உள்ளடக்கத்துக்குச் செல்

கைதி எண் 6342/கைவலியும் சிறையின் நிலையும்

விக்கிமூலம் இலிருந்து

4. கைவலியும் சிறையின் நிலையும்
(கடிதம் 4- காஞ்சி, 11-10-1964)

தம்பி!

இன்று பகல் பனிரெண்டு மணி சுமாருக்குத்தான் மதியும், மறியலில் ஈடுபட்ட மற்ற நான்கு தோழர்களும் இங்கு கொண்டு வரப்பட்டார்கள் என்று தெரிந்து கொண்டேன் - பார்க்கக்கூட முடியவில்லை. இதிலிருந்து, சிறையிலே, நான் இருக்கும் பகுதி தனிச் சிறையாக இருந்து வருகிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம். இங்கு வார்டர்கள்கூட அதிகமாக வருவதில்லை. என்னைக் காண யாராவது வருகிறபோதுதான், சிறை அதிகாரிகளைக் கூட நான் காணமுடிகிறது. மாலை 6-30 மணிக்குப் போட்டுப் பூட்டிவிட்டால், காலையில் திறந்து விடுகிற வரையில், தனிமைதான்!

இன்று என்னைக்காண, ராணியும் வரவில்லை. காலை முதற்கொண்டே கடுமையான மழை, விட்டு விட்டுப் பெய்து கொண்டிருப்பது, எனக்கு இங்கே சங்கடமாக இருப்பது போலத்தான் வெளியே இருந்து இங்குவர எண்ணுபவர்களுக்கும் இருந்திருக்கும். ஆகவே இன்று வெளியிலிருந்து வரக்கூடியவர்கள் மூலமாகவும், மறியல் எப்படி நடந்தது, கைது செய்யப்பட்டது எப்படி, எப்போது என்ற விஷயம்கூடத் தெரிந்து கொள்ள வழி ஏற்படாமல் போய்விட்டது. கிட்டத்தட்ட கண்காணாத தீவிலே கொண்டுபோய் வைத்திருப்பது போன்ற நிலைமையே இருப்பதை உணருகிறேன். முன்பு எப்போதும் இப்படி ஒரு நிலைமை சிறையில் இருந்ததில்லை. இம்முறை இவ்விதம் இருக்கக் காரணம் என்னவென்றும் புரியவில்லை. என்னுடன் இங்கு இருக்கும் தேவகோட்டையார் சொன்னார், "ஒரு விஷயம் கேள்விப்பட்டேன், சிறையில் நாம் இருக்கும் பகுதியிலே, ஒரு சி.ஐ.டி போடப்பட்டிருக்கிறதாம்—அதுவும் வார்டர் உடையிலேயாம்" என்றார். நாலைந்து நாட்களுக்கு முன்பு, இதேபோல, இங்கு வேலை செய்ய வரும் 'கைதி' மூலமாகவும் இதே போன்ற செய்தி கேள்விப்பட்டேன். எவ்வளவுதூரம் உண்மையோ தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் புரிகிறது, வார்டரிலிருந்து சிறை அதிகாரிகள் வரையில், என்னை அணுகுவதுகூட இல்லை—அந்த அளவுக்குத் தனியனாக்கி வைத்திருக்கிறார்கள். 'தனியன்' என்று நான் கூறுகிறேன், அவர்கள் 'சனியன்' என்று என்னைப்பற்றி எண்ணிக்கொண்டிருக்கிறார்களோ என்னவோ! இத்தனைக்கும், எனக்கோ, நமது கழகத் நோழர்களுக்கோ சிறை விதிகளுக்கு உட்பட்டு நடப்பதுதான் வழக்கம் என்பது சிறை அதிகாரிகளுக்கும் தெரியும். பத்திரிகையில் சென்ற கிழமைதான் படித்துப் பார்த்தேன், 'வேலூர் சிறை அதிகாரி காப்டன் ரகுநாதன் என்பவர், அரசியல் கைதிகளிலேயே, தி.மு.கழகத்தினர் மிக ஒழுங்காக நடந்து கொள்பவர்கள்' என்று பேசியிருப்பதை.

