அண்ணாவின் தலைமை உரைகள்/மாமனிதர் மகாவீரர்
7. மாமனிதர் மகாவீரர்
வேலூரில் 35 ஆண்டுகள் பணி புரிந்த ஒரு வெள்ளைக்காரர் ஓய்வு பெற்ற காலத்தில், தாயகம் செல்லவிருந்த பொழுது. வழியனுப்பு விழாவிற்கு என்னையும் அழைந்திருந்தார்கள். எவ்வளவோ மைல்களுக்கு அப்பாலிருந்து வந்து—வேற்று நாட்டுக்காராக இருந்தாலும்—விழுமிய தொண்டராகப் பிறர் பயனடைய, மருத்துவ நிலையங்களையும், கல்விக்கூடங்களையும், அறமனைகளையுங் கட்டித் தந்து பணி புரிந்தவராயிற்றே என்னுங் கருத்தில், அமெரிக்காவிற்குச் செல்லவிருந்த அந்தக் கிறித்துவரை வழியனுப்பச் சென்றேன். அப்போது, வேலூரிலிருந்து இந்து மதத்தைச் சார்ந்த ஒருவரிடமிருந்து எனக்கு மிரட்டல் கடிதம் வந்தது. “கிறித்துவரை வழியனுப்பும் விழாவில் கலந்து கொள்ள வந்தால், நாங்கள் கறுப்புக் கொடி காட்டுவோம்” என்று அந்தக் கடிதத்திலே எழுதி இருந்தது. எங்கள் கட்சிக் கொடியிலே கறுப்புத்தான் இருக்கிறது என்று அப்போது வேடிக்கையாகச் சொன்னேன்.
எவ்வளவோ தொலைவிற்கு அப்பாலிருந்து வந்தவர்கள் என்றாலும், அயலவர்கள் என்றாலும், அவர்கள் செய்த நல்ல செயலைத் தமிழக மக்கள் வரவேற்க வேண்டும். அது போன்ற செயல்களைச் செய்யவும் வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.
ஜைனமதத்தைச் சேர்ந்தவர்களும் மருத்துவ மனைகளையும் கல்லூரிகளையும் ஏற்படுத்தித் தாங்கள் ஈட்டிய பொருளை நல்ல செயல்களுக்குப் பயன்படுத்துவதைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்.
நான் பிறந்த காஞ்சிபுரத்திலும் அதைச் சுற்றிய சிற்றுார்களிலும் ஜைன மதத்தைச் சார்ந்த மக்கள் இருக்கின்றார்கள். அவர்களுடன் எனக்குத் தொடர்பும் உண்டு.
“ இந்து மார்க்கம் தமிழர்களுக்கே உரிய மார்க்கம்” என்று தமிழாய்ந்த வல்லுநர்கள் சிலர் கூறுகின்றனர். ஆகவே, இந்த மார்க்கத்தில் எனக்குத் தொடர்பும் ஈடுபாடும் உண்டு என்பதைத் தெரிவித்துக்கொள்கிறன்.
உலகத்திலேயே நம்முடைய நாட்டில்தான் பெரும் பெரும் மகான்கள் வழிகாட்டிகள் தோன்றி இருக்கிறார்கள். நான்கூடச் சில சமயம் நினைத்துப் பார்ப்பேன். 'இப்படிப்பட்ட பெரியவர்கள் தோன்றாமல் இருந்திருக்கலாம். அவர்கள் தந்த அந்த நல்ல சிந்தனைகள் தோன்றாமல் இருந்திருக்கலாம் என்று. பெருமைக்குரிய வழிகாட்டிகள் பலர் இருந்துங்கூட, " நாம் இந்த அளவுக்குக் கெட்டுப் போயிருக்கிறோம் உயர்ந்த நிலையில் இல்லையே”. என்பதால்தான், அப்படிக் கருதத் தோன்றியது.
இதுபேன்ற வழிகாட்டிகளே தோன்றாத நாடுகளில் எவ்வளவோ முன்னேறி இருக்கின்றார்கள். வளர்ச்சி அடைந்திருக்கின்றார்கள். ஆனால் வழி காட்டிகள் இருந்தும், அவர்கள் வழிநடத்திச் செல் பவர்களாக இருந்தும் நாம் முன்னுக்கு வரவில்லை. காரணம் நாம் சொல்பவர்களாகவே இருந்தோம். செய்யத் தவறி விட்டோம். ஆகவே, இனிமேல் சொல்வதுடன் செய்து காட்டவும் வேண்டும்.
"புத்தர் சொன்னார், சித்தர் கூறினார் மகாவீரரும் முகமது நபியும், காந்தியடிகளும் இராமலிங்க அடிகளும் சொன்னார்கள் " என்றுதான் சொல்கிறோமே தவிர, அவற்றைச் செய்து காட்டுகின்றோமா ?
