உள்ளடக்கத்துக்குச் செல்

விடுதலைப் போர்/அந்தத் தைரியம்

விக்கிமூலம் இலிருந்து

அந்தத் தைரியம்

"தமிழர்கள் மட்டுமே தேசத்தை ஆளலாம் என்ற தைரியம் ராமஸ்வாமி நாயக்கருக்கு இருக்கிறது. அதிலே தவறில்லை. அயர்லாந்து நம் மாகாணத்தில் 16-ல் ஒருபங்கு இருக்கிறது. டிவேலரா சுயராஜ்யம் நடத்தவில்லையா ? தைரிய மிருந்தால் நடத்தலாம்."

என்று, அன்பர் ஆச்சாரியார், 1945 மே 28ந் தேதி மாலை சென்னை கோகலே மண்டபத்தில் நடந்த கூட்டத்தில் பேசினார். ஆச்சாரியாரின் பேச்சிலே, உபநிஷத்துக்களுக்குள்ளது போன்ற உட்பொருள் உண்டு என்பது, அரசியலில் உள்ளவர் அனைவருக்கும் தெரியும். குல்லூகபட்டர் என்ற பட்டம் அவருக்குண்டு, அது கேவலம் கேலிக் குறிப்பல்ல!!

தமிழர்கள் மட்டுமே, என்ற தொடரிலே, மட்டுமே என்பது ஒரு கண்ணியாக அமைந்திருக்கக்கூடும்; தைரியம் என்ற வார்த்தையிலே, ஏதேனும் புதைபொருள் இருக்கக்கூடும்; தவறில்லை என்பதிலேகூட திணித்திருப்பினும் ஆச்சரியப்படுவதற்கில்லை. தொடர்களுக்குள் புகுத்தப்பட்டிருக்கும் பொருள் கிடக்கட்டும், அந்தவாசகத்தின் முழு நோக்கமே கூட, இனப்பண்புக்கு ஏற்ற ஓர் வெடி வீச்சாக இருக்கக்கூடும். எது எப்படி இருப்பினும், ஆச்சாரியார், எந்தக் கருத்தைக்கொண்டு, எந்த நோக்கத்துக்காக இதைக்கூறி இருப்பினும், நாம், அவருடைய சிந்தனையை இழுத்து, அவர் சொல்லித் தீரவேண்டியதாகி விட்ட, தமிழர் ஆட்சி என்ற பிரச்னையை, அவர் புரிந்து கொண்டிருக்குமளவு, நமது உடன் பிறந்தவர் உணரவில்லையே என்பதை எண்ணியே உளம்வாடுகிறோம்.

ஆரியரின்றி நாம் நாடாளமுடியும் ! தமிழர் மட்டுமே என்றால் அதுவே உண்மையான பொருள். ஆச்சாரியாரும் அவருடைய சீட கோடிகளுங்கூட அதை அறிவர். வேண்டுமென்றே மன்றங்களிலே பேசுவர், தமிழர் என்றால் தமிழகத்திலே பிறந்து, தமிழ்பேசும் அனைவரும் தமிழரே என்று. ஆனால் உள்ளூர உணர்வர், தமிழர் என்றால், தமிழ்மொழியினர் என்பது மட்டுமல்ல, மொழி, விழி, வழி, மூன்றிலும் தமிழர் ! நோக்கம் நெறி இரண்டும், (விழி, வழி) தமிழருக்குத்தனி ! ஆரிய நோக்கம் வேறு, மார்க்கம் வேறு! தமிழர், எனில் தனி இனம் என்ற கருத்தே தவிற, மொழியிலே மட்டுமல்ல! எனவே ஆச்சாரியார் தமிழர் மட்டுமே என்று கூறினதன் பொருள், ஆரியரின்றிக், தமிழர் மட்டுமே இன அரசு நடத்தமுடியும் என்று விரியும். இதைத்தான் உண்மையில் பெரியார் விரும்புகிறார். ராமஸ்வாமி நாயக்கருக்குத் தைரியமிருக்கிறது !—என்று கூறும் ஆச்சாரியார், எப்படி அந்தத் தைரியம் பெரியாருக்கு இருக்கிறது என்பதை அறிந்திருக்கிறாரோ, இல்லையோ நாமறியோம். எனினும் அந்தத் தைரியம் இருப்பதற்குள்ள காரணத்தைக் கூறவிரும்புகிறோம். எதிர்த்தரப்புக் கானவைகளையே முதலிலே எடுத்தாராய்வோம். தமிழர் என்பதற்கு இன்று எதிர்த்தரப்பினர் கூறக்கூடிய குறைபாடுகள் ஏராளம்.

