பரிசு/என் எண்ணம் (கட்டுரை)
என் எண்ணம்
கடந்த இரண்டு நாட்களாக இங்கே செங்கற்பட்டு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவில் விமரிசையான மாநாடுகள் நடைபெற்றுவருகின்றன.
நேற்றயத்தினம் சமூக சீர்திருத்த மாநாடு நடைபெற்றது. இன்று அரசியல் மாநாடு நடைபெறுகின்றது. இந்த இருநாட்களாக மாநாட்டில் நாட்டின் பலதிறப்பட்ட பிரச்சினைகளைப் பலரும் பேசிய கருத்துமிக்க சொற்பொழிவுகளைக் கேட்டீர்கள், களித்தீர்கள்.
மாநாட்டிலே பெருவாரியான மக்கள் கூடியிருப்பதைக்கண்டு நான் பெரிதும் மகிழ்கிறேன்.
தேர் திருவிழாக்களுக்குக் கூடுவதைப்போல மக்கள் இங்கே கூடியுள்ளாதாரையும் சிலர் குறிப்பிட்டார்களாம்.
சீரங்கம் போன்ற ஊர்களிலும் காஞ்சிபுரத்திலும் நடைபெறும் திருவிழாக்களிலே ஏராளமான மக்கள் கூடத்தான் கூடுகிறார்கள். ஆனால் திருவிழாக்கூட்டத்திற்கும் இப்படிப்பட்ட மாநாடுகளிலே கூடுகின்ற மக்களுக்கும் மகத்தான வேற்றுமை உண்டு.
சீரங்கம் திருவிழாவிற்குச் சென்றேன், சொல்லமுடியாத கூட்டம். நான் கோயில்முன் நின்றேன். அதுதான் எனக்குத் தெரியும். மறுபடியும் பார்க்கிறேன், கோயில் சன்னதியில் இருக்கிறேன்! வெளியில் இருந்தவன் எப்படியோ ஆண்டவன் அருளால் உள்ளே போய்விட்டேன் என்று கூறுகின்ற பக்தர்கள் எத்தனையோ பேர் உண்டு.
திருவிழாவில் ஏராளமாகக் கூடிய மக்கள் நெருக்கியபடியே முன்னுக்கு செல்வதால், முன்னே இருப்பர்கள் தன்னாலே மேலே செல்லத்தானே வேண்டும்? இப்படிக்கூட்டத்தினரால் நெருக்கி முன்னே தள்ளப்படுவதால் சன்னதிக்குச் சென்றதை பகவான் அருள் என்று மெய்மறந்து பேசுகின்ற பக்தர் கூட்டம் போன்றதல்ல இங்கே கூடுகின்ற கூட்டம்!
திருவிழாவில் மக்கள் கூடிக்கலைந்து செல்லும் வேடிக்கை நிகழ்ச்சியைப் போன்று இத்தகைய மாநாடுகளுக்கு வருகின்ற யாரும் எண்ணிவிடக்கூடாது, அப்படி நடந்து விடுவதும் நல்லதல்ல!
இப்படிப்பட்ட மாநாடுகளுக்கு போகும் மக்கள் அனைவரும் இதனைத் திருவிழாவிற்கு வந்து போவதைப்போன்று நினைத்து நடக்கக் கூறுமாறாக, இங்கே நடைபெற்ற நிகழ்ச்சிகளைப்பற்றி மற்ற மக்களிடையே விளக்கவேண்டும் இங்கே பேசப்பட்ட நல்ல கருத்துக்களைப் பற்றி நன்கு சிந்தித்து அவைகளைப் பிறரிடம் பரப்பவேண்டும். பிரச்சினைகளைப் பற்றித் தரப்பட்ட விளக்கங்களைப்பற்றி விவாதங்கள்நடத்த வேண்டும். மாநாட்டிற்கு வந்து போவதற்கு இதுதான் அடையாளமே தவிர திருவிழாவிற்கு வந்து திரும்பியவர்கள் விழாவில் நடந்த வெத்துவேட்டுக்களின் சத்தங்களைப் பற்றியும், வாண வேடிக்கைகளின் விமரிசைகளைப் பற்றியும், பேசுவதைப்போல் இருந்துவிடக்கூடாது.
இந்த செங்கற்பட்டு மாவட்ட மாநாட்டில் மக்கள் ஏராளமாகக் கூடியிருக்கின்றனர். சிற்றூர்களினின்றும், பேரூர்களினின்றும் வந்துள்ள பெருங்கூட்டத்தினரைக் கண்டு நான் உண்மையிலேயே பெருமகிழ்ச்சியடைகிறேன். இருநாட்களாக மிகவும் விமரிசையாக நடைபெற்று வருகின்றது. இதில் நீங்கள் காட்டும் உற்சாகத்தையும் பேரார்வத்தையும் கண்டு பெரிதும் பாராட்டுகிறேன்.
இப்படிப்பட்ட மாநாட்டைக் கூட்டி, அதனை இவ்வளவு சீரும் சிறப்புடனும் நடத்திய இந்த மாவட்டத்தினருக்கு தி. மு. க. சார்பில் எனது நன்றியறிதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
நான் ஏற்கெனவே குறிப்பிட்டபடி, இங்கே கூடியுள்ள மக்கள் அனைவரும், மாநாடு முடிந்து தங்கள், தங்கள் இருப்பிடம் சென்றதும் இங்கே நடைபெற்ற நிகழ்ச்சிகளைப்பற்றி எண்ணவேண்டும். அதனை மற்றவர்களிடமும் எடுத்துக் கூறிப் பரப்பவேண்டும்.
திருவாங்கூர் தமிழர் பிரச்சினைபற்றி கவனித்து நண்பர் நெடுஞ்செழியன் விளக்கினார்,மிகவும் திறம்பட. நேற்று பகுத்தறிவுக் கொள்கைகளைப் பற்றித் திருச்சி டி. கே. சீனிவாசன் மிகத்தெளிவானதோர் உரையாற்றினார். மக்கள் மறுமலர்ச்சி பெறவேண்டிய அவசியத்தைப்பற்றி தோழர் அன்பழகன் நல்லதோர் விளக்கவுரையாற்றினார். இன்னும் இப்படிப்பட்ட பல நல்ல கருத்துக்களைப் பற்றிய சொற்பொழிவுகளை நேற்றுமுதல் நீங்கள் அனைவரும் கேட்டு மகிழ்ந்தீர்கள். இடையிடையே உங்கள் மகிழ்ச்சிப் பெருக்கை கைதட்டல் மூலம் தெரிவித்தீர்கள்.
இதோடு உங்கள் கடமை முடிந்துவிட்டதாக எண்ணிவிடக்கூடாது. மாபெரும் பந்தலைப்போட்டு, அதிலே பெருத்த அளவில் மக்களைக் கூட்டிக் காண்பிப்பதோடு மாநாட்டின் நோக்கம் தீர்ந்துவிட்டதாக யாரும்கருதக்கூடாது..
இங்கே நீங்கள் இருநாட்களாகக் கேட்ட கருத்துரைகளையும், விஷய விளக்கங்களையும் நீங்கள் சந்திக்கும் மற்றுவரிடம் கூறவேண்டும், விவாதிக்க வேண்டும். பல கருத்துக்களைப் பற்றி விவாதிக்கவும், பல விஷயங்களைப் பற்றிய விளக்கங்களையும், தெளிவுகளையும், பெற்றுத்திரும்புமான சொற்பயிற்சிக் கூடமாகத்தான் இத்தகைய மாநாடுகளை நீங்கள் கருதவேண்டு மென்று கேட்டுக்கொள்கிறேன்.. மாநாட்டுக்கு வந்துள்ள அத்தனை தோழர்களும், தோழியரும், இப்படிப்பட்ட உற்சாகத்துடனும், ஊக்கத்துடனும்தான் ஊர்திரும்பவேண்டும். அப்போதுதான் இங்கு வந்ததற்கான பயன் ஏற்பட்டதாகப் பொருள்! இன்றேல் வெறும் திருவிழாக் கூட்டத்திற்கும் உங்களுக்கும் எந்த விதமான வேற்றுமையோ வித்தியாசமோ இருக்காது என்பதை உணர வேண்டுகிறேன். டாக்டர் வீட்டிற்குச் சென்று திரும்புகின்றவருக்கும், சோதிடன் வீடு சென்று வருபவருக்கும் உள்ள வித்தியாசத்தைப் போலத்தான் மாநாட்டிற்கு வந்து போகின்ற மக்களுக்கும் திருவிழாவிற்குச்சென்று திரும்புகின்ற கூட்டத்திற்கும் இருக்கும், இருக்கிறது, இருக்கவும் வேண்டும்.
சோதிடன் வீட்டிற்குச் சென்று திரும்புகின்றவன் உற்சாகத்தோடு பொருத்த மனக்கோட்டைகளை யெல்லாம் கட்டிக்கொண்டே வருவான். சோதிடன் கூறியிருப்பார் 'உனக்கு அஷ்டமத்திலே உள்ள சனி ஆவணிமாதம் ஆறாந்தேதியோடு தொலைந்து போய்விடும். அதற்குமேல் குருதசை ஆரம்பம்' என்று. இதை எண்ணி பூரித்துக்கொண்டே திரும்புவார் சோதிடன் வீட்டிலிருந்து!
ஆனால் டாக்டர் வீட்டிலிருந்து வெளிவரும் தோழர் அப்படியா திரும்புவார்? திரும்பமுடியும்? டாக்டர் வீட்டிலிருந்து திரும்பும் தோழரிடம், சோதிடன் வீட்டிலிருந்து திரும்பும் தோழரிடம் காணப்படுவது போன்ற உற்சாகம் காணப்படாது! அவரிடம் சிறிது தளர்ச்சிகூடக் காணப்படும். கொஞ்சம் வருத்தமாகக்கூட காணப்படுவார் அவர் ஏன்?
டாக்டர் அவரது நாடியைப் பிடித்துப் பார்த்து நரம்புத் தளர்ச்சி இருக்கிறது என்றோ, ரத்தச் சோகை காணப்படுகிறது என்பதாகவோ, அல்லது ஜுரத்திற்கான அறிகுறிதென்படுகிறது என்றோ கூறி, அதற்கான மருந்து வகைகளைச் சாப்பிடும்படி தெரிவித்திருப்பார்! இதைக் கேட்டு வரும் நபரிடம் எங்கிருந்து உற்சாகத்தைக் காணமுடியும்? அவரிடம் உற்சாகத்திற்குப் பதில் மனச் சோர்வு தானே காணப்படும்.
இதைப்போன்ற வேறுபாடுதான் திருவிழாக் கூட்டத்தினருக்கும், மாநாடுகளுக்கு வந்து போகும் மக்களுக்கும் இடையே காணப்படும்–காணப்படுகிறது. மாநாடுகளிலே பேசப்படும் விஷயங்களைக் கேட்டுச் செல்பவர்களுக்கு ஒருவகையில் உற்சாகம் இருப்பினும், பலவகையில் மனச் சோர்வுதான் காணப்படும். சிலருக்குத் தயக்கம், ஏற்படக்கூடும் ! வேறு சிலருக்கு அச்சமும் ஆயாசமுங்கூடத் தோன்றலாம்.
மாநாட்டிலே கூறப்படுகின்ற பலவகைக் கருத்துக்களையும், விளக்கப்படும் பலவகைப்பட்ட பிரச்சினைகளையும் எண்ணும் எவருக்கும் அத்தகைய நிலைதான் ஏற்படக்கூடும் என்பதில் ஆச்சரியமொன்றுமில்லை.
என்ன நாம் வசிக்கும் நாடு நம்மிடம் இல்லையென்கிறார்கள். சர்க்காரும் நம்ம சர்க்கார் அல்லவாம், நாடு நலிந்துகிடக்கிறதாம். நாம் சுரண்டப்படுகிறோம். சூது நிறைந்தபலர் நம்மிடையே உலவுகிறார்களாம். இப்படி எதையெதையோ கூறுகிறார்கள். புராணங்களைப் பொய்யென்று கூறுகிறார்கள்! இதிகாசங்கள் இழிவை உண்டாக்குகின்றன, வேதங்கள் மக்களிடையே பேதங்களையும் பிளவுகளையும் ஏற்படுத்தின, என்றெல்லாம் பேசுகிறார்களே! நாடு வறுமையில் உழல்கிறது, மக்கள் பசியால் தத்தளிக்கிறார்கள் இதை அரசாங்கம் கவனிக்கவில்லையென்று எடுத்துக்காட்டுகிறது. அப்பப்பா இவ்வளவு தொல்லையா கிடக்கிறது? இத்தனை மூடக் கொள்கைகளா நம்மிடையே மலிந்துள்ளது? இதையெல்லாம் பார்க்க வேண்டுமே என்று எண்ணும்போது யாருக்கும் முதலில் சிறிதாவது அச்சமும், ஆயாசமும் ஏற்படத்தானே வேண்டும்!
டாக்டர் நோயாளியின் நாடியைப் பிடித்துப்பார்த்து உடலில் உள்ள கோளாறுகளைக்கூறி அதற்கேற்ற மருந்துவகைகளைக்கூறுவது போலத்தான் நமது மாநாடுகளிலே மக்களின் வாழ்வுப் பிரச்சனைகளை நாம் எடுத்துப் பேசுகிறோம். நாட்டின் நலிவுகளைக் காட்டிப் போக்கவேண்டுமென்று கூறுகிறோம்.
இதுதான் நமக்கும் மற்ற கட்சிகளுக்கும் உள்ள மகத்தான மாறுபாடு, அடிப்படை வித்தியாசமாகும். மற்றகட்சிக்காரர்கள் நாட்டிலுள்ள பொலிவுகளைப் பற்றி மட்டும் பேசுவர், பாராட்டுவர். ஆனால் தி. மு. கழகம் முக்கியமாக நாட்டில் உள்ள நலிவுகளைப்பற்றித்தான் பேசும். எடுத்துக்காட்டிக்கொண்டிருக்கும். அவற்றைப் போக்கவேண்டிய வழிவகைகளைப்பற்றிக்கூறும், ஆராயும், அதற்காகப் பாடுபடும்.
தி.மு. கழகத்தவர் கூட்டங்களிலே பேசப்படும் கருத்துக்கள் மக்களுக்குச் சிறிது கசப்பாகத்தானிருக்கும் முதலில்! காரணம் நாங்கள் மக்களை மற்றவர்களைப்போல ஞானவான்கள் என்றோ இந்திரன் சந்திரன் என்றோ போற்ற மாட்டோம், புகழவும் மாட்டோம்.
நாங்கள் அந்த இந்திரனையும், சந்திரனையுமே குறை கூறுகிறோமே! இந்திரன் ரிஷிபத்தினியைக் கெடுத்தான், சந்திரன் குரு பத்தினியைக் கெடுத்தான் என்று குற்றஞ்சாட்டும் நாங்கள், மக்களை எப்படி இந்திரர் என்றும் சந்திரர் என்றும் புகழ முடியும்.
நாங்கள் கூறுவதெல்லாம் என்ன? இந்த நாட்டுச் சமுதாயம் மிகவும் கீழான நிலைமையில் இருக்கின்றது. மக்களில் படித்தவர்கள் நூற்றுக்குப் பன்னிரண்டுபேர்தான். மற்றவர்கள் அனைவரும் தற்குறிகள். படித்தவர்களிலும் பலர் பகுத்தறிவற்றவர்களாகத்தான் காணப்படுகிறார்கள்! மக்களிடையே சாதி பேதம் தலைவிரித்தாடுகிறது. மத மூடநம்பிக்கைகளிலே மக்கள் சிக்கிச் சீரழிகிறார்கள். ஆண்டவனை நம்பி மக்கள் அவதிப்படுகிறார்கள். இந்த அவல நிலை போக வேண்டும், போக்கவேண்டும். இப்படிப்பட்ட விஷயங்களைத்தான் நாங்கள் பேசுகிறோம்.
இதனால்தான் மக்களுக்கு மற்ற கட்சிகளிடம் சுலபத்தில் ஏற்படுவதுபோன்ற கவர்ச்சியும், பற்றும் பாசமும், எங்களிடத்தில் சுலபத்தில் ஏற்படுவது கிடையாது என்றாலும், நாங்கள் கூறுவதைக்கேட்டுச் சிந்தித்தபிறகு மக்கள் அனைவரும் எங்கள் போக்கில்தான் திரும்பி வருகிறார்கள்.ஊரில் உள்ள ஜோதிடரின் வீட்டுக்கு அனைவரும் போகமாட்டார்கள் போகவேண்டிய அவசியமோ, கட்டாயமோ இல்லை. ஆனால் ஊரில் உள்ள டாக்டரிடம், ஏறத்தாழ அனைவருமே அந்த ஜோதிடர் உட்பட தமக்கு நோய் வருகின்ற நேரத்தில் போய்த்தீரவேண்டும். நோய் வரும்போது டாக்டரிடம் போய்த்தான் ஆகவேண்டும் என்ற கட்டாயம் அவசியம் ஏற்பட்டுவிடுகிறது. ஆகவே ஊருக்கு ஒரு டாக்டரேனும் இருந்தாகவேண்டிய நிர்ப்பந்தமும் உண்டாகிறது.
ஊரில் உள்ள மக்களின் நாடியைப் பிடித்துப்பார்த்து நோயை தெரிவித்து நோயின் கூறுகளையும் ஆராய்ந்து, அதற்குதக்க மருந்து தரும் டாக்டரைபோலத்தான் தி. மு. கழகம் நாட்டு மக்களின் நலிவைப் பார்த்து கேடுகளைச் சுட்டிக்காட்டி அவைகளைப் போக்குவதற்கான வழிகளையும் சொல்லி வருகின்றது.
நாங்கள் நாட்டு மக்களின் நலிவுகளைப் பற்றியே அதிகம் பேசுகிறோம், சீர்கேடுகளைச் சுட்டிக் கண்டிக்கிறோம். பழமைப் பிடிகளை அகற்றவேண்டுமென்று பாடுபட்டுவருகிறோம். நாட்டு மக்களின் நானாவித பிரச்சினைகளைப்பற்றியும் அலசிக்காட்டி மக்களிடையே தெளிவையூட்டுகிறோம். துணிவை ஏற்படுத்துகிறோம். கேடுகளைக்களைந்து முன்னேறும் மார்க்கங்களைப் பரப்பிவருகிறோம்.
இப்படிப்பட்ட நாட்டின் நலிவுகளைச் சுட்டிக்காட்டி, கேடுகளைக் கண்டித்து முன்னேறும் முறைகளைக் காட்டும் மருத்துவர்களாகத்தான் மக்கள் மதிக்கவேண்டும். நாட்டு மக்களின் நானாவித பிரச்சினைகளையும், தீர்த்துவைக்கும் வழிகாட்டியாக நோய்தீர மருந்துதரும் மருத்துவ மனையாகத்தான் தி.மு.கழகத்தைக் கருதவேண்டும்.
இந்த முறையில்தான் மக்கள் இந்த மாநாட்டில் நடைபெறும் நிகழ்ச்சிகளையும் கூறப்படும் கருத்துக்களையும், விளக்கப்படும் பிரச்சினைகளையும் கருதவேண்டுகிறேன். இப்படிக்கருதி இக்கொள்கைகளையும் நாட்டில் மேலும் பரப்ப வேண்டிக்கொள்கிறேன்.
இந்தவகையில் இந்த மாநாடு மக்களுக்கு பயன்தரும் என்று நம்புகிறேன். இதனை இங்கு கூடியுள்ளவர்களும் இந்த முறையிலேயே பயன்படுத்த வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேள்.
