உள்ளடக்கத்துக்குச் செல்

பாலைப்புறா/அத்தியாயம் 23

விக்கிமூலம் இலிருந்து

னோகர், ஒரே இழுப்பில் வாயில் வைக்கப்பட்ட பாதிச் சிகரெட்டுக்கு கொள்ளி வைத்து விட்டான். நெருப்புயிர் போய், பிணமான அதன் சாம்பல், மீதிச் சிகரெட்டின் முனையில் இருந்து கீழ் நோக்கிச் சென்று, மேல் நோக்கிச் சென்று, வளைந்து வளைந்து, தேள் போல் தோன்றியது. சாதாரண சிகரெட்டை விட ஒல்லியான சிகரட்; தொள தொளப்பானது. ஆனால், ஐம்பது ரூபாய்க்கும் அதிகமானது.

மனோகர், மீதிச் சிகரெட்டை அவ்வளவு சீக்கிரம் குடித்து விடப் படாது என்பது போல், அதைக் கொஞ்சம் கொஞ்சமாக மூச்சு விடச் செய்தான். அப்படி செய்தபடியே, அந்த அறையில், பல்வேறு கோணங்களில் வியாபித்துக் கிடந்த தோழர்களையும், தோழியையும் பார்க்கப் பார்க்க பரவசம்.

அந்த அடுக்கு மாடிக் குடியிருப்புகளின் கண் எட்ட முடியாத புற நகர் பகுதி. ஆனாலும், அண்ணா நகரையும், அடையாரையும் புறந்தள்ளும் புதிய வார்ப்பு. பெரிய அதிகாரிகள், அரசியல் வாதிகள் ஒன்று சேர்ந்து வாங்கிப் போட்ட அத்தனை கிரவுண்ட்களிலும், ஒப்புக்கு அரசுக் கடனும், ஒப்பில்லாத ‘மற்றும் பலவும்’ மாட மாளிகையாய், கூட கோபுரமாய் எழுந்த பகுதி. குடிக்கக் கூட தண்ணீர் கிடைக்காத சமயத்திலும், சென்னைப் பெருநகர், அதுதான் மெட்ராஸ் மெட்ரோ வாட்டர் லாரிகள், ஓசைப்படாமல் குடிப்பதற்கு மட்டும் இல்லாமல், குளிப்பதற்கும், குளம் போல் தோன்றும், ‘சங்குகளில்’ நீச்சல் அடிக்கும் அளவிற்கு நீரைக் கொட்டும். ஓசைப்படாமல் ஊற்றும்… மின்சார வெட்டு என்பதே இல்லாத பகுதி. ஆங்காங்கே சுழல் விளக்குக் கார்கள்; துப்புரவுத் தொழில் செய்யும் போலீஸ் ஆர்டர்லிகள், சில வீடுகளில் துப்பாக்கிக்குப் பதிலாக, துடைப்பங்களையும் பிடித்தபடி நிற்பார்கள். இப்படிப்பட்டப் பகுதியில், ஒரு உச்சி அறையை, மனோகர் தெரிந்து எடுத்தானா… தெரியாமலா என்பது தெரியவில்லை. இன்னும் சொல்லப் போனால், அவனை அன்று உரிமையோடு ‘டா’ போட்டுப் பேசிய அன்புமணிதான், இந்த அறைக்குக் கூட்டி வந்தான். வீட்டைக் காலி செய்ய வேண்டும் என்று அதட்டிய நாராயணசாமி, போலீஸ்க்குப் போவதாய் மிரட்டிய போது ‘போய்ப் பார் எய்ட்ஸ் இருக்கிறவனைப் பிடிக்க எந்த சட்டத்திலும் இடமில்லை’ என்றான். ‘இவன் இங்கேதான் இருப்பான். வேண்டுமானால், நீங்க காலி பண்ணுங்கோ’ என்று அவர்களை அசத்தி விட்டான். ஆனாலும், நாராயணசாமி வகையறாக்களுடன் ஒரு சமாதானம் ஏற்பட்டது. வாடகையையும் கொடுக்காமல், பத்தாயிரம் ரூபாயும் வாங்கப்பட்டு, கலைவாணி குடியிருந்த அந்த வீடு, காலி செய்யப்பட்டது.

