உள்ளடக்கத்துக்குச் செல்

ஓ மனிதா/3. மயில் கேட்கிறது

விக்கிமூலம் இலிருந்து

3. மயில் கேட்கிறது

‘மயில்’ என்றதும் நீங்கள் ஆண் மயிலை நினைத்துக் கொண்டுவிடப் போகிறீர்கள். நான் பெண் மயிலாக்கும். அதனால்தான் ஆண்களை விட்டு விட்டுப் பெண்களைக் கேட்கிறேன்.

‘இயற்கையை வெல்லுகிறோம், இயற்கையை வெல்லுகிறோம்’ என்று சொல்லிக் கொண்டு நீங்கள் எதை வெல்கிறீர்கள்?

‘உங்களுக்கு காங்கள் ஒன்றும் இளைத்தவர்கள் அல்ல’ என்று ஆண்களோடு சேர்ந்துகொண்டு நீங்கள் மண்ணை வெல்கிறீர்களா?

இல்லை.

விண்ணை வெல்கிறீர்களா?

இல்லை.

காற்றை வெல்கிறீர்களா?

இல்லை.

நீரை வெல்கிறீர்களா?

இல்லை! நெருப்பை வெல்கிறீர்களா?

அதுவும் இல்லை.

வேறு எதை வெல்கிறீர்கள்? தலை முடியை வெல்கிறீர்கள; புருவத்தை வெல்கிறீர்கள்; கண்ணை வெல்கிறீர்கள்; கன்னத்தை வெல்கிறீர்கள்... உதட்டை வெல்கிறீர்கள் ....

அப்புறம்... அப்புறம்...

கண்ணராவி, கண்ணராவி! அதை வேறு நான் சொல்ல வேண்டுமா? எதையெல்லாமோ வென்று தொலைக்கிறீர்கள்!

பலன்? பன்னெடுங்காலமாகப் பின்னலிடப்பட்டுச் சாட்டை போல் தொங்கிக் கொண்டிருந்த தலை முடிவிதவிதமான கொண்டைகளுக்குள்ளே ஓடி ஒளிகிறது. இமைக்கு மேல் இயற்கையாக இருக்க வேண்டிய புருவம் மறைக்கப்பட்டு, நெற்றியின் மேல் செயற்கையாக எழுதப்பட்ட புருவம் ஏறி நிற்கிறது. கண்ணை கமை வலை வீசிக்காது இழுக்கிறது; கன்னமும் உதடும் வண்ணக் கலவை ஏந்திவந்து, ‘தொடாதே, தொட்டால் ஒட்டிக் கொள்வோம்’ என்று எச்சரிக்கின்றன.

தப்பித் தவறி இவற்றில் ஒன்றாவது இயற்கையாக இருக்க வேண்டுமே? ஊஹும்; எல்லாம் செயற்கை, செயற்கை...

இவற்றை விட்டுக் கொஞ்சம் கீழே வந்தால் முதலில் கண்ணில்படுவது எடுப்பான பிரேசரி; அதற்கு மேல் போட் நெக் பிளவுஸ். அந்தப் பிளவுஸுக்கு மேல் தெரியும் அழகான கழுத்தைப் பாழும் முந்தானை மறைத்துவிடக் கூடாதே என்பதற்காக கர்மசிரத்தையோடு அதை ஒரு பக்கமாக இழுத்துப் பிடித்துக் கொண்டு நடக்கும் பிடி நடை...

இவை மட்டுமா சல்வார் கம்மீஸ், லுங்கி-சட்டை, பெல்பாட்டம், இத்தியாதி இத்தியாதி...

எல்லாம் எதற்காக?... ஆண்களைக் கவர்வதற்காகவா? ஐயே!


