உள்ளடக்கத்துக்குச் செல்

சமதர்மம்/தீண்டாமை

விக்கிமூலம் இலிருந்து

தீண்டாமை



தமிழ் நாட்டிலே எங்கு பார்த்தாலும் சிற்பிகளின் சிந்தனையைச் சிறப்புற விளக்கிடும் எழில் மிகுந்த கோயில்கள் உள்ளன. முடியுடைய மூவேந்தர்களும், பல்லவரும் கட்டிய ஆலயங்கள்--அவை ஒவ்வொன்றுக்கும் சிறப்புகள் மகிமைகள் கூறப்பட்டுள்ளன, பாடல் பெற்ற ஸ்தலங்கள் என்று புகழப்படுகின்றன. ஒவ்வொரு கோயிலுக்கும் ஒவ்வொரு அற்புதம் கூறப்படுகிறது. தாயுமானார், தயாபரர், தீராத வல்வினையைத் தீர்த்தவர், தில்லையில் திருநடனம் புரிபவர், திருவரங்கத்து அண்ணல் என்று பெயரினாலேயே பொருட்செரிவும் வைத்துப் பேசப்படுகிறது. பாடல் கேட்டு கதவு திறக்கப்பட்ட கோயில், படிக்காசு கிடைத்த கோயில் தூது சென்ற தலம், என்று பல்வேறு மகிமைக் கதைகள் கூறப்படுகின்றன.

அதாவது, ஆலயங்கள் ஏராளமாக உள்ளன. அவைகளில் அழகும் மகிமையும் பேசப்படுகின்றன. அங்கு சென்று சேவிப்பது இகபரசுகம் தரும் என்று பேசப்படுகிறது. கோயிலில்லா ஊரிலே குடியிருக்கவே வேண்டாம் என்பது பழமொழி. திருக்கோயிலை வளம் வராத கால் என்ன காலோ. ஐயனைச் சென்று காணாத கண் என்ன கண்ணோ என்று பஜனைகள் நடக்கின்றன. தூய்மையின் இருப்பிடம் என்று, கூறப்படுகிறது. இவ்வளவு கூறிவிட்டு ஏடுகளை இதற்காகக் குவித்துவிட்டு, இறைவனின் இல்லங்களை எங்கும் எழுப்பிவிட்டு அவற்றின் அருமை பெருமை, அங்குப் போக வேண்டியதின் அவசியம் போனால் ஏற்படும் பலன், ஆகியவற்றைப் பாட்டாகவும், கூத்தாகவும் படமாகவும் எடுத்துக் காட்டிவிட்டு, கேட்டதும் மக்களுக்கு ஓர் ஆவல்...பற்று...பாசம் ஏற்படும்படி செய்துவிட்டு ஆசையைத் தட்டி எழுப்பிவிட்டு, வீணையை மீட்டத் தொடங்கியதும், இசைகேட்க வருபவனின் காதுகளை அடைப்பது போல, எழில்மிகு சித்திரத்தைத் தயாரித்துக் காண வாரீர் என்று அனைவரையும் அழைத்துக் காண வரும் சிலரின் கண்களைக் கட்டியிருப்பது போல, பழச்சாற்றின் இனிப்பைக் கூறிக்கொண்டு, பருகக் கொஞ்சம் தருக என்று கேட்பவனை விரட்டுவது போல, ஆலயங்களுக்கு மகிமையும்; பலனளிக்கும் சக்தியும் இருப்பதைக் கூறி விட்டு, அங்கு வரக்கூடாது நுழையக்கூடாது என்று சிவரை அல்ல, ஏறக்குறைய எட்டு கோடி மக்களைத் தடுத்து வருகிறோம். இன்று நேற்றல்ல; தலைமுறைத் தலைமுறையாக அவர்கள் ஏதோ குற்றம் செய்ததற்கு தண்டனையாக அல்லது--அவர்கள் தமக்கு இழைக்கப்படும் கொடுமையாக நம்மைத் தண்டிக்கும் சக்தியைப் பெறாத ஒரே காரணத்தால். இது முறையா--நீதியா--தருமமா--நெடுநாட்களுக்குச் செல்லுமா--இவை கேள்விகள் அல்ல--எண்ணத்தில் கபடமில்லாத எவருக்கும் இருக்கும் இதயத் துடிப்புகள்.

