இதன் விலை - ரூபாய் மூவாயிரம்/காந்தி ராமசாமியும் பெரியார் ராமசாமியும்
காந்தி ராமசாமியும்
பெரியார் ராமசாமியும்
ஓமந்தூரார் வெற்றி பெற்றார்:—உண்மை வெற்றி பெற்றது—உறுதிக்கும் ஒழுக்கத்துக்கும் வெற்றி கிடைத்தது—சூதுக்கும் சூழ்ச்சிக்கும் இடமளிக்க மறுத்து விட்டனர்-ஆட்சி பீடத்தைத் தமதாக்கிக்கொண்டு இலாப வேட்டையில் ஈடுபடத் திட்டமிட்டவர்களின் ஆசையில் மண் வீழ்ந்தது—மக்களாட்சியின் மாண்பினை உணர்ந்து நடக்கும் உத்தமர்களின் பக்கம் வெற்றி நின்றது.
கள்ளங்கபடமற்ற கிராமவாசி......................அரசியல் சூதாட்டத்துக்கு அப்பாற்பட்டவர்—தியாக முத்திரையை அரசியல் சந்தையிலே விற்கத் துணியும் வியாபாரியாக இருக்க மறுப்பவர்—சொந்த வாழ்க்கையையும், சுகத்தையும் மிகமிகக் குறைந்த அளவினதாக்கிக்கொண்ட, துறவு மனப்போக்கினர், ஏடுகளுக்குப் பின்புறம் இருந்துகொண்டு நாட்டு நிலையைக் கவனிக்க மறுக்கும் போக்கினராக இல்லாமல், நாட்டு மக்களின் நல்வாழ்வுக்கு, நம்மாலான பணியுரியும் சந்தர்ப்பம் நமக்குத் தரபட்டுள்ள நேரத்தில் நாம் நலம் செய்வதுதான் 'தர்மம்' என்ற நோக்கமுடையவர், ஏர் என்றால் என்ன என்று கேட்கும் மேனாமினுக்கி வாழ்வினர் போலன்றி, நெடுங்காலமாகக் கிராமங்களின் வாழ்வை நேரடியாக, அவர்களுடன் பழகி மட்டுமல்ல, அவர்களில் ஒருவராகவே இருந்து அறிந்து கொண்டவர். வெள்ளை ஆட்சி போகவேண்டியதற்கான காரணம், சொந்த ஆட்சி தேவை என்ற ஆவேச இலட்சியம் மட்டுமல்ல, நல்ல ஆட்சி தேவை என்ற அடிப்படை நியாயமே என்று நன்னெறியை உணர்ந்தவர். உள்ளொன்று வெளியொன்று கொண்டுழலும் உலுத்தர் போலன்றி, ஊருக்குழைப்பேன், அதனால் வந்துறும் இன்னலைப் பொறுப்பேன், என்ற உறுதி படைத்த உள்ளத்தினர். எளிய வாழ்க்கையும், சீரிய குணங்களும் கொண்டவர். இவரே நமது முதலமைச்சர் என்று சொன்னாலொழிய, யாராலும், அவ்வளவு பெரிய பதவியில் அமர்ந்திருப்பவர் என்று கண்டதும் உணரக்கூடிய விதமான உருவமோ, உடையோ,நடையோ கொண்டவரல்ல, தன்னடக்கமுள்ள தமிழர், ஓமந்தூரார்.
