உள்ளடக்கத்துக்குச் செல்

புது வெளிச்சம்/சுவர்க்கம்

விக்கிமூலம் இலிருந்து

8



சுவர்க்கம்

லகிலுள்ள கோடானுகோடி மக்களின் உள்ளங்களில் நிரந்தரமாகக் குடியிருந்து கொண்டுள்ள கவர்ச்சிகரமான ஒருசொல் 'சுவர்க்கம்' என்று பெயர்கொண்டது இது ஒன்று தான். சரிவரப் பொருளைப் புரிந்து கொள்ளாத இந்தச் சொல்லின் முதலெழுத்து திரிந்து இரண்டாமெழுத்து கெட்டுச் சொர்க்கம்! என இது வழங்கப்படுகிறது. இதே பொருள், தமிழில் துறக்கம், வீடு, மோச்சம் எனும் சொற்கள் மூலமும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

துறக்கம் எனும் சொல்லுக்குத் தேவலோகம் என்று அகராதி பொருள் கூறுகிறது. வானுலகம், அதாவது வானவர் வசிக்குமிடம் என்பது கருத்து. ஆயினும், பரலோகம் என்பது தான் அதன் சரியான பொருள் எனக் கூறலாம். இகம், பரம் என்ற இரண்டு சொற்கள் மொழிகளில் வைத்து வழங்கப்படுவது யாவரும் அறிந்ததே. இகம் எனின் இப்பிறப்பு. ‘பரம்' எனின் மோச்சம் என்று அர்த்தமாம். மனிதனாகப் பிறந்த நாம் வாழ்வு முடிந்து கடைசியாகப் போய்ச் சேருமிடம் மோச்சம் - தேவலோகம், எனப்படுகிறது.

வாழ்நாளில் இந்தத் தேவலோகம் போய்ச் சேர்வதற்கான தகுதியை நாம் அவசியம் தேடிக்கொள்ள வேண்டும். இதற்கு, இந்தக் காலத்தில் உள்ள ஒரே வழி 'பக்தி' மார்க்கம் எனப்படுகிறது. நடைமுறையில் உள்ளதும் இது ஒன்றுதான். ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளாக இந்த மார்க்கத்தையே நாடு முழுவதும் இந்து மதத்தினர் எனப்படும் நாம் பின்பற்றி வருகிறோம்.

ஒவ்வொரு மனித சீவனும் தேவலோகமோ, அல்லது நரகலோகமோ போயே தீரவேண்டியது. அங்கு அவன் வாழ்நாளில் தேடிக்கொண்ட புண்ணியம் பாவங்களின் அளவுக்குத்தக்க காலம் சுவர்க்கத்திலோ நரகத்திலோ வசித்து முடித்து மறுபடியும். இதே நிலவுலகத்தில் வந்து பிறந்துவிட வேண்டும் என்று இந்து மதநூல்கள் நம்முடைய மனங்களில் திணித்து வைத்திருக்கிறது. நாமும், இதனை உண்மையென நம்பி நாடகமாடிக்கொண்டிருக்கிறோம்.

இந்தச் சுவர்க்கத்தை நாம் எளிதில் அடையும் சூக்கும வழிகளும் பழங்காலத்திலிருந்தே வழங்கி வருகின்றன. புண்ணியம் புரியாது, வெறும் பாவமே செய்து வந்திருந்தாலும் அதனால் கெட்டுபோனது யாதொன்று மில்லை; மார்கழி மாதம் ஏகாதசி விரதம் சரிவர இருந்து விட்டால்போதும் சுவர்க்கத்தில் நமக்கு இடம் ஒதுக்கப்பட்டு விடும் என்று நம்மில் பலர் நம்புகிறார்கள். இந்தச் சுவர்க்கத்துக்கு ஆசைப் படாதவர்கள் ஒரு சிலர் கூட இல்லை. ஆசைப்படுகிறவர்கள் இந்து மதத்தில் பெரும்பான்மையாயுள்ளனர். மேலும் ஒரு விபரம்.

