உள்ளடக்கத்துக்குச் செல்

அண்ணலாரும் அறிவியலும்/4

விக்கிமூலம் இலிருந்து

அறிவியலின் தாய் - கணிதம்

அன்றும் இன்றும் விஞ்ஞான வளர்ச்சியின் உயிர் மூச்சுசாக அமைந்து வருவது கணிதமாகும். அறிவியலுக்கு மட்டுமல்ல; தருக்க வாதத்தத்துவச் சிந்தனைகளுக்கும்கூட கணிதவியலே அடிப்படை என்கிறார் காட்ஃபிரே ஹார்டி என்ற மேனாட்டுக் கணிதவியலறிஞர்.

“Mathematics is about beautiful patterns of logical thought"

அதாவது. கணிதம் என்பது , தருக்கமுறைக் சிந்தனை எழிற்கோலங்கள் பற்றியது" என்பது அவருடைய கருத்து.

ஏனெனில், கணிதம் என்பது அறிவுக் கூர்மையுடன் தொடர்புடையதாகும்.

“ஒலி, மொழி, வண்ணங்கள் போன்றவற்றின் எழிற்கோலங்களை உருப்படுத்திக் காட்ட முயல்கின்ற இசை,கவிதை, ஓவியம் போன்ற கவின் கலைகளுக்கு ஒப்பானதுகணிதம்" என இன்னொரு மேதை கூறியுள்ளார்.

கவின் கலைகளும் ஒரு வகையில் கணித முறையில் மறைமுகமாக அமைவது என்பதே ஓப்ப முடிந்த உண்மை யாகும்.

பன்முகக் கணித வளர்ச்சிக்கு வழி வகுத்த முஸ்லிம்கள்

அண்ணலாரின் தூண்டுதலால் — திருமறையின் கட்டளையால் அறிவு வேட்கைமிக்க இஸ்லாமியர்களைக் கணிதக்கலை வெகுவாகக் கவர்ந்ததில் வியப்பொன்றும் இல்லை கணிதக் கலையில் அவர்கள் காட்டிய பேரார்வப் பெருக்கின் விளைவாக விரைவிலேயே கணிதம் பன்முகங்களாக விரிந்து முனைப்புடன் வளரலாயிற்று. இஸ்லாமியர்கள் போற்றி வளர்த்த கணிதவியல் வளர்ச்சியின் விளைவாக அறிவியலின் அனைத்துக் கூறுகளும் செம்மையாக உருவெடுக்கலாயின. அத்துடன் கணிதவியலின் மறைமுகச் செல்வாக்குடன் கட்டிடக் கலை, இசைக்கலை, ஏன் — கவிதைக் கலை போன்ற பல்வேறு கவின் கலைகளும்கூடபுதிய பரிமாணத்துடன் வளர்ந்து வளம் பெறலாயின.

எண் குறியீடுகளின் தாயகம் இந்தியாவே

இச்சமயத்தில் கணித எண் குறியீடுகளின் வரலாற்றைப் பற்றிய ஒரு சிறு குறிப்பைக் கூறுவது பொருத்தமாக இருக்கும் எனக் கருதுகிறேன்.

கணிதவியல் இலக்கங்களான எண் குறியீடுகளைப் பொருத்தவரை அவைகளின் பிறப்பிடம் இந்தியாவாகும் என நீண்ட காலமாகவே கூறப்பட்டு வருகிறது இந்தியாவில் சிறந்த முறையில் விளங்கி வந்த எண் கணித முறை கி.பி. மூன்றாம் நூற்றாண்டு வாக்கில் ஆசியா மைனர் பகுதிக்குப் பரவியது. பின்னர் அங்கிருந்து எகிப்துக்கும் ரோம நாட்டிற்கும் கிரேக்கத்துக்கும் பரவி, பல்வேறு மாற்ற திருத்தங்களைப் பெற்றது. பின்னர் அரபு நாட்டு முஸ்லிம்களால் சுவீகரிக்கப்பட்டு மாபெரும் மாற்றங்களைப் பெற்றது. அரபு மொழி வரிவடிவ அமைப்புகளுடன் துவங்கத் தொடங்கியது

அதன் பின் அவ்வெண் கணிதம் முஸ்லிம்களின் ஆளுகைக்குட்பட்ட ஸ்பெய்ன், கான்ஸ்டாண்டிநோபிள் முதலான ஐரோப்பிய நாடுகளின் வாயிலாக மேற்கு ஐரோப்பாவெங்கும் பரவியது. இவ்வெண் கணித முறையே அறிவியல் வளர்ச்சிக்கான உந்து விசையாகியது. பிறகு கணிதவியலில் எண்ணற்ற மாற்றங்களும் புதிய புதிய பிரிவுகளும் முஸ்லிம்களால் உருவாக்கப்பட்டன. சரியான அடிப்படையில் முகிழ்ந்தெழுந்த கணக்கியலின் பல்வேறு பிரிவுகள் நாளடைவில் அரபு மொழிப் பெயரோடவேதுலங்கலாயின.

அரபி மொழிவழி கணிதக் கலைச் சொற்கள்

இன்று கணிதவியலில் வழங்கும் பெரும்பாலான கலைக் சொற்கள் அரபிச் சொற்களின் அடிப்படையில் உருவான கலைச் சொற்களாகவே அமைந்துள்ளதற்கு மேற் கூறியதே முழு முதற் காரணமாகும்.

