கைதி எண் 6342/சிற்றன்னையின் இறுதி
5. சிற்றன்னையின் இறுதி...
(கடிதம் 5-காஞ்சி,18-10-64)
26-2-64
தம்பி!
நீண்ட நாட்களுக்குப் பிறகு, விட்ட இடத்திலிருந்து எழுதத் தொடங்குகிறேன்—தொடர்ந்து எழுதுவதா வேண்டாமா என்று, சிவ நாட்கள் எண்ணியபடி இருந்தேன். ஒரு முடிவுக்குவர இயலாத நிலையில், எழுதும் போதே, அடக்கிவைத்திருக்கும் வேதனை பீறிட்டுக் கொண்டு வெளிவந்து, என்னைச் செயலற்றவனாக்கி விடும் என்ற அச்சம் என்னைப் பிடித்து உலுக்கியபடி இருக்கிறது. என் இயல்பையே கருக்கிவிடத்தக்க பெருநெருப்பு என் இதயத்திலே நுழைந்தது. எத்துணை சமாதானங்கள், தத்துவ விளக்கங்கள், உலகியல் நிலைமைகள் தெரிந்திருந்தாலும், ஒவ்வொருவருக்கும் தாங்கிக்கொள்ள முடியாத துக்கம் மூண்டிடும் சம்பவம் நேரிடும்போது, அவர்கள் தமது வேதனையைத் துடைத்துக் கொள்ள முடிவதில்லை. கவிதைகள், கதைகள், விளக்கங்கள், மேற்கோள்கள் எத்துணை எத்துணை எடுத்துக் கூறப்பட்டபோதிலும், அவை யாவும் வெந்த புண்ணின் மீது தடவப்படும் காரமருந்தாகிறது—எரிச்சலை அதிகமாக்கிவிடுகிறது. இறுதியில் புண்ணை ஆற்றக் காரமருந்து பயன்படும் என்ற போதிலும், துவக்கத்தில், எரிச்சல் அதிகப்படத்தான் செய்யும்.
என் சிற்றன்னையை, நான் இழந்தேன். எனக்கே ஐம்பத்து ஐந்து வயதாகிறது என்றால், என்னை ஆளாக்கி விட்ட என் சிற்றன்னைக்கு வயது, எழுபது அளவுக்கு இருக்கவேண்டுமே—அந்த வயதிலே அவர்கள் மறைந்ததை எண்ணி, அதிகமான வேதனைப் படலாமா என்று சிலர் சொல்லக்கூடும்; பலர் எண்ணிக் கொள்ளக்கூடும். வயது என்ன என்பதல்ல பிரச்சினை— அந்த இழப்பு என் இதயத்தில் எத்தகைய வேதனையை மூட்டிவிட்டது என்பதுதான் பிரச்சினை. என்னால், எத்தனை சமாதானங்களைத் தேடித் தேடித் தருவித்துக்கொண்டாலும், தாங்கிக்கொள்ளக் கூடியதாக அந்த வேதனை அமையவில்லை. நான் சிறைப் பட்டிருக்கும் நேரம், அவர்கள் வீட்டில் மரணத்தின் பிடியில் சிக்கிக்கொண்டிருக்கிறார்கள். என்னை வாழ்த்தி வழி அனுப்பிவைத்த, என் சிற்றன்னை—என் வாழ்வை எனக்காக அமைத்துக்கொடுத்த என் வழிகாட்டி—எனக்காகவே, உயிர் ஊசலாடும் நிலையில், வலிவெல்லாம் இழந்து, நோயினைத் தாங்கிக்கொண்டு, வாழ்ந்து வந்த அந்த அன்புத் தாய், நான் விடுதலையாகி வீடு திரும்புவதைத் தன்விழிகளால் கண்டு, மகிழ்ச்சி பொங்கிடும் நிலையில் என்னை வரவேற்க எண்ணிக்கொண்டிருந்த என் சிற்றன்னை, பேச்சிழந்து உயிரை இழந்துகொண்டிருக்கிறார்கள் காஞ்சீபுரத்தில், வீட்டில். நான், அவர்கள் பக்கம் இருந்து பணியாற்றிக்கொண்டில்லை. எனக்கு ஒரு சிறு தொல்லை, மிகச் சாதாரணமான நோய் என்றாலும், அதைக் காணஇயலாமல், கலக்கமடைந்து, எனக்கான பணியிலே தம்மை ஈடு படுத்திக்கொண்டிருந்த என் சிற்றன்னையின் கடைசி நாட்களில், அவர்களுக்குத் துளியும் பயனற்றவனாக்கப் பட்டுவிட்டேன்.
நான் அவர்களைக் காணச் சென்றபோதே, அவர்கள் நினைவிழந்து கிடந்தார்கள்—என் குரலொலி செவிபுகவில்லை. என்னைக் காண அந்தக் கண்கள் திறக்கவில்லை. அவர்கள் மரணத்திற்கான பயணத்திலே இறங்கி விட்டார்கள்—என் கண்ணீரைக் கொண்டுகூட அவர்களை அந்தப் பயணத்திலிருந்து திரும்பிவிடச் செய்ய இயலாது என்பது, கண்டதும் புரிந்துவிட்டது. புரிந்து? உணர்ச்சிகள் வாதங்களால் அடக்கப் படக்கூடியனவா? அவர்களுக்கு வந்துற்றிருப்பது, தீரக்கூடிய நோயல்ல—அதனை ஒரு நோய் என்றுகூடக் கூறுவதற்கில்லை—மூளைக் குழாய்கள் சேதமாதிவிட்டன—தேக அமைப்பிலேயே ஒரு ஊறு நேரிட்டுவிட்டது—அதனைச் சரிப்படுத்த மருந்து கிடைக்காது என்பதனை நுண்ணறிவு படைத்த மருத்துவர்கள் கூறினார்கள்—இப்போது எனக்கு அது புரிகிறது—அன்று எனக்கு, இந்த மருத்துவர்களுக்குத் துளியும் பச்சாதாப உணர்ச்சியே கிடையாதா, உயிர் போய்க்கொண்டிருக்கிறது என் சிற்றன்னைக்கு, இவர்கள் என்னிடம் 'மருத்துவப் புலமை' பேசுகிறார்களே என்று ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. என் மகன் பரிமளத்திடம்தான் கோபித்துக்கொள்ள முடிந்தது, "மனித பாஷையில் பேசுங்கள்; வெறும் மருத்துவமொழியில் பேசுகிறீர்களே!" என்று சொன்னேன், அவன் என்னிடம் அந்த நிலைமையை விளக்கிக் கொண்டிருந்தபோது.