நமது தமிழ் வார இதழில் ஒருசிறுகதையில், எப்போதோ படித்த நினைவு. 'திருமணங்கள் 'சுவர்க்கத்தில் நிர்ணயிக்கப்படுகின்றன, என்று. எல்லாம் வல்ல ஒருவர் அந்தச் சுவர்க்கத்தில் நமக்காக இருந்து கொண்டு, இன்னார்க்கின்னார் என்று முடிபோட்டு விட்டால் அப்படியே தான் அது முடியும், முடிந்து மூன்று மாதம் முடிவதற்குள், மண்ணென்னெயோ, வேறு உயிர்நீக்கும் மருந்தோ அப்பெண் வரதச்சனையின் காரணமாகத் தன்னைத் தான் மாய்த்துக் கொள்வதும் அந்தச் சுவர்க்கத்திலேயே நிச்சயிக்கப்பட்டு விட்டது என்று நாம் சொல்லித் தப்பித்துக் கொள்ளவும் கூடும், அவனன்றி அணுவும் அசையாது எல்லாம் அவன் செயல்தானே? நம்மேல் சுமத்தப்பட்டுள்ள மதபோதனையில், அந்த எல்லாம் வல்ல இறைவன் முழுப்பொறுப்பையும் தானே வைத்துக் கொண்டிருக் கிறான். ஆட்டுவித்தால் யாரொருவ ராடாதவரே என்னும் அருமை வாசகம் பொய்யாயிருக்க முடியுமா?

இங்கு விளக்கத்திற்கு ஒரு வார்த்தையைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நான் இம்மாதிரி எழுதுவது மட்டும் அந்த இறைவன் செயல் என்று எந்த ஒருவாயிலிருந்தும் ஒரே ஒருசொல் உதிராது. இவனொரு நாத்திகன் என்ற பட்டம் சூட்டவும், இறைவனடியார்கள் மறந்தும் தவிர்க்க மாட்டார்கள்.

'அகம் பிரம்மாஸ்மி'! என்று சொல்லவே இவர்கள் வாய் தயாராயில்லை தெய்வம் பாற்கடலில் ஆலிலைமேல், அல்லது ஆதிசேடன் மேல் பள்ளிகொண்டுள்ளார் என்று தான் அவர்கள் படிக்கப்பட்டுப் பழக்கப்பட்டுள்ளனர். பரலோகம், தேவலோகம், துறக்கம், வீடு என்பன போன்ற சொற்கள் அனைத்தும் இடப்பெயர்ச் சொற்கள்தான் என்பதில் எனக்கு முரண் இல்லை; ஆனால், 'நரகம் சுவர்க்கம்' எனும் சொற்கள் இடம் பெயர் குறித்து வழங்கி வந்தன எனில் நான் ஒத்துக்கொள்ள மாட்டேன். ஏனெனில் சுவர்க்கம் எனும் இந்தச் சொல்லின் பிறப்பு அமைப்பில் இன்னும் வேறு சொற்களும் உள்ளன. மாதிரிக்கு ஒரு சில இங்கு எடுத்தெழுதுகிறேன்.

சு+வர்க்கம் = சுவர்க்கம் எனச் சேர்ந்து ஒலிப்பது போலவே, சு+மதி, க +தருமம், சு+கந்தம், சு+சீலம் சு+வர்ணம், சு+மங்கிலி, சு+தந்திரம், போன்ற சொற்களும் உள்ளன. 'சு' எனும் எழுத்து, மதி, தருமம், கந்தம் சீலம் போன்ற சொற்களை விசேடிக்க வந்தது. நல்ல எனும் பொருள் தருவது என்று எளிதில் விளங்குகிறதல்லவா? எனவே சு+ வர்க்கத்தின் கதையும் இதுவேதான். வருக்கம் எனும், இரண்டாமெழுத்தின் உயிர்கெட்டு ' வர்க்கம் ' என வழங்குகிறது. வர்க்கம் = கூட்டம், வகுப்பு என்றுதான் அது பொருள் தருகிறது. இதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

சுவர்க்கம், நரகம் எனும் இவ்விரண்டு சொற்களும் எந்தக் காலத்தில் எவ்வாறு பிறந்து மொழியில் கலந்து எவ்வாறு பொருள் வேறுபட்டு உயிர் வாழ்கின்றன என்பதையும் இனி நீ அறிந்து கொள்வது அவசியமாகும்.

'தேவாசுர யுத்தம்' எனும் சொற்றொடர் ஒன்று மொழியில் உள்ளது. இதைத் தமிழ்படுத்தினால் ஆரியத் திராவிடப்போர் எனப் பொருள்படும்.

