உள்ளடக்கத்துக்குச் செல்

புது வெளிச்சம்/ஓமித் யேகாட்சம் பிரம்மம்

விக்கிமூலம் இலிருந்து

2

ஒமித் யேகாட்சம் பிரம்மம்

'ம்' எனும் இந்த ஒரு எழுத்துதான் 'பிரம்மம்' என்கிறது உபநிசத்து. மிகப் பழங்காலத்திலேயே நமது பாரதப் புண்ணிய பூமியில் பிறந்த மாமேதைகள், பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம் என உள்ள பஞ்ச பூதங்களின் இயல்புகள் பற்றித் திட்டவட்டமாக ஆராய்ந்துத் தெளிந்துரைத்த சூத்திரம் இதுதான்.

'சத்தி வேறு பொருள் வேறு அல்ல; சக்திதான் பொருள் (இ = எம்.சி) என்று 1905 ஆம் ஆண்டில் சூத்திரம் செய்து காட்டி. அதை 6,9-8-1945ல் ஈரோசிமா, நாகசாகி நகரங்களின் மீது 'அணுகுண்டு’ எனும் பெயரில் போட்டுச் சர்வநாசம் செய்து காட்டிய ஆல்பீரட் ஐன்ஸ்டீன் செய்தது போன்ற அழிவுச் சக்திக்குரிய சூத்திரமாகாது, ஆன்மீக ஆக்க சக்திக்கான சூத்திரம் இந்த ஒமித்யேகாட்டிசரச் சூத்திரம் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். 'ஓம்' எனும் எழுத்தின் பொருளை உபநிசத்து நமக்குமேலும் விவரித்து விளக்குகிறது.

அதுவே நான்; அதுவே ஆத்மா. அதுவே அகம், அதுவே மற்றும் பிரணவம், சக்தி, பிரம்மம், கடவுள், தெய்வம் எனப் பல்வேறு பெயர்களை இட்டு வழங்கும் பரம் என்றும் கூறுகிறது.

"பிரம்ம வித்யாம் சர்வ வித்யா பிரதிஷ்டாம்" என்கிறது இந்தச் சூத்திரம். உலகிலுள்ள மற்ற பொருள்களைப் பற்றிக் கூறும் எல்லா வித்தைகளும் பிரம்ம வித்தையில் அடங்கியுள்ளது என்பது இதன் பொருள்.

பிரம்ம வித்தை = பிரம்மத்தை அறியும் வித்தை என பொருள்படும். பிரம்மம் - கடவுள் தன்னந்தனியாக, தனி ஒன்றாக வானிலோ, மண்ணிலோ இருக்கவில்லை; அதுபொருளோடு ஒன்றியுள்ளது. நான். நீ அவன், அது, அவை எனும் ஒவ்வொரு சடப்பொருளிலும் ஒன்றியுள்ளது. எனவே, உன்னிட முள்ள அந்த ஆத்மாவை, நீ உன் அறிவைக் கொண்டு உணர்ந்து கொள். உன்தெய்வத்தை நீ ஆராதனை செய், போற்று. சுருங்கக் கூறின் உன்னை நீ போற்று. உன்னை பிறர் துாற்ற என்றும் இடம் கொடாதே. உனக்கு நீயே சாட்சியாக இரு.

உன் உள்ளத்தில் படிந்துள்ள இருள்நீங்க, ஐயம் அகல, இந்த ஒரு உபநிசத்தைப் படித்து ஒர்ந்துகொள்.

"எவர் அறிவில் இருந்து கொண்டு அறிவினுள் உறைகின்றாரோ, எவரை அறிவு அறிந்துகொள்ளவில்லையோ, எவருக்கு அறிவு உடலாகின்றதோ, எவர் அறிவினுள் நின்று அதை ஆள்கின்றாரோ, அவர்தான் உன்னுடைய ஆத்மா, அந்தர்யாமி, அழிவற்றவர்” என்கிறது.

தெய்வம் எனும் அந்த மகத்தான சக்தி பொருளில் இருந்தது போலவே அறிவில் இருக்கிறார்; அவருடைய இல்லமும் அதுவே. ஆயினும் அறிவு அவரை முழுமையாக அறிந்து கொள்வதில்லை; கூடாத ஆசைகள், கோபதாபம், மயக்கநிலைகள் குணங்களாகக் கூடியுள்ள அறிவு அவரை அறிந்துகொள்ள இயலாது. தெளிந்த அறிவுக்குள்ளிருந்துதான் அவர் அந்த அறிவை ஆள்பவராகிறார். அவர்தான் ஆத்மா, அந்தர்யாமி, அழிவற்றவர்.