என் மனநிலை அறிந்து, மருத்துவர்கள், மிகுந்த அக்கரையுடன், அந்த நிலையில் என்னென்ன செய்து பார்க்க முடியுமோ அவ்வளவும், செய்தபடி இருந்தனர்—என் சிற்றன்னையோ இறுதிப்பயணத்தில், மேலால் மேலால் சென்றபடி இருந்தார்கள்—நான் குமுறுகிறேன் பக்கம் நின்று. அவர்கள் நெடுந்தூரம் சென்றுவிட்டேன் மகனே! இனியும் காத்துக்கொண்டிராதே! நான் திரும்புவதாக இல்லை! திரும்பப்போவதில்லை!—என்று கூறாமற் கூறிக்கொண்டு, மரணப்படுக்கையிலே கிடந்தார்கள்.
பல நாட்கள் பயணம் செய்துவிட்டு, வீடுதிரும்புவேன், ஒரு பொய்க்கோபப் பொலிவுடன் முகம் இருக்கும்—எதிரில் நிற்பேன். இரண்டோர் வார்த்தை பேசுவேன். ஓர் புன்னகை மலரும்—மன்னித்து விட்டேன் மகனே! என்று அந்தப் புன்னகை அறிவிக்கும். அந்த முகத்தைக் காண்கிறேன், மரணத்தின் முத்திரை படிந்துவிட்டிருக்கிறது! எப்படித் தாங்கிக்கொள்ள முடியும். நான் வந்திருக்கிறேன் தொத்தா! இதோ வந்து விட்டேன் தொத்தா! என்று என் கண்ணீர் பேசுகிறது. அவர்கள் அதைக் கேட்கவுமில்லை, என்னைக் காணவுமில்லை. தன்னை மரணத்திடம் ஒப்படைத்துவிட்டார்கள்—இத்தனை காலந்தான் உனக்காக ஓயாது உழைத்து வந்தேனே, போதாதா? என் இறுதிப் பயணத்திலே ஈடுபட்டுவிட்ட நான் இனியும் இருந்து உன்னைக் கவனித்துக் கொள்ளவா?—நடவாது மகனே! நடவாது! நான் போகிறேன் உன்னை விட்டு விட்டு! என்னை இனியும் எதிர்பார்க்காதே!!—என்றல்லவா, நிலைமை தெரிவிக்கிறது.
ஆறு நாட்கள் அருகேயே இருந்தேன்—இரவும் பகலும்—ஊண் உறக்கம் மறந்து—அழுத கண்களுடன்—பாதிப் பயணத்தில் என் நினைவு வந்து, திரும்பி வந்துவிடுவார்கள் என்ற எண்ணத்தில்—என் எண்ணத்தில் மண் விழுந்தது; இதயத்தில் நெருப்பு விழுந்தது; யார் மறுபடி எழுந்து நடமாடி என்னைக் களிப்படையச் செய்விப்பார்கள் என்று எண்ணினேனோ, அந்த என் 'தொத்தா' தீயாலான படுக்கையில் கிடத்தப்பட்டு, என் கண்ணெதிரே சாம்பலாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் கொடிய காட்சியைத்தான் நான் காணவேண்டி நேரிட்டது.
அவர்கள் மனம் நோகும்படி நான் நடந்துகொண்டதே இல்லை—இத்தனை வருஷங்களில். நான் ஏதாகிலும் சிறு சிறு தவறுகளைச் செய்து, அவர்களுக்குச் சங்கடத்தை ஏற்படுத்தி விட்டிருந்திருந்தால், அவற்றினுக்கான தண்டனையைச் சிறுகச் சிறுக, அப்போதைக்கப்போது எனக்கு அவர்கள் தரவில்லை. மொத்தமாக, ஒரே நாள், ஒரே தண்டனையாகத் தருவதுபோல், என் கண்ணெதிரே, வெந்தழலில் கிடந்தார்கள்—பார் மகனே! பார்! படுமகனே படு! என்று கூறுவது போலிருந்தது அந்தக் கொடுமை.
சே! அவர்கள் அப்படிப்பட்டவர்கள் அல்ல. அந்த நேரத்தில் அவர்கள் உயிர்பெற்று எழுந்தாலும், முதலில் மகனே! மிகவும் பயந்துவிட்டாயா! மிகவும் வேதனைப் பட்டாயா! என்று தான் கேட்டிருந்திருப்பார்கள். அவர்கள், எனக்குவேதனை மூளக்கூடாதே என்பதற்காகவே மரணத்தை ஏமாற்றிக் கொண்டிருந்தார்கள்—சில ஆண்டுகளாகவே—அவர்களால் முடிந்தவரையில் போராடிப் பார்த்தார்கள்—மரணத்தின் பிடியின் வலிமை கடைசியில் அவர்களைக் கொண்டு சென்றுவிட்டது.
மூளைக் குழாய்கள் சேதமடையும்படியான அதிர்ச்சி அவர்கள் ஏன் கொள்ள நேரிட்டது—நான் சிறைப்பட்ட செய்தியைக் கேள்விப்பட்டபோது ஏற்படாத அதிர்ச்சி, நான் நோய்வாய்ப்பட்டு, மருத்துவமனை அனுப்பப்பட்டதைக் கேள்விப்பட்டபோது ஏற்படாத 'அதிர்ச்சி', நான் நலமாக இருக்கிறேன் என்ற செய்தியை ஒவ்வொரு நாளும், மருத்துவமனையில் என்னை வந்து பார்த்துவிட்டுச் சென்ற ராணியும், பரிமளமும், தொலைபேசிமூலம் கூறக்கேட்டு அறிந்துகொண்டிருந்தவர்களுக்கு, திடீரென, ஒரு காரணமுமற்று, 'அதிர்ச்சி' ஏற்பாடுவானேன். விளங்க வில்லை, விளக்கிய மருத்துவரும் இல்லை. பார்ப்பதற்கு எப்போதும் போலிருந்த நிலையில், எங்கே அவன்? அவனைப் பார்க்கவேண்டுமே என்று கேட்டார்களாம், என் அன்னையைப் பார்த்து. என்னைப் பார்க்கவேண்டுமென்ற ஒரு அவா, அதிர்ச்சியாக வளர்ந்துவிட்டது. நான் சிறைப்பட்டு, மருத்துவ மனையில் இருக்கிறேன் என்பதனை மறந்து, நான் ஊரிலே இருப்பதாகவே நினைத்துக்கொண்டு, எங்கே அவன்? என்று கேட்டிருக்கிறார்கள். அவர்கள் எப்போதும்போலக் காணப்பட்ட நிலையில் பேசிய கடைசி வார்த்தைகள் அவைதாம்! பிறகு அவர்கள் படுத்த படுக்கையானார்கள்; பயணத்துக்குத் தயாராகி விட்டிருக்கிறார்கள்.
