உள்ளடக்கத்துக்குச் செல்

கைதி எண் 6342/வெற்றிகள் குவிந்தன!

விக்கிமூலம் இலிருந்து

11. வெற்றிகள் குவிந்தன!
(கடிதம் 11, காஞ்சி—29-11-64)

தம்பி!

சிலர், உயர்நிலை செல்வதற்காக, ஆட்சியாளர்களுக்கு இனியவர்களாக நடந்துகொள்கிறார்கள்—நம்மிடம் தனியாகப் பேசும்போது மெத்த உருக்கம் காட்டக்கூடச் செய்கிறார்கள். நாமே ஏமாந்துவிடுகிறோம், இவர்கள் மேல்நிலை வருகிறவரையில் இப்படித்தான் இலைமறை காயாக இருப்பார்கள்—இருக்க வேண்டும் இவர்களின் நிலைமை வலுவாகிவிட்ட பிறகு, இவர்கள் முழுக்க முழுக்க, நம்மவர் என்று தம்மை விளக்கிக் காட்டுவார்கள் என்று எண்ணி விடுகிறோம். ஆனால் 'மேல்நிலை' அடைந்ததும்; கிடைத்ததை உறுதிப்படுத்திக் கொள்ளவும் ஊறு நேரிடாமற் பார்த்துக்கொள்ளவும், இவர்கள் 'நம்மவர்' என்பது துளியும் வெளியே தெரியாதபடி, தம்மை ஆக்கிக்கொண்டு விடுகிறார்கள் என்பது பற்றிப் பேசி, அதற்கான சில எடுத்துக் காட்டுகளும் கூறினேன். நண்பர் அன்பழகன் இந்த என் கருத்தை வலியுறுத்தத்தக்க வேறு சில எடுத்துக் காட்டுகளைத் தந்தார்.

இத்தகைய இக்கட்டுகளை, மேல்நிலையினர் மூட்டிவிட்டாலும், மக்கள் நமது கழகத்தை மேலும் மேலும் ஆதரித்து வருகிறார்கள் என்பதை, நடைபெற்ற நகராட்சி—மாநகராட்சி மன்றத் தேர்தல்கள் எடுத்துக் காட்டி விட்டன என்பது எங்களுக்கு பெருத்த உற்சாக மளித்தது. வெளியே நடைபெறும் வெற்றி விழாக் கூட்டங்களிலே, நாங்கள் கலந்துகொள்ளும் நிலை இல்லை என்றாலும், இங்கு இருந்தபடியே, அந்த விழாக் கோலத்தை எண்ணி எண்ணி மகிழ்ச்சி பெறுகிறோம்.

இன்று, ஐரோப்பாவிலே நிலைபெற்றுவிட்ட கிருத்துவ மார்க்கத்தில், பிரிவும் பிளவும் ஏற்பட்ட சூழ்நிலையை விளக்கும் ஒரு வரலாற்றுத் தொடர்புடைய கதையைப் படித்தேன்.

போப்பாண்டவரின் ஆளுகை ஒருபுறம்—சிற்றரசர்களின் கோலாகலம் மற்றொருபுறம்—சீமான்களின் கொட்டம் பிறிதோர் பக்கம்—இவைகளுக்கிடையிலே துரத்தப்பட்டும் இழுக்கப்பட்டும், ஏழை மக்கள்—இருந்த நிலைமையை விளக்கும் ஏடு.

மார்க்கம், தூய்மையையும் வாய்மையையும் பாதுகாத்திட மலருகிறது—அதிலே களங்கம் ஏற்பட்டு விட்டது, அதனைக் களைந்திட வேண்டும் என்று, எதிர்ப்பு இயக்கம் எழுகிறது—அந்த எதிர்ப்பு இயக்கம் வெற்றி கண்டபிறகு, புதிய அக்ரமங்கள், புதிய அநீதிகள் முளைவிடுகின்றன.

இந்த நிலைமை பற்றியும், அந்த ஏடு தெளிவாக விளக்கம் தருகிறது.

'சாமான்யர்களும்' முறைப்படியும், நம்பிக்கையுடனும், தன்னலமற்றும் எழுச்சியுடனும் பணியாற்றினால், அக்ரமத்தை எதிர்த்தொழிக்க முடியும் என்ற உண்மையை இந்த ஏடு கோடிட்டுக் காட்டுகிறது.

முற்றிலும் வேறான காலம் இது; நமது முறைகளும் வேறு என்றாலும், நமது கழகத்தின் பணியும் ஒருவிதத்தில், 'சாமான்யர்'களின் முயற்சிதானே. எனவே, அதிலே, ஈடுபட்டுள்ள என்போன்றாருக்கு, பல்வேறு காலங்களிலும் இடங்களிலும், அக்ரமத்தை எதிர்த்து நிற்க சாமான்யர்கள் மேற்கொண்ட முயற்சிகளைப்பற்றிப் படித்தறியும் போது, புதிய தெம்பு பிறக்கத்தான் செய்கிறது. நாம் மேற்கொண்டுள்ள பணி, அக்ரமத்தை எதிர்த்து நடத்தப் படும் 'புனிதப் போர்' எனும் பெருங் காப்பியத்திலே ஒரு பகுதியே தவிர, முற்றிலும் புதிதானதல்ல என்ற ஒரு பூரிப்பான எண்ணம், இன்று எனக்குப் பூங்காற்றாகித் துணை புரிந்தது.