முழுமையாக அறியப்படாத ஒன்றைக் குறிக்க சாதாரணமாக ‘X’ என்ற குறியெழுத்தைக் கையாள்கிறோம். தான் புதிதாகக் கண்டுபிடித்த, பொருளினுள் ஊடுருவிச் செல்லும் வல்லமை படைத்த புதிய ஒளிக்கதிருக்கு என்ன பெயரிடுவது என்று திகைத்த ராண்ட்ஜன் எனும் இயற்பியல் விஞ்ஞானி அதற்கு ‘X’ கதிர் (X-Ray) என்று பெயரிட்ட வரலாறு நாம் அறிந்ததே. இன்றும் 'X'எக்ஸ்-ரே என்ற அழைக்கப்பட்டு வருகிறது. இந்த ‘X’எனும் குறியீடு பழங்கால முஸ்லிம்கள் கணித நூல்களில் பயன்படுத்திய ‘ஷே’ என்ற அரபி உழுத்தின் அடிப்படையில் உருவானதாகும்.

அதே போன்று ‘சைஃபர்’, ‘ஸீரோ’ (0) போன்ற கணிதவியல் கலைச் சொற்களும் அரபிச் சொற்களாகவே அமைந்திருப்பது எண்ணத்தக்கதாகும்.

இயற்கணிதம்

கணிதவியலின் வரலாற்றைப் புரட்டிப் பார்க்கும் போது இயற்கணிதத்தை வகுத்தவர்கள் அரபு நாட்டு முஸ்லிம் கணிதவியல் அறிஞர்களே என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போன்று தெள்ளத் தெளிவாகும் உண்மையாகும்.

இயற்கணிதவியல் துறையில் குறிப்பிடத்தக்கப் பெருந் தொண்டாற்றிய பெருமைக்குரிய ஆய்வறிஞராக விளங்குபவர் முஹம்மது இப்னு மூஸா அல் குவார்ஸ்மி எனும் முஸ்லிம் மேதையாவார். கி.பி. 180 முதல் 850 வரை வாழ்ந்த இவர் கலீபா அல் மாமூனின் நூலகராவார். இவர் கணிதவியலில் கொண்டிருந்த நுண்மாண் நுழைபுலம் அறிந்த கலீஃபா இவருக்கெனத் தனி ஆய்வுக் கூடத்தையே அமைத்துத் தந்திருந்தார். இவர் தாலமியின கணிதவியல் சிந்தனைகளைத் திறம்பட ஆய்ந்து, தான் கண்டறிந்த புதிய உண்மைகளை எழுத்து வடிவில் வெளிப்படுத்தியவராவார். இதன் மூலம் இவர் வானியல் ஆய்வுக்கு வழி வகுத்தார் என்பது மேனாட்டார் கணிப்பாகும்

இவரது கணிதவியல் நூல் அக்காலத்தில் விரும்பிலத்தீன் மொழியில் பெயர்க்கப்படட்து. பின்னர் அந்நூல் ஐரோப்பிய மொழிகளில் ஐரோப்பாவெங்கும் அறிமுகமாகியது. இவ்வாறு இந்நூல் அறிமுகமான பின்பே மேலை நாடுகளில் அறிவியல் ஆராய்ச்சி வேகமும் விறுவிறுப்பும் பெறலாயிற்று.

அல்ஜிப்ரா

அதே போன்று அல் குவாரிஸ்மி உருவாக்கிய புகழ்மிகு கணித நூல் ‘கிதாப் அல் ஜாபர் வல் முகாபலா’ என்பதாகும் அந்நூலின் பெயர் அடிப்படையிலேயே பிற்காலத்தில், அல்ஜிப்ரா என்ற பெயர் அமையலாயிற்று. ‘அல்ஜிப்ரா’ என்ற பெயர் ‘அல்ஜாபர்’ என்பதன் திரிபு வடிவமாகும் என்பாரும் உண்டு.

அல்கோரிஸம்

அவ்வாறே ‘அல்கோரியும்’ என்ற கணிதப் பெயர் ‘அல்குவாரிஸ்மி, என்பதின் திரிபு எனக் கூறப்படுகிறது. அல்— குவாரிஸ்மி மாபெரும் கணிதவியல் வல்லுநர் என்பது முன்பே நாம் அறிந்த செய்தியாகும்,

திரிகோணமிதி - ஜாமெட்ரி

கணிதவியலின் மற்றொரு முக்கியப் பிரிவு 'திரிகோணமிதி'யாகும். இத்துறையை உருவாக்கி வளர்த்து வளப்படுத்தியவர்களும் முஸ்லிம் கணிதவியல் வல்லுநர்களேயாவர். நஸ்ருத்தீன் என்பவர்தான் ‘திரிகோணமிதி’ கணிதப் பிரிவையும் ‘ஜாமெட்ரி’ எனும் கணிதப் பிரிவையும் கண்டறிந்தவர்.

அடிப்படை திருகோணமிதி சார பலனைக் குறிக்க‘சைன்’ என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. இச்சொல் அரபிமொழி மூலச் சொல்லான ‘ஜேய்ப்’ என்பதன் நேர்மொழி பெயர்ப்பாகும். திரிகோணமிதி சமன்பாடுகள் பலவற்றை வகுத்த பெருமையும் அரபு முஸ்லிம்களையேசாரும்.