மனோகருக்கு, அறைத் தோழர்கள் குத்திக் கொள்வதை, மீண்டும் தானும் குத்திக் கொள்ள வேண்டும் போல் மனம் துடித்தது. துள்ளியது. ஆள் மாற்றிகளாக, முழங்கையும், பின் கையும் சங்கமிக்கும் இடத்தில் குத்திக் கொள்கிறார்களே, அப்படிக் குத்திக் கொள்ள வேண்டும்… அதுதான் மனோவலியை, மாபெரும் சொர்க்கமாக மாற்றும்… மாற்றிக் காட்டும்…

மனோகர், அவர்கள் குத்தி முடியட்டும் என்பது போல், இன்னொரு தொளதொளப்பான சிகரெட்டை பற்ற வைத்தான். பாதியை, ஒரே இழுப்பாய் இழுத்து விட்டு, மீதியை ரோம வாடையோடு மார்பில் வைத்துப் பொசுக்கினான். அதன் வலியைப் பொருட்படுத்தாமலே, அவர்களைத் தவிப்பாய் தவித்துப் பார்த்தான். குத்தி முடித்து விட்டு, நாற்காலியில் இருந்து நழுவிக் கொண்டிருக்கும் சதாசிவன் படு ஒல்லி… உடம்பெங்கும் படை படையான கருந்திட்டுக்கள்… கீழே விழுந்து, விழுந்து. மேலே போய்க் கொண்டிருந்தான்… இன்னொருத்தன்… சுவர் மூலையில் சாத்தி வைத்த துடைப்பமாய் கிடந்தான்… நாக்கு முழுவதும் காளான் முளைத்தது மாதிரியான வெள்ளை மயம் கொண்ட சசிகுமார்… தோளிலும், பிடரியிலும் சிவப்புக் கோடுகளைக் கொண்ட நித்திய குமார்… கருகிப் போன சிவப்பன்… கால் கைகள் வீங்கிப் போன சேகர்… கண்களைத் துருத்திய தடிப்பயல் ராமு… இன்னும், இரண்டு, மூன்று பேர்… வெளிப்படையாய்ப் பார்த்தால், ஆரோக்கியமாய்த் தெரியும் அன்புமணி… அளவான உயரம்… அளவுக்கு மீறிய வசீகரம். எல்லாவற்றிற்கும் மேலாக, எஸ்தர்… பேண்டும், அசல் ஆம்பிளைச் சட்டையும் போட்டவள்… உள்பாடி போடாத டோன்ட் கேர் காரி; மார்பகம் போல், உடல் முழுவதும் ஒரு மதர்ப்பு… தடிப்பு…

அன்புமணி, எஸ்தர் கையில் ஊசியைக் குத்திக் கொண்டிருந்தான். உள்ளே எதுவுமே இல்லை என்று போக்குக் காட்டும் நிறமற்ற திரவம்… ஊசி வெள்ளையோடு வெள்ளையாய், தன்னை மறைத்துக் கொண்டிருந்தது. நித்தியகுமார் எழுந்து, அன்புமணி குத்திய ஊசியை வலுக்கட்டாயமாக பறிக்கப் போனான். உடனே எஸ்தர், அவனைத் தள்ளிப் போட்டாள்… கோபத்தில் இவன், அவளை அடிக்கப் போவது போல் கையை ஓங்கினான். பின்னர் எஸ்தர் பார்த்த கிறக்கப் பார்வையாலோ அல்லது அன்புமணியின் பேட்டைப் பார்வையிலோ, நித்தியகுமார், தலைக்கு மேல் போன தன் கையை, நாட்டியமாட விட்டு சிரிப்பாய்ச் சிரித்தான்.

மனோகர், எஸ்தருக்கு ஊசி போட்டு முடித்த அன்புமணியின் பக்கமாய், உடம்பை நகர்த்தினான். அவனை ஊசியும், கையுமாய் பிடித்துக் கொண்டு கெஞ்சினான்.

“கொட்ரா! கொட்ரா!”

அன்புமணி கொடுக்கவில்லை… கையிலேயே ஊசிக் குழலைப் பிடித்தபடி, மனோகருக்கு ஊசிப் போடப் போவது போல் ஊசியை அவன் கைப் பக்கமாய் கொண்டு போவதும், பிறகு பின் பக்கமாய் இழுத்தும் விளையாட்டுக் காட்டினான். மனோகர், பொறுமை இழந்து அங்குமிங்குமாய் ஆடிய அவன் கையைப் பிடிக்கப் போனான். ஆனால், அன்புமணியோ, தனது ஊசியை பம்பரமாய்ச் சுற்ற விட்டான்… மனோகரன் தலைக்கு மேலேயும், கீழேயுமாய் கொண்டு போனான். இதற்குள், சதாசிவன், சசி, நித்தியகுமார்களும், அங்கே தவழ்ந்து, தவழ்ந்து நெருக்கியடித்தார்கள். “எனக்கு, எனக்கு…” என்றார்கள். உடனே அன்புமணி, அந்த ஊசிக் குழலை, நித்தியகுமாரிடம் நீட்ட, சதாசிவம் அதை அமைதியாய்ப் பார்க்க, மனோகர் கூச்சலிட்டான். வழக்கமான நிதானம், அந்த புகையாலோ என்னவோ, புகைந்து போனது.

“ஏண்டா… இந்த ரூம் என்னுது… இந்த மருந்து என்னுது… அப்படி இருந்தும் எனக்கு ஒரு ரவுண்ட் தராட்டால் எப்படிடா?”

“எங்கே, இன்னொரு வாட்டிச் சொல்லு!”

அன்புமணியின் கேள்விக்கு, மனோகர் பதிலளிக்காமல், நித்தியகுமார் தனக்குத் தானே போட்டுக் கொண்ட ஊசியைப் பார்த்தான். அன்புமணி, சாட்டையடியாய்ப் பேசினான்.

“ஏண்டா… அல்பம்… ஒன் புத்தியக் காட்டிட்டே பாரு… எப்போ, இந்த எய்ட்ஸ் குரூப்புல… சேர்ந்தியோ… அப்பவே நான் போய், நாம் வரணுமே. ஏண்டா வர்ல. ஏன்னா நீ அல்பம்”

“தப்புதாண்டா மன்னிச்சுடு…”

“மன்னிச்சிட்டேன். ஆனாலும், ஒரு பாயிண்டைக் கிளியராக்கணும். இந்த ரூம் என்னோடது. சேலத்தில இருக்கிற எங்க டாடிக்கு தெரிந்தவரோட வீடு இது… நான் ‘லா’ காலேஜ்ல படிக்கிறதாய் நினைத்து… இந்த ரூமை தந்தாங்க… அதனாலதான், பத்தாயிரம் ரூபாய் வாடகைக்கு பாக்கி வருவது வரைக்கும், பொறுமையாய் இருந்தாங்க. ஒன்னோட அல்பம் பத்தாயிரம் ரூபாய், எங்க டாடியோட ஒரு நாள் ஸ்டார் ஹோட்டல் தங்கலுக்கு பத்தாது. பாத்துப் பேசுடா மச்சி. நீ என்னோட டெனன்ட். ஒரு டெனன்ட்ட நான் சரிக்குச் சமமாய் நடத்துறேன் பாரு. அதுக்கு நீ பெருமைப்படனும்… இன்னொண்ணுடா… நீ வந்த பிறகுதான், இங்கே கூடுறோம். இந்த அறையை புனிதமா வச்சிருந்தேன். ஒனக்காகத்தான், நீ சரியா டிரெயினிங் எடுக்கணுமுன்னுதான், எல்லாரும் இங்கே கூடுறோம்…”

“தப்புதாம்பா. மன்னிச்சுடுப்பா”

“சரி… சரி… யாரோ கதவைத் தட்டுறாங்க. ரெண்டு விரட்டு விரட்டிட்டு வா”

மனோகர், கதவைத் திறந்தான். எதிரே நின்ற பெரியவர் உள்ளே பார்க்க கூடாது என்பது போல, திறந்த கதவை மூடினான். பெரியவர், பக்கத்தில் இன்னொருவர்… பழைய முகமாய் தெரிந்தது. எதிர் வீட்டில் பார்த்த ஞாபகம்… முக்கால் கிழடு. கீழே இருப்பவர், முழுக் கிழடு.

மனோகர், அன்புமணியிடம் வாங்கிக் கட்டியதை, அவர்களுக்குக் கொடுக்கப் போனான்.

“என்ன வேணும்?”

“நானும்… நீ வந்ததுலே இருந்து பார்க்கேன். கதவையும், ஜன்னலையும் மூடிக்கிட்டு என்னப்பா செய்யுறீங்க?”

“என்னமும்… செய்துட்டுப் போறோம்… உங்களுக்கு என்ன?”

“சரி… ஒன் கிட்ட பேசி பிரயோசனம் இல்லே. அன்புமணியைக் கூப்பிடு”…

“அன்புமணி… என்னோட டெனன்ட்… நான்தான் ஒங்களோட டெனன்ட். எது பேசணுமுன்னாலும் என்கிட்ட பேசுங்க. என்ன அநியாயம் இது… ஆளுக்கு ஆளு எகிறிக் கிட்டே போறீங்க… குட்டக் குட்ட குனியுறீங்க… ஸாரி குனிய, குனியக் குட்டுறீங்க!”

“நாங்க எப்போ குட்டுனோம். நீ எப்போ குனிஞ்சே…?”

கோபப்பட்ட எதிர் வீட்டுக் கிழத்தை, உள்வீட்டுக் கிழம் தள்ளிக் கொண்டு போனது. ‘காலையிலே பேசிக்கலாம்…’ என்று சொன்னபடியே, இவர் அவரைத் தள்ளியபடியே, பின் தொடர்ந்தார். அந்த எதிர் வீட்டுப் பெரியவரோ, ‘ரிஷிக் கர்ப்பம், இரவு தங்காது’ என்பது போல், மனோகரை திரும்பித் திரும்பிப் பார்த்தபடியே, எகிறி, எகிறியபடி இறங்கினார்.

மனோகர், வெற்றிப் பெருமிதத்துடன் அறைக்குள் வந்தான். கதவை மூடிக் கொண்டான். அன்புமணி, அவனைக் கண்டு கொள்ளவில்லை… என்ன நடந்தது என்றும் கேட்கவில்லை… இப்போது, எஸ்தர், மனோகரை கையாட்டிக் கூப்பிட்டாள். அவன், அவளருகே உட்கார்ந்த போது, அவனை தன் மார்பில் சாய்த்துக் கொண்டாள். சேகர் குத்தி முடித்த ஊசியை வாங்கி, மனோகரை எதிர் பக்கமாய்த் திருப்பி அந்த ஊசிக் குழலால், நரம்பு ஊசி போட்டாள். அவள் ஊசியை எடுக்கப் போன போது, மனோகர் ‘இன்னும்… இன்னும்’ என்றான். அவள் எதுவும் பேசாமல் ஊசியை எடுத்த போது, ‘சும்மா சொல்லப்படாது… எஸ்தர்…ஜப்பான் ஊசி மாதிரி ஊசி குத்தும் போது வலியே தெரியல’ என்றான்.

சிறிது நேரத்தில், அந்த அறைவாசிகள் அனைவரையும் போலவே, மனோகரும் தனது உள் உலகில் சஞ்சரித்தான். காலற்ற மிதப்புணர்வு; கைகளே சிறகுகளான ஆகாயப் பறப்பு… உடல், பஞ்சு மிட்டாயானது. கண் முன்னால், எடுத்த எடுப்பிலேயே, தொலைக்காட்சிப் பெட்டியில் வருவது மாதிரி ஏழு வண்ணங்கள். இவை தோன்றி மறைந்து, ஏழேழு நாற்பத்தேழு வண்ணக் கலவைகள்… இவை ஒன்றோடொன்று கலந்து, ஓராயிரம் வண்ணங்களைக் காட்டுகின்றன. பூமி, அவனை விட்டு நழுவிப் போனாலும், ஆகாயம் அவனை அணைக்கிறது. அற்புதம்… அற்புதமான வண்ணக் கனவுகள். பிளாக் அன்ட் ஒயிட்டாய் தோன்றிய கலைவாணி, வானத்து தேவதையாகிறாள். அவன் தலையை வருடிக் கொடுக்கிறாள். ‘ஏழேழு ஜென்மங்களிலும், ஒனக்கு நான்… எனக்கு நீ,’ என்கிறாள். ஒவ்வொரு வண்ண விரிப்பிலும் ஒரு ஜென்மம் எடுக்கிறாள். அமெரிக்காவில் இருந்து வெற்றிகரமாய் திரும்பும் அவனை, விமான நிலையத்தில் எதிர் கொள்கிறாள். கம்பெனி சகாக்கள் அவனுக்கு மாலை சூடும் போது, அவள் தானே ஒரு மாலையானது போல, அவன் மார்பில் சாய்ந்து, கழுத்தை பூங்கரங்களால், சுற்றிக் கொள்கிறாள். எல்லாவற்றிற்கும் மேலாய், கணிப்பொறித் துறையில் மகத்தான சாதனைகள் நிகழ்த்தியதற்காக, குடியரசுத் தலைவர், அவனுக்கு விருது வழங்குகிறார். பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும், அவனைப் படம், படமாய் போட்டு, ‘சப்ளிமெண்ட்’ வெளியிடுகின்றன. கூடவே டாக்டர் சந்திரா, அவனுக்கு எய்ட்ஸ் இல்லவே இல்லை என்கிறாள்.

மனோகர், ஊசி முனையில் தவம் இருக்கும் முனிவர்கள் போல், சொர்க்க லோகத்திற்குள் போய் விட்டான். அங்கிருந்து எட்டிப் பார்க்கிறான். நாராயணசாமியும், சங்கரனும் நரகத்தில் தவிக்கிறார்கள். தவசிமுத்தும் அங்கே தவளை மாதிரி கத்துகிறார். அருகே நிற்கும் கலைவாணி, அவர்களை கை தூக்கி விடச் சொல்கிறாள். அவனும், அப்பனைத் தவிர, அந்த இருவரையும் தூக்குவதற்குக் கையை நீட்டுகிறான். நீட்டிக் கொண்டே போகிறான். ஒரு அரக்கன் வருகிறான். இவன் அவனது பெயர் கேட்கிறான். உடனே அவன் ‘எய்ட்ஸா சூரன்’, என்கிறான். அடுத்து, இவன் நெற்றிக் கண்ணைத் திறக்கிறான். சூரன் கருகிப் போகிறான். பூலோகத்தார், அவனைக் கையெடுத்துக் கும்பிடுகிறார்கள்.

மனோகர், போதை மருந்துலகில் புத்தம் புதுக் கனவுகளை கொடுத்துக் கொண்டிருந்தான். விருப்பங்களை வீடியோ காட்சிகளாய்க் கண்டு களித்துக் கொண்டிருந்தான். எஸ்தர், திடீரென்று அவன் மீது சாய்கிறாள். இவன், அவள் மார்பில் தலை போட்டு, மடியில் உடல் போட்டுக் கொள்கிறான். இருவரும் வெளிப்படையாய் அசையாப் பொருளாய்க் கிடக்கிறார்கள். பிறப்பறுத்த ஒளி உடம்பு… மனம் செத்த மயக்க லோகம்.

அந்த அறைவாசிகள் அனைவருமே, கால, நேர, வர்த்தமானங்களைக் கடந்து, ஒரு அதிசய உலகிற்குள் குதூகலிக்கிறார்கள். சாவில்லா பிறப்பு… பிறப்பில்லா உயிர்ப்பு… நோயற்ற பெருவாழ்வு… பூலோகம் நிழலாகிறது… போதை உலகம் நிசமாகிறது… ஒரு மணி நேரமோ, இரண்டு மணி நேரமோ, அந்த அளவுக்கு ஆயுளைக் கொண்ட சொர்க்கம்.