19—3—64

காஞ்சிபுரத்தில் வெற்றி, ஆரணியில் வெற்றி என்ற செந்தேன் இன்று, கிடைத்தது. ஆரணித் தோழர்கள், நான் மருத்துவ மனையிலே இருந்தபோது, என்னை வந்து பார்த்தனர். வெற்றி நிச்சயம் என்றும் கூறினர். என்றாலும் "பெரிய புள்ளிகள்" வேலை செய்து, நிலைமைகளைத் தலைகீழாக மாற்றிவிட முடியுமல்லவா—ஆகவே, என்ன ஆகிறதோ என்ற கவலை, மனதைப் பிய்த்தபடிதான் இருந்தது. ஆரணியில் வெற்றி கிடைத்தது என்ற செய்தியை இதழில் படித்த பிறகு மகிழ்ச்சி உறுதியாயிற்று. காஞ்சிபுரத்தைப்பற்றியும் ஐயம் கொள்ளவேண்டிய நிலை இல்லை. என்றாலும், காங்கிரஸ்காரர்கள் பொதுத்தேர்தலில் கையாண்ட முறைகளைக் கொண்டு, ஏதாவது செய்துவிடுவார்காளோ என்ற அச்சம் ஒருபக்கம் இருந்துகொண்டிருந்தது. இதழில் வெற்றிச்செய்தி கண்டபிறகு, புதிய உற்சாகம் பிறந்தது.

நான் 'பரோலில்' காஞ்சிபுரத்தில் இருந்தபோது, நமது கழகத்தோழர்கள் என்னிடம் இம்முறை கழகம் மிகப்பெரிய வெற்றிபெறும் என்று எழுச்சியுடன் கூறினார்கள். இப்போது நமது கழகத்தவர் நால்வர் உறுப்பினராக இருக்கிறார்கள்—அதிகம் வேண்டாம், இந்த முறை எட்டு கழகத்தவர் உறுப்பினரானாலே போதும், அதுவே பெரிய வெற்றி தான் என்று நான் சொன்னேன். நண்பர் சபாபதி, "எட்டா? அதற்கு மேல் வெற்றி கிடைத்தால் என்ன தருகிறீர்கள்?" என்று 'பந்தயம்' பேசினார். "நூறு ரூபாய் விலையில் ஒரு கைக்கடிகாரம் தருகிறேன்." என்று கூறினேன். நூறு ரூபாய்ச் செலவு வந்துவிட்டது!!

இதனை இங்கே நண்பர்களிடம் சொன்னபோது, 'வாங்கித் தரவேண்டியதுதான்!' என்று கூறினார்கள். செலவு, எனக்கல்லவா, இவர்களுக்கு என்ன? வெகுதாராளமாகச் சொல்லிவிட்டார்கள்!

காஞ்சிபுரத்தில் வெற்றிக்காகப் பாடுபட்ட நமது தோழர்கள் அனைவருக்கும், நான் நன்றிகூறிக் கொள்கிறேன்.

அமைச்சர் பக்தவச்சலம், தம்முடைய ஆதீனத்தில் உள்ள ஊர்களிலே ஒன்று என்று காஞ்சிபுரத்தைக் கருதிக் கொண்டிருக்கிறார். அங்கு நகராட்சிமன்றம் கழகத்திடம் வந்திருப்பது தனி முக்கியத்துவம் வாய்ந்தது என்பதில் ஐயமில்லை.

வெற்றிச் செய்திகளால் ஏற்பட்ட உற்சாகத்தில், என் கரத்திலே 'தக்ளி' வெகுவேகமாகச் சுழன்றது.

முன்புவடார்க்காடு பகுதியில் வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்தவரும், இப்போது கதர்த் துறையில் பணிபுரிபவருமான அதிகாரி ஒருவர், சிறையில் நூற்பு வேலை—காகிதம் செய்தல் ஆகியவைகளைப் பார்வையிட இன்று வந்திருந்தார்.

எங்களுடைய நூற்பு வேலையைப் பார்த்து மகிழ்ந்தார்.

இன்று பிற்பகல், துணைமேயர் கபாலமூர்த்தி என்னைக் காண வந்திருந்தார்.

இன்று, சென்னை மாநகராட்சிமன்றத் துணைத் தலைவராக வந்த கபாலமூர்த்தி, இதே சிறையில் சென்ற ஆண்டு கைதியாக இருந்தவர்தான்!!

என்னைப் பார்த்த உடனே மகிழ்ச்சியால், குரல் தழதழத்தது கபாலமூர்த்திக்கு.

கபாலி, குமரேசன், ராகவலு இவர்களுடன் சிந்தாதிரிப்பேட்டைப் பழங்குடிமக்கள் வாழும் பகுதியில், ஒரு பாலத்துக்குப் பக்கத்திலே, நான் ஒவ்வொரு மாலையும் பேசிக்கொண்டிருப்பேன் இருபது ஆண்டுகளுக்கு முன்பு—சிந்தாதிரிப்பேட்டை சுயமரியாதைச் சங்கத்துக்கு நான் அப்போது தலைவன், எத்தனை உற்சாகம்! என்னென்ன பேச்சு! அந்த நாட்களில்! அதே கபாலமூரீத்தி, துணைமேயர்!

அன்று கபாலியைப் பார்த்தபோது, பாலத்தருகே உலவிய நாட்கள் நினைவிற்கு வந்தன. பேச இயலவில்லை. என் எண்ணம் முழுவதையும், விளக்கிட முதுகைத் தட்டிக்கொடுத்தேன்.

என்னிடம் எப்போதுமே கூச்சத்துடன் நடந்து கொள்ளும் பழக்கம் கபாலிக்கு—இப்போது நான் 'கைதி'யாக, கபாலி துணைமேயராக—கூச்சம் மேலும் அதிகமாகிவிட்டது. தேர்தல் நடைபெற்ற முறைபற்றி ஏதேதோ கேட்க எண்ணினேன்—எனக்கும் பேச இயலவில்லை. ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்வதே, பேச்சைவிடப் பொருள் மிகுந்ததாக இருந்தது.

மேயர், தமது மகனுடைய திருமண சம்பந்தமாகக் கோவை சென்றிருப்பதாகக் கபாலி கூறினார். சுறுசுறுப்பாகவும் அக்கறையுடனும் பணியாற்றும்படி கேட்டுக்கொண்டேன். பணிபுரிவார் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கிறது.

