உள்ளடக்கத்துக்குச் செல்

ஓ மனிதா/8. ஆடு கேட்கிறது

விக்கிமூலம் இலிருந்து

8. ஆடு கேட்கிறது

‘எங்களுக்கு மட்டுமே சிரிக்கக் கூடிய ஆற்றலைக் கடவுள் அளித்திருக்கிறார். மிருகங்களுக்கு அந்த ஆற்றல் இல்லை’ என்று மனிதர்களாகிய நீங்கள் அவ்வப்போது பெருமையாகச் சொல்லிக் கொள்வதை நான் எத்தனையோ முறை கேட்டிருக்கிறேன். கேட்டு ‘ஐயோ, பாவம்!’ என்று அனுதாபப்பட்டும் இருக்கிறேன்!- வேறு என்ன செய்ய? என்னுடைய நிலையில் இதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியாதோ!

உண்மை என்னவென்றால், எங்களில் பிறரைப் பார்த்துச் சிரிக்கவோ, அல்லது எங்களைப் பார்த்து நாங்களே சிரித்துக் கொள்ளவோ எங்களிடம் எந்த அசட்டுத்தனமும் இல்லை; அதனால் எங்களைக் கடவுள் சிரிக்க வைத்து வேடிக்கை பார்க்கவில்லை. உங்களிடமோ பிறரைப் பார்த்துச் சிரிப்பதற்கும், உங்களை நீங்களே பார்த்துச் சிரித்துக் கொள்வதற்கும் எத்தனையோ அசட்டுத்தனங்கள் இருக்கின்றன. அதனால் கடவுள் உங்களைச் சிரிக்க வைக்கிறார்; சிரிக்க வைத்து வைத்து வேடிக்கையும் பார்க்கிறார்.

உதாரணத்துக்கு ஒன்றா இரண்டா, எத்தனையோ சொல்லலாம்,

‘இரண்டு உலக மகா யுத்தங்களின் போது, தான் கண்ட பயங்கர விளைவுகளின் காரணமாக நேற்று முளைத்த வெண்டல் வில்கி என்ற ஓர் அமெரிக்கன் ‘ஒரே உலகம்’ என்ற தலைப்பில் எல்லா மனிதர்களும் ஒன்றே என்பதை வலியுறுத்துவதற்காக ஒரு புத்தகம் எழுதினாலும் எழுதினான், ‘ஓகோ!’ என்று அவனைத் தலை மேல் தூக்கி வைத்துக்கொண்டு கூத்தாடுகிறீர்களே, கல் தோன்றி மண் தோன்றாக் காலத்துக்கும் முன் பிறந்த மூத்த குடிமகனாம் தமிழ் மகன் அன்றே என்ன சொன்னான்? -‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ என்று சொல்லவில்லையா? அந்தப் பரம்பரையில் வந்தவர்களாக்கும் நாங்கள்!’ என்று நீங்கள் ஒரு சமயம் சொல்கிறீர்கள்; ஒரே உலகமாவது ஒரே மனிதர்களாவது? அதெல்லாம் ஒன்றுமில்லை; கண்டத்துக்குக் கண்டம், தேசத்துக்குத் தேசம் மக்கள் வேறுபடுகிறார்கள்; அமெரிக்கனும் ஆஸ்திரேலியனும் ஒன்றாகிவிட முடியுமா? பிரெஞ்சுக்காரனும் பிரிட்டிஷ்காரனும் ஒன்றாகிவிட முடியுமா? ஜெர்மானியனும் ஜப்பானியனும் ஒன்றாகிவிட முடியுமா? அவரவர்களுக்கென்று தனி மொழி உண்டு; தனிக் கலாச்சாரம் உண்டு என்று இன்னொரு சமயம் சொல்கிறீர்கள்.