" அவர் அப்படிச் சொன்னார், இவர் இப்படிச் சொன்னார்" என்று கூறிவிட்டு, "நீ என்ன செய்யப் போகிறாய்?" என்றால் விழித்து நிற்போரைத்தான் நாம் பார்க்கிறோம், ஆகவே, சொல்வதோடு மட்டும் நில்லாமல், செய்தும் காட்டவேண்டும். அப்போதுதான் அந்த நன்னெறிகளை உணர்ந்தவர்கள் ஆவோம்.
மகாவீரர் போன்ற உயர்ந்த மேதைகளை நாம் பின்பற்றிச் செல்லவேண்டும்.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றிய ஜைன விதியை நல்லமுறையில் பாதுகாத்து, அந்த நெறியிலே நடப்பது மட்டுமல்லாமல், மற்றச் சமுதாயத்தினரும் அந்த நெறியிலே நடந்து வாழ்ந்து சிறக்கவேண்டுமென்பதிலே அக்கறை காட்டுகின்ற உங்களைப் பாராட்டக் கடமைப் பட்டிருக்கின்றேன்.
மகாவீரர் போதித்த தத்துவங்கள் நல்ல மார்க்கங்களாகும். நல்ல நெறிகளாகும். "ஐம்புலன்களை அடக்கு பொருள்களின்மீது மிகுதியாக ஆசை வைக்காதே". என்றெல்லாம் இங்கு எழுதியிருப்பதைக் காண்கின்றேன். இந்த உண்மைகளை எல்லாம் உண்மையிலேயே உலகில் உள்ளோர் அறிந்து உணர்ந்திருப்பாரேயானால் சண்டை ஏற்பட்டிருக்காது. ஐக்கிய நாடுகள் மன்றமும் தேவைப்பட்டிருக்காது.
மனித சமுதாயத்தை வழிநடத்தும் மார்க்கங்கள் எல்லாம் நான்கு மாடிக்கட்டிடங்களாக உள்ளன என்றாலும், இரண்டு மூன்று மாடிகளுக்குத் தான் ஒழுங்கான பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. மூன்றாவது மாடியிலிருந்து அடுத்த மாடியைப் பார்த்தால்: தொங்குகிற நூல் ஏணியில் ஏறிச்செல்ல வேண்டிய நிலையில் இருக்கிறது.
ஜைன மதத்தை அறிந்த அறிஞர்களிடமும், பெரியவர்களிடமும் எனக்கு நெருங்கிய தொடர்பும் பழக்கமும் உண்டு. ஜைன சமயம் பற்றிப் பல தடவை நாங்கள் விவாதித்து இருக்கிறோம். அப்போது நான் வகுத்தப்பட்டதுண்டு. நெறிகள் சரியில்லை என்பதால் அல்ல. இந்த நெறிகளை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு நாம் வளர்ந்துகொள்ள வில்லையே என்பதுதான் அதற்குக் காரணம். அந்த அறநெறிகளுக்கு ஏற்ற வளர்ச்சி இல்லையே என்னுங் குறை இருப்பதால், அந்த நெறிகளே எல்லாம் மறந்துவிடவேண்டும் என்று நான் கூறமாட்டேன்.
ஆண்ட அரசர்களையும், அண்டி உயிர் வாழ்ந்த ஆண்டிகளையும், பெரும் பணக்காரர்களையும், சிரமப் பட்டுப் பிழைத்த ஏழைகளையும், உயர்ந்தோர் எனச் சொல்லிக் கொண்டோரையும், தாழ்ந்தவர் எனக் கூறப்பட்டோரையும், தமக்குப் பின்னே வழி நடத்திய மாமனிதர் மகாவீரர். அவர் பின் செல்லவும், அவர் விட்டுச் சென்ற நல்ல செயல்களை நாமும் கடைப்பிடித்து ஒழுகி, அதன் மூலம் நல்ல வாழ்க்கை வாழவும் வேண்டும்.
நான் நல்ல வாழ்க்கை என்று கூறுவது, “நாம் மட்டுமல்லாது, பிறரும் உலகத்தில் மகிழ்ச்சியடையக் கூடிய அளவில் வாழ வேண்டும்” என்பதைத்தான் நல்ல வாழ்வு எனக் கருதி, மக்கள் வாழ்வாங்கு வாழ வேண்டும் என்று கேட்டுக் கொண்டு விடை பெறுகிறேன்.
(22-4-67 அன்று சென்னை ஜைன சங்கத்தின் சார்பில் நடைபெற்ற மகாவீரர் பிறந்த நாள் விழாவில் ஆற்றிய தலைமை உரை)
தலையாய பணி
பெற விரும்புவோர்க்கு, அதனை அதன் உண்மையான
அளவிலும், நோக்கத்திலும் அளிப்பதும், உலகின்
கருத்துக்கள், குறிக்கோள்கள் ஆகியவற்றின்
தனியாண்மையினைக் காப்பதும் ஆகும்.
— பேரறிஞர் அண்ணா