என்னைப் பற்றியே, ஏனோ திடீரென எண்ணிக் கொண்டிருந்திருக்கிறார்கள். அந்த எண்ணம் வேகமாக, பலமாக வளர்ந்திருக்கிறது, அதிர்ச்சியாகி விட்டிருக்கிறது. அந்த அதிர்ச்சி, மூளைக் குழாய்களைச் சேதப்படுத்தி விட்டிருக்கிறது. இறுதியைக் கொண்டு வந்து சேர்த்துவிட்டிருக்கிறது. இத்தனை நாட்களுக்குப் பிறகு, இத்தகைய விளக்கம் நினைக்க முடிகிறது. நான் கண்ட அன்று! ஐய்யோ! நினைக்கவே பயமாக இருக்கிறது. ஒருவிதத்தில் பார்க்கும் போது, நான் சிறைப்பட்டது, அவர்கள் மறைந்ததற்கு, ஒரு காரணமாக அமைந்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.
நான் பலமுறை சிறை சென்றதை அவர்கள் தாங்கிக்கொண்டவர்கள். ஆகவே இம்முறை நான் சிறை செல்வது அவர்களுக்கு வருத்தத்தைக் கொடுக்கும் என்றாலும், விபத்தைக் கொடுக்காது என்றுதான் நான் எண்ணிக்கொண்டேன். ஆனால் அவர்களோ, இத்தனை முறை தாங்கிக் கொண்டேன்—இந்த முறை முடியாது—தாங்கிக்கொள்ளும் வலிவை இழந்துவிட்டேன்—என்று தெரிவிப்பதுபோல, என்னைவிட்டுப் போய்விட்டார்கள். எனக்கு என் சிற்றன்னை, எத்தனையோ விதமான 'புத்தி மதி'களைக் கற்றுக் கொடுத்தது மட்டுமல்ல, வேதனையைத் தாங்கிக்கொள்ள வேண்டும் என்பதனையும், சில ஆண்டுகளாகவே, எனக்கு எடுத்துக் கூறிக்கொண்டு வந்தார்கள். சில ஆண்டுகளாகவே அவர்களுக்கு உடல்நலமில்லை—அடிக்கடி, 'பயப்படும்படியான' கட்டங்கள் ஏற்பட்டு விடும்—அப்போது நான் மிக வேதனையில் ஆழ்ந்திருப்பேன்—அவர்கள் நல்ல நிலை அடைந்த உடன், என்னிடம் கூறுவார்கள், "பைத்யமே! இந்த வயதிலே எனக்கு ஏதாவது ஆகிவிட்டால், அதற்காக வேதனைப்பட்டுக் கொண்டிருக்கலாமா—தைரியத்துடன் இருக்கவேண்டாமா—ஆகவேண்டியவைகளை நடத்திவிட வேண்டாமா—அழுது கொண்டிருக்கிறாயே"—என்று சொல்லுவார்கள். ஆகவேண்டியவைகளை நடத்திவிட்டேன். வேறு என்ன செய்யமுடிந்தது என்னால்? என் உடலில் ஒரு துளி மாசுபடக்கூடப் பார்த்துச் சகித்துக் கொள்ள மாட்டார்கள்—அத்தகைய என் சிற்றன்னையின் உடலுக்குத் தீ மூட்டினேன். எத்தனை கொடிய கரங்கள், எனக்கு இருப்பவை! சே!. எப்போதுமே, மிகச் சுறுசுறுப்பான அறிவுத்திறமை அவர்களுக்கு உண்டு. அதிலும் சில ஆண்டுகளாக, அவர்கள் அரசியல் பிரச்சினைகளை, நுட்பமான அரசியல் பிரச்சினைகளை, மிக ஆராய்ந்து அறிந்துகொள்ளத் தலைப்பட்டார்கள். உடல் வலிவிழந்த நிலையில், வெளியே நடமாடுவது அவர்களுக்கு இயலாது போய்விடவே, தனது நேரத்தில் பெரும்பகுதியை, படிப்பதில் செலவழிக்கத் தொடங்கினார்கள்—நான் ஈடுபட்டுள்ள பிரச்சினைகளில் அக்கரை காட்டத் தொடங்கினார்கள். ஆதரவாகப் பேசத் தலைப்பட்டார்கள். இன்ன விஷயத்தை இன்னவிதத்தில் எடுத்துச் சொல்லவேண்டும் என்று எனக்குக் கூறுவதில் ஈடுபட்டார்கள். நான் எடுத்துக்கொள்ளும் முயற்சி நியாயமானது என்பதிலே அவர்களுக்கு மிகுந்த நம்பிக்கை ஏற்பட்டு, நமது கழக வளர்ச்சியிலே மிகுந்த அக்கரை காட்டி வரலானார்கள். நமது கழகத் தோழர்களில், மிகப் பெரும்பாலானவர்களை, அவர்கள் மிக நன்றாக அறிவார்கள். அந்தத் தோழர்கள், வீட்டுக்கு வருகிறபோது உபசரிப்பதில், உள்ளன்பு கொண்டார்கள். அவர்களிடம் உள்ள பேரன்பு காரணமாக அவர்களின்போக்கு பேச்சு எதிலாவது குறை இருப்பது தெரிந்தால், கண்டிக்கக்கூடத் தயங்கினதில்லை.
அரசியல்பற்றியும், குறிப்பாக கழகப் பிரச்சினைகள் குறித்தும், அவர்கள், ஒவ்வொரு நாளும் மணிக்கணக்கில் பேசுவார்கள்—அதிலே மிகப் பெரிய பங்கு, அ.க. தங்க வேலருக்கு இருக்கும். ஒருவரும் கிடைக்காதபோது, என் அன்னையிடம், 'விவாதிக்க' ஆரம்பித்துவிடுவார்கள்—அரசியல் காரணமாகவே மகன் வீடு தங்காது இருக்கிறான் என்ற துக்கம்கொண்டுள்ள என் தாய், தன் தங்கையும் அரசியல் பேசுவதுகேட்டு, மிகுந்த சங்கடமடைந்து, "நீ சும்மா இரு அம்மா!" என்று கூறுவார்கள். அப்போது, என் சிற்றன்னை, சிரிக்கும் சிரிப்பொலி இருக்கிறதே! இருந்ததே!—என்றல்லவா சொல்லவேண்டி வந்துவிட்டது. இருந்தார்கள்! இருந்தார்கள்!—என்று ஆகிவிட்டது.
என்னால் மட்டுமே, முழுஅளவிலும் கூர்மையாகவும் உணரக்கூடிய வேதனைகுறித்து மேலும் எழுதிப் படிப்போர்களுக்கு ஒரு சங்கடத்தை உண்டாக்குவது அறமாகாது—ஆகவே இதுகுறித்து என் உள்ளத்தில் பொங்கி எழுந்திடும் எண்ணங்களை அடக்கிக்கொள்கிறேன். என் வேதனை மிகப் பெரிதாகவும், தனித்தன்மை கொண்டதாகவும் எழுந்ததற்கு மிக முக்கியமான காரணம், அந்த இழப்பு நான் துளியும் எதிர்பாராத முறையில், நேரத்தில், ஏற்பட்டதுதான்.
நான் என் சிற்றன்னை மரணப்படுக்கையில் இருப்பதைக் காண்பதற்குக் காஞ்சிபுரம் சென்ற நாளைக்கு முன்மாலை கூட, ராணியும் பரிமளமும் என்னை மருத்துவ மனையில் வந்து பார்த்தார்கள்—அப்போது, தொத்தாவுக்கு உடல்நிலை சரியாக இல்லை என்ற பேச்சே எழ வில்லை—என்னிடம் சொல்லிக்கொண்டு, அவர்கள் காஞ்சிபுரம் போயிருக்கிறார்கள். அன்றிரவு தொத்தாவுக்கு அதிர்ச்சி ஏற்பட்டு, படுத்துவிட்டார்கள். மறுநாள் காலை, 'முரசொலி'யில் செய்தி பார்த்து. நான் திகைத்துப் போனேன்—எப்படி காஞ்சிபுரத்துடன் தொடர்புகொள்ள முடியும்—நானோ மருத்துவமனையில் நோயாளியாக மட்டு மல்ல—கைதியாக—நான் இருந்த அறைக்கு எதிரிலே ஆறு போலீஸ்காரர்கள் காவல்—என்னிடம் அவர்கள் பேசவும் மாட்டார்கள்! என்ன செய்வது! இதை எண்ணி நான் திகைத்து உட்கார்ந்து கொண்டிருந்தேன். காலை மணி 10 இருக்கும், பரிமளம் வழக்கறிஞர் நாராயணசாமியுடன் உள்ளே வரக்கண்டேன்—ஒரு அற்பசந்தோஷம் கலந்த நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது; தொத்தாவுக்கு ஆபத்தான நிலைமை என்றால் பரிமளம் காஞ்சிபுரத்தைவிட்டுப் புறப்பட்டிருக்க மாட்டானே, பத்திரிகையில் மிகைப் படுத்திவிட்டார்கள் போல இருக்கிறது—ஆபத்து ஏதுமிராது என்று எண்ணிக்கொண்டு, சிறிதளவு மகிழ்ச்சியாகவே, "பரிமளம்! முரசொலியில் என்னமோ போட்டிருக்கிறார்களே தொத்தாபற்றி. என்ன?" என்று கேட்டேன் "ஆமாம்பா! அதற்காகத்தான் தான் வந்திருக்கிறேன் உங்களை அழைத்துக்கொண்டுபோக; உங்களைப் பார்த்தால், ஒருசமயம் அவர்களுக்கு நினைவு திரும்பக்கூடும்" என்றான். "நான் வருவது என்றால், அமைச்சர் அனுமதி கிடைக்க வேண்டுமே" என்று கூறி முடிப்பதற்குள், "நான் வக்கீலுடன், முதலமைச்சர் பக்தவத்சலம் அவர்களைப் பார்த்துப் பேசினேன்—பரோலில் போக அனுமதி கொடுக்கும்படி அதிகாரிகட்குக் கூறிவிட்டார். அதிகாரிகளின் உத்திரவு பெறச்செல்கிறேன். அதற்குள் உங்களிடம் கூறிவிட்டுப்போக வந்தேன்" என்று சொல்லவே ஓரளவுக்கு தைரியம் பெற்றேன். மிகுந்த கூச்சமுள்ளவன் பரிமளம். ஆனால் சில நிலைமைகள் ஏற்படும்போது, அதற்கு முன்பு இயல்பாக எழாத திறமை, சுறுசுறுப்பு, துணிவு, தன்னம்பிக்கை, வினைசெய்வகை யாவும் தன்னாலே ஏற்பட்டுவிடும் என்ற பொதுவிதிபற்றி எனக்குத்தெரியும்—ஆனால் அதை நான் விளக்கமாகப் புரிந்துகொண்டது பரிமளம் "அமைச்சரை அணுகி, எனக்குப் பரோல்" பெற்ற சம்பவத்தின்போதுதான். அன்று, கருணாநிதி, நடராசன், நெடுஞ்செழியன், இவர்கள் யாரும் சென்னையில் இல்லை. எவர் இருந்தால், 'பரோல்' பெறுவது இயலுமோ அவர்களில் ஒருவருடனும் தொடர்புகொள்ளும் நிலையில் நான் இல்லை. நானோ கைதியாக இருக்கிறேன். இந்த நிலையில், வழக்கமாக உள்ள கூச்சத்தை உதறித் தள்ளிவிட்டு, பரிமளம் எனக்குப் 'பரோல்' கிடைக்க ஏற்பாடு செய்தது, உள்ளபடி என் வாழ்நாளில், நான் மறக்க முடியாத சம்பவங்களில் ஒன்று.
அமைச்சர் குறிப்பிட்ட அதிகாரியின் உத்திரவைப் பெற்றுவர, பரிமளம் சென்றான். நான் மருத்துவ மனையில் காத்துக் கிடந்தேன்—ஒவ்வொரு விநாடியும் பல மணி நேரமாக எனக்குத் தோன்றிற்று—மருத்துவர்கள் என் நிலையைப் பார்த்து, ஆபத்து ஒன்றும் இருக்காது பயம் வேண்டாம் என்று அன்புரை கூறினர்—என்மனம் ஒரு நிலை கொள்ளவில்லை! மணி ஆக ஆக என் மனம் குழம்பலாயிற்று.
