உள்ளடக்கத்துக்குச் செல்

அமெரிக்காவில் ஒரு பாரதிதாசன்/அமெரிக்காவில் ஒரு பாரதிதாசன்-கட்டுரை 1

விக்கிமூலம் இலிருந்து

அமெரிக்காவில் ஒரு பாரதிதாசன்


அமெரிக்கநாட்டிலே, ஒரு பாரதிதாசன் புதுக்கவி என்றும் புரட்சிக்கவி என்றும் கொண்டாடப்படுபவர். ஆனால், தமிழரில், தன்மானக் கோட்பாடுடையவர் புரட்சிக்கவி பாரதிதாசனைத் துவக்கத்திலேயே பாராட்டினர். அமெரிக்கநாட்டுப் பாரதிதாசனுக்கு, ஆரம்ப காலத்திலே அஃதும் இல்லை. இன்றும் நமது கவிஞரை இங்குள்ள ஏடுதாங்கிகள், ஏதேனும் கூறிடுவர் இறுமாப்புடன். அன்று, அமெரிக்கநாட்டுக் கவிஞனையும் அவ்விதமே ஏளனம் செய்தனர். பின்னரோ புகழுரையைப் பொழிந்தனர்!

புரட்சிக்கவிஞர், வால்ட் விட்மன் என்பாரையே நாம், அமெரிக்க நாட்டுப் பாரதிதாசன் என்கிறோம். அவர், கவிதை எப்படி இருத்தல் வேண்டும். என்பது பற்றித் தமது கருத்தைப் பலசமயங்களிலே கூறியிருக்கிறார். ஒரு கவி, கவிதையின் இலட்சணத்தை விளக்குவது, அவரை நாம் அறியவும், அவர் மூலம் பொதுவாகவே கவிதாமணிகள் எவ்வண்ணம் இருப்பர் என தெரியவும், ஓர் வாய்ப்பளிக்கிறது. இதோ வால்ட் விட்மன், படப்பிடிப்பு! பாருங்கள், கவியின் உருவம். கவர்ச்சியுடன் காட்சி அளிப்பதை.

வால்ட்விட்மனின் கருத்துகள், பல, பாரதிதாசனுடையது போன்றே, பழைய கட்டுகளை உடைத்தெறியும் வெடிகுண்டுகள் போன்றுள்ளன. மக்களின் மேம்பாடே, விட்மனுக்குக் குறிக்கோள். மத தத்துவார்த்தங்களிலே அவர் மயங்கவில்லை அவருடைய மணிமொழிகளிலே, சில இங்கு தருகிறோம்.

பழைய கட்டுப்பாடுகளையும் முட்டுப்பாடுகளையும் உடைத்தெறிந்து, கவிதைக்கும் வசனத்திற்கும் புதிய சுதந்தர ஓட்டந் தருகிறேன். ஆசான் எனினும் பாரேன்; அவன் எழுதிய வழக்கமான கருத்துக்களைத் தகர்த்தெறிவேன்.

உள்ளத்தை வெளிப்படையாக, சீர் தளைகளுக்குக் கட்டுப்படாமல், தைரியமாகச் சொல்பவனே கவிஞன். அவன் எதுகை மோனையின் அடிமையல்லன். சொல்லிற்கும், யாப்பிற்கும் இலக்கணத்திற்குங் கூட அவன் அடிமையல்லன். அவன் அவற்றின் தலைவன்; கருத்தின் முதல்வன். அவன் ஒரு சிருஷ்டி கர்த்தா!

எந்தப் பழைய வழக்கத்திற்கும் தொத்தடிமையல்லன். பழைமைக் குட்டையில் பாசிப்படர்ந்த பழக்கங்களை ஒழித்து, அவன் வாழ்விற்கு ஓட்டமளிக்கிறான்.

உண்மைக்கவி ஒரு தீர்க்கதரிசி. அவன் பழங்கவிகளின் எதிரொலியல்லன்; பழைய வழக்கத்தின் பின்பாட்டுக்காரன், அல்லன்.

கவி, வெறும் நீதிப்புரோகிதன் அல்லன், உவமையணிகளிலும், வர்ணனைகளிலும் விளையாடிக் காலங்கழிப்பவன் அல்லன்.