இன்று 'கல்கி' இதழில், ரா. கணபதி என்பவர் எழுதியிருந்த 'ஜயஜய சங்கர' என்ற தொடர் கட்டுரையைப் படித்தேன். எழுதப்பட்டுள்ளதில் முழு ஈடுபாடு கொண்டு எழுதியிருக்கிறார். சங்கரர், தமது காலத்தில், நாட்டிலே தலைவிரித்தாடிய அறுபதுக்கும் மேற்பட்ட போலி மார்க்கங்களை அழித்து, அத்வைதத்தை நிலைநாட்டினார் என்பது குறித்து, விளக்கமளித்துள்ளார். சங்கரர் பெற்ற வெற்றி எத்துணை சிலாக்கியமானது என்பதையும் எடுத்துக்காட்டியிருக்கிறார். ஆனால் ஏற்கனவே எனக்கு ஏற்பட்ட ஒரு எண்ணம், இந்த ஏடு படித்த பிறகு மேலும் உறுதிப்பட்டது. தூய்மைப்படுத்தும் இயக்கம் எவ்வளவு வெற்றி பெற்றாலும், மீண்டும் அக்ரமம்—அநீதி—தோன்றிட முடியாத நிலையை ஏற்படுத்த முடியவில்லை—சங்கரரின் திக் விஜயம்—'வாதம்'—'பீடஸ்தாபிதம்' ஆகியவைகளுக்குப் பிறகு, அத்வைதம் அரசோச்சிய இடத்திலே 'துவைதமும்'—'விசிஷ்டாத்வைதமும்' மலர்ந்து, மகுடம் சூட்டிக் கொண்டன என்று அறியும்போது, தூய்மைப்படுத்தும் இயக்கம் பெறும்வெற்றி, மீண்டும் கேடுகள் தோன்றிட முடியாத நிலையை ஏற்படுத்துவதில்லை என்ற எண்ணம் வலிவு பெற்றது. அதிலும் சங்கரர் வாதிலே வென்ற இருவர்—குமாரிலபட்டர்—மண்டனமிசிரர்—ஒருவர் முருகன்—மற்றவர் பிரம்மா—சங்கரரோ சிவன்! சிவனாரே, இந்த இருவரையும் பூலோகத்தில் இவ்விதம் அவதரித்து இருங்கள், நாம் சங்கராக வந்து உம்மை வாதில் வீழ்த்துவோம் என்று கூறி அனுப்பினார் என்று சொல்லப்படுகிறது. ஏற்கனவே செய்யப்பட்ட ஒரு 'ஏற்பாடு' என்று கருதக்கூடிய ஒரு நிலை! இது எனக்கு என்னமோ போலிருந்தது—சில குத்துச்சண்டை—குஸ்திச்சண்டை—ஆகியவைகளில், வெற்றி—தோல்விபற்றி முன்னதாகவே 'ஏற்பாடு' செய்து கொள்வார்களாமே! அது போல ஒரு தோற்றமளிக்கிறது—கைலாயத்தில் பேசிக்கொண்டு பூலோகத்திலே வாதப்போர் நடத்தியது. குமாரிலபட்டரும்—மண்டன மிசிரரும், குமரன், பிரமன் என்று இல்லாமல், மார்க்கத் துறையில் வேறு முறைகளை ஆக்கிய ஆசான்களாக மட்டுமே இருந்திருந்தால், நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றிற்று.

ஆனால், எல்லாவற்றுக்கும் தத்துவார்த்தம் ஏதாகிலும் எடுத்துக் கூறப்படக்கூடும், குமாரிலபட்டரும்—மண்டன மிசிரரும் இரு பேரறிவாளர் என்று மட்டும் இருந்திருப்பின், கூறப்பட்டுள்ள நிகழ்ச்சியின் நேர்த்தி மேலும் எடுப்பாக இருந்திருக்கும் என்பதனைத்தான் சொல்கிறேன். முருகனையும் பிரம்மனையும் சிவனார் வாதத்தில் வென்றார் என்பதிலே வியந்திடவோ, பெருமைப்படவோ என்ன இருக்க முடியும். ஜயஜய சங்கர என்ற இந்தத் தொடர் கட்டுரையில், மிக உருக்கமான பகுதியாக எனக்குப் பட்டது—சங்கரருக்கும் அவருடைய அன்னைக்கும் நடக்கும் உரையாடல் பகுதி. என் சிற்றன்னையின் நினைவு வந்துவிட்டது. காஞ்சிபுரம் நகராட்சிமன்றத் தலைவராக அ. க. தங்கவேலர் வந்திருப்பதில் தொத்தா எவ்வளவு பெருமைப்பட்டிருப்பார்கள்—மகிழ்ந்திருப்பார்கள் என்பதை எண்ணிக் கொண்டேன். ஒவ்வொரு மாலையும், மணிக்கணக்கில், தொத்தா 'அரசியல்' பேசுவது தங்கவேலரிடம்தானே! தங்கவேலர், நகராட்சிமன்றத் தலைவரானபோது, 'தொத்தா' இருக்கமுடியாமற் போய்விட்டதை எண்ணி வருத்தப்பட்டேன்.

20—3—64

இன்று காலையில், போலீஸ் பாதுகாப்புடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். டாக்டர் சத்திய நாராயணா அவர்கள் என்னைப் பரிசோதிப்பதற்காக அந்த நாளைக் குறிப்பிட்டிருந்தார். அவர் வரும் நேரத்திற்கு அரை மணி நேரம் முன்னதாகவே நாங்கள் போய்ச் சேர்ந்ததால், அவருடைய அறையில் நான் உட்கார வைக்கப்பட்டேன்—எனக்குப் பக்கத்தில் போலீஸ் அதிகாரி உட்கார்ந்துகொண்டார்! வலப்புறம் ஒரு போலீஸ்காரர், இடப்புறம் மற்றொருவர்; துப்பாக்கியுடன்.

