உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை நாடகங்கள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை நாடகங்கள்

செம்பியன் என்பன பொதுப் பெயர்களே ஆம். பொருளீட்டுவார் செல்லும் காடு, மொழி பெயர் தேயமாம் வடநாட்டதே ஆம். இவை எல்லாம், யாவரும் அறிந்தவையே ஆதலின், "செம்பியன் யார்? குட்டுவன் யார்? புல்லி யார்?" என அறியாதபோதும் இப் பாடல் இனிக்கவே செய்கின்றது.

வரலாற்றுச் சிறப்புக் குறிப்புக்களையும் பொதுமை உண்மைச் செய்திகளாக விளங்குமாறு புனைந்துரைத்தமையே இங்குள்ள சிறப்பு. ஆகவே, மாமூலனார் சிறந்த பாவாணர் என்பதில் ஐயமில்லை. "யோகிகளாய் உபாயங்களால் முக்காலமும் உணர்ந்த மாமூலர் முதலியோர், அறிவன் தேயத்து அனைநிலையோர் ஆவார்" என நச்சினார்க்கினியர் இவர் பெருமையைப் பேசுகிறார். உலகினை விட்டொழியாமலே உலகிற்கும் அப்பாலான உயிர்நிலையாய அன்பின் உண்மையைக் கண்ணெதிரே உயிர் ஓவியமாக எழுதிக் காட்டும் வியப்பினை என் தலைவியின் உள்ள நிலை, அதில் ஒன்றாய்க் கலந்துவிட்ட தலைவன், தன்னையே அழிய மாறி அவளுக்கு என வாழ எடுக்கும் முயற்சி, இவர்களோடு ஒருங்கு துடிக்கும் தோழியின் நெஞ்சம் - இவற்றின் ஒற்றுமைக் காட்சியாக இப்பாடல் விளங்குகிறது. புறத்தோற்றம் எல்லாம், உவமையும் குறிப்புமாக, இந்த உயிரோவியத்தினை எழுதும் கிழியாக அமைகின்றது என்பதும் பின்னர்த்தான் தெளிவாகிறது. புறமும் அகமும் ஒற்றித்து அன்புச் சுடராய் ஒளிர்கிற அழகே, அழகு! உயிராவணமிருந்து உற்று நோக்கி உள்ளக் கிழியில் உரு எழுதி நம் கைத்தருகிறார் மாமூலனார்.

🞸🞸🞸🞸

82