கவிகள், பிறர் அறிய முடியாத அருளாவேசத்தை விளக்குவோர், நிகழ்காலத்திற்படிந்த மகத்தான எதிர் காலச் சாயலின் கண்ணாடிகள். அங்கீகாரமின்றி உலகிற்கு அறமளிப்போர் கவிகளே!

மனிதா! நீ யாருக்கும் தலை வணங்காதே; நிமிர்ந்து நட; கை வீசிச் செல்! உலகைக் காதலி! காதலில் கூசாதே! செல்வச் செருக்கரை, கொடுங்கோல் அரக் கரை, மத வெறியரை ஒதுக்கித் தள்ளி, மனச்சாட்சியைத் துணைகொண்டு நட, ஏழைகளிடம் இரக்கம் காட்டு, தொழிலாளருக்கு ஆறுதலளி. பாட்டாளியிடம் பரிவு கொள். தாராளமாக உதவு. உழைப்பை மதி; ஊருக்கு உதவு! உனக்கு எட்டாத கடவுளைப் பற்றித் தெரிந்ததாகப் பிதற்றதே!

எதையும் சித்தித்துப்பார் யாருக்கும் நீவீர் தாழ்ந்தவரல்லீர்! எவர்க்கும் அடிமையல்லீர்! நீவிரே தலைவர்! தலை நிமிர்ந்திடுக!

பண்டு நடந்த அற்புதங்கள்? வெறும் பொய்கள். நம்பாதீர்! அகம்பாவக் கொடுங்கோலரை வீழ்த்துவீர், வீழ்ந்தோரை உயர்த்துவீர்!

இனி உலகில் புரோகிதர், சாமியார் அதிகாரம் நடக்காது. அவர்கள் காலம் மலையேறிப்போய்விட்டது. ஒவ்வொருவனும், தனக்குத்தானே உபதேசியாகி விடுவான், உள்ளம் உணர்ந்து உரத்துடன் வாழ்வான். பழைய கட்டுப்பாடுகள் ஒழியும்.

மனிதா! எதற்கும் அஞ்சாதே ஆற்றலுள்ள வெற்றி வீரனென விளங்கு. வாழ்வை நடத்த முனைந்து நில்.

நமது இன்றையச் சமுதாயம், பூச்சழகில், பேச்சழகில், வெளிவேடத்தில், தன்னலப் போட்டிப்பொறாமையில், கலகலத்துப்போன அந்தநாள் வழக்கங்களில் மோகம் கொண்டு, உள்ளே உரமற்று, ஒன்றுமின்றிக் கிடக்கிறது. இந்நிலை மாறவேண்டும்.

நம் இலக்கியங்கள், வெறும் வார்த்தைக் கோவையாக உள்ளன. இலக்கியமே, நாட்டினருக்கு ஊட்டமளிப்பது. இலக்கியம் வாழ்வின் விளக்கமாய், உயிருடன் ஒட்டுவதாய் இருத்தல் வேண்டும்,

உடலுறுதி, உள்ள உரம், கருத்துப் பொலிவு, கருத்து விடுதலை, கலைப்பண்பு, பயன் தரும் தொழில் ஊக்கம், நல்ல நட்பு, ஈகை, சுரண்டுவதற்குப் பயன்படாத (மனிதத்) தொடர்பு, சாதிமதப் பிடிவாதமற்ற வீறுநடை, பணத்திமிரற்ற உறவு, இவையே குடி அரசின் குணங்கள்! குடி அரசு பொருளைவிட, மனிதனை மேன்மையாக மதித்திட வேண்டும்.

நான் உலக மக்களில் ஒருவன் செருக்கற்றவன்! கள்ளமற்ற வெள்ளை உள்ளம்! எவருடனும் செல்வேன் கைகோர்த்து! களிப்புடன் வானத்தை நோக்கி வணங்கி வரம் கேட்பதில்லை. உழைத்து வாழ்கிறேன். ஊரை ஏய்த்தல்ல இருப்பதைக் கொடுக்கிறேன் மற்றவர்க்கும். மக்களின் தோழன் நான் புலவரிடமல்ல பாடங் கேட்டது, எனக்கு ஆசிரியர் எளியோர், அவர் தரும் பாடத்தைப் பேராசிரியர்களுக்கு நான் போதிக்கிறேன்.

