உள்ளடக்கத்துக்குச் செல்

பாலைப்புறா/அத்தியாயம் 19

விக்கிமூலம் இலிருந்து

வாங்க மாமா!”

அந்த அறையில் இருந்து தப்பித் தவறி வெளியே வந்த கலைவாணி, திண்ணையில் நின்றபடியே, அண்ணனின் மாமனார் ஆறுமுக நயினாரை வரவேற்றாள். பிறகு, துக்கம் விசாரிக்க அவர் வந்திருப்பதாக அனுமானித்து, தூணைப் பிடித்தபடி தலை கவிழ்ந்து நின்றாள். அவரது ஆறுதல் வார்த்தைகளைக் கேட்க ஆயத்தமாய் நிற்பது போல் நின்றாள். ஆனால், ஆறுமுக நயினார் அவளைப் பார்க்காமலே ‘உம்’ என்று முற்றத்திலேயே நின்றார். இதற்குள், கட்டிலில் சாய்ந்திருந்த சுப்பையா, பக்கத்தில் கிடந்த நாற்காலியை தள்ளி விட்டு ‘உட்காரும்வே’ என்றதும், ஆறுமுக நயினார் திண்ணை ஏறினார். அதற்குள், மண்வெட்டிக் கணையை, சக்கை வைத்து சுத்தியலால் சரிப்படுத்திக் கொண்டிருந்த கமலநாதன், அந்த மண்வெட்டியைத் தூக்கிப் போட்டு விட்டு, மாமாவை பொருட்படப் பார்த்தான். வட்டக் கண்ணாடியை முகத்துக்கு முன்னால் நிறுத்தி, பிளாஸ்டிக் பொட்டை நகர்த்திய குழல்வாய் மொழி, கையோடு ஒட்டிய பொட்டுப் பிளாஸ்டிக்கைக் கவனிக்காமலே, வெளியூரில் இருந்து வேர்க்க விறுவிறுக்க வந்த தந்தையை செல்லமாகக் கோபித்தாள்.

“ஒண்ணு காலையிலே வரணும்... இல்லன்னா சாயங்காலமாய் வரணும். இப்படியா உச்சி வெயிலுல வாரதுப்பா... அம்மா எப்படி இருக்காங்க”

ஆறுமுக நயினார் எதுவும் பேசாமல், மகளை ஒரு முறைப்பு - பெரு முறைப்பாய் முறைத்தார். பனையைக் குடைந்தது மாதிரி நரைத்த தலை... உள் வளைந்த மனிதர்; தகரம் போலான உடம்பு… இவருக்கு இப்படி ஒரு அழகான பெண் எப்படிப் பிறந்தாளோ என்று ஊர் பேசும் மனிதர்; வீராப்பாகவே இருந்தார். இதற்குள், சமையலறையில் இருந்து அடுப்புக் கரித் தலையோடு உள்ளே வந்த சீனியம்மா, அவரிடம் முறையிட்டாள்.

“எங்களுக்கு… வந்திருக்கிற கொடுமையைப் பாத்திங்களாஅண்ணாச்சி! ஒங்கள மாமான்னு வாய் நிறையக் கூப்பிடுற ஒங்க மருமகளைத் தேடி வந்த அக்கிரமத்தைப் பாத்தீங்களா அண்ணாச்சி".

ஆறுமுக நயினார், அப்படியும் அசையவில்லை. அப்போது பார்த்து கலைவாணி, ஒரு தட்டில் மோர் ததும்பும் டம்ளரைக் கொண்டு வந்தாள். அந்த டம்ளரைக் கையால் தூக்கி, மாமாவிடம் நீட்டினாள். உடனே அந்த மாமாவான ஆறுமுக நயினார், சற்று தொலைவாய் உள்ள இன்னொரு நாற்காலியில் போய் உட்கார்ந்தபடியே, முதல் முறையாக வாயைத் திறந்தார். “நீயெல்லாம், காபி… மோர்ன்னு கொண்டு வரப்படாதும்மா… சாதம் கூடப் பரிமாறப்படாது… ஏன்னா… நோய் அப்படிப்பட்ட நோய்.”

மாமா, தான் ஒய்வெடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை, அப்படிச் சொல்வதாக நினைத்த கலைவாணி, அவரை நன்றியோடு பார்த்துக் கொண்டு, அவரை நோக்கி நடந்தாள். அவர், இப்போது சிறிது கோபப்பட்டே பேசினார்.