டாக்டர் சத்தியநாராயணா அரை மணி நேரம் கழித்து வந்தார்—என் உடல் நிலையைக் கண்டறிந்து மகிழ்ச்சி தெரிவித்தார். ஒரு பதினைந்து நிமிட நேரம் அங்கு; பிறகு புறப்பட்டு, சிறைச்சாலை வந்து சேர்ந்தேன்.

என் உடல் நிலையைப் பொறுத்தவரையில், எனக்குத் தெரிவதெல்லாம், இடக்கையிலே ஏற்பட்டுவிட்ட 'பிடிப்பு' நீங்குமா என்பதிலேயே சந்தேகம் ஏற்படும்படியாக இருப்பதுதான். வலி பெருமளவு குறைந்திருக்கிறது. ஒரோர் சமயம் வலி எடுக்கும்போது, வெந்நீர் ஒத்தடம் கொடுத்துக்கொள்கிறேன். தோழர் சுந்தரம் இதனைப் பக்குவமாகச் செய்கிறார். ஒத்தடம் கொடுத்துக்கொள்ளும் போது வலி குறைகிறது—குறைகிறது என்பதைவிடட மறைகிறது என்று சொல்லலாம்—ஆனால் அடியோடு போய்விடவில்லை.

என்னைக் காண வருகின்றவர்களும், இங்கே உள்ள நண்பர்களும் நான் இளைத்து விட்டதாகச்—சொல்கிறார்கள்—ஆனால் எனக்கு வலிவுக் குறைவு இருப்பதாகவோ களைப்பு ஏற்படுவதாகவோ தோன்றவில்லை. வழக்கம் போல் இரவில் நல்ல தூக்கம் இருப்பதில்லை; பசியும் சரியானபடி இல்லை, மற்றபடி தொல்லையாக எதுவும் இல்லை. ராஜகோபாலாச்சரியார் அவர்கள் 1920-ல் வேலூர் சிறையில் மூன்று மாதம் இருந்ததுபற்றி ஒரு ஏடு எழுதி இருக்கிறார்கள்—இங்குதான் கிடைத்தது; படிக்க, அதிலே அவர்கள் குறிப்பிட்டுள்ள ஒரு விஷயம் மிகப் பொருத்தமானது என்று கூற விரும்புகிறேன். சிறை வருகிறவர்களுக்கு, ஒன்று உடல் வலிவு இருக்கவேண்டும், மற்றொன்று பாடத் தெரியவேண்டும் என்று கூறுகிறார். முழுக்க முழுக்க ஒப்புக்கொள்கிறேன். எனக்கு எந்த இரண்டும் இல்லை முன்பெல்லாம் பாடுவேன் வீட்டில்—சிறுவனாக இருந்தபோது—அதனால் அண்டைப் பக்கம் உள்ளவர்கள் பொறுத்துக் கொண்டார்கள். இப்போதாவது பாடுவதாவது, ஆனால் உள்ளபடி பாடத் தெரிந்திருந்தால் மிக நன்றாகத்தான் இருக்கும். காலம் ஆமையாகிவிடும் இடம் சிறை. பாடத்தெரிந்து, பாடியபடி இருந்தால், நமக்கும் மகிழ்ச்சி, கேட்பவர்களுக்கும் மகிழ்ச்சி.

இங்கு எனக்குப் பாடத் தெரியாதது போலவே தான் மற்றவர்களுக்கும்

அரக்கோணம் ராமசாமி மட்டும் பாடுகிறார்—பாடத் தெரிந்தவர் என்று கூறவில்லை—பாடுகிறார் அவருக்கு ஒரே ஒரு ரசிகர்—மதியழகன். ஆனால் அதிக நேரம் பாடுவதில்லை—நல்லவர்—சீக்கிரமாகவே தூங்கி விடுகிறார்.

இங்கே, நண்பர்களில் ஒருவருக்கும் உடல் நலம் கெடவில்லை—சிறு கோளாறுகள் மட்டுமே ஏற்படுகின்றன.

மாலை வேளையில் உலவிட வசதியாக இருக்கிறது—இந்தப் பகுதிக்கு வந்த பிறகு. முன்பு இருந்த பகுதியில் அந்த வசதி இல்லை என்றாலும், நான் அப்போதும், என் அறைக்குள்ளாகவே உலாவுவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தேன். நான் மருத்துவமனையில் தங்கி இருந்தபோது அன்பர் ம.பொ. சிவஞானம் கூறிய யோசனை அது. உடல்நலம் பெற, உலவுவது மிகத் துணை செய்யும் என்று கூறினார், உண்மைதான்.

மருத்துவ மனையில் மருந்து ஏதும் பெறாமலேயேதானே, சிறை திரும்பினேன். சிறையிலே, உடலுக்கு மட்டுமின்றி உள்ளத்துக்கு வலிவும் களிப்பும் தரத்தக்க 'டானிக்' கிடைத்தது. நெல்லை, தாராபுரம், அரக்கோணம் ஆகிய இடங்களில் கிடைத்த வெற்றி பற்றிய செய்திகள்.