எப்படிப்பட்ட தமிழர் ? ஜாதியால் மதத்தால் பேதப்பட்டுக் கிடக்கும் தமிழர்! கல்வியிலே பிற்போக்கடைந்துள்ள தமிழர் ! கண்டவன் கைபிடித்திழுக்கும் கேவல நிலைக்குவந்துவிட்ட தமிழன் ! தரணி இழந்து பரணி மறந்து, தாசனாகி ஏசுதலைத் தாங்கித் தவிக்கும் தமிழன் ! வளமிழந்து, களம்மறந்து, வாழ்வுகசந்து தாழ்வடைந்துள்ள தமிழன்! மொழிசிதைந்து, பழி மிகுந்து, கழிகொண்டோன் காட்டும் குழியிலே குதித்திடும் குணம் கொண்ட தமிழன்! வாணிபம் இழந்து, அரசு இழந்து, அணைந்த விளக்காய், கவிழ்ந்த கலமாய், தூர்ந்த அகழாய்க் கிடக்கும் தமிழன் ! ஆங்கிலேயனுக்கு அடிமை, ஆரியனுக்குத் தாசன், வடநாட்டானுக்கு எடு பிடி, எனும் வெட்கமுறத்தக்க நிலைபெற்ற தமிழன் ! கூலியாகி வெளிநாடு செல்லும் ஏழை ! காலிலே பிறந்தோம் கர்மவினையை அனுபவிக்கிறோம் என்று கருதும்கோழை ! நம்மால் ஆகாது, நாதன் விட்டவழி என்று நம்பும் நடைப்பிணம் ! ஆம் ! இன்றையத் தமிழன், வாள் ஏந்திய கரத்தோடில்லை, ஆரியனின் தாளேந்திக் கிடப்பவன்! அவனிடம் இன்று செங்கோல் இல்லை, ஒரு ஜாதிக்கு மற்றோர் ஜாதி எந்த அளவு உயர்வு, அல்லது மட்டம் என்பதைக் கண்டறியும் அளவுகோல் வைத்துக்கொண்டிருக்கிறான் ! தன் இனம் பிறஇனம், தன்மொழி பிறமொழி எனும் பாகுபாடுணரமுடியாத நிலையிலே உள்ளான் தமிழன் ! நெஞ்சு உரத்தை மங்கவைத்துக்கொண்டிருக்கிறான் தமிழன் !

ஆரியருக்குக் களிப்பூட்ட இந்தப் படப்பிடிப்பு போதும் என்று கருதுகிறோம்; போதாதெனில் இன்னமும், சிலபல சேர்த்துக்கொள்ளட்டும். நாம் மறைக்காமல் கூறுகிறோம்; இன்றையத் தமிழர் இழி நிலையிலே உள்ளனர்; இம்மியும் இதிலே எமக்குச் சந்தேகம் இல்லை. இப்படிப்பட்ட தமிழரைக்கொண்டுதான், தனி அரசு அமைக்கமுடியும் என்று பெரியார் கருதுகிறார்; ஆச்சாரியார் மொழியிலே கூறுகிறோம், "ராமஸ்வாமி நாயக்கருக்குத் தைரியம் இருக்கிறது."

எப்படிப்பட்ட தமிழர் என்பதை விளக்கினோம். இனி, ராமஸ்வாமி நாயக்கர் எப்படிப்பட்டவர், என்று எதிர்த்தரப்பினர் கூறக்கூடும், என்பதை அவர்களுக்கு வேலை வேண்டாம் என்பதற்காக நாமே கூறுகிறோம். எப்படிப்பட்ட ராமஸ்வாமி நாயக்கர் ?

