ரோமாபுரிப் பாண்டியன்
83
மற்ற அடியார்கள் முத்துநகையைச் சூழ்ந்து பிடித்துக் கொண்டார்கள். அந்தக் குழப்பத்தில் அவள் ஆண் வேடம் கலைந்தது. அழகுமயமான ஆரணங்கு எதிரே நிற்பதை அடியார்களின் தலைவர் கண்டார். "பொன்னுருக்கிச் செய்ததுவோ! புலவர்களின் கற்பனையோ!" என எண்ணத் தக்கவாறு, தனியாக நின்று கொண்டிருக்கும் ஏந்திழையைக் கண்டதும் திருநீற்றடியாரின் இதயம், காய்ச்சிய ஈயமென உருகி, விலா எலும்புகளைத் தீய்த்து, அடி வயிற்றைப் பற்ற வைத்து அத்தனை இரத்தக்குழாய்களிலும் பாய்ந்தோடிற்று.
சூழ நின்ற மாணவர் குழாத்தைத் திருநீற்றடியார் கடைக்கண்ணால் பார்த்தார். அவர்கள் மறைந்தனர். அவளைக் கரம் பற்றி இழுத்தார். ஓங்கி ஓர் அறை கொடுத்தாள் முத்துநகை. நெற்றியில் உள்ள முப்பட்டைபோல் அவர் கன்னத்திலும் அவளது விரல்கள் பதிந்து, இரத்தக் கோடுகளைக் கிழித்தன.
அதற்குமேல் அடியார் பொறுத்துக் கொள்ளவில்லை. தாவிப் பாய்ந்து அவளைத் தன் உடலோடு சேர்த்து அணைத்துக் கோயிலுக்குள்ளேயுள்ள இன்னொரு பகுதிக்குள் நுழைந்திட முனைந்தார். அப்போது, "ஏய், நில்!" என்ற குரலோடு ஓர் உருவம் அடியாரின் பிடரியில் ஓர் அடி கொடுத்தது. முத்துநகை வியப்புடன் திரும்பினாள். வேறு யாருமில்லை; அதே யவனக் கிழவர்தான்!
கிழவரை அடியார் எதிர்த்தார். அடியார் கூட்டமே அங்கு வந்துவிட்டது. யவனக் கிழவரின் வாள் அவர்களை நோக்கிச் சுழன்றது. அடியார்கள் கிழவரின் புலிப்பாய்ச்சல் கண்டு அங்குமிங்கும் ஓட ஆரம்பித்தார்கள். இதுதான் சமயமெனக் கண்ட முத்துநகை தன் ஆண் உடைகளைச் சரிசெய்து அணிந்து கொண்டு வெளியே ஓடிக் குதிரையில் ஏறிப் பாய்ந்தாள்.
கோயிலுக்குள்ளே என்ன ஆயிற்று எனத் தெரிந்து கொள்ள அவளுக்கு ஆவல். வெகுதூரம் போய் மீண்டும் கோயில் பக்கமாகத் திரும்பி வந்தாள். அவள் கோயில் பக்கம் வருவதற்கும் யவனக் கிழவர் கோயிலுக்குள்ளேயிருந்து வெளியில் வந்து குதிரையில் ஏறிப் போவதற்கும் சரியாக இருந்தது. யவனக் கிழவர் தன்னைக் கவனிக்காதவாறு பாதுகாப்பாக ஒளிந்து கொண்டாள், ஒரு மண்டபத்துக்கு அருகே!
சற்று நேரம் கழித்துக் கோயிலைச் சுற்றிக் கொண்டு குதிரையை மெதுவாக நடத்தியவாறு தன் வீட்டை நோக்கிப் புறப்பட்டாள்.