இரண்டு நாட்களுக்கு முன்பு, நண்பர் ராமசாமியிடம் கடிந்து கொண்டேன்—அரக்கோணம் தேர்தல் சம்பந்தமாக மேலும் சிறிதளவு அக்கறை செலுத்தியிருக்க வேண்டுமென்று ஆம் என்று கூறி வருத்தப்பட்டார். நகராட்சி மன்றத் தலைவர் தேர்தலில், கழக ஆதரவு பெற்றவர் வெற்றி பெற்றார் என்ற உடன் அவருக்கு மிக்க மகிழ்ச்சி. தந்திகளைக் காட்டிக் காட்டிக் களிப்படைந்தார். தாராபுரத்தில் கிடைத்த வெற்றி பற்றி நண்பர் மதியழகனுக்கு ஒரே மகிழ்ச்சி. பட்டக்காரரின் பரிபாலனத்துக் உட்பட்ட பிரதேசம் என்பார்கள். தாராபுரம் பகுதியை; அங்குக் காங்கிரசுக்கு வீழ்ச்சி. மதியழகன் மகிழ்வதிலே பொருத்தம் இருக்கத்தான் செய்கிறது. நெல்லை, கழக எழுச்சி மிக்க இடமாகி வருவதை, இந்தி எதிர்ப்பு மாநாட்டின்போதே நான் கண்டு பெருமிதம் கொண்டவன். அங்கு நகராட்சி மன்றத் தலைவராகக் கழகத்தோழர் ஒரு இளைஞர், இஸ்லாமிய சமூகத்தினர் வெற்றி பெற்றிருப்பது, பெருமைக்கும் மகிழ்ச்சிக்கும் உரியது. நெல்லை உணவு விடுதியில் என்னைச் சூழ்ந்துகொண்டு உற்சாகமாக உரையாடிய கழக நண்பர்களை எல்லாம், நான் இங்கிருந்தபடியே காண முடிகிறது. ஓடி ஆடிப் பணியாற்றும் மஸ்தானும், வாடிவிடத்தக்க அளவு பணியாற்றினாலும் புன்னகையை இழக்காத இரத்தினவேலுப் பாண்டியனும், மற்றத் தோழர்களும், என் எதிரே நின்றுகொண்டு, "எப்படி அண்ணா! நெல்லை!!" என்று கேட்பது போலவே தோன்றுகிறது. ஆச்சாரியார் இந்தியைப் புகுத்திய நாட்களிலே தொடுக்கப்பட்ட இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியின்போது, நாவலர் சோமசுந்தர பாரதியாருடன், நான், நெல்லையில் பிரசாரம் செய்யச் சென்றிருந்த நாட்களை எல்லாம் எண்ணிக் கொண்டேன்.

என்னுடைய பழம் பெரும் நண்பர் திருப்பூர் எஸ். ஆர். சுப்பிரமணியம் இன்று என்னைக் காண வந்திருந்தார். இடையில் கருத்து வேறுபாடு கொண்டிருந்தவர் என்றாலும், மற்றச் சிலர் போல, என்னிடம் தனிப்பட்ட முறையில் பகை கக்கினவரல்ல. இப்போது அவர், எப்போதும்போல், நம்மிடம் கருத்து ஒற்றுமை கொண்டிருக்கிறார் என்று எண்ணுகிறேன். திருப்பூரில், நமக்குற்ற 'ஒரே' நண்பராக அவர் இருந்த காலம் ஒன்று உண்டு. இன்று தொழில் துறையில் முனைந்து நிற்கும் நண்பரிடம், சிறிது நேரம் அளவளாவும் வாய்ப்புக் கிடைத்தது. முன்பு ஐப்பான் நாட்டுக்குப் போய் விட்டு வந்தபோது அவரைச் சந்தித்தேன். தமது பயணம் பற்றி ஒரு நூல் எழுதவேண்டும் என்று கூறியிருந்தேன். அதுபற்றி இப்போதும் கேட்டேன்—எழுத நேரம் கிடைக்கவில்லை என்றார். நான் சொல்வது அவரை நூல் எழுதும்படி—அவர் ஈடுபட்டிருப்பது நூலாலைத் தொழில்—அதனால்தான் நேரம் கிடைக்கவில்லை.

வெளியே செய்யவேண்டிய வேலைகள் எவ்வளவோ இருக்கின்றன. இங்கு வந்து அடைபட்டுக் கிடக்கிறாமே என்ற எண்ணம் தோன்றும் போதெல்லாம், கவலையாகத்தான் இருக்கிறது—ஆனால் நாம் மேற்கொண்டுள்ள பணியின் தூய்மையை மக்கள் உணர்ந்துகொள்ள வாய்ப்பளிக்கிறது அறப்போர் என்று உணரும்போது, சிறையில் அடைபட்டுக் கிடப்பதும் தேவையான ஒரு திருப்பணி என்ற எழுச்சி பெறுகிறோம். ஆளுங்கட்சியும், நமது நாட்டு இதழ்களும் காரணமற்று நம்மிடம் கசப்புக் கொண்டுள்ள நிலையிலிருந்து விடுபட்டு, இந்தி எதிர்ப்புணர்ச்சி எந்த முறையில் இருக்கிறது என்பதனை இந்தி ஆதிக்கக்காரர்கள் உணருவதற்காக, நமது அறப்போர் குறித்து உண்மையை உரைப்பார்களானால், பிரச்சினையின் சிக்கலில் பெரும் பகுதி தீர்ந்துபோகும். ஆனால் ஆட்சியாளர்களின் மனம் மாற மறுக்கிறது; நாம் மேற்கொண்டுள்ள பணியைத் தீவிரப்படுத்த வேண்டும் என்பதனைத்தான் அவர்கள் போக்கு காட்டுகிறது.

21—3—64

இன்று இங்குள்ள டாக்டர் எனக்கு ஊசிபோட்டார்—இளைப்புபோக; டாக்டர் நடராசன் குறிப்பிட்டிருந்தாராம் இதுபோல ஊசி போடும்படி. டாக்டர் இளைஞர் என்றாலும் பக்குவம் அறிந்திருக்கிறார். மேலும் சில ஊசி போடுவார் போலிருக்கிறது.