கல்லூரி காணாத கிழவர் ! காளைப்பருவ முதல் கட்டுக்கடங்காத முரடர்! அரசியல் நோக்கத்துக்கான முறையிலே கட்சி அமைப்பு இருக்கவேண்டுமென்று அறியாத கிளர்ச்சிக்காரர்! பொதுமக்கள் மனம் புண்படுமே, புண்பட்ட மக்கள் கோபத்தால் தாறுமாறாகப் பேசுவரே, ஏன் வீணாக அவர்களின் ஆத்திரத்தைக் கிளப்பவேண்டும், என்று யூகமாக நடந்து கொள்ள மறுப்பவர்! யார்யாரைத் தூக்கி விடுகிறாரோ, அவர்களாலேயே தாக்கப்படுபவர்! கவர்னரைக் காணவேண்டுமே, அதற்கேற்ற கோலம் வேண்டாமோ என்ற யோசனை அற்றவர்! தமிழ், ஆங்கில தினசரிகளின் ஆதரவு இல்லாதவர்! ஆரியமதம், கடவுள் எனும் மூடுமந்திரங்களைச் சாடுவதன் மூலம் கேடுவரும் என்று எச்சரிக்கும் போக்கினரின் இசைக்குக் கட்டுப்பட மறுப்பவர். ஆம்! ராமசாமியின் கட்சியிலே தோட்டக்கச்சேரி கிடையாது ! முனிசிபல் வரவேற்புகளும், முடுக்கான விளம்பரங்களும் கிடையாது. லண்டன்கிளை கிடையாது, லட்சாதிபதிகளின் 'பிட்சை' கிடையாது ! சாமான்ய மக்களின், இது அரசியல் இதுமதம், என்று பகுத்துப் பார்க்கவும் முடியாத மிகமிகச் சாதாரண மக்களின் கூட்டுறவைமட்டுமே பெற்றவர்! தேர்தலா? வேண்டாம் ! பதவியா ? கூடாது ! துரைமார் தயவா ! தூ! அது இனிப்புப் பூச்சுள்ள எட்டி ! என்றெல்லாம் கூறுகிறார். சிறைச்சாலை என்ற பேச்சுக் கேட்டால் முகம் மலருகிறது கிளர்ச்சி என்ற கருத்து இனிக்கிறது, இந்தக் கிழவருக்கு! இவ்வளவு வயதாயிற்று இவ்வளவு வருஷங்களாகப் பொதுவேலை செய்தார். ஒரு சர் பட்டம் பெற்றாரா, ஜினிவா போனாரா (சர்க்கார் செலவில் !) அமெரிக்கா போனாரா (அரசாங்கத்தின் செலவில் !) எதைக்கண்டார்! எட்டுமுறை சிறைக்கோட்டம் போய்வந்தார்! இவர் தானய்யா ராமஸ்வாமி நாயக்கர்!

இதைவிட அதிகமாக மயிலைவாசிகளின் மனத் திலே தோன்றமுடியாது என்று நம்புகிறோம். தோன்றினால் கூட்டிக்கொள்ளக் கோருகிறோம். ஏனெனில், எதிர்த்தரப்பினருக்கு முழுச்சலுகையும் கொடுத்து விடத் துளியும் நாம் தயங்கவில்லை. சற்று தாராளமாகவே கூடத் தருகிறோம்.

தாசரான தமிழர், கிழவரான கிளர்ச்சிக்காரர் !! சரி ! இப்படிப்பட்ட ராமசாமி இப்படிப்பட்ட தமிழரைக்கொண்டு, எப்படிப்பட்ட காரியம் செய்யமுடி யும் என்று தைரியம் கொண்டிருக்கிறார் தமிழர்கள் மட்டுமே தேசத்தை ஆளலாம் என்ற தைரியத்தைக் கொண்டிருக்கிறார்! எப்படி?

