உள்ளடக்கத்துக்குச் செல்

பொன் விலங்கு/பழங் கதை !

விக்கிமூலம் இலிருந்து

பழங் கதை !
(காஞ்சி—கல்யாணசுந்தரன்)
—(::)—

னு, மனித குலத்தின் பகைவன். மாந்தாதா, அவன் கூட்டுத்தோழன். யாக்ஞியவல்கியனுக்கும் அதே உறவு முறை.

வேதன் தோற்றுவித்தது நான்கு ஜாதி. அதற்கு விளக்கம் தந்தவர் வேதவியாசர்.

பிர்மாவின் முகத்திலே பிறந்தவர் பார்ப்பனர். தோளிலே, துடையிலே, பாதத்திலே பிறந்தவர்கள் முறைப்படி க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர்.

ஒவ்வொரு வகுப்பினருக்குத் தனித்தனித் தொழில். பொதுவாக மூன்று குலத்தவர்க்கும் சிறப்பாகப் பார்ப்பனருக்கும், ஏவல் செய்து எடுபிடியாக வாழ்வதற்கே சூத்திரர் பிறப்பிக்கப்பட்டனர்.

குலத் தொழிலை விட்டு விலகுவதோ, விலக நினைப்பதோ, வெறுப்புக் காட்டுவதோ, அலட்சியப்படுத்துவதோ கூடாது—கண்டிப்பாகக் கூடாது. வேதம் இதனை வரையறுத்தி வற்புறுத்துகிறது. கீதாசிரியன் இதனை போதிக்கிறான், உயர்ந்த ஞானம் என்று.

இதற்குப் பெயர் தர்மம் ! இதனைச் செய்—அதனைச் செய்யாதே என்று ஒவ்வொரு குலத்துக்கும், கடமைகள் இன்னின்ன என, தேவ கட்டளை இருக்கிறது. உரிமை ஒரு குலத்துக்கும் கிடையாது, பார்ப்பனர் நீங்கலாக.

கடமையைச் செய்யத் தவறினால் கடுந்தண்டனையுண்டு. மூக்கறுத்தல்—நாக்கறுத்தல்—காதைக்குடைந்தெடுத்தல்— கண்ணைக்குத்திக் குருடாக்கல்—புட்டத்தைச் சிதைத்தல்—கால் கைகளைத் துண்டித்தல்—தண்டனையின் பட்டியலில் காணப்படும் சில, இவை !

முதல் குலத்துக்கு இது விதி விலக்கு. வேதனின் முகத்திலே பிறந்ததால், அவர்களை, இந்தக் கொடுமை அண்டுவதில்லை—அண்டவும் துணிவது இல்லை.

மனுவின், காருண்ணியம் நிறைந்த விசித்திர திருஷ்டி இத்தண்டனைகள்—இல்லை—சட்ட திட்டங்கள்—நல்ல தீர்ப்புகள் !

ஓரவஞ்சனை—பாரபட்சம்—அக்கிரமம்—அநீதி—கயமை—என்றெல்லாம் கூறுவர், இதனை, நீதியின் இலட்சணம் அறிந்தோர், நேர்மையின் தன்மை தெரிந்தோர், மனிதப் பிறவியின் பெருமை உணர்ந்தோர். மனுவிஷயத்தில் இவ்வளவும் வெறும் பழிச்சொல்லாகி விடுகிறது. அதனைத் தீண்டுவதும் இல்லை இந்த அறுவெறுக்கத் தகுந்த குணவிசேஷங்கள் !

புல்வாயின் எலும்புகள், குகை வாயிலே குவிந்துகிடக்கக்கண்ட, புலிக்குட்டிகளிடம், தாயைப் பழித்தது கூறும் தன்மை இருக்க முடியுமா? தாயிடத்திலே தனி மதிப்பும், தாயின் திறத்திலே தளராத நம்பிக்கையும் புலிக்குட்டிகளுக்கு இருப்பது இயற்கைதானே ?

புலியின் பசிக்கு இரையாகியதால், தாயைப் பறிகொடுத்து, துன்பத்தில் சிக்கித் துடிதுடிக்கும் புள்ளிமான் குட்டிகளுக்குத் தங்களை இக்கெதிக்களாக்கிய புலியிடம், அன்பா பிறக்கும்? ஆசையா தோன்றும்? அச்சமும் அசூயையும்தானே மான்குட்டிகளின் உள்ளத்தில் நிரம்பி இருக்கும்?

பார்ப்பனர் படிக்கலாம், பாடலாம், ஆடலாம், ஆண் பெண் வேற்றுமையின்றிக் கூடலாம், குலவலாம், பாடுபடாமல் பிறர் உழைப்பாலே வாழலாம். வளமாக வாழ்க்கை நடத்தலாம். சூத்திரருக்கு இந்த உரிமை கிடையாது. இதுபற்றி எண்ணவும் கூடாது—எண்ணுவது மகாபாதகம்—இம்மையிலும் கடுந்தண்டனை—மறுமையிலும் நரகவேதனை உண்டு.

