உள்ளடக்கத்துக்குச் செல்

கைதி எண் 6342/மேயர் தேர்தல்—எம். ஜி. ஆர்.

விக்கிமூலம் இலிருந்து

10. மேயர் தேர்தல் எம். ஜி. ஆர்!
(கடிதம் 10, காஞ்சி 22-11-64)

தம்பி!

சிறைக்குள்ளே நுழைந்ததும், நான் வெளியே போய் வந்ததால், ஏதேனும் "சேதி" கொண்டு வந்திருப்பேன் என்று எண்ணிக்கொண்ட நண்பர்கள், மெத்த ஆவலாக என்னைச் சூழ்ந்துகொண்டார்கள்.

நான் பார்த்துவிட்டு வந்ததோ, போலீசார், நோயாளிகள், டாக்டர்கள் ஆகியோரைத்தான். எனவே நான் நண்பர்களுடன் சேர்ந்து, மேயர் தேர்தல் பற்றிய விவாதத்தில் ஈடுபட்டிருந்தேன்.

'மணி இரண்டு! உள்ளே நுழைவார்கள்—உறுதிமொழி எடுப்பார்கள்—மூன்று மணி,உறுதி மொழி எடுப்பது பகுதிக்கு மேல் முடிந்திருக்கும்—நாலு மணி! முன்மொழிந்திருப்பார்கள், கிருஷ்ணமூர்த்தியின் பெயரை! மணி ஐந்து! இன்னேரம் 'ஓட்டு' பதிவாகிக் கொண்டிருக்கும்' என்று சிறைக்குள்ளே நாங்கள் துடித்த நிலையில்பேசிக்கொண்டிருந்தோம். எங்கள் நிலையை யூகித்தறிந்து கொண்ட சிறைக் காவலாளிகள்கூட புன்னகை செய்தபடி இருந்தனர்.

ஐந்து மணிக்குமேல், என்னைக் காண ராணி, பரிமளம், நடராசன் மூவரும் வந்திருந்தனர்.

ராஜகோபால், உண்ணாவிரதம் இருக்கப்போவதாகச் சொன்னது விளையாட்டுக்கு என்று தான் எண்ணிக் கொண்டதாகப் பரிமளமும், இரண்டு நாட்களுக்கு முன்பு ஒருநாள் முழுவதும் 'நம்நாடு' அலுவலகத்திலேயே ராஜ கோபால் தங்கி இருந்ததாக நடராசனும் கூறினார்கள். சிறை மேலதிகாரிகள் உடன் இருந்ததாலும், அரசியல் பேச்சு அறவே கூடாது என்று தடை இருந்ததாலும், மேற்கொண்டு எந்த விளக்கமும் பெற வழி இல்லாமற் போயிற்று. எம்.ஜி. ஆர். கழகப் பணியாற்றுவதிலிருந்து விலகமாட்டார், தம்மீது வேண்டுமென்றே சிலர் வீண் பழிசுமத்துவதைக் கண்டிக்கவே மேலவை உறுப்பினர் பதவியை விட்டு விலகினார் என்று கூறி, நடராசன் என் மனதுக்கு நிம்மதி ஏற்படுத்தினார். மேயர் தேர்தலில், வெற்றி நிச்சயம் என்றும், சிக்கல் ஏதும் இல்லை என்றும் கூறி, எனக்கிருந்த குழப்பத்தைப் பெருமளவு போக்கினார். என் பெரிய மருமகப்பெண் சரோஜாவை அழைத்துக் கொண்டு, ராணி மாயவரம் செல்லப் போவதாகக் கூறினார்கள். இரண்டு நாட்களுக்கு முன்பு சரோஜாவுக்கு 'ஜுரம்' என்றும், இப்போது நலமாகவே இருப்பதாகவும் தெரிவித்தார்கள். உயர்நீதி மன்றத்தில், கருணாநிதி, நடராசன் ஆகியோருடைய வழக்கு மறு நாள் எடுத்துக் கொள்ளப்பட இருக்கிறது என்று நடராசன் கூறினார்.

அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு, உள்ளே வந்ததும், நண்பர்கள் சூழ்ந்துகொண்டார்கள். என்ன சேதி, நடராசனா வந்திருந்தது? மேயர் தேர்தல் எப்படி? என்றெல்லாம் கேட்டபடி.

