இலட்சிய வரலாறு/பூஜா மனோபாவம் கூடாது
பூஜா மனோபாவம் கூடாது.
நாட்டை மீட்கும் நற்பணியில் நாங்கள் ஈடுபட்டிருக்கிறோம். இப்போது இங்கே இரண்டே கட்சிகள்தான் உண்டு: ஒன்று விடுதலைப் போர் புரியும் கட்சி, மற்றொன்று ஏகாதிபத்தியம். எனவே வேறு கட்சிகள் இருக்கக்கூடாது. நாடு விடுதலை பெற்றான பிறகு, நாட்டை ஆளும் நேரத்திலே கட்சிகள் இருக்கலாம்; போராட்டத்தின்போது கூடாது என்று காங்கிரஸ் தலைவர்கள் கூறி வந்தனர். இன்றோ நாட்டுக்கு விடுதலை கிடைத்து விட்டது, ஆனால், காங்கிரசாருக்கு, வேறு கட்சியே இருக்கக்கூடாது ! எதிர்ப்பின்றி, ஏகபோகமாகத் தாங்களே நாடாள வேண்டும், நிர்வாகம் எவ்வளவு கேடுள்ளதாயினும் யாரும் எதிர்த்திடக் கூடாது என்ற எண்ணம் பலமாக ஏற்பட்டிருக்கிறது.
வெற்றிக் களிப்பே, இந்த விபரீத எண்ணத்துக்கு முக்கிய காரணம்; ஆனால் மூலகாரணம் வேறு இருக்கிறது.
என்ன தவறு செய்தாலும், சகித்துக்கொண்டு தவறுகளை வெளியே எடுத்துச் சொல்லவும் யாருமே இல்லை என்றால் மட்டுமே, தங்களால் ஆட்சியை நடத்த முடியும்; குறை கண்டுபிடிக்கப் பலருக்கோ சிலருக்கோ வாய்ப்பிருந்தால், தமது 'பிடி' தளர்ந்து விடும் என்ற அச்சம் அந்த மூலகாரணம்.
இது. குடி அரசுக் கோட்பாட்டுக்குக் கேடு விளைவிக்கக் கூடியது.
அறிஞர், டாக்டர் கிருஷ்ணலால் சீதரணி, இந்த போக்குக் கூடாது என்று தக்க காரணத்தோடு விளக்கியுள்ளார்.
புதிய நிலை நாட்டுக்குப் பிறந்து விட்டது; இப்போது பழைய 'பூஜா மனோபாவம்' நீடிக்குமானால் ஜனநாயகம் வளராது என்கிறார். அவருடைய கருத்துரை கீழே வெளியிடப் பட்டிருக்கிறது.
புதிய கட்சிகள் வேண்டும்
"சுதந்திரம் அடைந்திருக்கும் இந்த நேரத்தில் நமக்கு ஒன்றுக்கு மேற்பட்ட அரசியல் கட்சிகள் தேவைப்படுகின்றன. எங்கு ஒரே கட்சி ஆதிக்கம் செலுத்துகிறதோ அங்கு ஜன நாயகத்திற்கு உறைவிடம் சவக்குழி தான். இது ஒரு மகத்தான சோதனையாயிருக்கும். ஏனெனில், நாம் நடத்தி வந்துள்ள ஒரு நீண்ட கடுமையான போராட்டத்தின் போக்கில் நாம் காங்கிரசைத் தவிர மற்றச் சகல கட்சிகளிடத்தும் அவநம்பிக்கை கொள்ளக் கற்று வந்திருக்கிறோம். ஆனால் காங்கிரஸ் ஒன்றினிடத்தில் மட்டும் நாம் கொண்ட பக்திக்குக் காரணம், காங்கிரஸ் இன்று வரை ஒரு கட்சியாக இராமல் ஒரு இயக்கமாக இருந்து வந்ததுதான் என்பதை நாம் உணர வேண்டும். அது ஒரு பொதுஜன முன்னணியாக விளங்கிற்று; அதன் ஆதரவில் பல்வேறு சிந்தனைப் போக்குகள் ஒன்றுபட்டு அந்நிய அதிகாரத்திற்கெதிராக ஒரு பொது இலட்சியத்தை உருவாக்கின. அந்த இயக்கம், இந்தியாவை அந்நிய ஆதிக்கத்திலிருந்து விடுவிக்கும் தனது பணியை இப்போது நிறைவேற்றி வைத்து விட்டது.