சம்பூகன் ஒரு சூத்திரன். பார்ப்பனருக்கு மாடுபோல் உழைப்பதை மறந்தான். காட்டில் சென்றுதவம் செய்து, 'பிறவிப் பெருங்கடல்' நீந்தும் பெரும் பணியில் ஈடுபட்டான். சம்பூகன் பிறவாப் பெரியோனை நினைத்துக் கடும்புலிவாழும் காட்டில் கண்மூடி உட்கார்ந்தான், அயோத்தி நகர அக்ரகாரத்தில் பார்ப்பனக் குழந்தை ஒன்று முடிவாகக் கண்ணை மூடிவிட்டது. குழந்தையைப் பெற்றோன், தசரதராமனின் அனுமதியின்றி அந்தப்புறம் சென்று, 'அடுக்குமா இராமா? உன்னுடைய ஆட்சியிலே இத்தகைய உற்பாதம் ஏற்படலாமா? தர்மம் தொலைந்ததே ! அதர்மம் கோலோச்சுகிறதே ! சனாதனம் சாய்ந்ததே ! சண்டாளத்துவம் உச்சம் பெறுகிறதே ! சம்பூகன் தவம் செய்கிறான் ! அவன் சூத்திரன் ! அவன் கடமை தவம் செய்தல் அல்ல ! ஆண்டவனை அடைய அவன் முயற்சிப்பது அடாது! சுதர்மத்தைச் சுக்கு நூறாக்குகிறான் ! சனாதனத்தைச் சீரழிக்கிறான் ! பிராமணோத்துமர்களுக்குப் பணிவிடை செய்வதன்றோ சம்பூகன் கடமை ! சூத்திரனான சம்பூகன் குலதர்மத்தைக் கைவிட்டதால், ஜாதி ஆசாரத்தைத் துறந்ததால், அடிமை நிலையை உதறித் தள்ளியதால், தர்மம் கெட்டது—தர்மம் குலையவே, என் குழந்தை இறந்தது! சூத்திரனின் துடுக்கடக்குங்கள் ! தவக்கோலம் கொண்ட தருதலையின் தலையை வெட்டி வீழ்த்துங்கள் ! குலதர்மத்தை மீறுவோருக்கு அது ஒரு படிப்பினையாக இருக்கட்டும் ! முன்பின் யோசிக்காதே ! தவசியைக் கொல்லலாமா என்று தயக்கம்காட்டாதே தர்மசொரூபிநீ ! அரசன் நீ! அரசனின் கடமை அதர்மத்தை தர்மத்தை நிலைநாட்டுவது ! தர்மம் இது என சனாதனம் கூறுகிறது ! அதனை துச்சமாக மதித்து நடந்து விட்டான் சம்பூகன் ! போ! போ! தர்மத்தைக் காப்பாற்ற, தவம் செய்யும் சூத்திர சம்பூகனின் தலையை தயை தாட்சண்யம் பார்க்காமல் வெட்டி வீழ்த்து ! தர்மாத்மா என்ற புகழுக்குரியவனாக, அப்பொழுதுதான், இராமாபிராமணர், உன்னை ஏற்றுக்கொள்வர் !" என்று கதறினான்.

சம்பூகன் தலை, ராஜா ராமனால் துண்டிக்கப்பட்டது. பார்ப்பனக்குழத்தை உயிர்பெற்று எழுந்தது !

துதான் பிராம்மணியம்—சனாதனம்—வருணாஸ்ரமம்—முதல் போடாத ஆரிய சுரண்டல் இயந்திரம்.

இந்தச் சுரண்டல் அமைப்பு முறையில், தொழில்தூற்றப்பட்டது, உழவு பழிக்கப்பட்டது; மானம் நிந்திக்கப்பட்டது; வீரம் வாழ்க்கையை விட்டே விரட்டப்பட்டுவிட்டது.

தொழிலுக்கு பதில் தூபதீபம், உழவுக்குப் பதில்யாக யோகம், மானத்துக்குப் பதில் உயர், வீரத்துக்குப் பதில் வஞ்சகம், நாட்டு மக்களிடம் புகுத்தப்பட்டது.

வாள் இருந்த இடத்தைப் புல் பற்றிக்கொண்டது. அரிமா இருந்த இடத்தில் நரி அமர்ந்து விட்டது.

அறிவு அகற்றப்பட்டு, மாயை பற்றிய பேச்சு வலுத்தது, மனிதனை மனிதனாகவே கண்டு பழகும் நிலைதொலைந்து, மனிதனைப் பிறப்பினாலேயே தாழ்ந்தவன் உயர்ந்தவன் என்று பேசி வெறுக்கும் ஜாதி வேற்றுமை வளர்ந்தது.

அறம், பொருள், இன்பம் பற்றி மட்டுமே பேசி, மக்களை நல்வழிப்படுத்தும் தமிழ்நூற்கள் பலவும் மறைக்கப்பட்டு விட்டன. கடல் கொண்டது—செல்லறிக்கப்பட்டது என்று ஒழிக்கப்பட்டு விட்டன தமிழ் நூற்கள் பலவும்.

ஆரிய வேதம், வெற்றிக் களிப்போடு பவனி வந்தது, இதிகாச புராணங்கள் இடம் பெற்றன. கீதை கொலுவேறிற்று. தமிழ் மொழியும், அதனடியாகப் பிறந்த வாழ்க்கை வழியும், நாட்டைவிட்டு அறவே அழிக்கப்பட்டு, அகற்றப்பட்டு விட்டன.

மாயாவாதம் மக்கள் மன்ற மேறிற்று. 'மண்ணாவதுதிண்ணம் வாழ்வாவது மாயம்' என்ற போலித் தத்துவம் மக்களை மிருக நிலைக்கு இழுத்துச் சென்று விட்டது. மோட்ச நரகம் மக்கள் மூளையில் ஆசையையும் அச்சத்தையும் மூட்டியது.

நாடு காடாயிற்று. நாட்டு மக்கள், உயர்ந்த மக்கள் நிலையிலிருந்து மாக்கள் நிலைக்குப் போய் விட்டனர். வாழ்க்கை வாழ்வதற்கே என்ற உண்மையை மக்கள் மறந்தனர். வாழ்வு கசந்து விட்டது. தன்னம்பிக்கை போய் விட்டது. தெளிவு போய்ப் போதை! ஒளிபோய் இருள்! அழகு போய் அசிங்கம்! அறம் போய் மறம்!

வஞ்சகத்துக்கு வரவேற்பு—சதிக்கு மதிப்பு—சூழ்ச்சிக்கு மரியாதை— நாட்டு மக்களின் நிலை இந்த அளவிற்குத் தடுமாறிப் போய் விட்டது.

உலக வாழ்வு ஒரு கூட்டத்தின் சொத்தாயிற்று. சுகம், அந்தக் கூட்டத்தின் உடன் தோன்றியதாயிற்று. கல்வி, அக்கும்பலின் பிறப் புரிமையாயிற்று.

சம்பூகன் போன்ற தியாகிகள் தோன்றவில்லை, உரிமையைப் பெற உயிரைப் பணயம் வைக்கும் இயல்பினர் ஏற்படவில்லை. விபீஷணர்கள், சுக்ரீவர்கள், அனுமான்கள் கூட்டம் பெருத்தது!

சாகப் பிறந்த நமக்குப் படிப்பெதற்கு? வேலை செய்யப்பிறந்த நமக்குப் படிப்பெதற்கு? கல்வி கற்றாலும் நமக்கு வராது! நாம் அடிமை; எண்ணும் எழுத்தும் நமது நாவிலே நுழையாது! அது பார்ப்பனர்களின் தொழில்—பிறப்புரிமை—என்ற நினைப்பு, அழிக்க முடியாத நிலையில், ஆழப்பதிந்து விட்டது இந்த நாட்டில்.

வீரர்களை வீழ்த்த, சமரசம் பேசினவர்களைச் சிதைக்க, சமத்துவம் போதித்தவர்களைச் சாய்க்க, சாணக்கியர்கள்—காகப்பட்டர்கள்—வெங்கண்ணாக்கள்—உமிச்சந்துகள் தோன்றலாயினர். பொய் மலிந்த புராணபுருஷர்கள் அல்ல இவர்கள்; வரலாற்றிலே இடம் பெற்றுள்ள நல்லவர்கள் !

மனுவின் ஏற்பாட்டால், சனாதன தர்மத்தால், பார்ப்பனர் ஒருவரே உயர் வாழ்வு வாழமுடிந்தது; மற்றவர்களைத் தங்கள் கருத்துக்கிசைய ஆடச் செய்ய முடிந்தது; மற்றவர்களைக் காலடியில் போட்டு மிதித்துத் துவைக்க முடிந்தது.

பிராம்மணீய ஏற்பாட்டால் சகல சம்பத்தும், பார்த்த உடனே உயர்ந்தவன் என்று பிறர் புகழ்ந்து கூறும், உலகத்தில் வேறு எங்கும் எவருக்கும் கிடைக்காத பெரும் பேறும், அனைவரும் அடிபணியும் சிறந்த அந்தஸ்தும், பார்ப்பனர் பெற்றனர்—பெற்றும் வருகின்றனர் மேலும் பெறுவதையே நோக்கமாகக் கொண்டுள்ளனர். நோக்கம் மட்டும் என்று கூறுவது உண்மையாகாது—செயலளவில் அதனைக் காட்டியும் வருகின்றனர் என்பது தான் முழு உண்மையாகும்.

"இந்தச் சத்திரத்தில் உங்களுக்கு அறுசுவை உணவு பணம் பெறாமல் அளிக்கப்படும் சோற்றோடு மட்டும் அல்ல. பொற்காசுகள் கூட தட்சணையாகக் கொடுக்கப்படும். நடந்து வரவேண்டிய சிரமம் உங்களுக்குக் கிடையாது. நாங்கள் தூக்கிச் செல்லும் பல்லக்கிலே ஏறிக்கொண்டு வந்து உணவு அருந்தலாம்" என்று கூறி விருந்தும் தட்சணையும் கொடுத்து, பல்லக்கிலும் ஏற்றி அனுப்புகிறவனை, இந்த நல்ல ஏற்பாடு ஒரு நாள் மட்டுந்தான் என்று இல்லாமல், சந்திர சூரியர் உள்ளளவும் என்று பலமான ஏற்பாடு செய்திருப்பவனை, உண்டு களித்தவன், களித்துக் கொண்டு இருப்பவன், போற்றத்தானே செய்வான்—புகழத்தானே செய்வான்—அதற்கு ஆபத்து வரும் பொழுது காக்கத்தானே பாடுபடுவான்.

செந்நெல்லை பாடுபட்டுப் பயிரிட்டுத் தந்தவன் உமிநீக்கி அரிசியாக்கித் தந்தவன், காய்கறியை உற்பத்தி செய்து கொடுத்தவன், திருத்தம் செய்து கொடுத்தவன், கட்டை வெட்டிக் கொடுத்தவன், அவ்வளவு பேரும் பசித்திருக்கும் நேரத்தில் அவர்களைப் பார்த்து, "அடிமைகளே! சோறு உங்களுக்கு இல்லை! வெட்டிச் சாய்த்து விட்டீர்களோ வீணர்களே! இங்கே ஒரு பிடி சோறும் உங்களுக்கு இட முடியாது! சாகப்போகும் சடலமடா இது! சோறு போட்டுக் காப்பாற்றுவதா மண்ணாய்ப்போகும் கட்டையை? பசியைப் பொறுத்துக் கொள்ளுங்கள்! தியாகத்தின் மேன்மையைத் தெரிந்து கொள்ளுங்கள்! பொறுமையோடு போக மறுத்து அடம் பிடித்துக் கொண்டு இருப்பீர்களானால், அடித்து விரட்டுவேன்! தடிகொண்டு நையப் புடைப்பேன்; நற்பாடம் கற்பிப்பேன்! என்றெல்லாம் ஆர்பாட்டம் செய்பவனை, பாடுபட்டவர்கள், கோபிக்காமல் இருப்பாரா ? கொதிக்காமல் இருப்பாரா ? வாய்ப்பு நேர்ந்தால் அவனுக்கு நல்லபாடம் கற்பிக்காமல் இருப்பாரா ?

இந்தப் பொதுவிதியையும் கடந்து நிற்பது மனுதர்மம்—பிராம்மணிய ஏற்பாடு. இது கண்ணுக்குத் தெரியாத உருக்கிரும்புக் கோட்டை. கடவுள், தலைவிதி, மோட்ச நரகம், முன்ஜென்மப் பின்ஜென்மம் என்ற 'வன்மை மிக்க, காவலாளிகளால் காக்கப்படுவது! எனவேதான், இதனை உடைத்தெறிந்து, புதுநிலையை நாட்டில் தோற்றுவிப்பது என்பது, நினைத்ததும் நடந்து விடக்கூடிய இலகுவான காரியமாக இருக்கவில்லை.

இதன் தாக்குதல் வெளியிலிருந்து வருவது அல்ல; உடன் பிறந்தே கொல்லும் வியாதியைப் போன்றது. களத்திலே கலங்காத வீரனும், வர்ணாஸ்ரமத்தின் வாடை வீசின விநாடியிலேயே கைகால் நடுக்குறுகிறான்?

ஆங்கிலேயர் நுழைந்தனர். ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி இருக்கும் கொக்குபோல வந்த ஆங்கிலேயர்களுக்கு, ஆரியம் வரவேற்பு கூறியது. கண்ணும் கருத்தும் நல்ல நிலையில் இருந்தவர்கள் அவர்கள் தானே? ஊரின் தன்மையை ஊமையிடமா கேட்டுத் தெரிந்துகொள்ள முடியும்? விழிப்பாக இருந்தவர்கள் வெள்ளையரோடு உறவாடி, வெள்ளையர் ஆட்சியால் விளைந்த நன்மைகள் பலவற்றையும் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டனர்.

அரசாங்க அலுவல் அகம் அனைத்தும் அந்தக் கூட்டத்தின் பாசறையாக மாறிவிட்டது. சில ஆண்டுகளுக்குள் அவர்கள் கூறிய 'அறிவுரை'யின் படியே ஆங்கிலேயர்களும் ஆட்சி நடத்தி வந்தனர். இதற்கான ஆதாரங்கள் பல உண்டு வரலாற்றுச் சுவடியிலே, காந்தியாரைக் கைது செய்ய மந்திராலோசனை கூறியவர் காலம் சென்ற மகாகனம் சீனிவாச சாஸ்திரியார்தான் என்பதை எப்படி மறந்துவிட முடியும்? காசிராஜனையும் ராஜகோபாலனையும் தூக்கிலிட வேண்டுமெனத் திறமையாக வாதிடவில்லை அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் என்று வாதிட முடியுமா? தேசீய உணர்ச்சியோ எகாதிபத்திய மோகமோ இது?

ஆங்கிலேயனுக்கு இருந்த மனிதப் பண்பு, கிரிமினல் குற்றத்துக்காக ஜாதி வித்தியாசம் காட்டி, குலத்துக்கொரு நீதி போதித்த மனுவை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது. ஆனால் சிவில் சட்டமான 'இந்து லா' மட்டும் மனு, மாந்தாதா, பராசர், யாக்ஞய வல்கியர் போன்ற ஆரிய சிரேஷ்டர்கள் வகுத்த வழியை ஏற்றுக் கொண்டது. இந்திய புதிய அரசியல் சட்டத்துக்கு, இன்று நடை முறையில் உள்ள 'இந்து லா' பலவகையில் முரண்பாடு உடையதாகும். எனவேதான் திருத்தம் செய்யும் முயற்சி இருந்து வருகிறது.

வருணாஸ்ரம பொறியில் சிக்குண்டு, படிப்பு வராத இனம் என்று மனமாற நம்பி, நொந்த வாழ்வு வாழ்ந்து கொண்டுருந்த சமுதாயம், கல்வி ஞானம் இல்லாமல், கடைத்தேற மார்க்க மில்லாமல், வாழ்க்கையின் சுவையை ருசி பார்க்க வேண்டுமே என்ற கவலை இல்லாமல், பிறப்பதும்—உயிரோடு இருப்பதும்—காலம் வந்தால் மறிப்பதுமாகக் காலங் கழித்துக் கொண்டு வந்தது.

படிக்க வேண்டுமென்ற எண்ணத்தை பாராள வேண்டு மென்ற நினைப்பை, வாழவேண்டும் என்ற விருப்பத்தை, பல நூற்றாண்டுகளாகவே மறந்து கிடக்கிற சமுதாயத்திடம் தோற்றுவிப்பது என்பது கனவிலும் நினைக்க முடியாத காரியமாகும்.

நம்பிக்கை, அதிலும் மூட நம்பிக்கை, கட்குடியிலும் காமத்திலும், அதிகமாக மயக்கம் தரக் கூடியது. கொடுகஞ்சான அபின் மருந்திலும் ஆபத்தானது மூட நம்பிக்கை ஆரியம் பூட்டிய அறிவு அடிமைத்தளைகளை ஆங்கில அடிமைத்தனம், அறுத்தெறிய வேண்டா வெறுப்பாக முனைந்தது. கால வேகம் இதற்குத் துணை செய்தது.

ஆரிய மயக்கம் சிறிதளவு தெளிய ஆரம்பித்தது கல்வி நீரோடையின் காட்சியைக்காண், படிப்புவராத இனத்தில் குறைந்த அளவு எண்ணிக்கையினர், நீரோடை அருகில் சென்றனர்; நிலைமை கொஞ்சம் கொஞ்சமாகத் தெளிவுபட ஆரம்பித்தது. ஆரிய இருளால் சூழ்ந்து கிடந்த தமிழ் வானத்தில் ஆங்கிலக் கல்வி என்னும் விடி வெள்ளி தோன்றலாயிற்று.

வேதம் விதித்த ஆசாரங்களை விண்ணிலே பறக்கவிட்டனர் வேத வித்துக்கள், வடமொழி ஆங்கிலத்துக்கு இடம் கொடுத்து விட்டது. வேதங்களைப் பாராயணம் செய்த வாய் ஆங்கிலத்தை ஆர்வத்தோடு பாராயணம் செய்ய முனைந்து விட்டது. வால்மீகியை மனனம் செய்து கொண்டிருந்தவர்கள் ஓமரை ஸ்மரிக்க ஆரம்பித்தனர். சாகுந்தலம் கற்பதை விட்டு ஷேக்ஸ்பியரும் ஷெல்லியும் கற்க முற்பட்டனர்.

ஸ்ரீமந் நாராயண மூர்த்தியை சேவித்து வந்தவர்கள் வெள்ளைக்கலைக்டர் துரையைச் சேவிக்கத் தலைப்பட்டனர். பிரம்மாவையும் ருத்திரனையும் தோத்தரித்து வந்தவர்கள். கவர்னர் துரையையும் வைசிராய் பெருமானையும் வலம் வர ஆரம்பித்து விட்டனர்.

உச்சிக் குடுமி இருந்த சிரசில், அத்துடன் கிராப்பும் இடம் பெற்றது. பஞ்சகச்சம் 'டிரவுசரா'ல் மறைக்கப்பட்டது. பிறந்த மேனி சொக்காயால் மூடப்பட்டது. மாட்சிமை பொருந்திய மன்னர் பிரான் சர்க்கார் ஒழுங்காக நடைபெற ஆரம்பித்தது.

காயத்திரி மறந்து போய்விட்டது, நாலு ஆஸ்ரமமும் நிலை குலைந்து போய் விட்டது. வேள்விப் புகை இல்லை வேத கோஷம் இல்லை. எல்லாம் தொலைந்தது. காலத்துக்கேற்ற கோலம் பூணும் நாடகம் தான் நிலைத்து நின்றது.

உருவத்திலே மாற்றம்—தொழிலிலே தலை கீழ் புரட்சி—வாழ்க்கையிலே திருத்தம்—இவ்வளவு மாறின பின்னரும், உள்ளம் அப்படியே இருந்தது. உள்ளத்திலே மனு மறைந்திருந்தார்; நால் வருண ஆசார ஆபாசம் புகுத்திருந்தது; தான் உயர்ந்தவன்; மற்றவன் தாழ்ந்தவன்—அடிமை என்ற ஆணவம் நிரம்பி இருந்தது !