கைவலி குறைந்தபாடில்லை, பல தைலங்களைப் போட்டாகிவிட்டது. இளங்கோவன் கொண்டுவந்து கொடுத்த ஒரு புதிய மருந்தையும் போட்டுப் பார்த்தேன். வலி குறையவில்லை. இங்கு டாக்டரிடம் கூறும்போதெல்லாம், மாத்திரை கொடுத்தேனே, சாப்பிட்டீர்களா என்று கேட்கிறார். ஆம்! என்று நான் சொன்னதும், வலி குறைந்து விட்டிருக்க வேண்டுமே? என்றுதான் கூறுகிறார். எதனாலே வலி? சதை வலியா? நரம்பிலே ஏதாவது வலியா? சுளுக்கா? என்று கண்டறியலாம். டாக்டர் அந்தக் கட்டத்துக்குச் செல்லவில்லை. இதனை இரண்டொரு முறை சிறை அதிகாரியிடமும் குறிப்பாகச் சொல்லிப் பார்த்தேன். கேட்டுக் கொண்டார், அவ்வளவுதான். எக்ஸ்-ரே எடுத்தும் பார்த்த பிறகு, இதற்குத் தக்க சிகிச்சை செய்தால் நல்லது என்று எனக்குத் தோன்றுகிறது. எனக்கு தோன்றி என்ன பலன்? டாக்டருக்கல்லவா அந்த எண்ணம் தோன்றவேண்டும். நல்லவேளையாக வலி, இடதுகரத்தில்-இல்லையென்றால் இதனை எழுதக்கூட வழி கிடைத்திருக்காது. முன்பு நான் சிறையில் இருந்த நாட்களில், இரவுக் காலத்தில் அடிக்கடி வார்டர்கள் வந்து போவார்கள்—ஏதாகிலும் உடல் நலக் குறைவு ஏற்பட்டால் அவர்மூலம் சொல்லி, வைத்திய உதவி பெறலாம். இங்குதான் பகலிலேயே, வார்டர்கள் வருவது இல்லையே. இரவு நேரத்தில் யார் வரப்போகிறார்கள்!!

என் கதி இது என்றால், என்னுடைய கூட்டாளிகள் நால்வர் நிலைபற்றி அறிந்தபோது, இதைவிட வேதனையுடையதாக இருப்பது தெரிகிறது. அவர்களுடைய துணி மணிகளெல்லாம் சைதைச் சிறையில் இருக்கிறது. அவர்களை இங்கு அழைத்து வந்தபோது, —வழக்கு மன்றத்திலிருந்த போலீஸ் அதிகாரிகள், உடனே நால்வருடைய சாமான்களையும், மத்திய சிறைக்குக் கொண்டு வந்து சேர்ப்பதாகக் கூறினர். கூறியதோடு அவர்கள் கடமை முடிந்துவிட்டது போலிருக்கிறது. அவர்களுக்குச் சாமான்கள் வராமல், குளிக்கவும் முடியாமல் கஷ்டப்படுவதாக அங்கு போய்வந்த கைதிகள் மூலம் அறிந்து கொண்டேன்.

இன்று மாலை ஐந்து மணி சுமாருக்கு, சாமான்கள் கொண்டு வந்து தரப்பட்டதாகக் கண்டு கொண்டேன்—தோழர் T.M. பார்த்தசாரதி ஒரு பெட்டியுடன். உள்ளே சென்று கொண்டிருப்பதை, நான் மாடிப்படியில் நின்றபடி பார்த்தேன். அவர் என்னைப் பார்த்ததாகத் தெரிய வில்லை.

இந்த அளவுக்கு தொடர்பற்று, தோழமையற்று, சிறையிலே தள்ளப்பட்டுக் கிடக்கும் இந்த அனுபவம் முற்றிலும் புதிது; ஆனால் இதுவும் தேவையானது என்று எண்ணி ஒரு விதத்தில் திருப்தி பெறுகிறேன்.

நேற்று போலவே தான் இன்றும் மறியல் செய்த தோழர்கள் ஐவர் இங்கு கொண்டு வரப்பட்டார்கள் என்று அறிந்து கொண்டேன். அவர்களும் சிறையில் வேறோர் பகுதியில்தான்.