தென் ஆற்காடு மாவட்டத்திலே, மிகச்சிறிய கிராமம், ஓமந்தூர். கிராமத்தைத் தொட்டும் தொடாமலும் இருக்கும் சிறியதோர் வயல் சூழ்ந்த தோட்டம், பயன் தரும் மரவகைகள், பச்சைப் பயிர் வகை, பழம் தரும் செடிகள் படரும் கொடிகள், இவைகளுக்கிடையே ஓர் வீடு—அதிலே பன்னெடுங்காலம் தங்கி, சந்தடி, ஆர்ப்பாட்டம், இவைகளைக் கேட்கவும் காணவும் அவசியமில்லாத இடத்தில் வாழ்ந்து, தூய்மையையும், வாய்மையும் உள்ளத்தில் பயிரிட்டுக்கொண்டிருந்தவர், ஓமந்தூரார். அவருக்கு ஆறு குமாரர்கள். அவர்களுக்கு இன்னின்ன வேலை தேடிக்கொடுத்தார். மருமகனை மைசூர் சமஸ்தானத்திலே பெரிய வேலையில் அமர்த்தினார். மைத்துனனுக்கு மைக்கா சுரங்க உரிமையைத் தந்தார். சம்பந்தி வீட்டாருக்குச் சர்க்கார் காரியாலயத்திலே வேலை தேடிக்கொடுத்தார் என்று வதந்திகள் கூறுவதற்குரிய நிலையும் நடவடிக்கையுமே சர்வசாதாரணமாக நாடாளும் வாய்ப்புப் பெற்றவர்களிலே பெரும்பாலோருக்கு இருக்கும். ஓமந்தூரார், இத்தகைய சூழ்நிலையில் சிக்கினவருமல்ல. முரட்டுச் சுபாவம், வாக்குத் தருவதில் வல்லுனர், நோக்கத்தை மறைப்பதில் நிபுணர் என்றெல்லாம் பழித்துப் பேசப்படுபவர், பல அரசியல் தலைவர்கள்—ஆனால், பகைவனும் இவர்மீது இப்படிப் பழி சுமத்த முடியாது. காங்கிரஸ் தியாகத்தீயிலே விழமறுத்துவிட்டு, வெள்ளை ஆட்சியின் போது, சுயநல வேட்டையில் ஈடுபட்டுக்கொண்டிருந்துவிட்டு, சமயம் கிடைத்த உடனே, பதவிக்காகப் பல்லிளித்த பலர் போலின்றி, காங்கிரசின் தொண்டராக இருந்து, தியாகத் தீயிலேயே குளித்து வெளிவந்தவர். அவர் அமெரிக்கா சென்றதில்லை, ஆங்கில நூல் நிலையங்களில் ஆண்டுகளை செலவிட்டதில்லை, அதிகாரிகளுடன் நிலாச்சோறு உண்டுகொண்டிருந்ததில்லை, கட்டை வெட்டும் கந்தன், மாடோட்டும் முனியன், தோட்டக்கார துரைசாமி, வயலில் வேலை செய்யும் வரதன், இப்படிப்பட்ட, பாடுபடும் மக்களோடு பெரிதும் பழகியவர்.
இப்படிப்பட்ட ஓமந்தூராருக்குத்தான், போட்டி ஏற்பட்டது—இவருடைய பீடத்தைக் கவிழ்க்கத்தான் புயல் வீசிற்று—இவரை ஒழித்துக்கட்டத்தான் முஸ்தீபுகள் பலமாக நடைபெற்றன ! இவர் வெற்றிபெற்றார்—112 ஓட்டுகள் பெற்றார்—படை திரட்டிய பிரகாசம் தோற்றார். எண்பத்திநாலே ஒட்டுகள் பெற்றார்—களிப்படைகிறோம். பெருமைப் படுகிறோம், பாராட்டுகிறோம், வாழ்த்துகிறோம் என்று, அவருடைய நண்பர்கள் மட்டுமல்ல, நாட்டு மக்களில் பெரும்பாலோர் கூறி மகிழ்வதைக் காண்கிறோம்—ஆனால் நமக்கோ, இந்த வெற்றி, களிப்பைத் தருவதைவிட பயத்தை, ஊட்டுவதாகவே இருக்கிறது. ஏன் ? ஓமந்தூராருக்கு வெற்றிதான், என்ற களிப்பிலே ஈடுபட்டு, உண்மையை மறந்துவிட மறுக்கிறோம். உண்மை என்ன ? அப்படிப்பட்ட நல்லவருக்கு 'எதிர்ப்பு' ஏற்பட்டு, அவ்வளவு தன்னலமற்றவரைத் தாக்கச் சதி நடைபெற்றதே. அதனை எண்ணும்போது எவ்வளவு 'பொல்லாதவர்கள்' நாட்டிலே நடமாடிக்கொண்டுள்ளனர், என்பதல்லவா தெரிகிறது—அது நமக்குத் திகிலையும் கவலையையுமே உள்ளபடி தருகிறது.