சரி, உலகத்தை விடுங்கள்; தேசத்தை எடுங்கள்—தேசம் என்றால், உங்கள் பாரத தேசத்தைச் சொல்கிறேன். புராண இதிகாசக் காலங்களில் ‘கண்ட’மாகவும் கருதப்பட்டு வந்த உங்கள் தேசத்துக்குள் தேசமாக ஐம்பத்தாறு தேசங்கள் அப்போது இருந்தன. அந்த ஐம்பத்தாறு தேசங்களுக்கும் ஐம்பத்தாறு ராஜாக்கள் இருந்தார்கள். அந்த ஐம்பத்தாறு ராஜாக்களுக்கும் எல்லாமே ஐம்பத்தாறு ஐம்பத்தாறாக இருந்தாலும், அந்தப்புர அழகிகள் மட்டும் அந்தக் கணக்கில் அடங்காதவர்களாயிருந்தார்கள்! —ராஜாக்களல்லவா? அந்த விஷயத்தில் சிக்கனத்தைப் பார்க்க– லாமா? அவர்களுக்குரிய ‘மரியாதை’யே அந்த நாளில் அதில்தானே இருந்தது?

அந்தக் காலம் மாறி, ‘சரித்திரக் காலம்’ என்று ஒரு காலம் வந்தது அந்தக் காலமும் உங்களைப் பொறுத்தவரை ‘போதாத கால’மாகவே இருந்து வந்தது. உள்நாட்டு ராஜாக்களின் புண்ணியத்தால் பல வெளி நாட்டு ராஜாக்கள் இங்கே தாமாகவும் வந்தார்கள்; இறக்குமதியும் செய்யப்பட்டார்கள், அவர்களுக்கு நீங்கள் மட்டும் அடிமையாகவில்லை; உங்கள் ராஜாக்களும் அடிமையானார்கள்.

சுதந்திரம்?—அதைப் பற்றி உங்களில் யாருமே கவலைப்படவில்லை— எப்போது கவலைப்பட்டீர்கள், இப்போது கவலைப்பட?—ஏதோ, கிடைத்தவரை ஆதாயம்! அது தானே உங்கள் ‘பாலிஸி?’

நல்ல வேளையாக உங்கள் நாட்டின் வடபுலத்தில் சுதந்திர வேட்கை மிக்க லோகமானிய பால கங்காதர திலகர், கரம் சந்திரமோகனதாஸ் காந்தி போன்றவர்கள் தோன்றினார்கள்; தென்புலத்தில்வாஞ்சிநாதன், வ. உ. சிதம்பரம் போன்றவர்கள் தோன்றினார்கள். எல்லாருமாகச் சேர்ந்து உங்களிடையே சுதந்திரத் தீயை மூட்டினார்கள். ‘கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது’ என்று பாடினார் இன்று உலகத்தோடு ஒட்டி வாழும் நாமக்கல் கவிஞர், அப்படியே வந்தது; தேசம் விடுதலை அடைந்தது.

எந்த நிலையில்?—அந்த நாள் ஐம்பத்தாறு ராஜாக்களுக்குப் பதிலாக இந்த நாள் ராஜாக்கள் இருநூற்றுச் சொச்சம் பேரைக் கொண்ட நிலையில்!

அதையும் ஒருவழிப்படுத்தி உதவினார் தீரர் வல்லபாய் பட்டேல். ‘அப்பாடா! உலகம் ஒரே உலகமாகா விட்டாலும் தேசமாவது ஒரே தேசமாயிற்றே, அது போதும்!’ என்று உங்களில் பலர் அன்று பெருமூச்சு விட்டீர்கள்.

அதற்கும் ஆபத்து வரும் போலிருந்தது, ‘ஏக இந்தியா’வுக்கு பதிலாக ‘அவியல் இந்தியா’ கேட்பவர்களிடமிருந்து. அதைத் தவிர்ப்பதற்காக வருடத்தில் ஒரு நாளைத் தேர்ந்தெடுத்து, அந்த நாளை ‘ஒருமைப்பாட்டு நாள்’ என்று குறிப்பிட்டு, பின்வரும் ‘பிரதிக்கினை’யை எடுத்து வருகிறீர்கள்.