பகல் 11 மணிக்குமேல் நாவலர், கருணாநிதி, நடராசன், கோவிந்தசாமி, அரங்கண்ணல், சத்தியவாணி, இளங்கோவன், ராணி ஆகியோர் வந்து பேசிக் கொண்டிருந்தனர். மறியல் பற்றி இரண்டொரு நிமிடம் கூறினார்கள். இளங்கோவன் காஞ்சிபுரத்திலிருந்து புத்தகங்கள் சிலவற்றைக் கொண்டுவந்து கொடுத்தான். பரிமளத்துக்குத் தேர்வு என்பது பற்றி ராணி மூலம் தெரிந்து கொண்டேன்.

முதலிலே மிகத்தைரியமாக இருந்துவந்த தொத்தா இப்போது குழம்பிப் போயிருப்பதாக இளங்கோவன் சொல்லக் கேட்டு மெத்தக் கவலையாக இருந்தது. என்னை வந்து பார்க்கவேண்டும் என்று ஆவலாக இருப்பதாகச் சொன்னான். தொத்தாவின் உடல் நிலை இருக்கும் விதம், சென்னைப் பயணத்துக்கு ஏற்றதாகவும் தென்படவில்லை. எதற்கும் கொஞ்சநாள் பார்த்து, இரண்டு மூன்று வாரங்கள் பொறுத்துப் பார்க்கலாம் என்று சொன்னேன். ராணிக்கு சோகம் தீர்ந்தபாடில்லை என்பதை, கண்கள் வெளியிட்ட திகைப்பு காட்டிற்று.

சிறை அதிகாரிகள், நிலைமைகளையோ, நினைப்புகளையோ அறியாதவர்களல்ல-தொத்தாவைப் பற்றிய பேச்சு வந்த உடனே, சிறை பெரிய அதிகாரி, மிக அக்கரை காட்டி, அவர்கள் உடல்நிலை, பாவம், சரியாக இருக்காதே என்றுகூடக் கூறினார்.

இத்தகைய பரிவு காட்டும் உணர்ச்சி இருக்கிறது என்றாலும், என்ன காரணமோ தெரியவில்வை, இந்த முறை என் விஷயத்தில் அக்கரையோ பரிவோ துளி கூடக்காட்டவில்லை. கைவலி விஷயமாக அவரிடம் சொன்னேன்—"வெளியே உள்ள டாக்டர் எவரிடமாவது காட்டி, எந்தவிதமான வலி என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். வலிகுறையாதது மட்டுமல்ல, அதிகமாகி வருகிறது" என்றும் சொன்னேன். மிகவும் கூச்சப்பட்டுக் கொண்டு தான் சொன்னேன். பார்க்கிறேன் என்றார். ஆனால் பிறகு அதுபற்றி ஒரு தகவலும் தெரிவிக்கப்படவில்லை. பிற்பகல் அவருக்கு உடல்நலம் இல்லை என்று வீட்டுக்குச் சென்றுவிட்டார் என்று தெரிந்துகொண்டேன். இரண்டு மூன்று நாட்களாகவே அடித்துக் கொண்டிருக்கும் குளிர்காற்றினால் கூட, இந்த வலி அதிகமாகி இருக்கும் என்று தேவகோட்டையார் ஆறுதல் கூறினார். அந்தவிதமான அன்பு வார்த்தைகளைக் கேட்கும்போது வலியே போய்விடுவது போலிருக்கிறது. ஆனால், இரவு முழுவதும் வலி வாட்டியபடிதான் இருக்கிறது.

வழக்கறிஞர் நாராயணசாமி கொண்டுவந்து கொடுத்த, 'சட்டம்' பற்றிய சில ஏடுகளைப் படித்து இன்புற்றேன். சட்டப்புத்தகம் என்றால், என்னென்ன சட்டங்கள், எவ்வளவு தண்டனை என்ற இவைகளை விளக்கும் ஏடுகள் அல்ல. சட்டம் ஏன், எப்படி ஏற்பட்டது, ஏன் சமூகமும் தனி நபர்களும் அதற்கு அடங்கி ஒழுகிவருகிறார்கள், சட்டத்துக்கும் அரசுகளுக்கும் உள்ள தொடர்பு எத்தகையது, சட்டத்துக்கும் நீதிக்கும் உள்ள தொடர்பு எப்படி அமைகிறது, எப்படி அமைதல் வேண்டும் என்ற, இத்தகைய சுவையான, பயன்தரும் விவரங்கள், விளக்கங்கள் தரும் ஏடுகள். அவைகளிலே காணப்படும் பல நல்ல கருத்துகளை, இங்கு எனக்கு நிலை செம்மைப்பட்டு மனம் தெம்பானபிறகு, எடுத்துக் காட்டக்கூட நினைக்கிறேன். நாளைக்கு, என்னைக் காண, அநேகமாக யாரும் வரமாட்டார்கள் என்று எண்ணுகிறேன்—இன்று நிரம்பப்பேர் வந்துபோனதால், நாளை மறுநாள், வழக்கு, சாட்சிகள் விசாரணை.

