உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழைப் பிழையின்றி எழுதுவோம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

தமிழைப் பிழையின்றி எழுதுவோம்







முத்தமிழ், நானிலம், ஐந்திலக்கணம், அறுசுவை, ஏழிசை, நவதானியங்கள், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினாறு பேறு என இவை போன்ற தொகைச் சொற்களைப் பிரித்தும் விரித்தும் காணும்போது, பல்வேறு புதிய சொற்களை அறிந்துகொள்ளலாம்.

சொல்லிலிருந்து சொல்

ஒரு சொல்லுக்குள் உள்ள எழுத்துகளை இடம் மாற்றி, வேறு பல புதிய சொற்களைக் கண்டறியலாம். இதன் வாயிலாகப் புதிய சொற்களை அறிந்துகொள்ளவும் அவற்றை அன்றாட வாழ்வில் பயன்படுத்தவும் இயலும். எடுத்துக்காட்டாக, 'கவிதை' என்னும் சொல்லிலிருந்து கவி, கதை, விதை, தை முதலான சொற்களை அறிந்துகொள்ளலாம். இந்தப் பயிற்சியை மேற்கொள்வதால், எழுத்துப்பிழை, பொருளற்ற சொற்கள் தவிர்க்கப்படுகின்றன.

முதல், இடை, கடை எழுத்து மாற்றம்

ஆடல் – இந்தச் சொல்லின் முதலெழுத்தை மாற்றி மூடல், பாடல், ஓடல், தேடல், கூடல், வாடல் எனப் பல சொற்களை உருவாக்கலாம்.

பாடம்

இந்தச் சொல்லின் இடையெழுத்தை மாற்றிப் பாலம், பாதம், பாகம், பாரம், பாவம்,

பாசம், பாளம், பானம் முதலிய சொற்களை அமைக்கலாம்.

பதவி

இச்சொல்லின் இறுதியெழுத்தை மாற்றிப் பதர், பதம், பதறு, பதடி முதலிய

சொற்களை அமைக்கலாம். இதனால், சொற்களஞ்சியம் பெருகும்.

வேர்ச்சொல்லிலிருந்து புதிய சொற்கள்

கால் என்னும் சொல்லிலிருந்து காற்றாடி, காற்று, காற்றாலை உருவாகின்றன.

சூர் என்னும் சொல்லிலிருந்து சூரியன், சூரன் உருவாகின்றன.

இதேபோன்று, ஒரு வினையடியிலிருந்து அதன் மற்ற வடிவங்களையும் உருவாக்கலாம்.

எடுத்துக்காட்டாக, கல் என்னும் வினையடியிலிருந்து கற்றான்

கற்க- கற்ற பெண்

கற்று மகிழ் - கற்றவனை – கற்பாய் - கற்றுக் கொண்டான் என உருவாக்கலாம்.

மரபுச்சொற்கள்

தமிழில் தொன்றுதொட்டுச் சில மரபுச்சொற்கள் பயன்பாட்டில் உள்ளன. அவற்றை உரிய இடத்தில் பயன்படுத்தும்போது பிழை நேராமல் காக்கலாம்.

எடுத்துக்காட்டாக, மயில் அகவும், குயில் கூவும், ஆந்தை அலறும், கோழி கொக்கரிக்கும் போன்ற ஒலி மரபுகள் ஒவ்வொரு பறவைக்கும் உரித்தாகின்றன.

மேலும் கழுதை கத்தும், குதிரை கனைக்கும், சிங்கம் முழங்கும், நரி ஊளையிடும், நாய் குரைக்கும், புலி உறுமும், யானை பிளிறும் போன்ற விலங்குகளின் ஒலிமரபையும் அறிந்துகொள்ளலாம்.