உள்ளடக்கத்துக்குச் செல்

இலங்கையில் ஒரு வாரம்/9

விக்கிமூலம் இலிருந்து

9


ம்முடைய தமிழ் நாட்டு முன்னோர்களின் வழியைப் பின்பற்றி எங்கேயாவது ஒரு நாட்டுக்குப் படை யெடுத்துச் செல்லவேண்டும் என்ற ஆசை என் மனதில் பொங்கித் ததும்பிக் கொண்டிருந்தது. ஆனால், படையெடுத்துச் செல்வதற்கு படையல்லவா தேவை? என்னிடம் படையில்லை. படையிருந்தாலும்தான் என்ன? எதோ ஈழ மக்கள் நம்மவர்களாயிற்றே என்ற உரிமையுடன் படை எடுத்துச் சென்றால் யு. என். ஓ. சங்கம் குறுக்கே வந்து தொலைக்கும். தன் மனிதர், வேற்று மனிதர் என்று பாராமல் குண்டு போட்டுக்கொல்லும்! படையெடுப்பை அநியாயமாக வாபஸ் வாங்க வேண்டி வரும்.

படைதான் இல்லையே, பதிலுக்கு ஒரு குடையாவது எடுத்துப் போவோமென்றால் குடையும் சமயத்தில் சிக்கவில்லை. ஆகவே வெறுங்கையுடனேயே புறப்பட்டோம். வெய்யிலை வெய்யில் என்று நினையாமல், நிலாக்கதிர் என்று நினைத்துக்கொண்டு ஊர்காவற்றுறை, காங்கேயன் துறை, வல்வெட்டித் துறை முதலிய கடலோரப் பகுதிகள் வழியாகச் சென்றோம். இங்கேயெல்லாம் சமுத்திர ராஜன் சாந்த வடிவு கொண்டு இலங்குகிறான். மலை போன்ற அலைகளும் கடலின் கொந்தளிப்பும் இல்லை. மிக அடக்கமாக இருக்கிறது. நீர்ப்பரப்பு மிருதுவான சிறு அலைகள் இலங்கா தேவியின் பாதங்களை மெள்ள மெள்ளத் தொட்டுவிட்டுத் திரும்பிவிடுகின்றன. சோழ நாட்டில் உள்ள கோடிக்கரைக்கும் யாழ்ப்பாணக் கடற்கரைக்கும் ஏறக்குறைய முப்பது மைல் தாரந்தான். கோடிக்கரையில் காலையில் படகில் ஏறினால் மாலையில் இங்கு வந்து விடலாம். முன்னாளில் பராந்தகன், இராஜராஜன், இராஜேந்திரன் முதலிய சோழ மன்னர்கள் தங்கள் மாபெரும் படைகளுடன் இந்தத் துறையிலே வந்து இறங்கியிருக்கலாம். நாவாய்கள், கப்பல்கள், தோணிகள், படகுகள், ஓடங்கள், கட்டுமரங்கள் ஆயிரக் கணக்கில் சேகரித்துப் படைகளை ஏற்றி வந்திருக்க வேண்டும். ஆனால் நாடு பிடிக்கும் ஆசையுடன் மட்டும் அவர்கள் வரவில்லை. ஈழநாட்டு அரசகுலத்தினரில் சண்டை மூண்டு, யாராவது உதவிக்கு அழைத்தபோதுதான் வந்தார்கள். வந்த இடத்தில் நல்ல அரசாட்சியை நிலை நாட்டி ஆண்டார்கள்.

அது ஒரு காலம். இப்போது என்ன நடக்கிறது தெரியுமா? கோடிக்கரைப் பக்கங்களிலிருந்து பிழைப்புக்குக் கஷ்டப்படுகிறவர்கள் கள்ளப்படகுகளில் ஏறித் திருட்டுத்தனமாக வந்து இந்தக் கரைகளில் இறங்குகிறார்களாம். இவர்கள் சிலராயிருந்தாலும் இதைப்பற்றிச் சிங்கள மந்திரிகள் பிரமாதப்படுத்துகிறார்கள்.

சில வருஷங்களுக்கு முன்னால், இந்தியாவில் அரிசிக் கட்டுப்பாடு அமுலுக்கு வந்த பிறகு, இலங்கையில் உணவு நிலைமை நெருக்கடியடைந்திருந்தபோது, கோடிக்கரைப் பகுதியிலிருந்து கள்ளப் படகுகளில் இலங்கைக்கு அரிசி போய்க்கொண்டிருந்தது. கள்ளப் படகுக்காரர்கள் நல்ல விலை பெற்று லாபமடைந்து வந்தார்கள். இப்போதோ இலங்கையின் உணவு நிலைமை திருப்திகரமாகிவிட்டதால் அங்கே தஞ்சை ஜில்லா அரிசிக்குக் கிராக்கி கிடையாது. இலங்கை சர்க்கார் தான் நமக்கு அரிசி கடன் தருகிறார்களே? அது ஒரு காலம்! இது ஒரு காலம்!