“ஒட்டுவார் ஒட்டி நோய்க்காரி, இப்படி எதையும் கொடுக்கப் படாதும்மா. படிச்ச பொண்ணுக்கு இது கூடவா தெரியல?”

கலைவாணி, காதுகளை உள்முகமாய் அடைத்துக் கொள்வது போல், மூச்சை நிறுத்தினாள். பிறகு, தட்டையும், மோரையும் முற்றத்தில் வைத்து விட்டு, தனது அறைக்குள் ஓடிப் போனாள். ‘எங்க ஊரையும் வந்து திருத்தும்மா… எல்லாப் பயல்களும், பய மகன்களும், கழுத களவாணிப்பய பிள்ளைகளாயிட்டு’ என்று முன்பு பல தடவை சொல்லி இருக்கும் இந்த மாமா… இப்போது ஒரு கழுதையை விடக் கேவலமாய் தன்னை கருதுவதைக் கண்டு, அவள் அந்த அறையில், மூலையில் சாய்ந்தாள். அம்மாக்காரியும் சம்பந்தியைச் சுட்டெரிப்பது போல் பார்த்து விட்டு, மகள் மருவும் அறைக்குள் பரிதவித்துப் போனாள்… இன்னமும் எதுவுமே நடக்காதது போல் முகம் காட்டிய சுப்பையா, ஆறுமுக நயினாரை, ஆழம் பார்த்தார்.

“என்னவே திடுதிப்புன்னு இப்படி”

“என் மகளையும், மருமகனையும் பேரப்பிள்ளையோடு கூட்டிட்டுப் போகலாமுன்னு வந்தேன்…”

“அம்மன் கொடைக்கு வரிப் போட்டாச்சா? நான் வரப்படாதா?”

“நல்லாவே வாரும், ஆனால் ஒம்மால… மகள விட்டுட்டு வர முடியுமா?”

“என்னவே ஆடு புலி ஆட்டம் ஆடுறீரு…?”

“ஆடுகள… புலி அடிக்கு முன்னால, அதைப் பத்திக் கிட்டு போறதுதானே நியாயம்?”

“புரியும்படியாத்தான் பேசுமே…”

“இதுக்கு மேலே எப்படி புரிய வைக்கிறது…? என் மகளையும், மருமகனையும் என் வீட்டுக்குக் கூட்டிப் போறேன். குழல்! புறப்படும்மா. மாப்பிள்ளை ஒம்மையுந்தான்…”

சுப்பையா, ஆடிப் போனார். ஆறுமுக நயினார், ஏதோ ஒரு குண்டோடு வந்திருப்பதை அவர் புரிந்து கொண்டாலும், இது இப்படிப்பட்ட அணு குண்டாக இருக்கும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை…

“வே… மச்சான்… புத்தி சுவாதீனத்தோடுதான் பேசுறீரா?”

“புத்தி இருக்கிறதாலதான்… இப்படிப் பேசுறேன்… கலைவாணிக்கு வந்திருக்கிற இந்த நோய், மரம் விட்டு மரம் தாவுற குரங்கு மாதிரி… நாலையும் யோசித்து விட்டுத்தான் இங்க வந்தேன். கலைவாணியை ஒதுக்குப் புறமாய் வையுங்கன்னு சொல்றதுக்கு எனக்கு உரிமை கிடையாது. ஆனால், நான் கண்ணுக்கு கண்ணாய் வளர்த்த என் மகளையும், அவளை பிடித்து அக்கினி வலம் வந்த மாப்பிள்ளையையும், ஆண் வாரிசு இல்லாத எனக்குக் கொள்ளி போடப் போகிற பேராண்டியையும் கூட்டிக்கிட்டுப் போறதுக்கு எனக்கு உரிமை உண்டு.”

“இப்படிப் பேச… ஒமக்கு எப்படிவே மனசு வருது?”

“நானா… வேணுமுன்னு பேசறேன்?… அந்த நோய் அப்படிப்பட்ட நோய்… எங்க ஊர் எம்.பி.பி.எஸ். டாக்டர் கிட்டயும் கேட்டேன். இந்த மாதிரி நோயாளியோட எச்சில் பட்டாலே போதுமாம். அவங்க ஒதுங்கிற இடத்தில நாம் ஒதுங்கினால், அதுவே எமனாம். குணப்படுத்தக் கூடிய காலரா, மலேரியாவே, பிறத்தியாரைத் தொத்திக்கு முன்னால், உயிரையே குடிக்கிற இந்த நோய் சும்மா விடுமா…?”

