உள்ளடக்கத்துக்குச் செல்

புது வெளிச்சம்/ரிதம்

விக்கிமூலம் இலிருந்து

4

ரிதம்

மிழ் இலக்கணத்திற்கு முரணாய் மொழிக்கு முதலெழுத்தாக வரக் கூடாது' என ஒதுக்கப்பட்ட உயிர்மெய் எழுத்தையே முதலெழுத்தாகக் கொண்டு, ரிதம் என வழங்கும் இச்சிறிய சொல் ஒரு மகத்தான சொல். சிறு மீன் சினையினும் சிறிய ஆலமரத்தின் வித்தினை இச்சொல் தன்னுள் அடக்கி வைத்துக் கொண்டுள்ள விழுமிய கருத்தை முழுமையாக அறிந்து கொள்வது சிரமத்தின்பால் பட்டது. ஆயினும், இதை உலகத்திற்கு விளக்கித்திர வேண்டிய கடமை காரணமாக எழுதி முடிக்க விரும்புகிறேன். இது அவசியத்தை முன்னிட்ட செயலே அன்றி அறிவு மேன்பட்டதன்று எனத் தன்னடக்கத்துடன் சொல்லிக்கொள்கிறேன். 'எது உயர்ந்ததற் கெல்லாம் உயர்ந்ததோ எது பெரியதற் கெல்லாம் பெரியதோ, எது ஒப்புவமை இல்லாததோ, எது வெளிப்படையாகத் தோன்றாத ஒன்றோ, அளவுக்கடங்காததோ, உலகெலாமாகியதோ, மிகப் பழமையானதோ, இருளுக்கப்பாற் பட்டதோ, இதனைக் காட்டிலும் வேறானதும் நுண்மை (சூக்குமம்) யானதும் பிறிதொன்றில்லையோ, அதுவே ரிதம், அதுவே சத்தியம்' என்று அறிந்தவர்கள் கூறுகிறார்கள். இதுவே தீர்க்க தரிசிகளின் பரப்பிரம்மம் 'அதுவே அக்கினி, அதுவே வாயு, அதுவே சூரியனும் சந்திரனும், - மற்றுள்ள அனைத்தும்', என்கிறது உபநிசத்து.

சற்று ஆழ்ந்து சிந்தித்துப் பாருங்கள். இத்தகைய ஆற்றல்சால் ரிதத்தைப் பற்றி நாம் இதுகாறும் அவசியமிருந்தும் அறிந்து கொள்ளவே இல்லை. அறிந்தவர் எவரும் முன்வந்து நமக்கு அறிவிக்கவும் இல்லை. மற்ற மதக்கோட்பாடுடையவர்களைப் பற்றி நான் இங்கு எதுவும் கூறவரவில்லை. இந்து மதத்தினரைப் பற்றியே, - நானும் ஒரு இந்துவாக இருப்பதனாலேயே, இருள் மூடிய இந்தக் காலகட்டத்தில் கட்டாயமாக இதை நான் கூறித்திர வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதனாலேயே முடிந்த அளவு விவரிக்க விரும்புகிறேன்.

திராவிட மக்களாகிய நம்மை, ஆரியர்கள் தம்முடைய மதத்தில் சேர்த்துக் கொண்டபின் நமக்கு மதம் சுட்டிக்காட்டும் உண்மைகளை கூறித் தெளிவித்திருக்க வேண்டுமல்லவா? இஸ்லாம் கூறித் தெளிவித்திருக்கிறது. கிருத்துவம் கூறித் தெளிவித்திருக்கிறது. எங்கள் மதநூல் திருக்குரான், எங்கள்மதநூல் பைபிள் என்று ஒளிவுமறைவின்றி அது சரியோ தப்போ - விளக்கி இன்றும் தெரிவித்துக் கொண்டுள்ளது கண்கூடு.

