உள்ளடக்கத்துக்குச் செல்

புது வெளிச்சம்/சத்யமேவ ஜயதே

விக்கிமூலம் இலிருந்து

6

சத்யமேவ ஐயதே


'முண்டகோபநிசத்து: 2. 2-ம். சூத்திரம், சத்யமேவ ஜயதே' என்று சொல்கிறது. எது சுயம் பிரகாச மானதோ, அணுவினும் சூக்கும மானதோ, எதனிடம் உலகங்கள் நிலைபெறுகின்றனவோ, அதுவே அழிவில்லாத பிரம்மம். அதுவே பிராணன், அதுவே வாக்கும் மனமும், அதுவே சத்தியம், அதுவே அமிர்தம். சித்தம் அழகியோனே! அதையே நீ குறிபார்த்து எய்ய வேண்டும்.

‘சுயம் பிரகாசமானது எது?' நண்பனே சிந்தித்துத் தெரிந்துகொள்ள முயல்க! வானத்தை உதயகாலத்தில் பார். உலகில் கவிழ்ந்துகொண்டிருந்த பேரிருளை நீக்கி ஒளிரும் உதய ஞாயிறை கண்கொண்டு காண்கிறாய் இல்லையா? இந்தச் சூரியன் யார், அல்லது என்ன? உபநிசத்து விளக்குகிறது: 'தத்யத்-தத்-சத்ய-மசெளன சதித்யோ' என்று. இதன் தமிழர்த்தம் என்னவென்று புரிகிறதா? அந்தச் சத்தியம் எதுவோ அதுதான் இந்த ஆதித்யன், என்பதேயாம்.

இந்த உதய ஞாயிறினை சத்தியத்தை உன்னுடைய இதய வானத்தில் உதிக்க வைத்துக்கொண்டால் நீ சுயம் பிரகாசமுள்ள வனாகிவிடுகிறாய். உனக்கு முன் எந்த ஒரு அறியாமை இருளும் எதிர்த்து நிற்க இயலாது என்பதை உணர்ந்து கொள் - இதனைப் பரமார்த்தம் உண்மை, ஞானார்த்தம், தேவ அறிவு, மெய்மை என அகராதி விவரிக்கிறது. எனவே, இந்தச் சத்தியம் அணுவினை விடச் சூக்குமமானது. இந்தச் சத்திய நியதியில் தான் எல்லா உலகங்களும் நிலைபெற்றுள்ளன. ஆகவே, இந்தச் சத்தியமே பிரம்மம் - கடவுளுமாகிறது. இந்தத் தெய்வீக சக்தியே உன்னுடைய உயிரும் அதுவே வாக்கும், மனமும், ஆயிற்று. அதே சத்தியம் அமிர்தமும் ஆகி உன்னை அமரன் - மரணமற்றவனாக - நிலை பேறுள்ளவனுமாக ஆக்கிவிடுகிறது. சத்தியத்தை அமாவாசையாக்கி விட்டு இன்று நாமனைவரும் இருட்டில் தவித்துக் கொண்டிருக்கிறோம்.

சத்தியத்தின் சக்தி எத்தகையது என்று புரிந்துகொள்ள ஒரு சின்னஞ்சிறியகதையும் அதே உபநிசத்தில் கூறப்பட்டிருக்கிறது. அதையும் ஊன்றிப் படித்துணர இங்கு விவரிக்கப்படுகிறது. நண்பனே! உன்னிடமுள்ள அசிரத்தையே உன்னுடைய பரம விரோதி. எனவே, சிரத்தையோடு படித்தறிந்து கொள்.

சத்தியகாமன் எனும் சிறுவன் ஒருவன் தன் தாயாகிய ஜாபாலவை அணுகி, "அம்மா, பிரம்மாச்சாரியாக நான் குருகுலம் சென்று வசிக்க விரும்புகிறேன். நான் என்ன கோத்திரம்”, என்று வினவினான்.

"அப்பா! நீ என்ன கோத்திரம் என்று நான் அறியாதவளாயுள்ளேன். என் யெளவனத்தில், நான் பலவிதமான பணிகளில் பலரிடம் சேவை செய்து கொண்டிருக்கும் காலத்தில் உன்னை ஈன்றெடுத்தேன். ஆகவே உன்தந்தை யார்? அவர் கோத்திரம் என்ன என்பதைத் தெரிந்து கொள்ள இயலவில்லை, என் பெயர் ஜாபாலா, உன் பெயர் சத்தியகாமன் எனவே சத்தியகாம ஜாபாலன் என்றே நீ குருவினிடம் சொல்”லெனக் கூறி அனுப்பினாள்.

அவன் ஆரித்ருதர் எனும் கெளதமரிடம் சென்று பெருமை வாய்ந்த ஐயனே, தங்களிடம் பிரம்மச்சாரியாக வசிக்க விரும்பித் தங்களை வந்தடைந்தேன் என்றான், வணக்கமாகக் கைகூப்பி அவர் முன்னின்ரு

'சித்தம் அழகியோனே! நீ எந்த கோத்திரத்தைச் சேர்ந்தவன்?' என்று அவர் அவனைக் கேட்டார்.

‘ஐயனே! நான் எந்த கோத்திரத்தைச் சேர்ந்தவன் என்பதை அறியேன். என் அன்னையைக் கேட்டேன். அவள், "என் யெளவனத்தில் நான் பலரிடம் பலவிதமான வேலைகளில் ஈடுபட்டிருந்தபோது உன்னைப் பெற்றேன். நீ என்ன கோத்திரம் என்ற அதை நான் அறியவில்லை. என் பெயர்ஜாபாலா உன் பெயர் சத்தியகாமன், என்று பதில் கூறினாள். ஆகையால் நான் சத்தியகாம ஜாபாலன். இதுவே என்னைப் பற்றிய தகவல், என்றான்.

அவர் அவனைப் பார்த்து கூறினார். உண்மையை இங்ங்னம் கூறுபவனைப் பிராமணன் அல்ல என்று சொல்வது தகுதியல்ல. 'சித்தம் அழகியோனே'! சமித்தைக் கொண்டுவா. உனக்கு உபநயனம் செய்விக்கிறேன். நீ சத்தியத்தை விட்டு விலகவில்லை;' என்று கூறி அவனுக்குச் செய்ய வேண்டியது செய்து கூறவேண்டியது கூறி வைத்துக் கொண்டார். கதையை நான் இங்கு இத்துடன் நிறுத்தி உன்னைச் சிந்திக்கப் பண்ணுகிறேன். அவன் உத்தமமான பிராமணன்: என்பது புரிகிறதல்லவா? சத்தியத்தை உபாசிக்கிறவன் தெய்வத்தை அறிந்தடைந்தவனாகிறான். என்னதான் வேசம் போட்டுக்கொண்டிருந்தாலும் ஒருமனிதன் சத்தியத்தை விட்டு விட்டால் அவன் ஆத்திகன் எனும் அருகதை அற்றவன். அவனே நாத்திகன். நாத்திகம் பரவும் நாடு நலம் காணாது என்பது சரியான பழமொழியாகவே இருக்குமல்லவா?

சர்க்கரை என்ற சொல்லே சர்க்கரையாகி விடாது. அந்தச் சொல் சுட்டிக்காட்டி உள்ள பொருள் வேறு. அது கரும்பைப் பிளிந்து சாறாகக் காய்ச்சித் தயாரித்துள்ள ஒரு இனிமைப் பண்டம். இதேபோல் கடவுள் என்ற சொல்லே ஒரு பொருளாகிவிடாது. அச் சொல்குறிக்கும் பொருள் மனிதனின் உள்ளத்தில் உண்மை என்னும் பண்புக்குரியது; மற்ற உருவத்திற்குரியதன்று.

நான் பல ஆண்டுகளுக்குமுன், கன்னடம் கற்க விரும்பி அந்த நாட்டில் இரண்டு ஆண்டுகாலம் வசிக்க வேண்டி இருந்தது. தமிழ் நாட்டைக் காட்டிலும் புறநாகரீகத்தில் கன்னடமக்கள் பின்தங்கினவர்களாகவே எனக்குத் தென்பட்டனர். ஆயினும் பழகப் பழக அவர்கள் அக நாகரிகத்தில் ஒரளவு மேம்பட்டவர்கள் என்று என்னை எண்ணுமாறு நடைமுறை ஒழுக்கம் அவர்களிடம் இருப்பதை நான் கண்கூடாகக் கண்டேன்.

பெரும்பாலும் கல்வியே இல்லாத கிராமவாசிகள் கூட அகச்சுத்தமுள்ளவர்களாகவே இருந்தனர். இன்மை காரணமாய் அவர்களிடம் ஈகையைக் காணவில்லை எனினும், உள்ளங்களில் 'இரக்கம் இருப்பதைக் கண்டேன். சத்வம் பெருங்காயமிட்டிருந்த பானைபோல் முதலில் இருந்திருக்கலாம் என்பதும் தெரிந்தது. சத்யமே தருமம் என்பது அவர்கள் அறிந்துள்ளனர்.

ஒரு நாள், ஒரு வாலிபன் தன் வீட்டுத் திண்ணையில் குந்திக்கொண்டு தன் தாய்மொழியில் ஒரு பாட்டைப் பாடிக்கொண்டிருந்தான்.

சத்ய வேனன்ன தாயி தந்தே,
தத்ய வேநன்ன பந்து பழகவு;
சத்ய வாக்கிகே தப்பி நடதரே
மெச்ச னாதெவ் தீசனுக!
என்று.

அவன் குரலில் பண்ணமைந்திருக்கவில்லை; எனவே இனிமை இருக்கவில்லை தாளக் கட்டில்லை. ஆயினும் அந்தப் பாடலில் அறிவார்ந்த சத்தியமிருந்தது. அவனுடைய உள்ளம், அந்தச் சத்திய ஈடுபாட்டில் இரண்டற்று ஒன்றி வெளிப்பட்டும் கொண்டிருந்தது. இது நிற்க,

'சத்தியமே வெல்லும் என நாம் சொல்லிக்கொள்வதனால் மட்டும் எதையும் நாம் வென்று விட முடியாது. நம்முடைய உள்ளத்தில், உரையில், செயலில் அந்தப் பேருண்மை ஒன்றியிருந்த தெனில் வெற்றி நம்முடையதாகவே இருக்கும். தெய்வசக்திக்கு என்றும் தோல்வி இல்லை என்பது உலகில் பல ஞானிகள் மூலம் ஏற்கனவே நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் தமிழர்களாகிய நாம் உண்மையான தெய்வீகத்தை அறவே இழந்து விட்டோமெனச் சொல்ல நான் வெட்கப்பட்வில்லை. வெறும் பணத்தைக் கொண்டு மனிதன் மகோன்னத நிலைக்குச் சென்றுவிட இயலாது. நாட்டில் அமைதியிருக்காது; ஆனந்தமும் இருக்காது.

உடைமை உடலுக்கானது; உண்மை உள்ளத்திற்கானது. 'தத் யத் தத் சத்ய மசெளன சதித்யோ!' அந்தச் சத்தியம் எதுவோ அதுதான் இந்த ஆதித்யன் உண்மையைக் கைவிட்ட உடைமையும், உருவ வழிபாடும் மக்களை அழிவுக்குத் தள்ளிக்கொண்டு செல்கிறது.


❖ 'குப்பை' இது ஒன்றுதான் நாட்டில் எல்லாவற்றையும்விட
மிக அதிகமாக ஒவ்வொரு நாளும் உற்பத்தியாகிக்
கொண்டிருக்கும் பொருள்.
- ஸ்ரீன் ஆலின்

❖ சத்தியில்லாத உணவும், சத்தியமில்லாத கல்வியும்,
   உடலுக்கும் உளத்துக்கும் உறுதியளிக்காது.

  'ஒன்றே குலம் - ஒருவனே தேவன்' என்றார் திருமூலர்.
  ஆனால், 'முப்பத்து முக்கோடி தேவர்கள்' என்று
  மொழிகிறான் தமிழன்.

  நெஞ்சுரமில்லாதவன், ஐந்தடுக்கு மாளிகையில் வசித்தாலும்
  அஞ்சியே சாகிறான்.
- வெ.