“சரிவே… வாதத்துக்காகவே பேசுவோம்… கலைவாணியோட ஒம்ம மகளும், ஒம்ம மருமகனும், ஒரு வாரமா பழகுறாங்க… இந்நேரம் அந்த நோய் அவங்களையும் பிடிச்சிருக்காது… என்கிறது என்ன நிச்சயம்? இது ஒங்க கணக்குப்படி, என்கணக்குப்படி இல்ல… இவங்களுக்கு அது வந்திருந்தாலும், கூட்டிக்கிட்டுப்போவீரா?”

ஆறுமுக நயினார், என்ன பேசுவது என்று புரியாமல் தடுமாறினார். கமலநாதன், கலைவாணி இருந்த அறையைக் கோபங் கோபமாய் முறைத்தான். குழல்வாய்மொழி, இனி மேல் அந்த வீட்டில் இருப்பதில்லை என்று தீர்மானித்தவள் போல், தந்தையின் பக்கம் போய் நின்றாள். அதிரடியில் இறங்கும் பலராமன் கூட, தனக்கு சம்பந்தமில்லாதவர்கள் சண்டை போடுவது போல் அனுமானித்து, கையைக் கட்டி, கண் மூடி நின்றான். அதற்குள்ளாகவே…

சீனியம்மா, அந்த அறையில் இருந்து, கலைவாணியின் கையைப் பிடித்து தரதரவென்று இழுத்து வந்தாள். யந்திரம் போல், தான் இழுத்த இழுப்புக்கு வந்த மகளை, ஆறுமுக நயினார் முன்னால் கொண்டு போய் நிறுத்தினாள்; பின்னர் அலறியடிக்காமல், ஆணித்தரமாய்ப் பேசினாள்.

“இந்தாங்க… அண்ணாச்சி. கேட்கக் கூடாததை எல்லாம் கேட்ட பிறகு, இவள் இருக்கப்படாது. உயிரோட லாந்தப்படாது. இவளை உங்கக் கையாலயே கொன்னுடுங்க. இல்லன்னா, ஒங்க கையாலயே அவளைக் கழுத்தைப் பிடிச்சி வெளிய தள்ளுங்க… நாங்க ஏன்னு கேட்கல”

சீனியம்மா, சதைப் பொம்மையாய் நின்ற மகளைக் கட்டிப் பிடித்துக் கேவினாள். ‘வாம்மா… நாம ரெண்டு பேருமாய் ஆற்றுலே, குளத்தில விழுந்து சாகலாம்’ என்று மகளைப் பிடித்து இழுத்தாள். இதனால், ஆறுமுக நயினாரின், மனம் இளகுவதற்கு பதிலாய் இறுகியது. இந்த இறுக்கம் பேச்சிலும் ஒலித்தது.

“வாதத்துக்கு மருந்துண்டு, பிடிவாதத்துக்கு மருந்தில்லை. குழல் புறப்படு… மாப்பிள்ளை நடங்க… ஒப்பாவோட சொத்தும் வேண்டாம், சுகமும் வேண்டாம். கையும், காலும் கதியாய் இருந்தால் போதும்”

குழல்வாய் மொழியும், கமலநாதனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். ஆறுமுக நயினாரை எதிர்த்துக் கூட பார்க்கவில்லை, சுப்பையாதான், மனம் பொறுக்க முடியாமல், மன்றாடினார்.

“கலைவாணி… ஒமக்கும் மகள் மாதிரிதான் மச்சான். இப்படி அரக்கத்தனமாய், பேச… உமக்கு எப்படித்தான் மனம் வருதோ…ஒம்ம மகளா இருந்தால்…”

“என் மகளாய் இருந்தால்… இநநேரம் ஊருக்கு புறமாய் ஒரு குடிசை போட்டு வைப்பேன். இவளுக்கு வந்தது எல்லாருக்கும் வரணுமுன்னு அறிவு கெட்டதனமாப் பேச மாட்டேன்… வஞ்சகமாய் நினைக்க மாட்டேன்.”

