இலங்கையில் ஒரு வாரம்/10
10
இந்த இலங்கைக் கட்டுரைகளுக்கு மங்களம்பாட வேண்டிய கட்டம் நெருங்கிவிட்டது. இவை உலகெங்கும் பெருங்கிளர்ச்சியை உண்டாக்கியிருக்கின்றன. கொரியா யுத்தம் குறுக்கிட்டிராவிட்டால். யு என். ஓ. சபையில்கூட இக்கட்டுரைகளை நிறுத்துவதுபற்றி விவாதித்திருப்பார்கள்! புது டில்லியிலுள்ள ஒரு தமிழன்பருக்கு இக்கட்டுரைகள், கவி பாடவேண்டிய அவசியத்தைக்கூட உண்டாக்கிவிட்டன. ‘அறுசீர்க்கழில் நெடில் ஆசிரியக் கலித்தொகை வெண்பா விருத்தம்’ தன்னில் ஐந்து விருத்தங்கள் அவர் பாடி அனுப்பியிருக்கிறார். அவ்விருத்தங்களில் மாதிரிக்கு இரண்டு வரிகளைக் கேளுங்கள்:—
“இடறி விழும் விஷயம் பற்றி இரண்டு
- பக்கம் வரைந்துள்ளீர்கள்
இடறி விழுந்தால் இவ்வூரில்
- இதைப் பற்றி எங்கும் பேச்சு!”
கட்டுரைகளை முடித்தே தீரவேண்டிய அவசியம் இப்போது தெளிவாய்ப் புலனாகிறதல்லவா? முடிப்பதற்கு முன்னால் யாழ்ப்பாணத்தில் நாங்கள் கலந்து கொண்ட கடைசி நிகழ்ச்சியைப் பற்றிச் சொல்லிவிடுகிறேன்.
இலங்கையில் உள்ள தமிழ்ப் பிரமுகர்களுக்குள் ஸ்ரீ க. கனகரத்தினம் என்று ஒருவர் உண்டு. இவர் இலங்கை அரசாங்கத்தில் பெரிய உத்தியோகம் வகித்தவர். சில காலத்துக்கு முன்பு உத்தியோகத்தை விட்டு விலகி அரசியலில் பிரவேசித்தார். இலங்கைப் பார்லி மெண்டில் அங்கத்தினர் ஆனார். தற்சமயம் இலங்கை சர்க்கார் கல்வி இலாகாவில் பார்லிமெண்டர் காரியதரிசியாக இருந்து வருகிறார்.
தமிழிலும் தமிழிசையிலும் ஸ்ரீ கனகரத்தினம் கொண்டுள்ள பேரபிமானம் இரருக்கும் தமிழ்நாட்டுக்குமுள்ள தொந்தத்தை வளர்த்து வந்தது. சென்னையில் நடந்த முதலாவது தமிழிசை மாநாட்டுக்கு வந்திருந்து கலந்து கொண்டார். பிறகு அநேகமாக ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் இவரை ஸெண்ட்மேரீஸ் மண்டபத்தில் நடைபெறும் தமிழிசைக் கசேரிகளில் கண்டிருக்கிறேன். இவருடன் இவருடைய புதல்வியும் மருமகரும் கூடத் தவறாமல் வருவார்கள்.
இவ்வருஷம் மே மாதத்தில் கோவையில் நடைபெற்ற தமிழ் வளர்ச்சிக்கழக விழாவிற்கு இவர் விஜயம் செய்து, அடுத்த தமிழ் விழாவை இலங்கையில் நடத்துமாறு அழைத்தார். “கஞ்சி வரதப்பா!” என்று கேட்ட்டதும் “எங்கே வரதப்பா?” விழுந்தோடிய பக்தனைப் போல் தமிழ் வளர்ச்சிக் க்ழகத்தரும் ஶ்ரீ கனகரத்தினத்தின் அழைப்பை ஒப்புக்கொள்ளத் தீர்மானித்தார்கள்.
இந்த செதி அறிந்ததும் ஶ்ரீ கனகரத்தினம் குதூகலம் அடைந்தார். இலங்கையில் உள்ள தமிழன்பர்கள் எல்லாருடைய கூட்டுதலையும் பெற்றுத் தமிழ் விழாவைப் பிரமாதமாக நடத்துவதென்று முடிவு செய்தார். ஶ்ரீ தூரனும் நானும் போயிருந்த சமயத்தில் யாழ்ப்பாணத்தின் அழைப்பை ஏற்றுப் பல அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரமுகர்களும் அரசியலில் அவ்வளவாகக் கலந்துகொள்ளாத தமிழன்பர்களும் விஜயம் செய்திருந்தார்கள். ஆனாலும் இக்கூட்டத்தில் என்ன நடக்கப் போகிறதோ என்ற கவலை எல்லாருடைய மனதிலும் குடி கொண்டிருந்தது.
