உள்ளடக்கத்துக்குச் செல்

அண்ணாவின் தலைமை உரைகள்/பொன்னியின் செல்வி

விக்கிமூலம் இலிருந்து


14. பொன்னியின் செல்வி


சந்திரகாந்தாவின் இரண்டாவது நாட்டிய நாடகமான இந்தப் பொன்னியின் செல்வி அளித்துள்ள இலக்கிய விருந்து மிகச் சிறப்பாக உள்ளது. இலக்கிய நாட்டிய நாடகத்திற்குச் சிறப்பாகப் பயிற்சி தந்த திரு. இராலால் அவர்களைப் பாராட்டுகிறேன். அதே போன்று, இக்கலை வளர்ச்சியில் ஆர்வம் காட்டிய அத்தனைப் பேருக்கும் எனது வாழ்த்துதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பழைய இலக்கியக் கருத்துக் கருவூலத்தை மனத்தில் கொண்டு, கற்பனையில் தோன்றியவைகளையும் ஒன்றாகச் சேர்த்துத்தான் ‘பொன்னியின் செல்வி’ என்று நாட்டிய நாடகமாக அமைத்திருக்கிறார்கள். இப்படி எல்லோரும் கண்டு பாராட்ட வகை செய்யாமல், ஏட்டளவிலே எழுதி-வீட்டிலேயே உட்கார்ந்து படித்துக்கொண்டிருந்தால், அது அத்தனைச் சிறப்பாக யாருக்கும் தெரியாது.

இந்த நாட்டிய நாடகம் நல்ல உயிர்ப்புச் சக்தி கொடுத்துத் தயாரிக்கப் பட்டிருக்கிறது. இலக்கிய காலத்தில் வாழ்வது போன்றதோர் உணர்வு இத்தனை நேரம் இங்கே நிலவி இருந்தது. இந்த நாட்டிய நாடகம் சிறந்த கருத்துக்களைக் கருவூலமாகக் கொண்டு அமைந்திருக்கிறது. மேனாட்டுக் கலை விற்பன்னர்கள் கண்டு மிகவும் பாராட்டத்தக்க வகையில் அமைந்து இருக்கிறது.

சந்திரகாந்தாவைச் சிறுவயது முதலே, சிறுகுழந்தையாக இருந்தபோதிருந்தே எனக்குத் தெரியும். இன்றைக்கு இந்த அளவிற்குக் கலை ஆர்வத்தால் நல்ல முறையில் வளர்ந்திருப்பதைக் காணும்போது மெத்த மகிழ்ச்சி அடைகிறேன். உலகத்தின் பல்வேறு நாட்டவர்களும், நமது தமிழகக் கலையை அன்று முதலே பாராட்டியிருக்கிறார்கள். அந்த வகையிலே, இந்த நாட்டிய நாடகமும் அயல் நாட்டவர்களால் பாராட்டத்தக்க அளவில் மிக நன்றாக அமைந்து இருக்கிறது.

எனவே, சந்திரகாந்தா திறம்பட இலக்கியக் கலை ஆர்வத்தைக் காட்டியிருக்கும் இந்த நாட்டிய நாடகத்தைச் சென்னையில் விரைவில் நடைபெற இருக்கும் உலகத் தமிழ் மாநாட்டில் இடம் பெறச் செய்வேன். தமிழக அரசு அதற்கான வாய்ப்புக்களையும், வசதிகளையும் செய்து தரும் என்று உறுதி கூறுகிறேன். சென்னையில் நடைபெறும் உலகத் தமிழ் மாநாட்டில் இயல், இசை, நாடகம் ஆன முத்தமிழும் இடம் பெறும்.

அதில் உலகத்தவரே கண்டு வியக்கும் வகையில், பாராட்டும் வகையில் இந்த நாடகத்திற்கு மெருகு ஏற்றிப் பண்பு பாழ்படாமல், கருத்துடன் அமைந்திருப்பதால் வெற்றி பெறத் தக்கதாக அமையும் என்று நம்புகிறேன்.

தமிழக அரசினுடைய எல்லா வளமுமே, இன்று காவிரி ஆற்றில்தான் இருக்கிறது. உள்ளபடியே, காவிரி ஆற்றின் அழிக்கும் சக்தியை விட, ஆக்கும் சக்திதான் அதிகம். எங்கே கணவனுக்காகக் கதறி அழும் காரிகையின் வாழ்வையும் பறிக்கின்ற வகையிலே, காவிரியும் ஆட்டனத்தின் உயிரைக் காப்பாற்றித் தராமல், அழித்து விடுவது போல் கதை அமைந்து விடுகிறதோ என்று யோசித்திருந்தேன். நல்ல காலம்; காவிரி ஆறு அனைவரையும் காப்பாற்றி விட்டிருக்கிறது, இலக்கிய வரலாற்றிலேயே! எனவே, நம் தமிழக மக்களையும் காவிரி காப்பாற்றும் !

வகைப்பாடு : கலை—நாட்டியம்.
(15-5-67 அன்று சென்னையில் பொன்னியின் செல்வி நாட்டிய நாடக அரங்கேற்றத்திற்குத் தலைமை தாங்கி ஆற்றிய உரை.)