யாரை, சகல கட்சியினரும், நல்லவர், தன்னலமற்றவர், என்று புகழ்கிறார்களோ, யாருடைய முன்னாள் நடவடிக்கையும் இந்நாள் போக்கும், துளியும் சுயநலமற்றதாக இருக்கிறதோ அவருக்கு எதிர்ப்பு ஏற்பட்டதென்றால், அந்த எதிர்ப்பை அவர் தோற்கடித்ததிலே ஏற்படும் மகிழ்ச்சியைவிட, எதிர்ப்பு ஏற்பட முடிந்ததே அந்த நிலையையே கவனிக்கவும், கவலைகொள்ளவும் தோன்றுகிறது. மந்திரி சபையைக் கவிழ்க்கச் சதி செய்தவர்களெல்லாம், மண் கவ்வினர், என்று மகிழட்டும். நமக்கோ, மாண்புடையவர் என்று மக்களால் மதிக்கப்படுபவருக்கு எதிரிடையாகச் சதி நடந்ததே அதுவே துக்கத்துக்கும் வெட்கத்துக்கும் உரியதாகத் தோன்றுகிறது.கெட்ட வாடை அடிக்கிறது என்றனர், கேடு கெட்ட புத்தியினர்—நாசியுள்ளோர் முகர்ந்து பார்த்துக் கூறட்டும், மல்லிகை மணமுள்ள மலர் தானா, அல்லவா என்பதனை என்று எவரேனும் கூறி, ஒருவர் மல்லிகையை முகர்ந்து பார்த்து, செச்சே ! யாரப்பா, வீண் பழி சுமத்தினவன் ? மல்லிகை மணமாகத்தான் இருக்கிறது, என்று கூறினால், மகிழ்ச்சிக்குரிய சம்பவமாக, நாம் அதனைக் கூறமாட்டோம்—மல்லிகையின் மணத்தைச் சந்தேகிக்கும் அளவு மந்த மதியிருப்பதையும், அதனைச் சாதகமாக்கிக் கொண்டு,மல்லிகையைப் பழிக்குமளவு, சூது செய்யும் வஞ்சகர்கள் இருப்பதையும், எண்ணியே ஏங்குவோம். அது போலத்தான், ஓமந்தூரார் பெற்ற வெற்றி, நமக்கு, மகிழ்ச்சி பெறுவதற்குச் சந்தர்ப்பமாகப் படுவதை விட அதிக அளவுக்கு இந்த நாட்டிலே மிக மிக நல்லவர்களுக்கு எதிராகச் சதி செய்யும் பொல்லாதவர்கள் இருக்கிறார்களே, என்பதைத் தெரிந்து கொள்ளவும், அதனால் உள்ளம் துடி துடிக்கவுமான, சம்பவமாகத் தோன்றுகிறது.
போட்டி—தேர்தல்—இவை சகஜந்தானே ! ஜனநாயக இலட்சணமே போட்டிதானே. இது கண்டுநீ ஏன் வீணாகப் பதறுகிறாய், ஏதேதோ கூறிக் கதறுகிறாய். என்று கேட்பர் சிலர்.
குடி அரசுக் கோட்பாட்டின்படி, ஒரு அரசியல் கட்சிக்கும் மற்றோர் அரசியல் கட்சிக்கும் போட்டி ஏற்படுவது முறைதான்—அது தேவையுங்கூட. ஆனால் ஓமந்தூராருக்குப் போட்டி சொந்தக் கட்சியிலே முளைத்தது !!
இதுவும் சாதாரண சம்பவம்தான் என்பார் உண்டு. சொந்த இயல்பு சோடையாக இருக்கும் ஒருவருக்கு சொந்தக் கட்சியிலே, போட்டி ஏற்பட்டால், அது சாதாரண சம்பவமாக மட்டுமல்ல, காரணத்தோடு கூடிய சம்பவமாகக் கூடக் கருதலாம். ஆனால் ஓமந்தூராரை மாசிலாமணி என்று கூறினர்—விழியில் பழுதுள்ளவருங்கூட அவரிடம் வஞ்சனையோ சுயநலமோ இருப்பதாகக் குற்றம் சாட்ட வில்லை—அப்படிப்பட்ட அவருக்கு எப்படிப் போட்டி ஏற்படலாம் ? அந்தப் போட்டியை, எப்படி சர்வ சாதாரணச் சம்பவம் என்று கூறி விட முடியும் ?
அவர் நல்லவராக இருக்கலாம், சுயநலமற்றவராக இருக்கலாம். அவருடைய கொள்கைகளும் திட்டங்களும், அவருக்குச் சரியானவை என்று அவர் மனதுக்குப்பட்டிருக்கக் கூடும். ஆனால் அதனாலேயே, வேறு திட்டங்களைக் கொண்டவர்களுக்கு இடமளிக்கக் கூடாது என்று பொருளோ என்று வாதாடி, ஓமந்தூரார் இன்ன திட்டத்தைப் புகுத்துகிறார், அது சரியில்லை, இதோ எமது திட்டம், இதுவே நாட்டுக்கு ஏற்றது, காலத்திற்கு உகந்தது. கலைக்கு உதவக் கூடியது, என்று மாற்றுத் திட்டத்தைக் கூறி, இந்தப் போட்டி நடத்தப்பட்டதா, என்றால் இல்லை ஓமந்தூரார் தலைவராக இருப்பதா ? பிரகாசம் அந்த பீடத்தில் இருப்பதா? என்பது தான் போட்டியிலே பிரச்னையாக இருந்ததேயொழிய, ஓமந்தூரார் திட்டத்துக்கும் பிரகாசம் திட்டத்துக்கும் போட்டி என்ற முறையிலே பிரச்னை இல்லை.