‘என்னைப் பார்த்திருக்கிறீர்களா? நீங்கள்? எந்த விதமான கவர்ச்சிக்கும் என்னை உள்ளாக்கிக் கொள்ளாமல் நான் பாட்டுக்கு கடந்து கொண்டிருப்பேன். என்னைக் கவர ஆண் மயில்களெல்லாம் என்னவெல்லாம் செய்யும் தெரியுமா?-தோகையை விரித்து ஆடு ஆடு என்று ஆடும்; ‘அக்கக்கக்’ என்று அகவிக் கொண்டே என்னைச் சுற்றி வரும்; எனக்குப் பிடித்த இரை ஏதாவது கண்ணில்பட்டால் தன் அலகால் கொத்திக் கொண்டு வந்து எனக்கு முன்னால் வைத்து விட்டு, ‘தயவு செய்து சாப்பிட வேணும்’ என்பது போல அடக்க ஒடுக்கமாக நிற்கும்.

இதற்கிடையில் வேறு எந்த ஆண் மயிலாவது தனக்குப் போட்டியாக வந்து விட்டால் அதையும் தன் சிறகால் அடியோ அடி என்று அடித்து விரட்டிக் கொண்டிருக்கும்'...

இப்படி ஒரு நாளா, இரண்டு நாளா? எத்தனையோ நாட்கள் அதுதவியாய்த் தவித்துக் கொண்டிருக்கும். என்னை அடைய வேண்டுமென்ற ஆசை அதற்கு இருக்கும்போது, எனக்கு மட்டும் அந்த ஆசை இல்லாமலா போகும்? இருக்கத்தான் இருக்கும். ஆனாலும் அதை நான் எந்த விதத்திலும் வெளியே காட்டிக் கொள்ளமாட்டேன்! அதற்காக என் அழகை எந்த விதத்திலும் கவர்ச்சியாக எடுத்துக்காட்ட மாட்டேன். எதையும் மூடி வைத்தால்தானே மவுசு? திறந்துவிட்டால் மவுசு ஏது, மண்ணுங்கட்டி ஏது?

இது தெரியவில்லையே உங்களுக்கு!

என் கதை இப்படி என்றால் எங்கள் இனத்தைச் சேர்ந்த காடை, உள்ளான் போன்ற பறவைகளின் கதை எப்படி, தெரியுமா?—அவற்றில் பெண் பறவைகள் முட்டையிடுவதோடு சரி—அதற்குப் பின் ஆண் பறவைகள் தான் அடைகாத்துக் குஞ்சு பொறிக்க வேண்டும்!

தாம்பத்தியம் என்றால் சும்மாவா?

இதைப் புரிந்து கொள்ளாத நீங்கள் என்ன செய்கிறீர்கள்? ...

உங்களில் யாராவது ஒரு ஆண் மகன் தப்பித் தவறி அடுக்களைக்குப் போய் வெந்ததும் வேகாததுமாக ஒரு நாள் சமைத்து வைத்து விட்டால் போதும், அதைப் பெரிய ஜோக்காக எடுத்துக் கொண்டு விழுந்து விழுந்து சிரிக்கிறீர்கள்! அந்த மாதிரி நாங்கள் சிரிக்க மாட்டோம். அதையும் தாம்பத்தியக் கடமைகளில் ஒன்றாகக் கருதிச் ‘சமர்த்தாக’ இருந்து விடுவோம்!

அழகை வளர்க்க வேண்டியதுதான். எந்த அழகை வளர்ப்பது? அக அழகையல்லவா முதலில் வளர்க்க வேண்டும்? அதை விட்டுப் புற அழகை மட்டும் இப்படி வளர்த்துக் கொண்டே போனால் என்ன நடக்கும்?— விருப்பு வெறியாகி வெறி வெறுப்பாகி விடாதா?

'உண்மையோ, பொய்யோ வள்ளுவரைப் பற்றி ஒரு கதை உண்டு. கதை கடந்த காலம் கணவன் தலையில் மனைவி சட்டியைப் போட்டு உடைக்க, அந்தச் சட்டியின் அடிப்புறம் உடைந்து வாய்ப்புற வட்டம் மட்டும் உடையாமல் அவன் கழுத்தில் ஆரம்போல மாட்டிக் கொள்ள, அதைப் பார்த்த அவ்வை,

“வீணாக உடைந்த சட்டி
வேணதுண்டு என் தலையில்
பூணாரம் பூண்ட

புதுமைதனைக் கண்டதில்லை”

என்று அந்தக் கணவன் பாடிய ஒரு பாட்டும் பாடி வைத்து விட்டுப் போயிருக்கிறாளே, அந்தக காலமாயிருக்கவேண்டும். அந்தக் காலத்தில் இந்தப் பூலோகத்தில் இருந்த ஆண்களெல்லாம் இல்லறத்தை விடத் துறவறமே நல்லது என்று எண்ணி சந்நியாசம் வாங்கிக் கொண்டு விட்டார்களாம் இதை அறிந்த பிரம்மா ‘இதென்ன வம்பு என் தொழிலே கசிந்து விடும் போலிருக்கிறதே!’ என்று கவலைப் பட்டாராம். ‘கவலைப்படாதீர், நான் கவனித்துக் கொள்கிறேன் அவர்களே!’ என்று மன்மதன் பூலோகத்துக்கு வந்து, அத்தனை சந்நியாசிகளின் மேலும் கணைமேல் கணையாக விட்டுப் பார்த்தானம்; ஒன்றும் நடக்க வில்லையாம். கடைசியாக பிரம்மா சிவபெருமானை நெருங்கி; ‘எல்லாம் உங்களால் வந்த வினை! நீங்கள் ஒரு சமயம் பார்வதியை விட்டு விட்டுச் சாம்பரை எடுத்து உடம்பெல்லாம் பூசிக் கொண்டு கையில் ஓடேந்தி நடக்க, அதைப் பார்த்த பூலோகத்து ஆண்களெல்லாம் அப்படியே நடக்க ஆரம்பித்துவிட்டார்கள். இப்போது என் தொழில் நடப்பது எப்படி? என்று கடாவ, ‘அஞ்சற்க’ என்று அபயம் அளித்த அய்யன், வள்ளுவராகப் பூலோகத்தில் அவதரித்து ‘இல்லறத்தை நல்லறமாக நடத்தினால் அதிலே துறவறத்தின் பெருமையையும் காணலாம்’ என்பதைத் தாம் எழுதிய குறளால் மட்டும் அல்ல, வாழ்க்கையாலும் வாழ்ந்து காட்டினாராம். அதற்கு மேல் தான் பூலோகத்திலுள்ள பெண்களும் பிழைத்தார்களாம், பிரம்மாவும் பிழைத்தாராம்!

ஓ, மனிதா! எதற்கும் ஒரு எல்லை உண்டு, அந்த எல்லையை மீறிப் போனால் இப்படி ஏதாவது ஒரு விபரீதம் நடக்கத்தான் நடக்கும். இந்த நிலைக்குப் பெண்கள் தான் தங்களை அறியாமல் உன்னை இழுத்துக் கொண்டு போய்க் கொண்டிருக்கிறார்கள் என்றால் நீயுமா அவர்களைப் பின்பற்றிப் பிளவுஸ் துணியில் சிலாக்கும், புடவைத் துணியில் லுங்கியும் கட்டிக்கொண்டு திரிவது?

அழகு என்பது ஒரு கலைதான்! அதை வளர்க்க வேண்டியதும் அவசியம்தான். ஆனால் அது மனத்துக்குச் சாந்தி அளிப்பதாய் இருக்க வேண்டுமே தவிர வெறி ஊட்டுவதாக இருக்கக் கூடாது.

‘சாந்தி வேண்டாம், வெறிதான் வேண்டும்’ என்று நினைத்தால் அந்த வெறி வெறுப்பாகி, வெறுப்பு உன்னைத் துறவியாக்கி, மீண்டும் ஒரு வள்ளுவர் வந்து அல்லவா இங்கே அவதரிக்க வேண்டியிருக்கும்?