உள்ளடக்கத்துக்குச் செல்

பாலைப்புறா/அத்தியாயம் 20

விக்கிமூலம் இலிருந்து

டாக்டர் சந்திராவால், ஓய்வு நாளிலும் ஓய்ந்திருக்க முடியவில்லை… இரண்டு நாளாக பிரெஞ்ச் விடுமுறையில் போன டாக்டர் முஸ்தபா, அன்றைக்கும் வரவில்லை. நோயாளிகளில் விபரம் தெரிந்த ஒரு சிலர், உரிமையோடு வீட்டுக்கே வந்து விட்டார்கள்… அவளுக்கு, வீட்டில் இருக்க முடியவில்லை. ‘கண்ணை மூடிட்டு இருந்துக்கோ’ என்று அம்மா சொன்னாள். அப்படியே கண்ணை மூடினாலும், இந்த சுகாதார நிலையமும், நோயாளிகளும் விழிகளைத் திறந்தார்கள். மூடும் போதெல்லாம், கண்ணுக்கும், இமைகளுக்கும் இடையே நின்றார்கள்.

சந்திரா சுறுசுறுப்பாய் இயங்கினாள். முஸ்தபா வருகிறாரா என்று அடிக்கடி வெளியே எட்டிப் பார்த்தாள். டாக்டர் அசோகனை, மத்தியானச் சாப்பாட்டிற்குக் கூப்பிட்டு இருக்கிறாள். அவனும், இவள் நிலைமையை தெரிந்து வைத்திருப்பவன் போல், ‘கேரியர்ல சாப்பாடு எடுத்துட்டு ஒங்க வீட்டுக்கு வாறேன்’ என்று அவர் புத்தியைக் காட்டிட்டார். அந்த புத்தியிலும், ஒரு புத்திசாலித்தனம் இருப்பது இப்போது புரிகிறது…

சந்திரா, நோயாளிக் கூட்டத்தை வெறுப்போடு பார்க்கவில்லை என்றாலும், சலிப்போடு பார்த்தாள். நல்ல வேளையாக, கூட்டம் அதிகமாக இல்லை; ஆயாக்களும், முஸ்தபாவும் விரட்டுற விரட்டலில், பாதிப் பேர் வருவதில்லை. இந்தப் பகுதியில், ஆரோக்கியம் அதிகரித்து விட்டதாக மேலதிகாரிகள் எடுத்துக் கொள்வார்கள்… பள்ளிக் கணக்கு புள்ளிக்கு உதவுமோ… இல்லையோ… புள்ளிக் கணக்கு, பப்ளிக்குக்கு உதவாது…

சந்திரா, ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு கை நாடி பார்த்தபோது, ஒருத்தர் அல்லோகலோல்லமாய் ஓடி வந்தார். நாற்பது வயதிருக்கலாம்… வெளிப்படையாக ஆரோக்கியமானவராய்தான் தெரிந்தார். பல ரத்த தான முகாம்களில் இவரைப் பார்த்திருக்கிறாள். பரோபகாரி என்று நினைத்திருந்தாள். அப்புறந்தான் குட்டு வெளிப்பட்டது.

“என்ன… குணசீலன், வேள கெட்ட வேளையில வந்து…”

“நான்… வாரது எப்பவுமே நல்ல வேளைதாம்மா… என்னோட ரத்தம் ‘ஓ’ குரூப் ரத்தம்மா… அதுவும் நெகட்டிவ்ம்மா… அபூர்வமான வகைம்மா… ஒரு பாட்டில் ரத்தத்தை எடுத்துட்டு… முந்நூறு ரூபாய் இருந்தால், கொடுங்கம்மா… ‘ஓ’ குருப் நெகட்டிவ்…”

“புளிச்சுப் போன பேச்சையே பேசாதீங்க மிஸ்டர்… ஒங்க ரத்தம் யாருக்கும் பயன்படாது… மொதல்ல வெளில போங்க… பேஷண்ட் பார்க்கிற நேரம்…”

“இந்தா பாரும்மா… போகச் சொல்லுங்க போறேன்… அதுக்காக என் ரத்தம் பிரயோசனப்படாதுன்னு மட்டும் சொல்லாதீங்க… டாக்டர் சுமதியே என் கிட்டத்தான் வாங்குவாங்க… அடுத்த வாரம் வரச் சொல்லி இருக்காங்க… போகட்டும்… ஒரு ஐம்பது ரூபாயாவது கொடுங்க… அடுத்த வாரம் சுமதி அம்மா கிட்டே ரத்தம் விற்று…”