பலராமனால், இப்போது பொறுக்க முடியவில்லை… ஆறுமுக நயினாரின் அருகே வந்து, மிரட்டும் குரலில் பேசினான்.

“மாமா… வார்த்தைய அளந்து பேசுங்க… எங்கப்பாவை கேவலமா பேசுற எவனும் உயிரோட போக மாட்டான்.”

கமலநாதனுக்கு கோபம் வந்தது. தம்பியின் அருகே போய், அவனை அடிப்பதற்காக கையை ஓங்கியபடி, “பெரியவங்க, சின்னவங்க என்கிற மட்டு மரியாதை இல்லாமலா பேசுறே. எங்க மாமனார் பேசுறதில என்ன தப்பு” என்றான். ஓங்கிய கையை கீழே போடாமலே, தம்பியை அதட்டினான்.

“இதுக்கு மேல பேசுனே, பிச்சுப்பிடுவேன் பிச்சு…”

“எங்கே அடி பாக்கலாம்?”

“மாமா… புறப்படுங்க… ஏன்டி ஒன்னத்தான்… ஏன் அசையாமல் நிக்கே… ஒன்னை எனக்குத்தான் கட்டிக் கொடுத்திருக்கு… இந்தக் குடும்பத்துக்கு இல்ல; புறப்படு. இவன் நம்ம அடிக்கும் முன்னாலயே போயிடலாம்.”

குழல்வாய்மொழி, புருஷனோடு புறப்பட்டாள். அப்போதுதான், அவளுக்கு குழந்தை ஞாபகம் வந்தது. மாட்டு தொழுவத்திற்கு அருகே உள்ள அறையில், தொட்டியில் தூங்கும் மகனை எடுப்பதற்காக நடந்தாள். இதைப் புரிந்து கொண்ட சீனியம்மா, மருமகளுக்கு முன்னால் ஓடி, குழந்தையைத் தூக்கி தோளில் போட்டாள். அதுவும் விழிப்பு தட்டி, அழுவதற்குப் பதிலாக, பாட்டியின் தலையில் விரல் விடப் போனது. இதனால், குழல்வாய்மொழி தயக்கம் காட்டிய போது, கமலநாதன் தாயின் பக்கமாய் போய், குழந்தையைப் பற்றினான். உடனே சீனியம்மா, முரண்டு பிடித்துக் கத்தினாள்.

“வேணுமுன்னா, என்னை அடிச்சுக் கொன்னுட்டு, என் பேரனைத் தூக்கிட்டுப் போடா.”

கமலநாதன், அம்மாவை அடிக்கவும் முடியாமல், குழந்தையைப் பிடிக்கவும் முடியாமல் அல்லாடிய போது, பலராமன் அம்மா பக்கம் போய், கையிரண்டையும் நீட்டினான். அந்தக் குழந்தையும், சித்தப்பா பக்கமாய்த் தாவியது. இளைய மகனிடம், பேரப் பிள்ளை பத்திரமாக இருப்பான் என்ற நம்பிக்கையில், சீனியம்மா குழந்தையை சரித்தாள். தோளுக்குள் வந்த குழந்தையின் முதுகை, சிறிது நேரம் தட்டிக் கொடுத்த பலராமன், பின்னர் அந்தப் பிள்ளையை, அண்ணனிடம் ஒப்படைத்தான். இப்போது குழல்வாய்மொழிக்கே கோபம் வந்தது.

“வாங்கப்பா… இவன் கழுத்தப் பிடிச்சி தள்ளு முன்னாலயே, நாம போயிடலாம்.”

சுப்பையா, கீழே குதித்தார். பலராமன் கன்னத்திலும், கழுத்திலும் மாறி மாறி அடித்தார். “சண்டாளப் பயலே… அவங்க போறதுக்கு சாக்கு கொடுத்திட்டியேடா… சாக்காய் ஆயிட்டியேடா” என்று அரற்றினார். இதையே ஒரு துக்கப் பின்னணியாக அனுமானித்து, ஆறுமுக நயினார் நடக்க, நடக்க, கமலநாதனும், குழல்வாய்மொழியும் நகர்ந்தார்கள். என்னமோ நடக்குது என்பது மாதிரி, திண்ணைத் தூணில் உடல் சாய்த்து நின்ற கலைவாணி, முற்றத்திற்கு தாவினாள். ஆறுமுக நயினார் முன்னால் வழி மறிப்பது போல் நின்றாள். பிறகு, தரையில் நெடுஞ்சாண் கிடையாய் விழுந்து, அண்ணனின் மாமனாரை சுமக்கும் கால்களை கட்டிப் பிடித்தபடியே புலம்பினாள்.