திடீரென்று, அன்புமணியும், நித்தியகுமாரும் இந்த அதிசய உலகில் இருந்து கீழே விழுகிறார்கள். வலி பொறுக்க முடியாமல், கத்துகிறார்கள். இருவருக்கும் கையாடுகிறது. காலாடுகிறது. உடம்பு மொத்தமும் ஒட்டு மொத்தமாய் ஆடுகிறது. பற்கள் கூட ஆடுவது மாதிரியான வாயாட்டம்… அன்புமணி, தனது காலை யாரோ முறுக்குவது போல், காலை வளைக்கிறான். நித்தியகுமார், கழுத்தை யாரோ நெரிப்பது போல் கோழிக் கத்தலாய்க் கத்துகிறான். அவர்களுக்கு வழக்கம் போல் புரிகிறது. இந்த ஆட்டமும், வாட்டமும், இன்னொரு தடவை குத்தினால்தான் போகும்… அப்போதுதான், இந்த நரகத்தின் மதிலில் இருந்து, திரிசங்கு சொர்க்கம் போய், அங்கிருந்து தேவலோகத்திற்குத் தாவ முடியும்.

அன்புமணி, ஓருடலும் ஈருயிருமாய்ப் பின்னிக் கிடந்த எஸ்தரையும், மனோகரையும் இரண்டாகப் பிரித்தான். ஆணாகவும், பெண்ணாகவும் அல்ல. ‘தலைகளாகவும்’, ‘கால்களாகவும்’; பின்னர், கண்ணதிர, காததிரக் கத்தினான்.

“மனோ… மனோ பணம் தாடா… மருந்து வாங்கிட்டு வாறேன்…. ஜல்திடா… அப்புறம் அவன் போய்டுவாண்டா…”

மனோகர் கேட்கப் போனான். ‘இருபதாயிரம் ரூபாய்லே, பத்தாயிரத்தை என்னடா செய்தேன்னு’ கேட்கப் போனான். நாக்கு, உள்ளேதான் போனது… ‘கலைவாணிக்காக வைத்திருக்கிற பணண்டா’… என்று சொல்லப் போனான். வாய் திறப்பதற்குப் பதிலாய் பூட்டிக் கொண்டது. அதோடு அவன் சஞ்சாரம் செய்த உலகில், எங்கு பார்த்தாலும் கட்டுக் கட்டாய் நோட்டுக்கள்… தங்கம்… தங்கமாய் நாணயங்கள்… எடுத்துக்கட்டுமே…!

“எடுத்துக்கடா… என் அன்பே எடுத்துக்கோ”

“எதுலடா வச்சிருக்கே?”

“சூட்கேஸ்லே?”

“சொல்லாத நம்பரை எப்படிடா பொருத்துறது”

“மூன்று தடவை ஏழு. எடுத்துக்கோ…”

அன்புமணியும், நித்தியகுமாரும், எஸ்தரையும், மனோகரையும் மீண்டும் ஒன்றாக்கி விட்டு, மாடத்தில் உள்ள சூட்கேசை கீழே இழுத்துப் போட்டார்கள். மூன்று தடவை ஏழு… முழுசும் நோட்டுக்கள். மார்பின் ‘மருந்து’ வேண்டாம்… ‘பெத்தடின்’ இருக்கையில், அது எதுக்கு? அந்த பெத்தடின் கூட வேண்டாம். ‘மாரிஜூவானா’ இல்லாட்டி… ஹஸீஸ்… ‘சேரிப் பையங்க பத்து ரூபாய்க்குக் குத்திக்கிற மில்லி மருந்தைக் குப்பையில் போடு’ மாரிஜுவானாவை ஊசியிலே ஏற்று!

அன்புமணியும், நித்தியகுமாரும் சூட்கேசை பூட்டாமலே ஓடினார்கள். அந்த சூட்கேஸ் இப்போது வாய் பிளந்து, தனது உரிமைக்காரனை ஏளனமாய்ப் பார்ப்பது போல் தோன்றியது.

நேரம் போகப் போக… எஸ்தருக்கும், மனோகருக்கும் போதை போய்க் கொண்டிருந்தது. ஏறிய வேகத்தில் இறங்கிக் கொண்டிருந்தது. ஆனால், அது முழுசாய் இறங்காமலும், பழசாய் போகாமலும் அவர்களை திரிசங்கு சொர்க்கத்தில் நிறுத்திய போது,

எஸ்தரிடம் மனோகர் கேட்டான்.

“ஒனக்கு எப்படி… ஹெச்.ஐ.வி. உள்ளே போச்சுது?”