“ஒரு பைசா தர மாட்டேன்… போகப் போறியா… இல்லையா…”

இப்போது, நோயாளிப் பெண்களில் ஒரு சிலர் எழுந்தார்கள். குணசீலனை நாயே, பேயே என்று திட்டினார்கள். சத்தம் கேட்டு உள்ளே வந்த கம்பவுண்டர், குணசீலனை அதட்டுவது போல் பாவலா செய்து கொண்டே, அந்த ஆசாமியை இழுத்துப் பிடித்து, நடத்திக் கொண்டே, அவர் காதுகளில் கிசுகிசுத்தபடியே நகர்ந்தார். சந்திரா துணுக்குற்றாள். அதோ போகிற குணசீலன், ஒரு எதிர் கால எய்ட்ஸ் நோயாளி… மாவட்ட மருத்துவ மனையில், ரத்தம் எடுத்த போது கண்டு பிடிக்கப்பட்டது… இது டாக்டர் சுமதிக்கும் தெரியும்… அப்படியும், இந்த ஆசாமியை வரச் சொல்லி இருக்காள்… ஒரு வேளை சாக்குப் போக்காக, இருக்கலாமோ… இருக்காது. அந்த பட்டுச் சேலை டாக்டருக்கு இதுதான் வேலையே… இந்த சுமதி கண்ணுக்கு தெரிந்த, விஸ்வரூபம் எடுத்த எய்ட்ஸ் கிருமி… ஆனால் இப்போது இவள் காட்டில்தான் மழை… இதுல விழுகிற ஐஸ் கட்டியை பொறுக்கி எடுத்து… ஆனானப்பட்ட டாக்டர்… அசோகன் தலையிலேயே வைக்கிறவள். சொன்னால், பெண்ணுக்குப் பெண் பொறாமை… டாக்டருக்கு டாக்டர் சண்டை என்பார்கள். இந்த குணசீலனால், எத்தனை அப்பாவிகளுக்கு எய்ட்ஸ் வந்ததோ… வரப்போகுதோ… என்னால்… செய்யுறதுக்கு எதுவுமே இல்லை.”

இந்த மனித சஞ்சாரத்தில், தான், அவ்வளவாய் முக்கியமில்லை என்பதை சந்திரா கசப்பு மாத்திரையாய் விழுங்கினாள். எப்படியோ எல்லா நோயாளிகளையும் ஒரு வழியாய் அனுப்பி விட்டு, அசோகனை வீட்டில் வரவேற்பதற்காக, அவள் புறப்பட்ட போது…

கலைவாணி உள்ளே வந்தாள்; விரிந்த குழல்; கலைந்த உடை… சிவப்பேறிய கண்கள்… வெறுமையான பார்வை…

டாக்டர் சந்திரா, பயந்து விட்டாள். இவள், சென்னையில் போட்ட போட்டுக்கே, இன்னமும் பிராக்ஸுவான் மாத்திரைகளை விழுங்கி வருகிறாள். இப்போ என்ன செய்யப் போறாளோ…

“உட்காரும்மா…”

“நான் உட்கார வர்ல… படுக்க வந்தேன்”

“மொதல்ல உட்காரும்மா…”

“எனக்கு மூணு மாசம், அபார்சன் செய்யணும்.”

“கண்டிப்பாய் செய்யுறேன்… கலைவாணி… இது… மேன்படுத்தப்பட்ட சுகாதார நிலையந்தானே… அதுக்கு இங்கேயே வசதி இருக்குது… உட்காரும்மா…”

ஒரு வாரம் இருக்கவும் படுக்கவும் இடம் கிடைத்த ஆறுதலில், கலைவாணி, சந்திராவைப் பார்த்தாள். லேசான புன்னகை… அவஸ்தைப்படும் நோயாளியிடம் சீக்கிரமாய் செத்துடுவே என்றால், எப்படி ஒரு புன்னகை வருமோ, அப்படி…

டாக்டர் சந்திரா, கலைவாணியின் தோளைத் தொட்டு, ஒரு நாற்காலியில் உட்கார வைத்தாள். இன்னும் பயம் போகவில்லை. கலைவாணியின் பார்வை அப்படி, மன உறுத்தலும் குறையவில்லை.