பொருளைக் காட்டி மறைப்பார் குழந்தைகளிடமிருந்து பெற்றோர். நாமோ புனித ஸ்தலங்களின் பெருமையைக் கூறிப் பூட்டி விடுகிறோம். அங்கு ஒரு குறிப்பிட்ட சமூக மக்கள் வரக்கூடாது என்று. ஏன்? முடிந்தது செய்து வந்தோம் என்பதுதான் உண்மையான காரணம், மற்றக் காரணங்கள், மனதிலே எழும் அலைகள்.. உண்மையல்ல.

பயனும் பெருமையும் இருப்பதாகவும் ஒரு இடத்தைக் குறிப்பிட்டு, அதே இடத்துக்கு ஒரு குறிப்பிட்ட கூட்டத்தினரை நுழையக்கூடாது என்று சொன்னால், எவ்வளவு வேதனை இருக்கும். கூறும் நமக்கு எவ்வளவு கடினமான மனது இருக்க வேண்டும் என்பதை எண்ணிப் பாருங்கள். இன்றிரவு உங்கள் கையை மூடிக்கொண்டு, உங்கள் கொஞ்சுமொழிக் குழந்தையைக் கூப்பிட்டுத் "தம்பி! கைக்குள்ளே ஒரு அருமையான வஸ்து இருக்கிறது பளபளப்பானது யாருக்கும் கிடைக்காது என்று கூறுங்கள். குதித்துக்கொண்டே அந்தக் குழந்தை அண்ணா அதை எனக்குக் கொடேன்" என்று கொஞ்கிக் கேட்கும் போது ஊஹூம் தரமுடியாது உனக்கல்ல அது, தரமாட்டேன் என்று கூறிப்பாருங்கள். நீங்கள் படுகிற பாடு தெரியும். நாணும் தான்--எத்தனை கிள்ளுகளோ, எவ்வளவு மல்லுகளோ--அழக்கூடச் செய்யும் குழந்தை. அம்மா அவசரமாக ஓடிவந்து, குழந்தையை அனைத்துக் கொண்டு 'பொல்லாத விளையாட்டு' என்று கூறி, நமது கரத்தைப் பிடித்து இழுத்துக் 'குழந்தையை ஏமாற்றதீர்கள்' என்று கோபிப்பார்கள்.

குடும்பத்தைப் பொறுத்தமட்டிலே, இதிலே ஒருவகைக் குதூகலம்கூட இருக்கும். குழந்தையின் உள்ளத்திலே எவ்வளவு வேதனை ஏற்பட்டிருக்கும் தெரியுமோ?

குழந்தையின் மனமே இப்படி. நாம் செய்துவரும் கொடுமை, எட்டுக்கோடி மக்களுக்கு. இறைவனின் இல்லத்தின் அருமைதனைக் கூறிக் கொண்டே "அந்த இடத்தில் மட்டும் நீ வரக்கூடாது" என்று கூறுகிறோம். சரியா? என்று யோசித்துப் பாருங்க.

பக்தர்களைப் பரமன் வாழும் இடத்துக்குச் செல்லவொட்டாது தடுப்பது, சேயைத் தாயிடமிருந்து பிரிப்பது போன்ற பாதகமென்று, இதோபதேசம் செய்து பார்த்தாயிற்று.

இந்து மார்க்கத்தின், இந்நாள் இருக்கும் இந்த தீண்டாமை. அந்நாளில் ஆன்றோர் வாழ்ந்த விதம் வேறு; சான்றோரெல்லாரும் தீண்டாமையைக் கையாண்டதில்லை என்று விளக்கம் கூறியாகிவிட்டது.

எந்த இந்து மதத்திலே அந்த மக்கள் இருப்பதாகக் கூறிப் பெருமைப்பட்டுப் புள்ளி விவரம் காட்டிப் பூரிக்கிறோமோ அதே மதத்திலிருக்கும் மக்களை மதத்தின் ஊற்றாகக் கருதப்படும் கோயிலிலேயும் அனுமதிக்காதிருப்பது, மனப் புண்ணை, ஆற்ற முடியாத புண்ணை ஏற்படுத்திவிட்டது. இதனை ஆற்றிக்கொள்ள அந்த மக்களில் பலர், சிலுவைச் சூரணமோ, இஸ்லாமிய முறையையோ நாடுகின்றனர். இந்து சமுதாயம் குறைந்து வருகிறது என்ற யூகம் கூறியாகிவிட்டது.

வீரம், தியாகம், கடமை, பக்தி எனும் பல்வேறு உணர்ச்சி நரம்புகளை மீட்டிப் பார்த்தாகிவிட்டது.

நந்தனாரை, திருப்பாணாழ்வாரை--மக்களுக்குக் கவனப்படுத்தியாகிவிட்டது.

