உள்ளடக்கத்துக்குச் செல்

தேன்பாகு/தேன் பாகு

விக்கிமூலம் இலிருந்து

 கோபாலன் தன்னுடைய உறவினர் வீட்டிற்கு வங்திருந்தான். அன்று அமாவாசை, இரவு தோசையைப் பலகாரமாக உண்டான், அதற்குத் தேன்பாகை விட்டார்கள். வெல்லம் காய்ச்சும் போது திரவப்பதத்திலே எடுத்து வைப்பார்கள். அதற்குத் தேன்பாகு என்று பெயர். அதைக் கோபாலன் முன்பு சாப்பிட்டறியாதவனாதலால் அதை மிகவும் சுவைத்து உண்டான். இன்னும் அதிகமாக உண்ணவேண்டும் என்ற ஆசை

அவனுக்கு இருந்தும் வெட்கத்தினால் கேட்காமல், போட்டதைச் சாப்பிட்டு எழுந்தான்.

அந்தத் தேன்பாகை அந்த வீட்டுக்காரர்கள, ரேழிக்கு அருகில் உள்ள ஒர் அறையில் ஒரு பானையில் வைத்துத் தொங்க விட்டிருந்தார்கள் எறும்பு வராமல் இருக்க அப்படிச் செய்திருந்தார்கள். கோபாலன் அதனைக் கவனித்தான். இரவு யாரும் அறியாமல் அதை எடுத்து உண்ண வேண்டும் என்று தீர்மானித்தான்.

தான்விடியற்காலையில் எழுந்து ஆற்றுக்குச் சென்று நீராடுவது வழக்கமென்றும், அதனால் ரேழித் திண்ணையில் படுத்துக் கொள்வதாகவும் சொன்னான். அப்படியே அங்கேபடுத்திருந்தான். உறக்கமே வரவில்லை. தேன் பாகின் நினைவாகவே இருந்தான்.

நள்ளிரவு ஆயிற்று, மெல்ல எழுந்திருந்து அந்த அறையில் புகுந்து மேலே மிக உயரத்தில் தொங்க விடப்பட்டிருந்த தேன்பாகுச் சட்டியைப் பார்த்தான். அங்கே சார்த்தியிருந்த ஒரு கோலை எடுத்து அதனால் அந்தச் சட்டியின் அடியில் குத்தினான். அது பழைய சட்டியாதலால் பொத்துக் கொண்டுத் தேன்பாகு கீழே ஒழுகியது. ஆவென்று வாயைத் திறந்து அதைக் குடித்தான், தேன்பாகு தரதரவென்று விழுந்ததனால் அவன் மேலெல்லாம் அபிஷேகம் பண்ணியது போல் ஆயிற்று. உடம்பெல்லாம் தேன்பாகு; ஒரே பிசுக்கு. ஏதாவது துணியிருக்குமா என்று சுற்று முற்றும் பார்த்தான். ஒன்றும் கிடைக்கவில்லை. அந்தப் பெரிய அறைக்கு அருகில் ஒரு சிறிய அறை இருந்தது. அதில் மெத்தை தைப்பதற்காகப் பஞ்சு வாங்கிப் போட்டிருந்தார்கள். அதில் விழுந்து புரண்டான், உடம்பெல்லாம் பஞ்சு ஒட்டிக் கொண்டது. புஸு புஸு வென்று உடம்பு முழுவதும் பஞ்சு மயமாக ஆகிவிட்டது. அந்தக் கோலத்தில் அங்கே இருக்கக் கூடாதென்று எண்ணி வாயிற்கதவைத் திறந்து வெளியே புறப்பட்டான்.

இரவு நேரத்தை எங்காவது கழித்துவிட்டு விடியற்காலையில் ஆற்றுக்குச் சென்று நீராடிய பிறகு வரலாம் என்ற நினைவுவர புறப்பட்டுச் சென்றான். போகும் வழியில் ஓர் ஆட்டுப்பட்டி இருந்தது. அதற்குள் புகுந்து ஆடுகளோடு ஆடாக முடங்கிக் கிடந்தான். எப்பொழுதப்பா விடியும் என்று காத்திருந்தான்.

அன்று ஆடு திருடும் கள்ளர்கள் வந்தார்கள் பெரிய ஆடாகத் திருடவேண்டுமென்று எண்ணித் தேடினார்கள் உடம்பெல்லாம் பஞ்சு முடியிருந்ததனால் கோபாலனை அவர்கள் ஏதோ பெரிய ஆடு என்று நினைத்துத் தூக்கிக்கொண்டு போனார்கள். இடைவழியில், “இது என்ன, இவ்வளவு கனமாக இருக்கிறது!” என்று கீழே போட்டார்கள்.

அப்போது கோபாலன், "நான் ஆடு அல்லடா!” என்றான். அதைக் கேட்டவர்கள் இது ஏதோ பேயோ பிசாசோ என்று அஞ்சி ஓடி விட்டார்கள். பிறகு விடியற்காலை வேளையில் கோபாலன் ஆற்றுக்குச் சென்று நீராடி வீட்டை அடைந்தான்.

"நீ விடியற்காலையில் நீராடப் போகையில் சொல்லி விட்டுப் போகக் கூடாதா? கதவு திறந்திதிருந்ததனால் யாரோ உள்ளே புகுந்து தேன் பாகையெல்லாம் வீணாக்கி விட்டார்கள்” என்று அந்த வீட்டுக்காரர்கள் சொன்னார்கள்.

“அப்படியா?, நான் நீராடப் போக வேண்டும் என்ற அவசரத்தில் சொல்லிக் கொள்ளாமல் போய் விட்டேன்” என்று அவன் சமாதானம் சொன்னான். ஆனாலும் அவ்வளவு தேன்பாகும் வீணாகி விட்டதே என்று அவனுக்கும் சற்று மனத்தில் வருத்தம் உண்டாயிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=தேன்பாகு/தேன்_பாகு&oldid=1637312" இலிருந்து மீள்விக்கப்பட்டது