சுதந்திரமெய்திருக்கும் இத்தருணத்தில் காங்கிரஸ் ஒரு கட்சியாக மாறிவிடுகிறது. இயக்கம் என்ற அதன் உருவம் மறைந்து விடுகிறது. அந்த நிலைமையானது பல்வேறு அரசியல் பொருளாதாரத் திட்டங்களையுடைய மற்றக் கட்சிகள் ஸ்தாபிக்கப் படவேண்டியதை அவசியமாக்குகிறது.
இந்தப் புதிய கட்சிகளில் சில, காங்கிரசிற்கு உள்ளிருந்தே எழும் அந்தக் கட்சிகள், காங்கிரசிற்கு ஒருபோதும் தங்களின் தளராத விசுவாசத்தை அளித்திராத நபர்களையும் சேர்த்துக் கொள்ளும் காங்கிரஸ் வலதுசாரியாகவும், இடதுசாரியாகவும் பிரிந்துவிடுமென்று தோன்றுகிறது. எனினும் அதுவும் கொஞ்சகாலம் வரை ஒரு இடைக் கட்சியாக ஆதிக்கம் வகித்துவரும்.பத்திரிகைச் சுதந்திரம்
சுதந்திரமடைந்திருக்கும் இந்த நேரத்தில் நமக்கும் சுதந்திரம் பெற்ற பத்திரிகைகள் தேவை. இப்போது ஒரு தர்மசங்கடமான பிரச்சினையா யிருக்கிறது. அந்நிய அடக்குமுறை ஒழிக்கப்பட அந்த நிமிடமே நமது பத்திரிகைகள் தாமாகச் சுதந்திரமடைந்து விடுமென்று சில ஜனங்கள் நினைப்பார்கள், ஆனால் அன்னிய ஆட்சியில் அவை சுதந்தரமாக நடந்து கொள்ளலாம். நமது சொந்த ஆட்சியில் அவ்வாறு நடந்து கொள்வது தான் கஷ்டம். ஏகாதிபத்திய வாதிகளுக் கெதிரான தங்களுடைய போராட்டத்தில் பல்வேறு கொள்கைகளோடு இறங்கிய நமது வீரர்களைப் போற்றி, ஆதரவு நல்கி, நமது பத்திரிகைகள் தேசத்திற்கு அவை ஆற்ற வேண்டிய பணிகளைச் செய்தன. அது ஒரு பழக்கமாக மாறியது. பழக்கங்கள் மாறுவது துர்லபம். நமது பத்திரிகைகள் தாமாகவே நமது வீரர்களின் விளம்பர ஸ்தாபனங்களாக இருந்து வரத் தொடங்கினால், அவை தத்தம் ஜனநாயகக் கடமைகளைச் செய்யத் தவறிவிடும், யுத்த காலத்தில் குற்றங் குறைகள் கூறுவதைச் சகிப்பது கஷ்டம்தான். ஆனால் சமாதான காலத்தில் சீர்திருத்த வேண்டுமென்ற எண்ணத்தோடு குற்றங் குறைகள் எடுத்துக் கூறவேண்டியது ஒரு கடமையாகி விடுகிறது.
தன் குறும்புத்தனத்தை அதாவது எதேச்சாதிகாரத்தைத் திருத்தக்கூடிய வல்லமை கிடைத்தது பத்திரிகை ஒன்றுக்குத் தான். ஆனால் சுதந்திரமா யிருந்தால் தான் அந்த வல்லமை அதற்குண்டு. நமது பத்திரிகாசிரியர்கள் அந்நிய ஆட்சி வர்க்கத்தினருக் கெதிராக எவ்வளவு தைரியத்துடன் நடந்து கொண்டார்களோ, அவ்வளவு தைரியத்துடன் இப்போது நமது சொந்தத் தலைவர்களிடமும் நடந்து கொள்ளவேண்டும். இது நமது தலைவர்களில் சிலருக்கு வேப்பங்காயாக இருக்கலாம்.
