே சிறக்கவேண்டும் தனிப்பட்டவர்களிடம் சொத்தை விட்டுவைக்கக் கூடாது. தனிப்பட்டவர்களிடம் சொத்தில்லாமல் சர்க்காரிடம் சொத்து இருந்தால் அதை நல்லதொரு கலாசாலை அமைக்கவும், நல்ல விஞ்ஞான முறையை ஏற்படுத்தவும் பயன்படுத்தலாம்.

இப்பாராளுமன்றத்தில் கேள்விகள் கேட்கப்பட்ட பொழுது மந்திரிகள் எல்லோரும் பொறுப்புடன் பதில் சொல்லியதைப் பாராட்டுகிறேன். எங்கள் நாட்டிலே மந்திரிகளை உறுப்பினர்கள் கேள்வி கேட்டால் இவ்வளவு பொறுப்புடன் பதில் சொல்லமாட்டார்கள். சேலத்திலே கம்யூனிஸ்ட்களை சுட்டு வீழ்த்தியதைப்பற்றி சரமாறியாகக் கேள்விகள் இங்கு கேட்கப்பட்டது. சிறை என்றால் என்ன? என்ற கேள்வியை அன்பர் ஒருவர் கேட்டார்.

எங்கள் நாட்டிலே இதுபோன்ற கேள்விகள் கேட்கப்பட்டால் மந்திரிகள் கூறும் பதில் என்னவாக இருக்கும்? சிறையிலேதிகளைத் துன்புறுத்தலாமா? என்று கேட்டால் அதற்கு மந்திரியார் கூறும் பதில் இது தான். 'சிறையிலே துப்பாக்கியைக் கொண்டுதானே சுட்டோம். பின்னர் துப்பாக்கிக்குத்தான் வேறு என்ன வேலை? துப்பாக்கி சும்மாயிருந்தால் துருப்பிடித்து விடாதா? ஆகவே கொஞ்சம் சுட்டுப் பார்த்தோம்’ என்று இறுமாப்புடன் விடையளிப்பார் அமைச்சர். சர்க்காரைப் பாராட்டுகிறநிலை நாளுக்கு நாள் குறைந்து வருவதை மக்கள் மன்றத்திலே காண்கிறேன் காருண்யமுள்ள காங்கிரஸ் சர்க்கார் என்பதுபோய் காருண்யமில்லாத காங்கிரஸ் சர்க்கார் என்று எங்கும் பேசுவதைக் காணலாம்
எங்கள் நாட்டிலே 100க்கு 13 அல்லது 16 பேர்தான் படித்து இருக்கிறார்கள். எங்கள் நாட்டிலே அநேகருக்கு எழுதப் படிக்கத் தெரியாது. எங்கள் சர்க்கார் தேசியத்தின பெயரால் வளர்ந்த சர்க்கார். தேசீயத்தால் கட்டப்பட்ட சர்க்கார். இந்த சர்க்காராவது கல்வி நிலையங்களை ஏற்று நடத்துவதாவது! நடத்தவே நடத்தாது.
இப் பாராளுமன்றத்திலே கடைசிவரை “கல்வி நிலையங்களை அரசாங்கம் ஏற்று நடத்தலாமா?” என்ற பிரச்னையை ஓட்டுக்கு விடாமலே சாமர்த்தியமாக நடந்து கொண்டார்கள். இது உங்கள் அனைவருக்கும் விந்தை யாகத்தானிருக்கும் ஓட்டுக்கு வீடும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தவில்லை. ஓட்டுக்கு விட்டிருந்தால் சர்க்காரின் மந்திரிசபை ஆட்டம் கொடுக்கிறதா? இல்லையா? என்பது தெரியும். உங்கள் மந்திரிசபை ஆட்டம் கொடுத்திருக்கிறதோ இல்லையோ? அது எனக்குத் தெரியாது. எங்கள் நாட்டிலே உள்ள மந்திரிசபை ஆட்டம் கொடுத்து விட்டது.
இங்கே இரண்டு மூன்று எதிர்கட்சியை வைத்திருக்கிறீர்கள். சுயேச்சைக் கட்சியென்றும், இயற்கைக்கட்சி என்றும் வைத்திருக்கிறீர்கள். எங்கள் பாராளுமன்றத்திலே எதிர்க்கட்சியில்லை. தனிப்பட்டவர்கள் தான் எதிர்க்கிறர்கள். சர்க்காரை எதிர்க்க பல கட்சிகள் இருக்கின்றன. எல்லோரும் ஒன்று சேர்ந்து சர்க்காரை எதிர்க்க ரொம்ப அவகாசம் பிடிக்கும். இங்கு கேள்வி நேரத்தின் போது உறுப்பினர்கள் பலர் உறங்காமல் இருந்தார்கள், எடுத்துக்காட்டாக இராமனாதபுரம் ஜில்லாவிலிருந்து கம்பம்வரை பாதை வேண்டுமென்று சொன்னால் இதையாருக்கு காண்ட்ராக்ட் விடுவதற்காக மந்திரி இதைச் சொல்லுகிறார் என்று பக்கத்தில் இருக்கும் நண்பரைத் தட்டிக் கேட்கும் நிலையில் எங்கள் பாராளுமன்றம் இருக்கிறது இங்கே நடந்த பாராளு மன்றத்தில் நாட்டின் நலிவைப் போக்குவதற்கான கேள்விகளைக் கேட்டார்கள். இங்கு கேட்கப்பட்டதைப் போன்ற பயனுள்ள கேள்விகள் அங்கு இருக்காது. எங்கள் நாட்டிலே நடைபெறும் பாராளு மன்றத்தில் பெரும்பாலும் கேள்விகள் இருப்பதேயில்லை. அப்படி கேள்விகள் கேட்கப்பட்டாலும் பதில் சொல்லுவதற்கு மந்திரிகளும் இருப்பதில்லை. எங்கள் பாராளுமன்றத்திலே அமைச்சர்கள் இல்லாத புகார், பாராளுமன்றம் நடக்கிற நேரத்திலே உறுப்பினர்கள் கடைவீதியிலே உலாவுகிற புகார் ஆகியவற்றைக் கேட்கலாம்.