இங்கு தான், சூட்சமும் இருக்கிறது—வெற்றிக் களிப்பிலே பலர் இதனை மறந்திருப்பர்—வேதனையை ஏன் கிளறுவது என்பதற்காக பலர் மறைத்திருப்பர்—உள்ளம் வெளியே தெரிந்து விடப் போகிறது என்பதற்காக சிலர் இதனை மறுத்தும் உரைப்பர்—ஆனால் ஆர அமர யோசிக்கும் எந்த நேர்மையாளரும் இந்தச் சூட்சமத்தைத் துச்சமெனக் கருதி விட மாட்டார். என்பது திண்ணம்.
நாடாளும் கட்சியிலே நல்லவர் என்று நாட்டு மக்களால் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒரு தலைவருக்கு, காரணமின்றி— வெளியே பகிரங்கமாக காரணம் ஏதும் கூறப்படாத நிலையில்—போட்டி ஏற்பட்டிருக்கிறது. அவருடைய குணம் சந்தேகிக்க படவில்லை, அவருடைய திட்டம் தாக்கப் படவில்லை மாற்றுத் திட்டம் எதுவும் தீட்டப்படவில்லை, என்றாலும், அவருக்குப் போட்டி—போட்டியா அது—பூசல் !--பூசலும் சாதாரண மாகவா, ஏசல் பாணங்களைச் சரமாரியாக ஏவின நிலையில் பூசல்—சதியே கூட—நடை பெற்றிருக்கிறது. ஏன் ? இரு தரப்பினரும், கூசுகின்றனர், கூற. ஆனால் இரு தரப்பினரின் மனமும் குமுறுகிறது! இவ்வளவு வேதனைக்கிடையிலேயும் இந்த வேடிக்கை தெளிவாகவே புலனகிறது.
"ஏனய்யா ஓமந்தூரார் கூடாது என்று கூறுகிறீர்?"
அவர்—அவர்....."இப்படி இழுக்கிறார் எதிர்ப்பாளார்.""என்ன தான் காரணம் இந்த எதிர்ப்புக்கு?" என்று விடாப் பிடியாகக் கேட்டால் தடு மாற்றத்துடனே தான் பேசுகிறார் எதிர்ப்பாளர், "அவர்—அவர் நல்லவர்—தங்கமானவர்—நாணயஸ்தர்—அவர் மீது ஒரு குறையும் இல்லை....ஆனால்.... என்று எதையோ மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல், அவஸ்தைப் படுகிறார்.
அவருக்கு ஆங்கிலம் தெரியாது, என்று ஆங்கிலத்தைப் புரிந்து கொள்ளாத நிலையிலே உள்ளவர்கள் கூடக் கூறினர்—அது ஒரு காரணமாகாது.
இது போன்ற அர்த்தமற்ற எதையோ கூறினரேயொழிய, உண்மையைக் கூற, அவர்களுக்கு நெஞ்சு உரம் இல்லை, ஏன் ? உண்மையைக் கூறினால் ஊராரின் கண்கள் திறந்து விடும். அப்போது உலுத்தரின் சூது நன்றாகத் தெரிந்து விடும் என்ற அச்சம் எதிர்ப்பாளர்களைப் பிடித்துக் கொண்டது.
ஆச்சாரியாருக்கு முன்பு எதிர்ப்பு ஏற்பட்டது-அவர் ஆகஸ்ட்டுத் துரோகி—ஆணவச்சுபாவக்காரர்—என்று காரணங்கள், பொது மேடைகளிலேயே எடுத்துக் கூறப்பட்டன, காமராஜ் போன்றவர்களால்.
ஆந்திர கேசரி பிரகாசம் அவர்களுக்கு எதிர்ப்பு ஏற்பட்டது. அவர், விஞ்ஞானத் தொழில் முறையை ஒழித்து விடும் நோக்குடன், மில் ஒழிப்புத் திட்டம் கொண்டு வருகிறார் என்று காரணம், கூறப்பட்டது.
