உள்ளடக்கத்துக்குச் செல்

புது வெளிச்சம்/கோவில்

விக்கிமூலம் இலிருந்து

9


கோவில்

ணர்வு பிறந்ததிலிருந்து உலகை விட்டு மறையுங்காறும், ஆணும் பெண்ணுமாகியுள்ள அனைவருடைய உள்ளங்களிலும் குடிகொண்டிருக்குங் கோயில் எனும் சொல். மதிப்புக்குரிய ஒருசொல் இது. அரசன்மனை, தேவாலயம் எனும் இருபொருள் குறித்து வருவதெனினும், இன்று தேவாலயம் என்ற ஒரே பொருள் தருவதற்கு உரிமை பெற்றுள்ளது.

மனிதன், இந்த மண்ணில் உற்பத்தியான காலம் சரியாகக் கணித்து, இன்னது எனக்கூற மனிதனால் இயலாதுள்ளது. உத்தேசமாக 12, 16, 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றி இருக்கலாம் என்று கூறுவதைத்தான் நான் கேட்டிருக்கிறேன். எனினும், பழைய கற்காலம் நூறாயிரம் ஆண்டுகளுக்குள்ளென்றும் புதிய கற்காலம் ஐம்பதினாயிரம் ஆண்டுகளிலிருந் தென்றும், இருப்புக்காலம் தொடங்கிப் பத்தாயிரம் ஆண்டுகளாயிருக் கலாமென்றும் எப்போதோ எந்த நூலிலோ படித்த நினைவு இருக்கிறது.

அடுத்து ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்வரையிலும் மனித குலம் வரை முறையின்றி ஏறக்குறைய விலங்கு பறவைகள் போல்தான் வாழ்ந்து வந்ததாக, ராகுல சாங்கித்வனின் வால்காவிலிருந்து கங்கை வரை எனும் நூல் நமக்குத் திட்டவட்டமாகத் தெரிவிக்கிறது. அப்போதெல்லாம் இந்தத் தெய்வங்களும், கோவில்களும் இருந்திருக்கவில்லை என்று நாம் உறுதியாக நம்பலாம், கூறலாம்.

இயற்கையைப் பற்றிய ஆராய்ச்சியும் அதன்பின் தான் தோன்றிற்று, சுரைப்புருடைகளில் நீர் நிரப்பி வைத்துகொண்டு தொன்னைகள் அல்லது மூங்கில் கோல்களில் முகந்து பருகிய காலத்திலிருந்து படிப்படியாக மனிதன் முன்னேறிவந்தகால கட்டத்தை நாம் தமிழ்நூல்களில் காண்கிறோம். ஆடைக்குப் பதில் தழையுடையணியும் செய்திகளும் காண்கிறோம். 'ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி' ஒளிரேந்து மருப்பின் களிறெறிந்து வீழ்ந்தெனக் கல்லே பரவினல்லது - நெல்லுகுத்து பரவும் கடவுளுமிலவே என ஒரு கோவிலும் தெய்வமும் இல்லாததையும் பார்க்கிறோம்.

இதே கால கட்டத்தில் ஆரியர்களுள் சிலரும் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தனர். நாம் நிலம், நீர் உழவு, உணவு, உடை, குடில் மாடு கன்றுகள். இன்னும் இரும்புத் தொழில், நெசவுத்தொழில் மண்பாத்திரத்தொழில் என உளமொன்றி, ஈடுபட்டுக்கொண்டிருந்த நிலையில், ஆரியரில் சிலர், பூமி, அந்தரிச்சம், வானம், திசைகள், திசைமூலைகள், அக்கினி வாயு, ஆதித்தியன், சந்திரன், நட்சத்திரங்கள் - நீர், செடி கொடிகள், மரங்கள், ஆகாயம், ஆத்மா - என ஆராய்ந்தனர்.