கூட்டத்தின் ஆரம்பத்தில், இந்தப் பூர்வாங்கக் கூட்டத்துக்கு ஸ்ரீ எஸ். நடேசன் அவர்களை ஸ்ரீ கனகரத்தினம் தலைவராகப் பிரரேபித்ததும் மேற்கூறிய கவலை அநேகமாக விட்டுவிட்டது. அனைவருடைய முகங்களும் மலர்ந்தன.
விஷயம் என்னவென்றால், ஸ்ரீ கனகரத்தினம் அரசியல் துறையில் ஸ்ரீ பொன்னம்பலம் கட்சியைச் சேர்ந்தவர். ஸ்ரீ எஸ். நடேசன் அவர்கள் அக்கட்சிக்கு மாறுபட்டவர். சென்ற தேர்தலில் நின்று தோற்றுப் போனவர்தான். ஆயினும் யாழ்ப்பாணத் தமிழர் சமூகத்தில் ஸ்ரீ எஸ். நடேசனுக்கு விசேஷ மரியாதை உண்டு.
இலங்கையின் முடிசூடா மன்னராக விளங்கிய ஸர் பொன்னம்பலம் ராமநாதனின் மருகர் ஸ்ரீ எஸ். நடேசன்; பரமேசுவரக் கல்லூரியின் தலைவர். தாய் நாடாகிய தமிழ்நாட்டுக்கும் சேய் நாடாகிய வடக்கு இலங்கைக்கும் நீடித்துள்ள தொடர்பிலிருந்து விளைந்த பண்பாட்டின் கனிந்த பழம் என்று ஸ்ரீ எஸ். நடேசன் அவர்களைச் சொல்லுவது பொருந்தும். ஆங்கிலத்திலும் தமிழிலும் நல்ல பாண்டித்தியம் வாய்ந்தவர். தமிழ்நாட்டு, ஈழநாட்டுப் பழைய சரித்திரங்களை ஒப்பிட்டுச் சிறந்த ஆராய்ச்சி செய்து பல உண்மைகளைக்கண்டு வைத்திருப்பவர். தமிழிலக்கியம், தமிழ்க் கலைகள் சம்பந்தமாக இலங்கையில் நடைபெறும் எல்லா முயற்சிகளிலும் ஸ்ரீ எஸ். நடேசன் அவர்களுக்கு முக்கியமான பங்கு உண்டு.
அரசியல் துறையிலாகட்டும், மற்ற எந்தத் துறையிலாகட்டும், தமிழ் மக்களிடையே ஏற்படும் வேற்றுமைகளைக் கடந்து தமிழ் மக்களை ஒன்று சேர்த்து ஒருமைப்பாட்டை நிலை நாட்டக்கூடிய சக்தி தமிழுக்கு உண்டு என்பது என்னுடைய தீர்ந்த கருத்து. இதற்கு ஒரு அத்தாட்சி யாழ்ப்பாணத்திலும் கிடைத்தது பற்றி நானும் குதூகலமடைந்தேன்.
ஆனால் எங்களுடைய குதூகலத்தைக் கொஞ்சம் குறைப்பது என்று கங்கணங் கட்டிக்கொண்டு நண்பர் திரு. அம்பிகைபாகன் எழுந்து நின்றார். அவர் திருவாரூரில் நடந்த தமிழ் விழாவுக்கு வந்திருந்தவர். எனவே, அவர் ஓர் எச்சரிக்கை விடுத்தார். “தமிழ் விழா நடத்துவது என்றால் எளிதில்லை. அதற்குப் பணம் வேண்டும், பிரயத்தனம் வேண்டும், பலருடைய கூட்டுறவு வேண்டும்; ஊக்கம், உற்சாகம், ஆள்கட்டு வேண்டும். இருப்பது, முப்பதினாயிரம் ரூபாய் வரையில் செலவு ஆகும். இதெல்லாம் நம்மால் ஆகக்கூடிய காரியா? யோசித்து முடிவு செய்யுங்கள்” என்றார்.
இதற்குத் தகுந்த பதில் கூறினார் ஸ்ரீ காராள சிங்கம் என்னும் அன்பர். “இந்த ஈழ நாட்டில் பெண்களுக்கு வரதட்சணை கொடுத்துக் கல்யாணம் செய்து கொடுப்பதற்குச் சில தமிழர்கள் ஒரு லட்சம் ரூபாயும் அதற்கு மேலும் செலவு செய்கிறார்கள்! அப்படியிருக்கும்போது, நமது தமிழ்த்தாயை இங்கு அழைத்து உபசரிப்பதற்கு எல்லாத் தமிழர்களும் சேர்ந்து ஒரு முப்பதினாயிரம் ரூபாய் கொடுக்கமுடியாதா? முடியும். இப்படிப்பட்ட சிறந்த திருப்பணிக்கு இந்நாட்டில் பணம் சேராது என்று சந்தேகிப்பதே அவமானமான காரியம்! விழாவை நடத்தியேயாக வேண்டும்!” என்று ஸ்ரீ காராளசிங்கம் கர்ஜித்தார்.
இதைத் தழுவியே மற்றும் சில நண்பர்களும் பேசினார்கள். கடைசியாக, தமிழ் விழாவை யாழ்ப்பாணத்தில் வருகிற 1951 மார்ச்சு அல்லது ஏப்ரல் மாதத்தில் நடத்துவதென்று ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டது. பெரிய வரவேற்புக்கழகம் நியமிக்கும் வரையில் பூர்வாங்க முயற்சிகளைச் செய்வதற்கென்று அங்கு வந்திருந்தவர்கள் எல்லாரையும் கொண்ட ஒரு குழு நியமிக்கப்பட்டது. இதற்கு ஸ்ரீ எஸ். நடேசன் அவர்களே தலைவராக நியமிக்கப்பட்டார். திரு. முதலியார் சின்னத்தம்பி அவர்களும் திரு. க. நவரத்தினம் அவர்களும் காரியதரிசிகளாக நியமனம் பெற்றார்கள்.
திரு. க. நவரத்தினம் யாழ்ப்பாணத்திலுள்ள தலைசிறந்த கலை அன்பர்களில் ஒருவர். தமிழ்நாட்டுச் சிற்பக் கலையைக் குறித்து ஒரு பெரிய நூல் இயற்றியவர். இவர் காரியதரிசி என்று ஏற்பட்டதும் எழுந்து நின்று, “இங்குள்ள அன்பர்கள் எல்லாருப் தலைக்குப் பத்து ரூபாய் அங்கத்தினர் சந்தா கொடுத்து வீட்டுப் போகவேணும். அப்போதுதான் வேலை துவங்கலாம்!” என்று சொல்லி, அவ்விதமே வசூலிக்கவும் தொடங்கிவிட்டார். “சரியான காரியதரிசிதான்; தமிழ் விழா யாழ்ப்பாணத்தில் சிறப்பாக நடக்கும் என்பதில் சந்தேகமில்லை” என்று நானும் முடிவு செய்து கொண்டேன்.
யாழ்ப்பாணத்தில் வரும் ஆண்டில் நடக்கப் போகும் தமிழ் விழாவின் மூலம் தமிழகத்திலுள்ள இரண்டரைக் கோடித் தமிழர்களுக்கும் ஈழத்திலுள்ள இருபத்திரண்டரை லட்சம் தமிழர்களுக்கும் தொன்று தொட்டுள்ள அண்ணன் தம்பி உறவு மேலும் வலுவடைந்து ஓங்கும் என்று நம்புகிறேன். “என்ன, ஐயா, இது? முன்னெல்லாம் பதினைந்து லட்சம் தமிழர் என்று சொல்லிக்கொண்டிருந்தீரே! அதற்குள் எப்படி இருபத்திரண்டரை லட்சம் ஆயிற்று?” என்று நேயர்கள் கேட்பது என் காதில் விழுகிறது. பதினைந்து லட்சம் என்பது இலங்கை சர்க்கார் கொடுக்கும் கணக்கு. இப்படி வேண்டுமென்றே குறைத்துச் சொல்வதாகச் சிலர் கருதுகிறார்கள். இருபத்திரண்டரை லட்சம் என்பது தமிழரசுக் கட்சித் தலைவர் ஸ்ரீ செல்வநாயகம் கொடுத்திருக்கும் கணக்கு. இந்த இருபத்திரண்டரை லட்சத்தில் இலங்கையில் வாழும் முஸ்லிம் தமிழர்களையும் ஸ்ரீ செல்வநாயகம் சேர்த்துக் கொண்டிருக்கிறார். இப்படிச் சேர்த்திருப்பது மிகவும் நியாயமானது என்பதில் சந்தேகமில்லை. தமிழர்கள் முஸ்லிம்களானாலும் தமிழர்கள்தானே? அவர்களுடைய தாய் மொழி அரபு மொழியாகப் போய்விடாதே! தமிழ் மொழி ஒரு அற்புதமான அரவணைக்கும் மொழி. தன் நீண்ட கருணைக் கரங்களை நீட்டித் தமிழ்த் தாய் தன் எல்லாக் குழந்தைகளையும் அணைத்து ஆசீர்வதிக்கிறாள். பழைய காலத்தில் பௌத்த மதத்தைத் தழுவிய தமிழர்கள் தமிழில் சில சிறந்த இலக்கியங்களை இயற்றித் தந்தார்கள். அவ்விதமே சமண மதத்தைச் சேர்ந்த தமிழர்களும் தமிழ்க் காவியங்களை இயற்றினார்கள். சைவர்களும் வைஷ்ணவர்களும் தமிழில் அமுதொழுகும் பாடல்களை அளித்தார்கள். ஏன்? கிறிஸ்துவர்கள் மட்டும் பின் வாங்கினார்களா? இல்லை! அழகிய தமிழில் ஸ்ரீ வேத நாயகம் பிள்ளை பல சாஹித்யங்களை இயற்றினார். “ரக்ஷண்ய யாத்ரீகம்” என்னும் மொழி பெயர்ப்புக் காவியமும் தமிழில் வெளியாகியிருக்கிறது. முஸ்லிம்களில் எத்தனை சிறந்த தமிழ்ப் புலவர்களும் கவிஞர்களும் {{hws|இருந்|இருந்திருக்கிறார்கள்!}] இருந்திருக்கிறார்கள்! வள்ளல் சீதக்காதியைப் பற்றியும், சீறாப்புராணத்தைப் பற்றியும் அறியாதார் யார்?
தமிழ்த்தாயின் புதல்வர்கள் எந்த மதத்தினராயிருந்தாலும் எந்த நாட்டில் வசித்தாலும் அவர்கள் 100க்கு 100 பங்கு அசல் தமிழர்களேயாவர். அவர்களுக்குத் தமிழ் மொழியில் பூரண உரிமை உண்டு. இதை இலங்கையிலுள்ள முஸ்லிம்கள் பலர் உணர்திருக்கிறார்கள். இல்லாவிடில் ஸாஹிராக் கல்லூரித் தலைவர் ஜனாப் ஏ. எம். ஏ அஸீஸ் அவர்களும் தமிழாசிரியர் ஜனாப் கமாலுதீன் அவர்களும் அவ்வளவு லாவகமாகத் தமிழ் மொழியைக் கையாண்டு எவ்விதம் சரமாரியாகப் பொழிந்திருக்க முடியும்?
இம்முறை இலங்கையில் இலங்கைத் தமிழர்கள் பலர் சொற்பொழிவு ஆற்றியதைக் கேட்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. ஶ்ரீ எஸ். நடேச பிள்ளை, டாக்டர் கணபதிப் பிள்ளை, பேராசிரியர் அருள்நந்தி, வித்வான் கனகசுந்தரம், வித்வான் க. வேந்தனார், மட்டக்களப்பு திரு. சின்னதம்பிபுலவர், திரு. சிவநாயகம் முதலியவர்கள் ஆற்றல் வாய்ந்த தெய்வத் தமிழ் நடையைக் கையாண்டு சொற்பொழிவு ஆற்றினார்கள். இந்த நண்பர்களுடைய பேச்சுகளைக் கேட்டுக் கொண்டிருந்த போதெல்லாம் எனக்குத் தோன்றியது இதுதான்:— தமிழகத்தில் இப்போதெல்லாம் தமிழ் விழாக்கள் பல நடைபெறுகின்றன. இந்த விழாக்களுக்கு இலங்கையில் உள்ள தமிழ்ப் பெருமக்கள் சிலரையாவது அழைத்துக் கலந்து கொள்ளும்படி செய்யவேண்டியது அவசியம். அப்போதுதான் நாம் நடத்தும் தமிழ் விழாக்கள் பூர்த்தியடைந்ததாகும்.
ஆம் ; தமிழ் விழாவை வரும் ஆண்டில் இலங்கையில் நடத்துவதினால் மட்டும் நம்முடைய நோக்கம் ஈடேறி விடாது. நம் நாட்டில் நடைபெறும் தமிழ் விழாக்களுக்கு நம் இலங்கைச் சகோதரர்கள் சிலரையும் அழைக்கவேண்டும்.
இதன் மூலம் தமிழகத்துக்கும் இலங்கைக்கும் உள்ள நீண்டகால நட்புக்கு எவ்வளவோ நன்மை உண்டு. தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு அது உறுதுணையாயிருக்கும் என்பதிலும் ஐயமில்லை.