“இன்னைக்கி ஒரு ராத்திரி மட்டும் டயம் கொடுங்க மாமா… நான் நாளைக்கு காலையிலேயே போயிடுறேன் மாமா… நானும் மனுஷிதான் மாமா… ரத்தம் தவிர, வேறு எந்த வழியிலும் இந்த நோய் பரவாது மாமா… அதனாலதான் இங்கே இருந்தேன் மாமா… இப்போ புத்தி வந்துட்டு மாமா… ஒரே ஒரு ராத்திரி மட்டும், என் அண்ணன், தம்பி வீட்ல இருக்க அனுமதி கொடுங்க மாமா…”

கமலநாதனாலயே தாள முடியவில்லை. தங்கையைத் தூக்கி விட்டான். அவனுக்கு, அவள் போய் விடுவாள் என்பதில் பாதி சந்தோஷம்; அப்படிப் போகிறாளே என்பதில், மீதி வருத்தம்… ஒரு ஆட்டை அறுக்கும் போது வருந்தினாலும், அதை மஞ்சள் மசாலாவோடு தின்னும் போது சந்தோஷப் படுகிறோமே, அப்படிப்பட்ட துக்கம்… மகிழ்ச்சி அவனுக்கு…

ஆறுமுக நயினாரே, இப்போது கலைவாணிக்குப் போகும் இடத்தை சொல்லிக் கொடுத்தார்.

“வேற எங்கேயும் போக வேண்டாம்மா… ஒன்னை இந்தக் கதிக்கு கொண்டு வந்தவன், வீட்டுக்குப் போ… அங்கே இருக்கவங்க தடுத்தால், ஊர்ப் பஞ்சாயத்த கூட்டுவோம்… என்ன மச்சான்… நான் சொல்றது”

சுப்பையா, எதுவும் பேசவில்லை… அறையை நோக்கி நடந்த கலைவாணியைக் கட்டியணைத்து, விம்மினார். “பாவிப்பய மகளே, இந்த வீட்ல பிறக்கறதுக்குப் பதிலாய், வேறு எந்த வீட்லயாவது பிறக்கப்படாதா?” என்று சரஞ்சரமாய்க் கண்ணீர் விட்டார். தந்தையை மெள்ள விலக்கியபடியே, கலைவாணி, தனது அறைக்குள் வந்தாள். கட்டிலில் முகம் புதைத்தாள். கால்களைப் பரப்பிக் கொண்டாள். கரங்களை விரித்துக் கொண்டாள். எங்கே போவது… யாரிடம் போவது… பெரியம்மா மகன் மோகன்ராம் வீட்டுக்குப் போகலாமா? அவன் மனைவி அசல் பிடாரியாச்சே… என் தம்பி கசக்குது… நான் மட்டும் இனிக்குதோ என்று கேட்டாலும் கேட்பாளே…? அவளும், அந்த துரோகி மனோகரின் அக்காதானே!

கலைவாணி, விடை கிடைக்காமல், குழம்பினாள். நோக்கும் திசையெல்லாம் அடைப்பு… பார்க்கும் இடமெல்லாம் பழிப்பு… படுக்கக் கூட இடம் வேண்டாம். இருக்கக் கூட இடமில்லாமல் போய் விட்டதே!

இதற்குள், வெளியே பேச்சுக் குரல் கேட்டது. உள்ளூர் விவேகிகளில் மூன்று பேரும், புதுப் பணக்காரரான ஆனந்தியின் தந்தை பெரியசாமியும் வந்திருப்பது, கலைவாணிக்கு தெரிந்து விட்டது. சுற்றி வளைத்த பேச்சு… இடையிடையே சுருக்கென்று குத்தும் சமாத்காரம்…

“சுப்பையா… மாப்பிள்ளை தப்பாய் நினைக்கப்படாது. கலைவாணி… எங்களுக்கும் மகள்தான்… ஆனாலும், ஊர் வாழணும்… நாளைக்கே ஒம்ம மகனுக்கு ஒரு கட்டி வருதுன்னு ஒரு பேச்சுக்கு வச்சுக்குவோம்… அது வேனல் கட்டியாக் கூட இருக்கலாம். ஆனாலும் ஒம்ம மகன், அந்தப் பாழாப் போன நோயா இருக்குமோன்னு பயப்படுவான். கூடப் பிறந்த தங்கச்சி, உடன் பிறந்தே கொல்லும் நோயாளி ஆயிட்டாளேன்னு ஆத்திரப்படுவான்.”