அதுபோல, ஓமந்தூராருக்கு ஏற்பட்ட போட்டியின் என்ன காரணம் கூறப்பட்டது? வெற்றிக் களிப்பு அடைந்தவர்கள், தோல்வியால் துவண்டவர்கள். ஆகிய இரு தரப்பினருமே இந்தக் காரணத்தை நாட்டு மக்களுக்குக் கூறவில்லை. இந்தப் போட்டி, மக்கள் பொதுமன்றத்திலே நடைபெற்றிருந்தால்,ஓரளவுக்காவது, இந்தக்காரணம் என்ன என்பதை மக்கள் தெரிந்து கொண்டிருக்க முடியும். போட்டியோ, தாளிட்ட கதவுக்குப் பின்புறம், மண்டபத்துக்குள்ளே இரு படை வரிசை மட்டுமே தங்கியிருந்த முகாமில், நடைபெற்றது. முடிவு மட்டுமே மக்களுக்கு அறிவிக்கப்பட்டது- உள்ளே நடைபெற்ற 'விவாதம்" மக்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை. ஏன்? தெரிவித்திருந்தால், பிரச்னை, வேறு உருவாகிவிட்டிருக்கும். போட்டி, ஓமந்தூராருக்கும் பிரகாசம்காருவுக்கு மிடையே அல்ல-இருவரும், இருவிதமான சக்திகளின்' பிரதிநிதிகளாக இருந்து, போர் நடைபெற்றது என்ற சூட்சமம்; வெட்ட வெளிச்சமாகி விட்டிருக்கும். சூட்சமத்தை, மிகமிகச் சாமர்த்தியமாகவே மறைத்துப் பார்த்தனர். ஆனால் அதிலே முழுவெற்றி கிடைக்கவில்லை. சூட்சமத்தை மக்கள் சற்றுப் புரிந்து கொண்டனர், காரணம் ஏதும் காட்டப்படாமல் நடத்தப்படும் இக்கடும் போருக்கு, உள்ளூர ஓர் காரணம் உண்டு என்பதை யூகித்தறிந்து கொண்டனர். அறிந்ததும்,ஓர் முழக்கம் கிளம்பிற்று, மண்டபத்தருகே! அந்த முழக்கம், அமைச்சர் டாக்டர் சுப்பராயனின் உள்ளத்தை உருக்கி விட்டதாம் - காதிலே ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியதுபோலிருந்ததாம் அந்தக்கூச்சல்! கூச்சல் மந்திரியார் கூறுகிறார் அதுபோல், மக்கள் கூறுகின்றனர். முழக்கம் என்று. வருமுன் உரைப்போர் கூறுகின்றனர் எச்சரிக்கை என்று பெயர் எப்படியோ கிடக்கட்டும். இந்தப் போட்டியின் முடிவு தெரிந்ததும் மக்கள் பிராமணர் ஒழிக என்று கூச்சலிட்டனர் என்பது ஒப்புக் கொள்ளப்படுகிறது. இந்தக்கூச்சலிட்டவர்கள், காங்கிரஸ்காரர்களேதான் என்பதையும் டாக்டர் தெரிவிக்கிறார்.
காங்கிரஸ் கட்சியிலே தலைவர் தேர்தல் நடைபெறுகிறது. வெளிப்படையாக உருவான ஒரு காரணமும் கூறப்படவில்லை. போட்டி நடைபெறுகிறது. ஓமந்தூரார் ஜெயம் பெறுகிறார். ஆந்திரநாட்டுப் பிராமணர் பிரகாசம் தோல்வி அடைகிறார். இந்த முடிவு தெரிந்ததும் மக்கள், பிராமணர் ஒழிக என்று கூவுகிறார்கள் என்றால், சூட்சமம் தெரியவில்லையா ! நாலும் நாலும் எட்டு, எட்டுடன் இரண்டு சேர்த்தால் பத்து என்பது போல் மிகமிகச் சாமான்யமானவர்களுக்கும், புரிந்து விடுகிறதே சூட்சமம்,—மிகமிகச் சாமர்த்தியமாக மறைத்து வைக்கப்பட்ட சூட்சமம்.