ஏனெனில் இதுவரை அவர்களுடைய பேச்சிற்கு மறுபேச்சு இல்லாமலிருந்து வந்தது. ஆனால் தங்கள் தலைவர்களின் நேரான நடத்தையை எதிர்பார்ப்பது ஜனநாயக மக்களின் உரிமையாகும். "சர்வமும் நாம்தான்" என்ற மமதை கொண்ட எந்தவொரு மனிதனும் ஜனநாயக ஆட்சிக்குத் தலைமை தாங்கத் தகுதியுடையவனாக முடியாது.வீரர் வணக்கம் பற்றிய எனது கருத்திற்கு இது தோற்றுவாயாகிறது. ஒரு போராட்டத்தின் போது அது ஆயுதப் போராட்டமாயினும் சரி, அகிம்சைப் போராட்டபாயினும் சரி, நமக்கு ராணுவ மனோபாவம் அவசியமாகிறது. ஆகவே. இங்கு நமது வீரவணக்கம் தீவிரப்பட்டு, மேலே போகப்போக, பல இடங்களில் சிதறிக்கிடந்த நமது விசுவாசம் ஒரு முகப்பட்டு எல்லோருக்கும் மேம்பட்டு விளங்கும் அந்த ஒரு மனிதரிடமே செல்கின்றது. பார்க்குமிடமெல்லாம் அவரது முகமே நம் முன் தோன்றுகிறது. சகல குண நலன்களையம் நாம் அவருக்கு உரிமையாக்கி விடுகிறோம். வேறு யாரும் நம்மைத் திருப்தி படுத்த முடியாது.
ஆயினும், சாதாரண காலத்தில் ஒரு ஜனநாயக அரசை உருவாக்கிக் கொண்டிருக்கும் போது நமது வீர வணக்கமானது ஒரு முகமாகத் தீவிரப் படுவதற்குப் பதிலாகப் பல திசையில் பரந்து செல்ல வேண்டும். நாட்டு மக்கள் அனைவரும் வீரர்களாகிவிடும் ஒரு காலம் வரும் வரை நாம் அனேக வீரர்களைப் பெறவேண்டும், சாதாரண மனிதனின் பெருமை தான் ஜனநாயகம் என்று அழைக்கப்படுகிறது. அமெரிக்காவைப் போல நாம் அரசியலைத் தவிர மற்றத் துறைகளிலும் அதாவது கலைத் துறையில், இலக்கியத் துறையில், தொழில் துறையில், தொழிலாளர் இயக்கத் துறையில், சினிமாத் துறையில் வீரர்களைப் பெறவேண்டும். இங்கு நாட்டின் பத்திரிகைகள் புதிய சமுதாயத்திலிருந்து புதிய தலைவர்களை உருவாக்கிக் கொடுப்பதன் மூலம் பணிசெய்ய முடியும். இப்போது நமது பத்திரிகைகளில் ஒவ்வொரு நாளும் நாம் எப்போதும் பார்க்கும் அதே முகங்கள்தான் பிரசுரிக்கப்படுகின்றன. வழக்கமான ஒரு சில தலைவர்களின் சொற்கள் தான் வெளியாகின்றன.
மற்றவர்களும் செய்திகளில் இடம் பெற முடியுமென்பதையும் அச்செய்திகளை ஜனங்கள் படிப்பார்கள் என்பதையும் முயற்சி, ஊக்கமுடைய நிருபர்கள் காண்பார்கள்.ஜனநாயகம் ஆழ்ந்து வேரூன்ற வேரூன்ற, பெரியவர்களுக்கே புகழ்பாடும் மனோபாவம் அருகத் தொடங்குகிறது. சாதாரண மனிதனுடைய முக்கியத்துவம் அதிகரித்துக்கொண்டே போகும் போது "படே மனிதர்ளோடு" அவனை ஒப்பிட்டுக் கூற வேண்டிய அவசியம் குறைந்து விடுகிறது. அமெரிக்காவில் "சாதாரண மனிதன் எப்படி வாழ்கிறான் என்பதை எடுத்துரைக்கும் புத்தகங்களும், பத்திரிகைகளும், பெரிய மனிதர்களின் செய்கைகளை விவரிக்கும் புத்தகங்களைப் போலம் பிரபலம் பெற்றுவிளங்குகின்றன."
ஒரே கட்சிக்கே நாடாளும் வாய்ப்பு இருக்கவேண்டும். அந்தக் கட்சி எவ்வளவு தவறு செய்தாலும், எடுத்துக் காட்டுவதுகூடத் தவறு, அந்தக் கட்சியின் தலைவர்களின் புகழ் பாடுவதன்றி வேறோர் காரியம் செய்தலாகாது என்ற மனோபாவம், சர்வாதிகாரத்திலே போய்ச் சேரும் என்ற உண்மையையும், விடுதலைப் போரின் போது, மகாவீரராக யாரேனும் ஒருவர் விளங்கினார் என்றால் நாட்டை ஆளும் நிர்வாக காரியத்திலும் அவர் மகாவீரராகவே இருந்து தீருவர்; அங்ஙனம் இல்லை என்றாலும், அவரை கண்டிப்பது கூடாது என்று கட்டளையிடுவதும், நிச்சயமாக நாட்டு முன்னேற்றத்தைத் தடுக்கு மென்பதையும், அறிஞர் விளக்கிக் கூறியிருக்கிறார். இக்கட்டுரையில் இவர், காங்கிரசுக்கு எதிர்க்கட்சி நடத்திக் கொண்டிருந்தவருமல்ல, உலக நிலைமையும், நாடாளும் முறைகளையும் ஆராய்ந்து இதனைக் கூறினார். ஆனால் இங்குள்ள காங்கிரசாருக்கோ, என்றென்றும் ஆட்சி உரிமை தமக்கே என்ற எண்ணமும், அந்த நிலையைப் பாதுகாத்துக்கொள்ளத் தம்மிடம் அதிகாரம் இருக்கும் இந்நாளிலேயே, மிகக் கடுமையான நடவடிக்கைகள் மூலம், காங்கிரசுக்கு எதிர்க்கட்சி என்று ஏதும் இருக்க முடியாதபடி செய்துவிட வேண்டுமென்னும் எண்ணமும் பலமாகி விட்டது. பேச்சும் நடவடிக்கையும் இதற்கு ஏற்றபடியே இருந்திடக் காண்கிறோம்.
"இவர்களை எல்லாம் பிடித்து ஜெயிலில் போட்டுவிடப் போகிறோம்" என்று மேடையில் பேசுவது, இப்போது காங்கிரஸ் பிரசாரகர்களுக்கு மிகச் சகஜமாகி விட்டது.". "இதோ தந்திகொடுத்து விட்டோம் மந்திரிக்கு. நாளைக்குள்ளே அரஸ்ட்டு வாரண்டு பிறந்து விடுகிறது பார்!" என்று மிரட்டுவதிலே, இப்போது காங்கிரசார் புதிய களிப்புப் பெறுகின்றனர்.
ஒரு காலத்திலே, தொல்லைக்கு ஆளாகி, அடக்குமுறை யினால் தாக்கப்பட்டவர்களான படியால், தங்களுக்கு ஆளும் வாய்ப்புக் கிடைத்த உடனே, பிறர், தங்களைக்கண்டு பயப்பட வேண்டும், பிறரை அடக்கி ஆளவேண்டும் என்ற எண்ணம், அவர்களுக்குச் சுலபத்தில் உண்டாகிவிடுகிறது. சாமான்யர்களுக்கு, இந்த அதிகாரம் பெற்ற நிலை, சாஸ்வதமானது என்றே தோன்றும். ஒரு மந்திரி சபைக்கு சட்டப்படி உள்ள ஆயுட்காலம் கூட இருப்பதற்கின்றி, பிரசாரம் இருண்டு, ஓமாந்தூரார் ஒளிவிடும் மாறுதல் மந்திரி சபைக்கே ஏற்பட்டு விட்டதே. இதற்கே இந்த நிலை என்றால், நாடு ஆளும் நிலை நமக்கு என்றென்றும் இருக்கும் என்று எதைக்கொண்டு தீர்மானிப்பது என்று கூட அவர்கள் எண்ணிப் பார்ப்பதில்லை.
அடக்குமுறை, ஒரு விசித்திரமான சக்தி. அதை உபயோகப்படுத்துவோருக்கு துவக்கத்திலே களிப்பு அதிகரிக்கும். சவுக்கெடுத்துக் காளையின் முதுகிலே, 'சுளீர்' என அடி கொடுத்ததும், அது, துள்ளி, வேகமாக ஓடும்போது உண்டாகிற களிப்புப்போல, அடக்குமுறையை வீசி, எதிர்க்கட்சியினரை இம்சை செய்து, அவர்கள் கஷ்டம் அனுபவிப்பதைக் கண்டதும், ஒரு வகைக் களிப்புப் பிறக்கும்.
அதேபோல முதல் தாக்குதல், அடிபட்டவனுக்கு அதிக வருத்தத்தை, சோகத்தை, திகைப்பைத் தான் தரும், அவனிடம் அதிகாரம் இருக்கிறது, நான் என்ன செய்ய முடியும் அவனுக்கு எதிராக, என்ற எண்ணம் வரும்.அடிக்கடி 'சவுக்கு ' வீசவேண்டியும், ஒவ்வொருமுறை சவுக்கு வீசும்போதும், காளை துள்ளுவதோடு மட்டும் நிற்காமல், துரிதமாக இருந்தால், முதல் சவுக்கு வீசியபோது உண்டான ஆனந்தம் கருகி, இதேதடா தொல்லை ! என்று, சலிப்புப் பிறந்துவிடும் கையிலே சவுக்கு இருப்பினும், அடக்குமுறை உபயோகிப்பவருக்கும் அதேநிலைதான். ஆரம்பத்திலே அதனை உபயோகிக்கும்போது ஏற்படும் களிப்பு, அதனை அடிக்கடி உபயோகிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டால் உண்டாகாது. சலிப்பும், இப்படியே. அடக்குமுறையைக்கொண்டே எவ்வளவு காலத்துக்குத் தான் ஆட்சியை நிலைநிறுத்துவது என்ற அச்சமும் ஏற்படும்.
அதுபோலவே, முதன் முறை தாக்குண்ட போது, துயரப் பட்டு, திகைத்தவர்கள், பிறகும் அடிக்கடியும் தாக்குதலை அனுபவிக்க நேரிட்டால், துயரமும் திகைப்பும் தீய்ந்துபோகும்; உறுதியும் எதிர்ப்புச் சக்தியும் புதிதாகத் தோன்றும்.
அடக்குமுறை, இவ்விதமான பலன்கள் தரும், ஒருவகை விசித்திர சக்தி.
சாவது அவ்வளவு கஷ்டமான தல்ல — என்று கூறிக் கொண்டே இறந்தாள் ஓர் மங்கை— கொடுங் கோலனிடம் சிக்கியபோது, அவளுடைய கணவனின் செவியிலே அந்த வாசகம் வீழ்ந்தது ! சாவது அவ்வளவு கஷ்டமில்லை ! செத்துக் கொண்டே கூறினாள் சேல்விழியாள் !—நானோ சாவுக்கு அஞ்சி, கொடுங்கோலனைச் சரணடையலாமா என்றுகூட யோசித்தேன். சே ! நான் கோழை ! ஆகாது இக்கோழைத்தனம் என்று கூறி, சீறிப் போரிட்டுக் கொடுங்கோலனை விரட்டினான், என்றோர் கிரேக்கக் கதை உண்டு. அது போன்றே, அதிகாரத்தைப்
பெற்றிருக்கும் கட்சி அடக்குமுறை கொண்டு எதிர்க்கட்சியைத் தாக்கும் போது, அந்தத் தாக்குதலைச் சமாளித்து விட்டால், பிறகு பிறக்கும் புதிய சக்தியின் உருவைக் கண்டு நாமே ஆச்சரியமடைவோம்.அடக்கு முறையின் இந்த இலட்சணத்தை ஆராய அவர்களுக்கு அவகாசம் இல்லை. எனவேதான், ஆள்வதற்கு நாங்கள் கிளம்பிவிட்டோம், இனி நாட்டிலே வேறு எக்கட்சியும் இருக்க அனுமதியோம் என்று கூறுகிறார்கள்.
தமது ஆதிக்கத்திற்கு அடிபணிவோ ரெல்லாம் நல்ல பிள்ளைகள்; மற்றையோர் துடுக்கர்கள் என்றே உலகில் இதுவரை எல்லா எதேச்சாதிகாரிகளும் எண்ணி வந்தனர். ரஷிய நாட்டை ரணகளமாக்கிய ஜார் மன்னனும் அப்படித்தான் எண்ணினான். சில்லரை அதிகாரம் வகிக்கும் சிறு தேவதைகளும் அவ்வண்ணமே எண்ணுகின்றன; எதிர்ப்பு என்ற உடனே எரிச்சல் வருவதும், அதனை அழித்தே விடுவது என்ற ஆணவம் எழுவதும், அழிக்க எத்தகைய கொடிய இழிந்த முறைகளைக் கையாளும் துணிவு ஏற்படுவதும் வீரமென்று அவர்கள் எண்ணிக்கொண்டு செய்யும் நடவடிக்கைகளெல்லாம் பயங்கொள்ளிச் செயல்களாகும். உண்மையில், எதிர்ப்பில் சக்தி இல்லாவிடின் எதிர்ப்போருக்கு நாட்டிலே ஆதரவு வராது என்ற எண்ணமிருப்பின், யார் எவ்வளவு எதிர்ப்பினும் தமது செல்வாக்குக் குறையாது என்ற நம்பிக்கை இருப்பின், தம்மைப்பற்றி மக்கள் உண்மையை உணரும்படிச் செய்யத் தங்களால் முடியும் என்ற வீர உணர்ச்சி இருப்பின், எதிர்ப்பைக் கண்டதும் அதன் மீது உடனே பாய்ந்து அடித்து ஒழித்துவிட யாரும் எண்ணார்.
வீரருக்கு அழகு, எதிர்ப்படும் எத்தனை ஆபத்தையும் பொருட்படுத்தாது போரிடல். கோழைகளின் கொள்கை, எதிர்ப்பு என்ற உடனே 'என்னாகுமோ நமது கதி' என்று பயந்து, பதை பதைத்து, பாதகச் செயலையும் செய்யத் துணிவது. முன்னையோர் முடிவில் வெற்றியும், பின்னையோர் இறுதியில் தோல்வியும் பெற்று வந்ததாலேயே, இன்று உலகில் ஏதோ ஓரளவுக்காவது நீதியும் நேர்மையும் நிலைத்திருக்கின்றன.புரட்சி என்பது இயங்கும் சக்தி ! அதைப் பொசுக்கிவிட யாராகிலும் ஆகாது. புரட்சி என்பது மக்களின் போராடும் சக்தியின் வழி வருவது. புரட்சி வாவிபத்தின் கூறு! பகுத்தறிவாளர் ஆயுதம். பழமை விரும்பிகள், புரட்டர்கள், எதேச்சாதிகாரிகள், சர்வாதிகாரிகள் ஆகியோருக்கு நஞ்சு. எனவேதான், அத்தகையோர் புரட்சி என்ற சொல்லைக் கேட்டதும் மருட்சி அடைந்தே விடுவர். நீண்டு வளர்ந்து நிற்கும் நெடு மரங்களும் அசைந்து, ஆடி, சுழன்று,அடி அறுபட்டு,விழுந்து நொறுங்கும், சூறாவளி வரின். அதைப் போன்றே ராணுவம், பொக்கிஷம், கர்வம், கபடம், ஆணவம், அகந்தை ஆகிய எல்லா ஆயுதங்களையும் ஒருங்கே படைத்துத் தனக்கு ஒப்பாரும் மிக்.காரும் இல்லை என இறுமாந்து கிடந்த எத்தனையோ எதேச்சாதிகாரிகள் இடர்ப்பட்டு, இடிபட்டு கீழே உருண்டர், புரட்சியின் வேகத்தைத் தாங்க மாட்டாது. எனவே தான் அவர் வழி வந்தவருக்கெல்லாம் புரட்சி என்றதும் மருட்சி ஏற்பட்டு விடுகிறது. மருட்சி அவர்களைக் காப்பாற்றாது. மருட்சிகொண்டோன், பலப்பல கொடுமையான காரியங்களையும் கூசாது செய்வான். எனினும், எச்செயலும் புரட்சிப் புயலில் அவனைச் சிக்கவைக்காது போகாது. இது சரித்திரம்.
எதேச்சாதிகாரிகளுக்கு அரசியல் அதிகாரம் கிடைத்தால், அதனை வைத்துக்கொண்டு சட்டம் கொண்டு புரட்சியை ஒடுக்கப் பார்ப்பர். ராணுவ பலமிருப்பின் புரட்சிக்காரரை சுட்டுக் கொல்லுவர். இரண்டுமின்றி நமது நாட்டில் அந்த நாளிலே இருந்ததாகக் கூறப்படும் ரிஷிகளாக இருப்பின் சபித்து விடுவர். இன்று அந்த 'ரிஷி பரம்பரையில்" வந்தவராகக் கருதப்படும் காந்தியாரும், அவரது பூசாரிகளும், ஒழுங்கு நடவடிக்கை எனும் தண்டத்தை வீசுகின்றனர். ஒன்றுமே இல்லாத பேர்வழிகள் எதோ தங்களாலான விதத்திலே தமது சமர்த்தைக் காட்ட முற்படுவர். இந்தி எதிர்ப்பை அடக்கி விடலாமென எண்ணவில்லையா? மதுரைக் கோயில் பட்டர்கள், கோயிற் கதவைப் பூட்டிக்கொண்டு, சாவிகளை ஒளித்து வைத்து விட்டுத் தாமும் மறைந்து கொண்டால் ஆலயப் பிரவேசம் அடியோடு நின்று விடும் என்று எண்ணவில்லையா ? அத்தகைய கோமாளித்தனமான முறைகள் கையாளப்படுவதற்குக் காரணம் யாது? அவர்களின் மன மருட்சிதான் காரணம். புரட்சியின் சக்தி அப்படிப் பட்டது.
சுயமரியாதை இயக்கம் ஆரம்பிக்கப்பட்டுப் பல புதிய கருத்துக்களை புகுத்திப், புரட்சியைக் கிளப்பிய போது, மருண்டவர் எத்தனை பேர் ! மருட்சியின் காரணமாக அவர்கள் ஆடிய ஆட்டமும், போட்ட கூக்குரலும் கையாண்ட இழிவான முறைகளும் கொஞ்சமா !
அதைப்போன்றே "தமிழ் நாடு தமிழருக்கே" என்ற புரட்சிக் கீதம் பாடப்பட்டவுடன், யாராருக்கு மருட்சி ஏற்பட்டது ! மருட்சி காரணமாக, கோமாளித்தனமே குறை நீக்கும் மருந்தெனக் கருதும் ஆசாமி முதற்கொண்டு, கோபக்கனலால் எதிர்ப்போரைத் தகித்து விடலாம் எனக் கருதிய காங்கிரஸ் மந்திரிகள் வரையிலே, என்னென்ன பேசினார்கள்! புரட்சி, அவ்விதமாக வெல்லாம், அவர்கள் மனதை மருட்டி விட்டது.
பிரசாரகரோ, பத்திரிகையோ நாட்டிலே இவர்கள் மீது எழுந்துள்ள எதிர்ப்பையே எடுத்துக் காட்டி வருகின்றனர்; இவர்களாக எதிர்ப்பை உற்பத்தி செய்வதில்லை. எதிர்ப்பை எழுப்புவது, ஆட்சி முறைகளின் விளைவுகள். அவர்களின் போக்கு, பேச்சு, புதிய சட்டங்கள், புதுப்புது வரிகள். இவைகள் நாட்டிலே அதிருப்தியை-வெறுப்பைக்- கொதிப்பைக்- கிளப்பி, எதிர்ப்பு என உருண்டு திரண்டு வருகிறது. அந்த எதிர்ப்பு என்ற 'ஜ்வாலை 'யின் பொறிகளைத் தாங்கி வருவன பத்திரிகைகள், பிரசாரங்கள். பொறிகளை அணைத்து விடுவது ஜ்வாலையை அணைத்ததாகாது.
"உண்மையைக் கேள், குழந்தாய் ! ஜ்வாலை விட்டு எரியும் பெருந் தீயிலிருந்து நான்கு பக்கமும் பொறிகள் பறந்து செல்வது போல்" என்று உபநிஷத்தில் ஒரு இடத்தில் வருவதாகக் கூறுகிறார்கள்.
பொறிகளைக் கண்டு மருண்டு அவைகளை அழித்து விட்டால் பயனில்லை. 'ஜ்வாலை' இருக்கிறது, பொறிகளை, எண்ணற்ற பொறிகளை எடுத்தெடுத்து வீச !
எனவே, மருட்சி கொண்டவர் செயல் ஒருபோதும் புரட்சியை அடக்கிவிடாது என்பதை ஆட்சி செலுத்துவோருக்கு, நாம் எடுத்துக்காட்டுகிறோம்.