வாழ்க்கைப் புயல்/சூதாடி
சூதாடி
"இஸ்பேட் இரண்டடி, மேல்ஜாக்கும் இருந்தது, சரி, ஒரு கை பார்த்துவிடுவது என்று தீர்மானித்து கேட்டுவிட்டேன்; சனியன்போல், கிளாவர் மணிலா ஒன்று ஷேக்காக இருந்து தொலைச்சுது....."
"எதிர்க் கையிலே கிளாவர் ஜாக்கியோ"
"ஆமாம், அதை ஏன் கேட்கிறே போ. கிளாவர் ஜாக்கேதான், அவன் முதலிலேயே தட்டினான்....."
"அட சனியனே! முதலிலேயே அதுதானா....."
"ஆமாம் சார்! இல்லையானா, எதிலாவது தள்ளித் தொலைத்துவிடுவேனே, கிளாவர் மணிலாவை. சரி என்ன செய்வதுன்னு மணிலாவைப் போட்டேன்"
"போடாவிட்டா, விடுவானா? பிறகு?.....""பிறகா! மேல்ஜாக்கி இருந்ததல்லவா என்னிடம், அந்த ஜாதி அவனிடம் இல்லை; ஒரே ஆஸ் இருந்தது, அதைத் தள்ளிவிட்டான், நான் கவனிக்கவில்லை; ஜாக்கியை தட்டினேன், அவ்வளவுதான், ஒரு 'தழை', எட்டாம் 'பந்து' அதனாலே வெட்டிவிட்டான். அந்த ஜாக்கும் போச்சு”
"முட்டாள்டா நீ. ஏன் முதலிலேயே துருப்பைத் தட்டக்கூடாது?"
"தட்டித் தொலைச்சேண்டா! கணக்கு எண்ணினதிலே தவறிவிட்டேன். துருப்புக் கீழே விழுந்துவிட்டதுன்னு, கணக்குச் செய்துவிட்டேன்"
"சரிதான், தப்பாகக் கணக்கும் போட்டே; ஷேக் மணிலா, வேறு. இந்த இலட்சணத்துக்கு இருநூற்று இருபது கேட்டுட்டே, போடா, போ, பணம் போகாமே, என்ன ஆகும், நீயும் ஒரு ஆட்டக்காரன் தானா?"
"சும்மா இருடா! போன வாரம், அதைவிட மோசமான சீட்டு, தெரியுமா? துருப்பிலே, மணிலா கிடையாது—ஷேக் மணிலா ஒண்ணு, வேறே ஜாதியிலே—ஆனா ஜெயித்து விட்டேன்; தெரியுமா? துருப்பைத் தட்டினேண்டா டடான்னு கீழே மணிலா விழுந்தது, என் ஜோடி, ஆளிடம் மணிலா ஷேக்; மறுபடியும் துருப்பிலே ஒரு தழையைக் கொடுத்தேன்....."
"ஏன்?"
"துருப்பு ஆஸ் வெளியே அல்லவா இருக்கு?"
"அட பாதகா! துருப்பிலே, மணிலாவும் கிடையாது. ஆசும் இல்லை, ஆட்டம் கேட்டுட்டயே, என்ன தைரியண்டா உனக்கு"“கேட்டது மட்டுமா, ஜெயித்தேனேடா ஆட்டத்தை—துருப்புத் தழையைத் தட்டினேனா, ஆஸ் போட்டுப் பிடித்தான்; அவன் ஜதை ஆள் இருக்கானே, அவன் "தொப்புன்னு" ஜாக்கியைத் தூக்கிப்போட்டான் அதன் தலையிலே; எந்த ஜாக்கி தெரியுமோ? நான் ஷேக் மணிலா வைத்திருக்கிறேனே, அதேஜாக்கி. அவ்வளவுதான், அந்தப் பிடியிலே, அவன் கண்டதோடே சரி. நம்ம ஷேக் மணிலா பிழைச்சுது. ஆட்டமும் ஜெயித்தது. அப்படி, சில வேளையிலே, எவ்வளவு மோசமான சீட்டா இருந்தாலும் ஜெயித்துவிடுது, சில நேரத்திலே கல்லாட்டம் சீட்டு இருந்தும் தோத்துப் போகுது."