சரியாகவோ, தவறாகவோ மற்றவர் எப்படிக்கருதினாலும் சரி, திராவிட முன்னேற்றக் கழகம் இன்று நாட்டில் ஓர் நிலைத்த அமைப்பாகிவிட்டது. இதனை யார் மறுத்தாலும் சரி, ஒப்பினும் சரி, தி. மு. கழகம் நிலைத்த அமைப்பாகிவிட்டதென்னவோ மிகவும் நிச்சயமானதாகும். நாட்டில் மிகவும் நிலைத்த அமைப்பாகிவிட்டிருக்கும் தி.மு. கழகத்தை சிலர் அழித்துவிடலாம் என்று நினைக்கிறார்கள். வேறு சிலர் இதனை அலட்சியம் செய்து ஒதுக்கிவிட முடியும் என்றும் எண்ணுகிறார்கள். இப்படி நினைப்பவர்கள் எல்லாம் தங்களைத் தாங்களே ஏமாற்றிக்கொள்பவர்களாகத் தான் ஆவார்கள் என்பது மிகமிக நிச்சயம்!
இன்று எந்தக்கட்சிக்காரர் ஆனாலும் தி.மு.காவைப் பற்றிப் பேசாத மேடையில்லை. நாளில்லை. எல்லா மக்களும் நம்மைப்பற்றிப் பேசுவதால், அனைவரும் நமது கழகத்தை பாராட்டுவதாக எண்ணிட நான் ஒன்றும் ஏமாளியல்ல!
மற்றவர்கள் நம்மைக்கவனிக்கவேண்டிய நிர்ப்பந்தம் இன்று ஏற்பட்டுவிட்டது. நம் கழகத்தைப்பற்றி பேசித் தீரவேண்டிய அவசியம் உண்டாகிவிட்டது. பாராட்டிச் சிலரும். பகைத்துச் சிலரும், தூற்றி வேறு சிலரும் பேசுகிறார்கள். எப்படியோ அனைவரும் நம்மைப்பற்றி ஓயாது பேசவேண்டிய நிலைமை, நிர்ப்பந்தம் இன்று ஏற்பட்டிருக்கிறது என்பதைத்தான் நான் குறிப்பிடுகிறேன்.
தி.மு.கழகத்தைப்பற்றி பலர் பலவிதம் பேசுகிறார்கள். பலவிதமாக எண்ணுகிறார்கள்.
கம்யூனிஸ்டுகள் நினைக்கிறார்கள். நாம் அந்தக்கட்சியை ஒழித்துக்கட்டுவதற்காகவே இருப்பதாக. காங்கிரசாரும் தங்களைத்தான் நாம் தாக்குகிறோம் என்று. பணக்காரர்கள் எண்ணுகிறார்கள், அவர்களின் பகட்டான பாங்கான வாழ்வைத் தீர்த்துக் கட்டவே நாம் தோன்றியுள்ளதாக. பார்ப்பனர் மீது துவேஷத்தை வளர்ப்பதற்குத்தான் நமது கட்சி இருப்பதாக பார்ப்பனர் கருதுகிறார்கள். இப்படிப் பேசுகிறார்கள். நினைக்கிறார்கள் பலப்பல விதங்களிலே!இதில் இருவகைப்பட்ட கருத்துக்களும் நம்மைப்பற்றிக் கூறப்படுகின்றன. பார்ப்பனர்களைத் துவேஷிப்பதே நமது வேலையென்று பார்ப்பனர் எண்ணுகின்றனர். அதே நேரத்தில் பார்ப்பனரை அழைத்து அணைத்துக்கொள்வதாகவும் சிலர் நம்மைக் கூறுகிறார்கள், மலையாளிகளைப் பகைவர் என்றும் பேசுகிறார்கள். அதே நேரத்தில் மலையாளிகளைச் சேர்த்துக்கொள்பவர்கள் என்றும் குற்றம் சாட்டப்படுகிறோம். ஆந்திரர் தமிழர் பகை வளர்ப்பதாகச் சிலர் தூற்றுகிறார்கள். அதேசமயம் ஆந்திரரை அணைத்து அகமகிழ்கிறோம், தமிழர்களைக் காட்டிக்கொடுக்கிறோம் என்று சிலர் பிரச்சாரம் செய்கிறார்கள். சினிமாவில் அரசியலைப் புகுத்துவதாக சினிமாத்துறையில் இருப்பவர்கள் அஞ்சுகின்றனர். ஆனால் நாம் அரசியலில் சினிமாவைப் புகுத்துவதாகவும் சிலர் கேலி பேசுகிறார்கள்.
நம்மைப்பற்றி இப்படிப்பட்ட இரண்டுவிதமான பேச்சுக்களும் நாட்டில் தினந்தினம் பேசப்படுகின்றன. கம்யூனிஸ்டுகள் நம்மை பிற்போக்குவாதிகள் என்றால், நாட்டில் உள்ள மற்றவர்கள் நம்மைப் புரட்சிக்காரர்கள் என்று பேசுகின்றனர்.
யார் யார் எப்படியெப்படிப் பேசினாலும், இன்று நாடு முழுவதும் நன்கு நிலைத்துவிட்ட ஜனநாயக அமைப்பு தி. மு. கழகம் என்பது எவராலும் மறுக்கமுடியாத உண்மையாகும்.நம்மைப்பற்றி சைவர்கள் பேசுகிறார்கள். ஆத்திகர்கள் நினைக்கிறார்கள் அரசியல்வாதிகள் எண்ணுகிறார்கள். எல்லா கட்சிகளும் நம்மைப்பற்றிப் பேசத்தவறுவதே இல்லை. ஆனால் ஒவ்வொருவர் ஒவ்வொருவிதமாகப் பேசுகிறார்கள், நினைக்கிறார்கள். பழிக்கிறார்கள், தூற்றவும் தூற்றுகிறார்கள்.
பலரும் நம்மைப்பற்றிப் பலவிதமாகப் பேசினாலும், ஒருவராலும் நம்மைப்பற்றி நிச்சயமான, உண்மையான பேச்சைப் பேசமுடியவில்லை. நமது நிலையைப்பற்றி எவராலும் இறுதியிட்டுக் கூறமுடிவதில்லை. இதற்குக் காரணம் யாரும் நம்மை நெருங்கவில்லை. எந்தக்கட்சிக் காரருக்கும் நமக்கும் நல்ல நெருக்கம் ஏற்படவில்லை என்பதுதான்.
நம்மை நெருங்கிப் பார்த்தால் நாம் எவருக்கும் பகையானவர்கள் அல்ல, எந்தக் கட்சிக்காரர்களுக்கும் நாங்கள் விரோதிகளல்ல என்பது நன்கு விளங்கும், ஆனால் யாருக்காகவும், எந்தக்கட்சிக்காகவும் தி. மு. கழகம் தனது கொள்கைகளையும் திட்டங்களையும் கைவிட்டுவிடும் நிலையிலும் இல்லை.
நம்மைப்பற்றி எல்லோரும் பேசுகிறார்கள். நம்மைப் பேசாதவர்கள் இல்லை, பேசாத நாள் இல்லை. பேசப்படாத இடமுங்கிடையாது.
இரண்டு நண்பர்கள் சந்திக்கும்போது 'வணக்கம்' என்று கூறுகிறார்கள் என்றால் 'ஓகோ இவர்கள் சூனாமானாக்கள் போலும்' என்று நினைக்கிறார்கள்.
ஏதாவது ஒரு நாடகத்தில் ராஜாதி ராஜன் என்று பேசவேண்டிய இடத்தில் மன்னன் என்று பேசப்பட்டால் இவர்கள் கழகத்தைச் சேர்ந்தவர்களைப்போலக் காணப்படுகிறது என்று பார்ப்பவர்கள் எண்ணுகிறார்கள்.
எங்காவது ஒரு பொதுக்கூட்டத்தில் பேசுகிறவர். 'அவைத்தலைவர் அவர்களே! பொதுமக்களே' என்று பேசட்டும்! உடனே அவரையும் தி. மு. கழகத்துடன் சேர்த்துவிடுகிறார்கள், கேட்பவர்கள்.
இப்படித்தான் எந்தத்துறையிலும் தி.மு.கழகத்தைப்பற்றி பேச்சு அதிகமாகி விட்டது என்பதுமட்டுமல்ல, மிகவும் முக்கியமானதாகவும் ஆகிவிட்டிருக்கிறது.
பலரும் நம்மைப்பற்றிப் பேசுவதற்குக் காரணம் என்ன? எல்லாம் பிரச்சினையாகிவிட்டிருக்கும் நிலைமை ஏன் ஏற்பட்டுவிட்டிருக்கிறது? நாம் அத்தனை துறைகளிலும் படையெடுத்துவிட்டிருக்கிறோம்! எல்லாத் துறைகளிலும் நுழைந்து பணியாற்றி வருகிறோம். இதனால்தான் நம்மைப் பற்றிய பேச்சு பேசுவதற்கும், பிரச்சினைகள் கிளப்புவதற்கும் முக்கியமான காரணமாகும்.
ஒவ்வொரு துறையில் இருப்பவர்களும், நாம் அறிவுத்துறையில் ஈடுபட்டு வருவதால் நம்மை விரோதிகளாகக் கருதுகிறார்கள். மற்றவர்களை ஒழித்துவிடுவதற்காகவே நாம் அத்துறைகளில் நுழைந்ததாக எண்ணிக் கலக்கமடைகிறார்கள்.நாடகம், சினிமா, பேச்சு, எழுத்து, பொதுமேடை, அரசியல், சமுதாயம், பொருளாதாரம் ஆகிய எந்தத்துறையினை எடுத்துக்கொண்டாலும், அங்கெல்லாம் நாம் இருக்கிறோம், நமது கழகம் அத்தனை துறைகளிலும் ஈடுபட்டிருக்கின்றது
இதைக்கண்டு மற்றவர் கிலி கொள்வதும், கேலிசெய்வதும், பழி சுமத்துவதும், இழிமொழி புகழ்வதுமான நிலைமை ஏற்பட்டுவிட்டது, பலர் நம்மைக்கண்டு பதைக்கிறார்கள், பொறாமையும் பொச்சரிப்புங்கொண்டு ஏசுகிறார்கள். எரிச்சலுடன் பழகுகிறார்கள். எப்படியாவது இவர்கள் தத்தம் துறைகளிலிருந்து விரட்டவேண்டும். ஒழித்துக்கட்டலாம் என்பதிலேயே கண்ணுங் கருத்துமாக இருக்கின்றனர். காலம் சிலருக்கு இதே முறையிலேயே கழிந்தும் விடுகிறது!
கம்யூனிஸ்டுக் கட்சியைச் சார்ந்த நண்பர் ஜீவானந்தம் சில நாட்களுக்கு முன்னர் என்னுடன் உரையாடிக்கொண்டிருந்தார். அந்த உரையாடல் நடந்த இடம் தி. மு. கழகத்தின் தலைமை நிலையமான 'அறிவகம்' ஆகும்,
அப்போது நண்பர் ஜீவா என்னிடம் சொன்னார், 'அண்ணாத்துரை' உங்கள்மேல் எனக்கு ஒருவகையில்தான் மிகவும் கோபமாக இருக்கிறது. நீங்கள் எந்தத் துறையில்கால் வைத்தாலும் அதனை உங்கள் சொந்தமாக்கிக்கொள்கிறீர்கள். ஏற்கனவே அத்துறையில் உள்ளவர்களை யெல்லாம் நீங்கள் மிஞ்சிவிடுகிறீர்களே' என்ற கருத்துப்பட நண்பர் ஜீவானந்தம் என்னைக்கேட்டார்.
திருவாங்கூர் தமிழ்ப் பிரச்சினையாகட்டும், சித்தூர் தமிழர் பிரச்சினையாகட்டும், அதிலெல்லாம் முதன் முதலில் நேரடி நடவடிக்கையில் ஈடுபட்ட. தாய்த் தமிழகத்தவர் நாம்தான். இதன் பின்னர்தான் மற்றவர்கள் வந்தார்கள்.
அதேபோல பொதுஉடமைப் பிரச்சினையிலும் நாம் தான் உண்மையான பொதுவுடமை பிரச்சினைகளைப் பற்றிப்பேசுகிறோம். பாடுபடுகிறோம். இதைப் போலவே பகுத்தறிவுத் துறையிலும் நாம்தான் மற்ற எவரையும்விட அதிகமாகப் பாடுபட்டு வருகிறோம்! என்ன செய்வது! நாம் இத்தனை துறைகளிலும் பாடுபடவேண்டியிருக்கிறதே!
நண்பர் ஜீவானந்தம் அத்தனை துறைகளையும் நாம் நமக்குச் சொந்தமாக்கிக் கொள்வதாகக் குறிப்பிட்டதற்குப் பதிலாக நான் கூறியதாவது, 'நாங்கள் எல்லாத்துறைகளிலும் ஈடுபடுவதற்குக் காரணம், நாங்கள் எல்லாத்துறைகளிலும் நல்லதைத் தேடுகிறோம், நல்லனவற்றை உண்டாக்க விரும்புகிறோம். என்பதுதான் என்று அவரிடம் தெரிவித்தேன்.
நல்லவை எங்கெங்கு கிடைக்கிறதோ அங்கெல்லாம் தி.மு.க.வும் சென்று பணியாற்றும். மக்களுக்கு எந்தெந்தத்துறைகளின் மூலம் நன்மையை செய்யமுடியுமோ, அத்தனை துறைகளையும் கைபற்றியே தீரும். அத்தனை துறைகள் மூலமாகவும் மக்களுக்கு நன்மைகள் ஏற்பட்டுத் தீரும்வரை தொடர்ந்து பணியாற்றியே வருமென்பது உறுதி!
சினிமா நாடகத் துறைகளிலே உள்ள நல்லவற்றைப் பயன்படுத்துகிறோம். நாட்டு மக்களைத் திருத்த இத்துறைகளில் வேலை செய்கிறோம். ஏடுகளிலே உள்ள நல்ல கருத்துக்களைப் பரப்புகிறோம், பாராட்டுகிறோம். நாட்டில் நல்ல ஏடுகள் உலவிடவும் உழைத்து வருகிறோம். பொதுஉடைமை நல்லவிதத்திலே, சரியான அடிப்படையிலே ஏற்படப்பாடுபடுகிறோம். தமிழர் உரிமை பாதுகாக்கப்பட வேண்டுமென்பதிலே மிகவும் அக்கரைகாட்டி வருகிறோம்.
ஒவ்வொரு துறைகளிலும் அந்தத் துறைகள் சரிவரச் சீர்திருத்தி நாட்டு மக்களுக்குப் பயன்படும் வரையில் நாங்கள் இருப்போம். வேலை செய்துதான் வருவோம். ஆகையால் நாங்கள் எல்லாத்துறைகளிலும் இருப்பதாக நண்பர் ஜீவானந்தம் குறிப்பிட்டார்,
அன்று நானும் நண்பர் ஜீவானந்தரும் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்த அறையின் சுவற்றில், ஸ்டாலினும், லெலினும் பேசிக்கொண்டிருக்கும் படம் ஒன்று மாட்டப்பட்டிருந்தது, இதனை நண்பர் திரும்பிப்பார்த்தார்.
அந்தப்படத்தை கையினால் எனக்குச் சுட்டிக்காட்டினார். பிறகு என்னைப்பார்த்துக்கேட்டார். 'இந்தப்படத்தை சுவற்றில் மாட்டிவைத்துக்கொண்டே எங்களைத் திட்டுகிறீர்களே? எவ்வளவு துணிவு' என்று.நான் உடனே அவரைக் கேட்டேன், 'அவ்வளவு சுலபத்தில் அந்தப்படத்தை உங்களுக்கு மட்டுமே, கம்யூனிஸ்டுகளுக்கு மட்டுமே ஏன் சொந்தமாக கருதுகிறீர்கன்? அது தவறான கருத்தல்லவா' என்று.
அதோடு படத்தில் உள்ள ஸ்டாலினும் சரி, லெனினும் சரி இன்று உயிரோடு இல்லை. இருவருமே இறந்துவிட்டனர். அவர்கள் உயிரோடு இருந்தாலாவது அவர்கள் படத்தை மாட்டிக்கொள்ள எனக்குச் சொந்தம் உண்டா இல்லையா, என்று கேட்கமுடியும்! அதோடு நாங்கள்தான்–தி.மு கழகந்தான் இந்த நாட்டில் உண்மையான பொதுஉடமைவாதிகள் என்றுகூட எடுத்துக்கூற முடியும்! நிலைமை இப்படியிருக்க, லெனின் ஸ்டாலின் படம் உங்களுக்கே சொந்தம் என்று எண்ணுவதும் தவறு. அதை எங்கள் சுவற்றில் மாட்டிக்கொண்டால் உங்களைக் குறையே கூறக்கூடாது என்பது அதைவிடப் பெருந்தவறு எனக் குறிப்பிட்டேன்.
தோழர் மேலும் கூறினார் இதுதான் அண்ணாத்துரை உங்களைப் பொருத்தவரை எங்களுக்குள்ள சங்கடம்! எங்களைப் பாராட்டிக்கொண்டே, எதிர்க்கிறீர்கள். இந்த வகையில் பெரியார் போக்கு தெளிவாக இருக்கிறது. அவர் எங்களை வெளிப்படையாகவே தாக்கி வருகிறார். அதனால் அவருடன் நேரிடையான விரோத மனப்பான்மையாவது காட்டமுடிகிறது. உங்களிடம் அப்படி முடியவில்லையே என்று.இதற்கு நான் என்ன செய்வது? இதுதான் நான். எனக்கும் மற்றவர்களுக்கும் உள்ள வித்தியாசம் இதுதானே!
நான் யாரையும் அர்த்தமற்றுப் பகைத்துக்கொள்ள மாட்டேன். அதே நேரத்தில் யாரையும் அவர்கள் செய்யும் நல்ல காரியங்களுக்காகப் பாராட்டாமலும் இருக்கமாட்டேன். அதற்காகக் கண்டித்துப்பேச நேரிடும் நேரத்தில் கண்டிக்காமலும் இருக்கமாட்டேன். கண்டித்தேதீருவேன். இதுதான் எனது சுபாவம்.
மற்றவர்களுக்கு என்னைப் பிடிக்கவில்லையானால், எனது கொள்கைப்படி நடக்கமுடியவில்லையானால் அவர்களாக வெட்டிக்கொண்டு போகட்டும், பிரிந்து செல்லட்டும். நானாக யாரையும் விரட்டமாட்டேன், தள்ளவும் மாட்டேன்.
யாராக இருந்தாலும், வக்கும், வசதியும் வலிமையும் இருந்தால் அவர்களாகப் பிரியட்டும், நானாகப் பிரித்துவிடுவேன், விரோதித்துக்கொள்வேன் என்று எண்ணுவதும், எதிர்பார்ப்பதும் வீண், அர்த்தமற்றது.
நல்லது யார் செய்தாலும் ஆதரிப்பேன். அதைப்போலவே கெட்டது யார் செய்தாலும் கண்டித்தே தீருவேன். இதனை நண்பர்கள் அனைவரும் மிக நன்றாக உணரவேண்டுகிறேன்.
நான் எப்போதும் ஒற்றுமைகீதம் பாடித்தான் வருவேன். அதற்காகத்தான் பாடுபடுவேன். ஆனால் அதற்காக வேற்றுமை வளர்ப்பவர்களைத் தழுவிச் செல்லவும் மாட்டேன். அதற்காக அவர்களைக் கண்டிக்காமல் இருக்க மாட்டேன். கண்டிப்பதால் அவர்களை நான் விரோதித்துக் கொள்வதாக எண்ணுவதும் தவறுதான். பிரச்சினையைப் பொறுத்தவரையில்தான் என்னுடைய கண்டிப்பு இருக்கும். அவர்களே நல்லது, அதை என்றும் வாழ்த்தி வரவேற்பேன்.
இப்படிப்பட்ட நிலைமைதான் எங்களுக்குச் சங்கடமாக இருக்கிறது என்று யாராவது–எந்தக்கட்சியாவது. கருதினால், அவர்களாக என்னுடைய தொடர்பை அறுத்துக்கொள்ளட்டும். தைரியமிருந்தால், வக்கும், வழியும், வகையுமிருந்தால் செய்யட்டும் அப்படி! இதைத்தான் நான் கூறுவேனே தவிர, நானாக யாரையும் விரோதிக்கமாட்டேன்.