🞸 உள்ளே நடைபெற்ற போட்டிக்கு பிராமணர் காரணம் என்று, வெளியே கூடி இருந்த மக்கள் எண்ணுகிறார்கள். ஓமந்தூரார் ஜெயித்ததும், பிராமணர்களின் திட்டம் தோற்று விட்டது என்று தீர்மானிக்கிறார்கள். போட்டியில் கலந்து கொள்ளும் உரிமை கிடைக்காததால் தங்கள் உள்ளத்தில் உள்ளதை மற்றவருக்கு அறிவிக்க, என்ன வழி என்று யோசிக்கிறார்கள். ஓர் யோசனை உதிக்கிறது, பிராமணர் ஒழிக! என்று கூச்சலிடுகிறார்கள். இதுதானே விஷயம்!!
இனி இதனால் வேதனை என்ன? வெற்றிதான் ஓமந்தூராருக்குக் கிடைத்துவிட்டதே, என்று கேட்கத் தோன்றும்.
🞸 கெட்ட நடவடிக்கை கொண்ட ஒருவரை நீக்கவோ திட்டம் ஒன்றைத் தாக்கவோ, 'போட்டி' நடைபெறவில்லை. பார்ப்பனர் அல்லாதார் பிரச்னை மீதே போட்டி நடைபெற்றது. அதுவும், பார்ப்பனர்—அல்லாதார் என்ற பிரச்னையைப் பிரசாரக்—கொள்கையாகக் கொள்ளாமலும், அந்தப் பிரச்னை காரணமாக வரைமுறை தவறி நடக்கிறார் என்று குற்றம் சாட்டப்படக் கூடிய நிலையிலே, இல்லாதவரும், மிக நல்லவரும், பழுத்த காங்கிரஸ் வாதியுமாகிய ஓமந்தூராருக்கே, அவர் பிராமணர் அல்லர்: அவருடைய ஆட்சியின் கீழ் பிராமணரின் ஆதிக்கத் துக்கு வழிவகை செய்யப்படும் என்று நம்பிக்கையோடு இருக்க இடமில்லை, என்ற அளவு சந்தேகம் ஏற்பட்ட உடனே, நல்ல வரானால் என்ன? காங்கிரஸ்காரரானால் என்ன? நம்மவர்க்கு அவர் இருப்பதால் இலாபம் இல்லை என்று தெரிந்த பிறகு, அவர் ஆட்சி செய்ய, ஏன் நாம் அனுமதிக்க வேண்டும்? இதோ கிளம்பி அவரை ஒழித்து விட்டு, வேறு ஒருவரை பீடத்தில் அமர்த்துவோம், என்று துணிந்து கூறவும். அதன்படியே, காரியம் ஆற்றவும், ஒரு கூட்டத்தினருக்கு எண்ணமும் துணிவும், வழியும் வசதியும், வல்லமையும் இருக்கிறது என்றால், நாட்டிலே, எப்படிப்பட்ட சூழ்நிலை இப்போதும் இருக்கிறது என்பது விளங்கவில்லையா ? அது விளங்கும் போது, வேதனை ஏற்படவில்லையா !
🞸 பனகல்—பொப்பிலி— இவர்கள், தேசத் துரோகிகள், காங்கிரசின் விரோதிகள், ஆகவேதான், அவர்களை ஒழித்தோம்—என்றனர்.
🞸 ஓமந்தூரார்மீது படை எடுக்க, என்ன காரணம்? ஓராண்டுக்கு முன்பு அவரை ஏத்தி ஏத்தித் தொழுதவர்கள், இப்போது அவரிடம் என்ன குறையைக் கண்டுவிட்டனர்? ஏன் அவர்மீது போரிட்டனர்? சூட்சமம். மக்களுக்குப் புரிகிறது—புரியவே தான், குமாரமங்களக் குணாளர் மனம் புண்ணானாலும் சரி என்று துணிந்து, அன்று கூவினர், என்று கருதவேண்டியிருக்கிறது. எந்தக் கட்சியினராக இருந்தாலும் சரி, எவ்வளவு நல்லவராக இருந்தாலும் சரி, நமக்குப் பயன்படவில்லை, நமது ஆதிக்கத்தை வளர்க்கும் காரியத்திலே அக்கரை காட்டவில்லை என்றால், அவரைப் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, வேறு ஒருவரை, நமக்குப் பயன்படக்கூடிய ஒருவரை, பீடத்தில் ஏற்றவேண்டும். அதற்காக, கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஜனங்களின் காதுக்கு இனிக்கக்கூடிய ஏதாவதோர் காரணத்தைக் காட்டி எதிர்ப்பைக் கிளப்ப வேண்டும். பகிரங்கமாகவோ, மறைமுகமாகவோ, எப்படியோ வேலை செய்து வெற்றி காண வேண்டும், என்று எண்ணும் ஓர் கூட்டம் நாட்டிலே இருக்கிறது என்று உண்மையைக் காணும்போது, வேதனையும் திகிலும் ஏற்படாமலிருக்க முடியுமா? நமக்குப் பயன்படவில்லையானால், மலரையும் சருகு என்று மார்தட்டிக் கூறும் மகானுபாவர்கள். மறத்தமிழர் நாட்டிலே அறிவு அரசு செய்யும் நாட்களிலேயும் ஆதிக்கத்தில் இருப்பது அறியும்போது, உள்ளம் வேதனைப்படாதிருக்குமா?