“அப்போ… அவளை ராத்திரியோட ராத்திரியா கொன்னு போடட்டுமா?”

“இப்படி எடக்கு மடக்காப் பேசினால் எப்படி, சுப்பையா? நிலைமையை யோசித்துப் பாரும்… யோகம் பட்டில… இப்படி ஒரு நோய் பிடிச்சவன ஊர் ஜனங்க விரட்டி அடிச்சாங்களாம்… நாங்க அப்படியா சொல்லுறோம்… ஊருக்கு புறம்பா இருக்கிற சௌக்குத் தோப்பு பக்கமாய், ஒங்க தோட்டம் இருக்குதே… அதில் ஒரு குடிசபோட்டு கொடும்… சாப்பாடு, சௌகரியமுல்லாம் செய்து கொடும்… வேண்டான்னா சொல்றோம்.”

“அழுவுறதுல… அர்த்தமில்ல… சுப்பையா… தலையிலே அன்றைக்கு எழுதுனதை அடிச்சி எழுத முடியாது.”

“நான் பெத்த பெண்ணாச்சே… ஒங்க பொண்ணுன்னா இப்படி பேசுவீங்களா…?”

“சாபம் போடாதே… சீனியம்மா… நம்ம ஊருல யாருடைய மகனோ, மகளோ, செத்திட்டான்னு வச்சிக்கோ… அகால மரணமா ஆயிட்டுன்னு வைச்சுக்குவோம்; அழுவோம்… புரளுவோம்… ஆனாலும், செத்தவன் கூட நாம சாவோமா? மாட்டோம்; செத்துப் போனவங்களுக்கு துணி எடுத்து கும்பிடறோம். திவசம் வைக்கோம். அவங்க சமாதியிலே வெள்ளை அடிக்கோம்… பூமாலை போடுறோம்… அதே சமயத்தில், செத்துப் போனவள், வீட்டுக்குப் பேயாய் வந்தால், என்ன செய்யுறோம்? அந்தப் பேயை விரட்டுறதுக்கு, மந்திரவாதியைப் பார்க்கலியா… யந்திர, மந்திரம் செய்யலியா? எவள் செத்ததுக்காக அழுது புலம்புறோமோ… அவள் பேயாய் வந்து குடும்பத்தை பிடிச்சால், அந்தப் பேய்க்கு கையிலே விலங்கு… கால் விலங்கு போடலியா?”

இன்னொருத்தர், அந்த யதார்த்தத்தை உபதேசமாக்கினார். “கலைவாணியோட கோளாற இப்படித்தான் எடுத்துக்கணும்… நாங்க ஒங்க மகளைத் தள்ளி வைக்கல. அவளோட நோயைத்தான் தள்ளி வைக்கோம். பாலைப் பார்க்கிறதா, பால் காய்த்த பானையைப் பார்க்கிறதா என்கிறது பழமொழி… இதே மாதிரி, விஷத்தைப் பார்க்கிறதா… விஷம் இருக்கிற தங்கக் கிண்ணத்த பார்க்கிறதா? தங்க ஊசி என்கிறதுக்காக, கண்ணிலே குத்திக்க முடியுமா… என்ன சொல்றே சுப்பையா.”