தி.மு. கழகம் நாட்டின் எல்லா பிரச்சினைகளைப்பற்றியும் அக்கரை காட்டுகிறது. ஆகவேதான் அது எல்லாத்துறைகளிலும் ஈடுபட்டு வேலைசெய்ய வேண்டியிருக்கிறது.
நாட்டில் உள்ள நலிவுகள் என்ன என்பதைக்கண்டுபிடித்துப் போக்கவேண்டும், சமுதாயத்துறையிலே உள்ள சீரழிவுகளுக்கான அடிப்படைக் காரணங்களைக்கண்டறிந்து அவற்றைக் களைந்தெறிய வேண்டும். மார்க்கத் துறையிலே உள்ள சீர்கேடுகளைப் போக்கவேண்டும். அரசியலில் ஏற்படும் நெருக்கடிகளைச் சமாளித்தாக வேண்டும். கலைத்துறையில் உள்ள சீர்கேடுகளைத் திருத்தவேண்டும். நாட்டைப் பிரித்திடும் பணியைத் தொடர்ந்து நடத்த வேண்டும். வடநாட்டுச் சுரண்டலைத் தடுக்கவேண்டும்.
ஆக, இத்தனை பிரச்சினைகளையும் ஒரு சேர கவனித்து வருகிறோம். நாம் இவைகளில் எதையும் விட்டுவிட முடியாது. அல்லது யாராவது ஒன்றிரண்டை மட்டுமே பற்றிக்கொண்டு அதிலேயே மூழ்கிவிடுவது மிகமிகச் கேடுதரக் கூடியதாகும். நாட்டின் அத்தனை பிரச்சினைகளையும் கவனிக்கவேண்டும். இதற்கு எல்லாத்துறைகளிலும் ஈடுபட்டு உழைத்தாக வேண்டும்.
எப்படி ஒரு டாக்டர், ஒரு நோயாளியின் நாடியைப் பார்த்து, நோய்க்குத் தக்க மருந்துவகைகளைக் கூறியும், கொடுத்தும் அவர் பின்னர், வேறு நோயாளியைப் பற்றிய அக்கரைகாட்டி வருகிறாரோ அதைப்போல தி. மு. கழகமும் நாட்டில் உள்ள அத்தனை நலிவுகளையும் நீக்கியாக வேண்டும். எல்லாப் பிரச்சினைகளையும் கவனித்து, எல்லாத்துறைகளிலும் முனைந்து வேலை செய்தாக வேண்டும்.
இதனால்தான் தி. மு. கழகத்திற்கு எப்போதும் வேலை –ஓயாத வேலை இருக்கிறது, எல்லாத்துறைகளிலும் ஈடுபட்டுத்தீரவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.
ஒரு கழகம் அல்லது ஒரு கட்சி நல்ல வளர்ச்சியடைந்துள்ளது என்பதைச் சுலபத்தில் தெரிந்துகொள்ளலாம். அதற்கான அடையாளங்களை எளிதில் கண்டறியமுடியும்.சுருக்கமாகக் கூறவேண்டுமானால், ஒரு கழகமோ அல்லது ஒரு கட்சியோ வளர்ந்துள்ளது என்பதற்கான அறிகுறி அடையாளம், அந்தக் கழகத்தைப் பற்றியோ, அல்லது அந்தக் கட்சியைப் பற்றியோ நாட்டில் எங்கும் பேசப்படும். நாட்டு மக்களின் அன்றாட வாழ்க்கையில் அதைப்பற்றிய விவாதங்கள் நிகழும். மற்ற கட்சிக்காரர்கள் அனைவரும் அதைப்பற்றிக் கவனிப்பார்–கவலைப்படுவர்.
இப்படிப்பட்ட நிலைமை இன்று தி. மு. கழகத்திற்கு ஏற்பட்டிருக்கின்றது. இன்று எந்தக் கட்சிக் கூட்டமானாலும் தி. மு கழகத்தைப் பற்றிப் பேசப்படுவதைக் காணலாம். கம்யூனிஸ்டுகளும் சரி, காங்கிரசாரும் சரி. தமிழரசுக் கழகத்தினரும் சரி நம்மைப் பற்றிப் பேசுகிறார்கள். பெரும்பாலான கட்சிக் கூட்டங்களில் அவர்களுடைய கட்சிக்கொள்கைகளைப் பற்றிப்பேசுகின்ற நேரத்தைவிட நம்மைப்பற்றித்தான் அதிகநேரம் பேசி வருகின்றனர்.
காரைக்கால் அம்மையார் சரித்திரம் போன்ற புராணப் பிரசங்கங்களிலுங்கூட நம்மைப்பற்றிக் கூறுகிறார்கள். புராணப்பிரசங்கம் செய்து, பக்த ரசத்தையும், பகவான் லீலைகளையும் விளக்கிவிட்டுக் கடைசியில், இதையெல்லாம் இல்லையென்று கூறுகின்ற தி. மு. கழகத்தார்களும் இருக்கின்றார்களே என்று பேசுகின்றனர்.
சங்கீதக் கச்சேரிகளிலே, எத்தனை பாகவதர்கள் பாடினாலும், எத்தனை விதமான ஆலாபனங்களும், ஆவர்த்தாளங்களும், நடைபெற்றாலும், மங்களம் பாடினால்தான் முடிகிறது என்பதைப் போல, இன்று எந்தக்கட்சி மேடையிலும் நம்மைப்பற்றிப் பேசினால்தான் கூட்டம் முடிந்ததாகக் கருதுகின்றனர். தங்கள் மேடை பூர்த்தியானதாகத் திருப்தியடைகின்றனர்.
நல்லதொரு வளர்ச்சியடைந்துள்ள தி.மு. கழகம் இன்று எல்லாக்கட்சிகளின் கண்களையும் உறுத்திக்கொண்டிருக்கிறது. எல்லோரும் நமது வளர்ச்சியைக் கண்டு பெரிதும் ஆச்சரியமடைகின்றனர். எப்படி இவர்களுக்கு இத்தகைய வளர்ச்சி ஏற்பட்டது? எங்கிருந்து இவ்வளவு வல்லமை உண்டாகியது? எதனால் இத்துணை ஆதரவு கிடைத்தது? யார் மூலம் இவ்வளவு மகத்தான சக்தியைப் பெற்றனர்? என்ற கேள்விக்குறிகள் மற்றவர்களிடம் பெரிதும் தோன்றிய வண்ணமே உள்ளன!
நாம் வளர ஆரம்பித்தபோதே நம்மை நோக்கிப்பெருத்த எதிர்ப்பு வெள்ளம் வந்தது. அதனை நாம் எதிர் நீச்சலிட்டுத்தான் முன்னேறினோம்! வளர்ந்தோம்! எத்தனையோ ஏளனப்புயலைத் தாங்கினோம்! எதிர்ப்புச் சக்திகளைச் சமாளித்தோம். அடக்குமுறை அம்புகளுக்கெல்லாம் ஈடு கொடுத்தோம். பொறாமைக்காரர்களின் கணைகளையும் ஏற்றோம்.
இத்தனையும் ஏற்று, தாங்கி இப்படி வளர்ந்து விட்டார்களே! இது எப்படி என்பதுதான் மற்றவர்களுக்குப் பெருத்த ஆச்சரியமாக இருக்கின்றது. நாம் வளர்ந்துள்ளதையும், மேலும் வளருவதையுங்கண்டு பலர் 'நல்லதுதான்' என்று கருதுகின்றனர் களிப்புமடைகின்றனர். வேறு சிலர் நமது வளர்ச்சிகண்டு பொறாமையும் பொச்சரிப்புங்கொண்டு தூற்றுகின்றனர். இன்றும் சில இருக்கு நாம் – நமது கழகம் இருப்பதே தங்களுக்கும், தங்கள் கட்சிக்கும் மாபெரும் ஆபத்து என்று கருதுகின்றனர். அப்படிப்பட்டவர்களுக்கு நம்மை கட்டோடு ஒழித்துவிட வேண்டுமென்பதே பேரவா.
நான் ஒன்றை மட்டும் தெளிவாகக் கூறிவிடுகிறேன். நம்மைப்பற்றித் தெளிவாக ஒருவராலும் கூறமுடியவில்லை. காரணம் யாரும் நம்மை நெருங்கிப் பார்க்காததுதான். ஆனால் நாம் யார்-நமது கழகம் எப்படிப்பட்டது என்பதை அனைவரும் நன்கு புரிந்துகொள்ள வேண்டுகிறேன்.
திருவள்ளுவர் தமது திருக்குறளில் ஒரு பெண்ணின் கண்களில்-கண் பார்வையில் இரண்டுவித சக்திகள் இருப்பதாகக் கூறியுள்ளார். பெண்களின் கண்களில் விஷமும் இருக்கிறது, அதைப்போலவே அமிர்தமும் இருக்கிறது என்று வள்ளுவர் குறிப்பிட்டுள்ளார். பெண்ணின் பார்வையில் காதலும் உண்டு. கடுகடுப்பும் இருக்கிறது விருந்தும் இருக்கிறது, வெறுப்பும் காணப்படுகிறது.
இதைப்போலவேதான் தி. மு. கழகத்தினிடம் விஷமும் உண்டு விருந்துதரும் அமிர்தமும் உண்டு. ஆக்கவேலை செய்யும் சக்தியும் இருக்கிறது. அழிவுவேலை நடத்தும் திறமையும் இருக்கிறது. நம்மிடம் நஞ்சும் இருக்கிறது. நல்ல நல்ல விருந்து தரும் அமிர்தமும் உண்டு.
நான் இந்த நஞ்சு குறைந்து, நீங்கி அமிர்தம் அதிகப்பட வேண்டுமென்றுதான் கூறுகிறேன், விரும்புகிறேன். நாம் அழிப்பதற்காக வெளிப்படுத்தும் நஞ்சு–அழிவுவேலை–சிலசமயம் நம்மையே அழித்துவிடவும் கூடும். ஆகவேதான் நாம் ஆக்க வேலைகளை அதிகமாக்கி, அழிவு வேலைகளை அறவே ஒதுக்கி வருகிறோம்.
இதைத்தான் நான் கடமை என்றும், கட்டுப்பாடு என்றும் எடுத்துரைத்து வருகிறேன்.
கண்களில் விஷத்தையும், விருந்துபோன்ற அமிர்தத்தையும் அடக்கிவைத்திருக்கும் பருவமங்கையைப் போன்றதுதான் தி.மு.கழகம். நம்மை நெருங்கி வருபவர்களை நம்மால் அழிக்கவும் முடியும், நல்ல ஆக்கவேலைகளுக்குப் பயன் படுத்தவும் முடியும். நாம் எப்போதும் அழிவு வேலைகளில் இறங்குவதே கிடையாது. பலாத்காரம் நமக்குத் துளியும் பிடிக்காததாகும்.
இந்த மாநாட்டில் கூடியுள்ள மக்களை அழிவு வேலைக்குப் பயன்படுத்துவதாக இருந்தால் முடியாதா? அதற்கு அதிக நேரமே வேண்டாமே! கூடியுள்ள மக்களைப் பார்த்துச் சில நிமிடங்கள் பேசினால் போதுமே!
பொதுமக்களே! அடுத்த கடைவீதி ஆடிசன் பேட்டையில் உள்ள ஆறாம் நம்பர் கடைக்காரர் மிகவும் அக்கிரமக்காரர். அவரைச் சும்மா விடுவதா என்று கேட்டால் மக்கள் கொதித்துக் கிளம்பி விடுவார்களே! (நான் உதாரணத்திற்காகத்தான் குறிப்பிடுகிறேன்! தயவுசெய்து. ஆடிசன் பேட்டை ஆறாம் நம்பர் கடைக்காரர் தவறாக எண்ணிவிட வேண்டாம்!)
என் பேச்சைக்கேட்டு நூறுபேர் கிளம்பி அந்த கடை.யைச் சூறையாடப் புகுந்தால், அதனை வேடிக்கை பார்க்கப் பத்தாயிரம் பேராவது கூடுவர். என்ன ஆகும்! கடையில் போலீஸ் வந்து, முதலில் கலகம் விளைவித்தவர்கள் எங்கோ சென்றுவிட, ஆள் தெரியாமல் வேடிக்கை பார்த்தவர்களுள் 500 பேர் கைது செய்யப்படலாம் இந்த நிலைமை ஏற்படுத்துவது என்றும் பெரிதல்ல! பிரமாதமான காரியமும் அல்ல! ஆனால் நானும் சரி, நான் சார்ந்துள்ள கழகமும் சரி எங்கள் சக்தியை என்றும் அழிவுத்துறைக்குப் பயன் படுத்தியதே கிடையாது, இனி என்றும் பயன்படுத்தவும் மாட்டோம்.
ஆனால் நம்மிடம் உள்ள சக்தியைக்கண்டு மற்றவர் கலங்குகின்றனர், பொறாமைப்படுகின்றனர். நம்மீது அர்த்தமற்று மோதுகின்றனர். அவர்கள், நம்மிடம் பெண்ணிடம் உள்ள அமிர்தம் போன்ற விருந்தும் உண்டு என்பதையெண்ணி நம்முடன் நேசத்துடன் நடந்துகொள்ள வேண்டுமே தவிர, பகையுணர்ச்சியுடன் நடந்துகொள்வதும் மிகவும் தவறானதாகும்,
இவ்வளவு சக்தியைப் படைத்துள்ள தி.மு.கழகத்தை மேலும் வளர்த்து, அதற்குக் கட்டுப்பாட்டை உண்டாக்கி, கண்ணியத்தைக் காப்பாற்றி மேலும் மகத்தான சக்தியுள்ளதாக்கிச் சமயம் பார்த்து நாம் சாதிக்கவேண்டிய காரியங்கள் அத்தனையையும் சாதித்தாக வேண்டும் வாளைக் கூர்மையானதாக்க வேண்டும் முதலில்! அதன் பின்னர்தான் குறிப்பார்த்து வீசவேண்டும். குறிபார்த்து வீசுவதற்குமுன் குறி எது என்பதையும் நன்கு தெரிந்து வாளை வீசவேண்டிய இடத்தில் வீசும் திறமையைப் பெற்றாக வேண்டும். அதன் பின்னர் வாளை வீசினால்தான் நாம் நினைத்த பலன், நினைத்தபடி கிடைக்கும், உண்டாகும்.
எனவேதான் நாம் நமது கழகத்தை முதலில் வளர்த்து மேலும் சக்தியுள்ளதாகச் செய்தாக வேண்டும். வாளைக் கூர்மையாக்குவது போல! வாளை வீசவேண்டிய இடம், குறி எது என்பதையும் நன்றாகத்தெரிந்து வைத்துக்கொள்ளவேண்டும். அதே நேரத்தில் வீசுகின்ற முறையுடன்–திறமையுடன் வீசவேண்டும். நாளை வீசுகின்ற வலிவையும் பெற்றாகவேண்டும். இத்தனையும் தெரிந்த பிறகுதான், பெற்றான பின்னர்தான் கூர்வாளானாலும் வீசுவதால் பயன்தரும் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
நமது கழகத்தின் சக்தியைப் பயன்படுத்தி நாம் அடையவேண்டிய பலன்கள் ஏராளமானவை! நமது குறிகள் பலப்பல, எனவேதான் நாம் நமது வாளை மிகவும் கூர்மையானதாக்க வேண்டும். வீசப்படவேண்டிய குறிகள் என்னென்ன என்பதையும், தெரிந்து வீசும் திறமையும், முறையையும், விரிதையும் பெற்று நம்மை வாள் வீசும் தகுதியுடையவர்களாக்கிக்கொள்ள வேண்டுகிறேன்.நாம் வாள் வீசவேண்டிய இடமோ பலப்பல நம் குறிகள் ஒன்றல்ல, இரண்டல்ல அநேகம். நமது இலட்சியங்கள் பலப்பல துறைகளிலும் இருக்கின்றன. பலப்பல துறைகளிலும் நாம் நமது சக்திகளைப் பெருக்க வேண்டும். அப்போதுதான் நாம் நமது இலட்சியங்கள் அனைத்திலும் ஒருங்கே வெற்றிகாண முடியும்.
ஆகவே நாம் பல குறிகளிலும் போரிடத்தக்க கூர் வாட்களைத் தேடுகிறோம். மாபெரும் சக்தி நமது கழகத்திற்குத் தேவைப்படுகிறது. இதற்காகத்தான் நாம் ஒவ்வொரு துறைகளிலும் விதிக்கவேண்டிய காரியங்களுக்காக, அடையவேண்டிய குறிகளுக்காக அங்கங்கே கூர்வாட்களைத் தயாரித்து வருகிறோம்.
சினிமாத்துறையைச் சீர்திருத்த வேண்டுமே, அங்கேயே ஆட்களைத் தயார்செய்கிறோம். வீசப்பட வேண்டிய இடத்திலேயே வாள் தயாரிப்பதைப்போல சினிமாத்துறையில் இருந்தே கே. ஆர். இராமசாமி, என். எஸ். கிருஷ்ணன் எம். ஜீ. ராமச்சந்திரன் போன்ற பலப்பலவாட்கள் தயாரிக்கப்பட்டு, கூர்மையாக்கப்பட்டு வருகின்றன.
இதைப்போலவேதான் கைத்தறித்துணிப் பிரச்சினையா, சேலம் முதலிய கைத்தறியாளர் மிகுந்துள்ள பகுதிகளிலிருந்தே அதற்கேற்ற நல்ல கூர்வாட்கள், திறமைமிக்க உழைப்பாளிகளைக் கண்டெடுத்துப் பயன்படுத்துகிறோம். பிரச்சினைகட்கு நல்ல முடிவு காண்கிறோம்.மடாதிபதிகளை சீர்திருத்த எங்கள் முழக்கம் ஏற்படாமலேயே ஒரு குன்றக்குடி அடிகளார் தயாராகி வருகிறார். நாங்கள் நெருங்கினால் போதும் அவரும் தக்க கூர்வாளாகி விடுவாரே!
நமக்கிருக்கும் குறிகள் பல என்று குறிப்பிட்டேன். நாம் பிரச்சினைத் திருத்தல் வேண்டும், மதமூட நம்பிக்கைகளிலிருந்து அவர்களை மீட்கவேண்டும். சங்கராச்சாரியார், தம்பிரான்போன்ற தத்துவங்கள் இருப்பதைத் தகர்த்தெறிய வேண்டும். சாதி பேதங்களைப் போக்கவேண்டும். உழைக்காமலே பிறர் உழைப்பை உறிஞ்சிடும் ஏற்பாடுகளைத் தொலைக்கவேண்டும். மூட நம்பிக்கைகளை முறியடித்தாக வேண்டும். குருட்டு நம்பிக்கைகளை, பிறப்பால் உயர்வுதாழ்வு கற்பிப்பதை மக்கள் மனதிலிருந்து விரட்டவேண்டும். புராணப் பொய்களைப் போக்கவேண்டும். கலை உலகைச் சீர்திருத்தவேண்டும். வடநாட்டுச் சுரண்டலை ஒழிக்க வேண்டும். இந்த நாட்டு அரசியலைக் கவனிக்க வேண்டும். அதனால் ஏற்படும் அவதிகளை நீக்கவேண்டும். வடநாட்டுப்பிடியிலிருந்து விடுபட்ட திராவிடத்தனியரசு அமைத்தாக வேண்டும்.
நமக்கு இருப்பது இத்தனைக் குறிகள்! நாம் வாள் வீச வேண்டிய இடங்களோ ஏராளம், இதைப்போல! ஆகவே தான் நான் ஏற்கனவே குறிப்பிட்டபடி அத்தனை துறைகளிலும் நாம் கூர்வாட்களை அங்கங்கயே தயாரித்து வருகிறோம், மிக முக்கியமான திராவிடநாட்டுப் பிரிவினையையும், வடநாட்டுச் சுரண்டலையும் நாமே-நமது கழகமே நேரடியாகக் கவனித்து வருகிறது.