‘நாட்டின் உரிமை வாழ்வையும், ஒருமைப்பாட்டையும் பேணிக் காத்து வலுப்படுத்த நான் செயற்படுவேன் என்று உளமார உறுதி கூறுகிறேன். ஒரு போதும் வன்முறையை நாடேன் என்றும், சமயம், மொழி வட்டாரம் முதலியவை காரணமாக எழும் வேறுபாடுகளுக்கும், பூசல்களுக்கும், ஏனைய அரசியல். பொருளாதார குறைபாடுகளுக்கும் அமைதி நெறியிலும், அரசியல் அமைப்பின் வழியிலும் நின்று தீர்வு காண்பேன் என்றும், நான் மேலும் உறுதியளிக்கிறேன்.’

இப்படி உறுதிமொழி எடுத்த மறுநாளே நீங்கள் என்னசொல்கிறீர்கள்? ‘ஒருமைப்பாடாவது, ஒண்ணாவது! அதெல்லாம் ஒன்றுமில்லை; காஷ்மீரும் பஞ்சாபியும் ஒன்றாகிவிட முடியுமா? குஜராத்தியும் மராத்தியும் ஒன்றாகிவிட முடியுமா? வங்காளியும் தமிழனும் ஒன்றாகிவிட முடியுமா? அவரவர்களுக்கென்று தனி மொழி உண்டு: தனிக் கலாச்சாரம் உண்டு!’ என்று சொல்கிறீர்கள்.

சொல்வதைச் சும்மாவாவது சொல்கிறீர்களா என்றால் அதுவும் இல்லை!

‘ஜனகண மன அதி நாயக ஜயஹே
பாரத பாக்கிய விதாதா
பஞ்சாப சிந்துகுஜ ராத மராட்டா

திராவிட உத்கல வங்கா......’

என்று அடி பிறழாமல், தாளம் தவறாமல் பாடிவிட்டுச் சொல்கிறீர்கள். அந்தப் பாட்டின் பொருள் உங்களுக்குத் தெரியாமலா இருக்கும்?—தெரிந்துதான் இருக்கும்.

‘இந்தியாவின் சுகதுக்கங்களை நிர்ணயிக்கிற நீதான மக்கள் எல்லாருடைய மனத்திலும் ஆட்சி செலுத்துகிறாய்...’

‘நின் திருநாமம் பஞ்சாபையும் சிந்துவையும், குஜராத்தையும் மகாராஷ்டிரத்தையும், திராவிடத்தையும் வங்காளத்தையும் உள்ளக் கிளர்ச்சி அடையச் செய்கிறது!...’

‘அது விந்திய, இமாசல மலைகளில் எதிரொலிக்கிறது; யமுனை, கங்கை கதிகளின் இன்ப நாதத்தில் கலக்கிறது. இந்தியக்கடல் அலைகளால் ஜபிக்கப்படுகிறது!’

‘அவை நின் ஆசியை வேண்டுகின்றன, நின் புகழைப் பாடுகின்றன!...’

‘இந்தியாவின் சுகதுக்கங்களை நிர்ணயிக்கிற உனக்கு வெற்றி, வெற்றி, வெற்றி!’

மனிதா! என்னை வைத்து நீ ஒரு கதை கட்டிவிட்டிருக்கிறாயே, அது நினைவிருக்கிறதா, உனக்கு? இல்லாவிட்டால் சொல்கிறேன், கேள்:

ஒரு வாய்க்காலின் இக்கரையில் நின்று ஆட்டுக்குட்டி ஒன்று தண்ணீர் குடித்துக் கொண்டிருந்ததாம். அக்கரைக்குத் தண்ணீர் குடிக்க வந்த ஓர் ஓநாய் ‘ஏண்டா பயலே! தண்ணீரை ஏன் கலக்குகிறாய்?’ என்று ஆட்டுக் குட்டியை வம்புக்கு இழுத்ததாம். ‘இது என்ன அநியாயம்? நான் எங்கே தண்ணீரைக் கலக்கினேன்?’ என்று ஆட்டுக்குட்டி விழித்ததாம். ‘நீ கலக்காவிட்டால் உன் அப்பன் கலக்கியிருப்பான்; உன் அப்பன் கலக்காவிட்டால் உன்னுடைய பாட்டன் கலக்கியிருப்பான்’ என்று உறுமிக் கொண்டே ஆட்டுக்குட்டியின் மேல் பாய்ந்து அதைக் கொன்று தின்று விட்டதாம் ஓநாய்.