காற்று எங்கும் வீசும், நானும் அப்படியே எங்கும் உலவுவேன். ஏழை பணக்காரன், புண்யமூர்த்தி பாபாத்மா, பத்னி பரத்தை ஆண்டான் அடிமை என்ற வேறுபாடு எனக்கு இல்லை, பருவ மழைபோல் பலருக்கும் பயனளிப்பேன்.

மனிதரனைவரும் எனக்கு ஒன்றே! எவருக்கும் அஞ்சேன். எதற்கும் அழேன், எதையும் தொழேன். சடங்கும் சாமி கும்பிடுதலும் எனக்கில்லை. என்னை நான் உணர்ந்தேன்! தொல்லையில்லாத விடுதலை பெற்றவன் நான்! எந்தக் குருவிடமும் மன்னிப்புக் கேட்கத் தேவையில்லை. நான் மோட்சந்தேடவில்லை.

எனக்குத் தெரிந்த உலகம் ஒன்றே அது அகண்ட உலகினும் பெரிய உலகம் அது. நான்! நானே.

முணு முணுப்பதில்லை எதற்கும். பாபத்திற்கு அழுவதில்லை, யாரையும் தொழுவதில்லை, கடவுளையும் குருக்களையும் பற்றிப் பேசிக் காதைத் துளைப்பதில்லை, இல்லை என்ற கவலை இல்லை, சேர்த்துப் பூட்டும் பித்தமில்லை முன்னோருக்குப் பணிவதில்லை. சடங்கு சங்கடம் எனக்கில்லை.

எனக்குக் கட்டில்லை, காவலில்லை, சட்ட திட்டமில்லை .

பிறர் புண்ணானால் நானும் புண்ணாவேன். மற்றவர் மகிழ, நானும் மகிழ்கிறேன்

தத்துவ ஏடுகளை விட, என் பலகணியருகே காலைக் கதிரவன் பூத்திடுவது எனக்கு களிப்பூட்டுகிறது

போனவை போகட்டும்! புத்துலகு, பேருலகு காண்போம். நாம் காணவேண்டிய உலகு, தொழில் உலகு; உறுதி உலகு! அதற்கு வழிகாண்பீர்!

நரகம் என்ற பூச்சாண்டி எனக்கு வெறும் தூசி, மோட்சம் எனும் மாயவலை எனக்கு அணுமாத்திரம்!

உயரிய கருத்துகளே !
மனிதக் குறிக்கோள்கள் !
வீரமே! ஆர்வமே, ஆற்றலே !
நீவிர், எனக்கு ஆண்டவராகுக !

🞸🞸🞸

இதுபோலப், பரம்பரைக்காரர் பயந்தோடும்படிப் பாடினார் புரட்சிக் கவிகளை, விட்மன்! அவரை ஒரு கவி என்று ஏற்க மறுத்தனர் கவலை கொள்ளவில்லை. கொடுமையைக் காய்ந்தார்! மடமையைச் சாடினார்! மணிமொழியை வீசினார்! ஏழ்மைகண்டு பயந்தாரில்லை! ஏளனம் கண்டு சலித்திடவில்லை! எதிர்ப்புக்கு அஞ்சவில்லை .

வால்ட் விட்மன் ஒரு வம்பன் என்றனர். வாதாடவில்லை! அவன் ஓர் அபாயக்குறி என்றனர்! 'ஆம்' என்றான். அவனை வெறுத்தனர், கண்டித்தனர்; ஆனால் அவனைத் தங்கள் உள்ளங்களிலிருந்து மட்டும் பெயர்த்தெடுத்துவிட முடியவில்லை. அவனுடைய கவிதைகள் உள்ளத்திலே ஊடுருவிச் சென்றுவிட்டன. தம்மையுமறியாமல் அவன் வயத்தராயினர்.

அமெரிக்கா, அங்கு தோன்றிய பாரதிதாசனைப் போற்றலாயிற்று, அவனுடைய 120-ம் ஆண்டு விழாவை ஆனந்தமாகக் கொண்டாடிற்று. நியூயார்க்கில் வால்ட் விட்மனுக்கு சிலை அமைத்தனர்!