இவ்வளவு பிரச்சினைகளையும் நாம் கவனித்து, அவ்வளவு இலட்சியங்களையும் அடைந்தாகவேண்டியிருப்பதால் நாம் பன்னிப்பன்னிப் பேசவேண்டியிருக்கின்றது. ஓயாது உழைக்கவேண்டியவர்களாகிறோம்!
காங்கிரஸ் போன்ற மற்ற கட்சிகளுக்கோ சில குறிப்பிட்ட பிரச்சினைகள்தான், குறிகள்தான், அன்னை பாரத மாதா ஒன்றை வைத்துக்கொண்டே அவர்கள் சுலபமாகப் பேசிவிட்டுப் போய்விடுவார்கள், ஆனால் நாமோ, பல பிரச்சினைகளை விளக்கிப் பாடுபட வேண்டியிருப்பதால் பலமுறையும் பேசுகிறோம். பல மணிநேரமும் பேசித்தீரவேண்டியிருக்கின்றது.
மேடையேறிகளோ ஏதோ நாலுவார்த்தைகள் பேசினால் போதும் என்ற முறைப்படி. நாம் பேசினால் முடியாது, போதவும் போதாது.
ஜஸ்டிஸ் கட்சித்தலைவராகப் பொப்பிலி ராஜா அவர்கள் இருந்தபோது நான் ஆந்திராவில் உள்ள கடப்பைக்குச் சென்றிருந்தேன். அங்கே ஒரு பொதுக்கூட்டத்தில் நான் பேச நேரிட்டது. நான் ஏறக்குறைய ஒன்றரை மணி நேரத்திற்குமேல் பேசினேன். பேசி முடிந்ததும், மேடையிலிருந்த. ஒரு பிரமுகர் எதற்காக இவ்வளவு நேரம் பேசினாய் என்று கேட்டார்.நான் கடப்பைக்கு வந்தது இதுதான் முதல்தடவை. ஆகவே சொல்லவேண்டிய விஷயங்களைச் சிறிது விளக்கமாகவே பேசவேண்டி வந்துவிட்டது என்றேன்.
அதற்கு அந்த ஜஸ்டிஸ் பிரமுகர் அப்படியானால் ஒரு பதினைந்து நிமிடங்கள் பேசினால் போதுமே. எதற்காக அதிக நேரம் பேசி வீணாக உடம்பைக் கெடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.
இப்படிப்பட்ட ஜஸ்டிஸ் கட்சியில்தான் நான் வளர்ந்தவன். ஆனால் இப்படி இருந்ததால்தான் இடையில் நீதிக்கட்சி மறைய நேரிட்டது என்பதையும் நன்கு உணர்ந்தவன்தான்!
ஆகவேதான் நான் எந்தப்பிரச்சினையைப்பற்றிப் பேசினாலும் சிறிது விளக்கமாகவே பேசுவேன். மற்றவர்களும் பேசவேண்டுமென்று விரும்புகிறேன். அப்படிப்பேசினால் தான் நாம் விளக்க விரும்பும் அத்தனை பிரச்சினைகளையும் பற்றிப்பேச முடியும். கேட்பவர்களுக்கும் நன்கு விளங்கும்.
நாட்டில் இன்று இவ்வளவு மகத்தான பல பிரச்சினைகளையும் ஒருசேரக் கவனிக்கும் கட்சி நாம்தான்–தி. மு.க. ஒன்றே ஒன்றுதான்.
காங்கிரஸ் கட்சி அன்னை, மாதா பிதாவுடன் நின்று விடுகிறது. கம்யூனிஸ்டுக் கட்சிக்கோ, ஏழை–பணக்காரன் பிரச்சினையே பெரிய பிரச்சினையாகிவிட்டிருக்கிறது. பிரஜா சோஷலிஸ்டுகள் வேறுவிதம், இப்படி ஒவ்வொரு கட்சிக்கும் சில குறிப்பிட்ட குறிகள்தான் உள்ளன. ஆனால் நமக்கோ பலப்பல குறிகள்!
நாம் மற்ற கட்சிகள் ஒதுக்கித்தள்ளிய, கவனிக்க மறுக்கின்ற பந்து விட்டுவிடுகின்ற, அலட்சியம் செய்கின்ற அத்தனை துறைகளையும் சேர்த்துக் கவனிக்கிறோம். எனவே தான் நாம் மிகவும் விளக்கமாகப் பேசுகிறோம். பலநாளும் பேசுகிறோம்.
சமுதாயச் சீரழிவுகளைப்பற்றிப் பேசுவதற்கு இன்று தி.மு.கழகந்தானே இருக்கின்றது? மதமூட நம்பிக்கைகளைப்போக்கப் பாடுபடுகின்றவர்களும் நாம்தான்! மக்கள் ஒற்றுமையாகவாழஅடிப்படையான கருத்துக்களைப்பரப்பி வருகின்றவர்களும் நாமேதான். ஜாதிபேதங்கள் ஒழிய வேண்டும் என்று மற்ற கட்சிக்காரர்கள் வெளிப்படையாகப் பேசுவதே கிடையாது.
இப்படிப்பட்ட கட்சிகள் பயந்து ஒதுக்கிவிட்ட பிரச்சினைபற்றிக் கவலைப்படுகின்றவர்கள் நாம்தான், இப்படிப்பட்ட விஷயங்களில் தலையிட்டால் தங்களுக்குச் சுலபமாக செல்வாக்குக் கிடைக்காது என்பது மட்டுமல்ல, தங்களுக்கு ஏற்கனவே இருக்கின்ற செல்வாக்கும் அறவே போய்விடுமென்று மற்ற கட்சிகள் அஞ்சி நடுங்குகின்றன.
மற்றவர்கள் அஞ்சி நடுங்கிடும் கருத்துக்களைத் துணிவுடன் நாம்தான் எடுத்துப்பேசி வருகிறோம். மக்களிடையே பரப்பியும் வருகிறோம்.ஆகவே அடுத்த மாநாட்டில் பேசப்படும் விஷயங்களைக் கேட்பவர்கள் மிகவும் பொறுப்போடு கேட்க வேண்டும். மறுநாள் அதைப்பற்றி எழும் சந்தேகங்களையும் கேட்டு விளக்கம் பெறவேண்டும்.
எவருமே கேட்கவில்லை என்றால், அடுத்த மாநாட்டில் வேண்டுமென்றே தப்புத் தவறுமாகச் சிலவற்றை வேண்டுமென்றே பேசி வைத்து, மறுநாள் அவற்றைக் கவனித்துக்கேள்வி கேட்கிறீர்களா என்பதையும் கவனிப்போம்.
பேசுகின்ற பேச்சாளிக்கும் பேச்சைக் கேட்கின்ற மக்களுக்கும் தொடர்பு இருக்கவேண்டும். அப்போதுதான் பேசுகின்றவர்களுக்கும் சரி, கேட்கின்றவர்களுக்கும் சரிபொறுப்பு இருக்கும்.
எனவே இரு நாட்களிலும் நீங்கள் கேட்ட பல விஷயங்களையும் நன்கு சிந்தித்துப்பார்த்து மற்றவர்களிடமும் அதைப்பற்றி பேசவேண்டும், பரப்பவும் வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்துகிறேன்.
திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பற்றி மக்களிடையே சில தவறான கருத்துக்களைச் சிலர் பரப்பி வருவதாகத் தெரிகிறது. அதைப்பற்றி சிறிது விளக்கக் கருதுகிறேன்.
கம்யூனிஸ்டுகள் சிலர் இன்றைய முதன்மந்திரி காமராஜருடன் நாம் ஏதோ ஒப்பந்தம் செய்துகொண்டு மக்களைக் காங்கிரஸ் ஆட்சிக்குக் காட்டிக்கொடுப்பதாகப் பேசி வருகின்றனர்.ஆகவேதான் நாம் மிகவும் அதிகமாகப் பேசவேண்டியிருக்கிறது. அதிகமாக உழைக்க வேண்டியுமுள்ளது.
இரு நாட்களாக நடைபெறும் இந்த மாநாட்டில் பல தோழர்கள் பேசியதைக்கேட்டதோடு கேட்டவர்களுடைய கடமை தீர்ந்துவிட்டதாக நினைக்கக்கூடாது. கேட்ட விஷயங்களைப்பற்றி நன்கு சிந்திக்கவேண்டும். சிந்தித்து முடிவு கண்ட நல்ல விஷயங்களை பிறரிடம் எடுத்துக்கூறி விளக்கவேண்டும். இப்படிச் செய்தால்தான் இங்கே மாநாடு நடந்ததற்கும், அதில் பலர் சொற்பொழிவாற்றியதைக் கேட்டதற்கும் ஏதாவது அர்த்தமேற்படும். பொருத்தமும் இருக்கும்.
இனி நடக்கும் மாநாடுகளில் இதற்காகவே ஒரு புதுமுறையை ஏற்படுத்தலாமென்று எண்ணுகிறேன். அடுத்த மாநாட்டிலிருந்தே முதள் நாள் பேசப்படும் சொற்பொழிவுகளைப்பற்றி மறுநாள் கேள்வி–பதில் என்று ஒரு பகுதியை ஏற்பாடு செய்யலாம் என்றும் கருதுகிறேன்.
முதல்நாள் பேசப்படும் விஷயங்களைப்பற்றி மறுநாள் முதல்நாள் பேச்சுக்களைக் கேட்டவர்கள் தங்களுக்கு உள்ள சந்தேகங்களைப்பற்றிய கேள்விகளைக் கேட்கவேண்டும், அப்படிக் கேட்கப்படும் கேள்விகளுக்குச் சம்பந்தப்பட்ட பேச்சாளிகளே பதில் கூறவேண்டும் என்ற முறை ஏற்படுத்தப்படும்
இப்படிச் செய்தால்தான் பேசுகின்ற பேச்சாளிகள் தெளிவோடு பேசுவார்கள் என்பது மட்டுமல்ல, கேட்பவர்களும் பொறுப்போடு கேட்பார்கள்.அதிலும் காமராஜர் என்னைக்கூப்பிட்டு அறையில் உட்கார வைத்துக்கொண்டு கையிலிருந்த பிஸ்டலைக் காட்டிப் பயமுறுத்தினாராம். இதோ பார் அண்ணாதுரை என் கையிலிருக்கும் துப்பாக்கியைப் பார்த்தாயா? நீ என்னை ஆதரிக்கவேண்டும். அப்படி ஆதரிக்காவிட்டால், உன்னை வேலூர் சிறையில்போட்டு அடைத்துவிடுவேன் என்று காமராஜர் என்னை மிரட்டியதாகவும், அதைக்கேட்டு நான் பயந்து காமராஜரை நானும் தி. மு. கழகமும் ஆதரிக்க ஒப்பியதாகவும் கம்யூனிஸ்டுகள் மக்களிடையே பிரச்சாரம் செய்து வருகிறார்களாம்.
இந்தப் பிரச்சாரம் மிகமிகப் பொய்யானதாகும். மக்களிடம் எதைக் கூறினால் பிடிக்கும்? சுலபத்தில் நம்புவார்கள் என்பதைத் தெரிந்துவைத்துள்ள கம்யூனிஸ்டுகள் இப்படிப்பட்ட பொய்யான செய்திகளையும் மக்கள் நம்புவர் என்று கருதிப் பேசி வருகிறார்கள் போலும்!
கெட்டதைக்கூறி, பொய்யான தகவல்களைப் பிரச்சாரம் செய்து மக்களை மயக்க நினைப்பது மிகவும் தவறானதாகும். இதனைக் கம்யூனிஸ்டுகள் செய்து வருவதானது மிகமிக முறைகெட்ட செயல் என்பதுமட்டுமல்ல பொருத்தமற்றதாகவும் காணப்படுகிறது.
கம்யூனிஸ்டுகள் செய்து வருகின்ற பிரச்சாரத்தின்படியே பார்த்தாலுங்கூட அவர்கள் பேச்சு எவ்வளவு அர்த்தமற்றதென்பதும், பொருத்தமில்லாதது என்பதும் நன்கு விளங்கும்.முதலாவதாக காமராஜரை நான் ஆதரிப்பதாக ஒப்புக்கொண்டதாகவும், அதன்பின்னர் நான் பொதுச் செயலாளனாகப் பணியாற்றி வருகின்ற தி. மு. கழகத்தையும் அவரை ஆதரிக்கும்படி செய்வதாக உறுதி கூறி அதன்படி தி. மு கழகமும் காமராஜரை ஆதரித்து வருவதாகவும் கூறி வருகிறார்கள்!
இது எவ்வளவு பொருத்தமற்றது என்பதுடன் ஒருசிறிதும் நடக்க முடியாதது என்பதையும் நாடு நன்கு அறியுமே!
ஆறு ஆண்டுகளாக என்னை பொதுச்செயலாளராகக்கொண்டு நல்ல முறையில் வளர்ந்துள்ள தி. மு. கழகம், வெறும் ஆட்டுமந்தையல்ல, திடீரென்று இன்றைக்கு காமராஜர் பின்னே ஓடுவதற்கு. அப்படிப்பட்ட நிலைமையில் கழகமும் இல்லை. கழகத்திலுள்ள எனது தம்பிமார்கள் இருக்கவில்லை,
தப்பித்தவறி நானே காமராஜரை ஆதரிக்கும்படி கூறினாலும் என்னுடைய தம்பிமார்களில் யாரும் கண்மூடிக்கொண்டு காமராஜரை ஆதரிக்க முன்வரவே மாட்டார்கள் என்பது மிகவும் உறுதியானதாகும்.
அண்ணாதுரையே கூறினாலும் எந்தத் தம்பியும் அப்படிப்பட்ட இழிசெயலுக்கு உடன்படவே மாட்டான். அண்ணா சொன்னதும் எந்தப்பக்கம் போகவேண்டும், கண்ணைத் திறந்துகொண்டா, கண்ணை மூடிக்கொண்டா, எப்படிப்போகவேண்டும்என்றோ, கையை நீட்டிக்கொண்டா, மடக்கிக்கொண்டா எப்படிச் செல்வது என்றோ எந்தத் தம்பியும் கேட்கமாட்டான்.
அப்படிக் கேட்டால் இத்தனை நாள் என்னிடம் அவர்கள் கேட்ட பாடத்தை மறந்தவர்கன் என்பதுமட்டுமல்ல, பாடத்தையே சரியாகக் கேட்டுக்கொள்ளாதவர்கள், கருத்துடன் கவனிக்கத் தவறியவர்கள் என்றுதான் பொருள்படும், ஆனால் இன்று எந்தத் தம்பியும் சரி அல்லது நானும் சரி கண்ணை மூடிக்கொண்டு எதையும் செய்யவோ ஒரு சிறிதும் தயாராக இல்லை.
அப்படி நாம் இருந்தோம் ஒரு காலத்தில். அப்படி இருந்த இடம் வேறு! அது ஒரு காலம்! அந்தக் காலம் இப்போது இல்லை. நாம் இருக்கும் இடமே வேறு. இப்போது இங்கே ஜனநாயகப் பண்பு பூத்துக் குலுங்குகிறது. அனைவரின் எண்ணங்களும், ஒன்று திரண்டு கூட்டு முயற்சியாகத்தான் எதுவும் செய்யப்படுகின்றது. எனவே நான் சொல்வதையும் கேட்டு தி. மு. கழகம் எவர் பின்னும் ஓடவே ஓடாது என்பது திண்ணம்.
அடுத்து கம்யூனிஸ்டுகள் கூற்றுப்படி காமராஜர் பிஸ்டலைக் காட்டி மிரட்டி, வேலூர் சிறையிலடைப்பதாகக் கூறினாராம். துப்பாக்கி வைத்திருப்பவர், சுட்டுவிடுவேன் என்று கூறாமல், சிறையிலடைப்பேன் என்று கூறினாராம். இந்தப் பேச்சும் பொருத்தமற்ற பேச்சுத்தான் என்பது தெரிகிறதே!மிரட்டுகின்ற பாம்பு கடித்து விடுவேன் என்றுதானே கூறும். அதைவிட்டு என் சொற்படி நீ கேட்காவிட்டால் அடுத்த குளத்தில் உள்ள தவளையை விட்டுக் கடிக்கச் சொல்லுவேன் என்றா கூறும்? கூறாதே! நாடகத்திலே வரும் பாம்புகூட அப்படிப்பேசாது.
இதைப்போல தானே, துப்பாக்கியைக் காட்டிப் பயமுறுத்திய காமராஜர் என்னைச் சுட்டுவிடுவார் என்று கூறாமல் வேலூர் ஜெயிலில் அடைப்பதாகக் கூறியதாகக் கம்யூனிஸ்டுகள் கட்டிவிடுகின்ற கதையும் இருக்கின்றது.
கம்யூனிஸ்டு மக்களுக்குப் பிரியமானதாக எதையாவது கூறித் தங்களுக்கு ஆதரவுதேட இப்படிப்பட்ட கட்டுக் கதைகளையும், பொறுப்பற்ற பழிகளையும் பேசிப் பரப்பி வருவது அரசியல் நேர்மையல்ல கண்ணியமுமல்ல என்பதைத்தான் எடுத்துக்காட்டவேண்டியிருக்கிறது.
தி.மு.கழகம் யாரைக்கண்டும் மயங்கிவிடாது. எவர் மிரட்டலுக்கும் எந்த விதத்திலும் அடிபணிந்து விடாது என்பதைத் திட்டவட்டமாக அறிவித்துவிடுகிறேன்.
கடந்த பத்து நாட்களுக்கு முன்னர்கூட தினமணி பத்திரிகையில் ஒரு கார்ட்டூன் போடப்பட்டிருந்தது. அதில் காமராஜர் தனது நான்கு பாக்கெட்டுகளில் நான்கு கட்சிகளைப் போட்டுக்கொண்டு இருப்பதைப் போலத் தீட்டப்பட்டிருந்தது. எதிரில் கம்யூனிஸ்டுக்கட்சி நிறுத்தப்பட்டிருக்கிறது. கீழே காமராஜர் கம்யூனிஸ்டுகளை எதிர்க்க மற்ற கட்சிகளை ஒன்று சேரும்படி வேண்டுகோள் விடுத்தார் என்ற செய்தியும் போட்டிருந்தது.
இந்தக் கார்ட்டூன், காமராஜருக்குச் சாதகமானதல்ல! மற்ற கட்சிகளைத் தம் பாக்கெட்டுக்குள் போட்டுக்கொண்டாலும் எவராலும் நிம்மதியாக இருக்கமுடியாதே! ஒவ்வொருவரும் தத்தம் பிரச்சினைகளுக்காகத்தானே பாடுபடுவர்! அது காமராஜருக்கு நிம்மதியையா தரும்? தராது!
மேலும் வடநாட்டில் காமராஜர் மற்ற வகுப்புவாதக் கட்சிகளுடன் கூட்டுறவு கொண்டிருந்ததாகக் காண்பித்து காமராஜரைப்பற்றிய தவறான எண்ணத்தை ஏற்படுத்தவே இந்தக் கார்ட்டூன் பயன்படும். அதற்காகத்தான இது போடப்பட்டிருக்கக்கூடும் என்று கருதுகிறேன்.
அதோடு ஒரு பாக்கெட்டு சட்டையைப்போடும் காமராஜருக்கு நான்கு பாக்கெட்டுகளைப்போட்டு நான்கு கட்சிகளை அடைத்திருப்பதாகப் போட்டிருக்கிறார்கள்! இதுவும் பொருத்தமற்றதே. அப்படிப் பார்த்தால் இரண்டு பாக்கெட்டுகளைக் கொண்ட சட்டைபோடும் நாங்கள் எட்டு பாக்கெட்டுகளில் எட்டு கட்சிகளை அடைத்துக் கொள்வதாகப் படம்போட்டுக்கொள்ள முடியுமே!