கலைவாணியின் காதுகளில் மேற்கொண்டு எந்தப் பேச்சும் விழவில்லை. அப்பா… பதில் சொன்னாரோ… சொல்லவில்லையோ, கேட்கவில்லை…. காதுகள் மரத்துப் போன காரணமா… இந்த மனிதர்கள் வேறு வகையான எய்ட்ஸ் கிருமிகளாகி விட்ட விரக்தியா… எந்த ஊருக்காக உழைத்தாளோ… அந்த ஊர்ப் பேச்சை இன்னும் கேட்கணுமா… எந்த ஊர் மண்ணை மஞ்சள் குங்குமமாக நினைத்தாளோ, அந்த ஊர் இப்படி தனக்கு இழவெடுப்பதை பார்த்துக் கொண்டு இருக்கணுமா… பலராமன் கூட ஊமையாகி விட்டானே… இந்த ஊரில் இருந்தாலும், இந்த வீட்டில் இருக்கக் கூடாது. இந்த வீட்டில் இருந்தாலும், இந்த ஊரில் இருக்கப்படாது… ஊரும் வேண்டாம்… உறவும் வேண்டாம்… எங்கேயாவது போய்த் தொலயணும்… எங்கே… எங்கே?

கலைவாணி அல்லாடினாள்; உயிருக்கு உடலே சிறையானது. இந்த உயிரைப் போகவும் விடாமல், இருக்கவும் விடாமல் அதற்கு விலங்கு போட்டு விட்டது. இயலாமை உணர்வுக்கும், எதிர்பாராத அதிர்ச்சியின் அலைகளுக்கும் மனமே புற்றானது… அவளுள் ஒரு வேகம்… உள்ளே இருக்கும் இந்த எய்ட்ஸ் கிருமிகள், மற்ற கிருமிகளைப் போல், தாக்கப்பட்டவர் செத்த பிறகும் வாழக் கூடியவை அல்ல… நோயாளி சாகும் போது, அந்த நோயாளியுடன் உடன் கட்டை ஏறுகிறவை… இப்போதே ஏன் உடம்பை கொளுத்தி, அந்தக் கிருமிகளையும் எரிக்கப்படாது? அய்யோ முடியலியே… முடியலியே…

சீனியம்மா, உள்ளே வந்தாள். மகளைக் கட்டிப் பிடிக்காமல், ஒரு மூலையில் மரத்துப் போய் கிடந்தாள். அவ்வப்போது, அய்யோ அய்யய்யோ என்ற சத்தம்…

கலைவாணி, கட்டிலில் இருந்து எழுந்தாள்… அம்மாவின் காலை எடுத்து நீட்டினாள்… அவள் மடியில் படுத்தாள். கைகளைப் பின்பக்கமாய்க் கொண்டு போய், அம்மாவின் முதுகை வளைத்துப் பிடித்தாள். ஐந்து வயதுச் சிறுமியாக, அம்மாவை எப்படி பிடிப்பாளோ, அப்படி பிடித்தாள். அதே குழந்தைக் குரலோடு பேசினாள்.

“எம்மா, இந்த வீட்டை விட்டு… போறது கூட எனக்கு பெரிசில்லம்மா. ஆனால், கடைசியாய் ஒன் மடியிலே படுத்து உயிர் விடணும் என்கிற ஆசையிலே மண் விழுந்ததை நினைச்சால்தான், மனசு கேக்கமாட்டேங்கும்மா…”

“என் கண்ணே… என் ராசாத்தி… ஒன்னை வீட்டை விட்டு அனுப்ப மாட்டேண்டி… தனியாய் அனுப்ப மாட்டேண்டி… நீ எங்கல்லாம் போறியோ, அங்கெல்லாம் வருவேண்டி…”

கலைவாணியின் உடல் பஞ்சானது, உண்மை நெருப்பானது. அம்மாவால் கூட, போக வேண்டாம், போகப் படாதுன்னு சொல்ல முடியல. இதுக்கல்லாம் காரணம் தொலைவாய் இருக்கிற மனோகர், பக்கத்திலயே இருக்கிற டாக்டர் சந்திரா… நாளைக்கே சந்திராவைப் பார்க்கணும்… ஒரே வெட்டாய் வெட்டணும்… அப்புறம் ஜெயில்… இருக்கவும், படுக்கவும் ஏற்ற இடம்… மணி அடித்தால் சோறு, முடி முளைத்தால் மொட்டை…

கலைவாணி. இப்போது அழவில்லை. அம்மாவின் முதுகைத் தட்டிக் கொடுத்து, அவளை தன் மடியிலே போட்டுக் கொண்டாள். மகள், அம்மாவானாள். அம்மா, மகளானாள்…

"https://ta.wikisource.org/w/index.php?title=பாலைப்புறா/அத்தியாயம்_19&oldid=1641705" இலிருந்து மீள்விக்கப்பட்டது