“இந்தா பாரும்மா… நான் வேணுமுன்னு அப்படி மறைக்கல. ஒன் புருஷனோட மச்சானாமே… மோகன்ராம்… அவன் மனோகரோட வந்து மிரட்டுன மிரட்டலுல பயந்திட்டேன். ராத்திரியோட ராத்திரியாய் தூக்கிட்டுப் போகப் போறதாய் வேற எச்சரித்தார். தனக்குப் போகத்தான் தானமோ… இல்லியோ, தன் உயிருக்குப் பிறகுதானம்மா, பிறத்தியார் உயிரு… சரி… ஒரு வாரம் ஒன்றாவே இருக்கப் போறோம். விபரமா சொல்றேன்… அதுக்குப் பிறகு என்னைக் குத்துவியோ… வெட்டுவியோ… ஒன் இஷ்டம்.”

கலைவாணி, நாற்காலி மேல் உட்கார்ந்த சடமானாள். மூச்சு விடுவது கூட மறந்தவள் போல், அந்த நாற்காலியில் புதுமையான மெத்தை போல் கிடந்தாள். சந்திரா, அவள் தோளைப் பிடித்து உலுக்கிய பிறகே, அவள் கண் விழித்தாள். ‘மோகன்ராமே! என் அம்மா கூடப் பிறந்த பெரியம்மா மகனே! நீயுமா அண்ணா? நீயுமாடா…?’

இரண்டு நிமிட இடைவெளிக்குப் பிறகு, சந்திரா கேட்டாள்.

“அபார்ஷன் செய்ய நான் தயார். அது தேவையா என்கிறதுதான் கேள்வி. ஏன்னா… ஒன் குழந்தைக்கு ஹெச்.ஐ.வி. இருக்கணும் என்கிற அவசியம் இல்ல… ஒரு சில எய்ட்ஸ் நோயாளியோட குழந்தைகளுக்கு இந்தக் கிருமிகளே இல்லை.”

“கேட்கிறதுக்கு… சந்தோஷமாத்தான் இருக்கு… அந்த துரோகிப் பயல் கொடுத்த பிள்ளைன்னு நான் அபார்ஷனுக்கு வர்ல… என் பிள்ளை என் பிள்ளைதான். அதுவும் முதலும் கடைசியுமான பிள்ளை.”

“இப்படித்தான் பாசிட்டிவா… எடுக்கணும்…!”

“அதுதான்… எல்லாருமா சேர்ந்து என்னை பாசிட்டிவ்வாய் ஆக்கிட்டீங்களே… ஒழியட்டும்… என் குழந்தைக்கு அது இருக்குதா…? இல்லியான்னு இப்பவே கண்டு பிடிக்க முடியுமா?”

“முடியாதும்மா… குழந்தை பிறந்த பிறகுதான் டெஸ்ட் செய்ய முடியும்… அப்படியே இருக்கிறதாய் தெரிஞ்சாலும், அது எய்ட்ஸ் கிருமின்னும் நிச்சயமாய் சொல்ல முடியாது… ஏன்னா, ஹெச்.ஐ.வி. கிருமிகளை முறியடிக்க நம் ரத்தத்திலேயே ஆன்டிபாடி என்கிற எதிரணுக்கள் உற்பத்தி ஆகுது. இந்த எதிரணுக்கள் தாயிடமிருந்து… குழந்தைக்கும் கூடவே வருது… இது பதினைந்து மாதம் வரை, குழந்தை உடம்பிலே இருந்துட்டு, அப்புறம் மறைஞ்சிடும்… எதிரணுக்கள் இருக்கிறதாலயே அது எய்ட்ஸா ஆகிடாது. பதினைந்து மாதத்துக்கு பிறகும், குழந்தை உடம்பிலே எதிரணுக்கள் இருந்தால், அது ஹெச்.ஐ.வி. நான் சொல்றது புரியுதாம்மா!”