நாங்கள் காமராஜரை எந்தவிதத்திலும் இப்போது ஆதரிக்கவில்லை என்பதைத் தீர்மானமாகத் தெரிவித்து விடுகிறேன், அப்படியானால் காமராஜரைக் கண்டிக்கிறீர்களா என்று கேட்டால் அதுவும் இல்லை, நாங்கள் காமராஜரை ஆதரிக்கவும் இல்லை. அதைப் போலவே கண்டிக்கவும் இல்லை. இதுதான் காமராஜர் ஆட்சியைப் பொறுத்தவரைக்கும் எங்களுடைய இப்போதைய கொள்கை என்பதை அனைவரும் மிகவும் தெளிவாகவும் தெரிந்துகொள்ள வேண்டுகிறேன்.
ஆதரிக்கவில்லை யென்றால், கண்டிப்பதாக வேண்டும் என்ற கட்டாயம் என்றும் கிடையாது. எதிர்த்த வீட்டுப் பெண்ணிடம் உனக்குக் காதலா? என்று கேட்டால் இல்லை என்று கூறினால், பகையோ என்று கேட்டால் அதுவும் இல்லையென்று பதில் சொல்வதைப் போலத்தான் இதுவும்,
எதிர்த்தவீட்டுப்பெண்ணிடம் காதல் இல்லையென்றால், விரோதம் இருந்தாக வேண்டுமா என்ன? அப்படியொன்றும் விதிகிடையாது. காதலும் இல்லை என்பன போன்றே எந்தவிதமான விரோதமும் இல்லை என்ற உள்ள நிலையைத் தான் கூறமுடியும்!
காமராஜர் ஆட்சி எங்கள் கழகத்தைப் பொறுத்தவரை ஒரு எழுதப்படாத காகிதம்! அவரை ஆதரிப்பதும் அல்லது கண்டிப்பதும் எதிர்காலத்தில் அவரது ஆட்சியின் போக்கைப் பொருத்துத்தான் எழுதப்படும். முடிவு செய்யப்படும்.
காமராஜர் நாளையே ஒரு தீதான திட்டத்தைக் கொண்டு வந்தால் அவரைக் கண்டித்தே தீருவோம். அதைப் போலவே அவர் திராவிட நாட்டுப் பிரச்சினையை ஆதரிக்க முன் வந்தால் எங்கள் முதல் நண்பராகிவிடுவார்.எனவே காலப்போக்கில் காமராஜர் ஆட்சி முறையின் நன்மை தீமைகளைப் பொறுத்துத்தான் நாங்கள் அவரை ஆதரிப்பதும் அல்லது கண்டிப்பதும் தெரியமுடியும், முடிவாகும் அப்போதுதான் அவரைப்பற்றி தெளிவான குறிப்பு எங்களால் எழுதமுடியும். இதுவரை காமராஜர் பக்கம் எழுதப்படாத காகிதமாகத்தான் இருக்கும். இதைப்பற்றி பேரம்பேசி யாரும் எந்தவிதமான குழப்பமும் ஏற்படுத்திக் கொள்ளவேண்டாமென்று மீண்டும் கேட்டுக்கொள்கிறேன்.
திராவிட முன்னேற்றக் கழகம் மதத்தை அழித்து விடுவதற்காகவே தோன்றியிருப்பதாக மதவாதிகள் கருதுகிறார்கள் – கலக்கமடைகிறார்கள்.
உண்மையான மதவாதியின் இலட்சணம், தன்னுடைய மதத்தில் உள்ள நல்ல கொள்கையைப் பற்றித்தானே எடுத்துப் பேசவேண்டும். மதம் மக்களுக்குச் செய்கின்ற நன்மைகளைத்தானே அதிகம் எடுத்துக்காட்ட வேண்டும். ஆனால் இன்றுள்ள மதத்தலைவர்களும் மதவாதிகளும் தங்கள் மதத்தின் பெருமையைப்பற்றியும், அதிலுள்ள நல்ல கொள்கைகளைப் பற்றியும் பேசுவதைவிட நம்மைப்பற்றித்தான் அதிகமாகப் பேசி வருகிறார்கள்!
தங்கள் மதத்திலே இன்ன நல்லது இருக்கிறது, என்பதைப்பற்றிப்பேச மறந்தாலும் மறப்பார்களே தவிர, மதத்தை அழிக்க வந்துள்ள மாபாவிகள் என்று நம்மை ஏசுவதை எப்போதும் மறக்கவே மாட்டார்கள்.மதவாதிகள் பெரும்பாலும் தங்கள் மதத்தைப்பற்றிய விளக்கங்கள் கூறுவதை அறவே விட்டொழித்துவிட்டு, மதத்தை அவன் கெடுக்கிறான். இவன் மதத்தின் மீது குறை கூறுகிறான். அந்தக் கழகம் மதத்தின்மீது மாசு கற்பிக்கிறது. ஆகவே மக்கள் மதத்தைக் காப்பாற்ற வாரீர் என்று மத விரோதிகளைக் காட்டி, மதத்திற்கு ஆதரவு தேடுவதையே பெரிய காரியமாகக்கொண்டு விட்டிருக்கின்றனர்.
மதங்களை பூண்டோடு களைந்து எறிந்துவிடவேண்டுமென்று நாங்கள் ஒருபோதும் இருக்கவேயில்லை. ஆனால் மதம் என்ற பெயரால் மக்களை மடமையில் தள்ளிவிடும் மதக்கருத்துக்களை எப்போதும் கண்டித்தே தீருவோம். மக்களை மிரட்டவும், மருட்டவும், மதம் பயன்பட்டால்! பயன்படுத்தப்பட்டால் அதனை நாங்கள் எப்படிக் கண்டிக்காமலிருக்கமுடியும்?
மதம் மக்களுக்குப் பயன்பட்டால், மக்களை மக்களாகவே வாழ வழிவகுத்தால், அந்த மதத்தை நாங்கள் மனதாரப் பாராட்டுவோம். ஆனால் மக்களை அறியாமை இருளில் ஆழ்த்தி, மூட நம்பிக்கைகளில் வீழ்த்தி, வறுமையில் உழலும்படி செய்கின்ற எந்த மதத்தையும் எங்களால் ஆதரிக்கத்தான் முடியாது. ஆதரிக்க முடியாது. என்பதுமட்டுமல்ல, அப்படிப்பட்ட மதக்கருத்துக்களை மக்கள் மனதிலிருந்தும் அடியோடு நீக்கி அறிவொளி பரப்பிட எங்கள் கழகம் என்றும் தயாராக இருக்கின்றது.அறிவுத்துறையில் நாம் செய்துவருகின்ற சீர்திருத்தங்கள்தான் மதக்கருத்துக்களை நாம் எதிர்ப்பதாகக் கூறப்படுவதற்குக் காரணமாகும். மக்கள் அறிவுத்துறையில் முன்னேறவேண்டுமானால், முதலில் சமுதாயம் சீர்திருந்தியாகவேண்டும். இதற்கான சீர்திருத்தப்பணி, சுயமரியாதைப் பிரச்சாரம் நிச்சயமாக மேலும் தொடர்ந்து நடந்தே வரும். நடத்தப்பட்டே தீரவேண்டும்.
ஆகவேதான் தி. மு. கழகம் சமுதாயத்துறை சீர்திருந்த வேண்டுமென்பதிலே அதிக அக்கரை காட்டி வருகிறது. அடிப்படையான வேலையாகவும் அதனைக் கொண்டுள்ளது. நேற்று நடைபெற்ற சமூக சீர்த்திருத்த மாநாட்டிலே. மாநாட்டுத் தலைவர் கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் அவர்களும், மற்ற தோழர்களும் சமூக சீர்திருத்தம் பற்றி மிகத் தெளிவாகப் பேசினார்கள், பல அரிய கருத்துக்களைத் தங்கள் சொற்பொழிவின்மூலம் விளக்கினார்கள்.
கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் அவர்கள் தமது தலைமை உரையில் சீர்திருத்தம் போதுமான அளவு இல்லையென்று குறிப்பிட்டார். அவர் இவ்வாறு குறிப்பிட்டதற்குக் காரணம் மேலும் சீர்திருத்தத்துறையில் நல்ல ஆர்வம் செலுத்தவேண்டுமென்ற நல்ல கருத்தோடுதான் என்பதை அனைவரும் உணர்ந்து மேலும் ஊக்கத்துடன் அத்துறையில் பாடுபட வேண்டுகிறேன்.
சுயமரியாதை இயக்கம் கடந்த இருபத்தைந்து ஆண்டு காலமாக நாட்டில் சீர்திருத்தப் பிரச்சாரம் செய்து வருகிறது. பகுத்தறிவு பணிபுரிந்து வருகின்றது. நாம் செய்து வரும் சுயமரியாதைப் பிரச்சாரம் பலன் தராது போகவில்லை. பகுத்தறிவுப் பணியினால் பயன் ஏற்படாதும் போய்விடவில்லை.
சுயமரியாதைப் பிரச்சாரம் நல்ல பயன் தந்துள்ளது, பகுத்தறிவுப் பணி குறிப்பிடத்தக்க பயனைத்தந்துதான் இருக்கின்றது. இதனை மறுத்துக்கூற எவராலும் முடியாது.
பொதுப்படையாகவே பார்த்தாலுங்கூட நமது சு.ம பிரச்சாரப் பணியின் பயனாக நாட்டில் ஏற்பட்டுள்ள மகத்தான பகுத்தறிவு மாறுதல்களைக் காணமுடியும்!
கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் புதிதாகக் கட்டப்பட்ட கோயில்கள் எத்தனை? பள்ளிகள் எத்தனை? என்பதைக் கணக்கிட்டுப் பாருங்கள்! அதைப்போலவே எத்தனை சத்திரங்கள் கட்டப்பட்டன, சாவடிகள் ஏற்படுத்தப்பட்டன. அதே நேரத்தில் எத்தனை ஆஸ்பத்திரிகள் கட்டப்பட்டன என்பதையும் ஒப்பிட்டுப்பாருங்கள். எத்தனை சமாராதனைகள் நடத்தப்பட்டன என்பதையும் குறித்து, அவற்றுடன் எத்தனை பிரசவவிடுதிகள் ஏற்படுத்தப்பட்டன என்பதையும் குறித்துப் பார்க்கவேண்டுகிறேன். எத்தனை பஜனை மடங்கள் புதிதாக ஏற்பட்டன என்பதோடு எத்தனை நூல் நிலையங்கள் உண்டாகியிருக்கின்றன என்பதையும் எண்ணிப்பார்க்கும்படி கேட்டுக்கொள்ளுகிறேன். எத்தனை திருவிழாக்கள் புதிதாக நடத்தப்பட்டன என்பதையும் நோக்குங்கள். அத்துடன் எத்தனை கண்காட்சிகள் நடத்தப்பட்டன என்பதையும் கருதுங்கள்.
இப்படி இரண்டு வகைகளையும் கணக்கிட்டுப்பார்த்து இதற்கு முன்னர் இருந்த நிலைமைக்கும் இப்போதுள்ள நிலைமைக்கும், உள்ள வித்தியாசங்களைப் பார்த்தாலே தெரியுமே! சுயமரியாதை இயக்கத்தின் பிரச்சாரத்தால் ஏற்பட்டுள்ள பலன் எவ்வளவு மகத்தானது என்பது! இதிலிருந்து விளங்குமே நாம் வெற்றி பெற்றுத்தான் உள்ளோம் என்பது.
ஆகவே நாம் நமது பணியினால் ஒன்றும் சாதித்துவிடவில்லை யென்று யாரும் கருதத்தேவையில்லை. அப்படி எவராலும் கூறவும் முடியவே முடியாது என்பது உறுதியாகும்
நமது சுயமரியாதைப் பிரச்சாரத்தினால் மக்களிடையே மகத்தான மனமாறுதல் நிச்சயமாக ஏற்பட்டுள்ளது சமூகத்துறையில் மக்கள் எவ்வளவோ சீர்திருத்தமடைந்து தான் வருகிறார்கள். மக்களிடம் பெருகிக்கிடந்த மதமூட நம்பிக்கைகள் குறிப்பிடத்தக்க அளவு குறைந்து வந்துள்ளதென்பதை மறுப்பவர் யார்? எவரும் இல்லையே!
கோவில்களுக்கும், திருவிழாக்களுக்குமே பணத்தைச் செலவிட்டுவந்த மக்கள், இன்று பள்ளிகளுக்கும் ஆஸ்பத்திரிகளுக்குமே பணத்தைச் செலவிடும் அளவுக்கு மனமாறுதல் அடைந்துள்ளது யாரால்? நம்முடைய சுயமரியாதைப் பணிதானே, பிரச்சாரந்தானே இதற்குக் காரணம்? வேறு என்ன?சில நாட்களுக்கு முன்னர் பத்திரிகைகளிலே போடப்பட்டிருந்த ஒரு விளம்பரத்தைப் பார்த்திருக்கலாம், நீங்கள் திருவண்ணாமலை தேவஸ்தானத்திற்கு நாள் ஒன்றுக்கு அர்ச்சனை ஆராதனை முதலிய செலவுகளுக்காக ரூபாய் ஐம்பது தேவைப்படுகிறதாம். அந்தக்கோயில் வருமானம் இப்போது குறைந்துவிட்டதால் இந்த தினசரி செலவான ரூ. 50ஐ ஈடு செய்யமுடியவில்லை. ஆகவே பக்தர்கள் யாராவது தினம் தினம் கோயில் கைங்கர்யம் நிறைவேற ரூபாய் ஐம்பது வீதம் அனுப்பி உதவவேண்டுமாம். இப்படி திருவண்ணாமலை கோவில் தர்மகர்த்தா பத்திரிகைகளில் விளம்பரம் செய்திருந்தார்.
இந்த விளம்பரத்தைப் பார்த்துவிட்டு அல்லது பார்க்கத்தவறி, இப்பொழுது நான் கூறியதற்குப் பிறகு கூட கோயிலுக்கு பணம் அனுப்புகின்ற பக்தர்கள் இரண்டொருவர் இதே காஞ்சிபுரத்தில்கூட இருக்கக்கூடும்.
ஆனால் நான் குறிப்பிடுவது வேறு! கோயில்களின் அன்றாட செலவுக்குப் பத்திரிகையில் விளம்பரம் போட்டா இதுவரை பக்தர்களிடமிருந்து காணிக்கை பெற்றனர்! கிடையாதே!
முன்பெல்லாம் கோயில்களுக்குப் பணம் பெற்ற முறையே வேறுதானே! ஒருநாள் அதிகாலையில் கோயில் அர்ச்சகர் ஊரில் உள்ள பணக்காரர் வீட்டுக்கு வருவார். அல்லது தமது வீட்டுக்கே கூப்பிட்டு அனுப்புவார், அப்படிப் பார்க்கின்ற பக்தரை நோக்கி அர்ச்சகர் கூறுவார், இரவு கடவுள் என் கனவில் தோன்றி 'அடே இந்த ஊரில் என்னடா அக்ரமம் நடக்கிறது! எனது மேலைவாசல் ஒரு பக்கம் சரிந்திருப்பது உன் கண்ணில் படவில்லையா?' என்று கேட்டார். நான் உடனே பணிந்து 'அடியேன் என்ன செய்யக்கடவேன் ஏழைநான்' என்று கூறினேன். எம்பெருமான் உடனே அடே 'கோடிவீட்டுத் தணிகாசல முதலி இருக்கிறானே, அவன் மகாதர்மிஷ்டன், அவனிடம் போ! நம் எண்ணம் ஈடேறும்' என்று உரைத்தார். உடனே உன்னிடம் ஓடிவந்தேன்! என்று கோயில் அர்ச்சகர் தர்மவான் தணிகாசல முதலியாரிடம் கூற உடனே கோபுரம் சரியாக்கப்பட்டு, கும்பாபிஷேகம் முதல் எல்லா சத்காரியங்களும் அர்ச்சகர் கூறுகின்றபடி நடந்தேறிவிடும்.
இப்படித்தான் அந்தக்காலங்களில் எல்லாம் கோயில் காரியங்களுக்கு மிகச்சுலபமான முறையில் சொத்துக்கள் சேர்க்கப்பட்டன!
ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது என்பது தினம் ரூ. 50 தேவையென்று திருவண்ணாமலை கோயில் தர்மகர்த்தா பத்திரிகையில் விளம்பரம் போட்டு பணம் தேடுவதிலேயே தெரிகிறதே!
முன்பெல்லாம் கோயில் காரியத்திற்கு மக்கள் தேடிக் கொண்டுபோய், தாமாகவே பணத்தைக் கொடுத்தனர். ஆனால் இன்று கோயில் செலவுக்குப் பணம் கேட்டுப் பத்திரிகையில் விளம்பரம் போடவேண்டிய நிலைமையல்லவா ஏற்பட்டுவிட்டிருக்கிறது!மக்களிடையே ஏற்பட்டுள்ள இந்த மனமாறுதலுக்கும், நாம் கடந்த இருபத்தைந்து வருடங்களாகச் செய்து வந்த சுயமரியாதைப் பணியேதான் முக்கிய காரணமாகும்!
இதனை நான் கர்வத்திற்காகக் கூறவில்லை. இந்த மாறுதல் சுயமரியாதைஇயக்கத்தின் வெற்றி என்பது மட்டுமல்ல இது காலத்தின் குறி என்பதையும் நாம் உணரவேண்டும். காலக்குறி கருத்து மாற்றத்தைத் தெளிவாகக் காட்டுகிறது என்பதைத்தான் நாம் தெரிந்துகொள்ளவேண்டும்.
நேற்று காலையில் தோழர் டி. கே. சீனிவாசன் அருள் நெறி இயக்கத்தைப்பற்றிக் குறிப்பிட்டார். அந்த இயக்கத்தை நடத்துகின்ற குன்றக்குடி அடிகளாரும் ஒரு மதத்தலைவர்தான். ஆனால் முன்காலத்தில் இருந்த மடாதிபதிகளைப்போலன்றி அவர் மக்களிடம் நேரில் சென்று பழகி மதப்பிரச்சாரம் செய்கிறாராம். இந்த அளவுக்காவது மாறுதல் ஏற்படவும் நாம்தான் காரணம்.
இதைப்போலவேதான் இந்தக் காஞ்சிபுரம் பச்சையப்பன் பள்ளி ஆசிரியர் திரு. வச்சிரவேலு முதலியார் அவர்கள், இன்று இங்கிருந்து தருமபுரம் ஆதினத்திற்குச் சென்றதும், நேரே மடாதிபதி வரவேற்று உட்காரவைத்து 'காரைக்காலம்மையார் புராணமோ, 'மற்ற எந்தப் புராணத்தையோ பேசுவதற்காக ரூபாய் ஐநூறு என்ற முறையில் பணம் தருவதற்கும் யார் காரணம்? நாமே தான்.மக்களையே நேரில் பார்க்க மறுத்த மடாதிபதிகள் மனம்மாறி இன்று தமிழ்ப்பற்று என்று பேசுவதும், தமிழ்ப்பற்று பேசுவதால் தமிழ்ப்பண்டிதர்களை ஆதரிப்பதற்கும் நமது சுயமரியாதைக் கணைகள்தான் முக்கிய தூண்டுகோலாகும்!
இன்று எத்தனையோ மடாதிபதிகள் பள்ளிகள் கட்டுகிறார்கள். ஆஸ்பத்திரிகளுக்கு நன்கொடை தருகிறார்கள். சமீபத்தில்கூட ஒரு மடாதிபதி ஒரு பிரசவ விடுதியைக் கட்டித் திறந்ததாகப் பத்திரிகைகளிலே செய்தி வந்ததே!
முன்பெல்லாம் இப்படியா நடந்தது? மக்களிடமிருந்துதான் மடாதிபதியின் காணிக்கைகளைப் பெற்றார்களே தவிர, மக்களுக்காக எந்த மடாதிபதியும் எதையும் செய்யவில்லையே! இன்று ஏன் இந்த மாற்றம் ஏற்பட்டது? இதற்கெல்லாம் நம்முடைய சீர்திருத்தப்பணியும் பிரச்சாரமுந்தான் முக்கியமான அடிப்படைக் காரணங்களாகும்.