கூடவே, எந்தக் கிரணங்களால், ஆதித்தியன் காய்கிறானோ அதனால் நீர், மேகமாகி மழைபெய்கிறது. மேகமழையால் செடிகொடிகளும் மரங்களும் உண்டாகின்றன. இவற்றிலிருந்து உணவு உண்டாகிறது. அன்னத்தால் 'பிராணன்கள' பிராணன்களால் பலம், பலத்தால் தவம், தவத்தால் சிரத்தை, சிரத்தையால் கூரியபுத்தி, கூரியபுத்தியால் திடமான சங்கல்பம், திடமான சங்கல்பத்தால் மனத்தெளிவு, மனத்தெளிவால் சாந்தி, சாந்தியால் நிலையான சித்தம், நிலையான சித்தத்தால் உண்மை மறவாமை, உண்மையை மறவாமையால் அதையே இடைவிடாது நினைத்திருத்தல், அத்தகைய நினைவால் விஞ்ஞானம், விஞ்ஞானத்தால் ஆத்மாவை (தெய்வம்) ஒருவன் உணர்ந்தனுபவிக்கிறான். ஆகையால், அன்னத்தை அளித்த ஒருவன் இவையனைத்தையும் அளிக்கிறான். அன்னத்திலிருந்து பிராணிகளுக்குப் பிராணன்கள் வளர்கின்றன; பிராணன்களால் மனதும், மனதால் விஞ்ஞானமும், விஞ்ஞானத்தால் ஆனந்தமும், அதனால் உலகின் தோற்றுவாயாகிய பிரம்மமும் அடையப் படுகிறது என்று அறுதி செய்தனர்.

இந்தக் கருத்தைச் சூத்திரமாக்கினர்; அன்னமயகோசம், பிராணமயகோசம், மனோமய கோசம், விஞ்ஞானமயகோசம், ஆனந்தமயகோசம் என்று. வேறு ஒரு ரிசி மனோமய, பிரான சரீரோ பாரூபா, சத்ய சங்கல்ப; ஆகா சாத்மா என்று சூத்திரம் செய்துள்ளார்.

'அந்தப் பிரம்மம், மனோவடிவமாயுள்ளது. உயிரை உடலாய்க் கொண்டுள்ளது. சத்தியமே சங்கல்பம் - குறிக்கோள் ஆகாசம் போலும் அதுவே ஆத்மா - பிரம்மம்', என்கிறார் இன்னொரு ரிசி.

'எதஸ்ய பிராமனோநாம சத்யமிதி' அந்திம பிரம்மத்தின் பெயர் சத்தியம் என்கிறார் மற்றொரு ரிசி எப்படிப் பார்த்தாலும் சத்தியம் தான் பிரம்மம் என்பது உபநிசத்துகளின் முடிந்த முடிவு. இதைமாற்ற முடியாது.

திட்டவட்டமாகத் தெய்வம் என்பது இதுதான் - அதாவது சத்தியம்தான் என்று தெரித்திருந்தும், அதை மக்களுக்குச் சரிவர எடுத்து விளக்கிக் கூறி ஒழுக்கத்தை ஒம்பச்செய்து. உய்விக்க மனமில்லாத சூழ்ச்சிக்காரர் கோவில்களைக் கட்டி குடமுழக்கு விழா கும்பாபிசேகவிழா எனக் கொண்டாடிக் கொண்டுள்ளனர்.

இவர்கள் இப்படியே இருக்கட்டும். நாம் இந்தக் கோவில்களைப் பற்றி இனி கொஞ்சம் ஆராய்ந்து பார்க்கலாம். 'எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறி ' வெனக் குறள் கூற்றினை நாம் மறந்து விடக் கூடாதல்லவா?

கி.மு.நான்காம்நூற்றாண்டுக் காலகட்டத்தில்தான் சாணக்கியன் என்பவர் 'அர்த்த சாத்திரம்' எனும் நூல் இயற்றினார். என்று அறிஞர் அறிவித்துள்ளார்.

அந்த அர்த்த சாத்திரம் ஐந்தாவது ஆதிகாணம் 2-ம் அத்தியாயத்தில் கோஸாபிசம்கரணம் - 336-ம் பக்கம் உள்ள செய்தியைக் கன்னடத்திலிருந்து இங்கு தமிழில் பெயர்க்கப் படுகிறதைச் சற்று உற்றுக் கேட்டு யோசனைசெய்துபார்.

'தேவாலயங்களின் முக்கிய அதிகாரியாயிருப்பவர் மலைகளிலும், தேசத்திலும் உள்ள கோவில்களில் அன்றுவரை சேர்ந்திருக்கும் செல்வம் அனைத்தும், பகைவர்கள் காரணமாக ஒர் இடத்திற்குத் திரட்டிக் கொண்டுவந்து அரசனிடம் ஒப்படைக்க வேண்டும்'. அதுவுமன்றி இரவு நேரத்தில் மக்கள் போக்குவரவற்ற பிரசித்தமான எழில்மிக்க இடங்களில், சிவலிங்கத்தை நிர்மானித்து, இது தானகாவே பூமியிலிருந்து உதித்த சுயம்புலிங்கம் என்று பிரசாரம் செய்து, மேடைகட்டி, திருவிழாக்களை ஏற்படுத்தி மக்கள் திரண்டு வந்து சேரும்படி செய்து, கடவுள் பெயரால், பணம் சேகரிக்கவும் வேண்டும்!.