இன்னும் ஒரு உபநிசத்தை உனக்கு அறிமுகப்படுத்துகிறேன். சிந்தித்து தெளிந்து ஓர்ந்துகொள்.

எதை நீ உன் கண்ணால் பார்ப்பதில்லையோ, ஆனால் எதனால் உன் கண்கள் பார்க்கப்படுகின்றதோ, அது பிரம்மம் என்று அறி. எதை 'இது பிரம்மம்' என்று சுட்டிக்காட்டி உபாசிக்கப் படுகிறதோ அது பிரம்மம் அன்று என்கிறது மேலும் ஒருஉபநிசத்.

இதிலிருந்து என்ன புலப்படுகிறது கடவுள் கண்ணால் பார்க்கப்படும் எந்த ஒரு பொருளும் அல்ல.

மனிதனுக்கு இன்றியமையாதனவாய் இயற்கையாக அமைந்துள்ள கண், காது, மூக்கு, வாய் உடல் (பஞ்சேந்திரியங்கள்) எனும் ஐந்தும் வெளிநோக்குடையவையாய் இருக்கின்றன. அதனால் நாம் வெளித்தோற்றங்களையே பார்ப்பவர்களாகியிருக்கிறோம். நம்மில் யாரோ ஒருசிலர் 'நான் நான்' என்று சதா சொல்லிக்கொண்டிருக்கும் அந்த நான் என்பது என்ன? அது எத்தகையது என்று கேள்வி கேட்டுக்கொண்டு உள் முகமாய்ப் பார்த்து அறிந்து கொள்கிறான். அந்த 'நான்' உடலுமல்ல உயிருமல்ல; இந்த இரண்டிற்கும் அப்பாற்பட்டது. இந்த உடலும், உயிரும் அந்த நான் எனும் ஆத்மாவுக்காகவே உள்ளன. எனவே அழியக்கூடிய உடலுக்காகவும் உயிருக்காகவும் நான் வாழக்கூடாது. நான் அந்த ஆத்மா - அழியாத தெய்வசக்தியாய் உள்ளேன். அதற்காகவே வாழவேண்டும் என அறிபவனாகிறான்.

மனிதப் பிறப்பு மகத்தான பிறப்பு; இந்த என் உயிரோடு கூடிய உடல், "நான்" எனும் தெய்வத்திற்காக உள்ளது. இது ஒரு தெய்வ சந்நிதானம். தெய்வமாகிய நான் ஒரளவு காலம் இதில் குடிகொண்டிருக்கிறேன். என்னைப் போன்றவர்களே மற்றும் என்னோடுள்ள மற்ற எல்லா மனிதர்களும், எனக்கு எது வேண்டுமோ, அது மற்ற எல்லோருக்கும் வேண்டும். எனக்கு எது கேடுசெய்கிறதோ அது மற்றவர்களுக்கும் கேடே செய்யும் என்ற ஆன்மீக ஞானம், அதாவது தன்னையறிந்து கொள்பவனாகிறான். தன்னை அறிந்தவன் மற்றவர்களையும் அறிந்தவனாகிறான். தலைவனையும் (தெய்வம்) அறிந்து கொண்டவனாகிறான். எனவே, 'பிரம்ம விதாப்நோதி பரம்' பிரம்மத்தை அறிந்தவன் பிரம்மமாகிறான். என்று உபநிசத்து இங்கு நமக்கு விளக்கமாகிறது. நம்முடைய அறியாமை, அச்சம் அகற்றவும் செய்கிறது. அறிய வேண்டியதை அறிந்தவன் அடைய வேண்டியதை அடைந்தே தீருகிறான்.


❖ புகழ்ச்சியே அறியாமையின் குழந்தை. ஆம்,
  அறியாமையின் குழந்தைதான் புகழ்ச்சி.
பென்ஜமீன் பிராங்ளின்

❖ கவிதை என்பது ஆத்மாவின் ரகசியம். அதை வெறும்
  வார்த்தைகளைக் கொண்டு உளறுகிறார்கள்.
-கலில் இப்ரான்

❖ ஆசைவசப்பட்டவனின் உள்ளம் மாசைப் பூசிக் கொள்ளும்.
- வெ.

❖ மக்கள் வாக்கு வேர்கள், கவிஞனின் வாக்கு மலர்கள்.
- ஸ்ரீகண்டய்யா

❖ கல்மனம் உள்ளவர்கள் ஏழைகளாவதில்லை. ஏனெனில்
  அவர்களை மொட்டை அடிக்க கடவுளாலும் முடியாது.

- பம்பன்னா