தடை உத்தரவு பிறப்பித்தார். ஸ்ட்ரைக்குகளை உடைத்தார். சிறையில் பலரைத் தள்ளினார். ஓமந்தூரார் காங்கிரசாட்சியின் திட்டத்தின்படி யாராரை ஒடுக்க வேண்டுமென்று முறை இருக்கிறதோ, அதன்படி அவர்கள்மீது கோபிக்கவும், அவரும் அவர் உள்ள கட்சியும், கொண்டுள்ள போக்கையும் திட்டத்தையும் கண்டிக்கவும், காரணம் உண்டு—அந்தக் கண்டனம் நியாயமானது—கண்டனத்துக்குப் பக்கபலமாக அவர்களுக்குப் பலம் இல்லை என்பதாலேயே, நியாயமற்ற காரியம் இது என்று கூறிவிட முடியாது. ஓமந்தூராரின் நடவடிக்கையினுல்—அவருடைய தலையிலே உள்ள மந்திரி சபையின் போக்கினால், அந்த மந்திரி சபையை அமைத்த காங்கிரசின் கொள்கையினால், உரிமை இழந்தவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் அல்ல. அவரை ஒழிக்க கங்கணம் கட்டியவர்கள், இந்தக் காரியத்துக்குச் 'சபாஷ்', கூறியவர்கள், அவருடைய சொந்தக் கட்சியினர், அவரைக் கவிழ்க்கச் சதி செய்தனர். பெரியார் ராமசாமியோ, ஜீவானந்தமோ அல்ல, கவிழ்க்கும் வேலைக்குக் கிளம்பினவர்கள். ஓமந்தூரார் போலவே கதரணிந்து, அவருடனேயே காங்கிரசில் தங்கி, அவருக்குக்கிடைத்தது போலவே மஞ்சள் பெட்டியின் மகத்துவத்தைப்பெற்று மக்களின் ஆட்சி மன்றத்திலே இடம் பிடித்துக்கொண்ட வைத்தியநாத ஐயரும், வரதாச்சாரியாரும், கிளம்பினர் காசா சுப்பாராவ் ஜல்லடம் கட்டினார். பாரததேவி ஆசிரியர் ராமரத்தின ஐயர் சரம் விட்டார். இந்துஸ்தான் ஆசிரியர் நாராயண ஐயங்கார் இழித்தும் பழித்தும் எழுதினார். இவைகளைக்கண்ட மக்கள் பிராமணர் ஒழிக என்று கூவாமல்வேறென்ன சொல்லிக் கூவமுடியும்? ராதாபாய் மணாளரின் பண்பட்ட உள்ளம் புண்படுமோ என்ற அந்த நேரத்தில் தோன்றும்! ஓமந்தூரார் ஒரு தவறும் செய்யவில்லை. அவரிடம் ஒரு குறையும் காணோம். அவரை, மதுரை ஐயரும், திருவல்லிக்கேணி ஆச்சாரியாரும், ஆந்திரதேசப்பந்துலுவும் எதிர்க்கிறார்களே காரணமின்றி, என்று எண்ணியபோது உள்ளம் கொதித்தது. அந்தக் கொதிப்பிலே இருந்து பிறந்தது ஓர் முழக்கம்—பிராமணர் ஒழிக என்று இப்படி எல்லாம் கூவலாமா? அதிலும் காங்கிரஸ்காரர்கள் இப்படிக் கூச்சலிடலாமா? என்று கேட்கிறார் டாக்டர் சுப்பராயன். இப்படி எல்லாம் சதி செய்வதா நல்லவரை வீழ்த்த! அதிலும் காங்கிரஸ்காரர், காங்கிரஸ் கண்ணியரை கவிழ்ப்பதா, என்று மக்கள் கேட்பர்—ஆனால் குறை கூறுபவரோ, அமைச்சராக இருப்பவர்—போலீஸ் இலாகாவின் பொறுப்பைக் கொண்டுள்ளவர்.