"ஆவுரித்துத் தின்று உழலும் புலையரேனும், அவர் கண்டீர் யாம் வணங்கும் தெய்வமாமே" என்று பாசுரம் பாடிப் பார்த்தாகி விட்டது.

வேறு நாடுகளிலே, தேவையில்லாத தீங்கு தருவதான முறையை மாற்ற எடுத்துக்கொண்ட முயற்சியைவிட இங்கு நம் நாட்டில் தீண்டாமை ஒழிப்புக்காகவும், திருக்கோயில் திறப்புக்காகவும் எடுத்துக் கொண்ட முயற்சி மிக அதிகம்.

"ஜாதி மதங்களைப் பாரோம்! உயர் ஜன்மம் இந்தத் தேசத்தில் எய்தினர் ஆயின், வேதியர் ஆயினும் ஒன்றே! அன்றி வேறு குலத்தவர் ஆயினும்" ஒன்றே" என்ற பாடலை எத்தனை எத்தனையோ ஆயிரம் மேடைகளில் பாடிக் காட்டியாகிவிட்டது.

வியாசரின் உண்மைக் கருத்து, பராசரின் பரந்த நோக்கம் வேதத்தின் சாரம், உபரிஷத்தின் உண்மை என்று தத்துவார்த்தங்கள் பேசிப் பார்த்தாகிவிட்டது.

எத்தனை மாநாடுகள்--எவ்வளவு அறிக்கைகள்--சத்தியாக்கிரகங்கள்--உண்ணாவிரதங்கள்--கிளர்ச்சிகள்--இந்த மாசு துடைக்க ஏற்பட்டன. ஏற்பட்டும்--ஆம்! பெரு மூச்சுடன்தான் பேசித் தீரவேண்டியிருக்கிறது. மதுரை மீனாட்சி அம்மனைக் காண முடியாது; அரங்கநாதரைச் சேவிக்க முடியாது, பழனியாண்டவரைப் பார்க்க முடியும்; திருமலையப்பனைத் தரிசிக்க முடியாது. நந்தனுக்கு முக்தி தந்த தில்லைச் சபேசன் பெருமையை நவரசங்களுடன் எடுத்துக் கூறுவரேயன்றி அவரைக் காண முடியாது பரிதாபம்! மக்களிடை காட்டிய பேத உணர்ச்சி, இன்று கடவுள்வரை சென்று விட்டது, காண அனுமதிக்கும் சாமி சில; காணக் கூடாத கடவுள் சில என்னும் நிலைமை வந்துவிட்டது. ஏன்? யார் யாரைக் கேட்பது.

அறிவு, ஆண்மையைப் பார்த்துக் கேட்கவேண்டிய அவசியமான, அவசரமான கேள்வி இது.

இடையிடையே, சில இடங்களில் சில கோயில்கள் திறந்துவிடப்பட்டன என்று செய்தி வெளிவரக் காண் கிறோம். ஆந்திர நாட்டவரும், சட்டசபை அங்கத்தினருமான பி. எஸ். மூர்த்தி என்பவர், ஆதித்திராவிடரைத் திருப்பதி மலைக்கு அழைத்துச் செல்லப்போவதாக அறிவிக்கிறார். வைதிகர்கள் எதிர்க்கத்தான் எண்ணுகிறார்கள். ஆனால்,

இன்று அந்தப் பழைய நாள் பரபரப்பும் பதைபதைப்பும் இல்லை. ஆனால் பழைய நாட்டுக் கோட்பாடுகளின் படியே நடக்கவேண்டும் என்று எண்ணும் வைதிகர்களின் மனப்பான்மை அடியோடு மாறிவிட்டது என்று கூறிவிட முடியாது.

திகைப்பு, திகில்; தடுத்தே தீரவேண்டுமென்ற போக்கு; இதனால் சர்வநாசம் சம்பவிக்குமோ என்ற சஞ்சலம்--இன்று குறைவு குறைந்துகொண்டு வருகிறது. ஆனால் அடியோடு மனமாறுதல் ஏற்பட்ட பிறகுதான், ஆலயப் பிரவேசம் சாத்தியமாகும் என்று கூறுவது ஆண்மை, அன்பு, அறிவுடைமை ஆகாது. எனவே, சட்டம் தேவை; அதை விளக்க ஒரு பிரசாரத் திட்டம் தேவை--அவசரமாக தேவை.

ஆலயங்களில் முன்னாள் இன்னாள் நிலைமை; அதனால் ஏற்படும் பலன்; யாராருக்கு எந்தெந்த வகையான பலன் உண்டாகிறது என்பவை, தனிப்பிரச்சினைகள்.

