புது வெளிச்சம்/உத்கீதம்
3
உத்கீதம்
“உத்கீதம்" என்ற சொல்லும் சாரமுள்ள ஒரு அருமையான பொருள் பொதிந்த சொல்தான். எனவே நீ இதனை அவசியம் புரிந்துகொள்ள வேண்டும். உன்னை நீ உயர்த்திக் கொள்ள விரும்பினால், அதற்கு வேண்டிய உணர்வுகள் உன்னிடம் இருந்தே தீர வேண்டுமல்லவா?
"ஒமித் ஏதத் அட்சரம் உத்கீதம் உபாசித” என்கிறது இந்த உபநிசத்து.
'ஓம்' என்னும் இது ஒரு அட்சரம் தான், எனினும் அது உத்கீதம் என்ற பெயரும் பெற்றுள்ளது. எனவே அதை நீ (உன் உயிரைக்காட்டிலும்) உயர்ந்ததென எண்ணி உபாசிக்க வேண்டும், என்பது இதன் பொருள். உபாசித்தல் என்றால் போற்றுதல்தான். வேறு அஞ்சத்தக்கதோ அனுசரிக்க இயலாத பொருளோ இதில் இல்லை. ஏன் இதனை உபாசிக்கவேண்டும் எனின், மற்றொரு உபநிசத்து அதனை இவ்வாறு விளக்க முற்படுகிறது.
பூதங்களின் ரசம் (சிறப்பான பகுதி) மண், மண்ணின் ரசம் தண்ணிர் தண்ணில் ரசம்தாவரவர்க்கம்; தாவாங்களின் ரசம் மனிதன்; மனிதனின் ரசம் வாக்கு, வாக்கின் ரசம் உத்கீதம் அதுவே ஒம்!
மனிதனின் ரசம் வாக்கு எனப்படுகிறது. எனவே இன்று வாழும் ஒவ்வொரு மனிதனும் தன்னைத் தன் வாக்கின மூலமாக வெளிப்படுத்திக் கொள்கிறான்.
ஒரு சிறிய முல்லைப்பூதன் மேம்பாட்டை அல்லது இயல்பைக் காற்றோடு கலந்து கமழும் திறத்தினால் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. முந்திரிப்பழம் தன்னுள் சேர்த்துவைத்துக் கொண்டுள்ள இனிய ரசத்தினால் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. குயிலும் காக்கையும் தத்தம் குரலினால் தம்மை வெளிப்படுத்திக் கொள்கின்றன. புலியும் பூனையும், தேக்கும் திமிசும், பசுவும் எருமையும் போலவே மனிதர்களும் தத்தம் வாக்கினால் தம்மை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள்.
இதில் இன்னொரு விவரம்நான் யாராயிருக்கிறேன் என்பது கணக்கில் சேர்க்க இயலாது! என் வாக்கில் என்ன இருக்கிறது என்பதுதான் நாம் எடுத்துக்கொள்ளவுள்ளது.
கீதம் = இசைப்பாட்டு எனப் பெரியோர் உணரச் செய்துள்ளனர். எனினும் பொதுவான பொருள் ஒலி என்பதுதான். ஆனால் உத்' என்னும் பகுதி என்ன சொல்லுகிறது என நாம் ஆராய வேண்டும்.
உத் + அயம் = உதயம், உத்தமன், உத்தரவு, உத்வேகம், உத்யோகம், உத்தண்டம், உத்தரம், உத்சவம், உத்பத்தி போன்ற சொற்களில், உள்ள பகுதிப்பொருள் எவ்வளவு மகத்தானதாயுள்ளன என்பதை நீ எண்ணிப்பார். எனவே உன்வாக்கில் உன்னிட முள்ள மேன்மைகள் (தெய்வீகம்) வெளிப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும். என்பது தான் உத்கீதத்தின் குறிப்பு.
இந்த உத்தின் உயர்வை நா நலம் என்னும் நலன் (ஒரு) உடைமை அதாவது ஒரு அரும்பொருள் அந்நலம் இதர எந்த ஒரு நலத்திலும் உள்ளது போன்ற ஒன்றன்று: எல்லா நலன்களைக் காட்டிலும் மேலான நலன் நாநலன். என்று வள்ளுவர் விளக்குகிறார்.நாக்கில் உள்ள இந்நலத்தை நம் தமிழகத்திலுள்ள புலவர் பெருமக்கள் எத்தனைபேர் புரிந்து கொண்டு ஒழுகுபவராயுள்ளனர். ஒரே ஒரு ஒற்றை மனிதன் உண்டா? நம்மிடமுள்ள மேன்மையை நம் அறியாமல், அறிந்து வெளிப்படுத்தி மற்ற மக்களைப் பின்பற்றி ஒழுகச் செய்யாமல் கற்ற - கற்பிக்கும் கல்வியில் நல்லது என்று கூற வேறு என்னதானிருக்கிறது.
'சொல்வன்மை' என்பதன் பொருள்தான் என்ன? உரத்த குரலில் சாதுர்யமாக, ரசம் சொட்டச் சொட்டக் கேட்பவர் உள்ளத்தில் பதியும்படியாக - இப்படியெல்லாம் சொன்னால் அச்சொல் வன்மையுடையதாகிவிடுமா? இல்லை. அறிவற்றவர் ஆராய்ச்சி யற்றவர்கள் ஒருகால் இத்தகைய சொற்களால் கவரப்பட்டு, கை ஒலி செய்து வரவேற்பர்; அறிஞர்கள், அதுவும் 'உத்’ எனும் சொல்லின் பொருளுணர்தொழுகின்றவர்கள், 'பாவம்' முழுக் குருடர்களுக்கு முக்கால் குருடன் வழிகாட்டி என்று தான் அதனை விமர்சிப்பர். என்று நான் அழுத்தமாக இங்கு சொல்லிக் கொள்கிறேன்.
நம்மை நாமறிந்த நிலையில், உண்மைக்கும் நீதிக்கும் வேறாகாத முழுமையான அறிவிலிருந்து வெளிப்படும் சொல்தான் வன்மையுடைய சொல்; அதுவே நிலையான சொல். வாக்கின் ரசம். அதுவே ஒம்! அதுவே உத்கீதம்.
எப்பொருளாயினும், அதை உரைப்பவர் எத்தகைய வராயினும், அவ்வுரையில் அடங்கியுள்ள உண்மைப் பொருள் அறியும் ஆற்றலுள்ளவரே உத்கீதத்தின் பொருள் உணர்ந்தவராகிறார்.
'ஐயப்படாது பிறர்தம் அகத்தில் உள்ளதனை அறியும் சக்தி எவரிடம் இருக்கிறதோ, அவரே உத்கீதத்தின் உண்மையை உணர்ந்தவர். தெய்வத்தோடொப்புக்கொள்ள வேண்டியவர்.
வெறும் ஏட்டுச் சுரைக்காய் படிப்பு உள்ளத்தைத் துாய்மை செய்யாத படிப்பு வெறும் சோற்றுக்கான படிப்புதான். எனவே ஆன்மிக படிப்பு அற்றநாடு என்றும் அடிமை நாடு அவலத்துக்குரிய நாடாகவே இருக்கும்.▪