"என் காதிலே அந்தச் சத்தம் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியதுபோலிருந்தது" என்றார் டாக்டர். "ஓமந்தூராரை ஒரு நேர்மையான காரணமுமின்றி, அவருடைய சொந்தக் கட்சியினர் என்றே கூறிக்கொண்டு கவிழ்க்க வேலை செய்தார்களே, சில ஐயமார்கள், அதைக் கண்டபோது, எங்கள் கண்களிலே பழுக்கக் காய்ச்சிய இரும்புத்துண்டுகள் நுழைந்தது போலிருந்தது டாக்டரே ! நீர் இந்த வேதனையை அறியமாட்டீர்!" என்று மக்கள் கூறுவர்—மந்திரியாருக்கு மேலும் கோபத்தை மூட்டினால், அவருடைய அதிகாரம் தாக்கக் கிளம்பி வருமே, என்று மட்டுமே, நேரடியாகக் கூறாமலிருக்கிறார்கள். கூறாவிட்டாலும் டாக்டர் சுப்பராயன், ஏன் யோசிக்கக் கூடாது—யோசித்தால், மக்கள் என்ன கூறுவார்கள் என்பது புரியுமே—இவருடைய காது வேதனைப்பட்டதுதானா பிரமாதம்? மக்களின் மனம் அடைந்த வேதனையை விடவா இவருடைய வேதனை அதிகம்?
இமயமே சாய்ந்திட்டாலும்
இம்மியும் நேர்மை நீங்கார்
அமைதியின் வடிவமானார்
அன்பினால் ஆளவந்த
தமிழகக் காந்தி ராமசாமி
நம் முதலமைச்சர்
கமற் தரும் புகழால் மீண்டும்
கட்சியின் தலைவரானார்.
என்று, களிப்புக் கவிதை, தினசரியில் வெளிவந்தது.
கமழ்தரும் புகழ்! தமிழகக் காந்தியாம் ராமசாமிக்கு!
ஆனால், அந்தப் புகழ் மணத்தை முடைநாற்றம் என்று கூறினர் சிலர்—அவர்கள் இனியும் அதைக்கூறுவர்— தமிழகக்காந்தி ராமசாமியைமட்டுமல்ல, திராவிடத் தந்தை ராமசாமியையும் ! இப்படி ஒரு கூட்டம் எதிர்த்தபடியே இருக்கும் அவ்வப்போது நேர்மையின் வெற்றிக்காக வேலை செய்தபடிதான் இருந்ததாக வேண்டும் என்பதுதான் தமிழகத்தின் தனிப்பண்போ? ஒரே கூட்டத்துக்குள் இருந்துகொண்டு, ஒரே கொடி, ஒரே கட்சி என்று சொந்தம் பேசிக்கொண்டு இருந்தாலும், தமிழகக் காந்தி என்று தக்கோர் புகழ்ந்தாலும், சுயநலக் கூட்டத்தாரின் குழ்ச்சியும் வியன்மகை வகுப்புவாத வெறியும், தாக்கியபடிதான் இருக்குமென்றால், காங்கிரஸ் ராமசாமியாக இருப்பவர் எந்த விதத்திலே திராவிட ராமசாமியைவிட அதிக மேலான நிலையில் இருக்கிறார் என்று கேட்கிறோம். உள்ளே இருந்தபடி, காங்கிரஸ் ராமசாமி உள்ளம் குமுறுவதும், வெளியே இருந்தபடி வேல் பாய்ந்த உள்ளத்துடன், திராவிட ராமசாமி இருப்பதுதானா, இனியும் நாட்டிற்குரிய இலட்சணம்? இந்த வேதனைதரும் நிலைபோக, மார்க்கமே கிடையாதா? பார்ப்பனத் துவேஷி பெரியார் என்று பகையை மூட்டினர். பாரத புத்திரர் என்று, பார்ப்பனர், அல்லாதவர், ஆகிய அனைவரையும் கூறிக்களித்துப் பெருமையடைந்த தமிழகக் காந்திக்கும். திராவிட ராமசாமிக்குள்ளது போன்றே எதிர்ப்பு இருக்கக்காண்கிறோம். ஏன் இந்த நிலை என்று கேட்க, நாட்டிலே நேர்மையாளர்கள் எவருமே இல்லையா? எந்த ரகமான ராமசாமியாக இருந்தாலும் எதிர்ப்பு நிலை, ஒரே அளவாகவும், குறிப்பிட்ட ஒரே இடத்திலிருந்தும் வருவதை ஏன் உணர முடியவில்லை, எப்போது உணருவர்?