இன்று பத்திரிகையில் வெளி வந்த செய்திகளில், மெயில் தலையங்கம் மிக அருமையாக அமைந்திருக்கக் கண்டேன்.

இரும்பு அமைச்சர், கழகத்தை ஏசிக் கோவையில் பேசியதற்கு, 'மெயில்' மிகப் பொருத்தமாகப் பதில் அளித்திருந்தது.

உடலமைப்பைப் பார்த்தால் அதிக அளவு அலைந்து கட்சி வேலை செய்யக்கூடியதாகக் தெரியவில்லையே, எப்படி முடிகிறது இவ்வளவு வேலை செய்ய என்று, என் உறவினர்களும், கட்சியில் ஈடுபாடு கொள்ளாத நண்பர்களும் என்னைக் கேட்பதுண்டு. 'மனதிலே கொழுந்துவிட்டு எரியும் ஒரு உணர்ச்சி தரும் வலிவுதான் காரணம்' என்று பதில் கூறுவேன். ஆனால், உடலில் ஏதாகிலும் வலி ஏற்பட்டு, அது இன்னது என்று புரிந்துகொள்ளும் நிலையில் இல்லை என்றாகிவிட்டால், மனதிலே ஒரு சோர்வு யாருக்கும் ஏற்பட்டுவிடுகிறது. அந்த நிலை எனக்கு. நரம்பிலே ஏதாகிலும் கோளாறு ஏற்பட்டுவிட்டதா? அல்லது ஏதாகிலும் உள்ளே இரணமோ என்றெல்லாம் சந்தேகம். எவ்வளவு நேரம், துண்டுத் துணியால் அழுத்திக் கட்டிவைத்துக் கொண்டிருப்பது? செல்வக் குடியில் பிறந்தவன் அல்ல என்றாலும், என்மீது மிகுந்த பாசம் கொண்டு, நான் ஒரு துளியும் வேதனைப்படக் கூடாது என்பதற்காகக் கண்ணுங் கருத்துமாக இருக்கும் குடும்பத்தில் பிறந்தவன். இங்கு சிறையில் உடல்நிலை கெட்டுக் கிடக்கிறது என்று, 'ஜாடை மாடை'யாகத் தெரிந்தால்கூடத் துடித்துப் போவார்கள். எனவே அவர்களுக்குச் சங்கடம் ஏற்படுத்தக்கூடாது என்பதற்காக, என்னைக் காணவரும் வீட்டாரிடம், எதையும் காட்டிக் கொள்ளாமல் இருந்து வருகிறேன். தனிமையாக இருக்கும்போதோ, வலி பற்றிய நினைப்பு வளர்ந்துவிடுகிறது. என்னைப்போல, உடல்நலம் கெட்டு எத்தனை எத்தனை தோழர்கள் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கிறார்களோ என்று எண்ணுகிறேன்; ஏக்கம் கொள்கிறேன். ஆனால், அதேபோது இந்தி ஆதிக்கத்தினால் விளையக்கூடிய கொடுமைகளைப் பற்றிய எண்ணம் எழுந்துவிட்டாலோ வலிவேதனை எத்தனை அளவில் இருந்தாலும் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும் என்ற துணிவு பிறக்கிறது. அந்த மருந்துதான், நானாக இங்குத் தேடிப் பெற்றுக்கொள்ள முடிகிறது.

பொதுப் பிரச்சினைகளைப் பற்றி நண்பர்களிடம் பேசிப் பேசி, தெளிவு பெறுவதிலே சுவை காண்பவன் நான். அந்த விருந்து இல்லை; வலி போக்க மருந்தும் இல்லை. இதே நிலை நீடிக்குமானால், சிறை நினைவு பற்றித் தொடர்ந்து எழுதுவதுகூட இயலாததாகிவிடும். ஓயாமல் எனக்குள்ள வலி பற்றியே எழுதி உன் மனதுக்குச் சங்கடம் ஏற்படுத்த விரும்பமாட்டேனல்லவா?