இன்று மாலை, நாவலரும் கருணாநிதியும் அன்பழகனை வந்து பார்த்தார்கள். கழக நிலைபற்றியும், குறிப்பாகத் தேர்தல்கள் குறித்தும், பேசிவிட்டுச் சென்றார்கள் என்று அறிந்து கொண்டேன். இருவருமே இளைத்துப் போய், களைத்துப்போய் காணப்பட்டார்கள் என்று அன்பழகன் கூறினார். வேலைப்பளுவும், பிரச்சினைகளின் சிக்கலால் ஏற்பட்டுவிடும் தொல்லைகளும் அவர்களை வாட்டி எடுக்கும் என்பதை உணருகிறேன். ஆனால் இந்தக் கட்டத்தை அவர்கள் மிகச் சிறந்த ஒரு பயிற்சி வாய்ப்பு என்ற முறையில் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று விரும்புகிறேன். கழக நிர்வாக சம்பந்தமான அலுவல்களிலிருந்து நான் என்னை விடுவித்துக் கொண்டால், கழக வளர்ச்சிக்காக மேலும் சிறந்த முறையில் நாடெங்கும் சுற்றிச் சுழன்று பணியாற்ற முடியும். இந்த என் விருப்பம் நிறைவேற வேண்டுமானால், கழகத்தின் நிர்வாக அலுவல்களை மேற்கொள்ள மற்றவர்கள் முனையவேண்டும். நான் சிறைப்பட்டிருக்கும் நாட்கள் இதற்கான வாய்ப்பாகக் கொண்டிட வேண்டும் என்று விரும்புகிறேன்.

கழக நிர்வாகத்திலே வந்துள்ள நகராட்சிகளிலே, புது முறைகளைப் புகுத்தி, கழகம் ஆட்சி நடத்தும் தகுதி வாய்ந்தது என்பதனை மக்கள் உணரும்படி செய்திட வேண்டும் என்று இங்கு ஆர்வத்துடன் நண்பர்கள் பேசிக் கொள்கிறார்கள். பெல்ஜியம் நாட்டிலே, ஒரு கட்சி நகராட்சி ஒன்றிலே நடத்திக்காட்டிய நிர்வாகத்தின் தரத்தையும் திறத்தையும் கண்டு, நாடாளும் வாய்ப்பையே அந்தக் கட்சிக்கு மக்கள் அளித்தனர் என்று ஏதோ ஒரு ஏட்டிலே தான் படித்ததாகப் பொன்னுவேல் கூறினார். கட்சி மாச்சரியம் காரணமாக, சென்னை மாநகராட்சி நிர்வாகத்தை நடத்திய கழகத்தின்மீது ஆளுங்கட்சியினர் அபாண்டங்கள் சுமத்தினர் என்றாலும், பொதுவாக நமது கழகத்தோழர்கள் மெச்சத்தக்க முறையிலேயே மாநகராட்சி மன்ற நிர்வாகத்தை நடத்தி இருக்கின்றனர்—தவறுகள் செய்திருந்தால், மேலே உட்கார்ந்து கொண்டிருக்கும் காங்கிரசு அரசு, சும்மா விட்டிருக்குமா? மாநகராட்சி மன்ற நிர்வாகத்தையே கலைத்து விட்டிருக்குமே!குற்றம் கண்டுபிடிக்க இயலாத முறையிலேதான் நிர்வாகம் நடத்தப்பட்டிருக்கிறது என்று நான் கூறினேன். இந்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை முனுசாமி நல்ல முறையிலே அமைத்திருக்கிறார் என்பதை "இந்து" இதழே கூட எடுத்துக்காட்டியிருந்தது என்று நண்பர்கள் நினைவு படுத்தினார்கள், ஆமாம்! தேர்தலை மனதிலே வைத்துக் கொண்டு தயாரிக்கப்பட்ட 'பட்ஜட்' என்று 'இந்து' குத்தலாகக்கூட எழுதிற்று; ஆனால் மக்களாட்சி முறையில் மக்களைத் திருப்திபடுத்தும் விதமாக 'பட்ஜட்' தயாரிப்பது குற்றமல்ல என்று நான் சுட்டிக்காட்டினேன்.

"ஏதேதோ வீண்பழிகளைச் சுமத்துகிறார்கள்; ஒரு மாட்டை அடித்துக் கொன்றுவிட்டார்கள் கழகத்தார்—மாடு காங்கிரசின் தேர்தல் சின்னம் என்பதற்காக."

"இது நடைபெறவே இல்லை, அபாண்டம் என்று கருணாநிதி அறிக்கை வெளியிட்டிருந்தார்; மெயில் இதழிலே வெளியிட்டிருந்தார்கள்."

"ஆமாம்—அப்படியே முறைதெரியாத யாரோ சிலர் அதுபோலச் செய்ந்திருந்தால்கூட, அது கண்டிக்கத் தக்கது என்றாலும், அதற்காக கழகத்தை அதற்குப் பொறுப்பாக்கிக் கண்டிக்கலாமா?" என்று கூட மெயில் எழுதியிருந்தது.

"இன்று பத்திரிகையிலே பார்த்தீர்களா அண்ணா! அமெரிக்காவிலே ஒரு அரசியல் கட்சி எதிர்க்கட்சியின் தேர்தல் சின்னமாக உள்ள யானையை மனதிலே வைத்துக் கொண்டு, கட்சிவிழா விருந்தில், யானைக்கரி சமைக்கப் போவதாக ஒரு செய்தி வந்திருக்கிறது. ஆப்பிரிக்காவிலே வேட்டையாடிக் கொன்று, யானைக்கரியைப் பதப்படுத்தி அமெரிக்காவுக்குக் கொண்டு வர ஏற்பாடாம்."

"இதுபற்றி கண்டனத் தலையங்கம் எழுதக் காணோம். நடக்காத ஒன்றை வைத்துக்கொண்டு நமது கழகத்தைக் கண்டிக்கிறார்கள்."

இப்படி நண்பர்கள் பேசிக்கொண்டனர். உழைப்பாளி கட்சிக்குச் சின்னம் 'கோழி'—உழைப்பாளி கட்சியும். கோழிச் சின்னம் கொண்டிருந்த சில சுயேச்சையாளரும் தேர்தலில் தோற்றபோது, காங்கிரசார் நடத்திய வெற்றி ஊர்வலத்தில், கோழியை அறுத்துத் தூக்கிக்கொண்டு போனார்கள் என்று நான் கூறினேன்.

"நம்முடைய கழகத்திடம் மட்டும் இந்த அளவுக்குப் பகை உணர்ச்சிகொள்ளக் காரணம் என்ன?" என்று நண்பர்கள் கேட்டனர்.

"காரணம் இருக்கிறது. நாற்பது ஆண்டுகளாக எதிர்த்துவந்தார் பெரியார், காங்கிரசை; காங்கிரஸ் ஒழிப்புநாள், சுதந்திரம் பெற்ற துக்கநாள், என்றெல்லாம் நடத்தினார். அவரே ஓய்ந்துபோய், நம்பிக்கை இழந்து போய், காங்கிரசை ஆதரிக்க முனைந்துவிட்டார். காங்கிரஸ் முதலாளிகளின் முகாம் என்று முழக்கமிடும் கம்யூனிஸ்டு கட்சியும். முற்போக்கு அணி அமைப்போம் என்று கூறிக்கொண்டு காங்கிரஸ் எதிர்ப்பைத் தளர்த்தி விட்டது; ஜெயப்பிரகாஷ் நாராயணன் அரசியலே வேண்டாம் என்று ஒதுங்கிக்கொண்டார்; அசோக் மேத்தா 'ஆலோசகர்' ஆக்கப்பட்டுவிட்டார்; இப்படி பலப்பலர், இணைந்து போகிறார்கள், பணிந்துபோகிறார்கள். இந்தக் கழகம் மட்டும் காங்கிரசைக் கடுமையாக எதிர்த்து வருகிறதே, மக்களின் பேராதரவு கழகத்துக்குப் பெருகி வருகிறதே, என்பதை எண்ணிப் பார்க்கும் போது, காங்கிரசுக்கு நம்மீது கடுங்கோபம் எழத்தானே செய்யும்; அதனால்தான் பகை கொட்டுகிறார்கள், பழி சுமத்துகிறார்கள் என்று நான் விளக்கிப் பேசினேன். நண்பர்கள் இது குறித்து நீண்டநேரம் உரையாடிக் கொண்டிருந்தார்கள்.

ஆட்சியாளர் எத்தனை பகை கக்கினாலும், மக்களின் ஆதரவு நமக்கு இருக்கிறவரையில், நாம் கவலைப் படத் தேவை இல்லை, என்று பேசிக்கொண்டோம். இரவு அறைக்குள் பூட்டப்படும்போது, மக்கள் ஆதரவு கழகத்துக்குத்தான் இருக்கிறது என்பதை மெய்ப்பிப்பதுபோல, ஒரு காவலாளி, "வேலூரிலும் உங்க கட்சிதான் சேர்மனாம்—யாரோ சாரதியாம்" என்று கூறினார்.

பொதுவாக, அறையிலே எங்களைப் போகச் சொல்லி விட்டு, பூட்டும்போது, அந்த காவலாளிமீது எங்களுக்கு இலேசாகக் கசப்பு ஏற்படும். அன்று 'தேன்'கொடுத்து விட்டல்லவா, அறையைப் பூட்டினார்; அதனால் மகிழ்ச்சியுடன் அவரை வாழ்த்தியபடி கூண்டுக்குள் சென்று விட்டோம்.

23—3—64

இரண்டு நாட்களாக, ராகுல சாங்கிருத்தியாயன் என்பவர் எழுதியுள்ள 'வால்காவிலிருந்து கங்கைவரை' என்ற நூலைப் படித்துக்கொண்டிருக்கிறேன். அதனாலே குறிப்பு ஒரு நாள் எழுதவில்லை.

பகலில் படிப்பதற்கு அதிகநேரம் கிடைப்பதில்லை. காலையிலிருந்து மாலை நாலரை மணி வரையில், நூற்பு வேலை இருக்கிறது. இரவு மட்டுந்தான் படிக்க வசதி கிடைக்கிறது.

சங்கரவிஜயம் படித்துமுடித்தவுடன், இந்தப் புத்தகம்—அதாவது முற்றிலும் வேறான ஒரு கருத்துலகில் உலவுகிறேன். சமுதாய வளர்ச்சியை விளக்கும் இந்த ஏடு எழுதியவர் லெனின்கிராட் சர்வகலாசாலையில் பேராசிரியராகப் பணியாற்றிய பேரறிவாளர். கதை வடிவத்தில், கி. மு. 6000-த்திலிருந்து கி. பி. 1942-வரையில், மனித சமுதாய வளர்ச்சிக்கான விளக்கம் தந்திருக்கிறார்—பொது உடைமையாளரின் கோட்பாட்டின் அடிப்படையில்.

குறிப்பு எழுதாமலிருந்ததற்கு மற்றோர் காரணமும் உண்டு. காய்கறி நறுக்கியதால், என் வலது கரத்தின் ஆள்காட்டி விரலில் சிறிதளவு காயம் ஏற்பட்டுவிட்டது—முன்பு ஒரு நாளையக் குறிப்பிலே எழுதியிருந்தேனல்லவா, சட்டை கிழிந்து விடுவதற்கும் சதை பிய்ந்துவிடுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது என்று; அதனை நானே உணருவதற்கான ஒரு வாய்ப்பு. சிறிதளவுதான் சதை பிய்ந்துவிட்டதென்றாலும், எறிச்சல் அதிகமாகிவிடவே, எழுத இயலவில்லை. ஏதோ மருந்து அளித்தார்கள்—இயற்கையாகவே குணமாகி வருகிறது.

இன்று இங்கு நண்பர்கள், கழகப் பிரசாரத்துக்காக நாடகங்கள் நடத்தப்பட வேண்டும் என்பது குறித்து மெத்த ஆர்வத்துடன் பேசிக்கொண்டிருந்தார்கள். முன்பு நானும் நமது நண்பர்களும் நடத்திக்கொண்டு வந்த நாடகங்களை, இனி நடத்துவதற்கு அனுமதிக்க மாட்டார்கள்—நாடகத் தடைச்சட்டம் மிகக்கண்டிப்பான முறையிலே அமைந்துவிட்டிருக்கிறது—என்றாலும், அனுமதிக்கப்படும் அளவுக்கு புதிய நாடகங்கள் தயாரித்து நடத்தவேண்டும் என்று பேசிக் கொண்டோம்.