“புரிய வேண்டாத அளவுக்கே புரியுது டாக்டர். ஒண்ணேகால், வருஷத்துக்குப் பிறகுதான்… என் குழந்தை இருக்குமா… போகுமான்னு தெரியும். அது வரைக்கும், நான் உயிரை கையில பிடிச்சிட்டு இருக்கணும்… அப்படியே அதுக்கு இல்லன்னு தெரிந்தாலும், யாரும் நம்ப மாட்டாங்க. அப்படியே நம்பினாலும், அந்தக் குழந்தை பத்து வருஷத்தில அநாதையாயிடும்… அதனால…”

“சரிம்மா… அபார்ஷன் செய்திடலாம்… மாலதி… மாலதி…”

கொண்டைக்கு உறை போல, வெள்ளைத் துணி கட்டிய ஒரு இளம் பெண் நிதானமாக நடந்தாள். என்னம்மா என்று கேட்டுக் கொண்டே வந்தாள். இந்த சந்திரா, இப்போதே சொல்லி விட்டால், அவள் பக்கத்தில் போக வேண்டிய நடை மிச்சமாச்சே…!

மாலதி வருவது வரைக்கும் வாயைத் திறக்காத சந்திரா, வந்ததும் சொன்னாள்.

“இவங்க பேரு… கலைவாணி… மூன்று மாசம்… அபார்ஷன் செய்யணும்… ஒரு பெட்ட ரெடி பண்ணுங்க…”

“அனஸ்தட்டிஸ்ட் இல்லியே டாக்டர்.”

“அதை நான்… பார்த்துக்கிறேன்… மாவட்ட மருத்துவ மனையில் இருந்து வரைவழைக்கலாம்… இது குடும்ப நலத் திட்டத்தோட புள்ளிக் கணக்கிலே ஒண்ணு கூடுமுன்னு, அனஸ்தடிஸ்டை அனுப்பி வைப்பாங்க… இன்னிக்கும், நாளைக்கும் இவங்க ரெஸ்ட் எடுத்துக்கட்டும். புதன் கிழமை அபார்ஷன்.”

நர்ஸம்மாவான மாலதி, கலைவாணியை ஒரு மாதிரியாகப் பார்த்தாள். தலையை ஆட்டி, ஆட்டிப் பார்த்தாள். சந்தேகப்படும் படியாய் பார்த்து விட்டு, சந்தேகத்தைக் கேட்டாள்.

“இவங்க… வெள்ளையன்பட்டிதானே டாக்டர்.”

“வெள்ளையன் பட்டியோ, கறுப்பன் பட்டியோ, எந்தப் பட்டியாய் இருந்தா என்ன சிஸ்டர்?… சீக்கிரமா பெட்ட ரெடி பண்ணுங்க… எனக்கு வீட்டுல தலைக்கு மேல வேலை…”

மாலதி, பிட்டம் குலுங்க நடந்தாள். யாரிடமாவது சொல்லா விட்டால், தலை வெடித்து விடும் போல் இருந்ததால், ஓட்டமும், நடையுமாக போனாள்.

இதற்குள், டாக்டர் சந்திரா, கலைவாணியிடம் நடந்த சங்கதிகளை ஒன்று விடாமல் ஒப்பித்துக் கொண்டிருந்தாள். இருபது நிமிடத்திற்கு மேல் ஆகியிருக்கும். அப்படியும் மாலதி வந்து ரெடி படுத்தியதைச் சொல்லவில்லை. தானே போய், ஒரு பெட்டை ஆயத்தப்படுத்துவதற்காக சந்திரா நினைத்த போது…

டாக்டர் முஸ்தபா எதிர்பட்டார். ஒப்புக்காவது, “ஐயாம் ஸாரி” என்று கையாட்டிக் கொண்டே வருகிறவர், பல்லைக் கடித்தபடியே வந்தார். பக்கத்து நாற்காலியில் உட்கார்ந்த கலைவாணியைப் பாராதது போல் பார்த்தபடியே, மேஜையைச் சுற்றி வந்து தனது நாற்காலியில் உட்கார்ந்தார். ரேக்கில் பேப்பர் வெயிட்டுக்குக் கீழே இருந்த இரண்டு நாள் விடுப்பு விடுமுறை விண்ணப்பத்தை சுக்கு நூறாக்கினார். அவர் எடுத்த வேகத்தில், பேப்பர் வெயிட் கீழே விழுந்து உருண்டு ஓடியது. சந்திராவும், அவரைக் கண்டு கொள்ளவில்லை… மாலதியையும் காணவில்லை. படுக்கையை ரெடி செய்வதற்காக, அவள் எழுந்த போது, டாக்டர் முஸ்தபா, அவளைப் பார்க்காமல், கடுகடுப்பாய்ச் சொன்னார். கலைவாணியைப் பார்த்து திடுக்கிட்டபடியே டாக்டர் சந்திராவிடம், எரிச்சலோடு சொன்னார்…

“நீங்க போகலாம் டாக்டர்…”

“போகத்தான் போறேன்… அதுக்கு முன்னால ஒரு வேலை இருக்குது.”

“என்ன வேலை”.

“மாலதி சொல்லி இருப்பாளே”.

“ஆமா… கேள்விப்பட்டேன்… ஒரு எய்ட்ஸ் நோயாளிக்கு எப்படி இங்கே அபார்ஷன் செய்யலாம்?”

“ஒரு சின்ன கரெக்‌ஷன்… இவங்க எய்ட்ஸ் நோயாளியாய் இன்னும் ஆகல… ஒங்களாலயும், என்னாலயும் ஹெச்.ஐ.வி. நோயாளியா ஆக்கப்பட்டவங்க.”

“அதிகப் பிரசங்கித்தனம் வேண்டாம். ஒரு எய்ட்ஸ் நோயாளிக்கு ஆபரேஷன் செய்ய முடியாது.”

“ஆபரேஷன் இல்ல… அபார்ஷன்… ஒரு பெண், தனக்கு குழந்தை வேண்டாமுன்னு சொல்லும் போது, அதை நிறைவேற்றாமல் இருப்பது, சட்டப்படியான குற்றம்.”

டாக்டர் முஸ்தபா எழுந்து விட்டார். வீறாப்பாய் அவர் பேச, வீம்பாய் இவள் பதிலளிக்க, ஊழியர்களில் அன்று வந்திருந்த கால்வாசிப் பேர் அங்கே கூடி விட்டார்கள்.

“இங்கே அபார்ஷன் செய்து, இவங்களுக்கு ஏற்படுற ரத்தப் போக்குல, ஒங்களுக்கும், எனக்கும் இங்கே இருக்கிற எல்லாருக்கும் எய்ட்ஸ் பரவணுமா?”

“நீங்கள்லாம்… ஒரு டாக்டரா மிஸ்டர் முஸ்தபா… ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே வேலை பார்க்கிற டாக்டருங்களுக்கு, மூளை போயிடுமுன்னு ஆஸ்பத்திரி டாக்டருங்க சொல்றது சரியாத்தான் இருக்கு”.

“எனக்கு மூள இல்லங்கறியா?”

“நீ நான்னு எனக்கும் பேசத் தெரியும் டாக்டர்… அபார்ஷன் செய்யும் போது… இரண்டு கையிலயும், உறைகளை போடுறோம்; முகத்தையும் மூடிக்கிறோம். இதையும் மீறி ஆண்டி செப்டிக்ல கையைக் கழுவுறோம். வெளியில கால் மணி நேரம் கூட வாழ முடியாத கிருமி. ஹெச்.ஐ.வி. கிருமி; அதுங்க உடனே செத்துடும். இந்த ஆரம்ப பாடம் ஒரு டாக்டருக்கு நிச்சயம் தெரிந்திருக்கணும்…”

“என்ன ஆனாலும் சரி… நான் இதை அனுமதிக்க முடியாது.”

“ஒரு ஆயிரம் ரூபாய் கொடுத்தால்…”

டாக்டர் சந்திரா, அப்படிச் சொல்லி விட்டு, நாக்கைக் கடித்தாள். இதற்குள் குத்த வேண்டிய இடத்தில் குத்துப்பட்டதால், முஸ்தபா வலி பொறுக்க முடியாமல் கத்தினார். வார்த்தைகள் வராமலே, பிடிபட்ட பன்றி மாதிரி கத்தினார். கம்பவுண்டர் அவரைப் பிடித்துக் கொண்டே, சந்திராவை பயமுறுத்துவது போல் பார்த்தார். உடனே அவள் பார்த்த ‘இரண்டில் ஒன்று’ மாதிரியான பார்வையில், பயந்து போனார்… பக்குவமாய்க் கேட்டார்.

“டாக்டர்… அய்யா சொல்றதிலயும், ஒரு அர்த்தம் இருக்குங்கம்மா. இவங்களை கடிக்கிற கொசுவோ… மூட்டைப் பூச்சியோ, எல்லாரையும் கடிக்கும்… அப்போ இவங்க உடம்பு ரத்தம்… நம்ம உடம்புக்கு வருமே… இதுக்கு என்ன சொல்றீங்க?”