ஒரு ஆண் ஒரு மனைவியைத்தான் மணக்கவேண்டும் என்று நாம்தான் நாட்டின் மனமான பிரச்சாரம் செய்து வந்தோம். இன்று நாம் அறிவித்தபடி சட்டம் இயற்றப்பட்டுவிட்டது.
ஒரு மனைவியிருக்கும்போது மற்றொருபெண்ணை மணப்பது இன்று கிரிமினல் சட்டப்படி குற்றமாகும். அப்படிச் செய்தால் பெண்ணை மணக்கும் ஆணுக்கும், பெண்ணைக் கொடுப்பவருக்கும், அப்படிப்பட்ட திருமணத்தைச் செய்துவைக்கின்றவர்களுக்கும் சேர்த்துத் தண்டனை தரப்படுகிறதே!
இப்படிப் பலவழிகளிலும், பல்வேறு துறைகளிலும் நாம் செய்துவந்த சுயமரியாதைப் பிரச்சாரம் போற்றத்தக்க அளவு நல்ல பலனைத்தான் தந்துள்ளது.
ஆகவே தோழர்கள் அனைவரும் மேலும் தொடர்ந்து இப்படிப்பட்ட சமூக சீர்திருத்தப் பணியைச் செய்துவர வேண்டுமென்று மீண்டும் வலியுறுத்திக் கூறுகிறேன்.
சுயமரியாதை இயக்கக் கொள்கைகளை நாடு முழுதும் மேலும் பரப்ப வேண்டுமென்று குறிப்பிட்டேன். இதற்காக நாம் எல்லாத் துறைகளிலும் நுழைந்து மிகத் தீவிரமாக வேலை செய்யவேண்டும். அப்போதுதான் நாட்டில் உள்ள பழமைப்பிடிகளும். மதமூட நம்பிக்கைகளும், நீங்கும்–நீக்கப்படும்.
நல்ல ஓவியம் வரையத் தெரிந்தவர்கள் அனைவரையும், சுயமரியாதைக் கொள்கைகளைப் பரப்பும், விளக்கும் ஓவியங்களையே தீட்டிவரவேண்டும்.
இசைபாடத்தெரிந்த தோழர்களும், தோழியர்களும் தங்கள் இசைத்திறன் மூலம் சீர்திருத்தக் கருத்துக்களடங்கிய பாடல்களையே பாடிவர வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளுகிறேன். சினிமாத்துறையிலும், நாடகத்துறையிலும், ஈடுபட்டுள்ள நண்பர்களையும், சமுதாய சீர்திருத்தக் கொள்கைகளையே படங்களாகவும் தீட்டும்படி வற்புறுத்துகிறேன். பேச்சாளர்களும், எழுத்தாளர்களும் இதையே தான் பேசவேண்டும். எழுதவேண்டும்.
நாம் சமூக சீர்திருத்தக் கருத்துக்களைக் கலைத்துறையின் மூலம் புகுத்துவதைக்கண்டு நண்பர் சிவஞானம் போன்றவர்கள் சில குறுக்குக் கேள்விகளைக்கேட்டு வருவதாகத் தெரிகிறது.
புதிய சீனாவின் தலைவர் மா–சே–துங் சினிமா நாடகங்களுக்குக் கதை வசனமெழுதினாரா, ரஷ்ய நாட்டு லெனின் ஸ்டாலின் போன்ற தலைவர்கள் எல்லாம் இப்படியா செய்தார்கள்? சினிமாவிற்கும், நாடகத்திற்கும் கதை வசனம் எழுதுவதால் நாடு சீர்பட்டுவிடுமா? மற்ற நாட்டில் அப்படிச் செய்யாதபோது, அண்ணாத்துரை மட்டும் இப்படிக் செய்வது சரிதானா? என்பன போன்ற குறுக்குக்கேள்விகளை நண்பர் சிவஞானம் பொதுக்கூட்டங்களில் மட்டுமே கேட்டு வருகிறாராம்.
சினிமாவிற்கும், நாடகத்திற்கும் கதை வசனம் எழுதுவது சரியா? அல்லது தவறா? என்பதைப்பற்றி அவருக்கு எந்தவிதமான அக்கரையோ அல்லது ஆர்வமோ சிறிதளவும் இருப்பதாகத் தெரியவில்லை! ஆனால் கலைத்துறையில் அண்ணாத்துரை போன்றோர் செல்வாக்குப்பெற்றுவிடுகிறார்களே! என்ற பீதிதான் அவரை இப்படியெல்லாம் குறுக்குக் கேள்விகள் கேட்கும்படி செய்திருக்கின்றது!எப்படியாயினும், அந்த கேள்விகளுக்கு நாணயமான முறையிலேயே பதில் கூறுகிறேன்.
மாசேதுங்கும், லெனினும், ஸ்டாலினும், சினிமாவிற்கும் நாடகத்திற்கும் கதைவசனம் எழுதினார்களா? என்று நண்பர் கேட்கிறார்! இல்லை! நிச்சயமாக அவர்கள் சினிமாவிற்கும் நாடகத்திற்கும் கதை வசனம் எழுதத்தான் இல்லை. அப்படியானால் நீ மட்டும் எழுதலாமா? என்று குறுக்குக் கேள்வி போடுகிறார்!
மாசேதுங், ஸ்டாலின், லெனின் போன்றார் கதை வசனம் எழுதவில்லையென்றால், அவர்களுக்கு அது அவசியமாகவில்லை! அவ்வளவுதானே தவிர கதைவசனம் எழுதக் கூடாது என்பதல்லவே!
ரஷ்யா சீனா போன்ற நாடுகளில், மக்களைச் சீர்திருத்தக் கலைத்துறை மூலம் பணியாற்றித் தீரவேண்டிய நிர்ப்பந்தம், அந்த நாட்டுத்தலைவர்களுக்கு இல்லாமல் இருந்தது. அங்கெல்லாம், இந்த நாட்டில் உள்ளதைப் போன்ற மத மூடநம்பிக்கைகள் பெருகியில்லை யென்பதுமட்டுமல்ல, கலைத்துறை மூலம், மதத்துறை மக்கள்மீது ஆதிக்கம் செலுத்தவில்லையென்பதும் இதற்கு முக்கிய காரணமாகும்! எனவேதான் அவர்கள் கலைத்துறையில் ஈடுபட்டு உழைக்க வேண்டிய தேவையில்லாமற் போய்விட்டது.
இந்த நாட்டில் உள்ள நிலைமையே வேறு என்பதை நண்பர் சிவஞானம் ஏன் புரிந்துகொள்ளத் தவறி வருகிறாரோ தெரியவில்லை. இந்த நாட்டில் மதத்துறை மக்களை எவ்வளவு ஆதிக்கம் செலுத்தி, அவர்களது முன்னேற்றத்தைத் தடுத்து வருகின்றது? மதத்துறை மக்கள்மீது ஆதிக்கம் செலுத்தப் பெரிதும் கலைத்துறைதானே கருவியாகப்பயன்பட்டது! மேலும் பயன்பட்டு வருகின்றது!
மதமூட நம்பிக்கைகளையும், பழமைக் கருத்துக்களையும், புராண இதிகாசங்களையும், சாதிபேதங்களையும் கலைத்துறையின் மூலமாகத்தானே மதவாதிகளும், பழமை விரும்பிகளும் புகுத்திப் பரப்புகின்றனர்! நாட்டில் நிலைக்கச் செய்கின்றனர்! புதுமைக்குத் தடைபோடுகின்றனர்! இந்நாட்டில் மதத்துறையும், கலைத்துறையும் இரண்டறக்கலந்து ஒன்றோடு ஒன்று நன்றாக இணைத்துக்கிடக்கின்றன, ஆகவே மதத்துறையும், மார்க்கத்துறையும்–சீர்திருத்தவேண்டுமானால், கலைத்துறையை முதலில் சீர்திருத்தியாக வேண்டும். எனவேதான் நாங்கள் கலைத்துறையில் நுழைந்து பணியாற்ற வேண்டியது மிகவும் அவசியமாகிவிட்டது.
மக்களிடத்தில், எந்தக் கலைத்துறை மூலமாக மதமூடநம்பிக்கைகள் புகுத்தப்பட்டனவோ, அதே கலைத்துறையின் மூலம் நாங்களும் சீர்திருத்தக் கருத்துக்களைப் புகுத்தி மக்களிடம் மதவாதிகள் புகுத்தியுள்ள மதமூட நம்பிக்கைகளை முறியடிக்கப் பாடுபடுகிறோம்! இதில் தவறென்ன இருக்கின்றது?
மதமூட நம்பிக்கைகளைப் பரப்ப, கலைத்துறை பயன்படும்வரை, நாங்களும் கலைத்துறையில் ஈடுபட்டுச் சுயமரியாதைக் கருத்துக்களை மக்களிடையே பரப்பித்தான் வருவோம்.
கலைத்துறை மூலம்தான் மக்களிடையே பெருவாரியான மூடப்பழக்க வழக்கங்களும், கண்மூடிக் கருத்துக்களும் புகுத்தப்பட்டுள்ளன! அதனால்தான் அதேதுறையின் மூலமாகவே மக்களிடம் புகுத்தப்பட்ட கேடுகளைக் களைந்தெறிய நாங்கள் உழைத்து வருகின்றோம்,
கலைத்துறையின் மூலம்தான் பலமதக் கருத்துக்கள் மக்களிடம் புகுத்தப்பட்டன. புகுத்தப்பட்டு ஆதிக்கம் செலுத்தி வருகின்றன என்பதற்கு ஒரே ஒரு உதாரணத்தைக் குறிப்பிடுகிறேன். அதுவே போதும் இதனை உறுதிபடுத்த!
பகவான் மகாவிஷ்ணு பூலோகத்தில் பத்து அவதாரங்கள் எடுத்ததாகப் பக்தர்கள் புகழும் புராணங்கள் கூறுகின்றன. ஆனால் எத்தனை அவதாரங்களுக்கு மக்களிடையே மதிப்பும் மரியாதையும் இருக்கின்றன! பூஜைகளும் தேர் திருவிழாக்களும் நடைபெறுகின்றன! எல்லா அவதாரங்களுக்குமா? இல்லையே! மச்சாவதாரம், கூர்மாவதாரம், வாமனாவதாரம். வரகாவதாரம் முதலியவைகளும் பகவான் விஷ்ணுஅவதாரங்களாகத்தான் கருதப்படுகின்றன, அதைப் போன்ற அவதாரங்கள்தான், இராமாவதாரமும் கிருஷ்ணாவதாரமும். ஆனால், இராமாவதாரமும் கிருஷ்ணாவதாரமும் மக்களிடையே பெற்றுள்ள மதிப்பும் மரியாதையும் மற்ற அவதாரங்களுக்கு இல்லாதது ஏன்? சிந்தித்துப் பார்க்க வேண்டுகிறேன்.
இராமன், கிருஷ்ணன் ஆகிய அவதாரங்களுக்கு மாத்திரமே தான் நாட்டில் கோயில்கள் கட்டப்பட்டிருக்கின்றன. இவைகளுக்குப் பூஜையும், ஜயந்தியும் தேர் திருவிழாக்களும் நடைபெறுகின்றன. மற்ற அவதாரங்களுக்கு. இதைப்போல நடைபெறக் காணோம். இதற்குக் காரணம் இராமன், கிருஷ்ணன் ஆகிய அவதாரங்கள் மக்களுக்குத் தெரிந்ததைப் போல மற்ற அவதாரங்கள் தெரியாததுதான் இதற்கு முக்கிய காரணமாகும்.
மக்களுக்கு இராமன், கிருஷ்ணன் ஆகிய அவதாரங்கள் பெரிதும் தெரிவிக்கப்பட்டன! இவை பற்றித்தான் பெருத்த இரண்டு இதிகாசங்கள், இராமாயணம் என்றும், பாரதம் என்றும் ஏற்பட்டன. இந்த இரண்டு அவதாரங்களைப்பற்றிக்கலைத்துறையின் மூலம் ஏராளமான விளம்பரம் செய்யப்பட்டது. ஆடல், பாடல், இசை, நாடகம், ஓவியம், சினிமா முதலிய எல்லாவற்றிலும் இவைகள் போற்றப்பட்டன. ஆகவே இந்த இரண்டு அவதாரங்கள் மட்டும் மக்களின் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரியனவாகின. புகழுக்கும், பூஜைக்கும் ஏற்றவைகள் ஆகிவிட்டன! கலைத்துறை கைவிட்ட மற்ற அவதாரங்கள் ஆண்டவன் எடுத்த அவதாரங்கள் தான் என்றாலும், மக்களிடம் பரவாமல் போய்விட்டன. ஆகவே கலைத்துறையின் மூலம் எந்தக்கருத்தையும் சுலபமாக மக்களிடம் புகுத்தி நிலைநிறுத்த முடியும் என்பது நன்கு விளங்குகிறது இதன் மூலம். ஆகவே தான் சுயமரியாதைக் கருத்துக்களையும் நாங்கள் கலைத்துறையின் மூலம் மக்களிடம் புகுத்த முனைகிறோம். ஓரளவு வெற்றியும் பெற்றுவருகிறோம்.
இந்த நாட்களில்கூட மதக்கருத்துக்களைப் பரப்பும் சினிமா நாடகங்களுக்கு மதவாதிகள் பெரிதும் வரவேற்பு தருகின்றார்களே! மதத்தலைவர்கள் அப்படிப்பட்ட படங்களைப் பாராட்டத் தவறுவதும் இல்லையே!
ஜெமினி ஸ்டூடியோவின் அதிபர் தோழர் எஸ். எஸ். வாசன் சந்திரலேகா படத்தை எடுத்தார். படம் நல்ல வெற்றியோடு ஓடி அவருக்கு பெருத்த லாபத்தையும் புகழையும் கொடுத்தது. ஆனால் அப்போது வாசனை எந்த மடாதிபதியும் பாராட்டவில்லை. புகழ வில்லை. ஆனால் அதே வாசன் ஔவையார் படத்தை யெடுத்தபோது மட்டும் மதவாதிகள் அனைவரும் ஒருசேரப் பாராட்டினரே! மடாதிபதிகளும் வாழ்த்தி வரவேற்றுப் பொன்னாடை போர்த்தினார்களே! ஏன்?
ஒளவையார் படத்தின்மூலம் பிள்ளையார் பெருமை வளருகிறது. சைவத்தின் மேன்மை காட்டப்படுகிறது ஆஸ்திகம் தழைக்க உதவுகிறது என்பதுதான் இதற்கெல்லாம் முக்கிய காரணமாகும்.ஒளவையார் படத்தைப் பிடிக்க ஏறக்குறைய 40 லட்சம் ரூபாய் செலவாகியதாம். ஆறு ஆண்டுகாலம் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. கே. பி. சுந்தராம்பாளின் இசைத்திறன் வேறு பயன்பட்டது. இத்தனை இருந்தும் ஒளவையார் படம் வெற்றிபெறவில்லை. பெருத்த அளவில் படம் கொட்டகைகளில் ஓடியதாகத் தெரியவில்லையென்றாலும், மதத்துறையில் உள்ளவர்கள் அதில் உள்ள மதக்கருத்துக்களுக்காக அதைப்புகழத் தவறவில்லை!
உங்களில் பலருக்குத் தெரியாது என்று கருதுகிறேன், ஒளவையார் படம் சம்பந்தமாகத் தோழர் வாசன் என்னைக் கண்டு பேசிய விபரம்!
ஒளவையார் படம் வெளிவந்த சில தினங்களுக்குப் பிறகு ஜெமினி வாசன் என்னைக் காண விரும்புவதாக நண்பர்கள் சிலர் தெரிவித்தார்கள். உடனே பார்ப்பதற்குச் சந்தர்ப்பமில்லை யென்று தெரிவித்துவிட்டேன். என்னைப் பார்த்துத்தான் ஆகவேண்டும் என்று அவர் பலமுறை விரும்பினார். ஆகவே ஒருமுறை சென்னையில் தோழர் ஈ. வே. கி. சம்பத் அவர்களின் தமக்கையார் இல்லத்தில் வாசனைச் சந்திக்க ஒப்பினேன்.
ஏற்பாட்டின்படி தோழர் வாசன் என்னைப் பார்க்க வந்தார். இருவரும் ஏறக்குறைய ஐந்து நிமிடங்களுக்கு மேல் என்ன பேசுவதென்றே தெரியாமல் உட்கார்ந்திருந்தோம். பின்னர் வாசன் ஒளவையார் படம் வெளிவந்திருக்கிறதே. அதைப் பார்த்தீர்களா என்று கேட்டு, படம் எப்படியிருக்கிறது என்றும் கேட்டார்.
நான் படத்தைப் பார்த்ததாகத் தெரிவித்து, படப்பிடிப்பு சம்பந்தப்பட்ட சிலவற்றைப் பாராட்டினேன்.
கடைசியாக வாசன் ஒளவையார் படத்தையெடுக்கத்தமக்கு 40 லட்சம் ரூபாய் செலவாகிவிட்டதாகவும், ஆனால் தாம் எதிர்பார்த்த அளவிற்கு படம் வெற்றிகரமாக ஓடவில்லையென்றும், சந்திரலேகா படம் ஓடியதைப் போலவே ஒளவையாரும் ஓடினால்கூடத் தமக்கு சுமார் 20 லட்சம் ரூபாய் நஷ்டந்தான் வருமென்றும் தெரிவித்தார். ஆனால் ஒளவையார் படத்தின் மூலம் தாம் தமிழுக்காகத்தொண்டு செய்திருப்பதாக, நான் மனதார நம்பினால் ஒளவையார் படத்தின் மூலம் தமிழுக்கு நல்ல தொண்டு செய்திருப்பதாக ஒரே ஒரு வார்த்தையை நான் கூறிவிட்டால், அவர் 40 லட்சம் ரூபாய் போனதைப்பற்றிக் கவலைப்படாமல் பெருத்த மகிழ்ச்சியடைய முடியும் என்று தெரிவித்தார்.
என்னால் எதைக்கூறினாலும் கூறமுடிந்ததே தவிர, அவர் கேட்ட அந்த ஒரே ஒரு வார்த்தையைத்தான் சொல்ல முடியவில்லை
அதன் பின்னர் மறுபடி வாசன் என்னைச் சந்தித்து என்னுடைய தலைமையிலேயே ஒரு நாள் ஒளவையார்படம் நடைபெற வேண்டுமென்றும் கேட்டார், இப்படிப்பட்ட சமயங்களில் நான் மிகவும் இலகுவாகத் தப்பித்துக்கொள்வதிலே நான் மிகவும் சமர்த்தன், ஆகவே வாசனுக்கு கொடுக்காமல் தப்பித்துக்கொண்டேன்.
நான் எதற்காக இதனைக் குறிப்பிடுகிறேன் என்றால், மதத்துறையைச் சார்ந்த படங்களுக்கு மக்களிடம் எவ்வளவு மதிப்பு குறைந்துள்ளது என்பதை எடுத்துக் காட்டுவதற்காகத்தான்.
ஜெமினி வாசன் கேட்டபடி ஒளவையார் படத்தின் மூலம் தமிழுக்கு தொண்டு செய்திருப்பதாக நான் எப்படிக்கூறமுடியும்? முடியவே முடியாதே! தமிழுக்கா அந்தப் படத்தின் மூலம் தொண்டு செய்துள்ளார்? இல்லவே இல்லை! மதத்திற்குத்தானே அவர் பிடித்த ஒளவையார் பயன்பட்டது! அதனை எப்படி நான் தமிழருக்குத்தொண்டு செய்ததாகக் கூறமுடியும்? முடியாதே! ஆகவேதான் நான் அவரிடம் இதைக் கூறாமல் விட்டேன்! 40 லட்சம் ரூபாய் பணத்தைச் செலவிட்டும் வெற்றி காணாமல், நொந்த மனத்தோடு எதிரில் உட்கார்ந்திருக்கும் மனிதரிடம், நாம் ஏன் நமது கருத்தைக்கூறி மேலும் நோகவைக்க வேண்டும்என்ற எண்ணத்தில்தான் நான் அவரிடம் எதையும் கூறவில்லை!
நாம் நினைக்கும் ஒளவையார் வேறு! வாசன் பிடித்த ஒளவையார் வேறாயிற்றே! வாசன் படத்தில் சுப்பிரமணியரைப்பார்த்து, படம் பார்ப்பவர் மெய்சிலிர்த்து மயங்கிவிட்டதாகப் படம் பிடித்துப் பத்திரிகையில் வெளியிட்டார்களே! அப்படிப்பட்ட ஒளவையாரல்ல, தமிழருக்குத் தொண்டு செய்யும் ஒளவையார். இந்தப்படம் மதத்திற்குத்தான் புதுமுறையில் பக்கபலம் தேடப் பயன்பட்டதே தவிர மக்களுக்கோ அல்லது அவர் கூறிக்கொண்டபடி தமிழுக்கோ எந்தவிதமான தொண்டையும் ஒரு சிறிதும் செய்யவில்லை!
இப்படிப்பட்ட மதக்கருத்தைப் புகுத்தும்ஒளவையார்களும் வரும் சினிமாப்படமாக, ஆனால் நீங்கள் மட்டும் சீர் திருத்தப்படங்களை ஏன் எழுதுகிறீர்கள் என்று கேட்பது அறிவுடைமையல்ல! மதத்தைப்பரப்புகின்ற நாடகங்களும், சினிமாக்களும் உள்ளவரையில், நாங்கள் அத்துறையில் இருந்துதான் தீருவோம். கலைமூலம் இழைக்கப்படும் கொடுமைகளைக் களைந்தெறிவோம், மதமூட நம்பிக்கைகளைப் போக்கியே தீருவோம் என்பது உறுதியாகும்.
கலைமூலம் கருத்துக்களை மக்களிடையே பரப்ப முடியும் என்ற காரணத்தால்தான் அரசாங்கத்தினரும் தணிக்கை போர்டை ஏற்படுத்தி, அதனிடம் நீண்ட கத்தரிக்கோலையும் கொடுத்திருக்கிறார்கள்!
'சொர்க்கவாசல்' சினிமாப்படம் தணிக்கை செய்யப்பட்டபோது, அந்த தணிக்கை அதிகாரியிடம் நான் மூன்று நாட்கள் வாதாடினேன். ஒன்றும் பயன்படவில்லை. ஆனால் அந்த அதிகாரி மிகவும் நெஞ்சழுத்தத்தோடு, ஆனால் மனம் விட்டு நேர்மையாகவே கூறிவிட்டார். நீ எழுதுகிறாய் ஆகவேதான் இந்தப் பகுதிகளை வெட்டுகிறேன் என்று!
அமெரிக்க நாட்டிலும்கூட சினிமாமூலம் கம்யூனிசக் கருத்துக்கள் பரப்புவதைத் தடுக்க பலமான தணிக்கை போர்டை ஏற்படுத்தியிருக்கிறார்களாம்.
ஆகவே சினிமா மூலம் கருத்து பரவுகிறது என்பதை உலகம் ஒப்புக்கொள்கிறது என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. ஆனால் அத்துறை மதத்துறைக்குத்தான் பயன்படவேண்டும், பகுத்தறிவுத்துறைக்குப் பயன்படக்கூடாது என்று பேசுவது முறையல்ல, முடியாத காரியமுமாகும்!
நாம் சினிமாத்துறையிலும், நாடகத்துறையிலும் செல்வாக்குப் பெற்று வருவதைக் கண்டிக்கிறார்கள். அவர்கள் நாம் செய்யும் எதையுந்தானே கண்டிக்கிறார்கள். அவர்கள் கலைத்துறையில் நாம் இருப்பதை எப்படி கண்டிக்காமல் இருப்பார்கள்!
காட்டிலே துள்ளி ஓடும் புள்ளிமான்மீது வேங்கைக்குக்கோபம் இருப்பதைக்கண்டு ஆச்சரியப்பட முடியுமா? புள்ளிமான் இருப்பதே வேங்கைக்குக் கோபம். மேலும் அது வேங்கை முன்னர் துள்ளி விளையாடலாமா? வேங்கையைக் கண்டதும் அதன் கண்கள் மிரட்சியடையலாமா? அதைவிட வேங்கையைப் போல இரத்தங்குடிக்காமல் இறச்சியைத் தின்னாமல் புல்லைமட்டும் புசிக்கலாமா? அதனால்தான் வேங்கைக்கு மான்மீது கோபம்! அதற்காக மான் வாழாதிருக்க முடியுமா? துள்ளி ஓடாமல்தான் இருக்க முடியுமா? முடியாதே!
இதைப்போலத்தான் இன்று நாம் கலைத்துறையில் நுழைந்து சீர்திருத்தக் கருத்துக்களைப் பரப்பி வருவதைக்கண்டு கேலி பேசுவோரும், கிண்டல் செய்பவர்களும் என்பதை, நாம் புரிந்துகொள்ள வேண்டுகிறேன்.
நாட்டில் சினிமாவே இருக்காது, நாடகமும் நடக்காது என்ற நிலைமை இருக்கட்டும், என்றாவது மற்றவர்கள் பேசட்டும். செய்யட்டும் முடிந்தால்.
சினிமாவும் இருக்கும் நாடகங்களும் நடக்கும், அவை மூலம் பழமைக் கருத்துக்களைப் பரப்புவோம், புராணக்கதைகளைப் படம்பிடிப்போம், மதத்துறைக்கு மாண்பு தேடுவோம் ஆனால் நீங்கள் மட்டும் கலைத்துறையில் வேலை செய்யக்கூடாது என்பது எந்த நீதிக்குப் பொருந்தும்?
ஆகவே இன்றுள்ள நிலையில் நாம் கலைத்துறையில் ஈடுபட்டு வருவதைக் கண்டு மனம் புழுங்குவோர் மூன்றே மூன்று ரகத்தைச் சேர்ந்தவர்கள்தான். ஒன்று பழமை விரும்பிகளும், மதவாதிகளும். இரண்டாவது ரகம். கலைத்துறையில் ஏற்கனவே ஈடுபட்டுத் தோல்வி கண்டவர்கள், பாவம் இவர்கள் நொந்த உள்ளத்தினர். இன்னமும் தங்களுக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லையே என்ற பொறாமைக்காரர்கள் மூன்றாவது ரகம். இப்படிப்பட்டவர்களுக்காக நாம் கலைத்துறையைக் கைவிட்டுவிட முடியாது என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துவிடுகிறேன்.
இயக்க நண்பர்களை நான் மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். எந்த அளவுக்குப் பேசுகின்றீர்களோ எவ்வளவு எழுதுகிறீர்களோ. அந்த அளவுக்குக் குறையாமல் நாடகங்களும் ஆடிவாருங்கள். இசைத் துறையிலும் ஈடுபடுங்கள். சினிமாவிலும் சேர்ந்து பணியாற்றுங்கள். நாட்டில் எத்தனை விதமான துறைகள் உண்டோ, அத்தனை துறைகளிலும் நேர்மையுடன் ஈடுபட்டுச் சீர்திருத்தக் கருத்துக்களைப் பரப்பி வாருங்கள்.
நாம் எல்லாத் துறைகளிலும் அடைந்துள்ள செல்வாக்கைக்கண்டு பொறாமை கொள்வோரும், பொச்சரிப்பு மேலிட்டு மனம் பதைப்போரும் இருப்பதைக் கண்டு ஒரு சிறிதும் கவலைப்படத் தேவையே இல்லை. நாம் நமது வழியே செல்வோம்!
நம்மைக்கண்டு வயிற்றெறிச்சல்கொள்வோர், புராணத்தில் யாரோ காந்தாரி பாண்டவர் பிறந்ததைக்கேட்டு அம்மிக்குழவியை எடுத்து அடிவயிற்றில் இடித்துக்கொண்டாளாமே, அதைப்போல வேண்டுமானாலும் இடித்துக்கொள்ளட்டும், அது பற்றி நமக்குக் கவலையில்லை. முடிந்தால் இந்தப் பொறாமைச் செய்கையையும்கூட அடுத்த நாடகத்தில் ஒரு காட்சியாக்கி மக்களுக்கு காட்டுவோம். யாருக்காகவும் நமது கலைப்பணியை நாம் நிறுத்தமாட்டோம், நிறுத்தக்கூடாது!
நாம் நாடகம் ஆடுவதைப் பற்றி பலரும் தூற்றிவருவதைக் காணும்போது நான்கூட மீண்டும் நாடகமாடவேண்டுமென்று தீர்மானித்துவிட்டேன். நாடகப்பணியை நாம் எப்போதும் போலத் தொடர்ந்து செய்து வருவதில் ஒரு சிறிதும் ஆர்வங்குன்றாது இருந்துவர வேண்டுகிறேன்.
நல்ல வசதியும், இனியகுரலும் படைத்து, சிறிது பழக்கமும் உள்ள ஆட்களைப் பொருக்கி நாடு முழுதும் காலட்சேபங்களையும் நடத்த வேண்டுமென்று நான் விரும்புகிறேன்.
ஆம்! நாடெங்கும் பகுத்தறிவுக் காலட்சேபங்கள் நடக்க இனி ஏற்பாடு செய்யவேண்டும். இன்னும் எத்தனை நாட்களுக்கு மக்களிடையே புராண காலட்சேபங்களே நடப்பது? நமது கருத்துக்களடங்கிய காலட்சேபங்களும் இனி தொடங்கத்தான் வேண்டும்.
சீதா கல்யாணங்களையே மக்கள் இன்னும் எத்தனை நாளைக்குக்கேட்டுக் கொண்டிருக்கும்படி விட்டுவிடுவது! அவர்கள் சாக்ரடீஸ் பற்றிய காலட்சேபத்தையும் கேட்கும்படி செய்ய வேண்டாமா? ருக்மணி கல்யாணத்தையும், காரைக்காலம்மையார் புராணத்தையும்பற்றிய கதைகளையே. காலட்சேபங்களாக மக்கள் கேட்டது போதும்! இனி அவர்கள் பகுத்தறிவுக் கொள்கைகளை விளக்கும் காலட்சேபங்களைக் கேட்கும்படி செய்யவேண்டும்.
மின்சார விளக்குகளைக் கண்டுபிடித்தவனைப்பற்றி, ஒலிபெருக்கியைக் கண்டுபிடித்தவனைப்பற்றி, ஆகாய விமானம், ரயில் முதலியவற்றை உலகுக்கு அளித்தவர்களைப் பற்றியெல்லாம் மக்கள் அறியவேண்டும். இப்படிப்பட்ட விஞ்ஞானிகளைப்பற்றிக் காலட்சேபம் மூலம் மக்களுக்கு எடுத்துச்சொல்லவேண்டும்.
நம்முடைய மூதாதையர்களான முடியுடை மூவேந்தர்களைப்பற்றிக் காலட்சேபங்கள் நடத்தவேண்டும். முடியுடை மூவேந்தர்கள் வாழ்ந்த வளமான வரலாறுகளைக் காட்டவேண்டும். அந்த முடியுடை வேந்தர்களை, ஜடைமுடி தரித்தவர்கள் எப்படித் தந்திரமாகத் தாழ்த்தினார்கள் என்பதையும் விளக்கவேண்டும்.
இராஜேந்திர சோழனை, வரகுண பாண்டியனை, குலோத்துங்கனை, சேரன், செங்குட்டுவனை, சிலப்பதிகாரம் தந்த இளங்கோவை மக்கள் முன் நிறுத்திக் காட்டவேண்டும். நமது இனம் வாழ்ந்த வரலாறுகளைக் கூறவேண்டும். வாழ்ந்த இனம் வஞ்சகரின் பிடியில் சிக்கிச் சீரழிவதையும் எடுத்துக்காட்டவேண்டும்.
இனி இத்தகைய பகுத்தறிவுக் காலட்சேபங்கள் நாடெங்கும் நடைபெறத் தோழர்கள் முயற்சி செய்ய வேண்டும். அதற்கான நல்ல ஏற்பாடுகளையும் உடனடியாகச்செய்ய வேண்டுகிறேன்.
கலைத்துறையில் ஈடுபட்டதன் மூலம் நண்பர் கருணாநிதியும் நானும் பதினைந்து இலட்சம், பத்து இலட்சம் என்று பணம் சேர்த்துவிட்டதாகச் சிலர் வீண்பேச்சுப் பேசுகிறார்கள் இனி அதையும் மறுக்கப் போவதில்லை. தங்களுக்குக் கிடைக்கவில்லையே என்று பொறாமையால் புழுங்கிச் சாகின்றவர்கள் சாகட்டும். எனக்குக் கவலை இல்லை.
எனவே தோழர்களை நான் மறுபடியும் கேட்டுக்கொள்வதெல்லாம் இதுதான். மற்றவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதைப்பற்றிக் கவலைப்படாமல் நாம் கலைத்துறையில் ஈடுபட்டுச் சீர்திருத்தப்பணியைத் தொடர்ந்து செய்துவர வேண்டும். இதற்கான ஆக்கவேலையில் அனைவரும் ஈடுபடுங்கள்.
அரசியல் துரையில் நமது இலட்சியம் திராவிடநாடு தனிநாடாக வேண்டும் என்பதுதான். இதைப்பற்றி இன்றுவரை ஆயிரமாயிரம் மேடைகளிலே நல்ல விளக்கங்கள்கூறி வந்திருக்கிறோம். இதுவரை அவற்றை எவரும் மறுத்துக் கூறவில்லை. ஆனால் மறைக்கப் பார்க்கின்றனர். அது வீண்வேலை என்பதைத் தெரிவித்து விடுகிறேன்.
நமது நாடு நம்மிடந்தான் இருக்கவேண்டும் என நாம் கூறுவதை மறுத்துக்கூற யாரால் முடியும்? சொந்த நாட்டைப் பிறநாட்டானிடம் அடிமைப்படுத்தி வாழ்வதை யார்தான் விரும்புவார்கள்! தமிழ்நாடு–திராவிட நாடு திராவிடரின் சொத்தாகவே இருக்க வேண்டுமென்பதைத் தடுத்திட எவருக்குத்தான் துணிவு பிறக்கும்? இதனை மறுத்துத்தீர்ப்பு வழங்க எந்த நீதிமான்களும் உலகத்தில் கிடையாதே!
தமிழகம்–திராவிடம் திராவிடரிடமே இருக்க வேண்டுமென்பதைப்பற்றி எந்த திராவிடனுக்கும், எத்தகைய சந்தேகமும் எழக்காரணமே இல்லை. ஆங்கில நாட்டுச்சுதந்திரத்தைப்பற்றி ஆங்கிலேயருக்கு! ஆங்கிலத்தில் கூறத் தேவையில்லை! என்று ஒரு ஆங்கிலப் பழமொழி உண்டு. அதைப்போலத்தான் தமிழருக்கு–தமிழ்மொழியைத் தாய்மொழியாக உடையவருக்குத் தமது தாய்த்திருநாடு தம்மிடமே இருக்கவேண்டும் என்பதைக் கூறவேண்டியதில்லை.
தன்மானமுள்ள தமிழன், திராவிடன் ஒவ்வொருவனுக்கும் தமது தந்தையர் நாடு. தனித்திருநாடாக விளங்கவேண்டுமென்பதிலே, தணியாத ஆர்வமும் அக்கரையும் ஏற்படத்தானே ஏற்படும்? இதனைத் தகாதது என்று உரைக்க எத்தகைய அதிகாரம் படைத்த அதிகாரிகளும் எங்கும் இருக்க முடியாதே!
நமக்குச் சொந்தமான நமது பூமியை நாமே சுதந்திரமாக ஆள்வது கூடாது என்று கூறிட அகில உலகத்திலும் ஆட்கள் இருக்கமுடியாது. ஒவ்வொரு நாடும் அந்த நாட்டு மக்களுக்குத்தானே சொந்தம்! மக்களால்தானே அந்த நாடு ஆளப்படவேண்டும்? இந்தப் பொதுநீதியைப் புறக்கணித்துவிட உலகமுழுவதும் தேடினாலும் ஒருவர்கூட கிடைக்கமாட்டார்கள் என்பது மிக மிக நிச்சயமாகும்!
திராவிட நாடு தனி நாடாக வேண்டும் என்று நாம்கூறி வருகிறோம். இந்த நாடு தனி நாடாக, சுதந்திர பூமியாக விளங்கியது என்பதை வரலாறுகளில் படிக்கிறோம். நமது மூதாதையர் வீரத்துடன் உலவிய இந்த பூமியில் நாம் வீணர்களாக உலவிவருவதைக்காண, வெட்கம் நமது விலாவைக் கொத்துகிறதே! வேதனையால் உள்ளம் துடிக்கிறதே!
இந்த நாடு நமது என்பதற்கும், அது தனிச் சுதந்திரநாடாக விளங்கியது என்பதற்கும் நல்ல சான்றுகள் கல்வெட்டுக்களில் காணப்படுகின்றன! இலக்கியங்களில் இருக்கின்றன! சிலர் சாசனங்களில் பொறிக்கப்பட்டுள்ளன! மூவேந்தர்களாக வளமுடனும், வகையுடனும், புகழுடனும், பெருமையுடனும் ஆண்ட நமது தந்தையார் நாட்டை நாமே மீண்டும் தனிச்சுதந்திர நாடாக ஆளவிரும்புகிறோம்! இதில் தவறென்ன?
இந்த நாட்டைத் தனியாகப் பிரித்துவிட்டால் எப்படி ஆள்வீர்கள்! பாதுகாப்பிற்காகப் படைகள் உண்டா? என்றெல்லாம் கேள்விகள் கேட்கிறார்களே தவிர இதன் அடிப்படை உண்மையை மறுத்துக்கூற எவரும் முன்வரவில்லையே!
இந்த நாட்டை வெளிநாட்டிலிருந்து வந்து கொள்ளையடித்த வெள்ளையன்கூட இதைத்தானே அன்று விடுதலை கேட்டபோது சொன்னான்! அப்படிப்பட்ட வெள்ளையனே, பின்னர் தனது யூகமும், அரசியல் அறிவும் கூறியதற்கிணங்க
இந்த நாட்டைவிட்டு வெளியேறிவிட்டானே? அப்படி வெளியே போகும்போது விமானத்தையும், கப்பற்படையே இல்லாதிருந்த மக்களுக்குக் கப்பற்படையையும் துப்பாக்கி பீரங்கிகளையும் கொடுத்துவிட்டுத்தானே சென்றான். அதைப்போலத்தானே இன்றும் நடக்கும்! நடக்கவேண்டும்!படை இருக்கத்தான் வேண்டும். உங்களால் ஒருபடை திரட்ட முடியுமா? என்று கேட்கட்டும். ஒரு ஆறு மாதம் நம்முடன் எதிலும் இந்த அரசாங்கம் குறுக்கிடாமல் இருக்கட்டும். இதே மாநாட்டில் வந்துள்ள அத்தனை தோழர்களையும் நல்ல படை வீரர்களாக்கிக் காட்டுகிறேன் பாருங்கள்!
நாமென்ன வீரமற்ற பரம்பரையிலா வந்தோம்? தொடை நடுங்கிகளா நாம்? இல்லையே! நாம் வீரமரபினர்கள், வெற்றிவேந்தர்களின் வழி வந்தவர்கள்! நமக்கா வீரமற்றுப்போய்விடும்? நாம் நினைத்தால் நல்ல படைவீரர்களாகி விடலாமே! நமது மக்களிடம் நமது நாட்டை நாமே ஆள்வதற்கேற்ற அத்தனை தகுதிகளும் நிறைந்துள்ளன! நாட்டில் எல்லா வளங்களும் ஏராளமாக இருக்கின்றன.