மாடிப்படியின் மீது நின்று கொண்டு பார்க்கிறேன் விதவிதமான நோயின் பிடியிலே சிக்கி நொடித்துப் போய்க் கிடக்கும் 'பாதி மனிதர்கள்' கொண்டு வரப்படுகிறார்கள்—'அடைக்க'ப்படுவதற்காக. குற்றவாளிகள்! ஆனால் பாபம், நோயாளிகள்! குற்றம் —நோய் இரண்டையும் மூட்டிவிடும் வறுமையின் பிடியிலே சிக்கிக் கொண்டவர்கள். இந்தக் கோரமும் கொடுமையும் குறைவதாகவும் தெரியவில்லை. அவர்களைப் பார்க்கும்போது, சமூகம் எத்தனை கோணலாகிக் கிடக்கிறது என்பது நன்றாகப் புரிகிறது. அவர்களும் என்னைப் பார்க்கிறார்கள்—பெரும்பாலானவர்கள் பச்சாதாப உணர்ச்சியுடன். அவர்கள் அது போல என்னைப் பார்ப்பதுக்கூடச் சிறை விதிகளுக்கு விரோதம் போலத் தெரிகிறது. ஏனெனில் என் மீது பார்வையைச் செலுத்துபவர்களிலே பலருக்கு, அடி—உதை—தலையிலே தட்டு! இப்படிக் கிடைக்கிறது! முணு முணுக்கிறார்கள். என்னை மறுபடியும் பார்க்கிறார்கள்—இம்முறை அவர்களுடைய கண்கள் கேள்விக் குறிகளாகின்றன! இப்படி, காரணமற்று அடித்துத் துன்பப்படுத்துகிறார்களே, பார்த்துக் கொண்டுதானே இருக்கிறாய், நியாயம் தெரியும் என்கிறார்களே உனக்கு, எங்களுக்காகப் பரிந்து ஒரு வார்த்தை பேசக்கூடாதா என்று கேட்கிறார்கள், பார்வையால்; புரிகிறது. ஆனால் நான் என்ன செய்ய முடியும்! நானே "குற்றவாளி"—கைதி!! கேட்டால்; ஒழுங்கான பதிலா கிடைக்கும்? உனக்குத் தெரியாது, சும்மா இரு! என்பார்களோ! இவர்களை இப்படி அடித்து உதைத்து அடக்கிவைக்காவிட்டால், சிறையை நடத்திச் செல்லவே முடியாது என்பார்களோ! அல்லது, மிரட்டி, போ உள்ளே! என்பார்களோ, யார் கண்டார்கள்?

மனதிலே மூண்டுவிடும் சங்கடத்தைப் போக்கிக்கொள்ள படித்துக் கொண்டிருப்பதை 'முறை' ஆக்கிக் கொள்கிறேன். பல நிகழ்ச்சிகளையும் பலருடைய வாழ்க்கை வரலாறுகளையும் படிக்கும் போதும் ஏற்படும் 'இன்பம்' தனியானது; சுவைத்தவர்களுக்கே புரியும்!

வழக்கு மன்றத்திலே தருவதற்காக அறிக்கை தயாரிக்க, சட்ட புத்தகங்கள் சிலவற்றைப் படித்திட முனைந்ததுபற்றிக் கூறினேனல்லவா. அவைகளில் குறிப்பிடத்தக்கதாக இயற்கையாக அமைந்துள்ள மனித உரிமைகளுக்கும், செயற்கையாகச் சட்டத்தின் மூலம் ஏற்படும் கட்டு திட்டங்களுக்கும் மோதுதல் ஏற்படுமானால், எதற்கு அதிக மதிப்பளிக்க வேண்டும்?ஆக்கப்பட்ட சட்டங்களுக்கா? — அடிப்படையாகவும் இயற்கையாகவும் மனித குலம் பெற்றிருக்கும் உரிமைகளுக்கா? என்ற பிரச்சினைபற்றி எழுதப்பட்ட ஏடுகள் அமைந்திருந்தன. பல நீதிபதிகள் இந்த இயற்கை உரிமைகளுக்காகப் பரிந்து பேசி இருப்பதைப் படித்தேன். அதன் தொடர்பாக, சட்டங்கள் ஏன் தேவைப்பட்டன என்பதுபற்றிய விளக்க நூலும் படித்துப் பயன் பெற்றேன்.