அதுபோலவே ஆதித்திராவிடர்கள் முன்னேற, ஈடேற என்னென்ன வழி; ஆலயப் பிரவேசம் ஒன்று மட்டும். அவர்களின் கஷ்டத்தைப் போக்கிவிடுமா என்பவையும் தனிப் பிரச்சினைகள்.

இப்போது நான் கூறுவது, அந்தத் தனிப்பரசனைகளைப் பற்றி அல்ல. இந்நாட்டிலே ஆலயங்கள் உள்ளன; ஆதித்திராவிடர்களும் இருக்கின்றனர்.

ஆலயங்களிலே நாம் போகலாம்; அவர்கள் வரக்கூடாது என்று நாம் கூறுகிறோம், நாமே யாரை ஆலயங்களுக்குள் வரக்கூடாது என்று தடுக்கிறோமோ அவர்களைத் தாய் நாட்டு மக்களென்றும், சகோதரர்கள் என்றும் கூறுகிறோம். நாட்டு மக்களின் கணக்கைப்பற்றிப் பெருமை யாக 40 கோடி பேர், நாம் என்று பேசும்போது, "கிட்டேவராதே, எட்டி நில்," என்று கூறித் தடுக்கிறோமே, அவர்களின் தொகை 8 கோடி என்பதை மறந்தே விடுகிறோம். ஐந்தில் ஒரு பாகம் அவர்கள்-- பஞ்சேந்திரியத்தில் ஒன்று பழுதாகி விட்டதுபோல--நாட்டைக் கேட்டினில் ஆழ்த்துகிறோம்.

ஆலயங்களிலே பலவகையான சீர்திருத்தம் வேண்டும், என்று பேசுபவர்களேகூட, அங்கு ஆதித்திராவிடர்கள் வருவதைத் தடுக்கிறார்கள்.

அதுபோலவே, ஆதித்திராவிடர்களுக்குக் கல்வி, சுகாதாரவசதி செய்து தரவேண்டுமென்று அன்புடன் பேசத் தயாராக இருப்பவர்கள்கூட, அவர்களுக்குக் கோயில் பிரவேசம் கூடாது என்று பேசுகின்றனர்.

இந்த விசித்திர மனப்பான்மைக்குக் காரணம் இருக்கிறது. அர்த்தமற்றதல்ல இந்தப்போக்கு.

உபகாரம் செய்யச் சம்மதிக்கிறார்கள்--உரிமையைத் தருவது என்றால் சங்கடப்படுகிறார்கள். உபகாரம் செய்வது சுலபம்; உரிமையைத் தருவது கஷ்டம். உபகாரம் செய்வதிலே காட்டவேண்டிய தியாக உணர்ச்சி குறைவு--தீரமும் குறைவுதான்--ஆனால் உரிமையைத் தருவதற்குத் தியாக உணர்ச்சியும், தீரமும் அதிகமாகத் தேவை.

உபகாரத்தைப் பெறுக்குபவருக்கும், தருபவருக்கும் இடையே ஏறத்தாழ, அடிமை--எஜமானன் என்ற நிலைமைதான் இருக்கும். உரிமை தருவது, பெறுவது என்பது இந்த நிலையை அல்ல. இருவருக்கும் சமநிலை, சம அந்தஸ்து ஏற்படச் செய்கிறது. உபகாரம். "ஐயோ பாவம்" என்ற உணர்ச்சியின் விளைவு--உரிமை, 'என்' என்ற முழக்கத்தின் விளைவு, எனவேதான் சம்மதிப்பதில்லை. தீண்டாமை முறை உரிமையைப் பறிக்கும் சூது.

தீண்டாமை-எவ்வளவு வேதனையான வேடிக்கை இது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

கெட்ட பொருளைத் தொடக்கூடாது--குப்பை கூளம், நாற்றப்பொருள், ஆகியவைகளிடம் நிச்சயமாகத் தீண் டாமை அனுஷ்டிக்கத்தான் வேண்டும். அக்கினித் திராவகம் வெடிகுண்டு, விஷம், சீறும் நாகம், கொட்டும் தேள் இன்னும் பலப் பல உண்டு ஆபத்துத் தரக்கூடியவை. அலவைகளைத் தீண்டாதிருக்க வேண்டும்-- நியாயம் அது. ஆனால் பலகோடி மக்களை, தாய்நாட்டாரை மூதாதையர் கால முதற்கொண்டு நம்முடன் வாழ்ந்து வருபவர்களைத் "தீண்ட மாட்டோம்" என்று கூறுவது--தீண்டாமையை அனுஷ்டிப்பது--எவ்வளவு வேதனை? எவ்வளவு அர்த்த மற்றது என்பதை எண்ணிப் பார்க்கும் எவரும், "இனியும் அந்தக் கொடுமை இருக்கவேண்டும்" என்று வாதாட முடியாது--தீண்டாமையால் இன்ன நலன் விளைந்தது--விளைகிறது--விளையும் என்று கூறவும் முடியாது. அதற்கு மாறாகத் தீண்டாமையால் ஏராளமான கேடுகள் விளைந்திருப்பதைக் காட்ட முடியும். விவரமாகக்கூட விளக்க வேண்டியதில்லை. எட்டுக்கோடி பேர் உள்ளனர் தீண்டாதார். அவ்வளவு பேர்களுக்கும் மனப்புண் உண்டாக்குகிறோம். இதைவிட வேறு கேடு என்ன வேண்டும்.

தயை, தர்மம், அன்பு, நேசம் முதலிய பண்புகள், நாட்டு மக்களிடம் வளரவேண்டும். அதுதான் அவர்கள் நாகரிக வாழ்வு, வாழ்கிறார்கள் என்பதற்கு அடையாளம் என்றெல்லாம் அறிஞர்கள் கூறக் கேட்டு அகமகிழ்கிறோம். வடலூர் இராமலிங்கரின் சமரச சுத்த சன்மார்க்கத்தை வாழ்த்துகிறோம். இராஜாராம் மோகன்ராய், தயானந்தர் ஆகியோருக்கு விழா நடத்துகிறோம். நம்முடைய நாட்களிலேயே ஹரிஜன் நிதிக்குப் பணம் கூடத் தருகிறோம். ஆனால், "தீண்டாமையை அறவே ஒழிக்க வேண்டும் வாரீர்" என்று அழைத்தால், தர்மம், தயை, அன்பு, நட்பு'முதலிய குணங்களெல்லாம், ஓட்டுக்குள் மறைந்துக்கொள்ளும் ஆமைகளாகிவிடுகின்றன. எங்கிருந்தோ கிளம்பி, வைதீகம் என்னும் நாகம் சீறுகிறது. அதை அடக்க அறிவாயுதம் வேண்டும்.

கள்ளக் கையொப்பக்காரன் கரம் கூப்புகிறான்--விபசாரி விசேஷ அபிஷேகம் செய்விக்கிறாள், குடி கெடுப்பவன் கும்பாபிஷேகம் செய்கிறான். கொள்ளை இலாபமடித்தவன் வெள்ளி ரிஷபம் செய்து வைக்கிறான். ஒழுக்கக் குறைவு உள்ளோர், அழுக்கு மனம் படைத்தோர், இழுக்கான வழிசெல்பவர்கள், ஆலயங்களிலை நுழைய முடியாத படி தடை உண்டோ? இல்லை.

ஆனால் ஆதித்திராவிடரை மட்டும், ஆலயத்துக்கு வரக்கூடாது என்று தடுக்கிறோம்--நியாயமா?

அல்ல என்றுதான் தெரிகிறது. ஆனால்......என்று தானே பதில் கூறுகிறீர்கள்?

ஆனால், ஆனால் என்று அநேக காலமாகக் கூறிவந்தாகிவிட்டது? நண்பர்களே ஆனால், என்பதை மறந்து ஆகையால் தீண்டாமை கூடாது-- ஆலயப் பிரவேசம் அவசியம் தான் என்று அச்சத்தை விட்டுத் தீர்ப்பளியுங்கள்.

ஆனால்.. என்று நெகிழ்ந்த நிலையிலேதான் மக்கள் பேசுகிறார்கள். அதற்கு அர்த்தம், கோயிலுக்குள் தீண்டாதாரை விடக் கூடாது என்பதல்ல. ஆனால் சர்க்கார் சட்டம் செய்து விடட்டுமே என்றுதான் மக்கள் கூறுகிறார்கள் என்று, சர்க்கார் எண்ண வேண்டும். மக்களின் மனம் இன்று அத்தகைய சட்டமே தேவைப்படாத அளவு பண்படவில்லை. ஆனால் அத்தகைய சட்டம் வருவதைத் தடுத்தே ஆகவேண்டும் என்ற மனநிலை இல்லை. இந்தச் சமயந்தான் கோயில் நுழைவுக்கான சட்டம் செய்யும் சரியான சமயம்--என்று சர்க்காருக்குக் கூறுகிறேன்--பிரஜை என்ற முறையில்.

"https://ta.wikisource.org/w/index.php?title=சமதர்மம்/தீண்டாமை&oldid=1638709" இலிருந்து மீள்விக்கப்பட்டது