“அரைகுறை அறிவு ஆபத்து சார். அரைக் கிணறு தாண்டுறது மாதிரி… கொசுவுக்கோ, மூட்டைப் பூச்சிக்கோ… ஒருத்தரோட ரத்தத்தை எடுக்க தெரியுமே தவிர, கொடுக்கத் தெரியாது. ரத்தத்தை இதுங்க உள் வாங்குமே தவிர, வெளிப்படுத்தாது…”

“அப்போ… மலேரியா எப்படி வருதாம்? கொசுதானே அதற்கு காரணம்!”

“நல்லா கேட்டிங்க… மலேரியா நோய்க்கு காரணமான ஒரு வகை கொசுக்களோட உமிழ் நீரில், பிளாஸ்மோடியம் என்கிற மலேரிய ஒட்டுண்ணி இருக்குது. கொசு ஒருத்தரை கடிக்கு முன்னால, அவர் உடம்பிலே துப்பிட்டு, அப்புறந்தான் கடிக்குது. அந்த ஓட்டை வழியா இந்த எச்சியில் இருக்கிற ஒட்டுண்ணிங்க… கடிப்பட்டவர் உடம்புக்கு உள்ளே போயிடுது. சரி… கொசு கடிச்சு, அதோட ரத்தம் நம்ம உடம்புக்குள்ளே போகாதுதான்… அதே சமயம், எய்ட்ஸ் நோயாளியை கடித்த அந்தக் கொசுவோ, மூட்டைப் பூச்சியோ இன்னொருத்தரை கடிக்கும் போது, அவரு அதை நசுக்கி, இதனால அவரோட உடம்புக்குள், ரத்தத்தில் இந்த கொசு ரத்தம் கலந்து, எய்ட்ஸ் கிருமி போகலாமேன்னு ஒரு சந்தேகம் வந்து, இதையும் ஆராய்ச்சி செய்தாங்க. அப்படி ஏதும் இல்ல… காரணம் எய்ட்ஸ் கிருமி மனித உடம்பு ரத்தத்தில மட்டுமே உயிர் வாழும். கொசு வயித்துக்குள்ளே போன உடனேயே செத்துடும். ஒரு கம்ப்யூட்டர் எஞ்சினியர், அந்தத் துறையில் நடக்கிறதை ஆறு மாதம் கவனிக்கா விட்டால், அவர் அவுட்டு… தொடர்ந்து படிக்காட்டால், தொலைஞ்சிடுவாங்க. ஆனால் நாங்க டாக்டருங்க… அப்படி இல்ல. எங்க துறையில் என்ன நடக்குதுன்னு தெரியாமலே, பிழைப்பை நடத்தலாம். ஊசி போட்டு போட்டே, ஊசிப் போயிட்டோம். தொடர் கல்வி என்கிறது டாக்டர்கள் கிட்ட கிடையாது… எய்ட்சுன்னா… உதவின்னு அர்த்தப்படுத்துவாங்க.”

கம்பவுண்டர் ஆசாமி, முழு டாக்டரானது போல் தலையை ஆட்டிய போது, முஸ்தபா, பேண்ட் நழுவும்படிக் கத்தினார்.

“என்ன ஆனாலும் சரி… இங்க அட்மிட் பண்ண அனுமதிக்க மாட்டேன். நான், இன்சார்ஜ் டாக்டர். பத்தாண்டு சர்வீஸ்… இங்கே இருக்கிற ஊழியர்களையும், நோயாளிகளையும், காப்பாற்ற வேண்டியது என்னோட கடமை… டூட்டி… ஆப்ளிகேஷன், ஒங்களை மாதிரி கத்துக்குட்டி டாக்டர் இல்ல… நான்.”

“ஒங்க லட்சணம். நல்லாவே தெரியும் டாக்டர். மெட்ராசுக்கு போகிற அவசரத்தில் சண்முக வடிவுக்கு டுபெக்டமி செய்யும் போது காப்பர்-டியை உள்ளே தள்ளிட்டிங்க… அவள் வயிறு வீங்கிச் செத்துப் போனது. இங்கே இருக்கிற எல்லாருக்குமே தெரியும்.”

