ரோமாபுரிப் பாண்டியன்
47
புலவர் இந்தக் கேள்விக்கு மகளிடமிருந்து என்ன பதில் வருமோ எனப் பயந்தார்! ஒருவேளை, செழியனைப் பகைவர்கள் பழிக்குப்பழி தீர்த்து விட்டார்களோ என்ற ஐயம் அவரை அலைக்கழித்தது.
"வழக்கம்போல் சிவனடியார்கள் தெருவில் வரும் ஒலி கேட்டு, கதவு மூடியிருந்ததால் நாம் மதிக்கவில்லையென்று அடியார்கள் தவறாகக் கருதுவார்களோ என்று பயந்து, ஓடிப்போய்க் கதவைத் திறந்தேன். அவர்களோ 'குபுகுபு' வென வீட்டுக்குள் நுழைந்தார்கள். செழியனை வளைத்துக் கொண்டு தூக்கிச்செல்ல முயன்றார்கள். நான் தடுத்திட முயன்றேன். என் முகத்தில் ஏதோ ஒரு பச்சிலைக் கொத்தைக் காட்டினார்கள். அவ்வளவுதான்; எனக்குத் தலை சுற்றியது; மயக்கம் ஏற்படுவதை என்னால் உணரமுடிந்தது. நிற்க முடியவில்லை; உட்கார்ந்தேன். அதற்குள் அவரைத் தூக்கிக் கொண்டு அந்த அடியார்கள் ஓட்டம் பிடித்தார்கள். நான் வேகமாக எழுந்தேன், தடாலெனக் கீழே விழுந்தேன்; பிறகு எதுவும் எனக்குத் தெரியாது."
இந்த பதிலை முத்துநகை சொல்லி முடித்ததும் புலவர் காரிக்கண்ணனாருக்குப் புதிய குழப்பம் மூண்டது. உடனே ஓடிப்போய்ச் சோழன் கரிகாலனிடமும் பெருவழுதிப் பாண்டியனிடமும் செய்தியைச் சொல்லவேண்டும் என்று எண்ணியெழுந்தார். "அரண்மனைக்குப் போய் உடனே அரசர்க்குத் தகவல் கொடுத்து வருகிறேன்" என்று மகளிடமும் சொல்லிக்கொண்டுப் புறப்பட்டார்.
ஆனால் புறப்பட்டவர் வாயிற்படி தாண்டாமல் திரும்பிவந்து திகைத்து நின்றார்.
“ஏனப்பா திரும்பி விட்டீர்கள்?" என்று முத்துநகை ஆவல் ததும்பக் கேட்டாள்.
"ஒன்றுமில்லையம்மா! முதலில் செழியனைக் காணவில்லை என்று அரண்மனையில் மன்னர்களிடம் செய்தி வந்தது. அப்போது நானும் அங்கேயிருந்தேன். செழியன் நம் வீட்டில் இருக்கும் செய்தியைக் கூறிவிடலாம் என்று நினைத்தேன். ஆனால் செழியனின் வேண்டுகோள் என் நெஞ்சிலே நின்றது. அவன் சொன்னதை மீறிச் செய்தியை வெளியிடுவானேன் என்று மௌனமாயிருந்து விட்டேன். இப்போது போய்ச் செழியனை யாரோ தூக்கிக் கொண்டு போய்விட்டார்கள் என்று நான் கூறினால் முதலில் செழியன் இங்கு இருந்ததை ஏன் சொல்லவில்லை என்று கேட்பார்கள். பாண்டியராவது பரவாயில்லை. கரிகால் மன்னரிடம் யாரம்மா பதில் சொல்ல முடியும்? மன்னரின் கேள்வியும் நிச்சயமாக நியாயமாகத்தான் இருக்கும். நான் செழியன் இருக்குமிடத்தை முன்பே கூறியிருந்தால் இப்போது செழியனுக்கு இந்த