சிறுவர் சிறுமியருக்கு நீதிக் கதைகள்/மோதிரம் அணிந்தவனின் பெருமை
14
மோதிரம் அணிந்தவனின் பெருமை
ஒரு கிராமத்திலிருந்து ஒரு இளைஞன் வேலை தேடி, சென்னைக்குச் சென்றான். அங்கே அலைந்து திரிந்து, ஒரு சிற்றுண்டி சாலையில் பரிமாறும் வேலையில் சேர்ந்தான். கையில் கொஞ்சம் பணம் சேர்ந்தது.
சில மாதங்களில், ஆடம்பரமாக, கிராமத்துக்குத் திரும்பிச் சென்றான்.
கிராமத்து இளைஞர்கள் அவனை வரவேற்று, அவனுடைய சென்னை வாழ்க்கை, வேலை முதலியவற்றை ஆவலோடு கேட்டனர். அவர்கள் சென்னை நகரத்தை பார்க்காதவர்கள்.
எல்லோருக்கும் பெருமையாகப் பதில் சொன்னான் அவன்.
அவர்களில் சிலர் தாங்களும் சென்னைக்குப் போக விரும்பினார்கள். “போனதும் எழுதுகிறேன். நீங்கள் வரலாம்" என்றான்.
அவர்களில் வசதியான இளைஞன் ஒருவன், தான் அணிந்திருந்த மோதிரத்தைக் கழற்றி, சென்னையிலிருந்து வந்திருந்த இளைஞனுக்குப் பரிசு அளித்தான்.
வந்திருந்த இளைஞன், சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றான். அங்கு இருந்த கிராமத்து இளைஞர்கள், “மழை உண்டா? வேளாண்மை எப்படி?" என்று பல கேள்விகள் கேட்டனர். அவர்களிடம், "நம்ம ஊர் ஆற்றிலே மார்பு அளவு தண்ணீர் போகிறது” என்று கூறி, மோதிரம் அணிந்திருக்கும் விரலை, தன் மார்பில் வைத்துக் காட்டிக் கொண்டிருந்தான்.
அவன் மோதிரம் அணிந்திருப்பதை அவர்கள் பார்க்க வேண்டும் என்பது அவனுடைய ஆசை.