அதே ஆபாசமான அடிப்படையின் மீது, நாகரிகமான கட்டிடம் கட்டப்பட்டு விட்டது.

ஆங்கிலப் போர்வையில் ஆரியம் வட்டமிட்டு வந்தது. ஆரியத்தின் அஸ்திவாரம் ஆட்டம் கொடுக்கத் தொடங்கியபோதிலும், ஆரிய ஆபாசக் கோட்பாடு, ஆங்கில அதிகாரத்துடன் முடிந்தவரையில் ஆட்சி செய்தது, சனாதனம் ஜனநாயகப் பூச்சுடன் ஜொலிக்க ஆரம்பித்தது.

புதிய ஆபத்தை அகற்ற நமது தலைவர்கள் திட்டமிட்டனர். ஆரியத்தின் எதிர்ப்பு ஒரு பக்கம், நம்மவர்களின் ஆரிய மயக்கத்தால் எழுந்த ஆபத்து மற்றோர் பக்கம். பலவித இன்னல்களுக்குப் பிறகு நாட்டாட்சிப் பொறுப்பில் நம்மவர்கள் அமர்ந்தனர். ஆரிய ஆதிபத்தியத்தை அழிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

அரசாங்க அலுவல் அகங்களிலே அமர்த்த நம்மவர்களிலே ஆள்கிடைப்பதில்லை. அதற்கான காரணத்தை ஆராய்ந்தனர். எல்லாவிதக் கல்லூரிகளிலும் நம்மவர் ஆள் அதிகமாக சேர்க்கப்பட்டால்தான், அந்தப் பிரச்னையை ஓரளவிற்காவது சரிக்கட்ட முடியுமென்ற முடிவிற்கு வந்தனர். அதன் விளைவுதான் கம்யூனல் ஜி. ஓ. என்னும் சமூக நீதி முறை.

மனு மாந்தாதாபோல் மனிதப் பண்பை இழந்திருக்கவில்லை நம்மவர்கள். நம்மை இழித்துப் பழித்துப் பேசி, இந்து சமுதாயத்தின் கோடியிலே ஒதுக்கித்தள்ளி, முன்னேற முடியாமல் அழுத்தி வைத்திருந்த சமூகத்தை, பழிக்குப் பழி வாங்க வேண்டுமென்று நம்மவர்கள் எண்ணி இருந்தால்கூட, அது குற்றமுடையது என்று பார்ப்பன சமூகமே கூட கூறத் துணியாது.

நம்மவர்கள் இளகிய மனதோடு நடந்து கொண்டனர். செயலிலே கண்ணியம் இருக்கப் பார்த்துக் கொண்டனர். நடுநீதி வழங்குவது என்ற முடிவிற்கு வந்தனர். பார்ப்பனர்களையும் தம் போன்ற மனிதக் கூட்டத்தினரே என்ற உயர்ந்த நினைப்பு கொண்டனர்.

அடிமை என்று பார்ப்பனர்களை, நம்மவர்கள் கனவிலும் கருதவில்லை. 'சூத்திரர்' என்ற பட்டத்தை அவர்களுக்குச் சூட்டவில்லை, படிக்காதே, பார்க்காதே, தொடாதே, தீண்டாதே, கிட்டே நெருங்காதே என்று ஆணை பிறப்பிக்கவில்லை.

பின் என்ன செய்தார்கள் ? பார்ப்பனர்கள் உள்பட அனைவரையும் ஒன்றாக மதிப்பிட்டார்கள். பார்ப்பனர்கள் எண்ணிக்கைக் கேற்ப—ஏன், அதற்குக் கூடுதலாகக் கூட, பள்ளிகளிலே இடம் கொடுக்க ஏற்பாடுசெய்தார்கள். இதுபேத புத்தியாம் ! பிளவு படுத்தும் சிறுமைக் குணமாம்! ஜனநாயகக் கோட்பாடிற்கு இது முரண்பட்டதாம்!

மக்கள் கூட்டத்தை, ஒரு தாய் வயிற்றுக் குழந்தைகள் போல் பாவிக்காமல், பிளவுபடுத்தி, பிறப்பினாலேயே பேதப்படுத்தி, சமூகத்தைச் சீரழித்தவர்கள், மக்களை அவமதித்து மாபாதகம் புரிந்தவர்கள் இன்றுள்ள பார்ப்பனர்களின் முன்னோர்கள் தான். அவர்கள் வழிவந்தவர்களாக இவர்கள் இல்லாவிட்டால், மனுவைப் போற்றவும், மக்களை அவமதிக்கவும், வருணாஸ்ரமத்தை வாழ்த்தவும், சமத்துவத்தைத் தூற்றவும், இன்றுள்ள அல்லாடியார் முதல் ஆலமரத்துப் பிள்ளையார் கோயில் அர்ச்சகன் வரையில், சல்லடம் கட்டிக் கொண்டு கிளம்பக் காரணம் என்ன ? விளக்கம் கூறவேண்டும் அந்தக் கூட்டம் இதற்கு! கூறுமா?

தென்னாட்டைப் பொருத்த வரையில், கம்யூனல் ஜி. ஓ. திராவிட சமுதாயத்தின்—ஏன்—பார்ப்பனர் உள்பட மனித சமுதாயத்தின் சுதந்தர சாசனம் ஆகும்.

பார்ப்பான், தன்னை மற்றவர்களிலும் உயர்ந்தவன், உடம்பால் உழைக்காமல் வாழப் பிறந்தவன், பிறர் உழைப்பிலே காலங் கழிக்கும் கடமை உடையவன், மற்றவர்கள் எல்லாம் தாழ்ந்தவர்கள், அடிமை வேலை செய்து வாழ வேண்டியவர்கள் என்ற ஆணவத்தை—ஜாதித்திமிரை தொலைத்துத் தலை முழுக முன் வரவேண்டும் தயார் தானா?

வெள்ளையரோடு கைகுலுக்கி, விருந்துண்டு, பால் வித்தியாசம் இல்லாமல் பழகி, பலப்பல ஒழுக்கங்கெட்ட, காரியங்களைச் செய்து, நாகரிக வாழ்க்கையை நடத்தினாலும், பார்ப்பனனின் விழியும் மொழியும், சுய ஜாதியின் பாதுகாப்புக்குத்தானே பயன் படுகிறது? இந்தப் பாழ்பட்ட நிலத்தில் சமுத்துவமும், மக்களாட்சிக் கோட்பாடும், மனித நீதியும் தோன்றாதே — தோன்றினாலும் நிலைத்து நிற்காதே—நிலைத்தாலும் நீடித்து நிற்காதே !

புதிய அரசியல் திட்டம் தீட்டப்பட்டாய்விட்டது. மக்களாட்சி முறைப்படி அல்ல, அத்திட்டம் தீட்டுவதற்கான குழு அமைந்தது. புதிய அரசியல் திட்டம், நேர்மையானது என்று ஏற்றுக் கொண்டுள்ள, வயது வந்தோர் அனைவரின் வாக்குரிமையாலும், தேர்ந்தெடுக்கப் பட்டதல்ல அரசியல் ஆக்க மன்றம். காங்கிரஸ் மேலிடத்தின் கட்டளைப்படி, ஆங்கிலேயர் அளித்த அரசியல் உரிமையின் பலனாக உருவாக்கப்பட்டதுதான் அரசியல் ஆக்க மன்றம். மக்களாட்சி முறை அல்ல இது என எத்தனையோ அறிஞர்கள், எவ்வளவோ முறை இடித்திடித்துக் கூறியாகிவிட்டது.

இந்திய அரசியல் சட்டம் வேதாந்தத்தின் சாரமாம்—அரசியல் வழக்கறிஞர்கள் தீட்டியதாம்—காந்திய அடிப்படையில் அமைத்ததாம்! இப்படி எல்லாம் கூறுகிறார்கள், அல்லாடியின் ஆதரவாளர்கள்.

நடைமுறையில் பார்க்கிறோம்—பார்ப்பதென்ன ? அனுபவிக்கிறோம் —நமது இனத்தின் எதிர்காகல வாழ்வு இருள் சூழ்ந்தது—மறுபடியும் மனுவின் காலத்துக்கு ஜனநாயக முலாம்பூச்சில், சஞ்சரிக்கப்போவதை?

ம்யூனல் ஜி. ஓ. ஒரு மானிட சுதந்தர சாசனம். வாழ்க்கையில் சுகந்தரும் சாதனங்களை எல்லாம், 'இந்து' மதத்தின் 'உயர்' பிரிவினரான பார்ப்பனர்களே தமதாக்கிக் கொண்டு, அதே 'இந்து' மதத்தைச் சேர்ந்த மற்ற வகுப்பினரை அதன் அருகில்கூட வர முடியாத வகையில் வேலி அமைத்துக்கொண்டு, அதைப்பற்றிச் சிந்திக்கக்கூட விடாமல், சிந்திப்பது கூட பாபமென்று, கடவுள் சாஸ்திரமென்ற பெயரால் அறிவையும் உணர்ச்சியையும் மழுங்கச் செய்துவிட்டு, அந்த அக்கிரமக் கோட்பாடு பெரிய அளவில் இன்னும் நடைமுறையில் ஆதிக்கம் செய்து கொண்டு இருப்பது கண்டும், இந்த அடிப்படையைத் தகர்த்து மக்களாட்சி முறைக்குப் பாதை வகுத்துத் தரும் பண்புடைய கம்யூனல் ஜி. ஓ. வை, 'இதோ அரசியல் திட்டம்—ஜனநாயகக் கோட்பாட்டோடு கூடியது—தனி மனிதர் உரிமைகளைப் பாதுகாத்துத் தரும் விதிகள் கொண்டது—இதற்கு கம்யூனல் ஜி. ஓ. முரண்பாடானது'—என்று வாதிட்டு வெற்றிபெறுவது, வருணாஸ்ரம வக்கரபுத்தியின் வஞ்சக விளைவே அன்றி, புதிய அரசியல் சட்டம் புகுத்த நினைக்கும் மக்களாட்சிக் கோட்பாடாகாது.

புதிய இந்திய அரசியல் சட்டம் காண விரும்பும் இந்தியப் பிரஜை— குடிமகன்—இன்னமும் நாட்டில் தோன்றவில்லை. தன்னை ஒரு இந்தியன் என்று, இங்குள்ள ஒவ்வொருவரும் நினைத்துக் கொள்ளும் மனவளம் அல்லாடியார் போன்றாருக்கும் தோன்றவில்லை என்பது வெள்ளிடைமலை.

அய்யர், அய்யங்கார், சாஸ்திரி, சர்மா, முதலியார், ரெட்டியார், பிள்ளை, நாயுடு, நாய்க்கர் என்ற ஜாதீயக் கண்களோடுதான், எந்த விஷயத்தையும் நோக்குகிறார்கள். வீட்டிலும் நாட்டிலும் இதே நோக்குத்தான். நீதி மன்றத்திலும் சட்ட புத்தகத்திலும் தான் 'இந்தியன்' என்ற ஏற்பாடும், 'தனி மனிதன்' என்ற தத்துவமும் ஒவ்வொருவர் மீதும் வலுக் கட்டாயமாகத் திணிக்கப்பட்டு இருக்கிறது. எனவே, அல்லாடியார் உள்பட அனைவரும், ஜாதீய உணர்ச்சியை ஒழித்து, 'இந்தியா' என்ற நோக்கும், அதற்கான போக்கும் கொள்ளுகிற வரையில், புதிய அரசியல் கோட்பாட்டின்படி, பிரஜா உரிமை பாதுகாப்புக் கேட்பது, மனித தர்மத்துக்கு அப்பாற்பட்டதாகும்.

'இந்தியன்' அல்ல அல்லாடியார். அதற்கு இன்னும் தன்னைத் தகுதியுடையவராக ஆக்கிக்கொள்ளவில்லை அவர். அல்லாடி கிருஷ்ணசாமி அய்யராகத்தான் அவர் இன்னும் இருந்து வருகிறார். 'நான் உயர்வு, நீ மட்டம்' என்ற ஜாதித் திமிரை அகத்தும் புறத்தும் விளையாட விட்டிருக்கிறவர்களை இந்திய அரசியல் சட்டம், தனக்குச் சொந்தமான குடி மக்கள் என்று ஏற்றுக்கொள்ளவில்லை.

ஆதலால், ஜாதி வெறி கொண்டவர்கள் அதனைத் தொலைத்து தலைமுழுகாத முன்னரே, அரசியல் சட்டத்தின் துணையை நாடுவது, 'இந்தியன்' என்ற சமுதாயத்தைத் தோற்றுவிப்பதற்குப் பதிலாக, இன்று இருந்து வரும் ஜாதீய பாகுபாட்டை என்றென்றும் நீடிக்கவே செய்ய உதவும்.