எல்லா வளங்களும் வல்லமையும் நிறைந்துள்ள இந்த நாட்டைத்தனியே பிரித்து, நம்மைநாமே ஆண்டுகொள்ளத்தான் நாம் எல்லாத்துறைகளிலும் பாடுபட்டு வருகிறோம். சமுதாயத்துறைகளிலுள்ள சீர்கேடுகளைக் களைந்து அறிவுத்துறையில் முன்னேற வேண்டும். மக்களிடையே ஒற்றுமை உணர்ச்சியை ஏற்படுத்தவேண்டும். நல்லதொரு மன எழுச்சியை ஊட்ட வேண்டும்! இன உணர்வைத்தட்டி விழிப்புறச் செய்தாக வேண்டும். நாட்டில் உள்ள அத்தனை துறைகள் மூலமாகவும் சீர்திருத்தம் புரிந்துவரவேண்டும். அதே நேரத்தில் நமக்கு ஏற்படும் எதிர்ப்புகளைச் சமாளிக்க வேண்டும். ஏளனங்களைத் தாங்கியாகவேண்டும்.
எனவேதான் நமது சக்திகள் அனைத்தையும் பலதுறைகளிலும் சேர்த்து உருட்டித் திரட்டி இன விடுதலைக்காகப்பாடுபட வேண்டுமென்று கூறுகிறேன்.
நாம் நமது பணியினை மிகமிக எச்சரிக்கையுடன் செய்துவரவேண்டும். நம்மிடையே ஆர்வம் இருக்கவேண்டும், ஆனால் ஆர்ப்பரிப்புகூடாது! மன எழுச்சிவேண்டும், ஆனால் ஆவேசம் அடையக்கூடாது! கட்டுப்பாட்டுடன் நடக்கவேண்டும், அதற்காக கல்லைப்போல் உட்கார்ந்திருக்கவும்கூடாது; உற்சாகம் தேவை. ஆனால் வீண் ஆரவாரம் செய்யக்கூடாது! எல்லோரையும் இணைத்துச்செல்ல வேண்டும், ஆனால் அதற்காக எவர் சொல்லையும் கண்மூடிக்கேட்டுவிடக்கூடாது! மற்றவர் கருத்துக்கு மதிப்பளிக்கத்தான் வேண்டும்! அதே நேரத்தில் கொள்கையைத் துளியும் விட்டுவிடவும் கூடாது! பிறர் உதவி தேவைதான். அதற்காக எவர் முன்பும் மண்டியிடத்தேவையே இல்லை. போராட்ட வேட்கை இருக்கவேண்டும். அதற்காக வீண்வம்புக்குப் போகக்கூடாது! வீரம் வேண்டும், ஆனால் சண்டையைத் தேடிச் செல்லக்கூடாது! இப்படிப்பட்ட மகத்தான பெரும் பொறுப்புடன்தான் நாம் காரியமாற்ற வேண்டியிருக்கின்றது!
ஒரு சர்க்கஸ்காரன் கம்பியின்மேல் ஒரு கையில் குடையுடன் நடந்து செல்லும் வித்தையைப் போலத்தான் நாமும் மிகச் சிரமத்துடன் காரியமாற்றி வருகிறோம். சர்க்கஸ் கம்பெனியிலாவது கம்பி ஆடாமல் அசையாமல் இருக்கப்பாதுகாப்பு இருக்கும். நமக்கு அதுகூட இல்லையே! நாம் நடந்து செல்கின்ற கம்பியை சென்னை மீரான் சாகிபு தெருவிலிருந்து ஆரம்பித்து அனைவரும் ஆட்டிக்கொண்டுதானே இருக்கிறார்கள்! இருந்தும் நாம் நல்ல முன்னேற்றமடைந்து தான் வருகிறோம்.
எனது தம்பிமார்களும் இந்தக் கஷ்டமானவித்தையில் நல்ல தேர்ச்சி பெற்றுத்தான் வருகிறார்கள். கம்பிமீது, அதுவும் மற்றவர்களால் வேண்டுமென்றே ஆட்டி அசைக்கப்படுகின்ற கம்பியின்மீது நடப்பதைப்போன்ற சிக்கலான வேலைதான், நமது சீர்திருத்தப் பாதையும். ஆகவேதான் நாம் எதையும் பொறுப்பறிந்து பேசவேண்டும். காலமறிந்து எதையும் செய்யவேண்டும். பொதுக்கூட்டங்களில் பேசும் போதும் அளவறிந்து வாக்குறுதிகள் தரவேண்டும். நம்மால் செய்ய முடிந்ததில் கால்பங்கு, அரைக்கால் பங்குதான் உறுதி கூறவேண்டும். என்னைப்பொறுத்தவரையில் இப்படிப்பட்ட பொறுப்புணர்ச்சியோடுதான் எப்போதும் பேசுவேன், நடப்பேன். இதையே எனது தம்பிமார்களும் பின்பற்றிப் பொறுப்புடன் நடந்துகொள்ளக் கேட்டுக்கொள்கிறேன்.
நமதுபடை பொறுப்புமிக்க படையாக இருக்கவேண்டும்! அப்போதுதான் நாம் எந்த நேரத்திலும் விடுதலைப்போர் தொடங்குவதற்கேற்றதான நிரந்தரப் போர்ப்படையாக விளங்கமுடியும்.
ஆகவே தோழர்கள் அனைவரும் பொறுப்புடனும், கவலையுடனும், கவனத்துடனும், பகுத்தறிவுப் பணிபுரிந்து நாட்டில் இன எழுச்சியையும், விழிப்பையும் ஊட்டிவருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அடுத்துள்ள திருவாங்கூர் கொச்சி பகுதிகளிலுள்ள தமிழ்ப்பகுதிகளைத் தாய்த்தமிழகத்துடன் சேர்க்கவேண்டுமென்று அங்குள்ள தமிழர்கள் கிளர்ச்சி செய்துவருவது யாவரும் அறிந்ததே!
தங்கள் பகுதி தாய்த் தமிழகத்துடன் இணைய வேண்டுமென்று திருவாங்கூர் தமிழர்கள் நடத்திவரும் கிளர்ச்சியினைத் தி. மு. க. ஆதரித்தது மேலும் ஆதரிக்கிறது.
கடந்தமாத இறுதியில், நண்பர் மதியழகன், நான் மற்றும் கழகத் தோழர்கள் சிலரும் அப்பகுதிகளுக்கு நேரில் சென்று நிலைமைகளை அறிந்தோம். அதன் பின்னர் ஆகஸ்டு மாதம் ஆறாந்தேதியன்று நாஞ்சில், செங்கோட்டை ஆகிய இடங்களில் மட்டும் ஒரு நாள் அடையாள மறியல் செய்வதென்று ஏற்பாடு செய்துவிட்டு வந்தோம்.
இதன் பிறகு, சிறையிலிருந்த தோழர் நேசமணி விடுதலையானதும், அவருடன் கலந்துபேசி மேற்கொண்டு எதையும் செய்வதென்றுதான் தி. மு. கழகம் திட்டவட்டமாக முடிவு செய்தது.
இதன்படி ஆகஸ்டு ஆறில், நாஞ்சில் தி. மு. கழகத்தோழர்களால் தி கொ. தமிழர்களின் அறப்போராட்டத்தை ஆதரித்து அடையாள மறியல் நடந்தது. அந்த ஒரு நாள் அடையாள மறியலில் மட்டும் 110 பேர் கலந்து கொண்டனர். இதில் இருபது பேருக்குமேல் சிறைத்தண்டனை பெற்றுள்ளனர்.
திரு–கொச்சி தமிழர் அறப்போரை முன்னின்று நடத்துகின்ற திருவாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் ஆகஸ்டு 11ந் தேதியை, தி. கொ. தமிழர் விடுதலை தினமாகக் கொண்டாடியது. விடுதலை நாளன்று திரு–கொச்சி தமிழ்ப் பகுதிகளில் முழுவேலை நிறுத்தம் நடைபெற வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுத்தது.
இந்த விடுதலை தின விழாவில் நாஞ்சில் தி. மு. கழகம் கலந்துகொள்ளவில்லை. காரணம் கூடாது என்பதல்ல! தி. மு. கழகத் தலைமை நிலையத்துடன் இதுபற்றித்தொடர்புகொண்டு, அதன் அனுமதியைப்பெற போதுமான நேரம் இடையில் இல்லாததே காரணமாகும். அதோடு தி. மு. கழகம் ஒருநாள் அடையாள மறியலை மட்டும் செய்து, அதன் பின்னரே, போராட்டத் தலைவருடன் கலந்துபேசிய பின்னர்தான் மேற்கொண்டு எந்தவிதமான நடவடிக்கைகளிலும் ஈடுபடுவது என்று ஏற்கனவே முடிவுசெய்து விட்டிருந்தது.
திரு–கொச்சி தமிழர் விடுதலைநாள் கொண்டாட்டத்தில் பலவிதப்பட்ட கலவரங்கள் நடந்தது என்பது அனைவருக்கும் ஏற்கனவே தெரிந்ததுதான். அதன் விளைவாக பட்டம்தாணுப்பிள்ளை சர்க்கார் துப்பாக்கிப் பிரயோகம் செய்து அதன் விளைவாகப் பதினொரு தமிழர்கள் மாண்டதாகவும், பலர் படுகொலையுற்றதாகவும் செய்திகள் கிடைத்துள்ளன.
நேரில் அப்பகுதியிலிருந்து வருகின்ற தோழர்கள் கூறுவதைக்கேட்டால், அங்கு நடந்த பயங்கர அடக்குமுறைச்கொடுமைகளை அளவிட்டுச் சொல்ல முடியாது என்றே தெரிகிறது.
அன்று நடைபெற்ற கலவரத்தில், போலீஸ் ஜீப்பை யாரோ சிலர் தீயிட்டுக் கொளுத்திவிட்டதாகவும், அதன் மீதுதான் துப்பாக்கிப் பிரயோகம் செய்ய நேரிட்டதென்றும் பட்டம்தாணு சர்க்கார் பேசுகிறார்கள்.
கிளர்ச்சிகள் நடைபெறும்போது இப்படிப்பட்ட சம்பவங்கள் நேரக்கூடும். ஆத்திரங்கொண்ட பொதுமக்களால் ஏற்படுவதைவிட கிளர்ச்சியால் ஏற்படுகின்ற தொல்லைகள்தான் அதிகமாக இருக்கும்.
கிளர்ச்சிகளை அடக்க கபடபுத்தி படைத்த சில சர்க்கார், தாங்களேகூட இப்படிப்பட்ட அழிவு வேலைகளைச் செய்துவிட்டு, அதைக் காரணமாகக்காட்டி மக்கள் போராட்டங்களை ஒடுக்க நினைப்பதும் உண்டு.
இந்த மூன்றுவகைகளில் எந்த வகையில் அங்கு நடந்த கலவரங்கள் நடைபெற்றன என்பது நமக்குத் தெரியாதென்றாலும், பட்டம் தாணு சர்க்கார் நடத்திய அடக்குமுறை வெறியாட்டங்கள் மட்டும் மிகமிக பயங்கரமாக இருந்தன என்பதுமட்டும் நிச்சயமாகத் தெரிகின்றது.
இந்த விடுதலை நாளில் ஒரு சிறிதும் கலந்துகொள்ளாத தி மு.க.கழகத்தவர் மீதும் இந்தக் கலவரத்தைக் காரணமாகக்காட்டி, தி. கொ. சர்க்கார் அடக்குமுறைகளைத் தொடுக்க முனைந்துள்ளனர். நாஞ்சில் தி. மு. கழக அலுவலகத்தையும் திடீரென்று சோதனையிட்டனர்.
பொதுவாக திரு–கொச்சி தமிழர்கள்மீது இன்று கண்மூடித்தனமான அடக்குமுறைகள் நடப்பது மட்டுமல்ல, தனிப்பட்ட முறையிலும் தகாதபடி, தாறுமாறான தாக்குதல்கள் நடைபெறுகிறதாம்.
இதோ இந்த மேடைமீது அமர்ந்திருக்கும் நாஞ்சில் தி.மு. கழகத்தோழர் ஜான் அவர்கள் ஒரு அகதியைப்போல இங்கே வந்துள்ளார். இவர் அங்கேயே இருந்திருந்தால் அவருடைய கதி என்னவாகியிருக்கும் என்றே கூறமுடியாது. அவ்வளவு கண்மூடித்தனமான நிலைமை அங்கே இருக்கிறதாம்.இந்த நிலைமையில் சென்னை முதன் மந்திரி காமராஜர், திருவாங்கூர் பகுதிகளுக்கு நேரில் சென்று, அங்குள்ள நிலையைப் பார்த்து, தமிழர்களுக்குத் தக்க பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டும். இது அவருடைய நீங்காக் கடமையாகும். காமராஜர் அங்கு நேரில் செல்ல முடியாவிட்டால், அங்கு நடக்கும் அடக்குமுறைகளைக் கண்டித்து ஒரு அறிக்கையாவது வெளியிடவேண்டும். அப்போதுதான் அந்தத் தமிழர்களுக்கு ஏதாவது ஆறுதல் இருக்கும் என்பது மட்டுமல்ல, பாதுகாப்பும் இருக்கும்.
ஏன், நீங்கள் செல்லக்கூடாதா என்றும் சிலர் கேட்கக்கூடும். நாங்கள் சென்றோம். மேலும் சென்று காரியமாற்ற முடியும். ஆனால் அங்கே நடப்பது நாணயமான சர்க்கார் அல்லவே! தமிழர்கள் மீது மலையாளிகளிடம் பொச்சரிப்பை மூட்டி அதன்மூலம் தங்கள் அடக்குமுறை வெறியாட்டங்களுக்குப் பாதுகாப்பு தேடுகின்றனரே! வேறு நாட்டில். வெளிநாட்டு அரசாங்கத்தில் அவதிப்படுகின்ற அத்தனை தமிழர்கட்கும், சென்னை அரசாங்கந்தான் பாதுகாப்பளித்துத்தீர வேண்டும். மற்ற நாடுகளில் எங்களைப்போன்ற தனிப்பட்டவர் செல்வது அவ்வளவு சரியான பரிகாரமாகாதே!
திருவாங்கூர் போன்ற பகுதிகள், வெள்ளையன் காலத்திலிருந்தே இப்படிப்பட்ட அடக்குமுறைகளில் கைதேர்ந்தவர்களாகும். திருவாங்கூரில் சர். சி. பி. யும், காஷ்மீரத்தில் என். ஜி. அய்யங்காரும் திவான்களாக இருந்தபோது. பண்டித நேருவைபே தங்கள் சமஸ்தான எல்லைக்குள் வராது தடைசெய்தார்களே!
ஆகவே காமராஜர் தமது அரசியல் அதிகாரத்தைப்பயன்படுத்தி, மற்ற நாட்டுப் பகுதிகளில் வாழ்கின்ற தமிழர்களின் நல்வாழ்வைப் பாதுகாக்க உடனடியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.இதைப்போலவே இலங்கையிலிருந்து வெளியேற்றப்படும் பல்லாயிரக் கணக்கான தமிழர்களின் எதிர்கால வாழ்க்கையைப் பற்றியும், முதலமைச்சர் காமராஜர் தக்க முன்னேற்பாடுகள் செய்தாகவேண்டும்.
அண்மையில் காமராஜர் இலங்கையிலிருந்து முதன்முதலாக வெளியேற்றப்படும் ஐந்தாயிரம் தமிழர்களைப்பற்றிப் பேசியதாக ஒரு செய்தியைப் பத்திரிகைகளிலே படித்தேன். இலங்கையிலிருந்து முதலில் வெளியேற்றப்யடும் தமிழர்கள் ஐந்தாயிரம் பேர்தானே! அவர்கள் ஏதாவது வேலை செய்து பிழைத்துக்கொள்வார்கள் என்று காமராஜர் பேசியதாகத் தெரிகிறது.
காமராஜர் அவ்விதம் பேசியிருந்தால் அது மிகவும் தவறானது என்பது மட்டுமல்ல. மிகவும் பொறுப்பற்ற பேச்சுமாகும் என்பதைப் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
சொந்த நாட்டில் சோற்றுக்கு வழியின்றி, வெளிநாடு சென்று கூலிகளாய் வாழ்ந்துவரும் தமிழர்கள், இன்று மீண்டும் தமது தாய்நாட்டிற்கே வாழ வழியற்றுத் திரும்புகின்றனர். இந்த நிலைமையில், வாடி, வதங்கி, தேம்பித் திரும்புகின்ற தோழனை அன்புடன் வரவேற்று உபசரிப்பதை விட்டு, எப்படியாவது பிழைத்துக் கொள்வார்கள் என்று பொறுப்பைத் தட்டிக்கழிப்பது நல்லதல்ல!
நாம் நமது வீட்டில் அறுசுவை உண்டி சாப்பிடுகின்ற நேரத்தில் தெருவில் பிச்சைக்காரன், பசியுடன் வாடுகின்ற குரல் கேட்கும்போது, நாம் மகிழ்ச்சியுடன் இருக்க முடியாதே! நாம் சாப்பிடுகின்ற இனிப்பும் கசக்காதா! அரிசிச்சோறு புழுவைப்போலத் தானே நமது கண்களுக்குத் தோன்றும், இலையில் போடப்படும் காய்கறிகளை ருசித்தா சாப்பிட முடியும். இரக்க மனம் படைத்த எவராலும் முடியாதே!இதைப்போலத்தான் வாழ வழியின்றி. வயிற்றுக்குச் சோறின்றி, வெளிநாட்டிலிருந்து விரட்டப்படும் தமிழர்களைப் பாதுகாக்க இந்த அரசாங்கம் வழிவகை செய்யாது, தன் போக்கில் செல்வதும் இருக்கும்!
எனவே முதலமைச்சர் காமராஜர் திரு–கொச்சி, சித்தூர், இலங்கை முதலிய இடங்களில் வாழ்கின்ற தமிழர்களின் நல்வாழ்வைப் பற்றித் தக்க நடவடிக்கைகளையெடுத்து ஆவன செய்யவேண்டுமென்று மறுமுறையும் வற்புறுத்திக் கூறுகிறேன். இதற்காக அவர் செய்கின்ற காரியங்களில் தி. மு. கழகத்தின் ஒத்துழைப்பு அவருக்கு நிச்சயமாகக் கிடைக்கும் என்று உறுதி கூறுகிறேன்.
காமராஜர், நேரு போன்றவர்கள் பிரிவினை சக்திகளைப் பற்றிச் சமீபத்தில் ஏதேதோ பேசியதாகப் பத்திரிகைகளில் படித்தேன். இவை யாவும் அரசியலில் அடிக்கடி அவர்கள் பாடிவரும் அரசியல் பாகவதமே தவிர ஒன்றும் புதிதல்ல. இதற்காக நாம் கவலைப்படத் தேவையும் இல்லையே!
மற்றவர்கள் என்னதான் பிரிவினை சக்திகளைக் கண்டித்துப் பேசினாலும், நாம் நமக்குள்ள நியாயமான உரிமையைப் பெறுவதைத் தடுக்கமுடியாது. நமது அடிப்படை இலட்சியமான திராவிடநாட்டுப் பிரிவினையைத் தவறு என்று கூறவோ, அல்லது அதனைத் தடுக்கவோ எவராலும் முடியவே முடியாது.
ஆகவே இந்த மாநாட்டில் கூடியுள்ள அத்தனைதோழர்களும், இங்கே பேசப்பட்ட கருத்துக்களைத் தெளிவுடன் சிந்தித்துப் பார்த்து, திராவிட நாட்டின் எதிர்காலம் ஏற்ற முறுவதற்கான வழிவகைகளில் புதிய உற்சாகத்துடன் ஈடுபடும்படிக் கேட்டுக்கொள்கிறேன்.
நாம் நமது இலட்சியத்தையடைய மகத்தான தொண்டு செய்தாகவேண்டும். அதற்கான ஆக்க வேலைகளில் முழு மூச்சுடன் இறங்கியாக வேண்டும். நமது மக்கள் அனைவரிடத்தும், திராவிட இன உணர்வையூட்டி, எழுச்சியை ஏற்படுத்தி, விழிப்புடன் விடுதலைப் போராட்டத்தில் கலந்துகொள்ளத் தயார்செய்ய வேண்டுகிறேன்.