உள்ளடக்கத்துக்குச் செல்

கொள்கையில் குழப்பமேன்?/கட்டுரை 1

விக்கிமூலம் இலிருந்து


தம்பி !

கூத்தாடிகள்
கூவிக்கிடப்போர்
அடுக்குமொழியினர்
ஆபாச நடையினர்
பணம் தேடிகள்
பதவிப்பித்தர்கள்
காமச்சுவைப் பேச்சினர்
கதை எழுதிப் பிழைப்போர்
அன்னக்காவடிகள்
ஆடி அலைபவர்கள்.

இவை, 'குரு' எனக்காகக் தேர்ந்தெடுத்து ஏவிய கணைகள்—அவரைவிட்டு நான் தனியாகக் கிளம்ப நேரிட்டபோது.

காங்கிரஸ் வட்டாரத்துக்குச் சொல்லொணாத குதூகலம்.

வேண்டும் பயலுக்கு! இதுவும் வேண்டும், இதற்கு மேலும் வேண்டும்! பெரியாருடன் கூடிக்கொண்டு, 'பொடியன்' காங்கிரஸ் மகாசபையையே அல்லவா கண்டித்தான்.

படித்தவர்கள் அனைவரும் காங்கிரஸ் கட்சி—அரசியல் அறியாத அப்பாவிகளும், கிழக்குமேற்குத் தெரியாத ஏமாளிகளும்தான் வேறு வேறு கட்சிகளில், என்று நாம் கூறிக்கொண்டிருந்தோம்—எக்களித்துக் கிடந்தோம்; பல் போனதுகள்—பட்டம் இழந்ததுகள்—சரிகைக்குல்லாய்கள்—சலாமிட்டு வாழ்ந்ததுகள்—ஆகிய வகையினர் மட்டுமே காங்கிரசை எதிர்ப்பர்—இளைஞர்கள்—இளித்துக் கிடக்கவேண்டிய நிலையில்லாதவர்கள்—நிமிர்ந்த நெஞ்சினர்—இவர்களெல்லாம் காங்கிரசில் தான் இருக்க முடியும் என்றோம். இந்த அண்ணாத்துரை நமது வார்த்தையைப் பொய்யாக்கி, நான் இளைஞன் ! நான் சரிகைக் குல்லாய்க்காரன் அல்ல ! படித்துமிருக்கிறேன், பதவிக்காகப் பல்லிளித்துக் கிடக்கவில்லை; நான் கண்டிருக்கிறேன் காங்கிரசின் போக்கை என்று பேசி, இளைஞர்களிடம் இருந்துவந்த அழுத்தமான காங்கிரஸ் பக்தியைப் பாழாக்கினானே ! பயலுக்கு இப்போது கிடைக்கிறது சரியான சவுக்கடி ! சுடச்சுடக் கொடுக்கிறார் ! சுற்றிச் சுற்றிக் கொடுக்கிறார் ! எந்தப் பெரியாருக்குப் பராக்குக் கூறிக்கொண்டிருந்தானே, அதே பெரியார் கொடுக்கிறார் சூடு ! துடிக்கிறான் ! சுருண்டு கீழே விழுகிறான் ! வேண்டும் பயலுக்கு; இதுவும் வேண்டும். இதற்கு மேலும் வேண்டும்!!—என்று காங்கிரஸ் வட்டாரத்தினர் கூறிக் களிப்படைந்தனர்.

பெரியார் பேசக் கேட்டுக் கேட்டுத்தான், காங்கிரஸ் வட்டாரமே, என்னை ஏரக்கற்றுக்கொண்டது; பயிற்சியே அவர்களுக்கு அந்த முறையிலே கிடைத்ததுதான்.

முதலிலே, பெரியார் என்னை ஏசிப்பேசக்கேட்டு மகிழ்ந்தனர்—காதுகுளிர! பிறகு, தாங்களே பேசலாயினர்—நாமணக்க!!

என்ன தெரியும் இந்த அண்ணாத்துரைக்கு என்று துவக்கினர்களானால், காங்கிரஸ் பேச்சாளர்கள் தங்கள் வசம் உள்ள நாராசம் அவ்வளவும் தீருமளவு பேசித் தீர்ப்பார்கள்.

அந்த ஆர்வத்திலே, ஆவேசத்திலே, சபர்மதிச் சிறப்பு, தண்டியாத்திரையின் மகிமை, உப்புச் சத்யாக்கிரகப் பெருமை, இர்வின்—காந்தி ஒப்பந்த அருமை என்பவையாவும் அவர்களுக்கு மறந்தேபோய்விடும்!

அவர்களுக்கு ஒரே நோக்கம்—இந்த அண்ணாத்துரைக்கு இழிவுவந்து சேர்ந்தாகவேண்டும்—இதைச் சாதித்துவிட்டுத்தான் பிறகு, மற்றவை; முடிந்தால்; நேரம் கிடைத்தால்.

இந்தச் சாமரம் வீசியபடிதான், என்னை அரசியல் உலகிலே உலாவர வைத்தனர். எனக்கு அது பழக்கமாகவும் ஆகிவிட்டது.

அப்போதெல்லாம், இவ்விதமான கண்மூடித்தனமான கண்டனங்களை, இழிமொழிகளை, பழிச்சொற்களைக் கேட்டுக் கொதித்து, குமுறி, கோபம் கொப்பளிக்கும் நிலைபெற்று, ஆகுமா இந்த அக்ரமம்! அண்ணாவையா இப்படித் தூற்றுகிறீர்கள் ! அவர் நடையையா பழிக்கிறீர்கள் !—என்றெல்லாம் கேட்டு, பதிலளித்து, என்மீது விழும் தூசுகளைத் தன் அன்புக்கரத்தால் துடைத்து, என் அண்ணன் மாசுமருவற்றவன் என்று மகிழ்ந்து கொண்டாடியவர்களிலே, முதன்மை இடம், தோழர் சம்பத்துக்கு என்பதை நாடு அறியும்?

எனக்காக அந்த அரும்பணியாற்றியதற்கு, நான் செய்யக்கூடிய 'கைம்மாறு' என்ன இருக்கமுடியும் ?

உண்ணாவிரதத்தை முடிக்கும்போது, உள்ளே சென்ற பழரசம், விக்கலால் வெளியே வந்ததுகண்டு சிந்தினேனே கண்ணீர், அதுவா! தூ!! உப்புத்தண்ணீர்! உபயோகமற்ற தண்ணீர்! கண் என்று இருந்தால், கண்ணீர் வருகிறது—இது ஒரு பெரிய விஷயமா!!

கைம்மாறு ஏதும் செய்திட இயலாத நிலையில் இருந்தேன் இத்தனை காலம்—இப்போதுதான் அந்த வாய்ப்புக் கிடைத்திருக்கிறது; பெரியாரும் காங்கிரஸ்காரர்களும் என்னென்ன ஏசினார்களோ, அதை அப்படியே, சிந்தாமல் சிதறாமல் எடுத்துவைத்துக்கொண்டு தோழர் சம்பத் பேசுகிறார்—தாங்கிக்கொள்கிறேன்—அதுதான் நான் காட்டவேண்டிய 'கைம்மாறு' என்றும் கொள்கிறேன்.

கடனைத் திருப்பிச் செலுத்திவிட்டவனுக்கு ஏற்படும் மனநிம்மதி எனக்கு ஏற்படுகிறது.

பெரியாரும், காங்கிரசாரும், இந்த வசவுகளை வீசியபோது, எப்படி, என்னை அறிந்ததால், இதயத்தில் கொண்டதால், அந்தச் சொற்களை, தம்பி! நீ பொருட்படுத்தவில்லையோ அதுபோலவேதான் இதற்கும்.

குயிலுக்கு, கிளியின் அழகு இல்லை; என்ன செய்வது ! அந்த அழகு பெற்றுக்கொண்ட பிறகு கூவிட வாராய்—என்றா கூறுகிறோம்? இல்லையல்லவா ! ஏதோ நிறம் கருமை எனினும், குரல் இனிமை—அதைச் சுவைப்போம் என்று இருக்கிறோம். அஃதேபோல, எல்லாத் திறமைகளும் குறைவற வந்து குவிந்தான பிறகுதான், 'அண்ணன்' என்று ஏற்றுக்கொள்வேன்—அதுவரையில் முடியாது என்று இலட்சக்கணக்கான தம்பிமார்கள் கூறிவிடவில்லை; கூறியிருந்தாலும் நான் என்ன செய்ய முடியும்? பெருமூச்சுடன் உலவிக்கொண்டிருந்திருப்பேன்.

காமராஜர் அதிகாலையில் எழுந்திருக்கிறாராம்—கனம் சுப்ரமணியம் கடலோரம் நடக்கிறாராம்—மாணிக்கவேலர் மரத்தடி படுக்கிறாராம்— இப்படி ஒவ்வொரு தலைவருக்கும் உள்ள பல சிறப்பு இயல்புகளைப் பலர், சுட்டிக் காட்டுவர். எல்லாத் தலைவர்களிடமும் உள்ள எல்லாச் சிறப்பு இயல்புகளும், ஒருங்கே அமையப் பெற்றாலொழிய, உன்னை என் 'அண்ணன்' என்று ஏற்றுக்கொள்ளமாட்டேன் என்றா கூறினீர்கள் ? இல்லையே! கூறியிருந்தால் என்ன செய்திருப்பேன்? நமக்கு இப்படிப்பட்ட அருமைத் தோழர்களைத் தம்பிகளாகப் பெறும் வாய்ப்பு இல்லாது போயிற்றே என்று மனம் குமுறி இருப்பேன். எதற்குச் சொல்கிறேன் என்றால், பாசமும் நேசமும் ஏற்பட்டால், திறமைகள் முற்றிலும் நிரம்பி இருக்கிறதா என்றுகூடக் கவனிக்கச் சொல்லாது; இருப்பதைக் கண்டு மகிழவைத்திடும்.

அவ்விதம்தான் நான் உன் போன்றாரின் அன்புப் பாராட்டுதலைப் பெற்றேன்.

அதனால், எனக்குத் திறமைகளைப் பெற வேண்டுமே என்ற அவசர ஆர்வம்கூட ஏற்பட்டது என்று கூறலாம். இலட்சக்கணக்கானவர்கள், நமக்குத் தமது இதயத்திலே இடமளித்திருக்கிறார்களே, அதற்கு ஏற்ற முறையில் அவர்கள் மகிழத்தக்க விதத்தில், பெருமைப்படத்தக்க வகையிலே, நாம் திறமைகளைத் தேடிப் பெற்றாகவேண்டுமே என்ற எண்ணம் எழுந்தது. எல்லாத் திறமைகளையும் பெற்றுவிட முடியுமா?

முடியாதுதான்!

ஏன்?

காலம் போதாது என்பது மட்டுமல்ல; திறமை எது என்பது பற்றிய கருத்தே, காலத்தோடு சேர்ந்து வளர்ந்த வண்ணம் இருக்கிறது; திறமைக்கான இலக்கணம் மாறுகிறது; திறமைபற்றிய மதிப்பீட்டுத்தன்மை மாறுகிறது; திறமை கண்டு பாராட்டும் போக்கேகூட அவ்வப்போது மாறுகிறது.

ஏதோ ஓர் ஏட்டிலே படித்ததாக நினைவு: பிரிட்டிஷ் பாராளுமன்றப் பேச்சுகள், சர்ச்சில் காலத்திலே இருந்தது போல, இலக்கியச் சுவை நிரம்பியதாக இப்போது இல்லை என்று.

பிரிட்டன் சென்று திரும்பியவர்களும் இதனையே கூறக்கேட்டுமிருக்கிறேன்.

உண்மை என்னவென்றால், இப்போது, அந்தப் பாணியில் பேசுபவர்கள் இல்லை என்பது மட்டுமல்ல, பேசினால் சுவைபடுமா என்பதே ஐயப்பாட்டுக்கு உரியது.

ஏனெனில், திறமையைச் சுவைப்பதிலே எப்போதும் நாட்டம் உண்டு என்றாலும், ஒருகாலத்திலே சுவை தருவதாகக் கருதப்பட்டுவந்த திறமை, பிறிதொரு காலத்தில் சுவை தருவதாக அமையாது போகக் கூடும்.

எனவே, நான் எல்லாத் திறமைகளையும் பெறமுடியும் என்றும் நம்புவனுமல்ல; திறமைகளின் இலக்கணம் மாறக் கூடியது என்பதை அறியாதவனுமல்ல. குறைகளுடன் கூடியவனானாலும், அன்பு காட்டுவோர் தமது அன்பை அதற்காக நிறுத்திவிட மாட்டார்கள்.

தங்கத்திலே ஒரு குறை உண்டானால்
தரமும் குறைவதுண்டோ?
உங்கள் அங்கத்திலே ஒரு குறை உண்டானால்
அன்பு குறைவதுண்டோ?

இதிலே இன்னொரு வேடிக்கையும் இழைந்து நிற்கிறது.

பெரியாரும், காங்கிரஸ்காரர்களும், இழி மொழிகளையும் பழிச்சொற்களையும் வீசி, குறையைச் சுட்டிக்காட்டுகிறோம் என்று சொன்னார்களே, அப்போதெல்லாம், மெள்ள ஒரு வார்த்தை, "ஆமண்ணா! குறைகள்தாம் இவை!" என்று எனக்கு, இன்று கண்டிப்பவர்கள், எடுத்துக்காட்டினார்களா என்றால். இல்லை! மாறாக, என்மீது பழி கூறியவர்களுக்குப் பளிச்சுப் பளிச்சென்று பதிலளித்தனர்.

சில வேளைகளிலே, அப்படிப் பதிலளிக்கும்போது, பக்கத்தில் இருந்து கேட்க, எனக்கே கூச்சமாக இருக்கும்—அப்படிப்பட்ட பாராட்டுதல், புகழுரைகள்!

அப்போதும் நான், அவர்களின் நடையழகு கேட்டு இன்புற்றேனேயன்றி, புகழுரையால் மயங்கிப் போய்விடவில்லை.

அண்ணன் அப்படிப்பட்டவன், இப்படிப்பட்டவன் என்று புகழ்ந்து பேசுவது, அண்ணனுக்கு மட்டுமல்ல, தனக்கும், மொத்தமாகக் குடும்பத்துக்கும், பெருமையைத் தேடித் தருகிற காரியம்தானே !

தம்பி! இதை இப்போது கூறக் காரணம், தூற்றல் கணைகள் என்மீது ஏவப்படும்போதெல்லாம், நான் வரவு—செலவு கணக்குப் பார்த்து, மகிழ்ச்சியைத் தருவித்துக் கொள்பவன்—மனம் நொந்து போய்விடுபவன் அல்ல என்பதை எடுத்துக்காட்டத்தான்.

எந்தத் தூற்றலையும் தான் எடுத்து ஆராய்ந்து பாரேன், நான் கூறுவது தெரியும் விளக்கமாக.

எவர் தூற்றினாலும், முன் நடவடிக்கைகளை ஆராய்ந்து பாரேன்— நான் கூறுவது பளிச்செனத் தெரியும்.

மூன்றாம் படிவ மாணவனாக இருந்தபோது, ஆசிரியர் சொன்ன கதை நினைவிற்கு வருகிறது. ஒரு அரசியல் தலைவன் என்போன், கதை சொல்லலாமா என்று கேட்டு விடாதே—நான் அப்படி!—என்ன செய்யலாம்!! கதையைக்கேளேன்—கருத்து இருக்கிறது.

ஒரு மருத்துவன், பிழைப்பு நாடி வேற்றூர் சென்றானாம்—ஒரு நாள் காலை அந்த ஊர் மக்களிலே, பலர், காலை வெயிலில் உலவிக்கொண்டும், வேலை செய்துகொண்டும் இருக்கக் கண்டான். மெத்த மகிழ்ச்சி ஏற்பட்டதாம் மருத்துவனுக்கு, காலை வெயில், பித்தம் உண்டாக்கும். இந்த ஊர் மக்கள், காலை வெயிலில் கிடக்கிறார்கள்; நிச்சயமாக, பித்தம் சம்பந்தப்பட்ட நோய் உண்டாகும், நமக்கு நிறைய வருமானம் கிடைக்கும்; ஏற்ற இடம்; என்று எண்ணி மகிழ்ச்சி அடைந்து, தன் ஊர் சென்று, மருந்தும் பெட்டிகளுடன், மாலை, வந்தானாம். வந்ததும், மகிழ்ச்சியே போய்விட்டதாம்; கவலை பிடித்தாட்டிற்றாம். காரணம் என்ன என்றால், ஊர் மக்கள், மாலையில் மஞ்சள் வெயிலில் காய்ந்துகொண்டிருந்ததைக் கண்டான்; மாலை வேளையில் மஞ்சள் வெயில் உடலில் பட்டால், பித்தம் போய்விடும் என்பது மருத்துவ உண்மை ! மருத்துவன் என்ன செய்வான் ! இந்த ஊர் பயனில்லை என்று எண்ணி, வேறு இடம் நாடினானாம்.

தம்பி ! பொதுவாழ்க்கையில் ஈடுபட்ட நாளாய், என் நிலை, ஏறக்குறைய, கதையில் குறிப்பிட்டேனே, ஒரு ஊர் மக்கள், அவர்கள் நிலையைப்போல் இருந்து வருகிறது; ஆகவே தூற்றித் துளைக்கலாம் என்று எண்ணுபவர்கள். நான் உங்கள் அன்புக் கரங்களின் அரவணைப்பில் உள்ள காரணத்தால், தொடர்ந்து ஏமாற்றமே காண்கின்றனர்.

என் இயல்போ என்னை எவர் எக்காரணம் கொண்டு, எத்தகைய இழிமொழி கொண்டு தாக்கினாலும், அவர்கள் எப்போதாவது என்னைப்பற்றி ஏதாகிலும் இரண்டொரு நல்ல வார்த்தைகள் சொல்லியிருந்தால், அதை நினைவுபடுத்திக்கொண்டு, மனதுக்கு ஆறுதலும் மகிழ்ச்சியும் தேடிக்கொள்வது வாடிக்கை. அதுமட்டும் அல்ல, அன்று நம்மை எவ்வளவோ அன்புடன் பாராட்டினவர்கள் தானே; இப்போது நாலு கடுமொழி பேசிவிட்டால் என்ன ! போகட்டும் என்று எண்ணிக் கொள்பவன்.

வாழ்க வசவாளர்கள் என்று முன்பு ஒருமுறை நான் எழுதியது, வெறும் சொல்லடுக்கு அல்ல; என் உள்ளக் கிடக்கையைத்தான் குறிப்பிட்டேன்.

சட்டசபையிலே நாம் திறமையுடன் நடந்து கொள்வதில்லை— மந்திரிகளே இடித்துப் பேசி, ஏளனம் செய்யும் நிலைக்குச் சென்றுவிட்டோம்—என்று கண்டிக்கிறார்கள்.

திராவிட நாடு பகற்கனவாகிவிட்டது; தமிழ்நாட்டிலேயே இருந்துகொண்டு, திராவிட நாடு பற்றிப் பேசுவது பைத்யக்காரத்தனம்—தமிழ் நாடு போதும் என்று கூறிவிடலாம் என்று கண்டனத்துடன் அறிவுரை வழங்கப்படுகிறது.

கலைஞர்கள் கழகத்தில் புகுந்து, எல்லாம் கெட்டுவிட்டது என்று பலமாகக் கண்டிக்கிறார்கள்.

இவைகளைத் தத்துவ விளக்கம் போன்ற முறையிலே அல்ல, குற்றச்சாட்டுகளாக, இழிமொழிகளால், கூறு கிறார்கள்.

மற்றவை இருக்கட்டும்; பலமான மூன்று குற்றச்சாட்டுகளைக் கூறுகிறார்களே, அதிலும் மிகமிகக் கேவலப்படுத்தும் முறையிலே, என்று எண்ணி நான் ஆயாசப்படவில்லை; மாறாக, இந்த மூன்று விஷயமாகவுமே, அவர்கள், சமீப காலத்துக்கு முன்புவரையில், கனிவுடன் மட்டுமல்ல, பாராட்டும் முறையில் பேசியிருக்கிறார்கள். அதை எண்ணி மகிழ்ச்சி பெறுகிறேன்.

முன்பு அப்படிப் பேசினார்கள்; இப்போது ஒரே அடியாக மாற்றிப் பேசுகிறார்களே, என்றுகூட எனக்கு வியப்பு ஏற்படுவதில்லை.

ஏதோ, முன்பொரு முறையாகிலும் பாராட்டிப் பேசியிருக்கிறார்களல்லவா; அதற்கு நன்றி கூறிக்கொள்வோம் என்றுதான் தோன்றுகிறது.

கண்டனத்தைத் தாங்கிக்கொள்ளும் திடமனம் இல்லையென்றால், கடமையை நிறைவேற்ற முடியாது.

பாராட்டியவர்களே, கண்டிக்கும்போது, அதைத் தாங்கிக்கொள்ளும் மனத்திடம் இருக்கிறதே, அது எளிதிலே பெறமுடியாத, ஆனால் விலைமதிக்க முடியாத மிகச்சிறந்த பண்பாகும்.

"சிலர் கேட்கிறார்கள், தி. மு. கழகம் சட்டசபைக்குப் போய் என்ன சாதித்துவிட்டது என்று?

"தி. மு. கழகம் எதைச் சாதித்தது என்று கேட்கும் காங்கிரசுக்காரர்களுக்கு ஒரு முன்னாள் மந்திரி செய்த விமர்சனத்தை இங்கே சொல்ல விரும்புகிறேன். தமிழ் நாட்டிலிருந்து அண்மையில் இராஜ்யங்கள் சபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், டெல்லி வந்து சேர்ந்தார். வந்தவர் டெல்லியிலுள்ள தமிழ்நாட்டு ராஜ்யசபை உறுப்பினர்களைக் கூட்டிவைத்துக்கொண்டு சென்னைச் செய்திகளைப்பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தார். 'தெரியுமா, நண்பர்களே ! நான்கூடத்தான் சட்டசபையில் இருந்திருக்கிறேன்; எத்தனையோ முறை சுப்பிரமணியம் அவர்களின் பேச்சுக்களைக் கேட்டிருக்கிறேன். இப்பொழுதும் கேட்டேன்; ஒரு நாள், காலரியில் உட்கார்ந்து கொண்டு, மிகவும் பிரமாதம், மிகவும் Progress—மிகவும் முன்னேற்றம்'—என்று சொல்லிவிட்டு, எல்லோரையும் ஒருமுறை அந்த முன்னாள் அமைச்சர் பார்த்தார். 'அப்படியா?' என்றார்கள் எல்லோரும். 'ஏன் தெரியுமா?' என்று அவரே கேள்வியைப் போட்டுக்கொண்டு சொன்னார்: 'எல்லாம் அண்ணாத்துரையின் டிரெயினிங்—அண்ணாத்துரையின் பயிற்சி' என்று சொன்னார். 'மந்திரி சுப்பிரமணியத்திற்குத் தமிழ் அபிவிருத்தி ஏற்பட்டதிலிருந்து அண்ணாத்துரையுடைய சட்டசபைப் பிரவேசம் பலனளித்திருக்கிறது' என்று அவர்களே ஒத்துக்கொள்ளும் அளவுக்கு நம்முடைய சாதனைப் பட்டியல் ஆரம்பமாகிறது."

இப்படிப் பேசியதைக் கேட்டு, எனக்கே கூச்சமாக இருந்தது. என்னதான் நம்மிடம் அன்பு இருந்தாலும், அண்ணனைப் பாராட்டவேண்டும் என்ற பாச உணர்ச்சி இருந்தாலும், இப்படிப் பேசத் தேவையில்லையே என்று எண்ணிக்கொண்டேன்.

இந்தப் பாராட்டுதலை, நாலைந்து நண்பர்களை வைத்துக்கொண்டு அல்ல, பல்லாயிரவர் கூடிய மாநாட்டிலே தோழர் சம்பத் பேசினார். 1958 ஜூன் 7, 8 நாட்களில் விருத்தாசலத்தில் நடைபெற்ற தி. மு. க. மாநாட்டில் !

இப்போது, சட்டசபையில் திறமையே காட்டுவதில்லை; அக்கறையே இருப்பதில்லை; அமைச்சர்கள் கேலி செய்கிறார்கள் என்று பேசினால், நான் சிரிக்காமல் என்ன செய்வது, தம்பி ! நீ தான் சொல்லேன் ?

சட்டசபையிலே திறமையே காட்டுவதில்லை என்று கூறுபவர், அமைச்சர் சுப்ரமணியத்துக்கு நல்ல தமிழ் நடைப்பயிற்சியே நான் சென்றதால் கிடைத்தது என்று ஒரு காங்கிரஸ்காரர் பேசியதை மேற்கோளாகக் காட்டிப்பேசி, மாநாட்டினரை மகிழச் செய்தவர் ! இப்போது, இப்படி! அதற்கு நான் என்ன செய்ய !!

சட்ட சபையிலே திறமையே காட்டுவதில்லை என்று உங்கள் சம்பத் கூறுகிறாரே, என்று சொல்லி, அமைச்சர் சுப்ரமணியாவது, சந்தோஷப்பட்டுக் கொள்ள முடியுமா ! அவருக்குத் தமிழ் நடையில் பயிற்சியே என்னால்தான் கிடைத்தது என்ற கருத்தை அளித்தவரல்லவா, இன்று இதைக் கூறுகிறார். ஒரு சமயம் என்னிடம் உள்ள பாசம் அப்படிப் பாராட்ட வைத்ததுபோலும் என்று எண்ணிக் கொள்கிறாயா, தம்பி ! அதுவும் இல்லை. அதே தொடரில் தோழர் சம்பத் கூறினார்.

'அன்று ஒருநாள் நான் சட்டசபைக்குச் சென்றிருந்தேன். அன்று நீர்ப்பாசன திட்டத்தின் மீது விவாதம் நடைபெற்றது. தோழர் கருணாநிதி அவர்கள் பேசினார்கள். அவர் குளித்தலைத் தொகுதிக் குறைகளை மட்டும் சொல்லாமல், குடகு நாட்டுத் திட்டத்தையும் சொல்லிவிட்டு, தமிழ் நாட்டிலுள்ள அத்தனை மாவட்டங்களிலேயும் எந்தெந்த நீர்த்தேக்கத் திட்டங்கள் இருக்கின்றன, என்று எண்ணி, காகிதத்திலே திட்டமிடப்பட்டு, கையிலே காசு இல்லையே என்று மூடிவைத்திருக்கிறார்களோ, அத்தனை திட்டங்களையும் பெயரோடு, விவரங்களோடு, நீண்ட ஒரு பட்டியலைச் சொல்லிவிட்டு அமர்ந்தார். பிறகு மந்திரி கக்கன் அவர்கள் எழுந்தார். அவருக்கே உள்ள பார்வையோடு தோழர் கருணாநிதி அவர்களைப் பார்த்துச் சொன்னார்—'இவர் எல்லாத் திட்டங்களையும் சொல்லிவிட்டார்—வேறு யாரும் சொல்லக் கூடாது என்று நினைத்துக்கொண்டு எல்லாவற்றையும் சொல்லிவிட்டார்' என்று பெருமூச்சோடு தொடங்கிப் பதில் சொல்ல ஆரம்பித்தார். இப்படி நம் தோழர்கள் எந்த இடத்திலே புகுந்து வேலை செய்தாலும், புகழ் மணக்கத்தக்க வகையிலே தான் செயலாற்றுவார்கள். நாம் பெறுகின்ற இடம், நம்முடைய ஆசானுடைய திறன் அது என்பதை அவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். நல்ல பாதையிலே நாம் நடைபோடுவதால்தான் எவ்வளவு இடர்கள் வந்தாலும், இடறி விழுந்தோம், தவறுகள் செய்தோம் என்று நம்முடைய வரலாற்றிலே ஒரு இடம்—ஒரு வரியைக்கூடக் காட்ட முடியவில்லை."

எப்படித் தம்பி ! பாராட்டுதல் !! கேட்போர் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். திறமையுடன் பணியாற்றுகிறார்கள் நமது கழகத்தவர் என்பதற்காக மட்டுமல்ல, இதை 'நமது சம்பத்து' எவ்வளவு அருமையாகப் படம் பிடித்துக் காட்டுகிறார் பார்த்தீர்களா என்பதற்காகவும்தான். இப்போது அதே மக்கள், அதே தோழர் சம்பத், அதே சட்டசபை உறுப்பினர்களைப்பற்றி, 'சுத்த மோசம்' என்று கூறுவதைக் கேட்கிறார்கள். என்ன எண்ணிக் கொள்வார்கள்? அவர்களும்தான் சிரிப்பார்கள்.

அதெல்லாம், சந்தோஷமாக இருந்தபோது, போனால் போகட்டும் என்று நாலு வார்த்தை பாராட்டி வைத்தேன் என்று தோழர் சம்பத் கூறுவாரானால், அப்படியானால் இப்போது அவர் கோபத்தால் நாலு வார்த்தை இழிவாகப் பேசுகிறார். என்றுதானே சொல்லுவார்கள் !!

இந்தவிதமான பாராட்டுப் பேச்சு, என்னையோ, மற்றவர்களையோ மகிழச் செய்வதற்காக அல்ல; ஒரு பிரச்சினையை விளக்க என்பதை மேலும் பல ஊர்களிலே பேசினார். சென்னையில் 37-வது வட்டத்தில் பேசுகையில்,

"சாதாரணமாகச் சட்டசபைக்குள் நுழைந்தவுடன், எந்த ஒரு கட்சிக்கும் மந்த நிலை ஏற்படுவது இயல்பு. சென்ற முறை கம்யூனிஸ்டு கட்சிக்கும் அந்த நிலை ஏற்பட்டது. ஆனால், சட்டசபையில், நம் கட்சி நுழைந்தபின், அந்த நிலை மாறி நாம் இரட்டிப்பு மடங்காக வளர்ச்சி பெற்று வருகிறோம். இதற்குக் காரணம் என்ன? அண்ணா அவர்களின் உழைப்பையும், ஆற்றலையும், அனுபவத்தையும், அறிவையும் முன் வைத்து ஆராய்ந்தால், இதற்கு விடை கிடைக்கும். இந்த நாட்டு வரலாற்றிலேயே இப்படிப்பட்ட தொரு மாபெரும் சக்தி இதற்கு முன்பு இப்படி வளர்ந்த தில்லை." என்று குறிப்பிட்டார்.

சென்னை மக்கள் கேட்டு மகிழ்ந்த இதே விஷயத்தை, குடந்தை நகர மக்களுக்கும் தோழர் சம்பத் வழங்கினார்.

"சட்டமன்றத்தில், தி. மு. கழகத்தினர் எதையும் சாதித்துவிடவில்லை யெனக் கூறுகின்றார் அமைச்சர் சுப்ரமணியம். எப்பொழுதுமில்லாத நிலையில் இப்பொழுது அமைச்சர்கள் சுற்றுப் பயணம் புரிவதே, நம் சாதனைக்கு நல்லதொரு எடுத்துக்காட்டாகும்."

இப்படிப்பட்ட விளக்கம்—பாராட்டுதல்—பல்வேறு ஊர்களிலே உள்ளவர்களும், கேட்கட்டும் என்று வழங்கிவந்தார். நான் நல்ல வாய்ப்புப் பெற்றேன்—தோழர் சம்பத் அவர்கள், அடியோடு கெட்டுவிட்டது இந்தத் தி. மு. க. என்று கூறி வெளியேறுவதற்கு 7 நாட்களுக்கு முன்பு, சட்டசபையில், நல்லபடிதான் பணியாற்றுகிறார்கள் என்று, கேட்போர் பெருமைப்படத் தக்க விதத்தில் அவர் மாயவரத்தில் பேசியதையும், அமைச்சரை நேருக்கு நேர் வைத்துக்கொண்டு திருவண்ணாமலைத் தோழர் ப. உ. சண்முகம் அவர்கள், தேர்தல் நிதி வசூலிப்பதுபற்றிக் கண்டனம் தெரிவித்த துணச்சலையும், பாராட்டிப் பேசியதை இவ்வளவு கேட்டான பிறகு, இப்போது அமைச்சர் சுப்ரமணியம் போன்றவர்கள் பாணியில், இவர்கள் சட்டசபையில் திறமையே காட்டவில்லை என்று பேசினால், என்ன செய்வது ! சிரிக்கத்தான் தோன்றுகிறது !!

சட்டசபையில், திறமையாகப் பணியாற்றவில்லை என்று அவர், ஜாடைமாடையாகவேனும் கூறி இருந்திருந்தால், என்னைப் பொறுத்தவரையிலே, கொஞ்சம் திறமையைப் பெற, பாடம் கேட்டாதிலும் பெற, முயற்சி எடுத்துக்கொண்டிருந்திருப்பேன். முயற்சி எடுத்துக்கொண்டாலும், திறமை எனக்கு வருகிறதோ இல்லையோ, அது வேறு சந்தேகம் ! ஆனால் முயற்சியாவது செய்திருக்கலாம். ஆனால், பாராட்டுதலை அல்லவா வழங்கிக்கொண்டிருந்தார் !! நாங்கள் சட்டசபையில் சரிவர வேலை செய்யவில்லை என்று இவர் குறைபட்டுக் கொள்கிறார் என்று எப்படித் தெரிய முடியும்? இப்போது கூறுகிறார்—பிரிந்துபோன பிறகு, இதைக் கேட்டனையா, தம்பி ! அமைச்சர் சுப்ரமணியம் அவர்களுக்கு, தைரியம் ஏற்பட்டதே எப்படி என்று தோழர் சம்பத் கூறியதை, இன்று ஏதேதோ பேசுகிறவர், அன்று என்ன பேசினார் என்பதைத்தான் கேளேன் ! கேட்டால் இப்போதைய அவருடைய பேச்சு உனக்கு எரிச்சல் கூடமூட்டாது.

"கௌஹாத்தியில் நேருவையும் எதிர்த்து, இந்தித்திணிப்பைக் கண்டித்துத் துணிந்து பேசியிருக்கிறார், சுப்ரமணியம். இது அவருடைய வாழ்க்கையில் செய்த முதல் முக்கிய காரியமாகும். அவர் அப்படிப் பேசியிராவிட்டால் நாடு அவரை ஏளனம் செய்யும் என்று தெரிந்துதான் அவர் இப்படித் துணிந்து பேசினார். அந்தத் துணிவு கௌஹாத்தி மாநாட்டிலே அவருக்கு வரக்காரணம், அண்ணாந்துரை சட்டமன்றத்திலிருக்கிறார் என்ற நினைவு அவருக்கு இருந்ததால்தான், அண்ணாவுக்கு எதிரிலே அமர்ந்து அண்ணாவின் பேச்சை அடிக்கடி கேட்டதனால் தான், நிதியமைச்சருக்கு இலேசாகத் தைரியம் வந்தது. அதற்கு முன்பு நடைபெற்ற காங்கிரஸ் மாநாடுகளிலெல்லாம் பந்தல் காலைக் கட்டிக்கொண்டு தலைவர்களை வேடிக்கை பார்த்தவர்தான் அவர்."

தம்பி ! சட்டசபையில் நமது கழகத் தோழர்கள் ஆற்றிய பணியினால் அமைச்சர் சுப்ரமணியத்திற்கு, நல்ல தமிழ்நடை மட்டுமல்ல, துணிவே வந்தது என்று கூறி, அதற்கு முன்பு அவர், மாநாடுகளில் பந்தல் காலைக் கட்டிக்கொண்டு தலைவர்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவர் என்று பேசி, நம்மைத் தோழர் சம்பத மகிழச் செய்தார் ; இப்போது, நாம் சட்டசபையில் திறமையற்றுக் கிடக்கிறோம் என்று பேசி, அமைச்சர் சுப்ரமணியத்தை மகிழச் செய்கிறார். எத்தனை காலத்துக்கு ஒரே இடத்துக்கு மகிழ்ச்சி தரும் காரியமே செய்துகொண்டிருப்பது ! யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் !! சிலகாலம், அமைச்சர் வட்டாரமும் அடையட்டுமே இந்த ஆனந்தத்தை !

தம்பி ! சட்டசபையில் நாம் நடந்துகொண்ட தன்மையால்தான் சென்னை மாநகராட்சி மன்றத் தேர்தலிலே நாம் வெற்றிபெற்றோம் என்று நான் கூறி, நீ கேட்டதுண்டா ? எழுதிப் படித்ததுண்டா ? எனக்கு எங்கே இதெல்லாம் தெரிகிறது! தோழர் சம்பத்தான் அதைப் பேசினார். புதுவையில் நடைபெற்ற மாநாட்டில், 1959, மே. 2, 3 நாட்களில்!

"நமது வெற்றி பற்றி ஒரு பத்திரிகை எழுதியிருக்கிறது—இந்த வெற்றி திடீர் என்று அவர்களுக்கு ஏற்பட்டது அல்ல—இடறி விழுந்ததால் ஏற்பட்டதல்ல—அவர்கள் சட்டமன்றத்தில் எதிர்க் கட்சியாக இருந்து நடந்து கொள்ளும் முறையும், எதை எந்த முறையில் எதிர்க்க வேண்டும் என்று அறிந்து அந்தப் பண்புடன் அவர்கள் எதிர்க்கின்ற முறையும்தான், அவர்களுக்கு இந்த வெற்றியைத் தேடித் தந்திருக்கிறது என்று அந்தப் பத்திரிகை கூறுகிறது."

தம்பி! சட்டசபையில், நாம் எப்படி நடந்துகொண்டிருக்கிறோம் என்கிற பிரச்சினை இருக்கட்டும்—இப்போதைக்கு—இந்த அளவில்.

பெரிய விஷயத்திலேயே பேதம் வந்துவிட்டதே, திராவிட நாடு பகற்கனவு என்று கூறுகிறாராமே, அதைப் பற்றி என்ன சொல்வது என்று யோசிப்பாய். இதிலேயும் சிக்கல் இல்லை, சங்கடம் இல்லை.

திராவிட நாடு பகற்கனவு என்று நேரு கூறினார்—ஏற்க மறுத்துவிட்டோம். காமராசர் கூறினார்—கவைக்குதவாப் பேச்சு என்றோம்.

பெரியார் பேசினார்—போக்கை மாற்றிக்கொண்டார் என்கிறோம்.

இப்போது தோழர் சம்பத் பேசுகிறார் ! அதனால் என்ன ?

ஆனால், பலர் கூறியும் நமக்கு, 'திராவிடநாடு' பிரச்சினையில் ஏன், அவ்வளவு அழுத்தமான, அசைக்க முடியாத நம்பிக்கை இருந்து வருகிறது? அந்த நம்பிக்கையை நாம் அவசரப்பட்டு மேற்கொள்ளவில்லை—ஆத்திர உணர்ச்சி காரணமாக மேற்கொள்ளவில்லை—மிகப் பெரியவர்கள், மேதைகள் என்ன சொல்வார்களோ என்று கவலை கொள்ளவில்லை. நமது இதயகீதமாக்கிக் கொண்டோம். அந்த இலட்சியத்திலிருந்து நாம் வழுக்கிவிடக்கூடாது—பேரம் பேசுவது —குறைத்துக் கேட்பது—சாயலைக் கேட்பது—இலட்சியவாதிகளின் போக்காக இருத்தல் ஆகாது. இலட்சியவாதியின் பிணத்துக்குப் பக்கத்திலே உட்கார்ந்துகொண்டு வேண்டுமானால் காரியவாதி பேரம் பேசி, கிடைத்ததைப் பெற்று மகிழ முனையலாம். நமக்கு, இலட்சியம், இறுதி மூச்சு உள்ள வரையில் ! இதை வெறி என்று கூறினும், நெளிந்து கொடுக்கத் தெரியாத தன்மை என்றுரைக்கினும், கவலை இல்லை ! இப்படிச் சிலர், நாளைக்கும் தமக்குச் சாதகமாக்கிக் கொண்டு, கொடுத்ததைக் கொடுங்கள் என்று கேட்டுப் பெற்று இன்புற்றாலும் பரவாயில்லை ! இலட்சியம் நமக்கு ! விடுதலை, பகுதி பகுதியாகத் தரப்படட்டும் என்று பேசுபவர். இலட்சியவாதிகளாகார்—என்று, நான் படித்த ஏடுகள் கூறுகின்றன !

