உள்ளடக்கத்துக்குச் செல்

புது வெளிச்சம்/ஓம் தத் சத்

விக்கிமூலம் இலிருந்து

1


ஓம் தத் சத்


லகில், வாழப்பிறந்த மனிதன் இளமையிலேயே கற்பன கற்று, அறிவன அறிந்து வயது வந்ததும் நுகர்வன நுகர ஒத்த இயல்பினை யுடைய ஒருத்தியை மணந்து இல்லற வாழ்வைத் தொடங்குதல் தவிர்க்க இயலாதது. கூடவே தான் இனிச் சாதித்துத் தீரவேண்டிய குறிக்கோள் ஒன்றையும் அவசியம் தன் உளத்தில் ஓர்ந்து தேர்ந்தெடுத்து உறுதிப்படுத்தி வைத்தொழுகுதலும் தவிர்க்க இயலாததே.

"குறிக்கோளில்லாத வாழ்வு பண்டமில்லாத பாத்திரம், அல்லது பயன்படுத்தப்படாத பாத்திரத்திலிட்ட பண்டம் போன்றதே என்பர் அறிஞர், ஏயால துரைசாமி என்னும் கன்னடக் கவிஞர். ஓர் இலந்தை மரத்தின் வாயிலாய்க் இக்குறிக்கோளின் அவசியத்தை நமக்குப் புரியும்படிச் செய்துவிடுகிறார்.

'என்னுடைய புன்செய் நிலத்தில் ஒர் இலந்தை மரம் இருக்கிறது. அது முழுவளர்ச்சியடைந்து பார்க்கத் தகுந்த தோற்றமுடன் வட்டமான கூடாரம் போல் கிளையும், கோடும், விளார்களுமாய் விரிந்து மரகதக் காயும் பவளக் கனியுமென வரிசை வரிசையாய்க் காய்த்து கனிந்து தன்னிடம் வைத்துக் கொண்டு காத்திருந்தது.

ஒரு காலைப் பொழுது, அந்தக் கனிகளைச் சுவைத்துத் தின்னப்பற்பல பறவைகள் வந்து அதில் கூடியிருந்தன. செவ்வெறும்புக் கூடுகள் சிலவும் அதில் காணப்பட்டன. அதே நேரத்தில் ஆணும் பெண்ணுமாக ஊர்க் குழந்தைகளும் அங்கு உதிர்ந்து கிடக்கும் நல்ல பழங்களைப் பொறுக்கிச் சேர்த்துக் கொண்டும், தின்று கொண்டும் குழுமியிருந்தனர். இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அந்த இலந்தை மரம் என் பிறப்பு மகத்தான தாயிற்று என்னால் பல சீவன்கள் குதுகலிக்கின்றன பயன்படாமல் சில மனிதர்கள் வெறுமையாய் வாழ்வதில் என்னதான் இருக்கிறது! என்று தனக்குத்தானே எண்ணிப் புளகாங்கிதம் முற்றது!’ என்கிறார்.

பரோபகாரம் இதம் சரீரம் இந்த நம் உடலுக்கு நலம் தரத்தக்கது, உணவினைக்காட்டிலும் பிறருக்கு உதவியாயிருப்பது தான் என நாட்டில் வழங்கிவருகிறது. செல்வம் தேடும் வாய்ப்புள்ளவர்களில் ஒரு சிலர், "செல்வத்தினால் பெற்று நுகரவேண்டிய ஈத்துவக்கும் இன்பம் அறியார் கொல்” என்று, வள்ளுவர் கூறிப் பரிந்துரை செய்தார் போலும்.

சிந்தித்துத் தெளியாத உள்ளம், நீரில் தோய்த்துத் துவைக்காத் துணியைப் போன்று என்றும் மலினமானதாகவே இருக்கும். காண்பனவும், கேட்பனவும் கொண்டே வாழும் ஒரு மனிதனின், அவன் யாராகவேனும் இருக்கட்டும், வாழ்வு மலின முள்ளதாகவே இருக்கும். ஆம் ! அது வெறும் சோற்றுக்காக வாழும் பாவனை வாழ்க்கைதான்.

'உழைப்பென்று, உணவென்று' என வாழும் அப்பாவிகளைப் பற்றி நான் இங்கு எதுவும், கூற விரும்பவில்லை; பணம் தேடுவது எதற்காக?' என்றே தெரிந்துகொள்ளாது; பணம் தேடிக் கொண்டிருக்கும் இந்தச் சீரில்லா சீமான்களின் தயவுக்காக ஏங்கி இதமற்று வாழும் புலவர்கள், எழுத்தாளர்கள், சொற்பொழி வாளர்களின் சிந்தனைக்கு மட்டும்தான் என்று இந்த என் நூலில் சுட்டிக்காட்டிவிட விரும்புகிறேன்.

பெரிய படிப்புள்ள இவர்கள் கேட்கிறார்கள். உலகில் படித்தவர்களெல்லாம் ஞானிகளாகிவிட முடியுமா? என்று.

இது அவசியம் பதில்பெற வேண்டிய ஒரு கேள்விதான். 'முடியாது' என்பதுதான் இந்தக் கேள்விக்கு நான் அளிக்கும் பதிலும்! ஆனால், இம்மூன்று பிரிவினையும் பார்த்து நான் கேட்கும் கேள்வி இதுதான். உங்களில் ஒருவராவது ஒரு ஞானியாய் ஆக முடியாததேன்’ என்று.

