உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை நாடகங்கள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை நாடகங்கள்

அன்பொளிக் குடும்பமாய் உலகம் வாழ்வது போல எத்தனையோ காட்சிகள்! கற்பக மலர்கள்! "இத்தனைக்கும் ஊற்று, நீயன்றோ?" என்று அவர் என்னை அணைக்கவர, நான் எதிர் அணைக்கக் கை எடுப்பது போலக்கண்டதும், உண்மையாகவே என் கை கவ்வியது. ஏமாற்றமடைந்தேன். ஆகாயக் கோட்டை உடைந்தது. எல்லாம் கனவாய் ஒழிந்தன. எதிர்பார்ப்பது வானத்தில் உயர உயர ஏமாற்றமும் கிடுகிடு பாதாளத்தில் ஆழும் அன்றோ? பூத்துயர்ந்த கொடி முறிவதுபோல நெஞ்சுடைந்து நிற்கிறேன்.

தோழி: கனவு நனவாகும். கனவு பலியாதா? என்ன எண்ணுகிறாய்? மரம் எல்லாம், ஒன்றாகவா தழைக்கின்றன. மலர்கின்றன! சில மரங்கள் காலம் தாழ்த்து மலரவில்லையா? அதிலோர் இன்பம் உலகம் கொள்ளவில்லையா!

தலைவி: இளவேனில் இன்றா வந்தது?

தோழி: அவரிருக்கும் இடம் அருகிலா இருக்கிறது? இடைவழி பெருவழியாயிற்றே! வரவேண்டாவா?. அங்கே இளவேனிற் காலம் சிறிது தாழ்த்தும் தொடங்கலாம்.

தலைவி: என்னுள்ளமும் அவருள்ளமும் ஒன்றாயிருந்த காலம் உண்டு. அவர் வருவார் என்று மனத்தில் தோன்றியதும் எதிரே வந்து நிற்பார். இப்போது இத்தனை இன்பக் கனவுகள் கண்டும் எதிர் வரவில்லையே?

தோழி: அடுத்த அறையில் இருந்தா?

தலைவி: அடுத்த அறை என்ன? அடுத்த நாடு என்ன? மனத்தினாற்றல் பெரிது.

தோழி: இவ்வாறு உருகும் உன் மனத்தின் ஆற்றல் இன்று குறைந்ததா? இளவேனில் ஆற்றல் மறைந்ததா?

88