"ஆமாம்! சரி. போடுவமே நாலு ஆட்டம்"
"இரண்டே பேரா?"
"ஆமா, இரண்டு பேர்லே முன்னூத்தி நாலு, ரொம்ப ஜோரா இருக்கும்டா"
"மேஸ் என்னா?"
"அரையணா ஒரணா"
"சே! வேண்டாண்டா. காலணா அரையணா போதும்"
"சரி போடு. அவங்க வருவதற்குள்ளே, நாலு ஆட்டம் போடலாம்"
இது, பங்களா வாசற்படியை அடுத்து, மோட்டார் ஷெட்டில்! பங்களா சொந்தக்காரர் பார்த்தசாரதி முதலியாரின் மோட்டார் டிரைவர் பாலுவுக்கும், முதலியாரைப் பார்க்கவந்த முத்துசாமி ஐயரின் மோட்டார் டிரைவர் மோசசுக்கும், நடந்த பேச்சு. ஐயர் முதலியாரிடம் பேசிக் கொண்டிருக்கிறார் உள்ளே. மோட்டார் ஷெட்டிலே 304 ஆரம்பமாகிவிட்டது. மளமளவென்று மோசசுக்கு இரண்டேகாலணா போய்விட்டது; பணமாகப் போன இரண்டே காலணாவுடன், தோல்வியால் வந்த கோபத்தை மாற்றிக்கொள்வதற்கு, இரண்டு கத்தரிக்கோல் தீர்ந்துவிட்டது; அது வேறு நஷ்டம்; பணம் அப்படியும் கொஞ்சம் புகைந்துபோயிற்று. பாலுவுக்குப் பரம சந்தோஷம். மோசசுக்குக் கவலை. இருவருக்கும், ஐயரின் குரல் கேட்கவில்லை. அவர் மோட்டார் ஆரன் செய்தபோதுதான் மோசஸ் அலறி அடித்துக்கொண்டு, எழுந்து ஓடினான். ஐயர் கோபமாக இருந்தார். அவசரமாக மோட்டாரண்டை சென்றான், மோசஸ்.
"கழுதே! என்னடா இது? நான் கத்த கத்துன்னு கத்திண்டிருக்கேன், எங்கே போயிருந்தே"
"ஷெட்டுக்கு......"
"ஷெட்டிலே என்ன வேலை உனக்கு?"
"நம்ம கார் பாட்ரி தொல்லை கொடுக்குது பாருங்கோ அதுக்காக....."
"304 ஆடினா, பாட்ரி சரியாப்பூடும்னானா அவன்”
மோசஸ் தலையைச் சொரிந்தான்—ஐயருக்கு எப்படியோ தெரிந்துவிட்டது, சீட்டாடிக்கொண்டிருந்த விஷயம். குறும்புப் பார்வையுடன் தோட்டக்காரப் பையன் நின்றுகொண்டிருந்ததை மோசஸ் பார்த்தான். பயல் இவன் தான் கலக மூட்டிவிட்டான் என்று தெரிந்தது தெரிந்து? பிறகு ஒரு சமயம் கவனித்துக்கொள்வோமென்று தீர்மானித்துக் கொண்டு, மோட்டாரைச் சரிபார்ப்பதுபோல இருந்தான். ஐயர் ஏறினார்—கார் நகர்ந்தது—ஐயர் பேசலானார்."மடையன். இந்தச் சூதாடும் புத்தி உனக்கிருக்கும் வரைக்கும் நீ ஏதடா, உருப்படுவது? எப்பப் பார்த்தாலும், இந்தச் சூதாட்டந்தானே உனக்கு. நீ எப்படி யோக்யமாக நாணயமாக இருக்கமுடியும்? சூதாட்டக்காரப் பயலிடம், எப்படிடா, நாணயம் இருக்கும்?” என்று புத்தி கூறும் பாவனையிலே, திட்டிக்கொண்டே இருந்தார். மோசஸ் என்ன பதில் கூறமுடியும்; கோபந்தான்; ஆனால் அவனோ டிரைவர்; அவரோ முதலாளி; கோபித்து என்ன செய்வது; எதிரே வந்த, இரட்டைமாட்டு வண்டிக்காரன்மீது காட்டினான் கோபத்தை எல்லாம், "புத்தியில்லேடா நாயே! நடுரோட்டிலே என்னாடா வண்டி? ரொம்பத் திமிருடா உங்களுக்கெல்லாம்; ஏன்னா ஆறணாவுக்குக் கேட்பாரத்துக்கிடந்த—வைக்கக் கட்டு இப்ப ஒண்ணரைரூபாய்க்கு விக்கிறதாலே உங்களுக்குத் தலைகால் தெரியலே"
மோசஸ் சொன்ன வார்த்தை, வண்டிக்காரனுக்கு மட்டுமல்ல; மோட்டாருக்குள்ளே உட்கார்ந்துகொண்டிருக்கும் ஐயருக்குத்தான் பொருந்தும். ஐயருடைய "அம்சா மார்க் சோப்" கேட்பாரற்றுத்தான் கிடந்தது. யுத்த காலத் தேவையினாலே, டஜன் ஆறணா தாளிக்கையில்லாத சோப்பு ஒன்று ஆறணாவுக்கு விற்றது, அதனாலேதான் மோசசும் மோட்டாரும், ஐயருக்குக் கிடைக்க முடிந்தது; இது மோசசுக்குத் தெரியும். தெரிந்ததாலேதான், வண்டிக்காரனைத் திட்டினான். ஐயர், கனைத்தார்! அவ்வளவுதானே அவர் செய்ய முடியும்? கேட்க முடியுமா, "டே! மோசஸ்! நீ என்னை மனதிலே வைத்துக்கொண்டுதான் வண்டிக்காரனை திட்டினாய்” என்று. "சரி! விடுடா! இந்தக் கிராமத்தான்கள் இப்படித்தான். நீ விடு, காரை" என்றார். மோசசுக்கு, டபுல மேஸ் வந்ததுபோன்ற சந்தோஷம், கொஞ்சதூரம் சென்று. வேறோர் வீட்டு வாசலில் நின்றது மோட்டார். 'ஆரனை' அடிக்கச் சொன்னார்; இரண்டு மூன்று தடவை அடித்தானதும், உள்ளே இருந்து ஐயரின் மற்றொரு நண்பர், அவசர அவசரமாக, கோட்டிலே ஒரு கையுடன் ஓடி வந்து காரில் ஏறினார். கார் புறப்பட்டது, உள்ளே பேச்சு ஆரம்பித்தது.
முத்துச்சாமி ஐயர்:—சீனு தெரியுமோ விஷயம்?
சீனு:—என்ன? முடிச்சுட்டேளா?
மு:—முடியாமே என்னடா, எல்லாம், எடுத்துப் பேசறதிலேதானே இருக்கு.
சி:—முதலி, ரொம்ப ஜாக்ரதையான பேர்வழியாச்சே. கொஞ்சத்திலே அகப்பட்டுக்கொள்ளமாட்டானே.
மு:—அவன் 'சீட்டு' என்னான்னு எனக்குத் தெரியாதா? அதை வெட்டுவதற்கு என்னிடம் துருப்பு இல்லையா?
சி:—ஆமாம்-நடந்ததைச் சொல்லும்-நிஜமாவா சிக்கிண்டான்.
து:—டாட்டா ஷேர் வேணுமான்னு ஆரம்பிச்சேங்காணும் முதலிலே.....
சி: சாமார்த்தியமாகத்தான் ஆரம்பிச்சிருக்கீர்—முதலிலே உமக்கு ஷேர் வேணும்னு பேச்சு ஆரம்பிச்சிருந்தா படிந்திராது.
மு: முட்டாள் தானே ஓய், தன் கைத் துருப்பைப் பாழாக்கிண்டு, பேந்தப் பேந்த விழிப்பான், நானாகப் போய், உம்ம 'லட்சுமிராஜ்' ஷேர் விலைக்குத் தருகிறீரான்னு கேட்கணுமா?
சி:—உமக்கா சொல்லணும்! சரி, டாட்டா வேணுமான்னு ஆரம்பிச்சீர்—பிறகு......மு: டாட்டா தானய்யா உனக்குத் தெரியும்—என்னா அதுதானே பிரத்யாதியா இருக்கு — மற்ற ஷேரெல்லாம் மண்ணுன்னு நினைக்கிறீராக்கும்னு அவன் ஆரம்பிச்சான்.
சீ : ஓஹோ! அவன் அப்படி ஆரம்பிச்சானா அதாவது லட்சுமிராஜ் ஷேரின் பெருமையைச் சொல்ல அஸ்திவாரம் போட்டான்.
மு : போட்டான்! மண்டுவுக்கு, அவன் போடுகிற அஸ்திவாரத்தை நான் இடிக்கிறேன் என்பது தெரிந்ததா! "முதலியாரே! டாட்டா கம்பெனி ஷேர்னா, அது பவுன் மாதிரி, மற்றதுகளை அப்படிச் சொல்ல முடியாது; ஆனா நீர் வேறு மாதிரியாகத்தான் பேசுவீர், ஏன்னா..." என்று இழுத்தாப்போலப் பேசினேன். உடனே, கோபம் வந்துவிட்டது முதலியாருக்கு, "அப்படியானா, லட்சுமி ராஜ் ஷேர் தம்பிடிக்குப் பிரயோஜனமில்லைன்னுசொல்லும்" என்று சீறினான். "முதலியார்! கோபப்படாதீர்கள். என் வாய் கொஞ்சம் அறுதல். நான் புறப்படும்போதே, நாம் வாயைத் திறந்து ஒண்ணும் பேசப்படாது. பேசினா, நாம் சத்யத்துக்குத்தான் பாடுபட்றோம் என்கிற விஷயம் தெரியாமல் முதலியார் நம்மீதுதான் கோபிப்பார்னு நினைச்சேன். ஆனா. பிறகு, எப்படி நமக்குத் தெரிந்ததை அவரிடம் சொல்லாமலிருப்பது—நமக்கு வந்தால் என்ன, அவருக்கு கஷ்டம் வந்தால் என்ன, அவர் நம்ம பால்ய சினேகிதராகச்சேன்னு மனசு அடிச்சிண்டது. அதனாலேதான் இந்தப் பேச்சையே ஆரம்பிச்சேன், உமக்குக் கோபம் வாரது சகஜம், ஏன்னா, லட்சுமிராஜ் ஷேர் உம்மிடம் ஐம்பதோ நூறோ இருப்பதாகக் கேள்வி எனக்கு....." என்று சொன்னேன். "அட, ஐந்நூறு இருக்கய்யா, அதுக்கென்ன இப்போ. 'லட்சுமிராஜ்' ஷேரை, நீ கிள்ளுக்கீரைன்னு— நினைச்சிக்கோ, எனக்குத் தெரியும் அதனுடைய மதிப்பு" என்று மேலும் கோபமாகவே சொன்னார்.
சீ:—ஆமாம்னா, அவன் பிடிவாதக்கரான்.....
மு:—பிடியும் வாதமும், கேளும் மேற்கொண்டு நடந்ததை. முதலியார்! நீங்க, அதற்குப் பேரு லட்சுமின்னும் ராஜுன்னும் இருப்பதாலேயே மதிப்புக் குறையவே குறையாதுன்னு நினைக்கிறீரான்னு கேலி செய்து, கோபத்தை இன்னும் கொஞ்சம் ஏற்றிவிட்டேன்.
சீ:—துருப்புத் தழையை இறக்கி, எதிர்க்கை ஜாக்கியைக் கீழே விழவைக்கிறமாதிரியாகச் செய்தீர்.
மு:—கேளுமய்யா, விஷயத்தை, லட்சுமி ராஜுக்கு என்ன குறைவுன்னு சொல்கிறீர் இப்போ. சீனு இருக்கானே. அவன் நேத்துத் தலைகீழாக நின்று பார்த்தான், அதை வாங்க, என்று அப்போதுதான், உன் விஷயத்தை ஆரம்பித்தார்.
சீ:—பார்த்தீரா! அவ்வளவு நேரம், என் பேச்சையே எடுக்கவில்லை....."
மு:—நான் மட்டும், தந்தியை உடனே எடுத்துக்காட்டினேனா?
சீ:—எந்தத் தந்தியை?
மு:—அது தானய்யா, என் மாமியாளுக்கு உடம்பு சரியில்லைன்னு தந்தி வந்ததே, நேத்தைக்கு உம்மிடம் காட்டலே நான்.
சீ:—ஆமாம் அந்தத் தந்தி எதுக்கு?மு:—அதுதான் ஓய். துருப்பு ஜாக்கியா இருந்தது. கேட்டுண்டுவாரும் விஷயத்தை. முதலியார், லட்சுமிராஜ் பற்றிப் பிரமாதமாகப் புகழ்ந்தான பிறகு, பொறுமையாகச் சகலத்தையும் கேட்டுண்டு இருந்துவிட்டு, "முதலியார்! இதைப்பாருங்கள்" என்று சொல்லித் தந்தியை நீட்டினேன். வாங்கிப் பார்த்தான் — முகம் வெளுத்துப் போச்சு.
சீ:—ஏன்?
மு:—ஏனாம்? தந்தியிலே என்ன இருந்தது, நீர் சரியா வாசிக்கலையோ?
சீ:—உம்ம மாமியாளுக்கு.....
மு:—ஆமய்யா, ஆபத்தா இருக்குன்னு இருந்தது. அது நேக்குத் தெரியும், உமக்குத் தெரியும், அவன் கண்டானோ அதை. தந்தியிலே என்ன வாசகம் இருந்தது.
"லட்சுமி ராஜ் சிங்கிங்" (Lakshmi Raj sinking) அதாவது, லட்சுமி ராஜ் பிராணன் போயிண்டிருக்கு, முழுகிண்டிருக்குன்னு அம்பி தந்தி கொடுத்திருந்தான். முதலியாருக்கு அந்த சூட்சமம் என்ன தெரியும்? லட்சுமி ராஜ் என்றால், 'ஷேர்' என்று எண்ணிக்கொண்டார்—சிங்கிங், முழுகிண்டிருக்குன்னா, எப்படி இருக்கும் அவனுக்கு. "இருக்குங்களா?" என்று பயந்து கேட்டான். அம்பிக்கு நான் சொல்லி வைத்திருந்தேன்; லட்சுமி ராஜ் ஷேர் விஷயமா. அதுவும் நீர் அதை வாங்கி இருந்ததாலே, முதலியார் தெரியாமலா வாங்கி இருப்பார், நாமும் அதையே வாங்கிப்போட்டு வைப்போம்னுதான் நினைச்சேன் ஒரு நிமிஷத்திலே ஒன்பது தடவை, தந்தியை மறுபடியும் மறுபடியும் பார்த்தான்—என்ன பண்ணுவான்—தந்தியை மேஜைமேலே வீசினான்—பயல்கள் என்னை ஏமாத்தி விட்டான்கள்—லட்சுமிராஜ் கல்மாதிரி, அசையாதுன்னு சொல்லி ஆசை காட்டினார்கள், என்று கோபமாகப் பேச ஆரம்பித்தார். ஆமாம், ஷேர் வியாபாரமே ஒரு சூதாட்டந்தானே என்று நான் சொன்னேன்.....சூதாட்டம் தேவலாம், இது மகா பெரிய சூதாட்டமாக அல்லவா இருக்கு என்று ஆயாசப்பட்டார். சரிதான் முதலியாரே! தந்தி எனக்குத்தான் வந்தது, ஊரிலே யாருக்கும் தெரியாது—அம்பிக்கு உள் உளவு தெரியும். அதனாலே அவனுக்கு இரகசியம் முதலிலே தெரிந்துவிட்டது. அதனாலே யாருக்காவது தள்ளிவிட்டுவிடும் அந்தச் சனியனை என்றேன். அவன், யாரையாவது பார்க்கும்படி என்னையே கேட்டுக் கொண்டான்.
சீ:—சரின்னு ஒப்புண்டீராக்கும்.
மு:—மண்டுவா நான், நான் எப்படி முதலியாரே, சத்யத்துக்கு விரோகமாகப் போகமுடியும் — மனதறிந்து பொய் பேசறதுன்னா.....என்றேன். சரி, எனக்கு ஒரு உபகாரம் செய்யுங்கள், அது போதும். லட்சுமிராஜ் ஷேர் விழுந்துவிட்டதுங்கிற விஷயத்தை மட்டும், வெளியே சொல்லாமலிரும் என்று கெஞ்சினான். சரின்னு ஒப்புக்கொண்டேன்.
சீ:—பேஷ்! பலே சமர்த்தா முடித்திருக்கிறீர் காரியத்தை.
மு:—ஆகையினாலே, நான் மோட்டாரை நிறுத்தச் சொல்கிறேன். இறங்கி, எதிரே பஸ் வரும். ஏறிண்டு நேரே முதலியாரிடம் போனா, காரியம் பலித்துவிடும்—என்னைப் பார்த்து மூணு நாளாச்சின்னு சொல்லும்.கார் நிறுத்தப்பட்டு, சீனு கீழே இறக்கப்பட்டார்—கார் மீண்டும் புறப்பட்டது.
"எங்கே, வீட்டுக்கா, கிளப்புக்கா?" என்று கேட்டான் மோசஸ்.
"வீட்டுக்குத்தான். ஏண்டா மோசஸ்! உனக்குப் பசங்க எத்தனை?" என்று ஐயர் கேட்டார்.
"மூணு" என்று சுருக்கமாகப் பதிலளித்தான் மோசஸ்.
"மூணு பசங்களுக்குத் தகப்பனாகி இருக்கிறே. சூதாட்டத்தை விடமாட்டேன்கிறயே ஏண்டா, சூதாட்டப்புத்தி இருந்தா எப்படியடா உருப்படமுடியும்?" என்று மறுபடியும் உபதேசம் செய்யலானார். அடிக்கடி மோட்டார் 'ஆரனை' உபயோகப்படுத்தித் தன் கோபத்தை மோசஸ் போக்கிக்கொள்ள முயன்றான். "மோசஸ்! ஒரு விஷயம் கேள். சூதாடி என்னடா சம்பாதிக்க முடியும். இல்லை, பணமே, அதிலே கிடைக்கிறதுன்னே வைச்சுக்கோ, குதாடிப் பிழைக்கிறது ஒரு பிழைப்பாகுமா—மோசஸ்!....." என்று ஐயர் சூதாட்டத்தின் தீமைகளை மேலும் விவரிக்கலானார். மோசஸ் சலிப்பும் கோபமும் கொண்டவனாய், அவர் வார்த்தைக்கு 'உம்' கொட்டவில்லை. ஐயர், "ஏண்டா மோசஸ்! நான் சொல்றது காதிலே விழலயா?" என்று கேட்டார். ஒரு சிரிப்புடன் மோசஸ் சொன்னான், "நான் செவிடனல்ல, நீங்க பேசறது நல்லாக் காதிலே விழுகிறது" என்றான். அவன் கோபித்துக் கொண்டான் என்று ஐயர் தெரிந்துகொண்டார். ஆனால் அவன் கோபத்துக்குக் காரணம் தெரியாது அவருக்கு.சூதாட்டத்தைக் கண்டிப்பவர், நடத்திய சூதாட்டத்தைப்பற்றி அவரே பெருமையாகச் சீனுவிடம் பேசியதை மோசஸ் கேட்டுக்கொண்டுதானே இருந்தான். அத்தகைய இலாபச் சூதாட்டக்காரர், பொழுதுபோக்காகவும், மனதிலே கொஞ்சம் கிளர்ச்சி வேண்டுமென்றும், சீட்டு ஆடுவதைச் சூதாட்டம் என்றால் அவனுக்குக் கோபம் வராமலிருக்குமா? அவன் செவிடனா, சீனுவும் முத்துசாமி ஐயரும் பேசினது காதில் விழாமலிருக்க! நன்றாகக் கேட்டது. ஆனால் அவன் பேசமுடியாதே! ஊமையல்ல, ஆனால் ஊழியக்காரன்; எப்படி முதல்தரமான சூதாட்டக்காரர், இஸ்பேட்—கிளாவர்—போன்ற சீட்டுகளில் அல்ல, லட்சுமிராஜ்—காமதேனு—காந்தா முதலிய ஷேர்களைச் சீட்டுகளாகக் கொண்ட சூதாட்டக்காரர் என்ற உண்மையை எப்படிப் பேசமுடியும்!