இந்த நம்பிக்கையுடனே தான் தோழர் சம்பத் லால் குடி மாநாட்டிலே பேசி, கேட்போர்களை, விடுதலை ஆர்வம் கொந்தளிக்கும் உள்ளத்தினர் ஆக்கினார்.

அந்தக் கொந்தளிப்பு, சிவாஜி கணேசனை, மேடை ஏறி, அண்ணா ஆணையிட்டால், நான் பட ஒப்பந்தங்களை எல்லாம் கிழித்தெறிந்துவிட்டு, போரில் ஈடுபடுவேன் என்று பேச வைத்தது.

தோழர் சம்பத், நம்மைவிட்டுப் பிரிந்தாலும், அவர் ஆற்றிய உரை, அவரை நம்முடன் பிணைத்துவைத்திருக்கிறது. அது இது:

இயக்கத்தின் தலைவர்களான பெரியார், அண்ணா ஆகியோர் சிறையிலிருந்தபோது வேலூரில் தமிழர் மாநாடொன்று பன்னீர்ச்செல்வம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அதில் எஸ். எஸ். பாரதியார் போன்ற பெரும் புலவர்கள் கலந்துகொண்டனர். வடமொழி ஆதிக்கம் வடவர் ஆதிக்கத்துக்கு முன்னேற்பாடு என்பதை அறிந்து கொண்ட அம்மாநாடு, தமிழ்நாடு தமிழருக்காக வேண்டும் எனத் தீர்மானித்தது. சிறைசென்ற தலைவர்கள் மீண்டனர், மீண்ட தலைவர்கள் அந்தத் தீர்மானத்தை இயக்கத்தின் இலட்சியமாக்கினர். அச்சமயத்தில் நமது இயக்கத்தில் இருந்த சில ஆந்திர, மலையாள, கன்னடத்தோழர்கள். 'வடவரை எதிர்த்துத் தமிழகம் மட்டும் என் பிரியவேண்டும்? ஆந்திரம், கேரளம், கர்நாடகம் ஆகிய திராவிடமொழிகள் பேசும் மகாணங்களும் பிரிந்து தீரவேண்டும். அதற்கும் சேர்த்து ஓர் திட்டம் தேவை' என்றனர். அப்போதே காஞ்சியில், அண்ணா அவர்கள் திராவிடர் கழகம் என்று ஒரு சங்கத்தைத் தோற்றுவித்து இருந்தார்கள். அந்த அடிப்படையில் சிந்தித்து விவாதித்துத்தான் தமிழகம், ஆந்திரம், கர்நாடகம், கேரளம் ஆகிய சுயநிர்ணய உரிமையோடு கூடிய நாடுகள் வலிந்து 'இணைத்து' அமைக்கும் திராவிடக் கூட்டாட்சியைப் பெற இயக்கம் இனிப்போராடுவது எனத் தீர்மானிக்கப்பட்டது.

"பின்னர் அக்கூட்டாட்சி, குடியரசாக மட்டுமின்றி, ஒரு சமதர்மக் குடியரசாகவும் விளங்கவேண்டும் என்பது நமது இலட்சியமாக அமையவேண்டும் என விரும்பிய அண்ணா அவர்கள், சேலத்தில் நடைபெற்ற ஜஸ்டிஸ் கட்சி மாநாட்டில் முக்கியமான இரண்டு தீர்மானங்களைக் கொண்டுவந்தார். ஒன்று, ஐஸ்டிஸ் கட்சியின் பெயரைத் திராவிடர் கழகமாக மாற்றவேண்டுமென்பது; மற்றையது, கட்சியில் சர்க்கார் அளித்த இராவ்பகதூர். சர் போன்ற பட்டங்களைத் தாங்கிக் கொண்டு எவரும் இருக்கக்கூடாது என்பதாகும். கட்சியில் இருந்த ஆலை அரசர்கள், செட்டிநாட்டு வேந்தர்கள் ஆகியோர் கட்சியைவிட்டு ஓட்டம் பிடித்தனர். அரண்மனையில் இருந்த கட்சியை அண்ணா அவர்கள் அந்தத் தீர்மானங்கள் மூலம் மைதானத்திற்குக் கொண்டுவந்து மக்கள் கட்சியாக மாற்றினார். அதன் பிறகு சமுதாயத்தில் மறுமலர்ச்சியையும், பொருளாதாரப் பொது உடைமையையும், அரசியலில் திராவிட விடுதலையையும், இலட்சியங்களாகக்கொண்டு திராவிடர் கழகம் நாட்டு மக்களை ஒன்று திரட்டியது. பின்னர், நல்ல சனநாயகப் பண்பு வளரத் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பு முறையை வகுத்தோம். உழைத்தோம், இவ்வளவு குறுகிய காலத்தில் மகத்தான மக்கள் ஆதரவைப் பெற்றிருக்கிறோம், என்றுமில்லாத அளவிற்கு நாட்டு விடுதலைத் திட்டத்திற்கு மக்கள் ஆதரவும் பெருகி நிற்கிறது.

"அதுவும் 1947 ஆகஸ்டு 15-ல் இந்திய உபகண்டத்தின் ஆட்சி முறை வடநாட்டுக்காரர்கள் வசம் ஒப்படைக்கப்பட்ட பிறகு கடந்த ஆறு ஆண்டுகளில் நமது நாடு அடைந்திருக்கும் அவலநிலை, ஆரம்பத்தில் நமது திட்டம் தேவையற்றது, ஆபத்தானது என்று எண்ணியிருந்தவர்களின் ஆதரவை எல்லாம்கூடப் பெற்றிருக்கிறது. வடவர் கையில் ஆட்சி சிக்கிய நாள் முதலாய் நமது நாட்டில் பஞ்சம், பசி, பட்டினி ஆகிய இந்த நிலைமைகளும், பட்டினிச்சாவு—பசியால், வேலையில்லாத் திண்டாட்டத்தால் குடும்பத்தோடு தற்கொலை, குற்றங்கள் மலிவு ஆகியவையும் சர்வசாதாரணமாகிவிட்டன. பருவ மழைகளும் தவறிவிட்டதால் வடவர் சுரண்டல் திரை மறைவில் நடைபெற முடியாமல் பட்டவர்த்தனமாக எல்லோர் கண்ணுக்கும் தெரியத்தக்க அளவில் நடைபெற்றது. இங்கு பசி, பட்டினி, வேலையில்லாத் திண்டாட்டம் என்னும் துன்பச் சூறாவளி கடந்த ஆறு ஆண்டுகளாக வீசிவரும் இதே காலத்தில், வடவர், வாழ்விலே வளம், ஏற்றம் ஆகியவைகளைக் கண்டு இன்புற்று வாழ்கின்றனர்.

"டில்லிக்கு நாம் செலுத்தும் வரிகள் அனந்தம். ஆனால் அவைகளில் ரூபாய்க்கு எத்தனை தம்படி நமக்குச் செலவழிக்கப்படுகிறது என்று பார்க்கும்போது, பெரியதொரு ஏமாற்றம்தான் கண்ணுக்குத் தெரிகிறது, கடந்த ஆறு ஆண்டுகளில் டில்லி சர்க்காரின் கஜானாவின் ஆதரவோடு ஆரம்பித்து நடைபெற்று வரும் பெரும் அணைக்கட்டுகள், தாமோதர் பள்ளத்தாக்குக் திட்டம், ஹிராகுட் அணைக்கட்டுத் திட்டம், கோசி நீர்த்தேக்கத் திட்டம் போன்ற பெரும் பெரும் திட்டங்கள், சிந்திரி உர உற்பத்தித் தொழிற்சாலை, பென்சிலீன், டி. டி. டி. மருந்து ஆகிய மருந்து தயாரிக்கும் தொழிற்சாலைகள், இன்னும் எண்ணற்ற தொழில் திட்டங்கள் ஆகியவைகள் அனைத்தும் வடநாட்டில் நடைபெற்று வருகின்றன. இங்கு சிறு சிறு நீர்த் தேக்கத் திட்டங்களுக்குக்கூட டில்லியின் பண உதவியில்லை.

"நாம் வருஷா வருஷம் டில்லிக்கு இறக்குமதி ஏற்றுமதிகள், வருமான வரி, புகையிலை வரி, தபால் கட்டணங்கள், இரயில்வே கட்டணங்கள். ஆகியவை மூலம் கோடிக்கணக்கான ரூபாய்களைக் கொட்டியழுகிறோம். நமது நாட்டில் 100-க்கு 80 பேர் படிப்பில்லாதவராய் இருத்தலாலும், படித்தவரில் பெரும்பகுதி சுயநலமிகளாய் நாட்டைப் பற்றிய கவலையற்றிருத்தலாலும், இவைகள் விளைவிக்கும் பெருகஷ்டத்தைப்பற்றியும் நம் மக்கள் முழுதும் அறிந்து கொள்ள வாய்ப்பில்லாமல் இருக்கிறது. டில்லி சர்க்காரின் வருமானமாகிய கமார் 400 கோடி ரூபாயில் ஏறத்தாழ 200கோடி ரூபாய் ஏற்றுமதி இறக்குமதி வரிகளின் மூலம் கிடைக்கிறது. அதில் நமது பங்கு மிக அதிகம். இங்கிருந்து கொச்சி, நாகை, சென்னை, விசாகப்பட்டினம். ஆகிய துறைமுகங்கள் மூலம் ஏற்றுமதி செய்யப்படும் மிளகு, ரப்பர், மணிலாக்கொட்டை ஆகிய ஏற்றுமதிப் பொருள்களுக்குக் கோடிக்கணக்கில் டில்லி சர்க்காருக்கு வரி செலுத்துகிறோம். அதைவிட அதிகமாக இங்கு இறக்குமதி ஆகும் பொருள்களுக்கு வரி தருகிறோம். இங்கிலாந்தில் செய்யப்படும் ஒரு பெட்ரோமாக்ஸ் விளக்கு 15 ரூபாய்க்கு அங்கு விலையாகிறது என்றால், சென்னைத் துறைமுகத்தில் அது இறங்கியதும் அதற்கு இறக்குமதி வரி 10 ரூபாய் டில்லி அதிகாரிகளால் வசூலிக்கப்படுகிறது. உடனே சென்னையில் உள்ள மொத்த வியாபாரிக்கு அதன் அடக்கம் 25 ரூபாய் ஆகிறது. அவன் சில்லறை வியாபாரிக்கு 30 ரூபாய்க்கு விற்கிறான். அவன் 35 ரூபாய்க்கு யாரோ ஒரு முத்தனுக்கு விற்கிறான். அவனுக்குத் தெரியாது, தான் விளக்கிற்கெனத் தந்த 35 ரூபாயில் 10 ரூபாய் டில்லிக்கு வரியாகச் செலுத்தப்பட்டுள்ளது என்பது. இவ்வாறே நாம் வாங்கும் வெளிநாட்டுச் சாமான்களான மோட்டார், சைகிள், கடியாரம், பேனா, வாசனைத் தைலங்கள், பொம்மைகள், எஞ்சின்கள். இயந்திரங்கள் அனைத்திற்கும் கோடிக்கணக்கில் வரி தருகிறோம்—வரி தருகிறோம் என்ற நினைவே இல்லாமல், புகையிலை வரியின் மூலம் மட்டும் 10 கோடி ரூபாய் சென்ற ஆண்டில் நாம் கொடுத்திருக்கிறோம். வேறு எந்த ராஜ்யமும் தராத அளவு கொடுத்திருக்கிறோம். இவ்வளவு வரிகளை வாரிக்குவித்துக்கொள்ளும் டில்லி நமக்கெனத் தந்தது என்ன? தொல்லை தவிர வேறில்லை, எல்லோருக்கும் பொது என்பதாக ஒரு இராணுவத்தைக் கட்டி வைக்துத் தீனி போடுவதைத் தவிர, வேறு எந்தக் குறிப்பிட்ட காரியத்திலும் நமக்குப் பங்கு இல்லை. இராணுவமும் வடநாட்டில் உள்ள அநாகரிகமான இந்து—முஸ்லீம் பிரச்சனையைத் தீர்க்க அடிக்கடி பயன்படுகிறதே தவிர, நமக்குச் செய்ததென்ன? இராணுவம் துணைக்கு வரவேண்டிய எத்தனையோ வாய்ப்புகளில் நாம் ஏமாந்து விட்டிருக்கிறோம். மழையின்மையால் கிணறுகள் நம் நாட்டில் வறண்டு போயுள்ளன. இராணுவத்தினரும், அவர்கள் வசமுள்ள பெரிய இயந்திரங்களும் கிணறுகளை ஆழப்படுத்தித் தந்திருக்கலாம். தஞ்சை, திருச்சி மாவட்டங்களில் புயல் வீசிப் பெரும் சேதம் விளைந்தபோது, தவித்த மக்களுக்கு இராணுவம் துணை புரிந்திருக்கலாம், செய்யவில்லை. எப்படிச் செய்யும், ஆதிக்கமும் அதிகாரமும் டில்லியில் குவிக்கப் பட்டிருக்கும்போது? இப்படி நம்மிடம் இருந்து வரியின் பெயரால் டில்லி செல்லும் கோடிக்கணக்கான ரூபாய்கள் அத்தனையும் வடநாட்டில் வாழும் மக்களின் ஏற்றத்திற்காகவே பயன்படுத்தப்படுகின்றது.