இப்படியாக எண்ணமிட்டுக் கொண்டும் விவாதித் துக்கொண்டும் பருத்தித்துறை போய்ச் சேர்ந்தோம். பருத்தித்துறை அன்பர்கள் எங்களுக்குக் காரசாரமான விருந்து அளித்தார்கள். பிறகு பாரதூரமான வரவேற்பும் அளித்தார்கள். ஆம், வரவேற்பு மிகமிகப் பாரமாகவே இருந்தது. இலங்கையையே தூக்கிக் கையில் கொடுத்து விட்டார்கள்! நல்ல வேளையாக, இலங்கையை நாலு சட்டத்துக்குள் புகுத்திக் கண்ணாடியும் போட்டிருந்தபடியால் என்னால் தாங்கமுடிந்தது! கனம் சேனநாயகா, பண்டாரநாயகா, குணசிங்கா முதலியவர்களுடைய கண்ணில் படாமல் இந்தியாவுக்கு எடுத்துக்கொண்டு வரவும் முடிந்தது! இலங்கை தேசப்பட வடிவமாக அமைந்த அழகிய சித்திரப் பத்திரத்தில் அன்பையும் இன்பத் தமிழையும் குழைத்து இனிய கவிதையாக எழுதிக் கொடுத்தார்கள். அந்தக் கவிதையில் ‘கள்வனின் காதலி’யான கல்யாணி முதல் பல கதாநாயகிகளும் கதாநாயகர்களும் பவனிவந்தார்கள். இதிலிருந்து தாய் நாட்டிலிருந்து போகும் பத்திரிகைகள் — புத்தகங்களைப் பருத்தித் துறைத் தமிழ் அன்பர்கள் எவ்வளவு ஆர்வத்துடன் படித்து மகிழ்ந்தார்கள் என்பது தெரியவந்தது. வரவேற்பு முடிந்ததும் திரு ஏரம்பமூர்த்தி எங்கள் அருகில் வந்து, “நீங்கள் பேசவேண்டியதில்லை!” என்ற பல்லவியைப் பாடினார். “நாங்கள் ஏதாவது பேசாவிட்டால் இந்த ஊர் ரசிகர்கள் எங்களை ஊமையென்று நினைத்துக் கொள்ள மாட்டார்களா?” என்றேன்.

“அதனால் பாதகமில்லை. இந்த நேரத்தில் இவ்வளவு பேர் வந்து கூடியதே பெரிய காரியம். மேலும் இவர் களைச் சோதிக்கக்கூடாது!” என்றார்.

“இந்த நேரத்தில் இந்த ஊர்க்காரர்கள் சாதாரணமாக என்ன செய்வது வழக்கம்” என்று கேட்டேன்.

“மத்தியான உணவுக்குப் பிறகு சற்றுக் கண்ணயருவார்கள்!” என்றார்.

“அப்படியானால், இங்கேயே கண்ணயரட்டும்! நாங்கள் பேசியே தீருவோம்!” என்று சொல்லிவிட்டு, ஸ்ரீ தூரனும் நானும் ஒரு மணி நேரத்துக்கு மேலே வெளுத்துக்கட்டினோம். பருத்தித்துறை வாசிகளின் உச்சிப்பகல் உறக்கத்தை அன்று குட்டிச்சுவராக்கிவிட்டோம்!

மறுநாள் மாலை யாழ்ப்பாணத்தில் நாங்கள் விமானமேறியபோது திரு ஏரம்பமூர்த்தியும் அவருடைய நண்பர்களும் வந்திருந்தார்கள். திரு ஏரம்பமூர்த்தி என்னிடம் அந்தரங்கமாக “ஊருக்குப் போன பிறகு தங்கள் உடல் நலத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள்!” என்றார்.

“அவசியம் கவனித்துக்கொள்ளுகிறேன். ஆனால் மறுமுறை இலங்கை வரும்போது பருத்தித்துறைக்கு வந்து பேசட்டுமா, வேண்டாமா? இப்பொழுதே சொல்லிவிடுங்கள்” என்று கேட்டேன்.

“பேசுங்கள்; பேசுங்கள்! விரிவான சொற்பொழிவும் ஆற்றுங்கள்!” என்று திரு ஏரம்பமூர்த்தி அலறினார்.

இப்படிச் சொன்னால் நான் பேசாமலிருப்பேன் என்று அவருக்கு எண்ணம் போலிருக்கிறது! பார்க்கலாம் ஒருகை!

"https://ta.wikisource.org/w/index.php?title=இலங்கையில்_ஒரு_வாரம்/9&oldid=1651172" இலிருந்து மீள்விக்கப்பட்டது