அண்ணாவின் தலைமை உரைகள்/நாட்டின் மீன் வளம்
25. நாட்டின் மீன் வளம்
இந்தியப் பேரசின் உணவுத் துறை அமைச்சர் திரு. ஜகஜீவன்ராம் மீண்டும் தமிழகத்திற்கு வந்துள்ளது கண்டு நான் பெருமகிழ்வடைகிறேன். இங்குத் துவங்க இருக்கும் புதிய அமைப்பு, நமது நெடுநாளைய குறையைத் தீர்த்து வைக்கிறது.
நம் நாட்டில் ஏராளமான மீன் வளம் இருந்தும், அதனைத் தக்க முறையில் பயன்படுத்தவில்லை என்னுங் குறை இருந்து வருகிறது. மீன் வளத்தைப் பயன்படுத்த, இருக்கின்ற வசதிகளை விரிவுபடுத்தி விஞ்ஞானமுறையில் வளர்ச்சி காணவேண்டும் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வர்.
உணவுப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கும் நம் நாட்டுச் செல்வத்தைப் பெருக்குவதற்கும் ஜகஜீவன் ராம் மேற்கொண்ட முயற்சிகள் மிகப்பல. தமிழக அரசு அவரை அணுகிய நேரத்திலெல்லாம், அவர் ஆதரவான வாக்குறுதிகளை அளித்தார்.
தமிழகத்தில் ஓரளவு உணவு உற்பத்தி பெருகி நிலைமையை நாம் சமாளிக்க முடிந்ததென்றால், உழவர்களின் உழைப்பும் அதிகாரிகளின் அக்கறையும், அமைச்சர் ஜகஜீவன்ராம் தந்த ஒத்துழைப்பும் காட்டிய ஆர்வமும் மிகமுக்கியமான காரணங்களாகும் என்பதை நான் தெரிவித்துக்கொள்கிறேன்.
சென்ற ஆண்டு தஞ்சை மாவட்டத்தில் புதியமுறைகளை வேளாண்மைத் துறையில் புகுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டோம். அப்போது அவற்றைத் துவக்கிவைக்க, ஜகஜீவன்ராம் சென்ற ஆண்டு வந்தார். தஞ்சைத் தரணியில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டார். பச்சைப் பசேல் என்றிருக்கும் வயல்களையும் சூழ்ந்துள்ள தென்னஞ் சோலைகளையும் பார்த்தார். இவ்வளவு இருந்தும் பஞ்சம் இருக்கலாமா எனச்சிந்தித்தார்.
தகுந்த நேரத்தில் தகுந்த அளவு வசதி செய்திருந்தால், தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக மட்டுமன்றி, இந்தியாவின் நெற்களஞ்சியமாகவும் தஞ்சை விளங்கிடும் என்று அவரிடத்தில் எடுத்துச் சொல்லப்பட்டது. அவரும் உறுதுணையாக இருந்து, நமது நோக்கங்கள் நிறைவேறப் பேராதரவு தந்தார்.
இப்போது இங்கே 5 இலட்சம் செலவில் இந்த நிலையம் அமைக்கப்படுகிறது. இத்தகைய நிலையங்கள் நிரம்ப ஏற்பட வேண்டும். இது வரை, நம்மிடமுள்ள மீன் வளத்தில் 100-க்கு ஒரு பங்கைக் கூட நாம் பயன்படுத்தவில்லை.
நான் ஜப்பான் நாட்டிற்குச் சென்றிருந்த போது, “உங்கள் நாட்டுக் கடற்கரை அருகே கூட நாங்கள் மீன் பிடிக்க வருகிறோம்.” என்று அவர்கள் சொன்னார்கள்.
முப்புறமும் கடல், கடல் எல்லாம் அலை. அலையெல்லாம் எண்ணிய மீன் வளம் உள்ளது. இதைத் தக்க முறையில் பயன்படுத்தினால், உணவுப் பஞ்சத்தைத் தீர்க்க நாம் வழி காணலாம்.
வகைப்பாடு : உணவு—மீன்
(11-6-68-இல் சென்னை எண்ணூர் மீன் உறைய வைப்பு நிலையத் திறப்பு விழாத் தலைமை உரை<)