கல்வி பரவினால் தான், இந்து சமூகத்தின் பின்னணியில் கிடக்கிற பார்ப்பனரல்லாதார் அனைவரும் கல்வி பெற ஏற்பாடு செய்யப் பட்டால்தான், ஜாதி நினைப்பு மாறும்—அதன் விளைவான குறுகிய போக்கும் மறையும். அப்பொழுதுதான், இந்திய அரசியல் சட்டம் எதிர்பார்க்கும் ஜாதி நீங்கிய 'இந்தியன்' இந்த நாட்டில் இருப்பதைக் காணக்கூடும்.

தென்னாட்டைப் பொருத்தவரையில் கம்யூனியல் ஜி. ஓ. அதற்கான சூழ் நிலையை அமைத்துத்தரும், ஒரு அரிய சாதனமாகும். அதனை, ஜாதிய வெறிகொண்டவர்களின் தனிநபர் உரிமைக்குக் கேடு சூழ்கிறது என்று காரணம் காட்டிச் செல்லுபடியற்றதாக ஆக்கிவிட்டால், இன்னும் எத்தனை நூறு ஆண்டுகள் கழிந்தாலும், மனிதப் பண்போடு கூடியவர்களைக் காண முடியாது; அதற்கு மாறாக ஜாதி வெறியோடு கூடியவர்களைத்தான் காணமுடியும். இந்திய அரசியல் சட்டம் தோற்றுவிக்க நினைக்கும் மனிதனை உற்பத்தி செய்யும் பேராற்றல் கம்யூனல் ஜி. ஓ. வுக்கு இருப்பதால், அது, இந்திய அரசியல் சட்டம் இந்நாட்டில் கால் கொள்வதற்குத் துணை நிற்கக் கூடியதேயன்றி, அரசியல் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாட்டைத் தகர்க்கக் கூடியதன்று. எனவே, முரண்பாடு சட்டத்தில் இல்லை; அவரவர்களின் உள்ளத்தில் குடி கொண்டிருக்கும் ஜாதிய கேட்டில் தான் இருக்கிறது.

சுகம் அவர்களுக்கு—துக்கம் நம்மவர்களுக்கு; இன்பம் அவர்களுக்கு— துன்பம் நம்மவர்களுக்கு; உல்லாசம் அவர்களுக்கு—உபத்திரவம் நம்மவர்களுக்கு; உழைப்பின் பலன் அவர்களுக்கு—உழைப்பு நம்மவர்களுக்கு; உரிமை அவர்களுக்கு—கடமை நம்மவர்களுக்கு; கற்பது அவர்கள்—கட்டை வெட்டுவது நாம்; அதிகாரம் செய்வது அவர்கள்—ஏவல் செய்வது நாம்; நிழலிலே அவர்கள்—வெய்யிலிலே நாம்; நெற்கதிர் பக்கத்திலே அவர்கள்—சேற்றுக்கழனியிலே நாம்; மாளிகையிலே அவர்கள்—மேற் கூரையில்லா மண் குடிசையிலே நாம்; என்பன போன்ற கேவல வாழ்க்கை முறையை, மனுவின் அக்கிரம மார்க்கத்தை, ஆட்டங் கொடுக்கச் செய்தது கம்யூனல் ஜி. ஒ. என்னும் சமூக நீதி முறைதான்.

கம்யூனல் ஜி. ஒ. வெளி வாழ்க்கையில் மட்டும் நம்மவர்களுக்குச் சிற்சில நன்மைகளைக் கொடுத்து விட்டிருப்பதாக மட்டுமே கொள்ள வேண்டாம். மன நிலையிலும் புரட்சிகரமான கருத்துக்களைக் கொடுத்திருக்கிறது என்பதை நாம் ஆழ்ந்து சிந்திக்கவேண்டும். நம்மவர்களிலே சிலர் படித்துப் பட்டம் பெற்றிருப்பதும்—பெறுவதும், சிலர் சர்க்கார் உத்தியோகங்களிலே அமர்ந்திருப்பதும்—அமருவதும் மட்டுமே நமது கண்களுக்குப் படுகிறது. வெறுங்காட்சி அளவோடு அது நின்று விடவில்லை. மறக்க முடியாததும், மறுத்துரைக்க முடியாததும், ஈடும் எடும்பும் இல்லாததுமான ஒரு உண்மையை நிலைநாட்டி இருக்கிறது என்பதை, நம்மில் பலர் உணரவில்லை. அதாவது பார்ப்பன இனத்துக்கே படிப்பு வரும், நம்மவர்க்கு வராது; பார்ப்பன் இனத்துக்கே தகுதி, திறமை உண்டு; நம்மவர்க்குக் கிடையாது; என்ற பித்தலாட்டமான சித்தாந்தத்தைச் சுக்கு நூறாக்கி, நல்ல வாய்ப்பு அளிக்கப் பட்டால் நம்மவரும் எவருக்கும், எதிலும் பின்னடைந்தவர்களாக இருக்க மாட்டார்கள் என்ற பேர் உண்மையை நிலை நாட்டி இருப்பதாகும்.

இதன் பலனைப் பிராம்மணீய ஏற்பாடு மணல்மேடு சரிவதுபோல் சரியவும், சனாதனத்தின் அஸ்திவாரம் ஆட்டங் கொடுக்கவும், அது இருந்த இடத்தில் ஜனநாயகக் கோட்பாடு முளைக்கவுமான புதிய நிலை—வரவேற்கத்தகுந்த நல்ல நிலை ஏற்பட்டு இருக்கிறது.

சனாதன தொத்துநோயை கருவறுக்கும் சக்தியுடையது கம்யூனல் ஜி. ஒ. ஒன்றுதான். அதற்கு, விடுதலை—சுதந்தர முனைப்பு இருக்கிறது. ஒரு சிறு கூட்டத்தினரே அனுபவித்து வந்த உரிமைகளை, அந்தக் கூட்டத்தைப் பழி வாங்கவேண்டும் என்ற தீய எண்ணம் துளியுமில்லாமல், அனைவருக்கும் பொதுவாக்க வேண்டுமென்ற உரிமைக் கோட்பாடு கம்யூனல் ஜி. ஒ. வாக உருவெடுத்து இருக்கிறது என்று கூறுவதுகூட மிகையாகாது தன்னை மட்டும் உயர்த்திக்கொண்டு மற்றவர்களைத் தாழ்த்த வேண்டும் என்ற வஞ்சகக் கோட்பாடு கம்யூனல் ஜி. ஒ. வில் இல்லை.

பேதமல்ல — சமரசம், பிளவல்ல — ஒற்றுமை அடிமை அல்ல—உரிமை, உயர்வுதாழ்வல்ல—சமத்துவம்—போதிக்கும் உயர் பண்புகள் கொண்டது கம்யூனல் ஜி. ஒ.

மனு ஏற்பாடு நிரந்தரமானது—நிலையானது—பிறப்பினாலேயே பார்ப்பனர் நீங்கலாக மற்றவர்கள் அடிமைகள் என்று கட்டாயப் படுத்துவது.

கம்யூனல் ஜி. ஒ. நிரந்தரமானது அல்ல. தற்காலிகம், இடைக்கால ஏற்பாடு. அனைவருக்கும் உரிமையைப் பொதுவாக்கி இருப்பது. அனைவருக்கும் சமசந்தர்ப்பத்தைக் கொடுப்பது. மக்களாட்சிப் பண்பின் அடிப்படையில் உருவானது.

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகாக மனுவின் பிடியில் சிக்கிக் கிடந்தவர்கள், தங்களுடைய நிலைமை உணர்ந்து கொள்வதுகூட, இன்னமும் கஷ்டமாக இருக்கிறது. அந்தக் காலத்திலும் சரி, இந்தக் காலத்திலும் சரி, எந்தக் காலத்திலும் சரி, அந்தச் சுரண்டல் இயந்திரத்திற்கு அவசியமே இருந்ததில்லை. அவசியமில்லாத ஒன்றை, அதனால் ஆதிக்கமும் வாழ்வும் பெற்றவர்களும் பெற்றுக் கொண்டு இருக்கிறவர்களும், அதனை கைவிட மறுக்கிறார்கள் என்றால், அதில் பொருள் உண்டு. ஆனால், அதனால் பாழ்பட்டவர்கள், அடிமையாகக் கிடக்கிறவர்கள் கூட, அதனை, உதறித் தள்ள முன்வராமல் இருப்பது வேதனை தரும் விசித்திரம்தான். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக, அதன் கொடுமையை அனுபவித்து வருகிறவர்கள், ஆத்திரம் காட்டவில்லை, அந்தக் கூடாத கோட்பாட்டை அழிக்க.

அவர்கள் காணட்டும், அவர்களுக்குக் கண்ணும் கருத்தும் கெடாமல் இருந்தால், ஏதோ ஒரு சிறு அளவில் தங்கள் இனத்தின் முன்னேற்றம் குறிப்பிட்ட ஒரு துறையில் பாதிக்கப்படுகிறது என்ற காரணத்துக்காக, கம்யூனல் ஜி. ஒ. ஒழிப்புக்கு, பாடுபட்டதையும்—கிளர்ச்சி செய்ததையும்—முடிவில் வெற்றிபெற்று மகிழ்வதையும்.

கம்யூனல் ஜி. ஒ. வின் அடிப்படை இலட்சியம் இன்னும் முழுஅளவில் நிறைவேறிவிடவில்லை. அதன் விடுதலை, பண்பாடு இன்னும் பட்டுப்போகவில்லை—பசுந்தளிர் போன்ற நிலையில்தான் இருக்கிறது. இன்னும் சிறிது காலத்திற்கு கம்யூனில் ஜி. ஒ. விற்கு அவசியமும், தேவையும் இருக்கிறது. மக்களாட்சி முறைக்குத் தேவைப்படுவதுஅய்யரும், அய்யங்காரும், முதலியாரும் நாய்க்கரும் அல்ல,— மக்கள்—மக்கள். அந்த மக்களை உண்டாக்குவதுதான் கம்யூனல் ஜி. ஓ.—சமூக நீதிமுறை.

அந்தக்காலம் பிராம்மணீயக்கோட்பாடு நடைமுறையில் இருந்த காலம். அயோத்தி இராமன் அரசாண்டகாலம், வசிஷ்டர் அறிவுரைப்படி அரசன் நீதி வழங்கியகாலம்.

சமூகத்தை விட்டுப் பிரித்துத் தனி மனிதனை மதிப்பிட்டுப் பார்க்காத நிலை அன்று. தனி மனிதனுக்குத் தனி உரிமை என்ற ஏற்பாடு இல்லை. சூத்திர சமூகம் தவம் செய்யக்கூடாது. சம்பூகன் சூத்திரன்—தவம் செய்தது குற்றம். தண்டனை தரப்படுகிறது, மனு முறைப் படி—சக்கரவர்த்தி இராமனால்.

இன்று மக்களாட்சிக் கோட்பாடுபற்றிப் பேசப்படுகிற காலம். மனு கோட்பாட்டைப் பகிரங்கமாக நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டுமெனப் பேச முடியாத காலம். சமூகம் சமூகமாகப் பேதப்படுத்திப் பார்ப்பது கண்டிக்கப்படும் காலம்.

எனவே, சனாதனப் பேச்சு மறைந்து ஜனநாயகப் பேச்சு கிளம்புகிறது. சமூக உயர்வு தாழ்வு பேசும் நிலையை மாற்றிக் கொண்டு, தனிமனித உரிமை என்ற கூக்குரல் கிளப்பப்படுகிறது. தனிமனித உரிமைக்குச் சட்டப்படி பாதுகாப்பும் செய்து கொண்டாகி விட்டது.

சமூகத்தின் பெயர்கூறி, மனுவின் சட்டத்தைக் காட்டி, சம்பூகன் தலை துண்டிக்கப்பட்டது அன்று !

தனிமனிதனின் உரிமைபேச, இந்திய அரசியல் சட்டத்தைத் துணைக்கழைத்து, சமூகத்தின் பின்னணியில் இருக்கும், சம்பூகர்களின் — தலையை அல்ல—எதிர்கால வாழ்வு துண்டிக்கப்படுகிறது இன்று !

ஜனநாயக் கோலத்தில் சனாதனம் ! மக்களாட்சி முகமூடியில் பிராம்மணீயம் !

"https://ta.wikisource.org/w/index.php?title=பொன்_விலங்கு/பழங்_கதை_!&oldid=1644345" இலிருந்து மீள்விக்கப்பட்டது