“யானைக்கும், அடி சறுக்கும். ஆனால், ஒங்களை மாதிரி, டாக்டர்… அசோகனோட கூத்தடிக்கல…”

“கூத்தடிக்கேனா… கூத்தடிக்காரோ. கீழே வேலை செய்யும் பெண்களை, உருட்டி மிரட்டி, அசோகன் ஒண்ணும் அவங்களை கூத்தியாரா ஆக்கல…”

கற்பழிக்கும் போதே, கையும் களவுமாய் அகப்பட்டது போல், முஸ்தபா முண்டியடித்தார். கம்பவுண்டர், அவருக்கும் சந்திராவுக்கும் இடையே போய் நின்று கொண்டார். இன்சார்ஜ் டாக்டர் ஆவேசமாய் பேசினார்.

“நீ… ஒரு இன்சார்ஜ் டாக்டர் கிட்டே பேசிட்டு இருக்கே… என் அனுமதி இல்லாமல், எதுவும் நடக்காது. இவளை… அட்மிட் செய்ய முடியாதுன்னா முடியாதுதான்.”

“அதையும்… பார்த்துடலாம். நீங்க இன்சார்ஜ் என்கிறதாலயே, சர்வாதிகாரியா ஆக முடியாது. நானும் ஒரு டாக்டர். லீவ் லட்டரை கிழித்துப் போடாத டாக்டர். மருத்துவ நிலைய மருந்தை, பிரைவேட் பிராக்டிஸ்க்கு எடுத்துட்டுப் போகாதவள்… ஏய்… மாலதி… பெட் ஏன் இன்னும் ரெடியாகலே…”

தொலைவில் நின்ற மாலதி, சண்டை நடக்கும் இடத்தை நோக்கி, கோபக் கோழியாய் நடந்து வந்தாள். ஏழெட்டு நோயாளிகளைக் கூட்டி வந்தாள். இந்த மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையத்தில், அவர்கள் உள் நோயாளிகள்… அவர்களைப் பார்த்ததும், பயந்து போன முஸ்தபா. மாலதி கண்ணடித்ததும், மதர்ப்பாய் நின்றார். சந்திரா, மாலதியின் போர் வியூகம் புரியாமலே நின்றாள். கலைவாணியோ, நாற்காலியில் பின்புறமாய் வளைந்து, கைகளால் முகத்தை மூடிக் கொண்டாள்.

ஒரு பிரசவப் பெண், ஒரு மலேரியா மனிதர், ஒரு எஸ்.டி.டி. ஆசாமி உள்ளிட்ட பல நோயாளிகள், டாக்டர் சந்திராவையும், கலைவாணியையும் மாறி மாறிப் பார்த்துக் கூக்குரலிட்டார்கள்.

“என்னம்மா… நெனைச்சிக்கிட்டே? நாங்களும் இவளை மாதிரி ஆகணுமா? இது ஆஸ்பத்திரியா… இல்ல சுடுகாடா…? மொதல்ல எங்களை விரட்டிட்டு, அப்புறமாய் இவளை சேர்த்துக்கோ… ஒனக்கு எவ்வளவு கமிஷன் கொடுத்தாடி… வாங்க… பெரிய டாக்டர்… கிட்டே போவோம். அய்யோ இவள சேர்க்கணுமுன்னு சொல்றவள், நமக்கு, மருந்துக்குப் பதிலாய் விஷத்தைக் கூட கொடுப்பாளே… நான் வீட்டுக்கு ஓடிப் போகப் போறேன்… சர்க்கார் ஆஸ்பத்திரிக்குப் போகாத போகாதே… அது ஆஸ்பத்திரி இல்ல…. அசல் கசாப்புக் கடைன்னு என் வீட்டுக்காரர் சொன்னது சரியாப் போச்சே.”

பிரசவப் பெண், அங்கேயே பிள்ளை பெறப் போவது போல், கால்களை விரித்து வைத்துக் கொண்டு, தன் வாயிலும், வயிற்றிலும் அடித்தாள். மலேரியா மனிதரும், ஒரு பொம்பளை நோய்க்காரனும், இன்னொரு சிறுவனும், சந்திராவை, கேரோ என்பதைக் கேள்விப்படாமலே, சுற்றி வளைத்தார்கள். ஒரு நடுத்தர வயது மனிதர், அவளை அடிப்பதற்காக கையைக் கூட ஓங்கினார். சந்திரா கொடுத்த வைட்டமின் மாத்திரை, அப்படி அவரைத் துள்ள வைத்தது. இதற்குள் அப்போதுதான் வார்டில் இருந்து வந்த இரண்டு பெண்கள், கலைவாணியின் தலையைத் தூக்கி நிறுத்தி, ‘இவளுக்குத்தான் புத்தியில்ல… உனக்கு எங்கேடி போயிட்டு? எங்களை கொல்றதுக்கின்னே வந்தியா… போடி… போய்த் தொலையடி’ என்றார்கள். இந்த அமளியிலும், அபார்ஷனுக்காக வந்திருக்கிற ஒரு இளம் பெண்ணும், காலில் கட்டுப் போட்ட ஒரு பெரியவரும் அமைதி காத்தார்கள். கலைவாணியைக் கருணையோடு பார்த்தார்கள். பெரியவர் கேட்டார்.

“நன்றி கெட்டு… பேசாதீக… சனங்களா… சந்திராம்மா… நம்மை எப்படில்லாம் கவனிக்கிறாங்க… நாளைக்கு நமக்கு ஏதாவது ஆகுமுன்னா… இந்த பெண்ணை சேர்ப்பாங்களா.”

“ஒனக்கென்ன… ஒனக்கு கட்டையில போற வயசு…”

அந்த நோயாளிக் கூட்டம், அந்தப் பெரியவரை அடிக்கப் போனது. இத்தனைக்கும் இடையே, சந்திராவுக்கு சிரிப்பு கூட வந்தது. ஏசு பிரான் சொன்னது போல், இவர்கள் தாங்கள் என்ன செய்கிறோம் என்பதை அறியாமலே செய்கிறார்கள். இவர்களுக்கு ரட்சிப்பு உண்டு… இதோ இவர்களை ரசித்துப் பார்க்கும் இந்த முஸ்தபா பேடிக்கு… எதுவுமே இல்லை… நிர்வாணமா அலையக் கூட யோக்யதை இல்லாதவன்.

டாக்டர் சந்திரா, அந்த நோயாளி கூட்டத்திடம் போனாள்… ‘சொல்வதைக் கேளுங்க…’ என்று கத்தினாள். நோயாளிக் கூட்டம், லேசாய் அமைதிப்பட்டது. அவள் பேசுவதற்கு காது கொடுக்கப் போனது. அதற்குள், அந்த மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார மைய ஊழியர்கள் ஒன்று திரண்டார்கள். கம்பவுண்டர்…, கிளார்க்…, நர்சுகள், ஆயாக்கள், சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார பார்வையாளர்கள், இவர்களுக்கு தலைமை வகித்த மாலதி, இன்சார்ஜ் முஸ்தபாவிடம், தானைத் தலைவியாய் பேசினாள்.

“நாங்க குடும்பத்தோட இருக்கிறவங்க… டாக்டர். இந்த அம்மாவைப் போல, தனிக்கட்டை இல்ல டாக்டர்… எங்களுக்கு குழந்தைங்க இருக்கு. புருஷன் பெண்டாட்டின்னு இருக்கு… நாங்க இங்கே சம்பளம் வாங்கதான் வேலை பார்க்கோமே. தவிர, எய்ட்ஸ் வாங்க இல்லே.”

டாக்டர் முஸ்தபா, எல்லோரையும் கையமர்த்தினார். ‘பொறுங்க, பொறுங்க… என்னை மீறி எதுவும் நடக்காது’ என்றார். பிறகு சந்திராவைப் பார்த்து, இளக்காரமாகக் கேட்டார்.

“இப்போ, என்ன சொல்றீங்க… டாக்டர். இதுக்குப் பிறகும், இந்தப் பெண்ணை சேர்க்கணுமுன்னு சொல்லப் போறீங்களா?”

டாக்டர் சந்திரா, கைகளைப் பிசைந்தாள். அதற்குள் கலைவாணி, முந்தி விட்டாள். அவள் வாய் கோணியது. பார்வை, சாய்வாகி, கூர்மைப்பட்டது. கீழே கிடந்த பேப்பர் வெயிட்டை எடுத்துக் கொண்டு, பல்லைக் கடிக்க, கால் காலை உதைக்க, டாக்டர் முஸ்தபாவின் தலைக்குக் குறி வைத்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பாலைப்புறா/அத்தியாயம்_20&oldid=1639240" இலிருந்து மீள்விக்கப்பட்டது