"இந்திய உபகண்டத்தின் பெருந்தொழில்கள் அனைத்தும் வடநாட்டு முதலாளிகளிடத்திலே, சுருக்கமாகச் சொன்னால், இந்தியப் பொருளாதாரமே வடவரின் கைப்பொம்மையாய் இருக்கிறது. இந்த நிலையில் டில்லியின் முழு அதிகாரத்துடன் வீற்றிருக்கும் மத்திய சர்க்காரும் வடவரின் கையிலே. சர்க்கார் இமயமுதல் குமரிவரை உள்ள மக்களிடமிருந்து பெறும் வரிப்பணம் முழுவதையும் வடநாட்டு மக்களுக்குப் பயன்படும் வகையிலேயே செலவழிக்துக் கொண்டிருக்கிறது.

"இந்த நிலையில் திராவிடம் டில்லித் தொடர்பை அறுத்துக்கொண்டு தனியரசாய் அமைவதை விரும்பாதவன் ஒன்றும் அறியாத ஏமாளியாய் இருக்கவேண்டும். அல்லது எல்லாம் தெரிந்தும் கொள்ளைக்காரர்களிடம் இலஞ்சம் வாங்கிக் கொண்டு நாட்டைக் காட்டிக் கொடுக்கும் துரோகியாய் இருக்கவேண்டும்.

"ஏனெனில், நாட்டின் இன்றைய அரசியலில் சுதந்தரமற்று டில்லியின் கட்டளைகளை எதிர்நோக்கி வாழ்ந்து கொண்டிருக்கும் அடிமை நிலை, பொருளாதாரத்தில் பறிகொடுக்கும், கொள்ளை கொடுக்கும் ஏமாந்த நிலை ஆகிய நிலைமைகளும் திராவிடநாடு விடுதலையைத்தான் மருந்தாகச் காட்டுகின்றன.

"இந்த நிலைமைகள் மட்டுமல்லாமல், வரலாற்றைப் புரட்டிப் பார்க்கும்போது வெள்ளையன் வருவதற்குமுன் இந்தியா என்ற அரசியல் அங்கம் (Politicat unit) உலகில் இருந்ததாகவே தெரியவில்லை. அதாவது, ஒரு சர்க்காரின் கீழ் இந்தியா என்ற நாடு இருந்ததாக இல்லை. இந்தியா என்பது ஒரு பூகோளப் பெயராகவே திகழ்ந்து வந்திருக்கிறது. எப்படி, பல தனித்தனி நாடுகளைக்கொண்ட ஐரோப்பாவின் ஒரு பிரதேசத்திற்குப் பால்கன் தீபகற்பம் என்று பெயரோ, மற்றும் ஸ்வீடன், நார்வே ஆகிய இரு நாடுகளையும் சேர்த்து ஸ்காண்டிநேவியா என்று அழைக்கிறோமோ, அதைப்போல் இந்தியத் தீபகற்பம் என்பது ஆகியாக்கண்டத்தின் ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தின் பூகோளப் பெயரே தவிர, சர்க்காரின் கீழ் இருந்த ஒரு நாட்டின் பெயராக அது விளங்கியதில்லை.

"வெள்ளையனுடைய துப்பாக்கிகள், மெல்லச் சென்னையை வென்று, அய்தராலி, திப்பு ஆகியோரை வென்று, மராட்டியத்தைப் பிடித்து, மொகலாய மன்னர்களைச் சதி செய்தும், வென்றும், இந்தியத் தீபகற்பத்தில் கைப்பற்றிய பிரதேசங்கள் அனைத்தையும் சேர்த்து, இந்திய சாம்ராஜ்யம் (Indian Empire) என அழைத்தபோது தான், இந்தியா என்ற பூகோளப் பெயர், ஒரு அரசியல் பெயராக மாறிற்றே தவிர, வேறில்லை என்பது விளங்குகிறது. அன்னியனிடம் ஒரே சமயத்தில் தோற்ற இனங்கள் என்பதில் ஒரு ஒன்றுபட்ட தன்மை நமக்கும் வடவர்களுக்கும் ஏற்பட்டது தவிர, கலாச்சாரத்தில், நாகரிகத்தில் மொழியில், முன் வரலாறு நிகழ்ச்சிகளில், வடக்கையும் தெற்கையும் ஒன்று படுத்தி ஒரினமாக்கக்கூடியது எதுவும் இல்லை. வெள்ளையனுடைய இந்தியா என்னும் பொது சர்க்காரின் கீழ் வாழ்ந்த, கடந்த இருநூறு ஆண்டுகளில்கூட அது ஏற்படவில்லை. அது ஏற்படவில்லை என்பதை நிரூபிக்க ஆயிரம் நிகழ்ச்சிகள் அடுத்தடுத்துக் கூறலாம்.

"ஒரே ஒரு சம்பவத்தை மட்டும் எடுத்துக்காட்ட விரும்புகிறேன். பல மாதங்களுக்கு முன்பு பீகாரில் பஞ்சம் வருமோ என அந்த சர்க்கார் அஞ்சிப்பஞ்ர நிவாரணத்திற்காகச் சில பணிகளை மேற்கொண்டனர். அவைகளில் ஒன்று வாய்க்கால் வெட்டுவது. அந்தச் சமயத்தில் நேரு அவர்கள் அத்தகைய வாய்க்கால் வெட்டுமிடம் ஒன்றிற்குப் பறந்து சென்று அங்கு குதித்தார். சட்டையின் கைகளை மேலே சுருட்டிவிட்டுக் கொண்டு, பக்கத்திலிருந்தவனிடமிருந்த மண்வெட்டியைப் பிடுங்கினார். விழியால் போட்டோக்காரனை அழைத்தார். அவன் படம் எடுத்தான். இவர் வெட்ட ஆரம்பித்தார். இதை ஏன் சொல்லுகிறேன் என்றால், ஒரு விளம்பரப் பிரியர் என்பதற்கல்ல, பீகாரில் பஞ்சம் என்றதும் அவருடைய சதை ஆடுகிறது! உடனே ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணமும், துயர்ப்படும் 'அவரது' மக்கள் மத்தியில் சென்று ஆறுதல் கூறவேண்டுமென்ற அக்கறையும் பிறக்கிறது. அதுமட்டுமல்ல; நம்மெல்லோருக்கும் பொதுவான டில்லி கஜானாவிலிருந்து பீகார் பஞ்ச நிவாரணப் பணிகளுக்கு 4 கோடி ரூபாய்வரை உதவவும் அவருக்கு ஆசை பிறக்கிறது. அதேநேரத்தில்கூட அல்ல, கடந்த 6 வருட காலமாகத் தென்னாட்டில் நாடு முழுவதும் பஞ்சம். பஞ்சப் பிரதேசங்களை வந்து பார்க்க வேண்டுமென்ற எண்ணமும் இல்லை. பலமுறை கெஞ்சித் தெண்டனிட்டுக் கேட்டும் நேருவின் சர்க்கார் ஒரு தம்பிடி கூட நம்மிடமிருந்து பறித்த பணத்தில் உதவியதாகவோ, கடனாகவோகூட அளிக்கவில்லை. மேலும், அண்மையில் தஞ்சை, திருச்சி மாவட்டங்களில் பெரும் புயல் அடித்து, மக்கள் நடுங்கும் குளிரில் தெருத் தெருவாக அலைந்தனர், ஒண்டக்கூட இடமின்றி, நேருவுக்குத் தோன்றவில்லை, அந்தத் துயர்ப்படும் மக்களைப் பார்க்கவேண்டுமென்று. ஆனால், அதே நேரத்தில், புயலால் தாக்குண்ட பிரதேசத்திற்கு முந்நூறு மைல் தொலைவில் திருவிதாங்கூர் கொச்சிராஜ்யத்தில், டில்லியின் அரசியல் புழுக்கத்தினின்றும் ஓய்வு பெற, சில நாட்களை உல்லாசமாகக் கழிக்க வந்திருந்தார். உப்பங்கழிகளில் உல்லாசப் படகேறிக் குடும்பத்தோடு இன்பப் பொழுது போக்கினார், கேரளத்துக் தென்னஞ் சோலைகளினூடே. பின் அது சலித்தபோது மலைமீதேறி அங்கு அடவியில் உள்ள வனவிலங்குகளான யானைகளையும், புலியையம், ஓநாயையும், மானினங்களையும், கரடிகளையும் கண்டுகளிக்க விரும்பினார். மலையில் மகாராஜாவின் கண்ணாடி பங்களாவில் இரவு முன்னேரத்திற்கே சென்று பலகணி வழியே கீழே ஓடும் கானாற்றில் நீர் பருகவந்த விலங்குகளையும், நிலவொளியில் காதல் புரியும் காட்டானை ஜோடிகளையும் கண்டு ரசித்துக் களிப்படைந்துகொண்டிருந்தார் எனச் சேதி வந்தது.

"இதை ஏன் இவ்வளவு ஆத்திரமாகக் கூறுகிறேன் என்றால், பீகாரில் பஞ்சம் என்றதும் துடித்த அவரது உள்ளம், ஆடிய அவரது உடம்பு, தமிழகத்தில், ராயல் சீமையில் பஞ்சம் என்றபோதும், தஞ்சையில், திருச்சியில், புயல் என்றபோதும் ஆடாமல் அசையாமல் அமைதியாக—புதுவித இன்பங்களைத் தேடிக்கொண்டிருந்தது என்பதைப் புரியாதவர்கள் புரிந்துகொள்ளவேண்டு மென்பதற்காகவே இதைச் சொல்லுகிறேன்.

"இந்தனைக்கும் வடநாட்டாருக்குள்ளேயே நேரு ரொம்பவும் யோக்கியமானவர், கருணையுள்ளவர் என்று பெயர். இவரே, 'ரோம் நகரம் பற்றி யெரியும்போது பிடில் வாசித்த நீரோ'வாகிவிட்டார் என்றால், இனி இவருக்குப் பின் வரும் இவரது வாரிசுகள் எப்படி இருப்பார்கள் என்பதை நாமே யூகித்துக் கொள்ளலாம்.

"ஆகவே, இந்தியாவுக்குப் பெயரளவில் சட்டரூபமாய் வெள்ளையரும் வடவரும் செய்துகொண்ட ஒரு ஒப்பந்தத்தால் ஒரு சர்க்கார் என்றாகிவிட்டதே யொழிய, இந்தியர்கள் என்று ஒரு இனம் தோன்றவில்லை. அவர்களுக்கு முன்னும் இருந்ததில்லை. இனியும் தோன்ற வழியில்லை. நமக்குத் தலைவன் வடநாட்டில் இல்லை. வடநாட்டில், வடநாட்டு மக்களுக்குப் பாடுபடும் வடநாட்டுத் தலைவர்கள் தாம் உண்டு. நமக்குத் தலைவர்கள் நம் நாட்டில்தான் தோன்ற முடியும். வீணே வடநாட்டுக்காரர்கள் சிலரை நம் தலைவர்களென நம்புவதும், அங்கு தலைவர்களைத் தேடுவதும் வீண்வேலையாகும். ஆகவே, இன்றைய திராவிட மக்களின் வாழ்க்கை நிலையும், வடவர்கள், அவர்களின் தலைவர்கள் ஆகியோருடைய எண்ணங்களும் செயல்களும் எல்லாம் திராவிடநாட்டுப் பிரிவினை ஒன்றுதான் திராவிடரின் நல்வாழ்வுக்கு வாக்குறுதியாய் இருக்கமுடியும் என்பதையே உறுதிப்படுத்துகின்றன.

"அடுத்து, நம் மக்களிலே சிலருக்கு ஓர் அச்சம் உண்டு. இந்தியா இவ்வளவு பரந்த நாடாய் இருப்பதால்தான் ஒரு பாதுகாப்பு இருக்கிறது. பக்கத்து நாடுகள் படையெடுக்கப் பயப்படுகின்றன. பிரிந்து சிறுசிறு நாடுகளாய்ச் 'சிதறி' விட்டால், பழையபடி ஏதாவது ஒரு அன்னிய அரசு வெள்ளையனைப் போல மீண்டும் அடிமை கொண்டு விடும் என்று அஞ்சுவோரும் உள்ளனர். திராவிட நாடு கூடாதென்பதற்கு அந்த அச்சத்தை வாதமாகப் பயன்படுத்துவோரும் உள்ளனர்.

"இன்றைய உலகு 'பானிப்பட்', 'பிளாசி', 'வந்த வாசி' காலத்திலில்லை. நவாபுகள், சுல்தான்கள் காலமல்ல. இன்றைய உலகில் ஒரு நாட்டின் பாதுகாப்பு அதன் பரப்பு எவ்வளவு என்பதிலேயோ, இராணுவம், விமானங்கள், கப்பல்கள் ஆகியவை எத்தனை உண்டு என்ற கணக்கிலேயோ இல்லை. அந்தந்த நாட்டு மக்களின் விவேகத்திலும், அவர்களுக்கு அமையும் தலைவர்களின் ஆற்றலிலும், நாணயத்திலும்தான் ஒரு நாட்டின் பாதுகாப்பு இருக்கிறது. முன்புபோல் ஒரு நாடு சின்ன நாடாய் இருக்கிறது என்பதற்காக வம்பிழுத்து ஒரு பெரியநாடு போர்தொடுத்து விட முடியாது. மற்ற நாடுகள் வாளா இரா.

"ஆகவே, ஒரு நாட்டின் பாதுகாப்பு என்பது இராணுவத்தின் அளவையோ, பரப்பளவையோ பொறுத்ததல்ல, திராவிடம் சிறுநாடு. ஆகவே பாதுகாப்பில்லை, என்பது பத்தாம்பசலிகளின் பேதைமைக் கூற்றே தவிரவேறில்லை.