ஆரியர் தம்மைச் சுரர் என அழைத்துக்கொண்டனர். திராவிடமக்களை. சுரர் அல்லாதவர், (அசுரர்) நரர் எனும் சொற்களில் குறிப்பிட்டு வந்தனர். இவர்களுக்கிடையில் பண்டைக்காலத்தில் ஒயாது போர்கள் நடந்தவாறிருந்தன. அவற்றில் தேவேந்திரனுக்கும், விருத்திராசுனுக்கும் நடந்தபோர் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தப் போரைப் பற்றிக் கல்லாடர் என்ற புலவர், கல்லாடம் எனும் தம்நூலில் குறிப்பிடுகிறார்.

'பைகுடப் பிறையெயிற் றாக்கனைக் கொன்று, வச்சிரத் தடக்கை வரைப்பகை சுமந்த - பழவுடல் காட்டும் தீராப் பெரும்பழி' - எனவும்,

'வட புலமன்னர் வாட அடல்குறித்து. இன்னா வெம்போர் இயல்தேர் வழுதி, இது நீ கண்ணியதாயின் இருநிலத்து யார்கொல் அளியர்தாமே', என்று மருதனிள நாகனாரின் புறநானூறில் ஆரிய திராவிடப்போரைக் குறித்து விவரிக்கின்றதைக் காணலாம்.

அந்தக் காலகட்டத்தில் பொதுமக்களுக்குள் இயல்பாக நாட்டைப் பற்றிப் பேச்சு வரும்போது, நீ எந்தக் கூட்டத்தை (வருக்கம்) ஆதரிக்கிறாய் எனும் வினா எழும்போது, நான் சுரவர்க்கத்தையே விரும்புகிறேன். எனவும், நான் நரவர்க்கத்தை ஆதரிக்கிறேன் எனவும், பேச்சுவாக்கில் பயின்று வந்த சொற்றொடர்கள்தாம் இவை இரண்டும்.

நீண்ட ஒரு காலப் போக்கில் தன் உருவிழந்ததுடன் பொருளும் இழந்துவிட்டது என்பதை நீ இனிமேலாயினும் புரிந்துகொள்ள வேண்டும்.

‘எப்படி உருமாறிற்று, பொருள் மாறிற்று', என்ற வினா உன் உளத்திலிருந்து வெளிவரவில்லை; ஆயினும் நான் உனக்கு விளக்கிக்கூறவே விரும்புகிறேன்.

என் அருமை நண்பனே! கவனித்து கேள். வாலும் கிண்ணமும் சேர்த்து முதலில் நம் வீட்டு உபயோகத்துகென அமைத்த கருவி ஒன்று 'வால்கிண்ணம்' எனப்பெயர் பெற்றிருந்தது. தற்காலத்தில் அதன் பெயர் அது வரக்கணம் என்று திரிந்துள்ளது - அதே மாதிரியாய் 'அரிய மருந்தன்ன பிள்ளை' எனும் சொற்றொடர் அருமந்தப் பிள்ளையெனத் திரிந்து விட்டதை போலவே சுர்வர்க்கம் எனும் சொற்றொடர், தன் இரண்டாமெழுத்தான இடையின உயிர்மெய்யெழுத்து ஒன்று மக்கள் உச்சரிப்பிலிருந்து அறவே கழற்றிக்கொண்டுவிட்டது. நின்றநிலையில் அது சுவர்க்கமாயிற்று. நரவர்க்கம் எனும் சொற்றொடர் இடையிலிருந்த (வர்க்) வகர உயிர்மெயும் கூட இரண்டு ஒன்றுகளும் கழன்று போய் முதலும் இறுதியுமான நரவர்க்கம் = நரகம் என வழங்கி வருகிறது.

இவை ஏற்கனவே சூழ்ச்சிகாரர்களால் இடப்பெயராய்ச் சுவர்க்கம், நரகமெனக்கூறிக் சுவர்க்கத்தை இந்திரனும், நரகத்தை எமதர்மராஜனும் ஆண்டு வருவதாகக் கதைகட்டி மக்களைக் குருடாக்கி விட்டனர் என்பதுதான் உண்மை.

நாம் பராதினராகவே இன்றும் உள்ளோம். சுயமாகச் சிந்திக்கும் பழக்கமே நம்மிடம் இல்லாதிருக்கிறது. எனவே, நான் சொல்கிறேன். சிந்திக்கத் தெரியாத ஒவ்வொரு மனிதனும் சிறுமைக்குள்ளாகிறான். என்று.


❖ ஆசையுள்ள பணக்காரனை விட ஆசையற்ற ஏழை
   அமைதியாக வாழ்கிறான்.
- ஏங்.எம்.