ஆனால், இந்துமத போதகர்கள் அன்றிலிருந்து இன்று காறும் இதைச் செய்யவில்லை, செய்வது மில்லை என்பது, நாம் அனைவரும் அறிந்ததே. இதற்குக் காரணம் என்ன? என வினாவின், விவேகானந்தர், சின்மயானந்தர், தயானந்த சரஸ்வதி, மற்ற மடாதிபதிகள் முதல் எவருக்கும் உபநிசத்துகளை எடுத்து விளக்கி மக்களைக் கடைத்தேற்றிவிடும் அதிகாரம் இல்லை, உபநிசத்து என்றால் இரகசியம், பன்னிரண்டாண்டுகள் குருகுலவாசம் செய்தபின் அருகிலுள்ளவர்களுக்கும் கேட்காத குரலில் மாணவனது காதின்மேல் குருவானவர் தம் வாய் வைத்துக் குசு, குசு வென்று மெல்லப் சொல்வது என்பது பொருள் மற்ற எவருக்கும் சொல்லக் கூடாது என்பது கட்டளை. ஆம் சாந்தோக்கியோபநிசத்து இரண்டாம் அத்தியாயம் 11.5/11.6ம் சூத்திரங்கள் கூறுவன இது. இந்தப் பிரம்ம ஞான வித்தையை தகப்பன் தன் முதல் பிள்ளைக்கு உபதேசிக்கலாம், அல்லது தகுதியுடைய மாணாக்கனுக்கு உபதேசிக்கலாம். மற்றபடி எவர்க்கும் உபதேசிக்கக் கூடாது. எல்லாச் செல்வத்துடனும் நிறைந்த இந்த நீர் சூழ்ந்த பூமியையே கொடுத்தபோதிலும், இது அதனினும் பெரிது இது அதனினும் பெரிது’ என்று. எனவே இந்தக் குருமார்களின் பாதபத்மங்களில் நாம் சிரம் வைத்து வணங்குவது தவிர இவர்களிடமிருந்து நமக்கு எந்த ஒரு நன்மையும் இதுகாறும் கிட்டவே இல்லை. பாவம் இவர்கள் ஒருவிதத்தில் கட்டுப்பட்டவர்கள், இருந்து விட்டுப் போகட்டும். இவர்களை நாம் நொந்துகொள்வதில் பயன் எதுவுமே இல்லை. அப்பாவிகள்தான் இவர்கள்!. தினத்தாள்கள், வார மாத இதழ்கள் இவர்களை உச்சிமீது துாக்கி வைத்துக்கொண்டு, ஆ.ஆ. ஓ.ஓ. என்று பாராட்டிய போதிலும், பாவனை பண்ணிய போதிலும் தாமறிந்ததை நம்மைப் போன்றவர்களுக்கு ஈந்து மனங்கொளக் கற்பிக்கவியலாத அசக்தர்கள் என்பதுடன் விட்டு, ரிதம் எனும் அந்த மகத்தான சொல்லுக்கு நாம் இனிப்பொருள் காணத் தொடங்கலாம்.

ரிதம் - விவகார உண்மை - உலகில் காணும் அழகும் ஒழுங்கும்! இயற்கை நியதியும் ஆம் எனப்படுகிறது. விவகாரம் எனும் சொல், வழக்கு எனும் பொருள் ஒன்றிற்கு மட்டும்தான் நாடு இன்று இட்டு வழங்குகிறது. நீதியதிபதித்வம் எனும் பொருளும் பண்டைநாளில் அது முதன்மையாகப் பெற்றிருந்தது. அறம் சட்டம் நெறிமுறை என்ற பொருளும் கூட ரிதம் தான். அழகுதான் ஒழுக்கம், ஒழுக்கமே பேரழகு. இயற்கையோடு அனைத்து உயிரினங்களும் இந்த நியதிக்கு உட்பட்டனவாகியே உள்ளன. நெஞ்சத்து நல்லம் யாம் என்னும் நடுவுநிலைமையால் கல்வியழகே அழகு, என்றும் பண்டைக் காலத்திலேயே தமிழ் மக்களும் இதையறிந்தேற்றுக் கொண்டுள்ளனர். ஆனால் இன்று நாம் உயிரோடு இருந்தும் அறியாதவர்களாய், அறிந்தும் அனுசரிக்காதவர்களாய் உள்ளோம்.

'யாண்டு பல ஆயினும் நரையில வாகுதல்' எனும் புற நாநூறின் பாடலும் இந்த ரிதம் தான். திருவள்ளுவரின் இல்லறம், துறவறம் இரண்டும் இந்த ரிதமேதான். நீதியதிபதித்துவம் சமுதாயத்தின் சிவ நாடி, நயாபைசாக்களுக்கு பின்னால் ஒடிக்கொண்டிருக்கிற சுயநலச் சீமான்களின் முன்னோடிச் சமுதாயம் அழிவை நோக்கி விரைந்து சென்று கொண்டுள்ளது. நீதிக்குத் தலைவனங்காது. நெறிமுறை மறந்து திசை மாறிச்செல்லும் சமுதாயத்தின் எதிர்காலம் இருள் மூடியதாகவே இருக்கும். நிச்சயம், இதில் துளி ஐயம் இல்லை.

விவகார உண்மையை அதாவது அறநெறி ஒழுக்கத்தை ஏன் சமுதாயம் கை விட்டது? காரணம் இதுதான் பரமார்த்திக உண்மையான அடிப்படை சத்தியத்தை அறவே கைவிட்டது. தற்காலத் தமிழ் சமுதாயம் தீண்டத்தகாத ஒன்றாக அதை ஒதுக்கி வைத்து விட்ட்து. சத்தியத்தை அறவே மறந்துவிட்ட மக்களாகிய நாம் ஆத்மாவையே இழந்துவிட்டோம் என்பதில் துளி ஐயமும் இல்லை. நம்முடைய தாழ்வுகளனைத்துக்கும் நாமே தடமமைத்துக் கொடுத்து விட்டோம்.

'நமது மனம் பயமற்று விளங்கவில்லை, நமது தலை கம்பீரமாய் நிமிர்ந்திருக்கவில்லை. நமது அறிவு சுதந்திரத்துடன் பொலியவில்லை'. குறுகிய சாதி மதப் பிளைவுகளால் நாடு உடைந்து உருக்குலைந்துள்ளது. உண்மையின் ஆழத்திலிருந்து நமது சொற்கள் உதிப்பதே இல்லை. 'வெறும் பிரமையில் நாம் இன்றும் தள்ளப்படுகிறோம். இன்றைய விஞ்ஞானயுகத்தில் யானைப் பூசை செய்து ஞானம் பெற முயலுகிற நாம் முற்றிலும் பராதினர்கள். ஆம் சுய சிந்தனை அற்று எடுப்பார் கைப்பிள்ளை போல் நாம் வாழ்ந்து கொண்டுள்ளோம்'.

இந்தப் பாரதீனம் நீங்க நமக்கு இன்றும் கைவிளக்காக உள்ளது திருக்குறள். திருக்குறள் தெரிவிக்கிறது. 'இருமை வகை தெரிந்து கொள் அறம் பூண்டு அணிகலன் கொள்' என்று.

இம்மை மறுமை, இறப்பு பிறப்பு, இன்பம்துன்பம், இசை வகை ஈதல் ஏற்றல், வெப்பம் தட்பம், விருப்பு வெறுப்பு, உடைமை வறுமை, இரவு பகல், நினைவு மறதி, உணவு மலம், ஒழுக்கம் இழுக்கம், அறம் மறம்,மேன்மை கீழ்மை, பெருமை, சிறுமை, நன்மை தீமை - இன்னும் பற்பல.

இவற்றில் நல்லது கொண்டு கெட்டது விட்டு உண்மையாக வாழ்க்கையில் மேற்கொண்டொழுகும்போதன்றி நீ யாரா யிருப்பினும் உன்னை நீயே தாழ்த்திக் கொள்ளுகிறாய் என்பதுதான் பொருள். உன் பிறவியை நீயே பாழாக்கி விட்டாய். வாழத் தெரியாது வாழ்ந்தவனாகிறாய் என்பதுதான் அர்த்தம்.

எனவே ரிதம் எனில் ஒழுங்கு. அழகு, உன்னுடைய உள்ளத்தில் இவ்விரண்டும் படிந்திருக்க வேண்டும். இது உன் வாழ்க்கைப் பாதையாக அமைந்திருக்க வேண்டும். இல்லையெனில் உன்வாழ்வு வெறும்சோற்று வாழ்வுதான்.

சோற்றுக்காக வாழும் ஒவ்வொருவனும் சுவர்க்கம் புக அருகதையற்றவனாகிறான். துதிகளும் தோத்திரங்களும் மதியற்றவர்களின் பிச்சைபொருள் என்பதைக் ஆராய்ந்து அறிந்துகொள்.

❖ படிப்பின் இரகசியம் பண்பாடுகளைக் கெளரவிப்பதில்
அடங்கியுள்ளது.
- எமர்சன்

❖ உன்னிடத்தில் உள்ளவற்றுள் எது மிக, மிக உயர்ந்ததாய்
உள்ளதோ, அதை நீ உலகத்திற்காக அர்ப்பணித்துவிடு.
- மகாத்மா காந்தி

❖ உலகில் நிரந்தரமான வெற்றியை உண்மைக்கே இயற்கை
உரியதாக்கி உள்ளது.

வாழ்க்கை முழுவதும் ஆனந்தம் என்றால், அந்தச் சுகமே
நரகமாகிவிடுகிறது.
- பெர்னாட்ஷா

"https://ta.wikisource.org/w/index.php?title=புது_வெளிச்சம்/ரிதம்&oldid=1637774" இலிருந்து மீள்விக்கப்பட்டது