"நாளுக்குநாள் திராவிடநாட்டுப் பிரிவினையின் அவசியத்தை வலியுறுத்தக்கூடிய வகையில் நிகழ்ச்சிகள் நடைபெற்றுக்கொண்டு வருகின்றன. இச்சமயத்தில் திராவிடத்தில் எந்தக் கட்சியாக இருந்தாலும் திராவிட விடுதலையைக் குறிக்கோளாக வைத்துக் கொள்ளாமல் வேறு எத்தகைய உலகமகா மேதாவிகளின் தத்துவங்களை இலட்சியங்களாகக் கொண்டிருந்தாலும், அது மக்களையும் வாழவைக்காது தானும் வாழாது!"

அறியாப் பருவத்தில், ஆர்வத்தின் மிகுதியினால், ஆகுமா ஆகாதா என்பதறியாமல், காலம்போகும் போக்குத் தெரியாமல், லால்குடியில் பேசிவிட்டேன் — நானென்ன மாறுதலின் மேன்மையை அறியாதிருக்க வேண்டுமா, என்று கேட்கப்படுமேல், இதனைக் கூறுவேன். அந்த ஆர்வமும் நம்பிக்கையும், 1959, செப்டம்பர் 12, 13, நாட்களில், பூவிருந்தவல்லியில் நடைபெற்ற, தி. மு. கழக மாநட்டின் போதுகூட அல்லவா, கேட்போருக்கு எழுச்சியூட்டிற்று. 'திராவிடநாடு' எனும் இலட்சியத்தைக் குலைத்து, குறைத்து, பழிதேடிக் கொள்ளாதீர்கள் என்றல்லவா, சந்தேகப்படுவர்களை, ஆயாசப்படுபவர்களை எச்சரித்தார்.

"தமிழகத்தில் சிலர் குறைகூறுகிறார்கள் — ஏன் கேரளத்தையும் ஆந்திரத்தையும் கருநாடகத்தையும் சேர்த்துக் கொண்டு போகவேண்டும் என்று அவர்கள் அவசரக்காரர்களும் ஆற்றலற்றவருமாவர். ஆத்திரப்பட்டு இப்படிப் பேசுகிறார்கள். நம்மிடம் ஆற்றலும் இருக்கிறது; நீண்ட ஆயுளும் இருக்கிறது. நல்ல நம்பிக்கையுடன் நாம் நடைபோட்டால் அந்த உண்மைப் பாதையில் வெற்றிபெற முடியும் அவசரப்படுவோமானால் நடைபெறவேண்டிய நல்ல காரியத்தைக் குலைத்த பழி வருமே தவிர, நாட்டுக்கு நல்லதாகாது."

1959-ல் இந்த ஆர்வம் இருந்தது, இப்போது அவநம்பிக்கை வரக்காரணம்?

1959-க்குப் பிறகு, பல நாடுகள், விடுதலை பெற்றதைப் படித்தோம்.

தனி அரசு நடத்தக்கூடிய வசதியற்றவைகள் என்று பொருளாதார நிபுணர்கள் கூறத்தக்க நிலையில் உள்ள நாடுகள் கூட விடுதலை பெற்று—பிறநாடுகளை விடுவிக்கும் வீரப்பணியில் ஈடுபட்டிருக்கக் காண்கிறோம். இப்போது ஏன் அவநம்பிக்கை? கொடுத்ததைக் கொடுங்கள் என்று நாம், கீழே இறங்கிக் கை ஏந்தவேண்டிய அவசியம் என்ன வந்தது? என்னவோ, வட நாட்டு ஏகாதிபத்தியம் நம்மைச் சந்தித்து, "நீ கேட்பது மிக அதிகம் அப்பா! அவ்வளவு தரமுடியாது! கொஞ்சம் பெரிய மனது செய்து, நீ கேட்பதன் அளவைக் குறைத்துக்கொள். குறைத்துக்கொண்டால், தருகிறேன்" என்று சமாதான உடன்படிக்கைக்கு வந்து நிற்பதுபோலவும், இந்தச் சமயத்தில், நாம் சிறிது விட்டுக் கொடுத்து, சமரசமாகிக், கொடுத்ததைப் பெற்றுக்கொண்டு திருப்தி அடையவேண்டும் என்ற கட்டம் வந்ததுபோலவும் இப்போது நாம், நமது கோரிக்கையைக் குறைத்துக்கொள்ளக் காரணம் என்ன? கழகத் தோழர்களையோ, பொது மக்களையோ நாம் இப்படி ஒரு மாறுதலுக்குத் தயாராகுங்கள் என்று கூறிக்கொண்டு இருந்திருக்கிறோமா?

பழி ஏற்படும்! பாதையை மாற்றாதீர்கள் !!—என்று கழக மாநாட்டிலே 1959-ல் பேசுகிறோம். இப்போது கிடைக்கக் கூடியதைக் கேட்போம்—நடக்கக் கூடியதைப் பார்ப்போம் என்று பேசுவதா ! நாம், எந்தெந்த நேரத்தில் மாறுகிறோமோ, அதே வேளையில், நமதுமுன் பேச்சுக்களைக் கேட்டு நம்பிக்கை கொண்டு, நாம் காட்டிய வழிநடந்து கஷ்டநஷ்டம் ஏற்றவர்கள் சரி ! அவர்கள் மாறிவிட்டார்கள், நாமும் மாறிவிடலாம், என்று வந்துவிடவேண்டுமா ? வந்துவிடுவார்களா ? முறைதானா அது ?

இதற்கு, பெரியார், திராவிடநாடு, வெங்காயநாடு என்றாரே, அப்போதே, ஆமாம் ! வாடைகூட அடிக்கிறது என்று கூறி, விட்டுவிட்டு வந்துவிட வேண்டும், என்று யோசனை கூறியிருக்கலாமே. அவராவது, கேட்கும்போது ஒருகணம், நியாயந்தான் என்று எண்ணத்தக்க காரணத்தைக் காட்டினாரே ! எல்லாம் ஒண்ணா இருந்தானுங்க — திராவிடநாடு கேட்டோம்—இப்பத்தான் ஆந்திராக்காரன் போயாச்சி — மலையாளத்தான் பிரிஞ்சாச்சி—கன்னடத்தானும் போனான்—இப்ப ஏன் திராவிடநாடு, வெங்காயநாடு?"—என்று பேசினாரே. அப்போது கழகத்தவரைத் கூட்டி திராவிடநாடு, பகற்கனவு என்று சொல்ல முற்பட்டோமா? தவறு, என்றாவது தோன்றிற்றா நமது மனதுக்கு? அவர் சொல்லிக்கொள்ளட்டும், நமக்குக் கவலையில்லை, என்று சொன்னோம். சொன்னோமா? சொன்னார்! யார் ? தோழர் சம்பத்து, 1959 அக்டோபர் 17, 18-ல் சென்னை மாநாட்டில்—தெளிவாக—அழுத்தந்திருத்தமாக;

"ஆந்திரத்தில் நம் கழகம் இல்லை என்று காங்கிரசுக்காரர்கள் சொல்வதற்காக நாம் வெட்கப்பட வேண்டிய அவசியமில்லை. நமக்கு, நமது இலட்சியத்தின்மீது அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது. நாம் பொறுப்புள்ளவர்கள். அவசரத்தினாலும் சில்லறையில் உள்ள நாட்டத்தினாலும் தமிழ்நாடு போதும் என்று சொல்லுபவர்கள் சொல்லட்டும்—நமக்குக் கவலையில்லை."

இப்படிப் பேசிவிட்டு இப்போது தமிழ்நாடு போதும் என்று இவரே பேசினால், கேட்பவர்களுக்கு என்ன சொல்லத் தோன்றும்? பெரியார், தமிழ்நாடு போதும் என்று சொன்னதற்கு இவர் என்ன பதில் சொன்னாரோ, அதேதானே நினைவிற்கு வரும் ! அதைத்தானே சொல்லத் தோன்றும் !

திராவிடநாடு திராவிடருக்கே எனும் இலட்சியம் இன்று 'பகற்கனவு' பட்டியலில் சேர்க்கப்படுகிறது. எனக்கோ, தம்பி ! அந்த இலட்சியத்திலே இம்மி அளவும் பற்றுக் குறையவில்லை; நம்பிக்கை தளரவில்லை; எனினும் என்னால், அதனை, தோழர் சம்பத் சொன்னதுபோன்ற அழுத்தந்திருத்தமான முறையிலே சொல்லத் தெரியவில்லை. அதனால், மறுபடியும், அது குறித்துத் தோழர் சம்பத் பேசியிருப்பதைத்தான், நான் மேற்கோள் காட்ட நேரிடுகிறது. இது 1958-ல் திருவாரூரில் நடைபெற்ற தி. மு. க. மாநாட்டில் பேசியது:

"இத்தாலிய நாட்டு விடுதலை வீரன் மாஜினி மக்களைப் பார்த்துச் சொன்னான்: 'இந்த நாட்டினுடைய சுதந்தரத்திற்கான தலைப்பைத் தந்துவிட்டோம். அதனுடைய அத்தியாயங்களை எழுதவேண்டியது உங்கள் கடமை" என்று.

"அதைப்போலத்தான் நம்முடைய அரிய தலைவர் அண்ணா அவர்கள் திராவிடநாட்டின் எதிர்கால வாழ்வுக்கான நல்ல தலைப்பைத் தந்திருக்கிறார்கள். அதுதான் 'திராவிடநாடு திராவிடருக்கே' என்பது. அதனுடைய அத்தியாயங்களை, பாகங்களை, வரிகளை எழுத வேண்டிய கடமை உங்களிலே எல்லோருக்கும் உண்டு என்பதை எண்ணிக்கொள்வேன்."

தம்பி ! நம் எல்லோர்க்கும் உள்ள கடமையைக் கவனப்படுத்தியவர், இன்று சொல்வது என்ன ? அதுவும் 7—4—61-ல், தி. மு. கழக வரலாற்று வெளியீட்டு விழாவை நடத்திவைத்துவிட்டு, 9—4—61-ல் தி. மு. கழகத்தைவிட்டு விலகி, 19—4—61-ல் திராவிடநாடு பகற்கனவு; தமிழ்நாடு தான் பலிக்கும் என்று பேசுகிறார்.

உன்னாலும் என்னாலும் முடியுமா இந்த மின்னல் வேக மனமாற்றம்— திடீர் முடிவு ?

மனமார, நம்பிக்கை சரிந்துவிட்டது என்றே வைத்துக் கொள்வோம். கூட்டுத் தோழர்களிடம் அதுபற்றிப் பேசி அவர்களைத் தம் கருத்துக்கு இசைவுதரச் செய்யும் முயற்சி நடைபெற்றதா ? இல்லை ! முதலில் விலகல்—பிறகு விளக்கம்—பிறகு புதுக்கட்சி—புதுக்கொள்கை ! இது, எண்ணிப் பார்க்கும்போதே எவரையும் திடுக்கிடவைக்கக் கூடியதல்லவா !

தமிழ்நாடுகூடப் பிரிய வேண்டுமென்பதல்ல, அவருடைய கட்சியின் குறிக்கோள்.

தமிழரசு—தமிழர் தனி அரசு—தனித் தமிழகம்—இவை அல்ல.

வேண்டும்போது பிரிந்து போகும் உரிமை, சட்டப்படி தரப்படவேண்டும்.

உரிமை தரப்பட்டால் பிரிந்தே போய்விடுவோம் என்று எண்ணற்க ! இந்தியக் கூட்டாட்சியிலேயே இருப்போம்— தேவைப்பட்டால் பிரிந்து போவோம்—இது குறிக்கோளாம்.

விளக்கங்கள் தொடரக்கூடும்.

ஆனால் இதிலிருக்கும் விசித்திரம் வெளிப்படை !

பிரிவினை உரிமையை ஒப்புக்கொள்ள, சட்டத்திலேயே அதற்கு இடம் கிடைக்கத்தக்க மாறுதலைச் செய்தளிக்க இந்திய சர்க்கார் இசையுமானால், பிரிவினையையே ஒப்புக்கொள்ளமே !

எப்போது வேண்டுமானாலும் பிரிந்துபோகும் உரிமையையும் கொடுத்துவிட்டு, கூட்டு வாழ்க்கையையும் நடத்த, இந்தியத் துரைத்தனருகில் உள்ளவர்கள் என்ன ஏமாளிகளா ? அரசியல் அறியாத அப்பாவிகளா ! புரியவில்லை.

போகட்டும், தமிழ்நடு பாரதத்தில் இருந்து பிரியும் உரிமை வேண்டும் என்று கூறினால், வாய் வெந்து விடாது என்ற நிலையாவது நிலைத்து நிற்கட்டும். இனி, மற்றோர் பிரச்சினையைக் கவனிப்போம். தம்பி! இது கலைஞர்களைப் பற்றியது ! மிகக் கசப்புத் தந்துவிட்டிருக்கிறதாம் கழகத்தின் போக்கு, இதிலே ! அந்தக் கசப்புக்கு மருந்து பிரிவினை ! திராவிட இனமக்களின் வாழ்க்கையிலே ஒரே கசப்பு—இருந்தும் அவர்களுக்கும் 'பிரிவினை' உடனடியாக வேண்டாம்— பிரிந்துபோகும் உரிமை மட்டும் இருந்தால் போதுமாம். ஆனால், கலைஞர்கள் கழகத்தில் இருப்பதால், ஏற்படும் விளைவுகள் மெத்தக்கசப்பாக இருப்பதால், கழகத்தை விட்டு இவர் போகிறார், என்ன நியாயமோ ! ஏனோ, அந்தக் கசப்பு ஏற்படாதபடி, கலைஞர்களுக்கும் கழகத்துக்கும் தொடர்பு எந்த அளவில் இருக்கவேண்டும், எப்படி அது பக்குவப்படுத்தப்பட வேண்டும், திருத்தப்பட வேண்டும் என்பதை இங்கு இருந்தே எடுத்துச் சொல்லிக், கழகத்தைச் செம்மைப்படுத்தியிருக்கக்கூடாது? இருக்கட்டும்—யார் இந்தக் கலைஞர்கள் ! மேடைதோறும், எப்படி எப்படிப், படக்காட்சிகள் எடுக்கப்படுகின்றன என்பது பற்றிப் பேசிப் பேசி, நம்மை ஐந்தாண்டுத் திட்டத்தைப்பற்றி, அரிசி நிலைபற்றி, அங்காடிப் போக்குப் பற்றியெல்லாம் சிந்சிக்க ஒட்டாது தடுத்துவிடும், பொல்லாதவர்களோ ! எந்தக் கலைஞரும், கலைபற்றி அல்ல, கழக நிலைபற்றித்தான் பேசிடக் கேட்கிறோம். என்ன இருந்தாலும்.........என்று, கூறுவது எதை விளக்குகிறது? பிடிக்கவில்லை என்று தெரிகிறது. பிடிக்கவில்லை என்றால், என்ன செய்யலாம்? மற்றவர்களுக்கு இதுபற்றி என்ன எண்ணம் இருக்கிறது என்பதைக் கண்டறியலாம்; கூடிப் பேசலாம்; சிக்கல் போக்கலாம்; செம்மைப்படுத்தலாம். செய்தாரா? இல்லை ! கலைஞர்களைவிட அவர்களுடன் தொடர்புகொண்டுள்ள கழகத் தோழர்களில் சிலர்மீது உள்ள கோபம்தான் வெளியே கொட்டப்படுகிறது. திட்டம் எதனையும் காணோம்.

பேசத்தெரியாத, எந்தப் பிரச்சினையிலும் தொடர்பு கொள்ளாத, ஒப்புக்கு ஒரு கட்சியிலே அலங்காரப் பொருளாக இருக்கும் நிலைமட்டும் போதும் என்று உள்ள கலைஞர்களாக நமது கலைஞர்கள் இருப்பார்களானால், பிரச்சினையே எழாது என்று எண்ணுகின்றனர். ஆனால், நம்மிடம் தொடர்பு கொண்டுள்ளவர்கள் மக்கள் கலைஞர் !

தம்பி ! இது என்ன புதுப்பட்டம் என்று என்மீது கோபித்துக்கொள்ளாதே. கவிஞர் கண்ணதாசன் கை எழுத்திட்டுத் தமது 'தென்ற'லில் தீட்டியுள்ள அழகு நடைதவழும் தலையங்கம் இது, அது, இதோ !

"க்களின் எண்ணம் இப்போது வெகுதூரம் முன்னேறி விட்டது. எந்தத் துறையில் பணி செய்பவனும் தங்களிடம் ஒட்டியிருக்க வேண்டும் என்பதில் அவர்களுக்கு ஆர்வம் பிறந்திருக்கிறது. கலைஞனாயினும், ஓவியனாயினும், அலுவலக ஊழியனாயினும் அவனது எண்ணத்தில் பொது நலம் நிறைத்திருக்க வேண்டும் என மக்கள் நினைக்கிறார்கள். அந்த நினைப்பின் எதிரொலியாகத் தங்களை அண்டி வருவோரைத் தலையில் தூக்கி வைத்துக்கொள்கிறார்கள். சமீபகாலத்தில், இந்நிலை மிகவும் வளர்ச்சியடைந்துவிட்டது. சமுதாயச் சிந்தனையுள்ள எவனும் மக்களால் ஒளிபொருத்திக் காட்டப்படுகிறான்.

"இன்றையக் கலைஞர்களுக்கு, அரசியல் ஆர்வம் பிறத்திருப்பதற்குக் காரணம் இதுதான். இவர்களிலே சிலருக்குத்தான் மக்களோடு ஒட்டிப்போகும் முறை தெரிந்திருக்கிறது. எங்கெங்கே எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ற பண்பு தெரித்திருக்கிறது. இவர்கள் மக்கள் மனதில் நிறைந்த இடத்தைப் பெற்று வருகிறார்கள். மக்களைக் கவரமுடியாதவர்கள் என்னதான் மறுத்துரைத்த போதிலும் தெளிவான ஒரு கொள்கையின்மீது நிற்கின்ற கலைஞர்கள் எந்நாளும் வீழ்ச்சியுற மாட்டார்கள் என்பது உறுதி. ஒரு கலைஞனுக்கு சுய சிந்தனை இருக்கலாம்; இல்லாமல் போகலாம். ஆனால், அவன் போக்கில் தெளிவு வேண்டும். நேற்றுச் சொன்னதை இன்று மாற்றிக்கொள்ளாத பக்குவம் வேண்டும். தன்னலத்தைவிடப் பொதுநலத்தில் அவனுக்கு அதிக அக்கறை வேண்டும். இப்படிப்பட்ட கலைஞர்கள் எக்காலத்திலும் குன்றேறி நிற்கமுடியும்.

"கலை வெறும் பொழுதுபோக்குச் சாதனம் அல்ல என்று கூறுவார்கள். ஓரளவுக்குத்தான் இது உண்மையாகும். பெரும்பாலும் கலையை ஒரு பொழுதுபோக்குச் சாதனமாகவே கொள்ளலாம். அப்படிக் கொள்கிற நேரத்திலேயே ஒரு கருத்தை உருவாக்கலாம். நளினப் பண்பு இல்லாமல், வறட்டுத்தனமாகக் கருக்கைத் தொடுத்து, கலையைக் கருத்துச் சாதனமாக்குவதில் வெற்றி பெறமுடியாது. பொழுது போக்கு அங்கங்களிலேயேதான் கருத்தைச் சொல்லவேண்டும். இப்படிச் சொல்லப்படும் கருத்து எல்லோராலும் வரவேற்கப்படும். சொல்கின்றவன் எல்லோராலும் புகழப்படுவான். நளினமான ஒரு கதையை எடுத்துக்கொண்டு, அந்தக் கதையில் வரும் அங்கங்களைக் கதைப் போக்கிலேயே விட்டு, சந்தர்ப்பங்களை மோதுவதன் மூலம் ஒரு நல்ல கருத்தை உருவாக்குவது நல்ல கலைக்கு அழகாகும். பொழுதுபோக்க வருகின்றவர்களுக்கும் இது பாடமாரும் இப்படி உருவாக்குவோர்தான் மக்கள் கலைஞர்களாக ஆக முடியும். அண்ணாவின் 'வேலைக்காரி', கருணாநிதியின் 'பிராசக்தி' இவை இரண்டும் இந்த முறையில் பிறந்தவையே. இவற்றின் தொடர்ச்சி புரட்சி நடிகரின் 'நாடோடி மன்னன்'. ஏன் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே மக்கள் கலைஞர்களாக மலர்ந்து வருகிறார்கள் என்றால், இந்தக் காரணத்தைத்தான் நான் காட்டுவேன். களைப்பை நீக்கும் ஆடல் பாடலோடு, இளைப்பை நீக்கும் கருத்தைக் கொடுத்து மக்களோடும் பழகி உறவாடி வருவதால் மக்கள் கலைஞர்கள் என்ற பதத்திற்கு அவர்கள் தகுதி உள்ளவர்களாகிறார்கள்.

"இன்றையத் தமிழுலகில் ஈடு இணையற்ற செல்வாக்குப் பெற்ற கலைஞர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்திலிருக்கிறார்கள். கழகத்தில் இருப்பதாலேயே இவர்களின் வலிவும் பொலிவும் அதிகரித்திருப்பது உண்மை. கழகம் என்றால் என்ன ? வெறும் கட்சி என்பதைவிட ஒரு கருத்து என்பதே பொருந்தும். அந்தக் கருத்து மக்களின் அன்றாட வாழ்க்கையிலும், எதிர்காலத்திலும் உறுதியான தொடர்புடையது. அதனால்தான் கழகக் கலைஞர்கள், கருத்துக் கலைஞர்களாக, மக்கள் கலைஞர்களாக மலர்கிறார்கள்.

"அண்மையில், மதுரையிலும் சென்னையிலும் நடைபெற்ற இரண்டு நிகழ்ச்சிகளை உதாரணங்களாகக் கூறலாம். புரட்சி நடிகருக்கு மதுரையில் தங்கவாள் பரிசளிக் கப்பட்டபோது, கூடியிருந்து உற்சாகக் குரல் கொடுத்த பல இலட்சம் மக்களும், அவரது கருத்துக்கு மதிப்பளித்தார்களே தவிர, திறமைக்கல்ல. இதனைச் சென்னையில் நடைபெற்ற 'நாடோடி மன்னன்' நூறாவது தின விழாவில் பல இலட்சம் மக்களுக்கிடையே புரட்சி நடிகரே குறிப்பிட்டார். ஆம்; அவரை மக்கள் கலைஞராக மக்களே ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

"வெளியில் எரிகிற வயிறுகள் எரிந்துகொண்டுதானிருக்கின்றன; நாமும் சில கலைஞர்களைச் சேர்த்துக்கொள்வோம், என்று சிலர் எரிந்துபோன சுள்ளிகளைக் கொண்டு வீடு கட்டிக்கொண்டிருக்கிறார்கள். எந்தெந்த வழிகளைக் கையாண்டாலும், எத்தனை வழிகளில் தாக்கப் பார்த்தாலும் நம்மைப் பலவீனப்படுத்துவதோ, நமது கலைஞர்களைச் சாய்த்துவிடுவதோ அவர்களால் ஆகாது. தங்களையாவது மக்கள் மன்றத்தில் உயர்த்திக்கொள்ள முடியுமா என்றால், அதுவும் நடக்காது. சென்னையில் 'நாடோடி மன்னன்' விழாவில் ஒரு உண்மையை நான் கண்டேன். கழகத்தின் கருத்துக் கொண்ட கலைஞர்களைத்தான், மக்கள் கலைஞர்களாக மக்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். ஆம்; காலமும் கருத்தும் என்றும் நம் பக்கமே இருக்கும் ! வாழ்க மக்கள் கலைஞர் !"

அதுமட்டுமல்ல, தம்பி ! திராவிட முன்னேற்றக் கழகத்தினர், திரைக்கதையிலேயும், வசனத்தின் மூலம் கருத்துகளைக் குழைத்து ஊட்டி வந்த நாம், சட்ட மன்றத்துக்குள்ளே நுழைந்த பின்னர், நிதியமைச்சர் சுப்பிரமணியம் அவர்கள் வாய்ப்புக் கிட்டியபோதெல்லாம், நம்முடைய திரையுலகப் பணியைக் கேலி பேசி வருகிறார் என்பதை அறிந்து, கலைத்துறைப் பணியின் மேன்மையை விளக்க அதே 'தென்றல்' இதழில் வெளியான மற்றுமோர் பகுதியையும் உன்னுடைய பார்வைக்குக் கொண்டுவருகிறேன்;

"தி. மு. கழகம் சட்டமன்றத்துக்கு வந்த பிறகு, நிதியமைச்சர் சுப்பிரமணியம் திரைப்படங்களைக் கேவலமாகப் பேசுவதையும், கதை, வசனம் எழுதுவது கடினமான காரியமல்ல என்று இழித்துரைப்பதையும், பழக்கமாகக் கொண்டிருப்பதைப் பொதுமக்கள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள். நிதியமைச்சர் சுப்பிரமணியம் கருதுவதைப்போல கதை, வசனம் எழுதுவது என்பது அவ்வளவு இலகுவான காரியமல்ல; கோடிக்கணக்கான மக்கள் வாழும் தென்னாட்டில், நூற்றுக்கணக்கான பேர் கதை, வசனம் எழுதுகிறார்கள். அவர்களில் எத்தனை பேரை மக்கள் நினைவில் வைத்திருக்கிறார்கள் என்பதை ஒருகணம் ஆராய்ந்தால், கதை, வசனம் எழுதுவதிலும் ஏதோ 'சூட்சமம்' இருக்கத்தான் செய்கிறது என்பதை எவரும் உணரமுடியும். கதை வசனம் எழுதுபவர்கள் அரசியலுக்கு வந்துவிட்டதாக அவர் கணக்குப்போடுவது தவறு. ஒருவேளை தி. மு. க.-வைச் சேர்ந்தவர்கள் கலைத்துறையையும் கைப்பற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்ற உண்மையை நிதியமைச்சர் ஒப்புக்கொண்டால், 'அரசியல் துறையிலே மட்டுமல்லாமல் கலைத்துறையிலும், இலக்கியத் துறையிலும், தி. மு. கழகத்தினர் மிகுந்த செல்வாக்குப் பெற்றிருக்கின்றனர்' என்ற மெய்யுரையைத் தெரிவித்தாகவேண்டுமே என்பதற்காக நிதியமைச்சர் கதை, வசனத்தைக் குறைத்துப் பேசக்கூடும்.

"தமிழகத்தில், நாடகங்கள் மிகக்குறைவு என்று பெரிய பத்திரிகைகளெல்லாம் அலறித் துடிக்கின்றன. போட்டிகள் நடத்துகிறார்கள். அந்தப் போட்டிக்கு நியமிக்கப்பட்டிருக்கும் நீதிபதிகளில் நமது சுப்பிரமணியமும் ஒருவராக இருக்கிறார். தன்னுடைய வாயால் பரிகசிக்கப்படும் தொழிலுக்கு, தானே பாராட்டுரை வழங்கி, பரிசையும் தர ஒப்புதல் தந்திருக்கிறாரென்றால், உண்மையிலேயே அவர் கதை, வசனத்தைக் குறை கூறுகிறாரா, அல்லது அந்த ஆற்றல் தி. மு. க.-வினர் இடத்திலேயே நிறைந்துவிட்டது என்பதற்காகக் குறைத்துப் பேசுகிறாரா என்பது மக்களுக்குத் தெரிந்தாகவேண்டும்.


"தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவரான சாமிநாதசர்மா அவர்கள், தமிழகத்தில் நாடகங்கள் குறைந்து விட்டனவே என்று மெத்த வருத்தப்பட்டுச் சென்ற கிழமை பேசியிருக்கிறார். சென்னை மாநிலத்தின் கவர்னராக இருந்த பி. வி. இராசமன்னார் அவர்கள், 'கதை, வசனம் எழுதச் சந்தர்ப்பம் கிடைத்தால் மகிழ்வோடு ஏற்றுக்கொள்வேன்' என்கிறார். ஆனால், அமைச்சர் சுப்பிரமணியம் கதை, வானம் எழுதுவது மிகச் சுலபம் என்கிறார். அரசியல் கடினம் தான், அதற்காகக் கதை, வசனம் எழுதுவது இலகுவானதாகிவிடுமா ?

"ஆரம்ப காலத்தில் 'கல்கி' ஒரு படத்திற்கு வசனம் எழுதியபோது அவரைப் புகழாத காங்கிரஸ் தலைவர்கள் இல்லை. வான்முட்ட வர்ணித்தார்கள். 'இதுவன்றோ அமர சிருஷ்டி' என்றார்கள். படம் விழுந்தது. பாராட்டுக்கள் காற்றோடு கலந்தன, தன் கரம் பட்டால் கரியாகும் காரியம், எதிரியின் கரம் பட்டால் பொன்னாகும் போது, சொந்தக் கரத்தை நொந்துகொள்ள மனமில்லாமல், அந்தக் காரியத்தையே குறைத்துப் பேசுகிறார்கள்.

"காங்கிரஸ் கட்சி, வெள்ளைக்காரர்களை எதிர்த்துப் போராட்டம் நடத்திய காலத்தில் பொதுமக்கள் உள்ளத்திலே இலட்சிய வேட்கையை எழுப்பக் காங்கிரசார் என்னென்ன செய்தார்கள் ?

"நாடகங்கள் நடத்தவில்லையா ? கே. பி. சுந்தராம்பாளைக் கேட்டால் தெரியும் !

"தலைவர்கள் நடிக்கவில்லையா ? சத்தியமூர்த்தி நடித்திருக்கிறார் !

"பாடல்கள் இயற்றவில்லையா ? பாரதியார் பாடல்கள் என்ன, குப்பையா, கூளமா ? அத்தனையும் அந்நிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் பாடிய தீப்பொறிகள் அல்லவா !

"நாடகம், இலக்கியம் அவசியம்தான் ; ஆனாலும், அவர்கள் அரசியலுக்கு வரக்கூடாதென்றால், கவிக் குயில் சரோஜினிதேவியார் கவர்னராகப் பணி புரிந்ததையும், நாவல் நாடக—ஆசிரியரான முன்ஷி உணவு மந்திரியாக இருந்ததையும், சிறந்த எழுத்தாளரான சந்தானம் கவர்னராகப் பணிபுரிந்ததையும், காலஞ்சென்ற கல்வி யமைச்சர் ஆசாத் சிறந்த இலக்கிய விமர்சகர் என்பதையும், சுப்பிரமணியம் மறந்துவிட்டார் என்பதைத் தவிர, வேறு பொருளில்லை."

அவரும் கலை உலகினர் ; எனவே, அவ்விதம் பேசுகிறார் என்று வாதிடத்தோன்றும். சரி, தோழர் சம்பத்தையே அழைக்கிறேன் ; கேட்டுத்தான் பாரேன், அவர் கருத்தையும், இந்தப் பிரச்சினையில் !

கழக மாநாடு ! கலைஞர்கள் கலந்துகொள்கின்றனர். உற்சாகம் கரைபுரண்டு ஓடுகிறது ! காங்கிரசார் முகத்திலேயோ எள்ளுங் கொள்ளும் வெடிக்கிறது. இதனை உணர்ந்து, தோழர் சம்பத் விளக்கம் அளிக்கிறார் ; கேண் மின் !

"கழகக் கலைஞர்கள் எல்லாம் ஏதோ திடீரெனக் கழகத்திற்கு வந்தவர்கள் அல்லர். இராசேந்திரனை எடுத்துக் கொண்டால் அவர் என் எதிரில் வரப் பயப்பட்டுக்கொண்டிருந்த பருவத்திலிருந்து இன்று வரை கழகத்தில் இருப்பவர்.

"அப்படியேதான் பிறரும்—பல காலமாகக் கழகத்தில் இருப்பவர்கள்.

"அவர்கள் கழகத்தில் இருப்பதற்குக் கழகத்தால் கலையே வளருகிறது என்பதும் ஒரு முக்கியமான காரணம்.

"கழகத்தில் உள்ள கலைஞர்களைத் தனியாகப் பிரித்துப் பேசுவதையேகூட நான் விரும்புவதில்லை.

"கழகத்தில் சில டாக்டர்கள் இருக்கிறார்கள், சில என்சினியர்கள் இருக்கிறார்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள் இருக்கிறார்கள், எழுத்தாளர்கள் இருக்கிறார்கள், உழவர்கள் இருக்கிறார்கள், தொழிலாளர்கள் இருக்கிறார்கள், அவர்களைப்போலவே சில கலைஞர்களும் இருக்கிறார்கள்' அவ்வளவுதான்."

தெளிவான விளக்கம் அல்லவா ?

தம்பி ! கலைஞர்களுக்கு மட்டும், குடி அரசுத் தலைவருக்குக் கருப்புக்கொடி காட்டும் போராட்டத்தில், விலக்கு அளித்துவிட்ட 'மாபாவி' என்றல்லவா என்னைச் சித்திரிக்கிறார்கள். தோழர் சம்பத், 'கலைஞர்களைத் தனியாகப் பிரித்துப் பார்க்காதீர்கள்—டாக்டர்கள்—என்சினியர்கள் போல அவர்களும் ஒரு தொழிலினர்' என்கிறார் ; அது போன்றே, விலக்கு அளிக்கப்பட்டது கலைஞர்களுக்கு மட்டுமல்ல ; டாக்டர்களுக்கும், வழக்கறிஞர்களுக்கும் கூடத்தான் ! இது ஏன் மறைக்கப்படவேண்டும் ?

மறைத்துவிடட்டும், அதனால் குடி முழுகிப் போய்விடாது. கலைஞர்களைப்பற்றி நாமே கூறிய கருத்தை நாமே மறந்துவிடாமல் இருந்தால் அது போதுமானது.

"தி. மு. கழகம் வளர்வதற்குக் காரணம், 'நாலைந்து சினிமாக்காரர்கள் இருக்கிறார்கள் ; அதனால்தான் அது வளர்கிறது' என்கிறார்கள். சினிமாக்காரர்கள் கழகத்தில் இருப்பதாலே அவர்களுக்கு ஒன்றும் இலாபம் இல்லை—மாறாக, தொல்லைதான் அதிகம்."

இதை நான் கூறவில்லை ; காஞ்சி கலியாணசுந்தரம் படிப்பகத் திறப்பு விழாவின்போது 6—6—59-ல் தோழர் சம்பத் சொன்னார்.

இந்த விளக்கங்களை எல்லாம் அறியாமல், காங்கிரசார் கண்டபடி பேசி வருவது தோழர் சம்பத்துக்குக் கட்டோடு பிடிக்கவில்லை. எனவே, மிகக் கடுமையாகக் காங்கிரசாரைக் கண்டித்தாகவேண்டும் என்ற 'உத்வேகத்தில்' இதைச் சொன்னார்.

"இந்த இலட்சியத்தை எடுத்து வைத்துக்கொண்டு ஆராய்வதற்கு வகையற்ற நிலையிலே இருக்கின்ற காரணத்தாலேதான், அண்ணாதுரையின் அகலம் என்ன? உயரம் என்ன? என்பதுபற்றியும், நெடுஞ்செழியன் ஏன் இவ்வளவு நெடு நெடுவென வளர்ந்திருக்கிறார்? என்ற ஆராய்ச்சியிலேயும், கருணாநிதிக்குக் கலைஞர் என்ற பட்டத்தை யார் கொடுத்தார்கள், எப்போது கொடுத்தார்கள், ஏன் கொடுத்தார்கள் என்கின்ற ஆராய்ச்சியிலேயும் ஈடுபட்டுப் பரிதவித்துக் கொண்டிருக்கிறார்கள்."

தம்பி ! இந்த ஆராய்ச்சியோடு, காங்கிரசார் நிறுத்திவிடவில்லை. என் பேச்சு, எழுத்து, அதிலுள்ள அடுக்கு மொழி, உவமை, அந்த உவமையிலே உள்ள தன்மை, சுவை இவைபற்றியெல்லாம் ஆராய்ச்சி நடத்தினர். அதன் விளைவுதான், என்னைப்பற்றி மட்டுமல்ல, பொதுவாகக் கழகத்தைக் குறித்தே, மிகக் கேவலமான முறையில்,

கூத்தாடிகள்
கூவிக்கிடப்போர்
அடுக்குமொழியினர்
ஆபாசநடையினர்
காமச்சுவைப் பேச்சினர்
கதை எழுதிப் பிழைப்போர்

என்றெல்லாம் இழிமொழியால் ஏசலாயினர். கேட்டுக் கொண்டேன். அப்போது என் சார்பாக வாதாடி நின்றவர்கள் இன்று, அதே இழிமொழி வீசி என்னை ஏசிட முற்படுகின்றனர். செய்யட்டும், இதையும் தாங்கிக்கொள்கிறேன்.

வைதிகர்கள் சொல்வார்கள், 'வந்த வழி' என்று! இது நானாக மெத்தக் கஷ்டப்பட்டு வகுத்துக்கொண்ட வழி. அதற்கு நான் யார்மீது நொந்துகொள்ளமுடியும் ?

ஆனால், நானாக யோசிக்கிறேன். நிலைமை புரிகிறது நம்மோடு இல்லாதவர்கள் வேறு என்ன பேசித்தான் சமாதானம் கூறிக்கொள்ளமுடியும்? பாவம்!

அறிவாளிகள்
அடக்க குணமுடையோர்
அழகு நடையுடையோர்
கலைத்தொண்டு புரிவோர்
மாற்றாரும் மகிழப் பேசுவோர்
மாண்பு காத்திடுவோர்
என்றும் கூறிக்கொண்டு, நமக்கு மாற்று முகாமிலும் எப்படி இருக்கமுடியும்? எனவேதான், ஏககிறார்கள் ! அது அவர்கள் வகுத்துக்கொண்டு தீரவேண்டிய 'வழி' ஆகிவிடுகிறது.

இது எனக்குப் புரிவதால்தான், எனக்குக் கோபமோ, குமுறலோ, எளிதில் ஏற்படுவதில்லை.

இந்த நிலை அனைவருக்கும் ஏற்பட்டாகவேண்டும்.

அப்போதுதான் அரசியல் என்பது அமளிகளற்ற, கருத்தரங்கம் என்ற தூய நிலை பிறக்கும்.

அந்தக் கருத்தரங்கம், ஒளிதரவேண்டும்—வீணான வெப்பத்தை அல்ல.

வேறுபாடான எண்ணங்கள் எழலாம், மோதிக் கொள்ளலாம், இறுதியில் குழைந்துபோகலாம், வெறுப்புணர்ச்சியாக மாறிடலாகாது.

இது நாடு; காடு அல்ல ! மக்களை நல்வழிப்படுத்த முடியும் என்று நாம் இயக்கம் நடத்த முற்படுகிறோம்—நாம் முதலில் நல்வழி நடக்கவேண்டும்.

எத்தனை கோபதாபம் ஏற்பட்டாலும்—ஏற்படக்காரணம் ஏற்படினும்—அடக்கம், பொறுப்புணர்ச்சி மறத்தலாகாது, என்பதனையும் இந்த நேரத்தில் அனைவருக்கும் கூற விரும்புகிறேன்—மறந்துவிட்டேன்—பிரிந்துபோனவர்கள், நீ யாரடா எமக்குப் புத்திமதி கூற என்று கோபித்துக் கொள்ளவேண்டாம். முன் தொடர்புகளை அவ்வளவு எளிதாகவும், விரைவாகவும், மறந்துவிட இயலாததால், பழக்கம் காரணமாக, அனைவருக்கும் கூறுகிறேன் என்று சொல்லிவீட்டேன். குறை பொறுத்திடுக! என்னை, இப்போதும், 'அண்ணன்' எனக் கொள்வது, அரசியல் ரீதியாகப் பார்த்தால்கூடத் தவறுமல்ல, தரக்குறைவுமல்ல என்ற எண்ணம் கொண்டவர்களுக்குக் கூறுகிறேன்;

கொள்கை மறவாதீர் !
கோபத்துக்கு ஆளாகாதீர் !
கூடி வாழ்வது பொறுப்பான காரியம்—அறிவீர்.
குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை !