உள்ளடக்கத்துக்குச் செல்

புது வெளிச்சம்/தவம்

விக்கிமூலம் இலிருந்து

7



தவம்

டிநாயைக் கண்ட திடகாத்திர வாலிபன், கைக்குக் கிடைத்த கல்லையெடுத்து வீசுவதுபோலவே! நமது திருமூலர் சொல்லையெடுத்து வீசுவதில் ஒரு நிபுணர். கருணையோ கவலையோ இன்றிச் சொல்லைக் கொண்டு மூடர்களைச் சாடுவதோடு புரியாத ஒன்றைப்புரியவும் செய்து விடுவார்.

மக்கள் முகத்தில் இரண்டு கண்கள் இருப்பது உலகிலுள்ள அனைத்தையும் காண்பதற்ககவேதான் . காண்பதற்கன்றிக் கண்களால் வேறு பயனெதுவும் இல்லை. ஆனால் இந்த முகக் கண்களைக் கொண்டு பார்த்தே தீரவேண்டிய அனைத்தையும் பார்க்க முடியாது. அத்தகையவற்றை நாம், நம் அகக்கண்ணைக் கொண்டே பார்த்துத் தீரவேண்டும். திருமூலர் பேசுகிறார். ‘முகத்துக் கண்கொண்டு பார்க்கின்ற மூடர்காள் அகத்துக் கண்கொண்டு பார்ப்பதே ஆனந்தம்', என்று ஒலிஅறிகருவி, மனமறிகருவி சுவையறிகருவிகள் போலப் பண்பறிகருவிதான் மனம். மனதும், இந்திரியங்களும் ஒருமுகப்பட்ட நிலையே தவம்’ என்று உபநிசத்து விளக்கம் செய்கிறது. இது மிகச் சரியான விளக்கம்.

பொறிவாயில் ஐந்தும் அவித்தானது பொய்தீர்ந்து (மெய்யான) ஒழுக்க நெறிதான் தவம் என்கிறது நமது தமிழ் வேதமாகிய திருக்குறள். உற்றநோய் நோன்றல், உயிர்க் குறுகண் செய்யாமை இவ்வளவுதான் தவம் எனும் சொல்லின் பொருள், என்றும் வேறு குறட்பாவில் நமக்கு விளக்குகிறார். மேலும் விவரித்துக்கொண்டு செல்கிறார். தவமும் தவம் உடையாருக்கு மட்டும் ஆகும்; மற்ற எல்லாருக்கும் ஆவதொன்றன்று, என்கிறார். ஒன்னார்த்தெறலும் உவந்தாரை யாக்கவும் தவத்தினால் முடியும் என்கிறார். வேண்டிய வேண்டியாங்கு எய்தலாம், ஏனைய மண்ணுயிரெல்லாம் தொழத்தக்கவராகவும் நம்மை இந்தத் தவம் செய்து உயிர்ப்பித்து உலகில் நிரந்தரமாக இருக்க வைக்கும், என்றெல்லாம் சொல்லுகிறார்.

ஆஆ ! இந்தத் தவம் எனும் சொல்லில் எவ்வளவு மகத்தான சக்தி அடங்கியுள்ளது. என்று இப்போது நமக்கும் கொஞ்சம் புலப்படுவது போல் தோன்றுகிறதல்லவா?

மகத்தான சக்திவாய்ந்த இந்தத் தவம் எனும் சொல் குறிக்கும் , பொருள் இன்றைய உலகிலுள்ளவர் கருதுவது போன்ற பொய்மைகள் எதையும் தன்னுள் வைத்துக்கொண்டிருக்கவில்லை. வீடுவாசலை விட்டு, மனைவிமக்களை மறந்து கானகத்திற்குச் சென்று, இலைசருகு, கந்த மூலங்களைத் தின்று, சடைகளை வளர்த்தி காசாய தாரியாக நம்மை நாம் மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை. நாம் என்ன செய்யவேண்டும் என்பதை வள்ளுவரே நமக்கு மற்றொரு குறளில் மழித்தலும் நீட்டலும் (போன்றன எதுவும் நீ செய்ய வேண்டாம்; உலகம் (சான்றோர்) பழித்த தனைத்தையும் ஒழித்துவிட்டால் அது போதும், என்கிறார்.

மேலும், 'சார்புகள்' என்பன நல்லன தீயன என இருவேறு வகையில் உள்ளன. நல்லனவான சார்புகள். ஈவு, இரக்கம், பரிவு, பங்கு அடக்கம், ஒழுக்கம் உண்மை பேசுதல் போன்றன. கைக் கொண்டு மாறானவற்றை ஒதுக்கிவிட்டு, நாம் மேற்கொண்ட தொழிலைச் செவ்வனே செய்து கொண்டிருப்பது தான் தவம், அல்லது நோற்றல் என்னும் பதப்பொருள். ஆனால் உண்மையை நாம் புறக்கணித்துப் புராணப்புளுகுகளை நம்பினோம்; அருச்சுனன் சிவனை நோக்கித் தவம் செய்து பசுபதாஸ்திரம் பெற்றான். இராவணன் சிவனை நோக்கித் தவஞ்செய்து ஒன்றரைக்கோடி ஆண்டு ஆயுளைப் பெற்றான் என்பன போன்ற பொய்களால் நாம் முறைதவிர்க்கப்பட்டோம். நமக்குப் புறம்பாகத் தெய்வம் உள்ளது. என்று உபதேசிக்கப்பட்டோம். 'தத்துவம் அசி' எனும் சூத்திரம் அதுநீயாக உள்ளனை, என்று சொல்லியிருந்தும் அதை மறைத்து நமக்குப் பொய் உபதேசம் செய்து அதோகதிக்கு உள்ளாக்கி உள்ளனர். நமது முன்னோர் இதை நாம் அறியாதுள்ளோம்.

இதை நிரூபிக்கக் இன்னும் ஒரே ஒரு விபரம் மட்டும் இங்கு கூற விரும்புகிறேன். உன் உள்ளத்தில் இன்னும் மீதி மிச்சங்களாக இருக்கும் ஐயங்களை அந்த எடுத்துக்காட்டு நிச்சயமாக அகற்றிவிடும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அது ஒரு அற்புதமான சூத்திரம், மறுக்க முடியாத, படிக்கும் ஒவ்வொரு புலவனும் ஒத்துக்கொண்டே தீரவேண்டிய சூத்திரம்; திட்டநுட்பமாகப் பொருளையும் விளக்குகிறது.

'நாஸ்தி சத்யா சமன் தப' என்பது தான் அது. இதன் பொருள், சத்தியத்தற்குச் சமமெனச் சொல்லத்தக்க தவம் வேறெதுவொன்றும் இல்லை, என்பதுதான் நாம் சத்தியத்தை இதயத்தில் நழுவி விழாது பதித்துக் கொண்டோமாயின், அது காட்டும் அறவழி ஒழுக்கத்திலிருந்து இம்மியளவும் வழுவாது நம்மை அது நடத்திச் செல்லும். அப்போது இதுகாறும் நம்மோடொட்டி உறவாடி நண்பர்களாகி வாழ்கின்ற மற்றவர்களுடைய எண்ணம், சொல் செயல்களுக்கு மாறுபடுகிறோம். நம்மை அவர்கள் பகைக்கிறார்கள். அதிலும் கொஞ்சம் காசுத்தாசர்களின் கண்கள் சிவப்பேறவும் தவிர்க்காது; துன்புறுத்தவும் உடனே அவர்கள் துணிந்து விடுவர். சாக்ரட்டீசுக்கு விசம் கொடுத்துக் கொன்றது இதற்கு ஆதாரம். ஆப்ரகாம் லிங்கன், மகாத்மா காந்தி, இந்திரா காந்தி எத்தனை ஆதாரங்கள் வேண்டுமெனினும் கைவசம் உண்டு.

எனவே தான் இத்தகையவர்களால், 'உற்ற நோய் நோய் நோன்றல் உயிர்க் குறுகண் செய்யாமை அற்றே தவத்திற்கு உரு’, என்று வள்ளுவர் தம் முதற்குறளிலேயே நம்மை எச்சரித்து விடுகிறார்.

திருக்குறளை, ஆதர்சநூலாகப் பெற்ற நாம் அதைப் புரிந்தொழுகாதது தவறு: ஆமாம் இந்தப் பெருந்தவறை இனிமேலாவது செய்யாது நம்மை நாமறிந்து; தெய்வ நிலையறிந்து வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து வானுறையும் தெய்வத்துள் ஒருவனாக வைத்துப் போற்றுமாறு நம் ஒழுக்கத்தை மாற்றியமைத்துக் கொள்ளத் துணிந்து தொடங்குவோமாக!

ஒம் சத்யமேவ ஜயதே!

❖ நியாயத்தை விட்டு விட்டு நியாயம் பேசும் நாய்க்கு நரகம்
  கிட்டாமல் போகுமா?
- கனகதாசன்

❖ எட்டிக்கனி வனப்பாய் இருக்கலாம். வட்டிக் கடைக்காரனும்
  வனப்பாய் இருக்கலாம், அதனிடம் இனிப்பிருக்காது.
  இவனிடம் இரக்கம் இருக்காது.
-வெ

❖ நாம் தெய்வமாக மாற விரும்புவதற்கு முன் மனிதனாக
  வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்.
- ப.வா. வனமாலி

"https://ta.wikisource.org/w/index.php?title=புது_வெளிச்சம்/தவம்&oldid=1637778" இலிருந்து மீள்விக்கப்பட்டது