உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




72

இளங்குமரனார் தமிழ்வளம் - 27

நூலாசிரியர்களைக் காணுதல், நூல்கள் அச்சிடுதல், விற்பனைக்குப் பாடுபடுதல், பள்ளிகளில் நூல்களைப் பாடமாக வைத்தற்கெனச் சலிப்பின்றி அலைதல் இவ்வாறே நாளும் பொழுதும் செலவிட்டார். “மெய்வருத்தம் பாரார், பசி நோக்கார், கண்துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார். செவ்வி அருமையும் பாரார், அவமதிப்பும் கொள்ளார் என்னும் அருமை மொழிக்கு முற்றும் பொருந்திய எடுத்துக்காட்டாகிக் கருமமே கண்ணாக விளங்கினார். இந்நிலையில் ஆண்டுகள் உருண்டன; ஒன்றா, இரண்டா? எட்டாண்டுகள் உருண்டன.

"இருமனம் கூடினால் திருமணம்” என்பது காதல் மணத்திற்குப் பொருந்துவது. அதற்குமே இப்பொழுது பலர்மனம் ஒன்று படவேண்டி உள்ளது என்பது நாடறிந்த செய்தி. அவ்வாறகப், பெற்றோரும் பெரியோரும் பார்த்து முடிக்கும் திருமணத்திற்குப் பல மனங்களின் கூட்டுறவு இல்லாமல் முடியுமா?

நெல்லை மாவட்டத்துத திருவை குண்டத்திற்கு அணித்தாக அமைந்ததோர் ஊர் வெள்ளூர் என்பது. சிற்றூரே அஃதெனினும் பேருள்ளம் படைத்தோரால் பெருமைபெற்ற ஊர். ஆங்கே ஆண்டியப்ப பிள்ளை என்பார் ஒருவர் இருந்தார். அவர்தம் அருமைக் கிழத்தியார் சங்கரவடிவு அம்மையார். இவர்கள் அருந்தவப்பயனாக மக்கள் அறுவர் தோன்றினார். அவர்கள் இலக்குமணப்பிள்ளை, இராசகோபால் பிள்ளை, வேங்கடாசலப் பெருமாள்பிள்ளை, சுப்பையாபிள்ளை, ஆவுடையம்மாள், மங்கையர்க்கு டஅரசியார் என்பார்.

பாளை வயிரமுத்துப்பிள்ளை குடும்பமும், வெள்ளூர் ஆண்டியப்பபிள்ளை குடும்பமும் நெருங்கிய உறவுமுறை யுடையன. ஒருவருக்கொருவர் அறிந்து கொண்டும் புரிந்து கொண்டும் விளங்கினர். இந்நிலையில் கழக முகவர் வ.சு. அவர்களை ஆண்டியப்பிள்ளை குடும்பத்தார் நன்கு அறிதற்கு வாய்ப்பு இயல்பாகவே உண்டாயற்று. அவர்தம் குணநலங் களையும், இயல் செயல்களையும், பணி மேம்பாட்டையும் உணர்ந்து உள்ளத்தால் ஒன்றுபட்டு உயர்ந்து விளங்கினார் திரு. இராசகோபால்பிள்ளை. அவர் உடன் பிறந்தார் திரு. சுப்பையா பிள்ளை கழகத்திலேயே பணியில் அமர்ந்திருந்தார். மற்றை உடன்பிறந்தார்களும் இனிய பெற்றோர்களும் இணைந்து மங்கையர்க்கு அரசியாரை வ.சு. அவர்களுக்கு வாழ்க்கைத் துணையாக்க இசைந்தனர்.