வடிவ கணிதம்

கணிதவியலின் மற்றொரு பகுதி ‘வடிவ கணிதம்’ஆகும். இதன் வளர்ச்சி பற்றிக் கூறுவதற்குமுன் மற்றொரு செய்தியைச் சொல்ல வேண்டியது அவசியமாகும்.

யூக்ளிடின் கணிதவியல் கோட்பாடு

கணிதவியலின் அடிப்படைக் கோட்பாடுகளை முதன்முதலில் வகுத்தளித்த பெருமைக்குரியவர் 'யூக்ளிடு' எனும் கிரேக்கக் கணிதவியல் அறிஞராவார். அவரது கணிதவியல் கோட்பாடுகளை அடியொற்றியே அரபு நாட்டு முஸ்லிம் கணிதவியல் வல்லுநர்கள் ‘வடிவ கணித’க் கோட்பாடுகளை உருவாக்கினர்.

எகிப்து நாட்டிலுள்ள அலெக்ஸாண்டிரியாவில் ஆசிரியராகப் பணியாற்றிய யூக்ளிடின் கணிதவியல் கோட்பாடுகளை அக்காலத்தில் புரிந்து கொள்வது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. அக்கோட்பாடுகளின் நுணுக்கங்களை நன்றாக உணர்ந்து தெளிந்ததோடு,அதன் அடிப்படையில் வடிவ கணிதத்தை இன்றைய நவீன முறையில் வகுத்தளித்த பெருமைக்குரிய மேதை உமர்கையாம் எனும் சூஃபிக் கவிஞராவார். மற்றொரு வடிவ கணித மேதையான நஸீர் — அல்—தீன் அல்—குளி என்பவர் யூக்ளிடின் கணிதவியல் அடிப்படைக் கோட்பாடுகள் (Elements) என்ற நூலுக்கு விரிவான தெளிவுரை எழுதியுள்ளார்; இவ்விளக்கவுரை வெளிவந்த பின்பே யூக்ளிடின் கணிதவியலில் பெற்றிருந்த அறிவு நுட்பத்தையும் திறனையும் உலகம் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடிந்தது அதன் அடிப்படையில் கணிதத்தின் பல்வேறு பிரிவுகள் கிளைத்துச் செழித்து வளரலாயின.

கருவுக்கு உரு தந்த மாண்பு

உலகெங்கும் அறிவியலின் பல்வேறு துறைகள் ஏதேனும் ஒரு வடிவில் முளைவிட்டிருந்தபோதிலும், பெருமானாரின் பொருண்மொழிக்கேற்ப அறிவு வேட்கை மிக்கவர்களாக — அறிவியல் உணர்வாளர்களாக உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்றார்களல்லவா. எங்கெல்லாம் அறிவியலுக்கான ஆய்வு முயற்சிகள் எழுந்தனவோ அவற்றையெல்லாம் அறிந்து வந்தார்கள். தாங்கள் கற்றுவந்த அறிவியல் கருக்களுக்கு முழுமையான உருவை வழங்கினார்கள். இந்த வகையில் கணிதவியலைப் பொருத்தவரையில் பாபிலோனியர்களிடமிருந்தும் யூக்ளிட் போன்ற கிரேக்கக் கணிதவியல் மேதைகளிடமிருந்தும் இந்தியர்களிடமிருந்தும் கற்க கணிதவியல் கண்டுபிடிப்புகளை அடியொற்றி எண் மான முறைகளை அரபு நாட்டுக் கணிதவியல் அறிஞர்கள் வகுத்தளிக்கலாயினர். இன்று உலகெங்கும் புகழ்பெற்று விளங்கும் அரபு எண்குறிகளை முழுமையாக உருவாக்கி உலகுக்கு வகுத்தளித்தவர்கள் முஸ்லிம்களே என்பது தான் எண் கணித வரலாறு தரும் உண்மைச்செய்தி.

கூட்டுச் சாதனை அறிவியல்

பொதுவாக, அறிவியல் வளர்ச்சி என்று எடுத்துக்கொண்டால் அதன் எந்த ஒரு பிரிவின் வளர்ச்சிக்கும் ஒரு தனி நபரோ, இனமோ அல்லது நாடோ தனியுரிமை கொண்டாட முடியாது ஏனெனில் அறிவியல், தொழில்நுட்பச் சாதனைகள் அனைத்தும் உலகின் பல்வேறு பகுதிகளின் பங்களிப்பால் உருவானவை என்பதே முழு உண்மை .

அதிலும், அடுத்தடுத்து வந்த தலைமுறையினரின் முயற்சியாலும் உழைப்பாலும் முதிர்ச்சி பெற்று ஒரு குறிப்பிட்ட வளர்ச்சி நிலையை எய்துவதாகும். இதே கருத்தைத் தான் புகழ்பெற்ற வானவியல் வல்லுநரும் ஈர்ப்பாற்றலை கண்டறிந்த விஞ்ஞானியுமான “ஐசக் நியூட்டன்” எனக்கு முந்தியவர்களைவிட நான் மிகுதியாக வானைப் பார்க்க முடிகிறதென்றால், அதற்குக் காரணம் நான் அந்தப் பெரும் திறனாளர்களின் தோள்களின் மீது நின்றுகொண்டு பார்ப்பது தான் என்று கூறியுள்ளது இங்கு நினைவுகூறத் தக்கதாகும்.

இதன்படி பார்த்தால் ஒரு பதிய கண்டுபிடிப்பானது பல ஆய்வார்களின் — விஞ்ஞானிகளின் முயற்சியால் — உழைப்பால் — மேற்கொண்ட தொடர் ஆராய்ச்சிகளால் விளைந்தவை என்பது தெளிவாகிறது. ஆயினும், யாரேனும் ஒரு விஞ்ஞானி முந்தைய கண்டுபிடிப்புகளை ஒருங்கிணைத்து இறுதி வடிவு தந்து அதன் முத்தாய்ப்பான முடிவை எட்டுகிறபோது, அக்கண்டுபிடிப்பு அவரின் பெயரைத் தாங்க நேர்கின்றது.

கோட்பாட்டளவிலான கிரேக்க அறிவியல் சிந்தனை

இந்திய எண் குறியீடுகள் எவ்வாறு அரபு நாட்டை அடைந்து இறுதி வடிவம் பெற்றதோ அதேபோன்றுதான் கிரேக்க நாடு வழங்கிய அடிப்படை எண் கணிதமும் புதியவடிவம் பெற்றது. இதேபோக்கில் அறிவியல் அடிப்படைக் கூறுகளும் செயல் வடிவம் பெற்று முழு அளவில் அறிவியல் சாதனைகளாகப் பரிணமித்தன. வரலாற்று அடிப்படையில் ஆராயும் போது இவ்வுண்மை நன்கு புலனாகும்.

அன்றைய கிரேக்க அறிஞர்களின் ஆராய்ச்சி நூல்களில் அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான பல்வேறு கூறுகள் அடங்கியிருந்த போதிலும் அவை வெறும் கொள்கை கோட்பாட்டளவிலேயே இருந்தன என்றுதான் கூறவேண்டும். அவற்றை மெய்ப்பித்துக் காட்டும் செய்முறை வழிகாட்டல்களோ ஆய்வுக்குரிய சாதனங்களின் உதவியோ இல்லாமலேயே இருந்தன. எனவே. அவை வெறும் அனுமானம் என்ற அளவில் மட்டுமே கருதக் கூடியவைகளாக இருந்ததில் வியப்பேதும் இல்லை.

ஆனால், அவ்விஞ்ஞானக் கோட்பாடுகளைக் கிரேக்க மொழியிலிருந்து அரபி மொழிக்குப் பெயர்த்த பின்னர் அரபு நாட்டு அறிவியல் அறிஞர்கள் அவற்றைச் சோதனை முறை மூலம் மேன்மேலும் உண்மை கண்டறிய முயன்றனர்.இதற்கான கருவிகளையும் கண்டுபிடித்துப் பயன்படுத்தலாயினர். இப்பெரும் செயலால் கிரேக்க அறிவியல் அறிஞர்களின் அனுமான ஆய்வறிவு எந்த அளவுக்கு உண்மையின்அடிப்படையில் அமைந்துள்ளன என்பது பல்லாற்றானும் உறுதிப்படுத்தப்பட்டது. அவற்றின் அடிப்படையிலேயே இன்றைய அறிவியல் துளிர்த்து வளரத் தொடங்கியது.இவ்வகையில் கிரேக்கச் சிந்தனைக்கு செயல் வடிவம் தந்து அவற்றை நிலை நிறுத்திய பெருமை அரபு முஸ்லிம்களுக்கும் இஸ்லாமிய நாடுகளைச் சார்ந்த முஸ்லிம்களுக்குமே உரித்தாகும் எனத் துணிந்து கூறலாம். எனவே தான்,இந்நிகழ்வைப் போற்ற வந்த அறிஞர் பெர்ட்ரண்டு ரஸ்ஸல் “கிரேக்கக் கோட்பாடுகளும் அரபுச் செயல் முறைகளும் இணைந்துதான் இன்றைய நவீன அறிவியல் தோன்றியத” எனப் புகழ்ந்துள்ளது சிந்தையில் நிறுத்த வேண்டிய சிறப்புச் செய்தியாகும்.

இயந்திர நுட்பக் கருவிகள் உருவாக்கம்

கணிதவியல் வளர்ச்சியை அடியொற்றிப் பல்வேறு இயந்திரவியல் நுட்பங்கள் ஆராய்ச்சி பூர்வமாகக் கண்டுபிடிக்கப்பட்டு பயன்படுத்தப்படலாயின இத்தகைய இயந்திரக் கருவிகள் உருவாக்கப்பட்ட பின்னரே நத்தை வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்த மனித சமுதாய வாழ்க்கை மின்னல் வெட்டுப்போல் வேகமும் விறுவிறுப்பும் பெற்று துரித வளர்ச்சி காணலாயின. அத்தகைய இயந்திர நுட்பக் கருவிகளில் ஒன்று சக்கரமாகும்.

மின்னல் தோன்றும் முன்னே இடியோசை கேட்கும் பின்னே

இயக்கம், ஈர்ப்பாற்றல், சக்தி, ஒளி, வெற்றிடம், ஒளியின் வேகம் வெப்பம் ஆகியவை பற்றிய விரிந்த ஆராய்ச்சி முடிவுகள் கண்டறியப்பட்டன.

ஒளியின் வேகம் வேறு; ஒலியின் வேகம் வேறு என்பதையும் முதன் முதல் காரண காரியத்தோடு கண்டறிந்து கூறியவர்கள் முஸ்லிம்களேயாவர். இவ்வாய்வின்படி வானில் இடி இடிக்கும்போது முதலில் மின்னல் ஒளிகண்ணில் படுகிறது. அதன்பிறகுதான் இடியோசை நம் காதுகளை வந்தடைகிறது. இதற்கான முறையான காரணங்களைக் கண்டறிந்து விளக்கிக் கூறியவர்கள் முஸ்லிம் விஞ்ஞானிகளே என்பதை சார்ட்டன் தன் அறிவியல் வரலாற்று நூலில் தெளிவாக்கியுள்ளார்.

அதுமட்டுமல்ல அறிவியலில் பல்துறை அறிவும் திறனும் ஒருங்கே வாய்க்கப்பெற்ற மாமேதை அவிசென்னா எனும் இப்னு சினாவே இயக்க அளவு, இயக்க விசை,உந்து விசை ஆகியவைகளைத் துல்லியமாக முதன் முதலில் கண்டறிந்தவர் என்பது வரலாறாகும்.

பதினெட்டாம் நூற்றாண்டில் இயக்க அளவு பற்றி டெஸ்கார்ட்டிஸ். ஹியூஜென்ஸ், பீனிட்ஸ் போன்ற விஞ்ஞானிகள் செய்த ஆராய்ச்சி முடிவுகள் இப்னு சினாவின் ஆராய்ச்சியையும் முடிவையுமே ஒத்திருந்தன.

சக்தியையும் நேரத்தையும் மிச்சப்படுத்திய சக்கரம்

அரபு நாட்டு முஸ்லிம்களால் கண்டறியப்பட்டு வடிவமைக்கப்பட்ட சக்கரம் பயன்பாட்டுக்கு வந்த பிறகே போக்குவரத்தில் மாபெரும் மாற்றமும் வளர்ச்சியும் தலை தூக்கியது. போக்குவரத்து வாகனங்கள் பல்வேறு வகையினவாக உருவாகலாயின் குறைந்த அளவு சக்தியைப் பயன்படுத்தி அவற்றைத் திறம்பட இயக்கிப் பயன் பெறமுடிந்தது. இதனால் அதிக அளவில் விரையமாகி வந்த மனித ஆற்றலோடு அரிதான நேரமும் வெகுவாக மிஞ்சியது. இதனால், குறைந்த காலத்தில் நிறைந்த பயன்களைப் பெற ஏதுவாகியது. இதனால் முஸ்லிம்களால் உருவாக்கப்பட்ட சக்கரங்களை போக்குவரத்துச் சாதனங்களின் வளர்ச்சிக்கு வழிகோலிய ஒரு புரட்சிக் கண்டுபிடிப்பு எனக் கூறினும் பொருந்தும்.

நீர்ச் சுழல் இயந்திரக் கருவி கண்டுபிடிப்பு

சக்கரங்களால் சுழலும் இயந்திரத்திலும் நீரால் சுழலும் இயந்திரத்தை முஸ்லிம்கள் கண்டுபிடித்த பின்னரே உண்மையான இயந்திரவியல் துறை முழு வீச்சுடன் செயல்பட்டு புரட்சிகரமான மாற்றங்களைத் தோற்றுவிக்கலாம்யிற்று. ஓடுகின்ற நீரும் ஒரு சக்திப் பொருளாக முஸ்லிம்களால் உருமாற்றி அமைக்கப்பட்டது.

காற்று இயந்திரக் கருவி கண்டுபிடிப்பு

இதே போல காற்றாடி இயந்திரங்களும் அன்றைய முஸ்லிம்களால் வடிவமைத்து உருவாக்கப்பட்டன என்பதை கருவியியல் கண்டுபிடிப்புகளின் வரலாறு தடம் காட்டுகிறது. இயந்திர இயக்கத்தில் நீரைப் போன்றே காற்றும் ஒரு சக்தியாகப் பயன்படுத்தப்படலாயிற்று.

இருசையும் நெம்புகோலையும் கப்பித்தானையும் கண்டறிந்தவர்கள் முஸ்லிம்களே!

இன்றைய விஞ்ஞானத்தின் விரைவான வளர்ச்சிக்கு வேகமும் விறுவிறுப்பும் ஊட்டித் துரிதமான வளர்ச்சிக்கு உந்து சக்தியாயமைந்த இருசையும் நெம்புகோல் தத்துவத் அதையும் கப்பித்தான் முறையையும் முதன் முதலாகக் கண்டறிந்த பெருமைக்குச் சொந்தக்காரர்களால் விளங்குபவர்கள் முஸ்லிம்களேயாவர்.

ஊசலாடும் பெண்டுலமும் முஸ்லிம்களின் கண்டுபிடிப்பே

அன்றைய முஸ்லிம்களின் முத்திரைக் கண்டுபிடிப்பாக அமைந்தது கால அளவைக் கணக்கிடும் பெண்டுல கண்டுபிடிப்பாகும். ஊசலாடும் பெண்டுலம் கண்டறியப்பட்ட தன் விளைவாகத்தான் இன்றைய நேரத்தைத் துல்லியமாகக் கணக்கிடும் கடிகார வகைகள் உருவாக வழி பிறந்தது.

இவ்வாறு, நேரடியாகவும் மறைமுகமாகவும் இயந்திரவியல் புரட்சி உருவாவதற்கான அழுத்தமான அடித்தளத்தை அமைத்துத் தந்த பெருமை அன்றைய அரபுநாட்டு முஸ்லிம்களையே சாரும் என்பதில் ஐயமில்லை.

முஸ்லிம்கள் கண்டுபிடித்த நீர்க் கடிகாரம்

அக்காலத்தில் நேரத்தை அறிய நீர்க் கடிகாரத்தை முஸ்லிம்கள் கண்டுப்பிடித்துப் பயன்படுத்தி வந்தனர்.இதற்காக நேர அளவீடும் மிகச் சரியான நேரக் கணிப்பும் முஸ்லிம் அறிவியல் அறிஞர்களால் துல்லியமாக வகுத்தமைக்கப்பட்டது. இத்தகைய நீர்க் கடிகாரம் ஒன்றை பேரரசர் சார்லிமோனுக்கு கலீஃபா ஹாரூன் அல்-ரஷீது வழங்கினார் என்பதையும் அந்நீர்க் கடிகாரத்தின் செயல்பாட்டையும் நேரக்கணிப்பையும் கண்டு பேரரசர் வியப்படைந்தார் என்பதையும் வரலாறு தெளிவாகக் கூறிக்கொண்டிருக்கிறது

முஸ்லிம்களால் கண்டுபிடிக்கப்பட்ட இத்தகைய பல்வேறு வகையான இயந்திரவியல் நுட்பங்களையும் இயந்திரக் கருவிகளையும் பற்றி விரிவான நூல்கள் பலவற்றை அபுல் பெய்ஸ் இஸ்மாயீல் இப்னு அல் ரஸ்ஸாக் என்பவரும் அல் கஸ்னி என்பவரும் விரிவாக விளக்கி எழுதியுள்ளனர். துலாக்கோல் பற்றி அல் கஸ்னி எழுதிய நூலின் அடிப்படையிலேயே பிற்காலத்தில் பல்வேறு வகையான எடைக் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டன என்பது அறிவியல் வரலாறாகும்.

வானவியல் ஆய்வுக்கு அடித்தளமிட்ட முஸ்லிம்கள் ஐன்ஸ்டீன் புகழாரம்

முஸ்லிம் விஞ்ஞானிகள் அனைவருமே இயற்கை விஞ்ஞானமெனப் போற்றப்படும் இயற்பியல் ஆர்வம் மிக்கவர் களாக இருந்தனர். இன்னும் சொல்லப்போனால் அறிவியல்லின் தந்தை எனப் போற்றப்படும் அரிஸ்டாட்டிலின் இயற்பியல் விஞ்ஞானத்தில் முஸ்லிம் அறிவியலாளர்கள் அனைவருமே சிறப்பறிவு பெற்றவர்களாகத் திகழ்ந்தார்கள்.

இயற்பியல் துறையின் பல்வேறு வளர்ச்சி நிலைகளுக்கு வழியமைத்த முஸ்லில்களே வானவியல் ஆய்வுக்கு அடித்தளம் அமைத்தவர்களாக வரலாற்றில் மின்னுகிறார்கள்.

“அரபு நாட்டு வானவியல் அறிஞர்களின் தோள்களில் நின்று தான் என்னால் வானத்தையே ஆய முடிகிறது” என நியூட்டன் கூறியது போலவே இன்றைய இயற்பியல் துறையின் மாபெரும் வளர்ச்சிக்கு காரணமாயமைந்தவரும் இன்றைய விண்வெளி வெற்றிகளுக்கு மையமான சார்புக் கொள்கையை (Theory of Relativity) உருவாக்கியவருமான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூறியுள்ளார்.

இதிலிருந்து அன்றைய அரபு நாட்டு முஸ்லிம் இயற்பியல் விஞ்ஞானிகள் நாடெங்கும் பரவியிருந்ததோடு அரிய வானவியல் உண்மைகளையெல்லாம் கண்டறிந்து கூறினார்கள் என்பதும் தெளிவாகிறது.

முதல் வானவியல் ஆய்வுக்கூடம்

முழுமையான முதல் வானவியல் ஆய்வுக்கூடத்தை இப்ராஹீம் அல்பஸாரி என்பவர் கி.பி. 772இல் தொடங்கினார் என்பதை வானவியல் ஆய்வு வரலாறு கூறுகிறது.

வானவியல் ஆராய்ச்சி ஒரு குறிப்பிட்ட வளர்ச்சிக் கட்டத்தை எட்டியபோது முதன்மைத்தரமான வானவியல் ஆய்வுக்கூடம் அமைக்கப்பட வேண்டிய அவசிய. அவசரத் தேவை ஏற்பட்டது. இதன் விளைவாசத் தென்மேற்குப் பாரசீகத்தில் ஜண்டேசபூர் எனுமிடத்தில் ஒரு சிறந்த வானவியல் ஆய்வுக்கூடம் உருவாக்கப்பட்டது.இதைத் தொடர்ந்து இதைவிடச் சிறப்புடையதாகவும் நுணுக்கமாகவும் துல்லியமாகவும் கணக்கிடக்கூடிய கருவிகளைக் கொண்ட வானவியல் ஆய்வுக்கூடத்தை கலீஃபா அல் மாமூனின் உறுதுணையோடுபாக்தாது நகரில் அமைக்கப்பட்டது. இதுவே அதிகபட்ச நுண் சாதனங்களுடன் கூடிய முதல் வானவியல் கூட்டமாகும்.

வானவியல் ஆய்வு இஸ்லாமிய நாடுகளில் உச்சநிலை பெற்ற 10ஆம் நூற்றாண்டிற்குள் சுமார் 1.5 உயர் தரமான, தரமான வானலியல் ஆய்வுக் கூடங்கள் நாடெங்கிலும் சிறப்பாக இயங்கி வந்தன. பாக்தாது நகரம் இஸ்லாமிய நாடுகளின் வானவியல் ஆய்வு மையமாகவே விளங்கி வந்ததெனலாம்.

எத்தகைய வானவியல் ஆய்வுகளை அன்றைய முஸ்லிம் விஞ்ஞானிகள் மேற்கொண்டார்கள்? அவர்கள் ஆய்வு செய்து உலகத்துக்குக் கண்டுபிடித்து வழங்கியவை எவை எனக் காணும்போது நாம் ஆச்சரியத்தால் வியக்கிறோம்

சந்திரனின் இயக்கத்தை முதன் முதல் கண்டறிந்தவர்கள் முஸ்லிம்களே!

அதுவரை சந்திரனின் இயக்கத்தைப் பற்றிய அனுமானக் கருத்துக்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பரவியிருந்ததே தவிர, சந்திரனின் இயக்கத்தை யாரும் துல்லியமாகக் கணக்கிட்டறிந்திருக்கவில்லை. ஆனால்,நீண்ட காலம் தொடர்ந்து மேற்கொண்ட முனைப்பான ஆய்வின் பயனாகக் சந்திரனின் இயக்கத்தைத் துல்லிய மாகக் கண்டறிந்து கூறியவர் அலி இப்னு அமாஜர் என்பவரும் அபுல் ஹஸன் அலி என்பவரும் ஆவர்.

அன்றைய வானவியல் ஆய்வாளர்களுள் குறிப்பிடத்தக்க மற்றொருவர் ஷரப் அல் தௌலா என்பவராவார்.பாக்தாது நகரைச் சேர்ந்த இவர் சிறந்த வானவியல் ஆய்வுக் கூடமொன்றை அமைத்து, வானவியல் ஆய்வாளர்களில் பலரை அதில் ஆய்வு செய்யச் செய்தவர். அங்கு ஆராய்ச்சி செய்துவந்த வானவியல் விஞ்ஞானிகளில் குறிப்பிடத்தக்கவர் அப்துல் ரஹ்மான் அல் தாபித் என்பவராவார். இவர் பல அரிய ஆராய்ச்சிகளைச் செய்துவந்தவர். தம் ஆய்வு முடிவுகளை நூலாக எழுதியுள்ளார். “அல்கவாகிப் அல் தாபித” எனும் பெயரில் அந்நூல் இன்றும் உள்ளது.

இயற்பியல் ஆராய்ச்சியில் மிகச் சிறந்து விளங்கிய மற்றொரு அறிவியல் அறிஞர் இப்னு அஹமத் அல் பிரூனி எனும் முஸ்லிம் ஆய்வாளர் ஆவார். கி.பி. 973 இல் பிறந்த இவர் 1048 ஆம் ஆண்டுவரை 75 ஆண்டுக்காலம் இவர் பல்துறை விஞ்ஞான அறிவு வாய்க்கப் பெற்றவராக விளங்கினார். இயற்பியல் துறை வல்லுநரான இவா மருத்துவத் துறையிலும் சிறப்பறிவு பெற்றவராக விளங்னார். கனம் குறைந்த வைரக்கற்களின் எடையைக் கணக்கிடும் முறையைக் கண்டறிந்தவர் அதே சமயம் கனம்மிகுந்த பல்வேறு உலோகங்களின் கனத்தை நிறுத்துக்கணக்கிடும் முறையையும் கண்டறிந்து. அவற்றின் இயல்பான எடையைக் கணித்தறிந்தார். இவற்றையெல்லாம் பற்றி நூல்கள் பல எழுதியவர். அத்துடன் அக்கால வானவியல் வல்லுநர்களில் ஒருவராகக் கருதப்பட்ட இவர் வானவியல் ஆராய்ச்சிகளையும் நூல் வடிவில் தொகுத்துள்ளார்.

துல்லிய நாளோடு கண்டவர்

அக்காலத்தில் விஞ்ஞான ஆராய்ச்சிகளுக்கு உதவுவதில் நாடாளும் மன்னர்கள் பேரார்வம் காட்டினார். புதிய புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் வெளி வரத்துணை நிற்பதில் பெருமை கொண்டனர். இவ்வகையில் செல்ஜுக் மன்னர் சுல்தான் ஜலாலுத்தீன் மாலிக் ஷாஹ் அவர்கள் வானவியல் ஆராய்ச்சிக்கென சிறந்த ஆய்வுக்கூடமொன்றை உருவாக்கி, அதில் ஆய்வு நடத்த அறிஞர்களையும் ஆய்வாளர்களையும் திரட்டி, ஆராய்ச்சிக்கான அனைத்து வசதிகளையும் செய்து தந்தார் இத்தகையவுக் கூடத்தை அல்ராப் எனுமிடத்தில் 1075 இல் நிறுவினார். இதையொத்த மற்றொரு வானவியல் ஆய்வுக்கூடத்தை அல் நெஷாப்பூர் எனுமிடத்தில் உருவாக்கினார்.

இவ்வாராய்ச்சிக் கூடத்தில் ஆய்வு நிகழ்த்திய அறிஞர்களுள் ஒருவரான உமர்கையாம் எனும் ஆய்வாளர் தான் செம்மையான ‘நாட்காட்டி’ (Calender) - ஐ உருவாக்கினார். இவருக்கு முன்னதாகவே பாரசீக அறிஞர்களால்‘ஒருவகை நாட்காட்டி உருவாக்கப்பட்டிருந்தது. எனினும் இப்பாரசீக நாட்காட்டியில் ஐயாபாரம் ஆண்டுகட்கு ஒருநாள் குறைவாகியது. அதே சமயத்தில் நடைமுறையில் இருந்த கிரிகேரின் நாட்காட்டியில் 3330 ஆண்டுகளில் ஒரு நாள் நாட்காட்டி நாள் குறைவோ அதிகமோ இல்லாமல் செம்மையானதாக அமைந்தது.

ஈர்ப்புவிசையையும் ஏவுகணையையும் முதலில் கண்டறிந்தவர்கள் முஸ்லிம்களே!

சாதாரணமாக இயக்கவியல் குறித்து அக்காலத்தில் எழுந்த பல பிரச்சினைகளுக்குச் சரியான தீர்வு கண்டவர் அன்றைய முஸ்லிம் விஞ்ஞானிகளேயாவர். இன்று நடைமுறையில் உள்ள ஏவுகணை இயக்கத்திற்கான இயங்கு விசைக்கோட்பாட்டை அன்றே உருவாக்கிய பெருமைகள்குரியவர் இப்னு அல்-ஹைத்தாம் எனும் இயற்பியல் அறிஞர் ராவார். ஈர்ப்பு விசை பற்றிய இவரது கண்டு பிடிப்புக் கொள்கையே பிற்காலத்தில் ஐசக் நியூட்டன் ஈர்ப்புக்கொள்கை உருவாக்கத்துக்கு வழியாயமைந்தது எனலாம்.அதே போன்று கலிலியோவில் வானவியல் ஆய்வுக்கும் வழியமைத்துச் சென்றவர் இப்னு அல்ஹைத்தாம் என்பவரே என வானவியல் வரலாறு விளக்குகிறது.

கண்ணொளியியல் தந்தை

அக் காலத்தில் புகழ் பெற்ற வானவியல் வல்லுநராகத் திகழ்ந்த இப்னுஅல்-ஹைத்தாம் கண் மருத்துவ மேதையாகவும் போற்றப்படுகிறார். ‘கண்ணொளியியல் தந்தை’என அழைக்கப்படும் ஹைத்தாம் மருத்துவத்திலும் திறம்பெற்ற மேதையாக இருந்துள்ளார் குறிப்பாகப் பார்வையியலில் தனியாற்றல் பெற்றவல்லுநராக விளங்கியுள்ளார் ஒளியுமிழும் திறன் பெற்ற பொருள்கள் வெளிப்படுத்தும் ஒளியைக் கண் பெறுகிறது என்ற உண்மையை முதன் முதலாகக் கண்டறிந்தவர் இவர். இவருக்கு முன்னதாக இருந்தவர்கள் பார்வை ஒளிபற்றியும் கண்ணின் அமைப்பு,அவற்றின் இயக்கம் ஆகியவை பற்றியும் சரியாகத் தெரிந்திருக்கவில்லை. கண்ணிலிருந்து வெளிப்படும் ஒளி பொருட்கள் மீது படிவதால்தான் பொருள்களைக் காணமுடிகிறது என்று கருதி வந்தார்கள். இத்தொடுபுலன கோட்பாடு முற்றிலும் தவறானது என்றும், நாம் பார்க்கும் ஒளிரும் பொருட்களிலிருந்து வெளிப்படும் ஒளியைக் கண்ஏற்பதன் மூலம் பார்வைத்திறன் ஏற்படுகிறது என்ற சரியான கண்டுபிடிப்பைக் கண்டறிந்து கூறியவர் இப்னு அல்-ஹைத்தாமே ஆவார் இதைக் கண்டறிந்து கூறியவர் அல் கிந்தி என்பாரும் உண்டு. இக்கருத்தே மிகச் சரியானதென இன்று ஒப்புக் கொள்ளப்படுகிறது. இதன் பின்னரே கண்ணொளியியல் பற்றிய சரியான கணிப்புகள் உருவாக இயன்றது.இக்கண்டுபிடிப்பு இத்துறையில் ஒரு திருப்புமுனையாகும்.

.

"https://ta.wikisource.org/w/index.php?title=அண்ணலாரும்_அறிவியலும்/4&oldid=1637063" இலிருந்து மீள்விக்கப்பட்டது