அந்தச் சமயத்தில்தான் அமைச்சர் இராமய்யா அவர்கள் அங்கு வந்தார்—பார்த்து ரொம்ப நாளாயிற்று—உடம்பு சரி இல்லை என்றார்கள்—பார்க்க வந்தேன் என்று சொன்னார். அவர் பார்த்தாக வேண்டிய 'நோயாளி' எவரேனும் மருத்துவ மனையில் இருந்திருக்கக்கூடும்—அவரைப் பார்க்க வந்தவர், நானும் மருத்துவமனையில் இருப்பதால் என்னையும் பார்க்க வந்திருக்கிறார் என்று எண்ணிக்கொண்டேன்—ஒரு அமைச்சர் வந்து பார்த்து விசாரிக்க வேண்டிய நிலையில் உள்ள 'பிரமுகன்' அல்லவே நான். எப்படியோ ஒன்று, வந்ததற்கு நன்றி கூறத்தான் வேண்டும். மிக்க அன்புடன் பேசினார்—என் கரத்தில் உள்ள வலியின் தன்மைபற்றி விசாரித்தறிந்தார்—கொஞ்சமும் தூக்க முடியாதிருந்த நிலையிலிருந்து, ஓரளவு தூக்கக்கூடிய நிலைக்கு, என் இடது கரம் வந்திருப்பதைச் சொன்னேன்—இந்த அளவுக்குக் குணம் ஏற்பட்டிருப்பது மகிழ்ச்சியே என்று என் திருப்தியைத் தெரிவித்தேன்—அவரோ, அதெல்லாம் இல்லை—முழுக் குணம் ஏற்படவேண்டும்—அவசரம் வேண்டாம்—இருந்து குணப் படுத்திக்கொண்டு போங்கள் என்று கனிவுடன் பேசினார்—என் உடன் பிறந்தவர்போல் பேசுகிறாரே என்று நான் பெருமிதம் கொண்டேன்; தொத்தா விஷயம் சொல்லி, பரோலில் செல்ல ஏற்பாடு செய்ய, என் மகன் சென்றிருக்கிறான் என்றேன்; 'இதிலே என்ன சங்கடம் இருக்கிறது, கட்டாயம் பரோலில் விடுவார்கள்; இப்படிப்பட்ட ஆபத்து என்றால் விடாமலா இருப்பார்கள்; நானும் முதலமைச்சரைக் கண்டால் செல்லுகிறேன்' என்று கூறினார். நான் சட்டசபையில் இருந்த காலத்தில்கூட, அமைச்சர் ராமையாவிடம் எனக்கு ஒரு தனியான நேசப்பான்மை உண்டு—அவர் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவராக இருக்கும்போதே, நான் அவரை அறிந்தவன். அன்று அவர் என்னிடம் காட்டிய அன்பு, உள்ளபடி என் மனதுக்குப் பூங்காற்றுப் போலிருந்தது. ஏன் அது பற்றி இவ்வளவு எழுதுகிறேன் என்றால், இவ்வளவு கனிவு காட்டிப் பேசிய அதே அமைச்சர் ராமைய்யா அவர்கள், என் நோய்பற்றியும் நான் மருத்துவமனை சேர்ந்தது பற்றியும் கேவலமாகவும் கேலியாகவும் பொதுக்கூட்டத்திலே பேசியதாகச் சில தினங்களுக்குப் பிறகு இதழ்களில் வெளிவந்திருக்கக் கண்டேன்—திகைப்படைந்தேன்—இல்லை! இல்லை! மனிதர்களுக்கு எத்தகைய இயல்புகளெல்லாம் ஏற்படுகின்றன என்று எண்ணித் திடுக்கிட்டுப்போனேன். பத்திரிகையில் அந்தச் செய்தியைப் பார்க்கும்போது, என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை. உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவது போன்ற தீய குணங்களைச் சுட்டெரிக்கத் தக்க உயர்குணத் தலைவர் காந்தியாரின் கட்சியில், இப்படிப்பட்டவரும் இருக்க இடம் இருக்கிறதே என்று எண்ணி வருத்தப்பட்டேன். எவ்வளவு கனிவான பேச்சு என்னிடம்! எத்துணை தேவையற்ற, பயனற்ற, பொருளற்ற கேலிப்பேச்சு மேடையில்! அரசியல் இந்த அளவுக்குத் தரங்கெட்ட துறையாகிவிடக் கூடாது. மணி நாலு—நான் விநாடிக்கு விநாடி வேதனை வளர்ந்துகொண்டிருக்கும் நிலையில், தவித்துக்கிடக்கிறேன் மருத்துவ மனையில்—பரிமளம் வந்து சேரவில்லை, பதறிப்போனேன். ஐந்துமணி சுமாருக்கு வந்தான். அன்று சர்க்கார் அலுவலகங்களுக்கு விடுமுறை. ஆகவே அமைச்சர் அளித்த 'வரம்' பழமாகவில்லை—எந்த அலுவலகமும் பணியாற்றவில்லை. இது தெரிந்து இளைஞனாக இருப்பினும், பரிமளம், என்றுமில்லாத அறிவுத்திறனும் ஆற்றலும் கொண்டு, நேராக அமைச்சர் பக்தவத்சலம் அவர்களின் இல்லத்தின் எதிரிலேயே சென்று நின்று கொண்டானாம். எங்கோ சென்றுவிட்டு, அவர் வீடு திரும்பி இருக்கிறார், இவன் எதிரே சென்று நின்று, இன்னும் பரோல் கிடைக்க வில்லை என்று தெரிவித்திருக்கிறான். உடனே அவர், அவனை உள்ளே அழைத்துச் சென்று, அவன் எதிரிலேயே, தொலைபேசி மூலம் பெரிய அதிகாரியிடம் தொடர்பு கொண்டு, உடனே பரோலுக்கு ஏற்பாடு செய்தாக வேண்டும் என்பதைக்கூறி. 'இனி கிடைத்து விடும், நீ சென்று உத்திரவைப் பெற்றுக்கொள்' என்று பரிமளத்திடம் கூறி அனுப்பினார். அதன்படி, உத்திரவு பெற்றுக் கொண்டு, பரிமளம் வந்து சேர்ந்தான். அ.பொ. அரசு மெத்தத் துணைபுரிந்திருக்கிறார், மிக்க பச்சாதாப உணர்ச்சியுடன் அமைச்சர் பக்தவத்சலம் நடந்துகொண்டதை நான் என்றும் மறக்க முடியாது. அவர் அமைச்சர் ராமைய்யாபோல கனிவாக என்னிடம் பேசியதில்லை; பரிமளம், என் மகன் என்பதும் அவருக்குத் தெரியாது.
வழக்கறிஞர் நாராயணசாமியை உடனழைத்துக் கொண்டு, பரிமளமும் நானும் இரவு எட்டு மணிக்குக் காஞ்சிபுரம் சென்றோம்—அன்றிலிருந்து ஆறுநாள் வரையில், என் சிற்றன்னை இறுதிப் பயணத்தில் சென்ற வண்ணம் இருப்பதைக் கண்டு கண்டு குமுறியபடி இருந்தேன்—இறுதியும் நடைபெற்று விட்டது. நாவலரும், நடராசனும், கருணாநிதியும், சத்தியவாணியும், அலமேலு அப்பாதுரையும் பிறரும், நமது கழகத் தோழர்கள் அனைவரும், என் உடனிருந்து ஆறுதல் கூறினர். எம்.ஜி. இராமச்சந்திரன், கே.ஆர். இராமசாமி, எஸ். எஸ். இராசேந்திரன், சிவாஜி கணேசன், டி.வி. நாராயணசாமி ஆகியோர் வந்திருந்தனர்—இருபத்தியோரு நாட்கள், நான் காஞ்சிபுரத்தில் தங்கினேன்—என் வாழ்க்கையில், அதற்கு முன்பு நான் கண்டறியாத ஓர் வேதனையால் தாக்கப்பட்ட நிலையில். மனிதத்தன்மையை இழந்து விடாத எவரும், இந்த என்நிலை கண்டிரங்குவர்—ஆனால் அரசியல் எதிர்ப்புணர்ச்சி காரணமாகச் சிலர்— தமது நிலைமையைக்கூட மறந்து— நான் பரோலில் வந்ததைக் கேலி செய்து பேசியதையும் பத்திரிகையிலே கண்டேன். அரசியல்துறை இத்தகைய காட்டு உணர்ச்சிகளையா தூண்டிவிட வேண்டும். அரசியல் பகையுணர்ச்சியைக் காட்டிக்கொள்ள, பண்பிழந்து, மனிதத்தன்மை இழந்தா பேச முற்படவேண்டும்! என்னையோ,என் கழகத்தையோ, கண்டிக்க வேறு வழியே இல்லையா—முறையே கிடையாதா! சிற்றன்னையை இழந்து நான் தவித்துத் கிடக்கும் போது, குடும்பத்தாருடன் இருந்து துக்கத்தைப் பங்கிட்டுக்கொள்ள, பரோலில் சென்றது நியாயத்திற்கு அப்பாற்பட்டதா! பெரும் காங்கிரஸ் தலைவர்கள் பரோலில் சென்றது இல்லையா? பல்வலிக்காக பரோலில் சென்றவர்கள் எனக்குத் தெரியும்; பண்பிழந்து பேசின சிலருக்குத் தெரியாதிருக்கலாம். அரசியல் துறையில் இத்தகைய அநாகரீகம் புகக்கூடாது என்பதற்காகவே இதுபற்றி எழுதுகிறேன். இருபத்தியோரு நாட்கள் பரோல் என்றால், என் தண்டனைக் காலத்தில் இருபத்தியோரு நாட்கள் குறைந்துவிடும் என்று பொருள் அல்ல—அந்த இருபத்தியோரு நாட்கள், நான் சிறையில் இருந்துவிட்டு வரவேண்டும், இனாம் பெறவில்லை; இருபத்தியோரு நாட்களைக் கடனாகப் பெற்றேன்; திருப்பித் தந்தாகவேண்டும். எத்தனை இழிமொழி, கேலி மொழி இதற்கு! இதைக் காரணம் காட்டியா தேர்தலில் வெற்றி பெறவழி தேடுவது. அவ்வளவு வக்கற்றுப்போன நிலை வந்துவிட்டதா! அவ்வளவு வறண்டுபோய் விட்டதா, நெஞ்சத்தின் ஈரம்; நேர்மை; பண்பு! எண்ண எண்ணத் திகைப்பாக இருக்கிறது. கள்ளநோட்டு வழக்கிலே சிறை புகுத்தவர்கள், இரண்டு மாதங்கள் 'பரோல்' பெறுகிறார்கள், குடும்ப,வியாபார விவகாரத்தைக் கவனிக்க—இந்த அரசில். என் சிற்றன்னையின் மறைவுக்காக நான் 'பரோல்' பெற்றதைக் கண்டிக்க, கேலி பேச, ஆட்சிப் பொறுப்பிலே உள்ளவர்களுக்கு, மனம் வருகிறது, அத்தகைய பேச்சை, அரசியல் பேச்சு என்றும் அவர்கள் கருதுகிறார்கள். எல்வளவு தரம் கெட்ட நிலைக்கு வந்துவிட்டது அரசியல்!! அரசியலா! அல்ல! அல்ல! அதிலே இலாபம் காணும் போக்கினர், அவ்வளவு தரம் கெட்ட நிலைக்கு வந்துவிட்டனர்.மருத்துவ மனைக்கு நான் சென்றது கூட, மாலை நேரப் பேச்சுக்கு, அந்த மகானுபாவர்களுக்குப் பயன்பட்டு விட்டது.
என் இடத்தோளில் ஏற்பட்ட வலி, இன்னும் அடியோடு போய்விடவில்லை—எளிதாகவும் போய் விடாது என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். வலக்கரத்தைக் தூக்கும் அளவுக்கு இடக்கரம் தூக்க வராது; ஒரு விதமான பிடிப்பு ஏற்பட்டுவிட்டிருக்கிறது—ஆர்தர்டிஸ் என்று பெயர் கூறுகிறார்கள். இடத்தோளில் எலும்புக்கும் சதைக்கும் இடையில் உள்ள மெல்லிய பாகம் தடித்துப் போய்விடுவதால், கை தூக்குவதிலே இடையூறு ஏற்பட்டு விடுகிறது. ஏன் தடித்துப் போகிறது? மருத்துவ நூலில், விளக்கம் இல்லை. வயதானால் தடித்துப்போகலாம்—குளிர்காற்றின் வேகம் தாக்கித் தடித்துப்போகலாம்-இவைகளெல்லாம், காரணங்களாகக் காட்டப்படுகின்றன—இதுதான் காரணம் என்று அறுதியிட்டு உறுதியாகக் கூறுவதற்கில்லை. அதைப் போலவே, இதனைப் போக்க, திட்ட வட்டமான முறையும், உடனடியான பலன் தரத்தக்க மருந்தும் இல்லை. இது அடியோடு நீங்க, மாதக் கணக்கில் ஆகலாம், வருடக் கணக்கும் ஆகலாம்—இதற்குச் செய்ய கூடியதெல்லாம், பிடிப்பு ஏற்பட்டுள்ள இடத்தில், மின்சாரத்தின் மூலம், 'ஒத்தடம்' கொடுப்பது; விடாமல் தேகப்பயிற்சி செய்வது; வலி தெரியாதிருக்க மாத்திரைகள் சாப்பிடுவது, இவைகளே. இப்போதும், எனக்கு அந்த வலியும் இருக்கிறது; தூக்கும் நிலையில் பிடிப்பு இப்போதும் இருக்கிறது. வலி மிக அதிகமாக இருந்ததுடன், வலக்கரத்துக்கும் வலி படை எடுத்த நிலைபற்றி, குறிப்பிட்டேன் அல்லவா; அது கண்டுதான் நான் அச்சம் கொண்டேன். பொதுவாக இடப்பக்கம் தோளோ, கரமோ, வலி எடுக்கிறது என்றால், இருதய சம்பந்தமானதாக இருக்கக்கூடும்; அப்படியா, அல்லது வேறுவிதமா என்பதைக் கண்டறியும் சாதனம், சிறை மருத்துவ மனையில் இல்லை. அதனாலேயே நான் சர்க்கார் மருத்துவ மனைக்குச் செல்ல விரும்பினேன். மருத்துவ மனைக்குச் சென்றுவிட்டால், சிறையில் இருப்பது போன்ற கட்டுக்காவல் இருக்காது, சிட்டுப் போலச் சிறகடித்துப் பறக்கலாம் என்பதால் அல்ல. சிறையில் இரவு மட்டும்தான், தனி அறை; மருத்துவ மனையில் 24 மணி நேரமும், தனி அறை—போலீஸ் காவல். ஒருவரிடமும் பேச அனுமதி கிடையாது. பார்க்க வருபவர்கள், மாலை 4 மணியிலிருந்து 6 மணிக்குள், சர்க்கார் மருத்துவ மனை பெரிய அதிகாரியின் அனுமதி பெற்று வந்து போகலாம். எப்போதும் எட்டு, ஆறு, நாலு என்ற அளவில் போலீஸ்காரர் அறைக்கு எதிரே காவல். நான் இருந்த பகுதியில் பணியாற்றும் மருத்துவர் தவிர, அதே மருத்துவ மனையில் வேறு பகுதியில் பணியாற்றும் மருத்துவர் வந்தால்கூட, போலீசார் விடுவதில்லை. அவ்வளவு கண்டிப்பு, அத்துணை கண்காணிப்பு! இந்த நிலையில் மருத்துவ மனையில் இருந்தேன்-நான், ஏதோ மருத்துவமனையில், விழாக் கோலத்தில் விருந்து சாப்பிட்டுக்கொண்டு இருப்பதுபோல எண்ணிக்கொண்டு, பேசிவந்தனர், கழகத்துக்கு மாசு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக, எவ்வளவு மட்டமான முறையும், நேர்மையற்ற போக்கையும் மேற்கொள்வதிலே வல்லவர்கள்.
எனக்கு ஏற்பட்ட வலியின் தன்மையைக் கண்டறியச் சிறையிலுள்ளவர்கள் துளியும் முயற்சி எடுக்காததைக் கூறினேன், நாவலரிடம். அவர் சர்க்கார் பெரிய அதிகாரியிடம் பேசி இருக்கிறார்; அந்த அதிகாரி சர்க்கார் மருத்துவ மனைத் தலைமை மருத்துவர் திரு. இரத்தினவேலு சுப்ரமணியம் அவர்களை, சிறைக்குச் சென்று என்னைப் பார்த்து வரச் சொல்லி இருக்கிறார். மருத்துவர் என்னை வந்து பார்த்துவிட்டு, மருத்துவ மனையில் வைத்துத்தான் வலியின் தன்மையைக் கண்டறிய வேண்டும் என்று கூறிடவே, நான் மருத்துவ மனைக்கு மாற்றப்பட்டேன். டாக்டர் இரத்தினவேலு சுப்ரமணியம், டாக்டர் நடராசன், டாக்டர் சத்தியநாராயணா ஆகிய மூவரும், என் வலி எதனால் என்பதைக் கண்டறிய பல்வேறு பரிசோதனைச் செய்தனர். இதயத் துடிப்புகளைப் படமாக்கும் மின்சாரக் கருவிகொண்டு பார்த்ததில் இருதய சம்பந்தமான கோளாறு எதுவும் இல்லை என்பதைக் கண்டறிந்து கூறினர், பிற்கு பல், வாய், காது, இவைகளில் ஏதேனும் கிருமிகள் உள்ளனவா, என்று ஆராய்ந்தனர். எனக்குள்ள வலி, பெரி-ஆர்திடிஸ்-என்பதாகும் என்று முடிவாயிற்று. மின்சார ஒத்தடமும் முறையான தேகப்பயிற்சியும் அளிக்கப்பட்டன. டாக்டர் நடராசன், எலும்பு சம்பந்தமான கோளாறுகளைச் சரிப்படுத்தும் நிபுணர். நமது எம்.ஜி. ராமச்சந்திரனுக்கு, கால் எலும்பு முறிந்திருந்த போது மிகத் திறமையாகக் கவனித்து, எந்தவிதமான ஊனமும் ஏற்படாமல், எம். ஜி. ரரமச்சந்திரனை எழுந்து நடமாட வைத்தவர் இதே டாக்டர் நடராசன் அவர்களே. இளம் பிள்ளை வாதத்தால் வதைபடும் குழந்தைகளுக்கான சிகிச்சை முறையை, நேர்த்தியாக அமைத்து, மிகுந்த அக்கறையுடன் கவனித்து வருகிறார். இந்தத் துறையில், மற்ற எந்த மருத்துவ மனையையும் விட, சிறப்பானதாக, இங்கு அமைய வேண்டும் என்பதிலே, டாக்டர் நடராசன் மிகுந்த அக்கரை கொண்டுள்ளார். என் வலி போக்க அவர் துவக்கிய மின்சார சிகிச்சை முடிவடைய ஒரு வாரம் இருக்கும் போது, அவர் அறுவைத் துறை நிபுணர்களின் மகா நாட்டிலே கலந்து கொள்வதற்காக, கல்கத்தா புறப்பட்டார். மறுநாளே நான், காஞ்சிபுரம் செல்லவேண்டி ஏற்பட்டு விட்டது.
டாக்டர் இரத்தினவேலு சுப்ரமணியம் மருத்துவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருப்பவர்—ஆழ்ந்த அறிவுத் தெளிவும், மிக அமைதியான இயல்பும், நோயாளிகளிடம் கனிவும் காட்டும் இவருடைய பார்வையும் பேச்சுமே, மருந்தாகிவிடும். எப்போதும் ஓர் புன்னகை தவழும் நிலையில் இருப்பவர்; மிகுந்த நகைச்சுவையுடன் பேசுபவர். என்னுடைய உடற்கூறு அவருக்குக் கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாகவே நன்கு தெரியும். சில திங்களுக்கு ஒருமுறை அவரிடம் சென்று, என் உடல் நிலைபற்றிக் கூறி, மருந்து பெறுவது வாடிக்கை—பத்து ஆண்டுகளாகவே. அவருடைய தனியான கவனிப்பு எனக்குக் கிடைத்தது கண்டு நான் பெரு மகிழ்ச்சி அடைந்தேன். எனக்கு வந்துற்ற, பெரி-ஆர்தடிஸ்சின் இயல்புபற்றி அவர் கூறியபிறகு, எனக்கு வலி கண்டவுடன் ஏற்பட்ட குழப்பமும் அச்சமும் வெகுவாகக் குறைந்துவிட்டது. தொடர்ந்து ஒரு பத்து நாள் அங்கு நான் இருந்திருக்க வேண்டும். ஆனால் இடையில் என்னைத் தாக்கிய வேதனை, இருபத்தியோரு நாட்கள், மருத்துவ மனையில் நான் இருப்பதற்கு முடியாத நிலையை உண்டாக்கிவிட்டது. காஞ்சிபுரத்தில், என் சிற்றன்னைக்கு ஏற்பட்ட நோய் தீர வழி இல்லை என்றபோதிலும், என் மனதுக்கு ஆறுதல்தர, உடனிருந்து, பல்வேறு சிசிச்சை முறைகளைக் கையாண்டு பார்த்து, கடைசி விநாடிவரை, இருந்து வந்த டாக்டர் ராமமூர்த்தி என்பவர், நான் காஞ்சிபுரத்தில் தங்கி இருந்த நாட்களில், என்னையும் கவனித்துக் கொண்டார். இதயத்தில் பலமான அடி விழுந்துவிட்ட நேரம், எனவே, என் கை வலி எனக்கு அப்போது நினைவிலே நிற்கக்கூட இல்லை. சில நாட்கள் ஆயுர்வேத முறைப்படி, மருத்துவர் தங்கப்பன் என்பவர், என் வலி போக்க முயன்றார். போதுமான காலம் கிடைக்கவில்லை. என் சிற்றன்னை தழலில் கிடத்தப்பட்டு, சாம்பலாயினார்கள்—நான் செயலற்ற நிலையில் உழன்று கிடந்தேன். 'பரோல்' முடிந்தது. பரிமளத்துடன் சென்னைக்குவந்து, வழக்கறிஞர் நாயாயணசாமி இல்லத்தில் உணவருந்திவிட்டு, நாவலர், நடராசன், கருணாநிதி ஆகியோரிடம் சிறிது நேரம் பேசிவிட்டு, 16-ந் தேதி மாலை, மீண்டும் சென்னை மத்திய சிறைக் கோட்டம் நுழைந்தேன்.
இம்முறையேனும், என்னை நண்பர்கள் உள்ள பகுதிக்கு அழைத்துச் செல்வார்கள் என்று எண்ணிக் கொண்டே, உள்ளே நுழைந்தேன்—சிறை அதிகாரிகள் என்னை, பழய இடத்துக்கே அழைத்துச் சென்றனர். பழய இடம், புதிய நிலையிலும் இருந்திடக் கண்டேன்—என்னோடு தேவகோட்டையாரும் இஸ்லாமியப் பெரியவரும் இருந்தனர் அல்லவா—அவர்களும் அங்கு இல்லை; நான் உள்ளே நுழைகிறேன், தேவகோட்டையார் வெளியே போகிறார்! இஸ்லாமிய நண்பர், மருத்துவமனை சென்றுவிட்டதாக அறிந்தேன். ஆக அன்று இரவு எட்டு அறைகள் கொண்ட அந்த விடுதியில் நான் மட்டுமே—பணியாற்ற அமர்த்தப்பட்ட கன்னியப்பன் என்ற ஒருவர்,என் வேண்டுகோளின் பேரில், பக்கத்து அறையில் இருக்க அனுமதிக்கப்பட்டது. வெறிச்சோடிய மனம்! வெறிச்சோடிய இடம்! அன்று இரவு தங்கி இருந்தேன்—மருத்துவர் முன்பே தெரிவித்திருந்ததற்கிணங்க, சிறை அதிகாரி, காலையில், என்னை அழைத்துக் கொண்டுபோய், மீண்டும் போலீஸ் மருத்துவமனையில் சேர்த்தார்—வழக்கமான காவல்—பகல் இரவு எந்த நேரமும் அறைக்குள்ளே இருந்து தீரவேண்டியநிலை—மாலையில் மருத்துவனை பெரிய அதிகாரியின் அனுமதிபெற்று, என் துணைவியும், மகனும் வந்து பார்ப்பதுஎன்ற பழய ஏற்பாடு—வெளிக்குச்செல்ல குளிக்கச் செல்ல என்றால்கூட, பலத்த போலீஸ் காவல்—மிகப்பெரிய சமூகக்கேடான குற்றம்புரிந்து, வாய்ப்புக்கிடைத்தால் ஓடிவிடக்கூடிய கெடுமதி கொண்ட குற்றவாளிகளுக்கென அமைந்திருந்த அமுல், முறை யாவும், மொழி காத்திடும் தூய நோக்குடன் அறப்போரில் ஈடுபட்டு, சிறைபுகுந்த எனக்கும்! ஏனோ இந்தப் பொருளற்ற போக்கு! சிறைக்கொடுமைகளைத் தாமே கண்டவர்கள், காங்கிரசார்—அவர்கள் நடத்தும் ஆட்சியில், சிறைக்கொடுமை நீக்கப்படவில்லை—சிறை நிலைமையை மருத்துவமனையிலும் புகுத்தி இருந்தார்கள். சிறையிலாவது பகலெல்லாம் சிறிதளவு நடமாடலாம், சிலருடன் உரையாடலாம்-மருத்துவமனையில், பகலிலும் சரி இரவிலும் சரி, ஒரு அறைக்குள் அடைபட்டுக்கிடக்கும் நிலை. சேலம் மாவட்டம் வேலூர் தோழர் சிவப்பிரகாசம் எனக்கு நீண்ட பல ஆண்டுகளாக நண்பர்—அவர் அறுவை சிகிச்சை பெற்றுக் கொண்டு, நான் இருந்த இடத்தில் வேறோர் அறையில் படுத்திருந்தார். அவரைச்சென்று பார்க்கக்கூட அனுமதி இல்லை. அவர் இங்குவந்து பார்க்கவும் அனுமதி இல்லை. அவர், மருத்துவமனையிலிருந்து உடல்நலம் பெற்று வீடு ஏகும்நாள், என் அறைக்குள் வந்து, இரண்டொரு நிமிடங்கள் பேசிவிட்டு, போலீசார் மேற்கொண்டு கெடுபிடி செய்வதற்கு முன்பு சென்றுவிட்டார். அவ்வளவு கண்டிப்பான முறையிலே, காவல் இருந்து வந்தது. இதனை அறியாமலோ, அறிந்தும் வேண்டுமென்றோ, அரசியல் மாச்சரியம் காரணமாகச் சிலர், மருத்துவமனையில் நான் தங்கி இருந்ததை, ஏதோ மணவிழா மன்றலில் தங்கி இருந்தது போல எண்ணிக்கொண்டு, ஏசிப் பேசினர். சிலருக்கு உள்ளம் அப்படி இருக்கிறது!! மாலைவேளைகளில் ராணியும் பரிமளமும், என் பெரிய மருமகப் பெண்ணும் வருவார்கள்—அவர்களுக்கு என்னைக் காண்பதால் ஒரு விதமான மனநிம்மதி—எனக்கும் அவ்விதமே. ஆனால், 'தொத்தா' பற்றிய நினைவு வந்துவிடும்—வேதனை மீண்டும் தேளாகிக் கொட்டும். இந்நிலையில் இருந்துகொண்டு மீண்டும் மின்சார சிகிச்சை பெற்றுக்கொண்டு வந்தேன்.