நாம், நமது பாரதிதாசனுக்குச் செய்தது என்ன? ஏதும் செய்ய வகையற்றவரா நாம்? என்னை நான் இக்கேள்வி கேட்டுக்கொள்ளுகிறேன். ஒரு கணம் எண்ணிப் பாருங்கள், பாரதிதாசன் அங்கு பிறந்திருந்தால்?

காளி அருளோ, பவானியின் கடாட்சமோ கடம்பனின் கடைக்கண் நோக்கோ பெற்றவர்களே கவிகளாக முடியும்; அங்ஙனம் கவிகளானதும் அவர்கள் காவலரின் கொலுமண்டபங்களிலே இருப்பர்: அரசர் அகமகிழ அந்திவானத்தைப் பற்றியும் அலர்ந்த ரோஜா பற்றியும் ஆடலழகியினுடைய அதரத்தின் துடிப்புப் பற்றியும் பாடுவர்; அங்ஙனம் பாடுதல் சிற்றின்பமாமே என்று அஞ்சி, அதனை அரியின் அருள், அல்லது அரசனின் திறம் என்னும் மேற்பூச்சுத் தயாரித்து, அதனுள்ளே அமைப்பர்; அவனி காவலர் அக்கவி கண்டு மகிழ்வர்; மக்கள், கவியின் திறத்தை மட்டுமல்ல, அவர் கூப்பிடும் குரலுக்குத் தேவரும் மூவரும் ஓடோடி வருவர், கவிகள் விரும்பினால் கல்லை உருகச் செய்வர், புலியைப் பாடச்செய்வர் என்று நம்பி, அடி பணிவர். சில காலத்துக்குப்பிறகு அத்தகைய கவிகளிற் சிலர், கோயில் கட்டிக் கும்பிடத்தக்கவர்களாக்கப்பட்டுவிடுவர். கவிகளின் நிலைமை இதுவாக இருந்து வந்தது. கவி ஓர் அபூர்வப்பிறவி, அற்புத ஜாலக்காரன் கடவுளின் அருள் என்னும் கைக்கோலை வைத்துக் கொண்டு அதன் உதவியால் பிறர் காணமுடியாததைக் கண்டு, பிறர் கூற முடியாததைக்கூறும் அதிசயச் சக்தி பெற்றவன் என்று மட்டுமே மக்கள் கூறிவந்தனர்.

புன்னகை பெறுவர் கவிகளைக் கேட்டு; புண்யம் வருமென்பர் அவைகளைக்கேட்டதன் பயனாக; பிறகோ பெருமூச்செறிவர். அவர்போல் நாமென்ன அருள் பெற்றவரா கவிபாட என்று. கவிதை எவ்வளவுக்கெவ்வளவு கடினமானதாக இருக்கிறதோ, புரியாததாக இருக்கிறதோ, அவ்வளவுக்கவ்வளவு அதன் மதிப்பு உயர்ந்துவிடும். கவிதையின் கருத்து எவ்வளவுக்கெவ்வளவு மக்களின் அன்றாட வாழ்க்கைக்கும் அறிவுப் போக்குக்கும் தொடர்பற்றதாக இருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு இதற்கு மதிப்பு அதிகரிக்கும்.