நடராசன் தைரியமாகவே இருக்கிறார்; கழகம் வெற்றிபெறும் என்கிறார் என்று கூறினேன். என்றாலும் இரவு நெடுநேரம் வரையில் மேயர் தேர்தல் சம்பந்தமான கவலையுடனேயே இருக்க நேரிட்டது—இத்தனைக்கும் ஒரு சிறைக்காவலாளி, கிருஷ்ணமூர்த்தி மேயராகவும், கபால மூர்த்தி துணைமேயராகவும் தேர்ந்தெடுக்கப் பட்டு விட்டார்கள் —55 வாக்குகள் என்று கூறியிருந்தார்—என்றாலும், பத்திரிகையில் செய்தி பார்க்கிறவரையும், நிம்மதி எப்படி ஏற்படும்? இது குறித்தே கவலை மிகுந்திருந்ததால், இன்று இரவு குறிப்பு எழுதுவதுடன் நிறுத்திக்கொண்டேன்—அதிகமாகப் படிக்க விருப்பம் எழவில்லை.

17—3—64

இன்று காலையில், சிறை மேலதிகாரிகள் கைதிகளைப் பார்வையிடும் நிகழ்ச்சி, வழக்கப்படி நடந்தேறியது.

காலையில், வெளியே இருந்து உள்ளே வந்திருந்த சிறைக்காவலாளிகள் மேயர் தேர்தலில் கழகம் வெற்றி பெற்றது என்று தெரிவித்தார்கள்; மகிழ்ச்சி பொங்கிடும் நிலையில் இருந்தோம். வழக்கத்தைவிட சற்று அதிகமாகவே, நூற்புவேலை செய்தேன். பனிரெண்டு மணிக்கு மேல் பத்திரிகைகள் தரப்பட்டன—வெற்றிச் செய்தியைப் படித்துப் படித்துச் சுவைத்தோம். பொள்ளாச்சி நகராட்சித் தலைவராகக் கழகத்தோழர் வெற்றிபெற்றார் என்ற விருந்தும் கிடைத்தது. பொள்ளாச்சி மோட்டார் மன்னர் மகாலிங்கம் அரசோச்சும் ஊர் ! டில்லி இரும்பு மந்திரி சுப்ரமணியம் அவர்களின் தொகுதி, காங்கிரஸ் ஆதரவு ஏடுகளே எழுதியுள்ளபடி இதுவரையில் காங்கிரஸ் கோட்டையாக இருந்து வந்த இடம். அங்கு நமது கழகத் தோழர் நகராட்சிமன்றத் தலைவர் ஆகியிருக்கிறார் என்பது கேட்டு அகமிக மகிழ்ந்தோம்.

நாம் விரும்பியபடியே நண்பர் கிருஷ்ணமூர்த்தி மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார் என்ற செய்தி எங்களுக்கு இந்த சிறைச்சாலையையே சிங்காரச் சோலையாக மாற்றிவிட்டது.

துணை மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கபால மூர்த்தி, என் நீண்டகாலத்து நண்பர், இருபது வருடங்களாக எனக்குத் தோழர். சிந்தாதிரிப்பேட்டை சுயமரியாதைச் சங்கத்தில் நான் ஈடுபட்டுப் பணியாற்றிய நாள் தொட்டு, எனக்கு உற்ற நண்பராக இருந்து வருபவர். ஏழை, அடக்கமானவர், கொள்கைப் பிடிப்பு உள்ளவர்-அவர் துணைமேயராக வந்திருப்பது எனக்கு அளவிலாத மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சியாகும்.

இன்று மாலை, அடைக்கப்படுமுன்பு மற்றோர் மகிழ்ச்சியான செய்தி கிடைத்தது. வழக்கறிஞரும் என் நண்பருமான கழகத் தோழர் சாமிநாதன், சிதம்பரம் நகராட்சி மன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார்—அவருடைய தந்தி கிடைத்தது; மிக்க மகிழ்ச்சி பெற்றேன்.

ஒரே நாளில் அத்தனை மகிழ்ச்சியா என்று கேட்டுத் தாக்குவதுபோல, நீண்ட பல ஆண்டுகளாக எனக்கு மிகவும் வேண்டியவராக, குடும்ப நண்பராக விளங்கிக் கொண்டுவந்த, கழக அன்பர், திருவெற்றியூர் டி.சண்முகம் அவர்கள் காலமானார் என்ற திடுக்கிடத்தக்க செய்தியைத் தந்தி மூலம் நண்பர் நடராசன் தெரிவித்திருந்தார்.

தொத்தாவின் மறைவினால் நான் வேதனைப் பட்டிருந்தபோது, காஞ்சிபுரம் வந்திருந்து எனக்கு ஆறுதல் மொழி கூறிய அந்த அன்பரை இழந்துவிட நேரிட்டு விட்டதை எண்ணி மெத்த வருத்தப்பட்டேன். என்னிடத்திலும் கழக வளர்ச்சியிலும் அக்கரை மிகக் கொண்டிருந்த அன்பர் அவர்; அஞ்சா நெஞ்சு கொண்டவர். அவருக்குச் சுயமரியாதைக் கொள்கையில் ஆழ்ந்த நம்பிக்கை உண்டு; பலரைச் சுயமரியாதைக்காரர் ஆக்கிய பெருமையும் உண்டு. நல்ல நிர்வாகத் திறமை உள்ளவர்; செங்கற்பட்டு மாவட்டக் கழகத்தில் நற்பணி புரிந்தவர்; எங்கு நமது கழகக் கூட்டமென்றாலும், மாநாடு என்றாலும், அவரை அங்கே காணலாம். கழகத் தோழர்களுடன் அளவளாவி மகிழ்வார். அவருடைய மறைவு கழகத்துக்குப் பொதுவாகவும், குறிப்பாக எனக்கும் ஈடுசெய்ய முடியாத நட்டமாகும்.

இன்றிரவு அன்பருடைய மறைவு பற்றிய துக்கம் தாக்கிடும் நிலையிலேயே உறங்கச் செல்கிறேன்.

18—3—64

இன்று காலை நம் இதழ்களில், எம். ஜி. ராமச்சந்திரன் விடுத்திருந்த அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். ஏற்கனவே நான் அவருடைய உள்ளப்பாங்கை நன்கு அறிந்திருந்த போதிலும், அவருடைய விளக்க அறிக்கை வெளி வருகிறவரையில், மனது குழம்பியபடிதான் இருந்து வந்தது. என்னைப் போலவே எண்ணற்ற தோழர்கள் இது குறித்துக் குழம்பிக்கிடப்பார்கள் என்பதை அறிந்து, தக்க சமயத்திலே அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இதற்கு இடையில், கிடைத்த சமயத்தை வைத்துக் கொண்டு, அரசியல் ஆரூடக்காரர்களும் கரகமாடுவோரும், தமது 'வித்தைகளை'க் காட்டி, மாலை நேரத்தை ஓட்டிக் கொண்டிருந்திருக்கிறார்கள் என்ற செய்தியைச் சில இதழ்களின் மூலம் தெரிந்துகொண்டேன்.

எந்தப் பிரச்சினை குறித்தும் அதிகமான அளவு மனக் குழப்பம் கொள்ளாமல், தமக்குத் தோன்றும் விளக்கத்தை ஒளிவு மறைவு இல்லாமலும், கூச்சம் அச்சம் கொள்ளாமலும் எடுத்துக் கூறுபவர் அன்பழகன். அவருங்கூட எம்.ஜி.ஆர். விலகல் பற்றி மனச்சங்கடம் கொண்டிருந்தார். இன்று வந்த அறிக்கையைப் பார்த்தபிறகு மகிழ்ச்சி அடைந்தார். வேடிக்கையாக ஒன்று சொன்னார்—அந்த வேடிக்கையிலும் ஒரு நேர்த்தியான உண்மையும், சுவையான கருத்தும் இணைந்திருந்ததை உணர்ந்தேன்.

எம்.ஜி.ஆர். மேலவை உறுப்பினர் பதவியை விட்டு விட்டார்—அது இனிக் காங்கிரசு கட்சிக்குத்தான் கிடைத்துவிடும்—என்று துவக்கினார்.

ஆமாம்—சிலநாள் கழித்து, தேர்தல் வைத்துக் கொள்வார்கள்—ஒரே இடம் என்பதால் அது எண்ணிக்கை வலிவுள்ள காங்கிரஸ் கட்சிக்குத்தான் கிடைக்கும் என்று கூறினேன்—வருத்தத்துடன் சிரித்துக்கொண்டே அன்பழகன் சொன்னார், "இது வரையில் நாம் நமது வாக்குகளைப் பல கட்சியினருக்கும் கொடுத்து அவர்களுக்கு இங்கும் டில்லியிலும் மேலவையில் இடம் கிடைக்கச்செய்தோம்—காங்கிரசுக்கு மட்டுந்தான் இடம் கொடுக்காமலிருந்தோம். இப்போது அந்தக் குறையும் நீங்கிவிட்டது; புரட்சி நடிகர் விட்ட இடத்திலே ஒரு காங்கிரஸ்காரர் புகுந்துகொள்வார்"—என்றார். எல்லோரும் சிரித்தோம்—எவரெவருக்கு நாம் இத்தகைய வாய்ப்பு அளித்திருக்கிறோம் என்று கணக்கெடுத்தோம்.

ஜஸ்டிஸ் கட்சித் தலைவரான பி. டி. இராஜனுக்கு ஒரு முறை வாக்களித்து, மேலவையில் அமரச் செய்திருக்கிறோம்.

கம்யூனிஸ்டு கட்சியினரான இராமமூர்த்திக்கு வாக்களித்து, டில்லி மேலவையில் சென்று அமர வாய்ப்பளித்தோம்.

முஸ்லீம் லீகினர் ஜானிபாயை ஆதரித்து சென்னை மேலவையில் உறுப்பினராக இருக்கவைத்தோம்.

சுதந்திரக் கட்சியினரான பேராசிரியர் இரத்தின சாமியை ஆதரித்து. டில்லி மேலவையில் அமர ஏற்பாடு செய்தோம்.

முஸ்லீம்லீகின் தோழர் சமதும், சுதந்திரக்கட்சி மாரிசாமியும் இம்முறை நமது ஆதரவுபெற்று டில்லி மேலவை செல்ல இருக்கிறார்கள்.

இப்படி இத்தனை கட்சிகளுக்குத் துணை செய்து விட்டு காங்கிரசுக்கு மட்டும் ஒருமுறைகூட ஆதரவு தராமலிருக்கலாமா? அந்தக் குறையும் தீர்ந்துபோகத்தானோ என்னவோ, மேலவை உறுப்பினர் பதவியை எம்.ஜி.ராமச்சந்திரன் உதறிவிட்டது!—என்று பேசிக் கொண்டிருந்தோம்.

மறைந்த பெரும் பேராசிரியர் ரா.பி. சேதுப்பிள்ளை, இன்று மணிகளெனச் சுடர்விட்டு விளங்கும் டாக்டர் மு.வ. ஒளவை துரைசாமி, தெ. பொ. மீனாட்சிசுந்தரனார் போன்ற தமிழ்ப் புலவர்களின் அறிவாற்றல் குறித்து அன்பழகன் கனிவாகப் பல கூறினார். பொதுவாக இன்று தமிழ்மொழி பெற்றுவரும் ஏற்றம் குறித்துப் பேசி மகிழ்ந்தோம். குறளாராய்ச்சியில் அன்பழகன் ஈடுபட்டிருக்கிறார், ஆகையால், அவரிடம் அதுகுறித்துப் பேசி மகிழ்வதிலே எனக்கோர் தனி இன்பம் கிடைக்கிறது.

நமது கழகத்தோழர்கள், சட்டமன்றத்தில் மிகச் சுறு சுறுப்புடன் பணியாற்றி வருவது, இதழ்கள் மூலம் தெரிகிறது. மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுகிறது. வழக்கம் போல இதழ்கள் குறித்து இருட்டடிப்புச் செய்து வருகிறது என்றாலும், ஓரளவுக்கு 'நம்நாடும்'—'முரசொலியும்' மக்களுக்கு விளக்கமளிக்க முனைந்திருக்கின்றன என்பது, உற்சாகமூட்டுவதாக இருக்கிறது.

தமிழ்மொழி ஏற்றத்துக்காகவும் பிறமொழி ஆதிக்கத் தடுப்புக்காகவும், பணியாற்றி வரும் நமது கழகத்திடம், தமிழறிஞர்கள் பற்றுக்காட்டவேண்டியது முறையாயிருக்க, சிலர் வெறுத்து ஒதுக்குவதும், சிலர் அஞ்சி ஒதுங்கிக்கொள்வதும், சிலர் எதிர்த்து நிற்பதுமாக இருப்பது வேதனை தரக்கூடிய விந்தையாக இருக்கிறது என்பது குறித்துப் பேசிக்கொண்டிருந்தோம். ஆட்சியில் உள்ளவர்கள் எந்த விதத்திலும் மனக்கசப்புக் கொள்ளக்கூடாது, அதுவே நமக்கு வாழ்க்கையில் வெற்றி தேடிக்கொடுக்கும் என்ற பாதுகாப்பு உணர்ச்சியே, தமிழ் கற்ற அறிஞர்களை மட்டுமல்ல, வேறு பலரையும் ஆட்டிப்படைக்கின்றது என்பதனை நான் கூறினேன்.