உள்ளடக்கத்துக்குச் செல்

காக்கை விடு தூது/பதிப்புரை

விக்கிமூலம் இலிருந்து
பதிப்புரை

பாரதநாடு வெள்ளையர் ஆட்சியிலிருந்து விடுதலை பெறாத நிலையில் அளிக்கப்பெற்ற தேர்தல் உரிமையினையேற்றுத் தேர்தலில் வெற்றிபெற்ற காங்கிரசு கட்சி, சென்னை மாநில ஆட்சியுரிமையைக் கைப்பற்றியது. மூதறிஞர் இராசகோபாலாச்சாரியார் முதலமைச்சராயினார். அக்காலத்தில் உயர்நிலைப் பள்ளிகளில் தாய்மொழி கட்டாயமாக்கப் பெறவில்லை; ஆங்கிலமே பயிற்று மொழியாக இருந்தது. அந்நிலையில் முதலமைச்சர் இராசகோபாலாச்சாரியார் இந்தி மொழியினைக் கட்டாயப்பாடமாக்கினார். அப்பொழுது தமிழ் விருப்பப் பாடமாகவே இருந்தது. தமிழைக் கட்டாய பாடமாக ஆக்காமல் அயன்மொழியாகிய இந்தியைக் கட்டாயப் பாடமாக்குதல் கூடாது என மறைமலையடிகளார் பேராசிரியர் ச. சோமசுந்தரபாரதியார், தமிழவேள் உமாமகேசுவரம் பிள்ளை முதலிய தமிழறிஞர்களும், சர். ஏ. டி. பன்னீர்ச்செல்வம், தந்தை பெரியார், இராவ் சாகிபு ஐ. குமாரசாமி பிள்ளை, கி.ஆ.பெ. விசுவநாதம், அறிஞர் அண்ணா முதலிய தமிழன்பர்களும் எதிர்த்தார்கள். மூதறிஞர் இராசாசி அவர்கள் தமது கட்சிப் பெரும்பான்மையைக் கொண்டு தமது திட்டத்தைக் கைவிடவில்லை. இந்நிலையில் இத்திட்டத்தை எதிர்த்த தந்தை பெரியார் முதலியவர்களும் துறவிகளும் புலவர்களும் பெண்களும் சிறையிலடைக்கப் பெற்றனர். அந்நிலையில் 1939-ஆம் ஆண்டிற் பாடப்பெற்றதே 'காக்கை விடுதுாது' என்னும் பனுவலாகும். இது தமிழ்ப்பொழில், விடுதலை, திராவிடநாடு ஆகிய இதழ்களில் வெளிவந்தது. இப்பொழுது இந்நூலின்படி கிடைக்காமையால் இரண்டாம் பதிப்பாக வெளியிடப்பெறுகிறது. இதனை வனப்புற அச்சிட்டுதவிய அண்ணாமலை நகர் சிவகாமி அச்சகத்தார்க்கு என் நன்றியும் பாராட்டும் என்றும் உரியவாகும். இந்நூலை என் ஆசிரியப் பெருந்தகை டாக்டர், நாவலர் ச. சோமசுந்தர பாரதியார் அவர்கட்கு உரிமையாக்குகின்றேன்.

செந்தமிழைக் காக்கும் திறலார் புகழ்சோம
சுந்தர பாரதியாம் தோன்றலார் - இந்திமொழி
மீதூரா வண்ணந் தடுத்தார்வெண் கோழிவிடு
தூதுரிமை யாமவர்க்குச் சொல்.


14-1-87
142, கனகசபை நகர்
சிதம்பரம்

இங்ஙனம்

ச. வெள்ளைவாரணன்