'பருவமல்லாத காலத்தில் ஏதாவது ஒரு மரத்தில் செயற்கை முறையில் பூக்களை உண்டுபண்ணிக்காட்டி, இது தெய்வத்தின் மகத்துவம் என்று பிரசாரம் செய்து, த.வி.சி.வேசம் போட்டுக் கொண்டுள்ள ஒற்றறிநிபுணன் ஒருவன், சுடுகாட்டின் கண் உள்ள ஒரு மரத்தில் இராச்சதன் வேசம் போட்டுக்கொண்டு எனக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மனிதனைப் பலிகொடுக்க வேண்டும். இல்லையென்றால் ஊரிலுள்ள அனைவரையும் சர்வ நாசம் செய்திடுவேன்' என்று க்ரூரமான குரலில் பிரசாரம் செய்து அதை நம்பி பலிகொடுக்க வந்த மனிதனுக்குப் பதிலாகப் பொது மக்களிடமிருந்து பெருந்தொகையான பணத்தை வசூல்செய்து அரசனிடம் கொண்டுவந்து ஒப்படைக்க வேண்டும்.

தேவாலயமதில் சுவற்றிலோ, புற்றுகளிலோ வங்குகளில் இருந்து வெளியே வந்த நாகபாம்பைப் பார்த்தால், மந்திரதந்திரத்தினால், அல்லது மருந்தினால், அதன் போக்கைத் தடுத்து இருக்கச் செய்து, 'இது தெய்வத்தின் பிராயத்தினால் வெளியே வந்துள்ளது', என்று விரும்புகின்றவர்களுக்கு அதனைக் காண்பிக்க வேண்டும். சிரத்தை காட்டாது அதைக் கிண்டல் கேலி செய்கின்றவர்களுக்குக் குடிதண்ணிலோ, மேலே தெளிப்பதிலோ நினைவு நீங்கும் அளவு விசத்தை உபயோகப்படுத்தி, "நாக தெய்வத்தின் கோபத்தினால் நினைவு தப்பியுள்ளது” என்று செய்திபரப்பிட வேண்டும். இதுவுமின்றி இரவு வேளையிலும், அரநிந்தனை, தெய்வநிந்தனை செய்கின்றவர்களை விசப்பாம்பினைக் கொண்டு கடிக்கவைத்துக் கொன்று இவையெல்லாம் தெய்வ தண்டனை' என்று கூற வேண்டும். தக்க மருந்துகளைக் கொடுத்து விசம் நீக்கி அவர்களிடமிருந்து கூடிய அளவு பெருந்தொகையான பணம் பெற்றுக் கொண்டுவந்து அரசரிடம் சேர்ப்பிக்கவேண்டும்.

இவை ஒரே பாராவில் அடங்கியுள்ள விசயங்கள் மட்டும். மேற்கொண்டு எழுதினால் என்னையே, இன்றுள்ள சாணக்கிய சந்ததிகள் இப்படியே செய்து தீர்த்துக் கட்டிவிடுவார்களோ என்று என்னையும் எண்ணச் செய்கிறது.

எனினும் நான். அஞ்சமாட்டேன். உண்மைகளைக் கண்டு வெளிப்படுத்தவதில்தான் நான் முழு மனிதனாகிறேன். அவர் கையால் கொல்லப்பட்டால் அமரனும் ஆகிறேன். இது நிற்க.

இந்தச் சாணக்கிய சந்ததிகள் மக்களை பேதோபாயத்தால் இவ்வாறு சர்வநாசம் செய்து வருவதனைக் கண்டு உளம் வருந்தி நல்லோர் உண்மைகளை உள்ளதுள்ளவாறு தமிழ் மக்களுக்கு அக்காலத்திலேயே தெள்ளத்தெளிவாக செப்பித்தேற்று வித்துள்ளனர்.

‘தெய்வம் உள்ளது'; ஆனால் அதை நாம் உள்ளதுள்ளபடி அறிந்து கொள்ளவேண்டும்; என உண்மையையே உரைத்துள்ளனர். திருமூலர் தெரிவிக்கின்றார்.

சிந்தைய தென்னச் சிவனென்ன வேறில்லை
சிந்தையி னுள்ளே சிவனும் வெளிப்படும்;

சிந்தை தெளியத் தெரியவல் லார்கட்குச்


சிந்தையி னுள்ளே சிவனிருந் தானன்றே
ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின், நமனில்லை நாணுமே
சென்றே புகுங்கதி யில்லைநும் சித்தத்து
நின்றே நிலைபெற நீர்நினைந் துய்மினே.

இவ்வனைத்தும் உபநிசத்துக் கருத்துக்கள்தான். கோவிலில் தெய்வம் குடியிருக்காது என்று கூறும் பாட்டைப்பாருங்கள்.



'மாடத்து ளானலன் மண்டபத் தானலன்
கூடத்து ளானலன் கோயிலுள் ளானலன்
வேடத்து ளானலன் என்று மறுத்து விட்டு

'வேறு எங்குள்ளான் அந்தச் சிவன்' எனும் வினாவுக்கு 'வேட்கை விட்டார் நெஞ்சில், மூடத்துளே நின்று - முத்தி தான்' என்று கூறுவதை நாம் தெரிந்து கொள்ள வேண்டாமா?

இவரைப் போன்றே பதினென்சித்தர்களிலொருவராகிய சிவவாக்கியர் கூறுவதையும் நாம் சிந்தித்துப் பார்க்கவே வேண்டும். இவர் கூறுகிறார்.



நட்ட கல்லை தெய்வ மென்று நாள்மலர்கள் சார்த்திநீர்
சொட்ட நின்று முணுமு னென்று சொல்லு மந்தர மேதடா!
நட்ட கல்லு பேசுமோ? நாத னுள்ளி ருக்கையில்
சட்டி சுட்ட சட்டுவம் கறிச்சுவை யறியுமோ?

எனும் பாட்டு, எவ்வளவு தெளிவாய்த் தெய்வ நிலையை உளம்படியுமாறு விளக்கி உண்மையை உணர்த்துகிறார்.

இந்த இருபதாம் நூற்றாண்டின் உலக மகாகவி எனப் புகழப்பட்ட கவி ரவீந்தரநாத் தாகூர் 1913-இல் நோபல் வெகுமதி 8000 பவுன்கள் பெற்றவர். உலகமெலாம் அறிந்தவர் தமது கீதாஞ்சலியில் கூறுவதையும் நாம் சற்று பார்க்க வேண்டாமா? அதில் உள்ள உண்மையை எடுத்துக்கொள்ள நாம் தயக்கமடைய வேண்டிய அவசியமே இல்லையே !

"ஜபமாலை உருட்டுவதை விட்டுவிடு !மந்திரமும் தந்திரமும் ஆடலும் பாடலும் அவனைக் காட்டமாட்டா! தாளிட்ட அடைபட்ட கோவிலின் இருளடைந்த மூலையில் யாரைப் பூசிக்கிறாய் கண்களைத்திறந்து, உன் கடவுள் உன் முன்னிலையில் இல்லையென அறிந்துகொள்!

கடினமான தரையில் ஏர்கட்டி உழுவாரிடமும், சாலை அமைக்கச் சரளைக்கல் உடைப்பாரிடமும் அவன் இருக்கிறான். அவர்களுடன் அவன் மழையில் நனைகிறான். வெயிலில் உலர்கிறான். அவன் ஆடையில் தூசு படிந்திருக்கிறது. உன் காசாயத்தைக் களைந்தெறி, அவனைப் போலவே நீயும் புழுதியில் இறங்கிவா !

விடுதலை - எங்கிருந்து விடுதலை கிடைக்கும் ? நம் ஆண்டவனே நம்மீது அருள்சுரந்து சிருஷ்டித்தளைகளை தன் திருமேனியில் பூண்டிருக்கிறான் என்றும் நம்மைவிட்டுப் பிரிய முடியாமல் அவன் இணைக்கப்பட்டிருக்கிறான்.

பூவையும் நறும்புகையையும் உன் பூசையையும் விட்டு வெளியே வா! உன் ஆடை கிழிந்து அழுக்கடைந்தால் என்ன? நெற்றி வேர்வை நிலத்தில்விழ உழைத்து, நின் ஈசனைக் கண்டுகொள்.

இக்கருத்தையே கேனோபநிசத்து தெளியவுரைக்கிறது; எது வாக்கால் விளக்கப்பெறாதோ, ஆனால் வாக்கு எதனால் விளக்கப்பெறுமோ அதுவே பிரம்மம் என்று நீ அறி. எதை இதுபிரம்மம் உபாசிக்கிறார்களோ அது பிரம்மம் அன்று.

எதை ஒருவன் மனதால் உணருவதில்லையோ, ஆனால் மனது எதனால் உணரப்பெறும் என்று கூறுகிறார்களோ அதுவே பிரம்மம் என்று நீ அறி. எதை இது பிரம்மம் என்று உபாசிக்கிறார்களோ அது பிரம்மமன்று.

எதை ஒருவன் கண்ணால் பார்ப்பதில்லையோ, ஆனால் எதனால் கண்கள் பார்க்கப்படுகிறதோ அதுவே பிரம்மம் என்று நீ அறி. எதை 'இது பிரம்மம் ' என்று உபாசிக்கிறார்களோ அது பிரம்மமன்று.

இவ்வாறு உபநிசத்துகள் தெளிய உரைத்திருந்தும் மக்களுக்கு அறிவிக்கப்படாமல் உருவங்களை வணங்கவைத்து அறியாமை இருளில் அடைக்கப்பட்டவர்களாயுள்ளனர். என்பதை நாம் காலந்தாழ்த்தாது புரிந்தொழுகினாலன்றித் தமிழ் சமுதாயம் அதோகதிக்கு ஆளாகிவிடும் என்று நான் உறுதியாகக் கூறுகிறேன்.

எனவே கடவுள் நம் உள்ளத்தில் சத்திய வடிவமாயுள்ளது. அறமே அதனை அடையவுள்ள ஒரே சாதனம். 'ரிதம் சத்தியம் பரப்பிரம்மம்' என்று உபநிசத்தின் கருத்தை எவரும் புரிந்தொழுகத் தவறவே கூடாது.

இப்பொழுது நாம் கோவில் எனும் சொல்பொருள் புரிந்துகொள்ளும் நேரத்திற்கு வந்து விட்டோம். அது இன்று நமது கண்ணுக்கு ஊர்தொறும் தென்படுகிற கோபுரவாயிலோடு தங்கக் கலசங்களைத் தாங்கிக் கொண்டு இருக்கிற கட்டிடங்கள் அல்ல. திருமூலர் திருமந்திரம். அந்தக் கோவில் இதுதான் என்று இந்தப் பாடலின் மூலம் சுட்டிக் காட்டுகிறது. 'உள்ளம் பெருங்கோயில் ஊனுடம் பாலயம்! வள்ளற் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்; தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம், கள்ளப் புலனைந்தும் காளா மணி விளக்கே' என்று.

நம்முடைய தெய்வம் நம்முடைய உள்ளமாக உள்ளது. உடல் ஆலயமாகும். வாய், கோபுரவாசல், நமது சீவன் தான் சிவமெனப்படுவது. மெய் வாய்மைக்கு, செவி, கண் எனும் ஐந்து புலன்களும் நமக்கு எசமான்களாகாது ஊழியர்களாகும்போது, (அகம் பிரம்மஸ்மி) நாமே பிரம்மமாகிறோம்.

இதே கருத்தினை இன்னும் தெளிவுபட முண்டகோப் நிசத்தும் விளக்குகிறது. மனோமய : ப்ராணகுசரீர - நேதா ப்ரதிஷ்டிதோ அன்னே இருதயம் சந்நிதாய'! என்று.

இதன் பொருள் : அவர் 'மனோ ரூபியாயும் சரீரத்தையும் பிரானனையும் நடத்துபவராயும் இருதயத்தில் (புத்தியில்) நிலைபெற்று உடலில் உறைபவராயும் விளங்குகிறார், என்பதாம்.

உண்மைகள் இவ்வாறிருக்க வெளியே எதற்காகக் கோவில்கள் கட்டப்பட்டு விழாக்கள் கொண்டாடப்படுவது பிராமணர்களின் சாப்பாட்டுக்காக அன்றி வேறெதற்காகவும் அல்ல.
"https://ta.wikisource.org/w/index.php?title=புது_வெளிச்சம்/கோவில்&oldid=1637782" இலிருந்து மீள்விக்கப்பட்டது