“விட்டுத் தள்டா… பையா… நீயும் பொம்மை, நானும் பொம்மை. நோ நோ நீயும் பாசிட்டிவ்… நானும் பாசிட்டிவ்… நினைத்துப் பார்த்தால், எல்லாமே பாசிட்டிவ்… அழாதடா!”

“எனக்காக அழலடி. ஒனக்காக அழுகிறேன்”

“பல்ல உடப்பேண்டா… எனக்காக யாராவது அழுதால், அவங்களை அழ வைப்பேன். டோண்ட் பீல் பிட்டி பார் மீ”

“சரிடி… ஒன்னோட எய்ட்ஸ் ராமாயணத்தைச் சொல்லுடி”

“மொதல்ல… நீ ஒன்னோட எய்ட்ஸ் பாரதத்தை இன்னிக்காவது சொல்டா பையா!”

“அது பெரிய கதை… அனுமான் வால் மாதிரி நீளும்… மொதல்ல ஒன்னதைச் சொல்லு. அப்புறம் நான் சொல்றேன்”

“பிராமிஸ்…”

“பிராமிஸ்ட்”

“சுருங்கச் சொல்லி விளங்க வைக்கேண்டா… தலைப்புச் செய்தியாவே சொல்றேண்டா… நடுத்தரக் குடும்பம்.அம்மாவுக்கு… கண்ணுக்குத் தெரியாத பெரிய வீடு… அப்பனுக்கு கண்ணுக்கு தெரிந்த சின்ன வீடு… பெரியவங்களோட குடுமி பிடிச் சண்டை… அண்ணன் தங்கை குஸ்தி… காலேஜ் படிப்பு… எவளோ ஒருத்தியோட பீடா நன்கொடை. ஆரம்பத்தில் ஒசி, அப்புறம் துட்டு. அதுக்காக வீட்டுத் திருட்டு… அப்புறம் தெருத் திருட்டு… அந்த பீடா இல்லாமல், செத்துப் போகணும் என்கிற தவிப்பு… அவளிடம் சரணாகதி. அப்புறம் வேலூரில் ,அவள் வீட்டில் வாசம்… பல பயல்களோட படுக்கை… ஒரு அயோக்கிய சமூகத் தொண்டு கும்பல், எனக்கு எய்ட்ஸ் இருக்கறதாய் பீடாக்காரிக் கிட்டே சொன்ன கோள்… அதனால வீட்டுக்கு வெளியே தூக்கிப் போடல்…அன்புமணி பொறுக்கி எடுத்தல்… இதுதாண்டா என் வாழ்க்கை… வாடா செத்துப் போயிடலாம்… அதுக்கு முன்னாடி ஒன் கதையைச் சொல்டா…”

“சொல்றேன்… பாப்பா… சொல்றேன்… மேடம்… ஊமை ஊரைக் கெடுக்கும்… பெருச்சாளி வீட்டைக் கெடுக்குமுன்னு கேள்விப்பட்டு இருக்கியா…?”

“ஆமா கண்ணு…”

“அந்த ஊரு… வெள்ளையன்பட்டி. அங்கே, வீட்டைக் கெடுத்த பெருச்சாளி எங்கப்பன்… ஊரைக் கெடுத்த ஊமை யாரு…? நான்… நானேதான்…”

“நேரா விஷயத்துக்கு வாடா”

“வாரேன். வாரேண்டி. வாடாப்பூ முதல் ஆனந்தி வரை நடந்த உடல் விளையாட்டை ஒப்பிக்கேண்டி”

மனோகர், எஸ்தரின் மடியில் தலையைப் புரட்டிப் போட்டான். அவள் கால் மேல் கால் போட்டான். கையைப் பின்புறமாய் வளைத்து, அவள் கழுத்தை வளைத்துப் பிடித்தான். அவனுக்கு, எஸ்தரின் மடி வாடாப்பூவானது… அவள் கழுத்து தேனம்மாவானது… வயிறு ஆனந்தியானது… மருந்து போதை போனாலும், அதற்கு இணையான காதல் போதை… அவன் கண்களை கிறங்க வைத்தது. வாயைப் பேச வைத்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பாலைப்புறா/அத்தியாயம்_23&oldid=1641709" இலிருந்து மீள்விக்கப்பட்டது