மாநகராட்சி மன்றத் தேர்தலின்போது மறைந்த நகைச்சுவை மன்னர் என். எஸ். கே. கிருஷ்ணனின் திருமகன் என். எஸ். கே. கோலப்பன் நடத்திய 'வில்லுப் பாட்டு' மிக்க சுவையும் பயனும் அளித்ததாக நண்பர்கள் கூறினார்கள். நான் இரண்டொரு முறை கேட்டிருக்கிறேன், சுவையாகவே இருக்கிறது—தந்தையின் "பாணி" அப்படியே அமைந்திருக்கிறது என்று கூறினேன்.

திங்கட்கிழமை பரிமளம் வரக்கூடும் என்று எண்ணிக் கொண்டிருந்தேன்—வரவில்லை.

செவ்வாய் மாலையில், பரிமளம், இளங்கோவன், கே.ஆர். ராமசாமி வந்திருந்தனர். மூவருக்குமேல் அனுமதிக்கப்படுவதில்லை; அதனால் என்னைக் காண வந்திருந்த அடிகள், வெளியிலேயே நிறுத்தப்பட்டு விட்டார் என்று கூறினார்கள். வீட்டிலுள்ளோரின் நலன் பற்றியும், பொது விஷயங்கள் குறித்தும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தோம்.

திரு. மா. சண்முக சுப்பிரமணியம் அவர்கள் எழுதிசைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார் வெளியிட்ட "தீங்கியல் சட்டம்" என்ற நூலை, அன்பர் சுப்பைய்யா அவர்கள் தந்தனுப்பியதாகக் கூறி, அந்த புத்தகத்தைப் பரிமளம் தந்தான். பத்திரிகையில் அந்தப் புத்தகம் பற்றிப் படித்ததிலிருந்து அதைப் படிக்கவேண்டும் என்ற ஆவல் கொண்டிருந்தேன். நான் எதிர்பாராமலேயே அந்தப் புத்தகம் கிடைத்திருக்கிறது. மெத்த மகிழ்ச்சி.

நண்பர்கள், டில்லி பாராளு மன்ற நடவடிக்கைகள் குறித்து மெத்த ஆவலுடன் என்னிடம் கேட்டறிந்தார்கள். அடுத்த முறை, அதிக அளவில், பாராளுமன்றத் தேர்தலில், நமது கழகம் ஈடுபட வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

இன்று பிற்பகல் அரக்கோணம் ராமசாமி, "இரத்தக்கொடை" அளித்தார். கட்டுடல் பெற்ற அவருக்கு, அதனால் எந்தவிதமான களைப்பும் ஏற்படவில்லை. வெளியில் இருக்கும்போதே "குருதிக் கொடை" தர விரும்பினாராம்—இங்கே அதற்கான வாய்ப்புக் கிடைத்தது.

மேலவைகளுக்கான தேர்தல்களில் பங்குகொள்ளப் 'பரோல்' பெறக்கூடும் என்று எண்ணிக்கொண்டிருந்த மதியழகன்—ராமசாமி—இருவருக்கும், இன்றைய பத்திரிகையில் முதலமைச்சர், "பரோல்" தருவது இயலாது என்று வெளியிட்டிருந்த அறிவிப்பு, கிடைத்தது.

முதலமைச்சர், 'பரோல்' தர மறுத்துவிடுவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை—எனவே அவருடைய அறிவிப்பு எனக்கு ஏமாற்றத்தைத்தான் தந்தது—பொதுமக்களும் இது கண்டு எரிச்சல் அடைந்திருப்பார்கள் என்று எண்ணுகிறேன்

கள்ளநோட்டு வெளியிட்டவர்களுக்குக்கூட, கேட்கும் போது 'பரோல்' கிடைக்கிறது? நமது கழகத் தோழர்கள் விஷயத்திலேதான், அமைச்சர்கள் தமக்கு உள்ள கண்டிப்பு அவ்வளவையும் காட்டி வருகிறார்கள்.

இன்று காலை வழக்கம்போல் சிறை மேலதிகாரிகள் கைதிகளைப் பார்வையிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

குறளாராய்ச்சிக்கு இடையில், நண்பர் அன்பழகன், நான் படித்து வியந்த 'மாமன்னரின் மருத்துவன்' என்ற ஆங்கிலநூலை (கிருத்துவமார்க்கத் துவக்ககாலக் காதை)ப் படித்து வருகிறார்.

25—3—64

இடது கரத்திலே வலி குறையக் காணோம். சுடுநீர் ஒத்தடம் கொடுத்துக் கொண்டேன்—அப்போதைக்கு இதமாக இருக்கிறது. வெளியே சென்றதும், தக்க மருந்து உட்கொண்டு வலியை நீக்கிக் கொள்ள வேண்டும் என்று நண்பர்கள் அன்புடன் கூறி, பல்வேறு மருத்துவ முறைகள் குறித்துக் கூறினார்கள்.

செங்கற்பட்டு உள்ளாட்சி மன்ற அமைப்புகளின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர் தேர்தலில், கழகத்தின் சார்பில் நண்பர் ஆசைத்தம்பி ஈடுபட்டிருக்கும் செய்தி பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். வாய்ப்பு எப்படி இருக்கும் என்பதுபற்றிக் கணக்கிட்டுப் பார்த்துக்கொண்டோம். செங்கற்பட்டு மாவட்ட ஆட்சி மன்றத் தலைவராக இருந்தவரும், அந்த மாவட்டத்திலே பல ஜெமீன் குடும்ப ஆதரவு பெற்றவரும், அமைச்சர்களின் அரவணைப்பைப் பெறக்கூடியவருமான வி.கே. ராமசாமி முதலியார் போட்டியிடுவதால், மெத்தக் கடினமாகவே இருக்கும் என்று நண்பர்கள் கூறினார்கள்; எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது.