உள்ளடக்கத்துக்குச் செல்

பாலைப்புறா/அத்தியாயம் 18

விக்கிமூலம் இலிருந்து

யற்கை அன்னை, ஒரு மார்பில் பால் குடிக்கும் தன் குழந்தையை, இன்னொரு மார்புக்கு எடுத்துச் செல்லும் போது, இந்த இரண்டு மார்பகத்திற்கும் இடைப்பட்ட பகுதிதான் மரணம் என்றார் தாகூர். நமது எல்லாப் பிரச்சினைகளுக்கும், மரணம் முற்றுப் புள்ளி வைக்கும் என்பதை நினைக்கும் போது, அந்த மரணமே இனிமையாகத் தெரிகிறது என்றார் நேரு… ஆனால், பயத்திலேயே பெரிய பயம் மரண பயம். மரணத்தின் மறுபக்கம் என்ன இருக்கும் என்பதை, அந்த மரணம் வழியாகக் கண்டறிய விரும்புகிறவர்கள் கூட, மரணத்தைப் பார்த்துப் பயப்படுகிறார்கள். ஆனால், மீதம் என்று வைக்காமலும், மீதி இன்றி எடுக்காமலும், தன்னை நினைப்போர்க்குத் தன்னை நினைப்பூட்டும் பிறப்பின் அணுக்களில் ஒன்றியிருக்கும் இறப்பை எதிர் நோக்கி, தற்கொலை செய்து கொள்வது, ஒரு கோழைச் செயலாகாது என்று பலர் குறிப்பிடுவதையும், உதாசீனம் செய்ய முடியாது. உறுப்புக்களை இழந்த தொழு நோயாளிகளும், இரண்டு கால்களை இழந்த முடவர்களும், பக்கவாதத்தில் படிந்தவர்களும் இந்த நிகழ்கால வாழ்க்கையை விடாப்பிடியாய்ப் பிடிக்கிறார்கள். இதற்கு கலைவாணியே ஒரு உதாரணம். மாமியார் சீதாலட்சுமி, சொல்லத் தகாத வார்த்தைகளைச் சொன்னாலும், இவள் வாழ்க்கையை முடித்துக் கொள்ள நினைத்தாலும், மரண பயம், இவளையும் வாழ வைக்கிறது. எப்படியாவது, டாக்டர் சந்திரா மூலமோ, அல்லது அந்த பழிகாரன் மனோகர் மூலமோ, இந்த விஷக் கிருமிகள் கல்யாணத்திற்கு முன்பே அவனிடம் இருந்ததை தெரியப்படுத்திய பிறகே, மரணிப்பது என்று இவளே, தனக்குத் தானாய் சமாதானம் செய்து கொண்டாள். அதே சமயம், மரணத்தின் மீது தனக்கு உரிமை இருக்கிறது. அது தன்னுடைய ஏவல் நிகழ்ச்சி என்று நினைத்துக் கொண்டதில், ஒரு தெம்பும் 165

சு. சமுத்திரம்

ஏற்பட்டது. ஆனாலும், அந்த மரணம் எஜமானாகுமுன்பு, ஏவலாளாய் பயன்படுத்திக்கொள்ள வேண்டிய இக்கட்டான சந்தர்ப்பங்களுக்கே அவள் தள்ளப்பட்டு வருகிறாள்...

அன்றும் அப்படித்தான்...

ஒரு வாரகாலமாக, கட்டிலோடு கட்டிலாய் முடங்கிக் கிடந்தவளிடம், அண்ணி குழல்வாய்மொழி வந்தாள். வந்ததும், வராததுமாய் விபரம் சொன்னாள்.

"நேரு யுவகேந்திரா அதிகாரி குமாரவேல், ஒன்னைப் பார்க்க வந்து இருக்கார். அஞ்சு நிமிஷத்தில நிக்க வச்சே பேசி அனுப்பிடு... நான் சொல்லலம்மா...ஒங்க அண்ணாதான் சொல்லச்சொன்னாரு...”

கலைவாணி, அண்ணியை சங்கடமாய் பார்த்தாள். திருமணத்திற்கு முன்பு போடாத பூட்டு, திருமணத்திற்குப் பிறகும் போடாத விலங்கு, இப்போது தனக்குப் போடப்பட்டிருப்பதை உணர்ந்ததும், கால்கள் வலித்தன. நோவெடுத்தன. நேரு இளைஞர் மைய ஒருங்கிணைப்பாளரான இந்த குமாரவேல், இளைஞர் என்றாலும், முதியவரின் பக்குவம் கொண்டவர். அவரது ஒவ்வொரு வார்த்தையும் பார்வையும், சகோதரியே! என் சகோதரியே! என்று சொல்லாமல் சொல்லும். முன்பெல்லாம் எந்த ஒரு நிகழ்ச்சிக்காவது, அவர் ஊருக்கு வந்தால், இந்த வீட்டில்தான் சாப்பாடு... எடுத்த எடுப்பிலேயே வராமல், பெண் என்பதால், சிறிது முன்னறிவிப்பு கொடுத்துவிட்டு, இந்த வீட்டில் இந்த அறைக்கே வருகிறவர். இந்த குழல்வாய்மொழி அண்ணிகூட, ‘என் நாத்தனாருக்கு ஒரு நல்ல பையனா பார்க்கப்படாதா' என்று கேட்பாள். உடனே அவர், ‘என் மைத்துனனை, தேடிட்டுத்தான் இருக்கேன்’ என்பார். அப்பேர்ப்பட்டவரை, எல்லாரும் வெளியிலேயே நிற்கவைத்துவிட்டார்கள்.

கலைவாணி, அவசர அவசரமாக வெளியே வந்தாள். குமாரவேல், முற்றத்தில் ஒரு நாற்காலியில் உட்கார்ந்திருந்தார். வேறு சந்தர்ப்பமாக இருந்தால், அவர் கையில் ஒரு காபி டம்ளராவது இருக்கும். போதாக் குறைக்கு, தம்பிக்காரன் பலராமன், அவரிடம் முகம் கொடுத்துப் பேசவில்லை... அண்ணன் கமலநாதன், கண்களைக் கவிழ்த்திப் பார்க்கிறான். கலைவாணிக்கு, குமாரவேலைப் பார்த்ததும், அழுகை வந்தது. ஆனாலும் அடக்கிக்கொண்டாள். அந்த அழுகை, அவள் கற்பிற்கு மாசாகக் கருதப்படலாம். அவருக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு, அவர் கேட்க வேண்டியதை

இவளே கேட்டாள். பாலைப்புறா

166

‘சுகமா... இருக்கீங்களா சார்’.

"சுகமாவே இருக்கேம்மா... நீ... சாரி... நீங்க முன்னால நின்று அடிக்கல் நாட்டுனீங்களே... மருத்துவமனை. இன்றைக்கு அதே இடத்தில் ஒரு கொட்டகையில் தற்காலிக மருத்துவமனை துவங்குது... அதுக்காகத்தான் நான் வந்தேன். போகிற வழிதானே... ஒன்னையும் பார்த்துட்டு போகலாமென்னு வந்தேன். திறப்புவிழா முடிஞ்சதும், பீல்ட் பப்ளிசிட்டி ஆபீசரும் ஒங்களைப் பார்க்க வரணுமுன்னார். அவர் ஜீப்லதான் நான் போகணும், ஆனால் அவரை வரவிடாமல் தடுக்கப் போறதுக்கு மன்னிக்கணும் நான் வாறேம்மா...திக்கற்றோருக்கு தெய்வந்தான் துணை’.

குமாரவேல், எவரையும் பார்க்காமல், சொந்த மகன்போல் உரிமை கொண்டாடிய சீனியம்மாவையும் பார்க்காமல், திரும்பிப் பாராமலே போனார். கலைவாணியால், வெறுமனே தலையாட்டத்தான் முடிந்தது... அந்த தலையைக் கூட மெல்ல ஆட்டினாள். இல்லையானால், கண்ணீர்தான் உதிரும்... அதுவே, கடந்த கால காதலின் அத்தாட்சிகளாகக் கருதப்படலாம்... எல்லோருமே சீதாலட்சுமிகளாய் ஆகிவிட்டார்கள்.

கலைவாணி, குமாரவேல் போனதும், ஒரு நிமிடம் கூட திண்ணையில் நிற்காமல், அறைக்குள் வந்தாள். கட்டிலில் முடங்கிக் கொண்டாள். முந்தானையே முக்காடானது. அந்த அறையே சமாதியானது. அவளும் இரண்டு நாட்களாகப் பார்த்துக் கொண்டுதான் வருகிறாள். ஒரே தட்டில் சாப்பிடும் பலராமன், சிறிது எட்டி நின்றே சாப்பிடுகிறான். தோளில் கை போட்டுப் பேசும் அண்ணிகூட, சிறிது விலகி நின்றே பேசுகிறாள். ஆளுக்கு ஆள், தினம் தினம் இடம் மாறும் சாப்பாட்டுத்தட்டுக்களில் கூட, அவளுக்கு இப்போது ஒரே தட்டுதான் வருகிறது. பல்லாங்குழிகள் மாதிரி மூன்று மேடுகளைக் கொண்ட தட்டு. அண்ணிகூட, இவள் சாப்பிட்ட தட்டைக் கழுவுவதில்லை. இவளிடமே செம்பு நிறைய வெந்நீர் கொடுத்து கழுவச் சொல்கிறாள். விஞ்ஞான ரீதியில் பார்த்தால், இதில் தப்பில்லைதான். ஆனால், இதிலெல்லாம் ஒரு அந்நியத்தன்மை இருப்பது போல் பட்டது. உறவாடுவது ஒரு உரிமை என்பது போய்... அதுவே ஒரு கடமை என்பது போலாகி விட்டது. இந்தக் கடமை சுமையாக, அந்த சுமையும் தலையிலிருந்து கீழே விழ, எவ்வளவு நாளாகுமோ...!

கலைவாணி குமைந்தாள். இதற்குள், அம்மா உள்ளே வந்தாள். கருவாய் சுமந்தவளுக்கு, அந்தக் கருவின்உருவத்தில் புரையோடிய உணர்வுகள் புரிந்து விட்டன. வலது கையை வளையல் மாதிரி நீட்டி, அதில் மூன்று முழ மல்லிகைப்பூவை தொங்கப்போட்டு வந்தாள். ஆறுதலாய் பேசினாள்.

‘ஒரேயடியாய் வீட்டுக்குள்ளயே அடஞ்சி கிடந்தால், பைத்தியம் தான் 167

சு. சமுத்திரம்

பிடிக்கும். பேசாமல், முருகன் கோவிலுக்குப் போயிட்டு வா... பூவை தலையிலே வச்சிக்கம்மா... ஏன் கட்டுலுல வைக்கே'.

‘இந்தப் பூ... முருகனுக்கு. அவனுக்குத்தான், இது தகும். நான் தலையில் பூ வச்சிட்டுப் போனால், அந்த மனோகரை இன்னும் நான் புருஷனாய் நினைக்கிறதாய் அர்த்தமாயிடும்’.

சீனியம்மாவால், கைகளைத்தான் நெரிக்க முடிகிறது. உதடுகளைப் பிதுக்க மட்டுமே இயன்றது. மகளின் துக்கத்தை உள்வாங்க முடியாமல், அந்த அறையை விட்டு வெளியேறத்தான் முடிந்தது.

கலைவாணி, புடவையை மாற்றிக் கொண்டு, கூடை பின்னியதுபோல் சிக்கல் போட்ட தலை முடியை வாரிக்கொண்டு புறப்படப் போனபோது, வாடாப்பூவும் தேனம்மாவும் வந்து விட்டார்கள். கலைவாணி, வாடாப் பூவை செல்லமாக அதட்டினாள்.

"புருஷனுக்குத் தெரியாம இப்படியா திருட்டுத்தனமா வாரது அக்கா? தேனம்மா ஒனக்கும் சேர்த்துதான் சொல்றேன். அவன்கிட்ட இருந்து எனக்கு வந்தது, ஒங்களையும் ஒட்டுமுன்னு ஒங்க வீட்டு ஆம்பளைங்க குதிக்கப் போறாங்க.”

‘குதிச்சால் குதிக்கட்டும். ஒனக்கு வாரதுக்கு முன்னயே, எனக்கு வந்திருக்கும். உடம்பும் அப்படித்தான் ஆகிட்டு இருக்குது...’

‘தத்து பித்துன்னு உளறாதே... வாடாப்பூக்கா’ ‘உளறல... கலை. உண்மையைத்தான் சொல்றேன். என் வீட்டுக்காரன் என்கிட்டயே பெருமை அடிப்பான்... இந்தியா முழுவதும் நாற்பத்தஞ்சி நாளு லாரில போகும்போது, முப்பது நாளைக்கு அவனுக்கு அது இல்லாம முடியாதாம். அப்போ கணக்குப் போட்டு பாரு... ஆயிரம் பேர் கிட்ட போனாலும் ஒன்கிட்ட வார சுகம் எவள் கிட்டயும் இல்லன்னு வேற ஜம்பமாய் பேசுவான். பன்னிப்பயல்... எப்பாடி... பேசு முன்னாலே மூச்சி இரைக்குது’.

இருவரையும், கண்கலங்கப் பார்த்த தேனம்மா, பேச்சின் வெம்மை தாங்க முடியாமல், அதை மாற்றினாள்.

‘கலை... நீ போன பிறகு, மகளிர் மன்றக் கூட்டுக் குழுவோட போக்கே மாறிட்டு... இப்போது எல்லாமே ஆனந்திதான்... நாம் நட்டுன அடிக்கல்லை, ஒரு ஓரமா எடுத்து நட்டுட்டு, இந்த ஓலைக்கட்டிடத் திறப்புக்கு பெரிய பளிங்குக்கல்லாய் பதிச்சிருக்காள். அதில ஏகப்பட்டவனுவ பேர், இவள் 168 பாலைப்புறா

பெயரு. ரொம்ப பெரிசு. மருத்துவமனை என்கிறது ரொம்ப சிறிசா போட்டிருக்கு... மகளிர் மன்ற கூட்டுச் செயற்குழு என்கிற பெயரையே காணோம்’.

கலைவாணிக்கு, ரத்தம் கொதித்தது. கல்யாணத்திற்கு முன்பிருந்த பழைய கலைவாணியாய் மாறிவிட்டாள். அதைப் பேச்சிலும் காட்டினாள்.

‘எந்த நிறுவனமும், தனி ஒருத்தரைவிட பெரியது. நீங்க அவளை இந்த அளவுக்கு விட்டிருக்கப்படாது’.

“நாங்க எங்கே விட்டோம். அவளே எடுத்துக்கிட்டாள். இன்னிக்கி நடக்கப் போற திறப்பு விழா சம்பந்தமாய் கூட்டுக்குழு கூட்டத்தை நடத்தல.. கேட்டால், வந்தால் வாங்கடி, வராட்டால் போங்கடி என்கிறாள்!”

‘இது அநியாயம்... நீங்களாவது குழுக் கூட்டத்தை கூட்டியிருக்கணும்’.

"நானும் சொன்னேன்... ஆனால் நீ போன பிறகு, எல்லாரும் பயப்படுறாளுக... கட்சிக்காரன் பொன்னய்யாவை கைக்குள்ளே போட்டிருக்காள். இவளே அந்த கட்சியின் மகளிர் அணி செயலாளராய் ஆகப் போறாளாம். எஸ்.பி.யை விழாவுக்கு கூப்பிடப் போனதால, போலீஸ்காரன், அவளுக்கு சப்-இன்ஸ்பெக்டருக்கு அடிக்காத சலூட்டா அடிக்கான். கலெக்டரை கூப்பிட்டதால... தாசில்தார் பயப்படுகிறார். மாவட்ட கல்வி அதிகாரியைக் கூப்பிட்டதால... பள்ளிக்கூட மானேஜர் பயப்படுகிறார். எம்.எல்.ஏ.வைக் கூப்பிட்டதால, எல்லாருமே அவள்கிட்ட பயப்படுறாங்க. இந்த ஆறு மாசத்தில மகளிர் மன்றம் பெயர்லே எல்லாரையும் கைக்குள்ளேயே போட்டுக்கிட்டாள். இனிமேல் சாராயம் காய்ச்ச வேண்டியதுதான் பாக்கி”

“எப்படியோ ஒழியட்டும்... ஒனக்கு ஒரு அழைப்பிதழையாவது கொடுத்து இருக்கலாம்..."

“அது பிரசவ மருத்துவமனை. எய்ட்ஸ் மருத்துவமனையாய் இருந்தால் எனக்குக் கொடுத்திருப்பாள்... சரி... நீங்க விழாவுக்குப் போகலியா!’

"நீ இல்லாத இடத்தில எங்களுக்கு என்ன வேலை” "அப்படிச் சொல்லப்படாது. இப்படி போராட வேண்டியவங்க ஒதுங்குவதாலதான், ஒரு பொது நிறுவனத்தை, தனிப்பட்ட ஒருத்தியோ இல்ல ஒருத்தனோ ஆட்டிப் படைப்பாங்க. இது. அவங்க திறமையைக் காட்டல. நம்மோட கோழைத்தனத்தைதான் காட்டுது".

"நீ என்ன சொல்லுதே கலை". 169

சு. சமுத்திரம்

"விழாவிலே கலந்துக்கங்க... முன் வரிசையிலே உக்காருங்க. குழு உறுப்பினர்களுல யாரையாவது ஒருத்தியை கூட்டத்தில பேச வையுங்க. மைக்குக்கு முன்னால போய் நின்னுட்டால், யாரும் தடுக்க முடியாது. இந்த மருத்துவமனை கொண்டு வர, நாம பட்ட பாட்டை சொல்லச் சொல்லுங்க”.

‘இப்போ... சொல்லிட்டல்லா...இனிமே பாரு’.

வாடாப்பூவும் தேனம்மாவும் போர்க்குணத்தோடு புறப்பட்டார்கள். லாரி டிரைவர் மாரியப்பன் டூர் போய்விட்டதால், வாடாப்பூவிற்கு அசுர பலம்... அதைப் பார்த்த தேனம்மாவுக்கு, புலிப்பலம். இவர்களை பலப்படுத்திய தோழி கலைவாணியோ, அவர்கள் போனதும் பலவீனப்பட்டாள். இடைக்காலமாய் மனதில் இருந்து மறைந்த மனோகரும், எய்ட்ஸும், மாமியாரின் ஏச்சும், குமாரவேலுக்கு வீட்டில் கிடைத்த அவமரியாதையும் அவளை குத்திக் குடைந்தன... அம்மா சொன்னது நிசந்தான். இப்போது மட்டும் வெளியே போகவில்லையானால், பைத்தியம் பிடிக்கும். சந்திரா, மனோகர் ஆகியோரிடம் எப்படி நடந்து கொண்டாளோ அப்படி நடக்க வேண்டியது ஏற்படலாம்.

கலைவாணி, வீட்டில் இருந்து வெளியேறி, கடைத் தெருப்பக்கம் வந்து விட்டாள். இடையிடையே தேநீர் கடைகளைக் கொண்ட இடைவெளி இல்லாத தெரு. அந்தக் காலத்திலேயே துவக்கப்பட்டதால், இந்தக் காலத்திலும், பெரிய கடை என்று பேசப்படும், ஒரு சின்ன மளிகைக் கடை; சாக்கு சாக்காக அடுக்கி வைக்கப்பட்ட அரிசிக் கடை, ஒரு பள்ளத்தில் கிடந்த கசாப்புக்கடை, சிறிது தள்ளி ஒரு வெறுங்கடை, அதில் வீடியோ ஆடியோ கேசட்டுக்களை விற்கலாமா அல்லது பேன்சிக்கடையை வைக்கலாமா என்று இன்னும் முடிவெடுக்காமல், முண்டமாய் கிடக்கும் கடை. இவற்றைத் தாண்டினால், அந்த விவசாயக் கிராமத்திலும் விற்பனைக்கு தரையில் வைக்கப்பட்ட காய்கறி மொந்தை. கூறு கூறாய் வைக்கப்பட்ட கருவாட்டு அடுக்குகள். இவற்றிற்கு முன்னாலும், பின்னாலும், இடை இடையேயும் நின்ற ஆண், பெண், குழந்தைகள். இத்தனை பேரையும், அத்தனைக் கடைகளையும் தாண்டி கலைவாணி நடந்து கொண்டே இருந்தாள். முன்பு போல், அவளை யாரும் மொய்க்கவில்லை. பக்கத்திலேயே வளையல்கடை ‘எந்த வளையல் நல்லா இருக்கும் கலை' என்ற வழக்கமான கேள்வி இல்லை. ஆனாலும், அவர்கள் நல்லவர்கள். வேறு ஒருத்தியாக இருந்தால், இந்நேரம் ஓடியிருப்பார்கள்... இல்லையானால் அவளை ஓட்டி இருப்பார்கள். கண்ணுக்கும் கருத்துக்கும் பிடித்த கலைவாணி என்பதால், அவளைப் பார்த்தபடி நிற்பதே, ஒரு சலுகை என்பதுபோல் நின்றார்கள். ஆனாலும் ஒரு சிலர் எப்படி தாயி இருக்கே என்று அருகே வந்து கேட்கத்தான் செய்தார்கள். பாலைப்புறா

170

கலைவாணி, ஒரு நோயாளிப் புன்னகையோடு, சாலைப்பக்கம் வந்தாள். நடந்து நடந்து, பழைய புறம் போக்கு இடத்தில் எல்லையான கப்பிச்சாலைக்கு வந்தாள். பக்கத்திலேயே தோரணவாயில்... அதன் முன்னாலும், பின்னாலும் வரவேற்பு பேனர்கள். தொலைவாய் உள்ள அலங்காரமான மேடையில் அறிவொளி பாட்டுக்கள். தோரணவாயிலில் ஒரு பக்கம், பன்னீர்செம்போடு ஆனந்தி; அவளுக்குப் பின்பக்கத்தில் நான்கைந்து பெண்கள்... மறு பக்கம் அதே ராமசுப்பு; அவரைச் சுற்றி உள்ளூர் விவேகிகள். இரு பக்கத்திற்கும் இடையே மேளக்காரர்கள். கலெக்டர் வந்ததும், வெளுத்துக்கட்ட வேண்டும் என்பது கட்டளை...

கலைவாணி, அந்த விழா மேடையை, சுதந்திரப் போராட்ட தியாகிகள் மாதிரி பார்த்தாள், பெருமிதமாய், தாய்மைப் பெருக்கோடு பார்த்தாள். அந்த தியாகிகளைப் போலவே, இவளையும், யாரும் கண்டுக்கவில்லை. ராமசுப்பு மட்டும், அவளை கண்களால் வழி மறித்துப் பார்த்தார். ஆனந்தி, அக்கம் பக்கம் நின்ற சொந்தக்காரப்பெண்களிடம் கிசுகிசுத்துவிட்டு, அப்போதுதான் அவசரமான வேலை இருப்பதுபோல், மேடைப்பக்கம் ஒடினாள். அந்த மேடையில் வாடாப்பூவுக்கும், தேனம்மாவுக்கும், கனகம்மாவுக்கும் என்ன வேலை...? அவர்களை இறக்கியாக வேண்டும்.

கலைவாணி, பழக்க தோஷத்தில் லேசாய் நின்று பார்த்தாள். எவராவது ஒப்புக்கு கையாட்டி இருந்தால் கூட போயிருப்பாள். மேடையில் உலாவந்த வாடாப்பூவோ, கனகம்மாவோ, இவளைக் கவனிக்கவில்லை; ஆனந்தியிடம், ஆவேசமாக வாயடித்துக் கொண்டிருந்தார்கள்.

கலைவாணி நடையைத் தொடர்ந்தாள். எல்லாம் நல்லபடியாக நடந்து இருந்தால், ஒரு வேளை டவுனுக்குப் போகாமல், இவளே இங்கே பிள்ளை பெற்று இருக்கலாம். பிள்ளை என்று மனம் நினைத்ததும், அவள் அடிவயிறு எரிந்தது. தலை சுற்றியது. மசக்கையா அல்லது தாங்கொண்ணா தாபமா என்பது அவளுக்கே புரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் புரிந்தது. வயிற்றில் வளரும் குழந்தை வாழப் போவதில்லை. எய்ட்ஸ் முத்திரையோடு பிறந்து, ஓரிரு வருடங்களில் அடங்கப் போகிற ஜீவன். அதையும் உலகில் உலாவவிட்டு, அவஸ்தைப்பட வைக்கலாகாது. முழு உருவம்பெறும் முன்பே, அதை முடித்தாக வேண்டும்... எங்கே எப்படி?

கலைவாணி சிந்தித்தபடியே, முருகன் கோவில் வளாகத்திற்குள் வந்து விட்டாள். இந்த மருத்துவமனை பிரசவிக்கும் இடத்திற்கும், சிறிது தொலைவாய் உள்ள சவுக்குத் தோப்பிற்கும் இடையே உள்ள இடம்... கோவில் முன்னாலேயே, பழைய காலத்து மண்டபம் கற்சிதைவுகளாய் நின்றது. ஆனால் உள்ளே அருமையான கோவில்... பெரிய கொடிக்கம்பம். பிரகாரச் சு. சமுத்திரம் 171

சுற்றுக்கள்.

கருவறையில் வேல்முருகன், வள்ளி தெய்வானை இல்லாத பாலமுருகன்... பால் வடியும் முகம். வேல்கொண்ட ஒரு வீரக்கரம்... அபயமளிக்கும் மறுகரம். ‘யாமிருக்க பயமேன்’ என்ற வாசகமில்லாத பார்வை.

அந்த முருகச்சிலையோடு ஒன்றிப் போனதால், கலைவாணி தன்னைப் பார்த்ததும், அளிப்பாய்த்த கம்பிகளுக்கு இருபுறமும் நின்ற பெண்கள், ஒரு பக்கமாய் ஒடிப் போய் நின்றதைக் கவனிக்கவில்லை. முன்பெல்லாம் இதே இந்தக் கோவிலுக்கு விளையாட்டாக வந்திருக்கிறாள். அக்கம் பக்கம் பேசியபடியே, அவ்வப்போது முருகனையும் பார்த்திருக்கிறாள். அந்த முருகனை வியந்ததும் இல்லை, பழித்ததும் இல்லை... ஒரு தடவை, ஒரு உபன்யாசி, முருகன் பிரும்மாவை சிறையிலடைத்தது பற்றி சொற்பொழிவாற்றியபோது, பள்ளியில் படித்துக் கொண்டிருந்த இதே கலைவாணி, ‘அப்போ முருகன். சஞ்சய் காந்தியா’ என்று கூட கிண்டலடித்திருக்கிறாள். ஆனால், இப்போதோ அந்த கற்சிலைக்குள் ஒரு ஆன்ம ஒளி வேரூன்றி, பிரபஞ்சம் முழுக்க வியாபித்திருப்பது போன்ற சிந்தனை... அந்த ஒற்றை முருகன், தனக்காக காத்திருப்பது போன்ற அனுமானம்; அவன் கழுத்தில், தான் ஒரு உருத்திராட்ச மாலையாய் மாறிப் போனது போன்ற பிரமை... அவனை பிறப்பறுக்கும் பெருமானாய், முதன்முதலாய் உணர்ந்தது போன்ற ஆரம்ப ஞானம்... பிறப்பறுக்க வேண்டுமானால், இறப்பை எதிர்பார்க்கவேண்டும் என்ற தெளிவு... இந்த தெய்வச்சிலை, இவள் பூமியில் விழுவதற்கு முன்பே எழுந்து, பூமிக்குள் போனபிறகும் தொடர்ந்து நிற்க போவதை அறிந்த ஆன்ம விழிப்பு... ‘வேல் வேல்... வெற்றிவேல்’ என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டாள். லெளகீக கணக்குகளுக்கு, எக்ஸ் ஒய் என்று வைப்பதுபோல், ஞானக் கணக்குக்கு இந்த வேலும் மயிலும் எக்சானவை... ஒய்யானவை என்று பறைசாற்றும் பகுத்தறிவு... இவற்றைப் பிடித்தே இவற்றைத் தாண்டி, உள்ளொளி பிடித்து மனதை துறக்க வேண்டும் என்று எப்போதோ அலட்சியமாகப் படித்தது, இப்போது காதுக்குள், எவர் குரலிலேயோ, அசரீரி போல் ஒலித்தது. அந்த முருகச் சிலையைப் பார்த்த அவள் கண்களில் குருக்களும் தென்பட்டார்.அவர் பார்த்த பார்வை சரியில்லை... கற்பூரத்தட்டோடு வெளியே வரப் போனவர், உள்ளேயே நின்று கொண்டார். அந்தச்சிலையை அவர்கழுவுவதால், அவருக்கு அது ஒரு கல்... பக்தர்கள் தொழுவதால் அந்தச்சிலை... அவர்களுக்கு எல்லாமே...

எங்கேயோ படித்ததை நினைத்து, கலைவாணி சிரித்துக் கொண்டாள். சுவரில் எழுதப்பட்ட பாம்பன் சுவாமிகளின் முருக நாமாவளியையும், பாலைப்புறா

172

தேவராய சுவாமிகளின் கந்தர் சஷ்டிக் கவசத்தையும் அன்றுதான் படித்தாள். அதுவரை வெறும் எழுத்துக்களாய் நின்றவை, இப்போது, அவளிடம் சொல்லவேண்டியதை எல்லாம் சொல்லிக் கொண்டிருந்தன. படித்தவற்றில் ஒரு வாசகத்தை சிக்கெனப் பிடித்துக் கொண்டு அதையே திரும்பித் திரும்பிச் சொன்னாள்... 'எல்லாம் பிணியும் என்றனைக் கண்டால், நில்லாது ஒட. நீ எனக்கு அருள்வாய்.’

கலைவாணி, பிரகாரம் சுற்றினாள். கல்லாய் நின்ற அருணகிரியும், பாம்பன் சுவாமிகளும், அவளுள் ஒளி எழுப்பும் சொல்லாய் மாறினார்கள். சிலையாய் நிற்கும் துர்க்கையின் நெற்றியில் ஒராயிரம் கோடிசூரியன்... உச்சித் திலகமாய்த் தெரிகிறது. அபிராமி பட்டர் அந்தாதியை பள்ளியில் படித்தது... பாய்ந்து, மனதுக்குள் பிரவாகமாய்ப் பெருக்கெடுத்தது. ஆறாய்ப்பாய்ந்தது.

கலைவாணி, தன்னை மறந்து, தான் கெட்டு, மனம் செத்து, ஒரு வினாடி நின்றிருப்பாள். அதற்குள் யாரோ காறித்துப்பும் சத்தம். திருப்பிப் பார்த்தாள். மாஜி மாமியார் சீதாலட்சுமி, அவளை... விழுங்கப் போகும் பூதகியாய் வாய் விரித்தாள். மீண்டும் துப்பினாள். மீண்டும்... மீண்டும்துப்பினாள்... அதுவும் கோவில் பிரகாரத்திற்குள்ளேயே அவள் துப்பியது, அவள் கை பிடித்த தேங்காய்த் தட்டிலும் தெறித்தது.

கலைவாணி, அவளை எச்சிலாய் பார்த்தபடியே, ஒதுங்கிக் கொண்டாள். நேருக்கு நேராய் கேட்பவள், ‘முருகு நீ கேட்டுக்கோ' என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டாள். தண்டனையாய்க் கேட்கவில்லை. தர்மமாய்க் கேட்கவில்லை. நியாயமாகக்கூட கேட்கவில்லை... இப்புடித்தான் என்று கேட்கவில்லை. கேள். கேள்... எப்படியோ கேள் என்பதுபோல் கேட்டாள்.

கலைவாணி, கொடிக்கம்பத்திற்கு அருகே உள்ள புல்தரையில் உட்கார்ந்தாள். அங்கேயும் சீதாலட்சுமி அவளை விடவில்லை. இப்போது சாடைமாடையாகத் திட்டினாள். காறிக் காறித் துப்பினாள். ஆனாலும் கலைவாணிக்கு ஒரு சிரிப்பு. தற்குறி கிடக்கிறாள் என்பது மாதிரியான சிரிப்பு... முருகன், தன் பொறுமையை அளந்து பார்க்கிறான் என்ற அனுமானம்... எல்லாம் அவன் என்றால்... இவளும், அவளும், அவன்தானே...?

கலைவாணி எழுந்தாள்; இன்னும் மஞ்சள் வெயில் அடிக்கத்தான் செய்கிறது. ஆனால், பலராமன் வந்துவிட்டான். சீதாலட்சுமி எச்சிலை விட்டாள்; இல்லையானால் இவன் அவளை வாயில் நுரை கக்கும்படியாய்ச் செய்துவிடுவான்.

கலைவாணி, தம்பியோடு அவசரமாய்ப் புறப்பட்டாள். ஒருத்தருக்கு சு. சமுத்திரம் 173

ஒருத்தர் பேசவில்லை... எதிரே, அதே குமாரவேல் வந்தார். பெயருக்குரியவனைக் கும்பிட வந்திருப்பார். இவளைப் பார்த்ததும் லேசாய் நின்றார். இவளும் நிற்கத்தான் போனாள். ஆனால், தம்பியோ இவள் முதுகை ரகசியமாய் தள்ளிவிட்டான். குமாரவேல் போனதும், தம்பிக்காரன் அண்ணாவானான்.

‘இவனுவ கிட்டே இனிமேல் பேச்சு வச்சிக்காதே’ கலைவாணி, தம்பி வருகிறானா என்று பார்க்காமல், தன்பாட்டுக்கு நடந்தாள். சமயம் பார்த்து காத்திருந்த பழைய எண்ணங்கள், மறதிப்புற்றில் இருந்து அவள் மனதை அரித்தன. சீதாலட்சுமியோடு, புதிய பலராமனும் சேர்ந்து கொண்டான். முருகன், கல்லானான். அந்தக் கோவில் ஒரு கட்டிடமானது...

"எய்ட்ஸ் கிருமிகள், உணர்வுகளாகவும், ஓலங்களாகவும்கூட வேடம் போடுமோ?”

கலைவாணியின் மனம், சாக்கடைக்குள் முக்கப்பட்ட வெறுங்குடம் போலானது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பாலைப்புறா/அத்தியாயம்_18&oldid=1641704" இலிருந்து மீள்விக்கப்பட்டது