உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மருமக்கள்வழி மான்மியம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முன்னுரை

19

அங்கத்தினர் பலர் பிள்ளையவர்கள் கூடவே தங்கியிருந்து சட்ட விஷயமாக விவாதித்துப் பரிசீலனை செய்து வந்தார்கள். தமது சமுதாயத்தினர்கள் சுயநலத்தின் காரணமாகச் சீர்திருத்தத்திற்கு இணங்காமற் போய்விடுவார்களோ என்ற கவலை பிள்ளையவர்களுக்கு இருந்தது.இக்கவலை மனத்திற் பட்டவுடன் ‘நாஞ்சினாட்டு வேளாளருக்கு ஒரு கோட்டை வினாக்கள்’ முதலிய பல துண்டுப் பத்திரங்களை வெளியிட்டார்கள். சமுதாயத்தின் பரிதாபகரமான நிலையைச் சித்திரித்துக் காட்டினால் தம்மவர்கள் உண்மை யுணர்ந்து சீர்திருத்த விஷயத்தில் ஒருமுகமாய் உழைப்பார்கள் என்று பிள்ளையவர்கள் கருதினார்கள். இதுதான் நாஞ்சினாட்டு மருமக்கள் வழி மான்மியத்தின் உற்பத்தியாகும்.

III

பிள்ளையவர்கள் வரைந்த சமுதாய சித்திரம் ஒரு நூதன இலக்கிய வகையை நமது தமிழ்மக்களுக்குக் கொடுத்தது. இவ் இலக்கிய வகையில் நகைப்பும் இகழ்ச்சியும் சோகமும் ஒன்றாகக் கலந்து வரும். பெரியதோர் பயனும் விளைவதாகும்.

மக்களுக்கு நகைப்பு-உணர்ச்சியும் இகழ்ந்துரையாடலும் இயல்பாகவுள்ளவையே. ஏதாவதொரு வகையிற் பொருத்தமற்ற மொழி அல்லது செயல் நிகழ்ந்துவிடத்து நகை யுண்டாகும். இலக்கண நூலார் நகைச்சுவை இன்னின்ன காரணங்களாற் பிறக்குமென்று அறுதியிட்டுரைப்பர். அக்காரணங்களை இங்கே ஆராயவேண்டும் அவசியம் இல்லை