எப்படி எனில், அவர் ஓர் மாயாவி ! ஜால வேடிக்கைக்காரர் ! "வேடிக்கை பேசாதே" என்று கூறுவீர்; வேடிக்கையல்ல நாம் கூறுவது; தாசரான தமிழரைக் கொண்டு, வெறும் கிளர்ச்சிக்காரக் கிழவரொருவர், தேசத்தை ஆளலாம் என்று தைரியம் கொண்டுள்ளார் என்றால், மாயவித்தை தெரிந்தவராக இருந்தாலன்றி வேறு எப்படி முடியும் அவர்மட்டுமா, அன்பர்களே ! சிற்பி, ஓவியக்காரன், தொழிலாளி, இசைவாணன், இவர்களெல்லாம் மாயாவிகளே! அந்த மாயாவி இனந்தான் பெரியார்!

நாலைந்து சிறு வட்டில்கள், அவைகளிலே பலவர்ணக்குழம்புகள், கையிலே ஒரு சிறு, பூச்சிடும் கோல், எதிரே ஒரு திறை, இவ்வளவுதான்! இவைகளைக்கொண்டு கடலை, கன்னியரை, கனி குலுங்கும் சோலையை, காவலர் அஞ்சும் களத்தை, புன்னகையை மெல்லிடையை, கண்ணீரை விண்ணழகை, காலைக் கதிரோனை மாலைமதியை, இன்னோரன்ன பிறவற்றைச் சிருஷ்டிக்க முடியுமா? அதோ ஓவியக்காரனாகிய மாயாவியைப் பாருங்கள். இப்படி அப்படித் தீட்டுகிறான், ஏற இறங்கக் கவனிக்கிறான். இரவும்பகலும், களமும் வளமும், கனியும் பனியும், அவன் இடும் ஏவலுக்காகக் காத்துக்கிடக்கின்றன ! ஓவியக்காரன், ஒரு மாயாவி! மண்ணிலே பொன்காண்பீரோ? மாயாவியான தொழிலாளி காண்கிறான்! உப்புநீரிலிருந்து முத்து எடுக்கிறான்! காட்டிலிருந்து வாசனை எடுக்கிறான் ! விஷத்தைப்போக்கி விளையாட்டுக் கருவியாக்குகிறான் ! எதைச் செய்யாமலிருக்கிறான் அம்மாயாவி ! தோலைத் தட்டுகிறான் நாம் களிக்கிறோம், நரம்புகளைத் தடவுகிறான் நாம் நாதவெள்ளத்தைப் பருகுகிறோம், என்னமோ கூறுகிறான் அது நம்மை ஏதேதோ உணர்ச்சிகளில் கொண்டுபோய் ஆழ்த்துகிறது; இவை இசைவாணனாம் மாயாவியின் செயல்!

இதனால் இது ஆகுமோ, என்ற கேள்விக்கு. இடமுண்டோ இங்கு ? மண்ணிலே தங்கம் ஏது? கடலிலே முத்து ஏது ? தட்டுத் தடவலிலே இன்பம் ஏது? வர்ணத்திலே சிருஷ்டி ஏது ? எப்படி முடியும்? என்று, தொழிலாளி, இசைவாணன், ஓவியக்காரன் ஆகியோரைக் கேட்டால், அவர்கள் நகைப்பர்! "என்னே இவன் குறைமதி!" என்று எள்ளி நகையாடுவர். மண்ணுக்குள்ளே நெடுந்தூரத்திலே புதைப்பட்டுக்கிடக்கும் பொன் இருக்குமிடமும் எடுக்கும் விதமும் பாட்டாளி அறிவான். தெரியாதான், இதிலே இதுவா,எப்படி? என்று கேட்பான். பெரியார் ராமசாமியின் பெரும்பணி இது போன்றதே. அவர் அறிவார், தாசராக உள்ள தமிழர், தரணி ஆண்டவர் என்பதும், தரணி ஆண்டகாலத்திலே தன்மானத்தை ஓம்பினர் என்பதும், மானத்தையும் உரிமையையும் பெரிதெனக்கொண்ட தமிழரிடை, ஜாதிப்பித்தம், வைதீகவெறி, அடக்கியாளும் ஆணவம், சுரண்டிப் பிழைக்கும் சூது ஆகியவைகள் கிடையா என்பதும், களத்திலே கடும்போரிடும். வீரர்கள் கபடரின் பொறியிலே வீழ்ந்தனர் என்பதும், மீண்டும் தம்மை உணரும் தன்மை பெற்று விட்டால், தமிழ் இனம் தாசரானதற்குள்ள காரணத்தைக் கண்டறிந்து விட்டால் அவர்கள்

"கொலை வாளினை எடடா மிகுகொடியோர் செயல் அறவே" என்று முழக்கமிட்டுக் கிளம்புவர் என்பதும், தமிழ்ரின் இன்றைய நிலை தாழ்வுடையது இடர்மிகுந்தது என்றபோதிலும், தங்கள் இனத்தைக் கெடுக்கும் கொள்கைகளை அவர்கள் நீக்கிவிட்டால், களை எடுத்த வயலாவர், விழித்தெழுந்த வேங்கையாவர், என்பதும், பெரியார் அறிவார். மணி, மேலே மாசு! மடு, மேலே பாசி ! வயல், இடையே களை ! தமிழர், அவர்களுக்குள் தகாதாரின் கூட்டுறவு ! மாசுதுடைத்திடுக, பாசிபோக்கிடுக, களை நீக்குக, கபடரின் பிடியைப் போக்குக, என்று கனிவுடன் கூறுகிறார், சுடமை வழிநிற்கும் கிழவனார். அதுமட்டுமல்ல ! எங்ஙனம், பிறர் முடியுமா என்று கேட்கும்போதும், உண்மையாகவே செய்ய முடியாதிருக்கும்போதும், ஓவியக்காரனும், இசைவாணனும், தமது திறமையினால் இன்பத்தை அளிக்கின்றனரோ, அதுபோல, இவ்வளவு தாழ்நிலை அடைந்துள்ள தமிழரைக்கொண்டு தனி அரசு அமைக்கமுடியுமா என்றுபலர் எண்ணும் போது, தமிழரின் அந்நாள் நிலையும் இந்நாள் நிலையும் தெரிந்ததோடு மட்டுமின்றி, காலவேகம் கருத்து வேகம், பொதுவாகவே மக்களிடை உள்ள விழிப்பு ஆகியவற்றையும் அறிந்திருக்கும், "ரசனைக்காகவோ," சொற்பெருக்காற்றவோ, மட்டும் பயன் படும் அறிவாக அதனைக்கொள்ளாமல், மக்கள் விடுதலைக்கு மறுமலர்ச்சிக்கு, இன எழுச்சிக்கு, அந்த அறிவைத் துணைக்கொள்ளும் திறனும் அவரிடம் இருப்பதால், அந்தத் திறமை கஷ்டநஷ்டமெனும் சாணையிலே தீட்டப்பட்டுக் கூராக்கப்பட்டிருப்பதால், அந்த ராமசாமியால், தமிழர்மட்டுமே ஒரு தேசத்தை ஆளமுடியும் என்று தைரியமாகக் கூறமுடிகிறது ! அந்த ராமசாமியும், ஏடுதாங்கியாக இருந்திருப்பின், நாடு ஆள்வது என்பதற்காகக் கூடு விட்டுக் கூடு பாய்வது அரசியல் யூகம் என்று கொண்டிருப்பார், கனமாகி இருப்பார், ஆனால் இனம்மெலிந்து போயிருக்கும். துரைமாரின் தயவைத் தேடுபவராக இருந்தால் ஒரு சர் ஆகியிருப்பார், ஆனால் இனவிடுதலைக்கான எழுச்சி ஏற்பட்டிராது. அவர் கிளர்ச்சிக்காரர், சிந்தனைச் சிற்பியாக இருப்பதாலேதான், அரசியல் என்றால் பஞ்சாயத்து போர்டிலிருந்துதுவங்கிப் பாராளும் மெம்பராவது என்ற ஏணி அரசியலைக் கொள்ளாமல், இன விடுதலை என்னும் இடர்மிகுந்த காரியத்தில் இறங்கினார். அவருக்கு நிச்சயமாகத்தைரியம் இருக்கிறது, வீறுகொண்ட தமிழன் வைதீகத்தைக் கூறு கூறாக்குவான் என்று ! அவர், ஒரு கற்பனை உலகைக் காட்டத் தேவையுமில்லை, தமிழர் ஆள ஒரு வெளிநாட்டைப் பிடிக்கத் தேவையுமில்லை. தமிழன் ஒருநாட்டுச் சொந்தக்காரன், இன்று அந்த இடம் சந்தையாகி விட்டது ! தமிழன் ஆண்டு பழக்கப்பட்டவன், இன்று ஆண்டவனுக்கு அன்பு செலுத்துவதாகக் கருதிக்கொண்டு ஆரிய அடிமையாக உழல்கிறான் ! ஆட்சிக்கேற்ற அருங்குணமும், நாட்டைப் பாதுகாக்கும் நல்வீரமும் தமிழனுக்கு உண்டு; இகம்பரம் என்று ஆரியன்மொழி கேட்டு ஏமாந்ததால் இகத்தை அவன் இகழ்ந்து வாதைப்படுகிறான். எனவே, பெரியார் "தமிழா ! நீ தனி இனம் ! தமிழா ! நீ தரணி ஆண்டவன் ! தமிழா ! உன்னை நீ உணராமல் உலுத்தருக்கு அடிமையானாய் ! பகுத்தறிவுப் படைதொடு, விடுபடு !!" என்று கூறினால், தமிழரின் உள்ளத்திலே அந்த உணர்ச்சி வேகம் பாய்ந்தால் "கிளம்பிற்று காண் தமிழர் சிங்கக் கூட்டம்" என்று கவிபாடும் காட்சியாகும் அது. எனவேதான், பெரியார் 'தைரியம்' பெற்றிருக்கிறார் ! அந்தத் தைரியத்துக்குப் பக்கபலமாக இருப்பது தளரா உழைப்பு !!

அந்தத் தைரியம், பெரியாருக்கு இருக்கிறது, அதை ஆச்சாரியார் உணர்கிறார். உணர்வதுடன், நமது மாகாணத்தைவிட மிகச்சிறிய அயர்லாந்து தன்னாட்சியுடன் இருக்கிறதே, தமிழர் ஒரு நாட்டை ஆள்முடியாதா என்று மேற்கோளுடன் கூடிய உற்சாகமூட்டுகிறார். ஆனால், உலகம் சுற்றியவர்கள், பட்ட தாரிகள், பாராளும் மன்றங்களைக் கண்டவர்கள், என்நாடு, என் இனம், என்று கூறிக்கொள்ளக் கூசுகின்றனர்; நம்நாட்டு ஆட்சி நமது என்று உரிமை பேச நடுங்குகின்றனர்; எனது இன விடுதலையே என் வாழ்க்கையின் இலட்சியம் என்று பேசப் பயப்படுகின்றனர்; தமிழர் மட்டுமே ஒரு தேசத்தை (தங்கள் தந்தையார் நாட்டை) ஆளமுடியும் என்று தைரியம் கொள்ளத் தயங்குகின்றனர்; திராவிடத் திரு நாட்டினிலே ஆரிய அரசா? என்று தட்டிக் கேட்கப் பயப்படுகின்றனர்; கூற அஞ்சுகிறார்கள். ஒரு பெரியாருக்கு இந்தத் தைரியம் இருக்கிறதே நமக்கு ஏற்படவில்லையே என்று வெட்கமும் அடையாமல், இருபது வருஷம் கூட்டு மந்திரி சபை வேண்டும், என்று கூசாது நீட்டுகின்றனர் திரு ஓடு ! திரு இடமே ! இந்தத் தீரமிலாதார் திருந்தும் இடம் ஏதேனும் உண்டா? ஏன், ஆச்சாரியார் பெரியாருக்கு இருப்பதாகக் குறிப்பிடும் அந்தத் தைரியம் இவர்களுக்கு, சர்களுக்கு இல்லை?