எத்தனை நூற்றாண்டுகள் கழிந்தாலும் இந்த என் கேள்விக்கு இவர்களில் எவரொருவரும் பதில் கூறமாட்டார். இவர்கள் கற்ற கல்வியில் உள்ளதனைத்தும் சடப்பொருளைப் பற்றிய கல்வி. எதையறிந்தால் எல்லாம் அறிந்ததாகுமோ, அல்லது எல்லா நூல்களிலிருந்தும் எதுவொன்றே அறியத் தகுந்ததாகுமோ. அதுவே, 'ஒம்தத் சத்' இதை ஏன் இவர்கள் அறிந்துகொள்ளவில்லை?

'ஞானம்’ எனும் சொல்லுக்குப் பொருள், 'ஒம் தத் சத்' என்பதுதான். இதையறியக் கூடிய வாய்ப்பிருந்தும் இவர்கள் யாரும் அறிய முன்வரவில்லை. இதனை அறியாத வரையில் இவர்கள் அனைவரும் அஞ்ஞானிகள்தான். அஞ்ஞானிகள் வாழும் நாடு அமைதி காணாது என்று இனிக் கூற அவசியமில்லையல்லவா?

இருள் நீங்க விளக்கேற்றுவதுபோல், அஞ்ஞானம் நீங்க நாட்டில் ஞான ஒளி ஏற்றவேண்டும். 'அருள் செல்வம் செல்வத்துட் செல்வம்; பொருள் செல்வம் பூரியர் கண்ணுமுள' என்பது குறள். பொருள் செல்வத்தைக் காட்டிலும் அருள் செல்வம், செல்வத்துள் செல்வம் - சிறந்த செல்வம் என்கிறார், திருவள்ளுவர். இந்த அருள் செல்வத்தைப் புலவர்களாகிய எழுத்தாளர்கள் தேடிக் கொண்டுள்ளிர்களா?

பொருள் செல்வத்தைக் காட்டிலும் இவ்வருள் செல்வம் நூறு மடங்கு சக்தியுள்ளது என நீங்கள் புரிந்து கொள்ளவில்லை; எனவே தேடிக்கொள்ளவில்லை; இதுதான் உண்மை.

ஒம், தத், சத் - இம்மூன்றும் ஒரே பொருள் பற்றிக் குறிப்பிடும் ஒலிகள். 'ஓம்' எனில் நான் என்பது பொருள். 'தத்' எனின் அது என்பது பொருள் 'சத்' - பிரம்மம். நானே அது; அது சத்-பிரம்மம். நான் வேறு பிரம்மம் வேறன்று; நானே அதுவாயுள்ளேன். ஆம், அகம் பிரம்மாஸ்மி நானே பிரம்மமாயுள்ளேன். இதைப் புரிந்துகொள்ளுங்கள். கடவுள் வெளியே இல்லை. உங்களிடத்தில் இருக்கிறார். வெளியே உள்ள அனைத்தும் பருபொருள் அப்பொருள்களாகிய நாம் சிவ சைதன்னியம்; எல்லாம் வல்ல மனிதர்களாயுள்ளோம். எனவே நீ சதா அறிவறிந்தொழுகு. அதுவே அறவழி ஒழுக்கம்; ஒழுக்கமே நீதி எனப்படுவது: ஒழுக்கமே சட்டமெனப்படுவதும் ஆம்.

அறவழி ஒழுக்கமறிந்து ஒழுகும் ஒருவன் பிறரால் ஆளப்படுவ தில்லை. தன்னைத் தானே ஆள்கிறதீர புருசனாகிறான். தன்னை அறிந்தவனாகிறான். சத் அல்லது தன்ஆத்மாவை அறிந்தவனுமாகிறான். பொய், புனைச்சுருட்டு, வஞ்சகம், சூது, பேராசை பொறாமை போன்ற மாசுகளை உன் உள்ளத்தில் படிந்துவிடாமல் எச்சரிக்கையாயிரு. படிந்திருந்தால், அதனை ஒரு நோய் என எண்ணிக் காலதாமதமின்றிக் களைந்தெறி;

'மனத்துக்கண் மாசு இலனாதல் அனைத்தறம்' எனும் வள்ளுவர் வாக்கினை நினைவு கூர்ந்து பார். உள்ளத்தை மாசுபடுத்திக் கொண்டு நீ கோமானாய் வாழ்ந்தாலும் நோயாளியே! உனக்கு நீயே அடிமையாகிறாய், ஆசைக்கு அடிமையான எவனும் எதையும் ஆள அருகதை அற்றவனாகிறான்.

தன்னை அறிந்து கொள்ளாதவன், தலைவனை - ஆண்டவனை அறிந்துகொள்ள மாட்டான். அவன் ஆசைக்கயிற்றினால் ஆடும் பம்பரம்! எனவே, சொல், ஒம்தத் சத்' என நானே அது; அதுவே சத் எல்லாம் வல்ல இறை; என்றும் உள்ளது என்று. அசத்தாக வாழாதே அவலத்துக்காளாகாதே!

ஒம் தத் சத்