"நீல நிற வானமடி நிர்மலனின் தேகமடி" என்று பாடி இருப்பார் கவி; மக்கள் நீல நிற வானத்தைக் கண்டுள்ளனர். நிர்மலனைக் கண்டதில்லை. புரிந்த ஒன்றைப் புரியாத இன்னொன்றுக்கு உவமையாக்குவார் கவி; புரியாது மக்களுக்கு, சரியா? தவறா? என்று. கடவுள், மனம் வாக்குக் காயத்துக்கு எட்டாதவர் என்பதன்றோ முதுமொழி! அம் முதுமொழி உண்மையாயின் நிர்மலனுக்கு உருவம் ஏது? உருவம் இல்லையேல் அதற்கு வண்ணம் கற்பித்து அது நீல நிறம் என்று நிர்ணயிப்பது எங்ஙனம் பொருந்தும் ? ஏன் கவி நீலநிற வானத்தையும் நிர்மலனையும் தொடர்புப் படுத்திப் பாடினார் என்ற குழப்பமான நிலை வரப் பெறுவர் சிலர், ஆனால், கவி என்றால் அற்புதம் புரிபவன், ஆகவே அவன் அறிந்தே கூறி இருப்பான்; கவி அருள் பெற்றவன், ஆகவே அவன் கூறுனது உண்மையாக இருந்தே தீரவேண்டும் என்று முடிவு செய்துவிடுவர். இதனால் விளைந்த பயன் என்ன? கவிதைகளைப் போற்ற பாராட்ட முன்வந்தனரே யன்றி, உணர, ரசிக்க, இலயிக்க, மக்களால் முடியவில்லை. கலையைக் காட்சிப்பொருளாக்கினரேயன்றி வாழ்க்கைக்குத் தோழனாக்கிக் கொள்ளமுடியவில்லை. கவிதையை இந்நிலையில் வைத்திருக்குமட்டும், கவிகளின் ஆழ்ந்த கருத்துரைகளால் ஏற்படவேண்டிய பலன் உண்டாக வழியில்லாமற் போய்விட்டது. புராணங்களில் மட்டுமே குறிப்பிடப்படும் பாரிஜாத புஷ்பத்தை நம் காதலிக்குத் தர முடியுமோ! அது போலாயிற்றுக் கவியின் நிலை.

இந்த நிலையைக் குலைத்து, எதிர்த்துப் புரட்சி செய்து, கலையைக் கைப்பிடித்திழுத்து வந்து நம் எதிரே நிறுத்தி, “இதோ உன் தோழன்” என்று கூறிப் புரட்சி செய்தவர், அதில் வெற்றி பெற்றவர் பாரதிதாசன்.

பலவேறு துறைகளிலே நடைபெற்றன புரட்சிகள். தேவ குமாரன் அரசனாகப்பிறப்பான், அவனை ஆண்டிற்கோர் முறையே காண முடியும்; அப்போதும் அளவளாவ அல்ல, அடி தொழவே என்றிருந்த அரசாளும் முறையில் புரட்சி ஏற்பட்டு இன்று ஆலைத் தொழிலாளியும், உலைக்கூடத்துத் தோழனும், ஊராளும் உரிமை பெற்றுவிடவில்லையா?

வானுலக வீதியிலே சுற்றி, தேவர்தம் வடிவழகைக் கண்டு கூறி வருபவரே கவிஞர். அஃதே கலை என்றிருந்த நிலைமாறி, கவி நம்முடனேயே இருப்பார், நமது உலகில் தான் உலவுவார், தாம் காண்பனவற்றையே காண்பார், ஆனால் அவைகளைப்பற்றி நாம் கூறத் தயங்குவோம் இயலாததால், அவர் கூறுவார், அறிவுத் தெளிவால், கலைத்திறனால்; இந்தப்புரட்சியை செய்தார் பாரதிதாசன்.

புரட்சித் துறையில் ஈடுபட்டவர்கள் பெரிதும், துவக்கத்தில் பூவால் அர்ச்சிக்கப்படுவதில்லை. புன்மொழிகளையே வீசப்பெறுவர், அதிலும் மொழி வீசும் துறையிலே ஈடுபட்ட புலவர்கள் உலகிலே புத்தம் புதிய புரட்சியை ஒருவர் வெற்றிகரமாகச் செய்து வருவது கண்டால், பொச்சரிப்பின் விளைவாகப் புன் மொழி, மாரிபோல் பொழியத்தானே செய்யும்.

பாரதிதாசன், இந்த மாரியைச் சட்டை செய்யவில்லை. புரட்சியில் ஈடுபட்டுள்ளவருக்கு இதற்கு நேரம் ஏது? போரிட்டார். போரிட்டார், போரிட்டுக் கொண்டே இருக்கிறார்! வென்றார், வெல்கிறார், வெற்றி பெற்றபடியே இருப்பார்!

அவர் பெற்ற வெற்றிகளிலே ஒன்று அவருடைய கவிதைகளை இன்று மக்கள் அறிந்து கொண்டார்கள், புரிந்து கொண்டார்கள், ரசிக்கிறார்கள். பயன் பெறுகிகிறார்கள். “தோடுடைய செவியன் விடை ஏறி ஓர் தூவெண் மதிசூடி” வருபவனைப்பற்றிக் கவிதைகளைக் கேட்டுக் கேட்டு, திருநீறு பூசுமுறை கற்றுக்கொண்ட மக்கள், “இரும்புப் பெட்டியிலே இருக்கும் எண்பது இலட்சத்தையும் கரும்புத் தோட்டத்திலே வருஷம் காணும் கணக்கினையும்” எண்ணிக்களிக்கும் தம்பிரானைப்பற்றிப் பாரதிதாசன் பாடிடக் கேட்டதும், பதைத்து எழுந்து, “பாதகா! படுமோசக்காரா! பக்தியின் பெயரால் இப்படியா போக போகத்தில் புரள்கிறாய்! பார் உன்னை என்ன செய்யப்போகிறோம்” என்று இன்று கொதித்துக் கூறப் போகின்றனர். நாளை?

ஆம்! நாளைக்கு என்ன நடக்கும் என்பதை எண்ணும் போது தான், “புரட்சிக் கவிஞரே பாரதிதாசன்; ஐயமில்லை” என்று அனைவரும் கூற முடிகிறது. அவர் போர் முகாம் அமைத்து விட்டார். போர்வீரர்களைக் கூட்டிவிட்டார். படைக்கலன்களும் தயார். முரசம் கொட்டி விட்டுக் கூப்பிடுகிறார்,

“கொலை வாளினை எடடா மிகு
         கொடியோர் செயல் அறவே”


என்று அந்தக் குரல், காற்றில் மிதந்து வரும் கீதமாக மட்டுமின்றி, கிண்கிணிச் சத்தத்தோடு இழைந்துவரும் கீதமொழியாக மட்டுமின்றி, கேட்போரின் வளைந்த முதுகை நிமிர்த்திவிடும் வீரக்குரலாகி விட்டது! எனவேதான் நமக்கொரு வால்டேர் கிடைத்துவிட்டார். நமக்கோர் ஷெல்லி கிடைத்து விட்டார், நமக்கு ஒரு கவிஞர் கிடைத்துவிட்டார், அவர் நம்மோடு இருக்கிறார். நமக்காக இருக்கிறார். நம் வேலையைச் செய்கிறார். நாம் வாழ வழி அமைக்கிறார், அவர் வாழ்க, அவர் திறன் ஓங்குக அவர் வெல்க! அவர் வெற்றியினால் நமக்கு வெற்றி ஓங்குக! என்று மனமார நாம் கூறுகிறோம். நாம் மட்டுமா? நாடு கூறுகிறது.

நாட்டு மக்களுடைய இந்த மகிழ்ச்சியின் ஒரு சிறு அறிகுறியே இதுபோது கவிஞருக்கு அளிக்கப்படும் பொற்கிழி. இதிலே குவிந்துள்ள ஒவ்வோர் காசும் பேசக்கூடுமானால் மணிக்கணக்கில் பேசும் கவிஞரின் பெருமையை; அதனால் சமுதாயம் பெற்ற பெருமையை, பொற்காசுகள் பேசினாலும் கூட புரட்சிக் கவிஞரின் செவியில் அந்த ஒலி புகாது. எப்படிப் புகும்? அவருடைய செவியிலே ஆலைச்சங்கு, சுண்ணம் இடிக்கும் சுந்தரியின் பெருமூச்சு, பாட்டாளியின் குமுறல், பணமெனும் கொடி கட்டிய படகு வருமா என்று எதிர்பார்த்து ஏங்கும் ஏழையின் ஏக்க மொழி, எழில் ததும்ப இளமை ததும்ப உள்ள மங்கை மஞ்சத்தில் குறட்டை விடும் கிழ மணாளனைக் கண்டு கண்ணீர் விட்டுக் கதறும் ஒலி இவை புகுந்து, கண்களிலே அனலையும் புனலையும் கிளப்பி விட,“ஏடா! தம்பி! எடுடா பேனா கொண்டுவா மைக்கூடு; இந்தக் கொடுமைகளைக் களைந்தேயாகவேண்டும்; இன்றே களைந்தாகவேண்டும் என்று முழக்கமிடுகிறார்! அந்த முழக்கம் இந்தாளில் நாம் பெற்ற கருஊலம்! அவர் நமக்கு அளித்த அழியாத செல்வம் அவர் வாழ்க! வெல்க!!

—சி. என். அண்ணாத்துரை.