மந்திரிகளில் பெரும்பாலோர் நல்ல பிரச்னைகளை ஏற்று நடத்துவதில்லை. "நம்மாலாவதென்ன நமச்சிவாயமே" என்ற அசிரத்தை இல்லாமல் அக்கரையோடு நீங்கள் நடத்துகின்ற பாராளுமன்றத்தை எங்கள் நாட்டிலே உள்ள சட்டசபை உறுப்பினர்களுக்குக்காட்ட வேண்டுமென்ற ஆசை எனக்குண்டு. அப்படி உங்களை அழைத்து நான் காட்டினால் அது எங்கள் நாட்டிலே ராஜத்துரோகக் குற்றமாகப் பாவிக்கப்படும். சமயம் வாய்க்கும் பொழுது உங்களைப் போன்றவர்களைக்கொண்டு பாராளுமன்றம் நடத்தும் விதங்களை எடுத்துக்கூற வேண்டுமெனச் சொல்லி இந்த அளவோடு என் பேச்சை முடித்துக்கொள்கிறேன்.

———~~°✽°~~———

எது வகுப்பு துவேஷம்?

"மக்களனைவரும் வேற்றுமையற்று, ஒரே தாய்வயிற்று மக்கள் போல உயர்வு தாழ்வின்றி ஒற்றுமையாக வாழவேண்டுமென்று கூறுவது

வகுப்புத் துவேஷமா?

அல்லது

"பிராமணனுடைய பெயரையோ, அல்லது அவன் குலப் பெயரையோ கேட்கிற சூத்திரன்வாயில் 10 அங்குல நீளமுள்ள இரும்பு ஆணியைப் பழுக்கக் காய்ச்சிச் செறுகவேண்டும;பிராமணனுடைய தர்மோபதேசங்களைக் கேட்டுக்கொண்டிருக்கும் சூத்திரனுடைய காதுகளில் எண்ணெயைக் காய்ச்சி ஊற்றவேண்டும்”

என்பது

வகுப்புத்துவேஷமா?

எது வகுப்பு துவேஷம்?

என்று கேட்கிறார்

"வியாழன்"

விலை அணா நான்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=கல்வியும்_அரசாங்கமும்&oldid=1635831" இலிருந்து மீள்விக்கப்பட்டது