அதாவது, எந்த அநியாயத்தைச் செய்தாலும் அதை ஏதோ ஒரு நியாயத்தின் பேரால் செய்வது உன் தருமம். அந்தத் தருமத்தையே ஓநாயின் கதையிலும் நீ அடி நாதமாக வைத்திருக்கிறாய்!

இந்த ஒருமைப்பாடு விஷயத்தில் மட்டும் அதை நீ விட்டுவிடுவாயா?—ஒருபக்கம் ஒருமைப்பாட்டைப்பற்றி பேசிக் கொண்டே, இன்னொரு பக்கம் நீ ‘தனிக்காட்டு ராஜ தர்பார்’ நடத்த வேண்டும் என்பதற்காக மொழி, இனம் என்று ஏதேதோ சொல்லி மக்களைக் கிளப்பி விடுகிறாயே?—கடைக்குப் போய்க் கையில் காசில்லாவிட்டாலும் ‘ரைஸ் ஒன் கிலோ’ என்றால் கொடுத்து விடுவான்; ‘அரிசி ஒரு கிலோ’ என்றால் கொடுத்து விடுவான். கையில் காசிருந்தாலும் ‘சாவல் ஏக் கிலோ’ என்றால் கொடுக்கமாட்டானா என்றால், ‘கொடுக்கிறானோ இல்லையோ, அதுதான் ஒருமைப்பாட்டுக்கு வழி!’ என்கிறோம்! ‘சண்டைக்கு வேண்டுமானாலும் எல்லாரும் சேர்ந்தாற்போல் போவோம்; சாப்பாட்டுக்கு மட்டும் நீ வேறே, நான் வேறே; அவன் வேறே, இவன் வேறே தான்’ என்று ‘நாங்கள் இப்போது பிரிவினையைப் பற்றிப் பேசவில்லை, நாங்கள் இப்போது பிரிவினையைப் பற்றிப் பேசவில்லை’ என்று சொல்லிக்கொண்டே பிரித்துப் பிரித்துப் பேசிக்கொண்டிருக்கிறாயே? என்றால், ‘சமாதானத்துக்கு அதுதான் வழி!’ என்கிறாய்!

வேடிக்கையாக இல்லை?

இந்த மாதிரி வேடிக்கை எதற்கும் இடம் கொடாமல் நாங்கள் தொன்று தொட்டு எங்களுக்குள் ஒருமைப் பாட்டைக் காத்துவருகிறோம் என்பது உனக்குத் தெரியும், நாட்டுக்கு நாடு நாங்கள் காலநிலை காரணமாக நிறத்தால் வேறுபட்டிருந்தாலும், குரலால் வேறுபட்டிருந்தாலும், மேயும்போது நாங்கள் ஒரு மந்தையாகவே மேய்கிறோம் என்பதும், இரவில் எங்கேயாவது தங்கும் போதும் ஒரு மந்தையாகவே தங்குகிறோம் என்பதும் உனக்குத் தெரியும். தெரிந்தும் நீ எங்களைப் பற்றி என்ன சொல்கிறாய்? எங்களுக்குச் சுயபுத்தி இல்லையென்றும், அதனால் தான் ஒன்றன் பின் ஒன்றாகக் கண்ணை மூடிக்கொண்டு போகிறோ மென்றும் எங்களை இழித்தும் பழித்தும் சொல்கிறாய்!

உண்மைதான்; உங்களுக்குள்ள ‘சுயபுத்தி’ எங்களுக்கு இல்லை என்பது என்னவோ உண்மை தான். இருந்தால்தான் நாங்களும் உங்களைப்போல் வருடந்தோறும் ஒருமைப்பாட்டுப் ‘பிரதிக்கினை’ என்று ஒன்றை எடுத்துக் கொண்டு, நிமிடந்தோறும் பிரிவினையைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்போமே!

வெட்கமாயில்லை உங்களுக்கு?

"https://ta.wikisource.org/w/index.php?title=ஓ_மனிதா/8._ஆடு_கேட்கிறது&oldid=1638414" இலிருந்து மீள்விக்கப்பட்டது