உள்ளடக்கத்துக்குச் செல்

பொன் விலங்கு/திறவுகோல்

விக்கிமூலம் இலிருந்து

திறவுகோல்

சிலரே படிக்கலாம், சிலருக்கே படிப்பு வரும், சிலருக்கே படிக்க உரிமை உண்டு!

சிலரே நாடாளலாம், சிலரே போர்வீரராகலாம், சிலருக்கே இந்தக் குணம் உண்டு!

சிலரே வியாபாரம் செய்யலாம், சிலரே பொருள் ஈட்டலாம், சிலருக்கே இது சொந்தம்!

பெரும்பாலோர் உடலால் உழைக்கவேண்டும், கண்ணெனத் தகும் எண்ணும் எழுத்தும் கற்றல் கூடாது, கற்றாலும் வராது, கற்க நினைத்தாலும்—முயற்சித்தாலும் பாபமாகும்—மகத்தான துரோகம்—சமூக விரோத காரியம்—ஆண்டவன் அமைப்பை அழிக்க முனையும் நாத்திகம்!

இப்படி ஒரு ஏற்பாடு—அதுவும் சமுதாய ஏற்பாடு. ஆரியமுறை—சனாதனம்—வருணாஸ்ரமம்—பார்ப்பனீயம்—ஆகிய அனைத்தும் இதற்குள்ள ஒரே பொருள் தரும் பல சொற்கள்!

இது திராவிட சமுதாயக் கண்ணோட்டத்துக்கு மாறுபட்டது—முரண்பட்டது—விரோதப்பட்டது! ஆண்டி அரசனாகலாம்—அரசன் ஆசிரியனாகலாம்—பொற்கொல்லன் மகன் ஏர் உழும் உத்தமனாகலாம். வில்லேருழவர் சொல்லேருழவர் ஆகலாம். திரும்பவும் இவர்கள், அவர்கள் தொழிலை மேற்கொள்ளலாம்! பிறப்பின் காரணமாக, இறக்கும் வரை என்றென்றும், இறந்த பிறகும், உயர்வு தாழ்வு பேசி சமூகத்தைப் பல கூறுகளாக்கி, ஒன்றோடொன்று கலக்கவிடாமல், ஒட்டவிடாமல், வெட்டி வைத்துப் பிளவு படுத்தி, சிதறிக்கிடக்கச் செய்வது என்பது திராவிடர் கலாச்சார மல்ல—முக்காலுமல்ல. அகச்சான்று புரச்சான்று எல்லாம் இந்தக் கோட்பாட்டிற்கு உண்டு அரணாக !

ஆரிய கலாசாரத்தின் ஆணிவேர், அந்த அனர்த்தம் அழிவின் மறு தோற்றம் ! எல்லா நலன்களும் சிலருக்கு— நிலையான கேடு பலருக்கு ! சிலருக்கு வாழ்வு உருசி—மற்ற அனைவருக்கும் வாழ்வு கூனாக்கும் தாங்கமுடியாதப் பெருஞ் சுமை ! அந்தச் சிலர், சமுதாய விரோதமான இழி செயல்கள் மேற்கொள்ளலாம். இழவு அவர்களை அண்டாது ! இப்படி விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது அதற்காண 'அற' நூல்களில் ! மற்றவர், இப்படி நடத்தல் கூடாது—நடக்க நினைத்தல் கூடாது—அந்த அறநூல் அறுதியிட்டுக் கூறுகிறது ஜயத்திற்கு இடம் வைக்காமல்—இரண்டு அருத்தப் படுத்தும் சிக்கலில் தள்ளாமல் !

சிலர் செய்யும் கொடுஞ்செயல்கள் தருமம் கொலை—தருமம், களவு— தருமம், காமம்—தருமம், அவைகளையே மேற்கொள்ளுவது சாஸ்திர விரோதம்—சண்டாளம்—கடுமையாக தண்டிக்கப்பட வேண்டிய தீயச் செயல்கள்! அதே சாஸ்திரம், இரட்டை நாக்குக் கொண்டு அறநெறி பேசுகிறது—இல்லை—பிதற்றுகிறது!

இது பழங்கதை! நூல் வடிவிலே—அதுவும்—அறநெறிச் சுவடி என்ற போர்வையிலே, இன்றும் பூஜைக்கும், புகழ்ந்தேத்தலுக்கும் உரிய பக்குவம் நிரம்பிய நூல்களாக, நாட்டில் நடமாடிக்கொண்டு இருக்கின்றன. நூலாக மட்டுமல்ல, படித்தவர் பாமரர் முதலிய பல்லோர் நாவிலும், நடைமுறை நினைப்பிலும் செயலிலும், இன்றும், அந்த அக்கிரம ஏடுகளின் ஆதிக்கம் பேயாட்டம் ஆடிக்கொண்டு தான் இருக்கிறது !

காலமாறுதலின் தாக்குதல், அந்த மனித விரோத நச்சுக் கொள்கையின் செயல் புரியும் வெகத்தையும், தன்மையையுந்தான். மாற்ற முயற்சித்திருக்கிறதேயல்லாது, அடியோடு அடையாளம் தெரிமுடியாத நிலையில் அழித்து ஒழித்து விடவில்லை. அடிப்படை அதுவேதான்—உருவம் வேறு ! தசாவதாரத்தின் பட்டியலிலே சேர்க்கப்பட வேண்டிய புதிய ரூபம்— அதுவும் கோர சொருபம் !

அது, எது? விளக்கம், நீங்கள் படிக்க இருக்கும் இரு கட்டுரைகளும், விரிவு தேவை இல்லை ! போதுமானது, அக்கட்டுரைகளிலேயே உள்ளது !

‘வந்தது விபத்து’ என்று பெயரிட்டு நூல் வடிவுகொண்ட இரு கட்டுரைகளையும், அந்தக் காலக்கட்டத்திற்கேற்பப் பெயரிடப்பட்டது. காலமாறுதல், 'பொன்விலங்கு' என்று அதே கட்டுரைகளுக்குப் பெயரிடத் தூண்டியது. பொறுத்திடுக! சீற்றம் நீங்குக!

வணக்கம்
பதிப்பகத்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பொன்_விலங்கு/திறவுகோல்&oldid=1644319" இலிருந்து மீள்விக்கப்பட்டது