இந்த சட்ட ஏடுகளைப் படிக்கும்போது, சில ஆண்டுகளுக்கு முன்பு, இதே சிறையில், என்னோடு மும்முனைப் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறைமேற்கொண்ட மதி கொண்டு வந்திருந்த சட்டப் புத்தகங்களைப் படித்து, அவைகளில் உள்ளவைகள்பற்றி அவருடன் உரையாடிக் கொண்டிருந்த நினைவு வந்தது. இப்போது ஒரே சிறையில், மதி வேறோர் பக்கத்தில், நான் மற்றோர் பக்கத்தில்! வேறுபக்கத்தில் உள்ள நண்பர்களின் நிலைபற்றித் தெரிந்து கொள்ள, உட்புறமிருந்து கொண்டு வரும் 'கைதி'களிடம் பேசிப் பார்த்தேன். நன்றாகத்தான் இருக்கிறார்கள்; அவர்களும் உங்களோடு இந்தப் பகுதியில் இருக்க விரும்புகிறார்கள் என்று கூறினார்கள். பாவம் பிடிபட்டு அடைப்பட்டுக் கிடப்பவனுக்கு நம்மாலான உதவியைச் செய்ய வேண்டும் என்ற ஆவல் அவர்களுக்கு. கீரை வேண்டுமா என்பார்கள்—துவையல் வேண்டுமா என்பார்கள்—கொண்டு வந்தும் கொடுப்பார்கள் - கீரை வெந்திருக்காது—துவையலில் மண்ணும் கல்லும் கலந்திருக்கும். ஆனால், அவற்றிலே ஒருவிதமான அன்பு மணம் கமழ்ந்திருந்ததைக் கண்டேன்.

வழக்கு முடிவுபெற்று, தண்டனை இன்னது என்று அறிவிக்கப்பட்டதும் உள்ளே கொண்டு போவார்கள், நண்பர்களுடன் சேர்ந்து இருக்கலாம் என்று கூறுகிறார்கள், சிறைப் பணியாளர்கள் — அந்தப் பேச்சும் மிக மெல்லிய குரலில்; சுற்றுமுற்றும் நோட்டமிட்டபடி அவ்வளவு பயம், எங்கே அதிகாரிகளின் பார்வையிலே சிக்கிக் கொள்கிறோமோ என்று!

வழக்கு மன்றத்திலே தருவதற்கான அறிக்கையில், சிறை நிலைமைகள் பற்றியும், அச்சத்தால் பீடிக்கப்பட்ட நிலையில் இங்கு உள்ளவர்கள் கிடப்பதுபற்றியும் குறிப்பிடலாமா என்றுகூடத் தோன்றிற்று. பிறகு யோசித்ததில், அதிலே எந்தவிதமான பலனும் ஏற்படப்போவதில்லை என்பது புரிந்தது.

