உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை நாடகங்கள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை நாடகங்கள்

கண்டதும் காதல்! இருவரும் ஒருவராகின்றனர். அப்போதே உலகறிய மணக்கமுடியுமா? ஆணும் பெண்ணும் இவ்வாறு ஒன்றாக இருக்கவிடுமா உலகம்? இருவரும் பிரியவேவேண்டும். 'பிரிவு' என்பது ஒன்று இருப்பதனை அவர்கள் உணர்கின்றனர். தம் கீழே தரையே பிளப்பதுபோல அவர்களுக்குத் தோன்றுகின்றது. துன்பப் பேரிருள் ! எதிர்பாராத பேரிடி !

ஆனால், அளவிலா நம்பிக்கை—அருளில் நம்பிக்கை—இயற்கையில் நம்பிக்கை—களங்கமிலா மனம்—வஞ்சமிலா நெஞ்சம்—இவையே ஆறுதல் வடிவமாக எழுகின்றன. அவன் திரும்பிப்போகிறான், ஊருக்கு, அவளைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே.

அவளும் தோழிமாரோடு வீடுதிரும்புகிறாள். அவள் உள்ளமோ உடன் வரவில்லை; அவனோடு போய்விட்டது. என் செய்வாள்? புதிய உணர்ச்சி, எரிமலையாகப் பொங்குகிறது. அவளால் பொறுக்க முடியவில்லை. நடந்ததனைப் பிறர் அறியாமல், பழையபடி வாழ்வினை எவ்வாறு நடத்துவது? பழக்கம் அவளுக்கு உதவுகிறது. ஆற்றின் ஓட்டத்தோடு செல்லும் மிதவைபோலத் தன்னைச் சூழ்ந்தவர் வழியே அவளும் செல்கின்றாள். என்றாலும், இரண்டாட்டம்—போராட்டம்—மனக்கொந்தளிப்பு—இவை நின்றபாடில்லை; வளர்ந்துகொண்டே போகின்றன.

அவனைக் கண்டது எப்படி? முன்னாளைய பழக்கம் இன்றும் அவளை அவ்விடம் செல்ல உந்துகிறது. கால்கள் நடக்கின்றன. எண்ணமில்லாமலே அவனைக் கண்ட இடத்தில் வந்து அவள் நிற்கிறாள். அவனும் வருகிறான்; ஐயம் இல்லை: அவன்தான்.

32