பல வழக்குகளைப்பற்றிய விவரங்களையும்—அந்த வழக்குகளில் காணப்பட்ட சட்ட நுணுக்கங்கள் பற்றியும் படித்தேன்—ஒரு புதிய உலகமே என் கண் முன் தோன்றுவது போல இருந்தது. சர்க்காருடைய செல்லப் பிள்ளைகளாக வேண்டும் என்ற சபலமோ, சர்க்காருக்குப் பரிந்து பேசி, தயவுபெற்று, ஆதாயம் அடையவேண்டும் என்ற அற்பத்தனமான ஆசைகளோ கொள்ளாத சில நீதிபதிகள், சிக்கல் மிக்க வழக்குகளில், சட்டத்துக்கே புதுப்பொருள் கண்டறிந்து கூறி, குற்றவாளிகள் என்று கூண்டில் நிறுத்தப்பட்டவர்களைத் தைரியமாக விடுதலை செய்த சம்பவங்களைப்பற்றிப் படித்தபோது, எழுச்சி மயமாகிப்போனேன். ஒரு குறிப்பிட்ட நடவடிக்கையை, குற்றம்—தண்டிக்கத்தக்கது என்று சட்டம் கூறலாம்—ஆனால், அந்த நடவடிக்கையிலே ஈடுபட்டவன், எந்தச் சூழ்நிலை காரணமாக, எந்த நிர்ப்பந்தத்தினால், என்ன நோக்கத்துடன், அந்த நடவடிக்கையிலே ஈடுபட்டான் என்பதுபற்றி ஆராய்ந்து பார்த்தபிறகே, அந்தச் சட்டத்தைப் பயன்படுத்த வேண்டும் என்ற கருத்தை, துணிவுடன் சில நீதிபதிகள் எடுத்துக் கூறி இருந்தனர். இவைபற்றி எல்லாம் படிக்க ஆரம்பித்து, அறிக்கை எழுத வேண்டிய நிலையை மறந்து, குறிப்புகள் எடுக்கவும், மேற்கொண்டு என்னென்ன புத்தகங்கள் இதுபற்றிப் படிக்கலாம் என்பது பற்றிய தகவல் திரட்டவுமான பணியில் ஈடுபட்டேன். என்னென்ன புத்தகங்களைப் படிக்க வேண்டும் என்று குறித்திருக்கிறேனோ அவைகளை, சிறையிலோ வெளியிலோ படித்தாக வேண்டும் என்ற ஆர்வம் மிகுதியாகிவிட்டது. அறிக்கையை நான் விரும்பிய அளவிற்குத் தயாரிக்க முடியவில்லை என்ற போதிலும், அதன் தொடர்பாக பல புத்தகங்களைப் படித்ததிலே மிக்க மகிழ்ச்சி பெற்றேன். உண்மையையும் சொல்லிவிடுகிறேன் தம்பி! நீண்ட அறிக்கை எழுதுவதற்கு ஏற்ற நிலையும் இல்லை—இடது கரத்திலே இருந்துவரும் வலி, மெல்லமெல்ல வலது கரத்திலும் படை எடுக்கத் தொடங்கிவிட்டது. வலது கரமும் பாதிக்கப்பட்டு விடுமேயானால், எதையும் எழுத முடியாது. இந்தக் கவலையைச் சுமந்து கொண்டே படுக்கச் சென்றேன்.

தனியாக அடைபட்டுக்கிடப்பவன் என்று கூறினேனே தம்பி! அது முழு உண்மை அல்ல!! எனக்குத் துணையாக, சுறுசுறுப்பான எத்தனை எத்தனை மூட்டைப் பூச்சிகள், கொசுக்கள்!!

டில்லியிலிருந்து திரும்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் மனோகரனும், ராஜாராமும், பாராளுமன்றத்திலே எழுப்பட்ட மொழிப் பிரச்சினை பற்றியும், பண்டித ஜவஹர்லால் நேருவிடம் பேசியதுபற்றியும் கூறினார்கள். இன்று காலையில், மதி, பொன்னுவேல், பார்த்தசாரதி, சுந்தரம், வெங்கா ஆகிய தோழர்கள், நான் இருக்கும் பகுதி வழியாக, ஊசி போட்டுக் கொள்வதற்காக அழைத்து வரப்பட்டார்கள். பார்க்க முடிந்தது. என்ன? என்ன? என்ற என் கேள்விக்கு, கரத்தைக்காட்டினார்கள், ஊசி போட்டுக் கொண்டதைக் குறிப்பிட வார்டர், வேகமாக அவர்களை உள்ளே அழைத்துக் கொண்டு போய் விட்டார்.

ஐந்தாம் தேதி வழக்கு விசாரணை அல்லவா—12 மணிக்குமேல் துவங்கிற்று. நண்பர்கள் அனைவரும் வந்திருந்தனர்—சிறிதளவு அவர்களுடன் அளவளாவ முடிந்தது. எந்தச் சாட்சிகளையும் குறுக்கு விசாரணை செய்யாததால், ஒரே நாளில் எல்லாச் சாட்சிகளையும் விசாரிக்கும் கட்டம் முடிந்துவிட்டது. பிற்பகல் 2-லிருந்து மூன்று வரை, வழக்கு மன்றம் ஒத்திவைக்கப்பட்டிருந்ததால், ஐவருக்கும், நண்பர்கள் அங்கேயே சாப்பாடு கொண்டுவந்தார்கள். மீண்டும் 3 - மணிக்கு வழக்குத் தொடர்ந்தது—எல்லாச் சாட்சிகளும் முடிகிறவரையில் நடைபெற்றது. பத்திரிகையில் பார்த்துக்கொள்வாய் என்பதால் விவரம் எழுதவில்லை, 7-தேதி, நான் வழக்கு மன்றத்தில், என் நிலையை விளக்கி ஒரு அறிக்கை தர இருக்கிறேன். அநேகமாக 12-ம்தேதி தீர்ப்பு அளிக்கப் படலாம் என்று தெரிகிறது. இன்று வழக்குமன்றத்துக்கு இரண்டு வாரம் சிறையிலிருந்துவிட்டு மதுரை முத்து வந்திருந்தார். மிக உற்சாகமாகவே காணப்பட்டார். திண்டிவனம் தோழர் தங்கவேலு எம்.எல்.ஏ. அன்பழகன் எம்.எல்.சி.மனோகரன் எம்.பி. ஆகியோரும் வந்திருந்தனர். சக்தியவாணியும், மவுண்ட்ரோடு குப்பம்மா அவர்களும் வந்திருந்தனர்.

7-ந்தேதி காலையில் என் நண்பர் வழக்கறிஞர்: நாராயணசாமி, சிறையில் என்னைச் சந்தித்து, அந்த அறிக்கைபற்றிக் கலந்து பேசுவது என்றும், 7-ம்தேதி பிற்பகல் 2-30-மணிக்கு வழக்குமன்றம் கூடும்போது அறிக்கையை ஒப்படைப்பது என்றும் ஏற்பாடுசெய்து கொண்டிருக்கிறோம். நாளைய தினம் நண்பர் நடராசன், என்னைக் காணவரக்கூடும் என்று எண்ணுகிறேன். இன்று வழக்கு மன்றத்தில், கே.ஆர். ராமசாமி சோகமே உருவாக வந்திருக்கக் கண்டேன். எனக்கு ஒரு சங்கடம் என்றால் மிகவும் சஞ்சலப்படும் சுபாவம் ராமசாமிக்கு—அத்தனை பாசம்! இத்தகைய தோழர்களின் அன்பினைப் பெற்றிருப்பதை ஒரு பேறு என்றே நான் கருதுகிறேன். உடல்நலக்குறைவாக இருந்த அப்துல்சமத் அவர்களும் இன்று வழக்குமன்றம் வந்திருந்தார். அ.பொ.அரசு, அவர்தான் ஓடோடிச் சென்று, உணவுக்கான ஏற்பாடுகளைக் கவனித்தார்.

நண்பர்களுக்கு ஒரு எண்ணம்—இயற்கையானது தான்—அண்ணனை எப்படியும் தண்டித்துவிடப்போகிறார்கள்— நல்ல சாப்பாடு எங்கே கிடைக்கப்போகிறது—இப்போதாவது சாப்பிடட்டும் என்ற எண்ணம். எதை எதையோ கொண்டுவந்து, எதிரில் குவித்தார் அரசு. பக்கத்தில் இருந்தவர்கள், பண்டங்களின் தரம், சுவை, பக்குவம் இவைபற்றி விளக்கிக்கொண்டிருந்தார்கள் நானோ, அவர்கள் காட்டிய அன்புத்தேனை உண்டு மயங்கிக் கிடந்தேன்.

வழக்குமன்ற நிகழ்ச்சிகளை இதழ்களிலே காண்பாய் என்பதால், அங்கு நடைபெற்றவை பற்றி அதிகமாக எழுதாது விடுகிறேன்.

தம்பி! இன்றிரவு வலி வலதுகரத்தைத் தாக்கிவிட்டது இனியும் இங்கே இருப்பது சரியல்ல என்பதைக் கண்டிப்பாக, சிறை மேலதிகாரிக்குக்கூறி, மருத்துவமனை சென்றாகவேண்டும் என்ற எண்ணம், உறுதியாக ஏற்பட்டுவிட்டது. மருத்துவமனையில் இருந்தபடி, வழக்கு மன்றம் செல்லலாம் என்று தோன்றுகிறது. நாளை என்ன நடக்கிறதோ, பார்த்துவிட்டுக் கூறுகிறேன்.